Wednesday 27 May 2015

இசை ராட்சஷன் - 10 ( The Musical Legend )





                                             

                                           

                          ' எனக்கு இசை தெரியவில்லை என்று இளையராஜா கூறுகிறாரே?' என்ற ஒரு வாசகனின் கேள்விக்கு,   ' அறிவாகிய மாபெரும் கடலின் கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவன் நான் என்றார் விஞ்ஞானிகளுக்கெல்லாம்  விஞ்ஞானியான  ஐசக்  நியூட்டன் . போலவே இளையராஜா மாதிரியான ஞானிகளுக்கே உரித்தான தன்னடக்கம் இது .
அவரது இசையைக்  கேட்டு ரசிக்காத தமிழனே உலகில் இல்லை என்பதுதான் உண்மை. '  என்பது ஒரு வார பத்திரிகையில் கொடுக்கப்பட்ட பதில்.

                       
                         எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதச்சுவடிலும் சுவடுகள்  பதிக்கும் பாதைகளின் பயணங்களிலும்  கணக்கற்ற பாடங்கள் இருக்கும் . அந்தப் பாடங்களைப் படித்துக் கொண்டே இசைப் பயணம் தொடங்கி நம்மையெல்லாம் இன்ப உலாவிற்கு அழைத்துச் சென்றவர் இளையராஜா .
தொழில் நுட்பங்களும்  மென் பொருட்களும் மலிந்து பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்  யார் வேண்டுமென்றாலும் இசை அமைக்கலாம் . ஆனால் ஆன்மாவை  ஊடுருவும் இசையை உருவாக்க ,  வெறும் கருவிகளை விட ஆத்மார்த்தமான  ஈடுபாடு வேண்டும் . அது எந்த இசை அமைப்பாளரிடம் உளதோ அவரே சிறந்த இசை அமைப்பாளர் . அந்த வகையில் இந்தியாவில் பல இசை அமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர் என்பதை எந்த இசைக் கலைஞரும் ஏற்றுக் கொள்வர்.

                         
                          இசைக் கருவிகளிலும் மேனாட்டு இசை அறிவிலும் கர்னாடக இசையிலும் தேர்ச்சி பெற்ற பிறகே இளையராஜா அவர்கள் இசை உலகத்தில் புகுந்து தன் இசை ஆற்றலை ஊற்று போல ஓடச் செய்தார் . அந்தத் தீரா நதியில் முங்கிக் குளித்து குடித்து தேனுண்ட வண்டாய்  மயங்கிக் கிடந்த நாட்களை மறந்து போக முடியுமா!? திகட்டாத அமிர்தமாய் தேனோடையாய் பாய்ந்த இசை அமுதை அள்ளிப் பருகிய காலத்தை கடந்தும்தான் போக முடியுமா!?
   
                   
                        1979 இல் இளையராஜா அளித்த இசை விருந்து  இப்போதும்  என் நினைவுக் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டே இருக்கிறது.

                             
                   

No.
Film Name
# Songs
1.
Aaril irunthu arubathu varai
3
1979
2.
Agal vilakku
4
1979
3.
Amma evarikaina amma - Telugu
6
1979
4.
Anbe sangeethaa
4
1979
5.
Annai or aalayam
7
1979
6.
Azhage unnai aarathikkiren
7
1979
7.
Chakkalaththi
6
1979
8.
Dharma yuththam
4
1979
9.
Erra gulaabeelu - Telugu
2
1979
10.
Kadavul amaiththa medai
6
1979
11.
Kalyaana raaman
5
1979
12.
Kavari maan
7
1979
13.
Lakshmi
4
1979
14.
Mugaththil mugam paarkkalaam
3
1979
15.
Muthal iravu
5
1979
16.
Naan vaazhavaippen
5
1979
17.
Nallathoru kudumbam
6
1979
18.
Niram maaratha pookkal
5
1979
19.
Nuvve naa srimathi - Telugu
5
1979
20.
O inti katha - Telugu
3
1979
21.
Pagalil oru iravu
5
1979
22.
Pancha bhoothalu - Telugu
5
1979
23.
Pattaakkaththi bairavan
7
1979
24.
Ponnu oorukku puthusu
6
1979
25.
Poonthalir
5
1979
26.
Priya - Kannada
5
1979
27.
Puthiya vaarppukkal
4
1979
28.
Rosaappoo ravikkaikaari
4
1979
29.
Uthirip pookkal
6
1979
30.
Vetrikku oruvan
4
1979
31.
Yugandhar - Telugu
5
1979





                               ' ஆறிலிருந்து அறுபது வரை ' என்ற திரைப்படத்திற்கு சென்ற அனுபவம் தனி.  'ரஜினி படம் ' என்ற சந்தோசத்துடன்  'பைட்,  ஸ்டைல், சேசிங்' என்று பின்னி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன்   சென்று பார்த்தால் உள்ளே உட்கார வைத்து அழ வைத்துவிட்டார்கள் .  அந்த சமயத்தில் பாட்டை மட்டுமே ரசித்தேன் ; படம் ரசிக்கவில்லை. காலம் செல்லத்தான் ரஜினிக்கு அது ஒரு நல்ல திரைப்படம் , அவருடைய குணச்சித்திர நடிப்பாற்றலை வெளிக்கொணர்ந்த முக்கியமான திரைப்படம் என்பதை புரிந்து கொண்டேன் .


                                         

                            படத்தில் முதல் பாடல் ' ஆண்  பிள்ளை என்றாலும் ...சாண் பிள்ளைதானன்றோ ...' என்று  சசிரேகாவும் ஷைலஜாவும் இணைந்து  பாடியிருப்பர் .  படத்தின் பாடல்கள் அனைத்தும் பஞ்சு அருணாச்சலம் . இந்தப் பாடலில் எளிமையான வார்த்தைகளில் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் குடும்பப் பொறுப்பையும்  சிறு வயதிலேயே சுமக்கும் மூத்த குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும்படி எழுதியிருப்பார்.  பாடலுக்குத்  தகுந்த இனிமையான இசை.  ' பரிதாபம் அந்தோ பரிதாபம் ' என்ற வார்த்தைகளுக்கு அழுத்தமாக  கொடுக்கப்பட்டிருக்கும் மெலடி சட்டென என்னை நெகிழ வைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன் .  தந்தையை இழந்த சிறுவன் ஒருவன் தன் அம்மா தம்பி தங்கைகளை காப்பாற்ற ' குரங்கு பெடல் ' போட்டபடி சைக்கிள் ஓட்டி உழைத்து சம்பாதிக்கும் காட்சியை பார்த்தவுடன் என்னைக் கொண்டு கற்பனை செய்து பார்த்து கண் கலங்கிய ஞாபகம் இன்னும் மனசுக்குள் உட்கார்ந்து இருக்கிறது. காட்சியா நம்மை கலங்கடித்திருக்கும் என்று பின்னர் யோசித்தபோது,  இக்காட்சியின் பின்னணியில் படைக்கப்பட்ட இசையே காரணமென்பதை அதன் பிறகு அந்தப் பாடலை கேட்கும்போது புரிந்து கொண்டேன்.  இசைதான் என்னை அழ வைத்திருக்க முடியும் .
இளையராஜாவிற்கே அந்தப் பெருமை.


                                அதே படத்தில் அடுத்த பாடல் 'கண்மணியே ...காதல் என்பது கற்பனையோ..' என்ற  அன்றும் இன்றும் என்றும்  எவர் கிரீன் பாடல். எப்போது கேட்டாலும்  எங்கு கேட்டாலும் அதற்குக் காதைக் கொடுக்காமல் என்னால் இருக்கவே முடியாது . பாட்டைக் கேட்டு பரவசமடையாமல் போனதே கிடையாது. எஸ்.பி.பி யும் ஜானகியும் சேர்ந்து கனிந்துருகி பாடியிருப்பார்கள். நம்மையும் உருக வைத்துவிடுவார்கள் . மூச்சு விடாமல் பாடப்பட்ட நீண்ட பல்லவி  உள்ள  பாடல்  இது   என்பதை    இளையராஜாவே  சொல்லியிருக்கிறார்.  ஆனால் மூச்சு விடாமல் பாடப்பட்ட பாட்டாக ராஜாவின்  வேறொரு பாடலைச் சொல்லுவார்கள். மேலும்  எஸ்.பி.பி அவர்கள் மூச்சு விடாமல் பாடப்பட்டதாக தொழில்நுட்பம் கொண்டு காட்டப்பட்டது என்பார்.  மேனாட்டு இசைக் கலப்போடு மோகன ராகத்தில் பின்னப்பட்ட இதயம் தொடும் அழகான மெலடி.அந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.  என்னவிதமான கருவி இசைத்து ஆரம்பிக்கிறார் என்பதை சொல்ல முடியாத அளவிற்கு கிடாரோடு வேறு இசைக்கருவிகள் கலந்து டிரம்சில் ஜாஸ் இசையோடு பல்லவி ஆரம்பிக்கும் அழகே தனி.  கடைசி வரை ஜாஸ் இசையோடு பாடல் செல்லப் போகிறது என்று பார்த்தால் இரண்டாம் இடையிசையில் கொட்டு மேளத்தோடு நாதஸ்வரம் கலந்து கொடுத்து மீண்டும் மேற்கத்திய பாணியில் ஜானகியின் ஹம்மிங்கோடு இசையை தொடரும் அற்புதத்தை நான் அப்போதே ரசித்தேன்.  என் இசை நண்பர்களோடு சேர்ந்து அந்தக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றிப்  பேசிப் பேசி மாய்ந்து போயிருக்கிறேன் . அது  ராஜாவிற்கே உரிய படைப்பாற்றல்.

                                             
                           முதல் இடையிசையில் ஜானகியின் குரலில் ஹம்மிங் இரு வேறு  மெலடிகளாக பின்னிப் பிணைந்து வரும் . அது இரு வேறு கவிதை ஒரே நேரத்தில் சொல்லப்படுவது போல் உள்ள கவுண்டர் பாய்ன்ட் அழகு . அன்று கேட்டதை விட இன்று கேட்கும்போது இன்னும் பாடலுக்கு மெருகேறிய தோற்றம் ஏன் மனதுக்குள் தோன்றவேண்டும் ?  இப்போதுள்ள இசையமைப்பாளர்களால் அது சாத்தியமாகிறது. அவர்களின் இசையை கேட்டுவிட்டு மீண்டும் இது போன்ற இளையராஜாவின் பாடல்களுக்கு வந்தால்  அந்த அற்புதம் மனதுக்குள் நிகழ்வதை உணர முடிகிறது.  இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் இளையராஜாவை எனக்கு ஞாபகம் மூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
                                                       
                                                                                                                       
                                ' மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா ..'  என்று  சரணத்தில் மேல் ஸ்தாயில் எஸ்.பி.பி பாட அவருடைய குரலிலேயே, 'லாலல .. லாலலா ..' என்று ஹம்மிங் கீழ் ஸ்தாயில் சேர என்ன சுகானுபவம் !
போலவே ஜானகி பாடும்  வரிகளுக்கும் அதே மாதிரியான கலவை கொடுக்கப்பட்டிருக்கும் . ஏதோ பற்பல வண்ணங்கள் தெளித்து  புது ஓவியம் உருவாவதைப் போல் பாடல் படைக்கப்பட்ட அழகை இன்னும் விரித்துச் சொல்ல வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படுகிறது.


                                 '   வாழ்க்கையே வேஷம் ...இதில் பாசமென்ன நேசமென்ன..' என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். குடும்பத்திற்காக வாழ்ந்து கெட்டவனின்  தத்துவமாக பாடல் வரிகளில் சோகத்தை சுகமாக சேர்த்து இளையராஜா வழங்கிய பாடல்.  வித்தியாசமாய்  கிடாரில் சோகமாய் ஆரம்பித்து வயலின், குழல் போன்றவற்றை இழையோட விட்டு பல்லவி  ஆரம்பிக்கும் . இடையில் குழந்தையை தாலாட்டும் ஒரு பெண்ணின் குரலில் அந்த ஆரிராரோ  சோகத்திற்கு கூடுதலாக சுகம் சேர்த்திருக்கும் . இடையிசையில் கிடார் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு புதுமையான ஒன்று. பெரும்பாலும் வயலின், வீணை , குழல் போன்ற கருவிகளே அதிகமாக சோகத்திற்கு பயன்படுத்துவார்கள்.  கிடாரில் சோக கீதம் ரசனையானது.  அவரின் அபார இசைத் திறமைக்கு இது கூட சான்றே!

                                                   
                                              எழவு வீட்டில் 
                                              கவலையான பாவனையில்
                                              உம்மென்று அமர்ந்திருக்கையில்
                                              தூரத்திலிருந்து
                                              காற்றில் மிதந்து வரும்
                                              இளையராஜாவின்
                                              துள்ளலிசைப் பாடலைக் கேட்டு
                                              உதடுகள் பழக்கதோஷத்தில்
                                              முணுமுணுத்து விடாதிருக்க
                                              மேல் வரிசை பற்களால்
                                              கீழ் உதட்டை இறுகக் கடித்தபடியே
                                               இருக்க வேண்டியதாகிவிட்டது
                                               அந்தப் பாடல் காற்றில் கரைந்து
                                               கடந்து செல்லும்வரை!


                         
                                     மேற்கண்ட கவிதை விகடனில் ' சொல்வனம் ' என்ற பகுதியில் ஒரு பொதுஜனத்தின் கவிதை .  அதற்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு கூட  ' ஏய் ...பாடல் ஒன்று ' என்ற இளையராஜாவின் பாடலிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது.  நம் வாழ்வில் இது போன்ற கணங்களும் அனுபவங்களும் யதார்த்தமாய் நிகழ்ந்திருக்கலாம் .  ஒரு சாவு வீட்டில் அமர்ந்திருக்கும்போது காற்றில் மிதந்து வரும் இளையராஜாவின் பாடல் எந்த அளவிற்கு பாதித்திருக்க இப்படி தன் உணர்வினை கவிதையாகக் கொட்டியிருப்பார்.  யதார்த்த வாழ்க்கையில் மனிதனுக்குள் ஏற்படும் உள்ளார்ந்த உணர்வுகளை இசையினால் வெளிக்கொணரும் ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு  என்பதை தன் ஒவ்வொரு பாட்டிலும் நிரூபித்திருப்பார். ஒரு கதாபாத்திரம் குறிப்பிட்ட சூழலுக்கு வெளிப்படுத்தும் உணர்வினை தானே வாழ்ந்து பார்த்தது போல் அனுபவித்து இசையாக படைப்பது நமது உணர்வினையும் உயிரையும் ஊடுருவத்தானே  செய்யும் .
மனசு நோகும்போது, வேண்டாத எண்ணங்களால்  வேகும்போது  ஏற்படும் மனச்சலிப்பை  விரட்டி, மருந்து தடவி, பாடலினால் நம் உணர்வினைக் கூட்டி, இசையின் இனிமையால் கற்பனையில் எங்கோ கூட்டிச் செல்லும் பாதையைக் காட்டி , புதுப் புது தரிசனங்களை  உருவாக்கும் வல்லமை இசைஞானியின் பாடலுக்கும் இடையிசைக்கும் உண்டென்பது  அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.


                                அது போலவே    எல்லாவிதமான உணர்வுகளுக்கும் நடைமுறைகளுக்கும்  இளையராஜா பாடல் அமைத்திருக்கிறார் . சோகம், சுகம் , ஏக்கம், வெட்கம், துக்கம், நேசம், பாசம், பரிவு, காதல், மோதல், நக்கல், நய்யாண்டி, வீரம்,தீரம், தாலாட்டு , பாராட்டு, நீராட்டு விளையாட்டு,  இன்பம், துன்பம், தாய்மை, சகோதரத்துவம் , ஒப்பாரி, விரகம், கரகம் , ஒயிலாட்டம் , மயிலாட்டம் , சிலம்பாட்டம், தப்பாட்டம், குத்தாட்டம் ,  நட்பு, பயம், மிரட்டல், சவால், பக்தி, முக்தி, உல்லாசம் , உற்சாகம்  போன்ற விசயங்களுக்கும் சொல்ல மறந்த இன்னும் பல விசயங்களுக்கும் இளையராஜா படைத்திருக்கும் பாடல்கள் எண்ணிலடங்காதவை.  மக்களின்  மனசைப்  படித்து  இசையாய்  படைத்த இளையராஜா,  காலங்காலமாய் மக்களிடையே ஊறிக் கிடந்த இசை கேட்டு,  அதை தன்  கற்பனையையும் ஆற்றலையும் திறமையையும் கலந்து கட்டிக் கொடுத்ததை,  தமிழக மக்கள் தாங்கள் கேட்டுப் பழகிய நெருக்கமான இசையாக பார்த்தார்கள்.  வரவேற்றார்கள்; கொண்டாடினார்கள்.  மக்களின் இசை நாயகன் என்று சொன்னால் அது அவருக்குப்  பொருந்தும்.

                                     
                                       79 இல் இளையராஜா இசையமைத்த படங்கள் ஏராளம் . அதில் அமைந்த அற்புதமான பாடல்கள் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காதவை. ' அகல் விளக்கு  ' என்றொரு படத்தில்  ' ஏதோ நினைவுகள் ...கனவுகள் மனதிலே மலருதே ...' என்ற பாடல் நிச்சயம் ஒவ்வொரு இசை ரசிகனும் சந்தித்த ஏகாந்த ராகமாகத்தான் இருக்கும். என் மாமா மகன் ஒருவர் ஒருமுறை இந்தப் பாடலைப் பற்றி குறிப்பிட்டுச் சொன்ன பிறகே நானும் உற்றுக் கவனித்தேன் . அப்போதே அந்தப் பாடலின் ராகம் என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது. ஜேசுதாசும் சைலஜாவும் இணைந்து பாடும் அந்தக் காதல் காவியப் பாடலில்தான் என்னவொரு ரம்மியம்.


                                             'ம்...ம்ம்....' என்ற ஜேசுதாசின் ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்க பாஸ் கிடார் , செல்லோ , வயலின் கலந்து இசைக் கோர்வை சேர சைலஜா ஹம்மிங்கோடு நீட்டி ஆலாபனை செய்ய பல்லவி தொடரும் அழகு பேரானந்தம் தரக் கூடியது. முதல் இடையிசையில் எல்லா கருவிகளும் கலந்து ஒன்றோடொன்று மேவி தாலாட்டிச் செல்லும் . கிடார் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் . இரண்டாம் இடையிசையில் கிடாரோடு வயலின்களின் கவிதைத் தொகுப்பு மழைச்சாரல் போல் பொழியப்பட்டிருக்கும்.  பாடல் முழுமையும் மெளனமாக கேட்டு முடித்த பின்னரும் காதுகளில் அந்த இனிய கானத்தின் ரீங்காரம் இம்சை செய்வதை உணர முடியும் .

                                                     
                                          அந்தப் படத்தின் மற்ற பாடல்கள் பிரபலமாகவில்லை . ரேடியோக்களிலும் கேட்ட ஞாபகம் இல்லை . இப்போது கேட்டால் இசையின் தரத்தில் குறைவுமில்லை. ஏனோ மக்களைச் சேரவில்லை.ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியிருக்கும் இசைஞானியின்  பாடல்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் மக்களால் மிகப் பெரும் வரவேற்பு பெற்றவை . சில நூறு பாடல்கள் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் இளையராஜா ரசிகர்கள் எல்லா பாடல்களையும் கேட்டு ரசித்தவர்களாகவே இருப்பார்கள்.  அதில் நானும் ஒருவன்.



.......................தொடர்வேன்...............................




                                         
                                         
                                   



                              



படத்தில் 
படத்தில் முதல