Monday 23 November 2015

இசை ராட்சஷன் - 13 ( The Musical Legend )


இளையராஜா பற்றி  இணையத்தில் கொட்டிக் கிடக்கும் செய்தி பொக்கிஷங்களிலிருந்து  சில  வித்தியாசமான  செய்திகளைப்  பகிர ஆசைப்படுகின்றேன் ,

                                                       







*பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் அவர்களை பர்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா கடந்த ஆண்டு நடந்தது. விழாவிற்கு இசைஞானி இளையராஜாவோடு மெல்லிசை மன்னரும் கலந்து கொண்டார்.. மேடையின் பின்புறமிருந்த தனி அறையில் அவருக்காக காத்துக்கொண்டிருந்தார் இளையராஜா அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் உள்ளே வர, ‘அண்ணா வாங்க..’ என்று எழுந்து சென்று கையை பிடித்து வரவேற்றார் இசைஞானி. “ராஜா நலம்தானே வந்து ரொம்ப நாழியாச்சா” என்றார். “பராவாயில்லண்ணா” என்று இளையராஜா சிரிக்க எம்.எஸ்.வியும் சேர்ந்து சிரித்தார். “ஹெல்த்தை பார்த்துக்கோங்க ராஜா” என்று எம்.எஸ்.வி சொல்லவும், “நாம எப்படிண்ணா ஹெல்த்தை பார்த்துக்க முடியும் ஹெல்த் தான் நம்மை பார்த்துக்கணும என்று பதில் கொடுக்க, மனம் விட்டு சிரித்தார் மெல்லிசை மன்னர். விழா மேடைக்கு செல்லும்போது இசைஞானி, “அண்ணனை பார்த்து கூட்டிட்டுப்போங்கள்” என்று வழிவிட்டு பின்னால் நின்று கொண்டார்.




**அண்ணன் பாவலர் வரதாரஜன் அவர்களோடு இளையாராஜா கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த சமயம். திருச்சியில் கச்சேரியை முடித்து விட்டு மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள கம்யூனிஸ்ட் நண்பர் வீட்டில் தங்கியிருக்கின்றனர். அப்போது இளையராஜா வீட்டு முன் கட்டிலைப்போட்டு படுத்திருக்கிறார். தூரத்தில் புதியபறவை படத்தின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிற்து. “எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது” என்று வயலின்கள் கூட்டமாய் குரல் எழுப்ப அதில் லயித்துப் போகிறார் இளையராஜா . ' இசையமைத்தால் இப்படி இருக்கணும்  ' என்று மனதுக்குள் விதைபோட்டு வைக்கிறார்.


அந்த லட்சியம்தான் பிறகு ஒரு நாள் மெல்லத்திறந்தது கதவு படத்திற்கு அவரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பை காலம் இளையராஜாவுக்கு கொடுத்தது. மெல்லிசை மன்னரை தன்னுடைய குருநாதர் இடத்தில் வைத்து பார்த்த இளையராஜாவுக்கு எம்.எஸ்.வியின் மறைவு பேரிழப்பு.

**இளையாராஜா அவர்கள் நிற்பதற்கு நேரமில்லாமல் பரபரப்பாக இருந்த எண்பதுகளி்ன்போது இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் தன்னுடைய படத்திற்கு இசைய்மைக்கச்சொல்லி் இளையராஜா அவர்களை சந்திக்க ஏவி.எம். ஸ்டுடியோவிற்கு வந்து காத்திருந்தார். இந்த தகவல் ராஜா சாருக்கும் சொல்லப்பட்டது. ”இருக்கட்டும்” என்று மட்டும் சொல்லி விட்டு வேலையில் கவனமாக இருந்தார். அன்று முழுவதும் ஸ்ரீதரை ராஜா சார் சந்திக்கவேயில்லை.இப்படி இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் ஸ்ரீதர் சாருக்கு கோபம் வந்து விட்டது. விஷயம் ராஜாவிடம்  சொல்லப்பட்டது. ஒலிப்பதிவு கூடத்திலிருந்து வெளியே வந்தார் ராஜா . 



    “ நான் கடந்த மூன்று நாளா வந்து போயிகிட்டிருக்கேன். நான் யார்கிட்டேயும் இது போல போய் நின்னதில்லை. உங்க கிட்டதான் வந்திருக்கேன்” என்று கொஞ்சம் கோபத்துடன் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதர் .  உடனே இளையராஜா, " மூன்று நாளும் நான் உங்களை வரச்சொல்லவில்லையே சார் ” என்று சொல்லவும் அங்கிருந்த அத்தனைபேரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். மிகப்பெரிய இயக்குனர் ஸ்ரீதர் அவரிடம் இப்படி யாரும் பேசியதில்லையே என்று  எல்லோருக்கும்  அதிர்ச்சி.




 ராஜா  பேச ஆரம்பித்தார்.  ” உங்கள் எல்லா படத்திற்கும் அண்ணன் எம்.எஸ்.வி எவ்வளவு அருமையான பாடல்களை போட்டுக்கொடுத்திருக்கிறார். அவரை விட்டு விட்டு என்கிட்ட ஏன் வந்தீங்க? ” என்று கேட்கவும் ஸ்ரீதர் ஆடிப்போய் விட்டார். தொடர்ந்து ராஜா ,  “அண்ணன் இசை வேண்டாம்னு நீங்க நினைச்சதாலதான் நான் சந்திக்கவில்லை ” என்று சொன்னார். அதன்பிறகு பல சமாதானங்கள் செய்த பிறகே இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டார்.


**  "இசைஞானி இசையமைத்த முதல் பாடல் "

                அப்போது இசைஞானி இளையரஜா அவர்கள் ஜி.கே வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்திற்கான இசையமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஒரு பாடலுக்கான டியூனை இயக்குனர் தேவராஜ் மோகனிடம் வாசித்து காட்டினார் ஜி.கே.வி. ஆனல் அந்த டியூன் இயக்குனருக்கு பிடிக்க வில்லை.

       
            நேரம் கடந்து கொண்டே போகிறது. பல டியூன்களை போட்டும் இன்னும் திருப்தி அடையவில்லை இயக்குனர். அப்போது சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்போஸிங்கில் அமர்ந்திருக்கிறார்கள். உடனே இயக்குனர் தேவராஜ் மோகன் ஜி.கே.வெங்கடேஷிடம் ,  “தம்பி ராஜா எனக்கு ஒரு டியூன் வாசிச்சு காண்பிச்சார். அது எனக்கு பிடிச்சிருந்தது” என்று சொல்லவும், “அப்போ அதையே வெச்சுக்கலாம்” என்று ஜி.கே.வி. ஓகே சொல்லிவிட்டார். உடனே பாடலை யாரை வைத்து எழுதச்சொல்லலாம் என்று யோசித்த போது கவிஞர் முத்து லிங்கத்தை வைத்து வைத்து எழுத முடிவானது. உடனே இளையரஜா அவர்கள் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வீட்டிற்கே சென்று அந்த டியூனை வாசிக்க வாசிக்க அவர் பாடல் வரிகளை எழுதிக்கொடுக்கிறார்.


           
                கிராமிய மெட்டுகளை அடிப்படையாக கொண்ட அந்த பாடல் ஒரு ராகமாளிகையாக ஒலிக்கும். “தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்த பொன்னியம்மா” என்று நதிகளின் பெருமை கூறும் அந்த பாடல்தான் இசைஞானி இளையரஜா இசையமைத்த முதல் பாடல் .  ஆனால் படத்தின் டைட்டிலில் பெயர் இருக்காது.  இந்த படம் வெளியாகும்போது இளையராஜா அவர்களின் மூத்த சகோதரர் பாவலர்  வரதராஜன் அவர்கள் படம் வெளியான திரையரங்குகளில் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளை பறக்க விட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அன்று பறக்க ஆரம்பித்த இளையராஜாவின் பாட்டுக்கொடி இன்னும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.


 ** ஒரு விழாவில் இளையராஜா பேசியது .


" சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்தபோது இசைக்கருவிகளுடன்  இசைத்துக் காட்டியபோதும் எங்களுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை.  ஆனால் மேஜையில் தாளம் போட்டு பாட்டு பாடிக் காட்டியபோது , பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் எந்தக் கணக்கில் என்னை அறிமுகப்படுத்தினார் எனத் தெரியாது. "  



                                       
** விஜி  மேனுவல்   இந்தியாவின் தலை சிறந்த கீபோர்ட் பிளேயர்  மற்றும் பியானிஸ்ட் .  ஹன்டல்  மேனுவல்  என்பவரின்  மகனும் மாணவரும்  ஆவார். இளையராஜாவோடு  நாற்பது ஆண்டுகள்  வேலை செய்திருக்கிறார்.     பாஸ் கிடார் , ட்ரம்ஸ் , கீபோர்ட்  வாசிப்பதில்  வல்லவராக  விளங்கியதால்  சிங்கப்பூரில் உள்ள  ஒரு ராக் பேண்ட் அவரை  சேர்த்துக் கொண்டது.  இந்தியாவிலிருந்து முதன் முதலாக சென்ற  ராக் ஆர்கனிஸ்ட்  அவர் மட்டுமே! அப்போது அவர் வயது பதினேழு.  அந்த ராக் பேண்ட் இந்தியா முழுக்க பயணித்தது; இசைத்தது.  இதற்கிடையில்  சினிமாவின் இசைத் துறை அவரை உபசரித்தது.  இசை அமைப்பாளர்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை  அவரே பகிருவதை கேட்போம்.


"  ஒரு பாஸ் கிடாரிஸ்டாக ஷ்யாம் ஜோசப்  என்ற இசையமைப்பாளரிடம் என் இசைப் பயணத்தை ஆரம்பித்தேன் .  பாஸ் கிடார் வாசிப்பில் புதிய யுக்திகளை கையாண்டேன். அது எனக்கு எம்.எஸ்.வி. , கே. வி. மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களிடமும்  வேலை செய்யும் வாய்ப்பினை பெற்றுத் தந்தது.  அதன் பிறகு ஜி. கே. வெங்கடேஷ் அவர்களிடம் பணியாற்றியபோதுதான் இளையராஜாவை சந்தித்தேன்.  Acoustic guitarist ஆக அவர் இசைக் குழுவில் இருந்தார்.  இளையராஜா இசை உலகின் magic என்றே சொல்லலாம்.  அவரின் அபார இசைத்திறமை  எனக்கு ஆச்சரியமூட்டியது.  இளையராஜாவிற்கு  Pink Floyd , Led  Zeppelin , The  beetles , Jimi  Hendrix  போன்ற பல இசைக் குழுக்களின் இசை ஆல்பத்தை அறிமுகம் செய்தேன் . மெலடி மெட்டுக்களுக்கு பயன்படுத்தப்படும் அடிப்படை chords பலவற்றை பகிர்ந்து கொண்டோம்.  Western music  notation எழுதுவதில் அவருக்கிருந்த அபாரத் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  ' வரப்பிரசாதம்  '  என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த கோவர்த்தன் என்ற இசையமைப்பாளர்  சில வேலைகள் காரணமாக  இளையராஜாவை  re-recording செய்யச் சொல்லிவிட்டுப் போனார்.  Major 7th chord  மற்றும் minor 7th  chord  இரண்டுக்கும் இடையே அமையுமாறு அற்புதமான theme music ஒன்றினை இளையராஜா அமைத்ததைப் பார்த்து நான் அசந்து போனேன். "


அதன் பிறகு Jude David என்பவர்  Music notation எழுதுவதில் இளையராஜாவிற்கு  உதவி செய்திருக்கிறார்.  கோவர்த்தன் மாஸ்டரிடமிருந்து  ஜதி , தாளம் , தமிழில் ஸ்வரங்கள் எழுதுதல் போன்றவற்றையும் இளையராஜா தெளிவாகக்  கற்றறிந்தார் . இந்தச் செய்திகளை பகிரும் விஜி மேனுவல் இன்னும்  தொடர்கிறார்.


"  சில படங்கள் இளையராஜாவோடு பணியாற்றிய பிறகு இளையராஜா என்னை அழைத்து அவருடைய மைத்துனர் சசி என்பவருக்கு பாஸ் கிடார் கற்றுக் கொடுக்கச் சொன்னார். நானும் பல நாட்கள் செலவழித்து கற்றுக் கொடுத்தேன். சசி நன்கு தேறிய  பிறகு  நான் கீபோர்ட் பக்கம் நகர்ந்து விட்டேன் .  அதன் பிறகு பல  ஆண்டுகள் ஆர்கனிஸ்டாக  இளையராஜாவோடு பணி  புரிந்தேன்.  பிரியா படத்தில் ' டார்லிங் டார்லிங் ' பாட்டுக்கு முன்பு ஆரம்பிக்கும் பாஸ் கிடார் பீஸ் ,  ராஜ பார்வை படத்தில் கமல் தனியாக வாசிக்கும் வயலினை நரசிம்மன் இசைக்க அதன் கூடவே வரும் கீபோர்ட் இசையை நான் வாசித்தது எல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். இளையராஜா இல்லாமல் அது சாத்தியமாய் இருக்காது. "


                                    
                                               


                      இளையராஜா பற்றி இன்னும் பல செய்திகள் குவிந்து கிடக்கின்றன . இந்தப் பதிவிலேயே எல்லாவற்றையும் பகிர முடியாது.  ராட்சசன் இன்னும் பல காலம் வளர்ந்து கொண்டுதான் செல்லும் .  அவருடைய  பாடல்களுக்குள் செல்வோம்.

                   
                         1979 ல் வந்த படங்களில் ' சக்களத்தி '  என்றொரு படம் பார்த்து விட்டு வீடு திரும்புகையில் பக்கத்துக்கு வீட்டு  பாட்டிகள் இரண்டு பேர்   ' என்ன சினிமா பார்த்தாய் ? '  என்று கேட்டார்கள் . நான் படத்தின் பேரைச் சொன்னவுடன்  பலமாக சிரித்தார்கள்.  எனக்கு கோபம் வந்ததால் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  நீண்ட நாட்கள் கழித்துதான் தெரிந்தது .  அவர்கள் இருவருக்கும் ஒரே  கணவன்.  சக்களத்திக்கு அர்த்தம் அதன் பிறகு  தெரிந்தது.


                         அந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இருந்தாலும் ' என்ன பாட்டு பாட ' , ' வாடை வாட்டுது '  என்ற இரு பாடல்கள் ஹிட் ஆகின.  இரண்டையும் இளையராஜாவின் இளமைக் குரலில் கேட்கலாம்.  புலமைப் பித்தன்,  முத்துலிங்கம் இருவரும் எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள் .

                          ' என்ன பாட்டு பாட ....என்ன தாளம் போட..'  என்ற பாடல் டைட்டில் பாடல்.  மாட்டு வண்டி ஒட்டிக் கொண்டே நாயகன் பாடுவது காட்சி .  அதற்கேற்றார்போல  ராஜா  மாடுகள்  ஓடும்போது  அசையும்  கழுத்துச் சலங்கையின் ஒலியை தாளமாக வைத்து  மிகவும் பொருத்தமாக பாடல் இசைத்திருப்பார்.  அந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரபரப்பாக ஒலிபரப்பப்பட்டது.  அசையும் சதங்கையும் இசையும் இந்தப் பாட்டைக் கேட்டால் நம்மையும் தாளம் போட வைக்கும்.  ஷெனாய் பயன்பாடு இந்தப் பாட்டில் அதிகம் .  மாட்டைப் பார்த்துப்  பேசுவதை பாடலாக மாற்றியிருப்பார்கள்.  கிராமத்தில் மனிதர்கள் விலங்குகளோடு பேசி பழகிக்  கொள்ளும் பாச உணர்வுகளை  எளிதாக  புரியும்  வண்ணம்  பாடல்  கொடுக்கப்பட்டிருக்கும். எளிமையான நாட்டுப்புறப்  பாடலை இளையராஜா இனிமையாக கொடுத்திருக்கிறார்.  மாயமாலகௌளை  என்ற ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. 

                     
                                  
                                                 


                                    ' வாடை வாட்டுது ...ஒரு போர்வை கேட்குது ..' என்ற பாடல் பிரபலம் ஆன அடுத்த பாடல் என்று சொல்லலாம்.  வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் ஒரு கிராமத்து நாயகன்  மனைவியுடன் கொண்ட ஊடலால் விரக தாபத்தோடு  எழுப்பும் மன உணர்வுகளை பாட்டாக பாடுவதை இளையராஜாவின் இசை அப்படியே படம் பிடித்துக் காட்டும்.  சூழலுக்கு மிகவும் பொருத்தமான பாடல் . இரவின் தனிமை , கிராமத்துச சூழலின் ஓசைகள் , ராக்கோழி சப்தம், பூச்சிகளின்  ரீங்காரம் என பின்னணியை இசைக் கருவிகளிலேயே  கொண்டு வரும் அந்த கற்பனையும் லாவகமும் இளையராஜாவிற்கு கை வந்த கலையல்லவா!   கண் மூடி கேட்கும்போது  ஒரு குளிரான இரவை  நாமும் உணர்வோம் ; இனம் புரியா சோகத்தில் நாமும் உழல்வோம் .


                                    
                                            


                          ' தர்மயுத்தம்  '  வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் எனக்கு ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய படம்.  ரஜினியின் நடிப்பை வெகுவாக ரசித்த படம்.  இளையராஜாவின் மிரட்டலான  இசை என்னை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.  பௌர்ணமி  இரவில் நாயகனுக்கு ஏற்படும் வெறித்தனத்தை படு மிரட்டலாக எடுத்திருப்பார்கள்.  அதற்கு ராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசை படம் பார்க்கும் எல்லோருக்கும் நிச்சயம் கிலியை  ஏற்படுத்தும்.  சிகப்பு ரோஜாக்கள் திரைப்பட இசையைப் போலவே இந்தப் படத்திலும்  அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கு பின்னணி இசை மிரட்டும்.

                        இந்தப்  படத்தில் இரண்டு பாடல்கள் மெகா ஹிட் .  அண்ணன் தங்கை பாசத்திற்கு சிவாஜிக்குப் பிறகு அதிகம் பாராட்டப்பட்டவர் ரஜினி . தங்கைக்காக  ரஜினி பாடுவதாக ஒரு பாடல்  இசைக்கப்பட்டிருக்கும் . கண்ணதாசனின் அழகிய வரிகளில்,  மலேசியா வாசுதேவனின்  சுத்தமான உச்சரிப்பில்,  தெளிந்த குரலில்  ' ஒரு தங்க ரதத்தில்  பொன் மஞ்சள் நிலவு  '  என்ற அந்தப் பாடல் இப்போதும் புத்துணர்வை ஊட்டும்.  நினைவலைகள் பின்னோக்கிப் போகும் .  மகத்தான அந்த இசை நெஞ்சத்தை தாலாட்டும்.   மோகன ராகத்தில் இதயத்தை வருடும் அழகிய பாடல்.  தங்கைக்கென்று  இசைக்கப்பட்ட பாடல்களில் இதுவும் சாகா வரம் பெற்ற பாடல் என்று சொல்லலாம். 



                         மூன்று சரணங்கள் மூன்று  இடையிசையில்  வித்தியாசம் காட்டி நம்மை இசை இன்பத்தில் இளையராஜா திளைக்க வைத்திருப்பார்.  பாட்டின் ஆரம்ப இசை பல்லவியின் மெலோடியை கிடார்  கார்ட்ஸ் , மாண்டலின் கொண்டு ஆரம்பித்து மெலிதான ட்ரம்ஸ் சேர்த்து குழலால் ஆலாபனை செய்து கூட்டமாய் வயலின் சேர்க்கும் 
அழகிலே நாம் ஊஞ்சலாட ஆரம்பிக்கலாம்.  பாடல் முடியும் வரை ஊஞ்சலாடிக் கொண்டேதான் இருப்போம். அது தெரிந்துதான் இயக்குனர் ஆர். சி . சக்தி  காட்சியிலும்  ஊஞ்சலாடலை சேர்த்திருப்பார் போலும்!

                                  
                                             


                          சரணத்தில்  ' தங்கையல்ல ......' என்று  ஒரு ஆலாபனை  கொடுத்து மீண்டும் '  தங்கையல்ல  தாயானவள்  ..கோடி பாடல் நான் பாட பொருளானாள் '  என்று முடிக்கும் இடம் சுகமானது.  சிறு வயதில் பாடிக் கொண்டு அலைந்தது எல்லாம் இப்போது  நினைவுப்பறவையாய் சிறகடிக்கிறது .


                         அதே படத்தில்  ' ஆகாய கங்கை பூந்தேன் மலர்ச்சூடி ' என்ற காதல் டூயட் பாடலை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா!? மத்யமாவதி ராகத்தில் எம்.ஜி . வல்லபன்  எழுதிய பாடலுக்கு வாசுதேவனும் ஜானகியும் இணைந்து சுவை கூட்டி கொடுத்திருப்பார்கள்.  அற்புதமான மெலோடியில் இளையராஜாவின் முத்தாய்ப்பான
பாடல்.  ஜானகி ' தா...தான தனா...'  என்ற  ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்கும்போதே  பரபரப்பு  நம்மையும் தொற்றிக் கொள்ளும் . ' தேன் வந்து  பாயுது காதினிலே ' என்பது மொழிக்கு மட்டுமா ...மொழியோடு சேர்ந்த இசைக்கும்  பொருந்தும்; இந்தப் பாடலுக்கும் பொருந்தும்.  இளையராஜாவை ' ராக தேவன் ' என அழைப்பதில் தவறேதுமில்லை.  பாடல் கேட்கும்போது குளிர்ந்த காற்று நம்மை மென்மையாய் தழுவிச் செல்லும் உணர்வு பூப்பதில் அதியசமும் இல்லை.

                         ஜானகியின் ஹம்மிங் முடிந்து பெல் ஒலியுடன் வித்தியாசமான பல இசைக்கருவிகளின்  நாதத்தோடு பல்லவி ஆரம்பிக்கும் லாவகம் மிகவும் சுகமானது.  எந்தப் பாடலாக இருந்தாலும்  ஒரு  பாடலின் போக்கிற்கு  instrumentation  இப்படிதான் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் இளையராஜாவிற்கு நிகர் அவரே !  சமீபத்தில் எஸ்.பி.பி அவர்களே  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதைச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு செய்யப்பட்டிருக்கும்   instrumentation  மிகப் பிரமாதம்.  பல்லவியில் வாசு பாடி முடிக்க ' குங்குமத் தேரில்  ' என்று ஆரம்பிக்கும் ஜானகியின் இளமை கொஞ்சும் குரலை வெகுவாக ரசிக்கலாம்.   புதுமையான  இரண்டு இடையிசைகளுக்காகவே  பலமுறை இந்தப் பாடலை நான் கேட்டிருக்கிறேன். இரண்டாவது இடையிசையில் ஜானகியின் ஹம்மிங் சேர்ந்து இசைகருவிகளின் கூட்டமும் சங்கமிக்கும் அழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரின்பம் தரும்.  

                                   
                                                

                        இடையிசை முழுவதும் பல கருவிகளின் சங்கமம் இருந்தாலும் வயலின்களின் ஆக்கிரமிப்பு எல்லாவற்றையும் விட சற்று தூக்கலாகவே தெரியும் . இப்படிப்பட்ட இசைக்கோர்வைகளை  ஒன்றிணைத்து  இசை மாலையாக தொடுக்கும் இளையராஜாவின்  கற்பனா சக்தியை  எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.  பாடல் கேட்டுக் கொண்டிருக்கும்போதே நமக்கும் இறக்கை முளைத்து பறக்கும் தேவதைகள் ஆகிப் போவோம் .  ராஜாவின் இசைக்கு நம்மை தேவதையாக்கும் வல்லமை உண்டு.  இசையை கேட்கத் தெரிந்தவரல்ல உணரத் தெரிந்தவருக்கே அது புரியும் .  

                        இசைக்கத் தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு.  இசையின் வேர்களை இதயத்தில் பரப்பி  ஆழ்மனத்தின் ஆணிவேராய்  ஊன்றி நமது ஆன்மாவையே  அசைத்துப் பார்க்கும் இசைக் கலைஞர்கள் ஒரு சிலரே!  அதில் இளையராஜாவும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  


....................தொடர்வேன் .....................







                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   





23 comments:

  1. ஹலோ கரன்

    இது உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். என் எழுத்து காரிகனின் காப்பியா!? அப்படியா!? அவர் இளையராஜாவை ஏற்றுக் கொள்ளவே மாட்டாரே ! எப்படி இந்தப் பதிவு காப்பியாகும் ? புரியவில்லை.

    ReplyDelete
  2. சார்ல்ஸ்
    இளையராஜா குறித்து இணையத்தில் வெளியான செய்திகளைப் பகிர்ந்தது அவரை அறியாதவர்கள் அநேக செய்திகள் தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கிறது .
    #இசை அமைக்க ஆயிரம் பேர் இருந்தாலும் ஆன்மாவை வசீகரிக்கும் இசையை அமைக்கும் சிலரில் இளையராஜாவும் ஒருவர் .#இது மறுக்க முடியாத உண்மையே .எத்தனை எத்தனை பாடல்கள். இனம்புரியாத உணர்வுகளை இதயத்திற்குள் இழுத்துச் செல்லும் பாடல்கள் .இவை புரிந்தாலும் புரியாத மாதிரியே மறுப்புக் கூறியே ஆகவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு சில பாடல்களையே திரும்ப திரும்ப கூறி இளையராஜா இசையை சீரழித்தவர் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். .காலம் மாற்றறட்டும் .

    ReplyDelete
  3. வாங்க அருள்ஜீவா

    இளையராஜாவின் இசையை ரசிக்க கோடிக்கணக்கில் மனிதர்கள் உள்ளபோது மறுப்பதற்கென்று வெகு சிலர் இருப்பார்கள். அவர்களை 'இசைப்பிழைகள் ' என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்! நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும்? அவர்கள் ஒரு நாள் அவர்களாகவே ராஜாவின் இசைக்குத் திரும்புவார்கள் .

    ReplyDelete
  4. no doubt ilayatraja ji is one of the top music directors in the tamil film music world but this musical genius has been indulging in loose talks in the musical functions which he participates>>>> recently>> who is to tell him boldly?

    ReplyDelete
  5. சந்தர் சார்

    இளையராஜா மேடைகளில் என்ன பேசுகிறார் எதை பேசுகிறார் என்பது பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் அவரது இசைப் பெருமைகளை எடுத்துச் சொல்லும் இடத்தில் தேவையில்லை என்று நான் கருதுகிறேன். இளையராஜா என்ற ஆளை அல்ல , இளையராஜா என்ற இசை ஆளுமையைத்தான் நான் வியந்து பார்க்கிறேன். அதிகம் எடுத்துச் சொல்ல விழைகின்றேன்.

    கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் , சகிப்புத்தன்மை பற்றி ஒரு பிரபலம் சொன்ன கருத்தை உண்மையில் சகிக்க முடியாத பல ஜென்மங்கள் சகிப்புத்தன்மையற்ற அர்ச்சனைகளை அவர் மீது வாரி இறைக்கின்றன. போலவே , ராஜா எந்தக் கருத்தைச் சொன்னாலும் விமர்சனம் செய்யும் கூட்டம் உண்டு .

    அவர் பேச்சு , எழுத்து , கருத்து பற்றிய விசயங்களில் குறைகள் இருக்கிறதோ இல்லையோ, அவருடைய இசையில் உள்ள குறைகளைச் சொல்லுங்கள் . நான் விவாதம் செய்ய தயார்.

    ReplyDelete
  6. சால்ஸ்,

    இளையராஜா ஆரம்பத்தில் ஸ்ரீதரை மறுத்தாலும் பிறகு தொடர்ந்து அவர் படங்களுக்கு இசை அமைத்தார். ஆனால் தேவர் பிலிம்ஸார் கே வி மகாதேவனை ஒதுக்கி எம் எஸ் வி இடம் வந்தபோது எம் எஸ் வி யின் தாய் அவரை கடுமையாக சாடி அவரை தடுத்துவிட்டார். இறுதி வரை எம் எஸ் வி தேவர் படங்களுக்கு இசை அமைத்ததேயில்லை. ஒரு தகவலாகவே இதைச் சொல்கிறேன்.

    இளையராஜா மற்றவர்களிடத்தில் பணியாற்றியபோது அமைத்த கிடார் கார்ட்ஸ், தட்டிய மேளம், வாசித்த குழல், அமைத்த மெட்டு என்றெல்லாம் இப்போது தினுசு தினுசாக புது கதை விட்டால், அவரிடம் பணியாற்றிய போது எ ஆர் ரஹ்மான் செய்த பங்களிப்பையும் நாம் மறுக்கக் கூடாது. விக்ரம், புன்னகை மன்னன் படங்களில் ரஹ்மான் நிழல் நன்றாகவே தெரியும். ஆனால் அதைப் பற்றியெலாம் நீங்கள் ஒரு வார்த்தை பேச மாட்டீர்கள். இ ரா மட்டும் என்ன சுயம்புவா? மற்றவர்களிடத்தில் கற்றுக்கொண்டு பிறகு சுட்டுக்கொண்டு பாடல் போட்டவர்தான்.

    மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எழுதுவதே சிறந்தது என்பது என் எண்ணம். அப்படிப் பார்த்தால் உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் மற்றவர்கள் இ ரா பற்றி என்னத்தை பேசினார்கள் என்ற விக்கிபீடியா குறிப்பு மட்டும்தான் அதிகம் கிடைக்கிறது. பாவம்! இரா பாசத்தை இப்படியா கடன் வாங்கவேண்டும்?

    தொடருங்கள்....

    (இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு பாடல் கூட என்னை கவர்ந்ததில்லை. அதிலும் அந்த மலேசியா வாசுதேவன் தன் கட்டையான குரலில் பேசும் ஆகாய கங்கை ஒரு தலைவலி.என்ன பாட்டு பாட என்று இரா வுக்கு அப்போதே குழப்பம் வந்துவிட்டதை நாம்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லை போலும். )

    மேலே ஒருவர் காரிகனின் காப்பி என்று உங்களை வர்ணிக்க நீங்கள் அதற்கு சரியான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். உண்மையே.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  7. வாங்க காரிகன்

    ரொம்ப நாளாக காணோமே என்று பார்த்தேன். வந்துவிட்டீர்கள். நீங்கள்தானே உங்கள் பதிவில் அழுக்கு ரசனை பற்றி சொல்லியிருந்தீர்கள் . என் ரசனை உங்களுக்கு அழுக்கு ரசனையாக தெரிகிறது. ஆனால் உங்களின் ரசனை எனக்கும் ரசனையாகத்தான் தெரிகிறது. நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் பாடல்கள் அனைத்தும் அருமை . நான் குறிப்பிருக்கும் பாடல்கள் இலங்கை வானொலி இசைத்தட்டு தேயும் அளவிற்கு அதிக தடவைகள் ஒலிபரப்பிய பிரபலமான பாடல்கள். உங்களுக்குத்தான் அது அழுக்கு.

    எம்.எஸ்.வி. அவர்கள் வேட்டைக்காரன் என்ற தேவரின் படத்திற்கு இசையமைக்க மறுத்த பிறகு தேவர் மீண்டும் எம்.எஸ்.வி.யை நாடவேயில்லை. அதனால் எம்.எஸ்.வி தேவர் படங்களுக்கு இசையமைக்கவில்லை. அதன் காரணமாகவே சங்கர் கணேஷ் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இளையராஜா ஸ்ரீதருக்கு மறுத்த பிறகும் ஸ்ரீதர் விடாப்பிடியாக ராஜாவை இசையமைக்க வற்புறுத்தியதால் மரியாதை கருதி இளையராஜா ஒப்புக் கொண்டார். இதை வைத்துக் கொண்டு நீங்கள் அரசியல் செய்யாதீர்கள் .


    ரகுமான் இளையராஜாவிடம் பணியாற்றியபோது ராஜாவின் நோட்சுக்குதான் வாசித்தார். புதிதாக அவர் ஒன்றும் செய்துவிடவில்லை. கம்பியூட்டர் இசை என்ற புது தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைக் கையாளும் ஆப்பரேடர் ஆக ரகுமான் பணியாற்றினார். அவ்வளவுதான். புது ஐடியா எல்லாம் கொடுக்கவில்லை. நீங்கள் விடுவதுதான் புதுக் கதை. விட்டால் புன்னகை மன்னன் பாட்டெல்லாம் ரகுமான் போட்டது என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே!

    நான் இளையராஜாவைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் ஒரு சாதாரணனின் ரசனையாகவே பார்ப்பார்கள். பிரபலங்கள் பலர் பேசியதை குறிப்பிடும்போது இன்னும் ஆர்வமாக வாசிப்பார்கள். அதனால்தான் நான் மற்றவரின் பார்வையையும் பதிவு செய்கிறேன். நிறைய பேருக்கு நான் குறிப்பிடுவது புதுச் செய்தியாக இருக்கலாம் அல்லவா!









    ReplyDelete
    Replies
    1. திரு. காரிகன் அவர்களே,

      உங்களுக்கு எப்படித்தான் இப்படியெல்லாம் சொல்ல மனம் வருகிறது என்று என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புன்னகை மன்னன், விக்ரம், சத்யா, காதல் பரிசு, இன்ன பிற கமல் படங்களுக்கு ரகுமான் தான் இசையமைத்தார் என்று சொல்லும்போது உங்களை நம்ப ஒரு கூட்டம் இருக்கும். அங்கே உங்கள் வியாபாரத்தை வைத்துகொள்ளுங்கள். நீங்கள் சொன்ன படங்களுக்கு ரகுமானின் பங்களிப்பு இருந்திருந்தால் கமல் அறிந்திருந்தால் நிச்சயமாக கமல் அவர்கள் தான் ரகுமானை அறிமுகபடித்திருப்பார். இதெல்லாம் நம்ப நாங்கள் யாரும் எதையும் பகுத்தரியமுடியாத ஆட்கள் கிடையாது.

      எம்.எஸ்.வி அய்யா தேவர் படங்களுக்கு இசையமைக்க கூடாதுன்னு உறுதிமொழி வாங்கியது அவரின் தாயார், அந்த கதைக்கு இசைஞானி ஸ்ரீதர் அவர்கள் படத்துக்கு இசையமைக்க மறுத்து, பின் ஒத்துகொண்டதுக்கும் ஒன்றும் சம்பந்தமும் இல்லை. இசைஞானி யாரும் உறுதிமொழியோ, மிரட்டவோ இல்லை. அவராகவே மறுத்து, பின் அவரின் மேல் உள்ள மரியாதையினால் இசையமைக்க ஒத்துகொண்டார். இது தான் உண்மை. வழக்கம் போல் உங்கள் சேறுகளை வீசி எங்களிடம் திட்டு வாங்காதீர்கள்.

      Delete
  8. Major 7th chord மற்றும் minor 7th chord இரண்டுக்கும் இடையே எப்படி இசை அமைத்தார்? அப்படி செய்வதற்கு கடவுளின் கருணையும் அபாரமான ஞானமும் தேவை. அது தான் இளையராஜா.

    நீங்கள் எழுதி வரும் கட்டுரை அபாரம் சார்லஸ். ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து அனுபவித்து படித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாங்க குரு சார்

    வருகைக்கு நன்றி. பொதுவாக 7th chord அதிகமாக பயன்படுத்தாமல் இசை அமைப்பார்கள் என்று இசைக்கலைஞர்கள் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன் . விஜி மானுவல் அதைப்பற்றிக் குறிப்பிட்டு சொல்கிறார் என்றால் நிச்சயம் பொருள் இருக்கும். நீங்களும் ஆச்சரியப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கும் இசை புரிந்திருக்கும் என நினைக்கிறேன். புரிந்ததால்தான் இளையராஜாவின் அபார இசை ஞானம் போற்றுகிறீர்கள்.

    இளையராஜா எப்படிப்பட்டவராகவும் இருந்துவிட்டு போகட்டும். அதை விமர்சிக்க நான் வரவில்லை. அவருடைய இசை ஞானத்தையும் படைப்பையும் மட்டுமே நான் ரசிக்கிறேன். மற்றவரோடு பகிர்கிறேன்.

    ReplyDelete
  10. இளையராஜாவை பற்றிய, அறியாத தகவல்கள் அடங்கிய நல்ல பதிவு.

    தொடருவோம் சார்லஸ்

    சாமானியன்

    ReplyDelete
  11. நன்றி சாம் சார். மனமார்ந்த உங்களின் பாராட்டுக்கு நன்றி. இன்னும் இளையராஜா பற்றிய செய்திகள் நிறைய சொல்லலாம்.

    ReplyDelete
  12. நல்ல தகவல்கள்.சில தெரிந்தவை.பல தெரியாதவை.நன்றி சார்ல்ஸ்.
    மூடுபனி படஇசையமைப்பில் ரகுமானுக்கு கீபோர்டில் இன்னென்ன கட்டைகளை அழுத்தினால் போதும் என ராஜா பழக்கிய செய்தியும் உண்டு.

    ///ஒரு பாடல் கூட என்னை கவர்ந்ததில்லை. அதிலும் அந்த மலேசியா வாசுதேவன் தன் கட்டையான குரலில் பேசும் ஆகாய கங்கை ஒரு தலைவலி.// ஆககா..

    நாம் அழுவதா சிரிப்பதா தேவனே !?

    ReplyDelete
  13. வாங்க விமல்

    காரிகன் பேசுவதை நான் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பாவம் அறியாமல்தானே பேசுகிறார்!

    மூடு பனி படத்தின் போது ரகுமானுக்கு ராஜா எடுத்த பாடம் எனக்கு புது செய்தி . இது போன்ற செய்திகளை நீங்கள்தான் அவ்வப்போது போட்டு உடைக்கிறீர்கள். சிலர் மூக்கையும் சேர்த்து!

    ReplyDelete
  14. நண்பர் சார்லஸ் அவர்களுக்கு,

    அதற்குள் பதிமூணாவது பகுதி வந்துவிட்டதா?

    இந்த பகுதியில் குறைந்தளவு அனுபவங்கள் இருந்தாலும், என் வாழ்க்கையிலும் கலந்து விட்ட இரண்டு பாடல்கள் இடம் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. அந்த பால்ய காலத்தில் என் வாயில் அடிக்கடி பாடப்பட்ட ''என்ன பாட்டு பாட, என்ன தாளம் போட'' மற்றும் ''ஆகாய கங்கை பூந்தேன் மலர் சோலை''.

    சினிமா பற்றி தெரிந்து கொண்ட காலகட்டத்தில் சக்களத்தி பாட்டு என்னை ரொம்ப கவர்ந்தது. எந்தவிதமான இலக்கிய பூச்சூடல் மற்றும் செந்தமிழ் நடையுடன் இல்லாமல், ஒரு எளிய மனிதன் கூட ஹம் செய்யகூடிய பாட்டு, சிறுவனான என்னை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

    அடுத்து தர்ம யுத்தம் பாடல், ரேடியோவில் கேட்ட பழகிய பாடலை, முதன் முதலாக தூர்தர்ஷன் ஞாயிறு மாலையில் ஒளிப்பரப்பாகும் படத்தில் பார்த்து, கேட்டு மெய் சிலிர்த்து என்னை என்னவோ செய்ததை இன்றும் என்னால் உணர முடிகிறது. அது தான் ராஜா சாரின் மாயமோ? மந்திரமோ?. மறுநாள் பாடல் வரிகளுக்காக பாட்டு புத்தகம் தேடி கடை கடையாக அலைந்த அனுபவம் இந்த படத்தின் பாட்டுக்கும் உண்டு என் வாழ்வில். இன்றும் இந்த பாடலில் உள்ள இளமை (குறிப்பாக ஜானகி அம்மாவின் குரல்) இன்றைய தலைமுறையும் கவர்ந்து இழுக்கிறது என்று சொன்னால் மிகைஅல்ல. தர்மயுத்தம் படத்தில் என்னை கவர்ந்த இன்னொரு பாடல் ஜானகி அம்மா தனித்து பாடும் ''அட போடா'' பாடலும் அன்று என்னை கவர்ந்ததுதான். தங்க ரதத்தில் பாடல் இன்று பாடலின் காட்சியமைப்புக்கும், இசையமைப்புக்கும் நான் அடிமை. அப்படி ஒரு தங்கை நம் வாழ்வில் இருந்தால் எவ்ளோ நன்றாக இருக்கும் என்று கற்பனையில் கொண்டு செல்ல கூடிய இசை. ராஜாவின் இசையை அனுபவிக்க ஒரு ரசனை வேண்டும்..அதோடு வாழ நமக்கு இந்த பிறவி போதாது.

    வற்றாத இசை நீரை,
    இயற்க்கை (இசை )ஊற்றை விட்டுவிட்டு
    இன்று குழாய் தண்ணீரை
    குடித்துக்கொண்டு இருக்கிறோம்.

    அடுத்து உங்கள் இசை ராட்சசன் சீக்கிரம் வரட்டும்.

    ReplyDelete
  15. வாங்க குமார்

    எனது அனுபவத்தை விட உங்களின் அனுபவம் அழகான கவிதையாக புலப்படுகிறது. இளையராஜாவின் பாடல்களை கடந்துவிட்டு தமிழ் திரை இசையை கேட்பவர்கள் யாரேனும் இருக்க முடியாது. மறுப்பவர்கள் ஏதோ ஒரு வன்மப்பார்வை கொண்டுதான் மறுத்துப் பேசுகிறார்களே ஒழிய உண்மையில் ராஜாவின் பல பாடல்களை ரசித்தவர்களாகத்தான் இருப்பார்கள். பொய் முகங்கள் தரித்தவர்களைப் பற்றி நாம் அக்கறை கொள்ளாது இளையராஜாவின் இசைக்கவிதைக்குள் மூழ்குவோம். ஆம். இளையராஜாவின் இசைக்காக எழுதப்பட்ட கவிதை நம்மை இம்சை செய்ததை விட இசையே அதிகம் செய்தது; இப்போதும் செய்கிறது. ஏனென்றால் ராஜாவின் இசையே ஒரு கவிதைதானே!

    "வற்றாத இசை நீரை,
    இயற்க்கை (இசை )ஊற்றை விட்டுவிட்டு
    இன்று குழாய் தண்ணீரை
    குடித்துக்கொண்டு இருக்கிறோம்."

    உங்களின் இந்தக் கவிதையும் ரசனைக்குரியது. கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் . நீங்கள் உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  16. //எ ஆர் ரஹ்மான் செய்த பங்களிப்பையும் நாம் மறுக்கக் கூடாது. விக்ரம், புன்னகை மன்னன் படங்களில் ரஹ்மான் நிழல் நன்றாகவே தெரியும். ஆனால் அதைப் பற்றியெலாம் நீங்கள் ஒரு வார்த்தை பேச மாட்டீர்கள். இ ரா மட்டும் என்ன சுயம்புவா? மற்றவர்களிடத்தில் கற்றுக்கொண்டு பிறகு சுட்டுக்கொண்டு பாடல் போட்டவர்தான்.// காரிகன்

    அமுதமான பொன்மொழிகள்... ! ரகுமான் அல்ல வேறு எந்த வித்துவானாக இருந்தாலும் ராஜாவின் நோட்சை வாசித்து விட்டு போக வேண்டியது தான் என்பது இசையின் அரிச் சுவடியே தெரியாத நபர்களுக்கு எங்கே புரியும் ?

    இளையராஜா ஒருவரே முழுமையான மியூசிக் கம்போசர் என்பது ஊர் அறிந்த செய்தி.அதிலும் இணையத்தில் அவரது இசை பற்றியே அதிகம் பேர் எழுதுகிறார்கள்.அந்த பாதிப்பும் கொதிப்பும் தான் சிலரை. அவர்களே அலட்சியப்படுத்தி சென்ற எம் எஸ் வீயை இப்போது தூக்க நினைக்கிறார்கள்.பாவம் இப்படியாவது நல்ல விஷயம் நடக்கட்டும்.இப்படியே போய் ராஜாவின் இசையில் தான் வந்து நிற்பார்கள்.பிறகு சொல்வார்கள் இதையெல்லாம் நாம் எப்படி கடந்தோம் என்று!

    அதன் விளைவே ஓட்டை ஒடிசலான சப்பைக்கட்டு ,கட்டான வார்த்தைகளை போட்டு " கடையில் நின்று பாடல் கேட்டேன் ",," ஆட்டோவில் பாடல் கேட்டேன் ",," நண்பன் ஒருவன் அதை நல்ல பாடல் என்றான் ,,நானோ இதெல்லாம் ஒரு பாட்டா ! என்றேன் " என்ற சுயபுளுகு புராணங்களையும் வைத்து எழுதும் போது பிழையான தகவல்களையும் சேர்த்து "குப்பை " பதிவுகளை எழுதிக் குவிக்கும் ஒருவர் ,இசைக் கலைஞர்களை இழிவாக எழுதியும் அதில் சுய இன்பமும் காணும் ஒருவரை என்னும் போது
    சிரிப்பு சிரிப்பாக வருகிறது .

    //...ஆட்டோ ஓட்டுனரின் அலைபேசியிலிருந்து செந்தமிழ் தேன்மொழியாள் என்று டி ஆர் மகாலிங்கம் பாட ஆரம்பித்தார். அலைபாய்ந்த மனது சற்று நிதானமடைந்து பாடலைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. காலம் இடம் தெரியாத எதோ இனம் புரியாத எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. பாடல் உள்ளே செல்லச் செல்ல ஒரு திடீர் கணத்தில் நான் அந்தப் பாடலின் பின்னே சென்றுகொண்டிருந்தேன். ஒரே நொடியில் நான் நம் தமிழ்ச் சமூகத்தின் வேர்களுக்குள் புதைந்து போனேன். நம்முடைய மரபு சார்ந்த ரசனைகளும், பாரம்பரிய தொடர்புகளும், அதன் நீட்சியாக நம் வாழ்வின் அன்றாட இயக்கங்களோடு இணைந்துகொண்ட இசையும், நானும் ஒரே புள்ளியில் இணைந்தோம். கால இயந்திரம்!////

    "செந்தமிழ் தேன்மொழியாள்" பாடல் ஒரு ஹிந்திப்பாடலின் காப்பி என்பது பாமரனுக்கே அல்லது ஊருக்கே தெரியும்!
    "எல்லாம் தெரிந்த எழுத்தாளருக்கோ " , இது தமிழ் சமூகத்தின் வேராம் , மரபாம் ! வேடிக்கை.
    இந்த வருடத்தின் நகைச்சுவை ! இது தான்.

    இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளை பாராட்ட சிலர்.இது தான் கலிகாலம்.

    ReplyDelete
  17. வாங்க விமல்

    மறுபடியும் ஒரு தீவிர விமர்சனத்தோடு வந்திருக்கிறீர்கள். இளையராஜாவின் இசையை மட்டப்படுத்தி பேசுவதில் மகிழ்வு காணும் இணைய எழுத்தாளர்களை நன்றாகவே சாடியுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த இணைய எழுத்தாளர் தன்னுடைய சமீபத்திய பதிவில் எம்.எஸ்.வி . யின் பிரமாதமான புகழ் பெற்ற பாடல்களை மட்டும் சுட்டிக் காட்டிவிட்டு இளையராஜா என்று வரும்போது item song என்று சொல்லக்கூடிய பாடல்களையும் அதிக பிரபலமாகாத பாடல்களையும் சுட்டிக் காட்டியிருப்பார். 'அந்த ' மாதிரி பாடல்களை மெல்லிசை மன்னரின் பாடல்களோடு ஒப்பிடுவார்.

    பனி விழும் மலர் வனம் , இளைய நிலா போன்ற பாடல்களை ஒப்பிட வேண்டியதுதானே! அவருக்கேற்ற வகையில் வசதியாக மற்றவரையும் நம்ப வைக்கும் சூழ்ச்சி எழுத்தினை அதில் நான் உணர்ந்தேன். எல்லாவற்றையும் வாசித்தவர்கள் அவரை புகழ்ந்தார்களே ஒழிய இந்தக் கேள்வியை எழுப்பவில்லை. நானும் எழுப்பவில்லை.


    எம்.எஸ்.வி அவர்களும் 'அந்த ' மாதிரியான பாடல்கள் கொடுத்திருக்கிறார். பிரபலமாகாத சுமார் ரக பாடல்களும் நிறைய இருக்கின்றன . அவற்றையெல்லாம் எடுத்துக் காட்டினால் ஒரு இசை மேதையின் இசையைப் புகழும் இடத்தில் அவரை களங்கப்படுத்தியதாக ஆகி விடுமே என்று நான் எதுவும் அங்கு பின்னூட்டமிடவில்லை.

    ReplyDelete
  18. சால்ஸ்,

    இங்கே என்னைப் பற்றி வாந்தி எடுத்திருக்கும் நண்பர் விமல் முதலில் என் தளத்தில் வேறு வேறு பெயர்களில் இரண்டு மூன்று கருத்துக்களை எழுதினார். நான் அவற்றை அனுமத்திக்கவில்லை. காரணம் அவர் எம் எஸ் வி யை மிகவும் இகழ்ச்சியாகப் பேசுவபர். உடனே இங்கே வந்து தஞ்சம் அடைந்துவிட்டார். நீங்களும் நன்றாகவே அவருக்கு கொம்பு சீவி விடுகிறீர்கள். காரிகன் இல்லாமல் உங்களால் தளத்தை நடத்த முடியாது போலும். மீண்டும் மீண்டும் நீங்கள் அதை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். நல்லது. என்னால் உங்களுக்கு விளம்பரம் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

    எனது அடுத்த பதிவு உங்களுக்கு பதில் சொல்லும். எனவே என் நேரத்தை இங்கே வீணடிக்க விரும்பவில்லை.

    ReplyDelete
  19. சார்ல்ஸ்

    இந்த ஐயா எங்கே எங்கள் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொன்னார் ?ஓடி ஒளித்ததுயார் என்பது தங்களுக்கு தெரியும் அல்லவா.இந்த லட்சணத்தில் அடுத்த பதிவு பதில் சொல்லும் என்கிறார்.

    காரிகன் . திறந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.வாருங்கள் மோதி பார்ப்போம்.

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்