Thursday 9 October 2014

இசை ராட்சஷன்- 2






                                        இசை ராட்சஷன்- 2

                                                    (The Musical Legend )



                         பட்டி தொட்டிஎங்கும் பாடல்கள் பரபரத்தன. காற்றில் கலகலத்தன. செல்லுமிடமெல்லாம் அன்னக்கிளி பாடல்கள். யார் இந்த இளையராஜா ?
எம்.எஸ்.வி யை விட சிறந்தவரா என்ன? ஒரு படம் அல்லது இரண்டு படத்தோடு இவர் காணாமல் போய் விடுவார் .  (இன்று ஆயிரம் படங்கள் முடித்திருப்பார்  என்று அப்போது தெரிந்திருக்க ஞாயமில்லை. )  எம்.எஸ்.வி முன்னாள் இவர் நிற்க முடியுமா ? இது போன்று நானாகவே கேள்வியும் பதிலும் மனதுக்குள் போட்டுக் கொண்டேன் . நண்பர்களோடும் சேர்ந்து விமர்சனம் செய்தேன் . எம்.எஸ்.வி இசை அமைக்காத பாடலை ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புக்கொள்ளவில்லை . ஆனாலும் அன்னக்கிளி  பாடல்கள் என்னைக் கவர்ந்தன . வேண்டா வெறுப்பாய்  கேட்பதாக நண்பர்கள் முன் பாசாங்கு செய்து கொண்டு விரும்பித்தான்  கேட்டுக் கொண்டிருந்தேன்.
                       
                           பக்கத்துக்கு வீட்டுத் தாத்தா ஒருவர் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். நான் வழக்கம் போல ஒரு எம்.ஜி.ஆர் பாடல் பாடினேன் .  ' அன்னக்கிளி ஒன்ன தேடுதே பாடுடா ' என்றார். எனக்கு இரு வரிகளே தெரியும். அதை மனனம் செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததில்லை . நான்தான்
எம்.எஸ்.வி ரசிகனாச்சே ! எப்படி அடுத்தவர் பாடலை பாடுவது என்ற இறுமாப்பு ...ஈகோ ! பாருங்கள் சின்ன வயசிலேயே நம்மை எப்படி கெடுத்து வைத்திருக்கிறது இந்த சமூகம் !?  'எனக்கு அந்தப் பாட்டு தெரியாது தாத்தா '
என்றேன் .  'அடப் போடா ! ஊரே அந்தப் பாட்டதான் பாடுது . பாட்டுப் பாடுறவன் நீ தெரிஞ்சிருக்க  வேண்டாமா?' என்று தாத்தா சொன்னது எனக்கு அவமானமாகப் பட்டது .


                            அதற்குப் பிறகுதான் அன்னக்கிளி பாடல்கள் முழுவதையும் கவனிக்க ஆரம்பித்தேன் . பாடல்களை மனனம் செய்தேன் .பாடச் சொல்லிக் கேட்கும் இடங்களில் எல்லாம் பாட ஆரம்பித்தேன் .' மச்சானைப் பாத்தீங்களா ' மக்களின் மனசுக்குள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் பாடும்போது அவர்களின் முகம் பிரகாசமடைவதைக் கொண்டு என்னால் உணர முடிந்தது . ஆனாலும் மனதுக்குள் இளையராஜாவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . இந்தப் பாட்டை எம்.எஸ்.வி தானே  போட்டிருக்க வேண்டும் . யார் அது இளையராஜா?எப்படி அவர் இதற்கு இசை அமைக்கலாம் ? இது போன்ற கேள்விகள் எல்லாம் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தன . நண்பர்களிடமும் விவாதம் வேறு!  ஆனால் அவரைப் பற்றி ஒரு துரும்பும் தெரியாது. பேப்பர் படிக்கும் வயசும் இல்லை .

                                அப்போதெல்லாம் நினைத்தவுடன் நமக்குப் பிடித்த பாடல்களை உடனே கேட்டுவிட முடியாது . காத்திருக்க வேண்டும் . எங்காவது எப்போதாவது வானொலியிலோ இசைத்தட்டு ஒலிக்கப்படும் இடத்திலோ இசைக்கப்படும்போதுதான் கேட்க முடியும் . ரெகார்ட் பிளேயர் உள்ள வீடுகள் அபூர்வம் .'வடிவேலு'  மாதிரி  யாராவது 'துபாய்' போய்விட்டு வந்தவர் வீட்டில் கேட்கலாம் . ' அவனுக்கென்னையா  வெளிநாட்டுக் காசு ...கூந்தல் இருக்கு அள்ளி முடியிறான் ' என்று பெரிசுகள் பேசுவது புரியாது என்றாலும் ஏதோ ஒரு பொறாமை ஒளிந்திருக்கிறது என்பது அச்சிறுவயதிலும் புரிந்தது .  எனக்கு அதுவா முக்கியம்?  பாட்டு கேட்க வேண்டும். எங்கு கேட்கலாம்  ?  போகிற போக்கில் எங்காவது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தால் நின்று  விடுவேன் . முழுப் பாடலும் முடியும்வரை அப்படி நின்று கேட்டுவிட்டுப் போன காலங்கள் இனிமையானவை . இப்போது எந்தப் பாட்டையும் எப்போதும் கேட்கலாம் . உள்ளங்கையில் உலகம் ஸ்மார்ட் போன் என்ற பெயரில் இருக்கிறது . ஆனால் உட்கார்ந்து கேட்கத்தான் நேரமில்லை . ஒரு பழமொழி சொல்வார்களே ...நாய்க்கு நிக்கவும் நேரமில்லை , நக்கவும் ...மன்னிக்கணும் நடக்கவும் நேரமில்லை என்று! அது போல காலத்தின் கோலம் பொதுவானதுதான் போலிருக்கிறது . நண்பர்களைக் கேட்டால் அவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். நேரமில்லை.. நேரமில்லை .

                               உலகம் உருள என் இசைத் தாகமும் வளர்ந்து கொண்டே சென்றது . இளையராஜா பற்றிய எந்த செய்தியும் எனக்கு அப்போது தெரியாது. பத்திரிக்கைகள் அப்போது டீக்கடையில்தான் வாசிக்க முடியும் . டீக்கடைப் பக்கம் ஒதுங்காத வயசு . இளையராஜா பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்த வண்ணம் இருந்ததும் தெரியாது . அவர் யாராய்  இருந்தால் என்ன? நமக்கு எம்.எஸ்.வி தான் . அவரை 'அடிச்சிக்க' ஆள் இல்லை என்று நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

                             ' லாலி லாலி லாலோ' என்று ஜானகி அவர்களின் ஹம்மிங் ஒலிக்க ஆரம்பித்தாலே ஏதோ இனம் புரியாத சந்தோஷ பிரவாகம் உள்ளுக்குள் சுரக்க ஆரம்பித்தது . 'அன்னக்கிளி உன்னத் தேடுதே ' என்று பாட்டு வரிகள் ஆரம்பித்ததும் மனசுக்குள் ஏதோ ஒன்று விழித்துக் கொள்வதை  உணர்ந்தாலும் எம்.எஸ்.வி இசை அமைக்காத பாடலை ரொம்பவும் நேசித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் . ' சுத்தச் சம்பா பச்ச நெல்லு ' பாட்டில் வரும் சப்தங்களும் கிராமிய மணம்  கமழ்ந்ததாகவே இருந்தது . அந்த நேரத்திற்கு  அந்த சப்தங்கள் எனக்கு  புதுமையாய் இருந்தது. அதுவரை கேட்காத ஒலி , கேட்காத இசைக் கருவிகளின் நாதம், லயம் எல்லாமே வித்தியாசமாய் இருந்ததை ரசித்தேன். ஆனால் ரசிக்கவில்லை. இல்லை அது போல காட்டிக் கொண்டேன் .







                             கிராமத்தில் அன்னக்கிளி பாடல்கள் அனைத்தும் அதிகமாய் கொண்டாடப்பட்டன .  " அன்னக்கிளி உன்ன தேடுதே பாட்டு மாதிரியே நிறைய பாட்டுகளை வயலில் வேலை செய்யிறவங்க பாடி நாங்க கேட்டிருக்கோம் . கூத்துக் கட்டுறவங்களும் பாடுவாங்க . என்ன...கூத்துல ஆர்மோனிய பொட்டி மட்டும் கூட வரும் . இவரு நிறைய வாத்தியங்கள் சேர்த்து அழகாக்கி இருக்காரு ...இந்த பாட்டக் கேட்டா சின்ன வயசு ஞாபகம் வருது " என்று என் தந்தையார் அன்று கூறிய வார்த்தைகள் இப்போதும் என் நினைவில் வலம் வரும் .  அவ்வப்போது அந்த பாட்டை அவர் லேசாக முனகிப் பாடுவதை கேட்டிருக்கிறேன். அந்தப் பாட்டு தாத்தாவிற்கும் பிடித்தது , அப்பாவிற்கும் பிடித்தது , எனக்கும் பிடித்தது , எல்லோருக்கும் பிடித்தது .

                              அன்னக்கிளி படத்திற்கான முதல் பாடல் பதிவு செய்ய ஒலிப்பதிவுக் கூடத்தில் இசைக் கலைஞர்களும் ஜானகியும் காத்திருக்க இளையராஜா டைமிங் கொடுத்து ஆரம்பிக்கும்போது மின்சாரம் தடைப்பட்டது என்று பின்னாளில் நான் தெரிந்து கொண்டேன் .  எல்லோரும் அந்த கணத்தை அபச குணமாக நினைத்தார்கள் . இளையராஜாவின் காதுபடவே குறை சொன்னார்கள். அத்தோடு அவருக்கு முடிந்து போனது என எல்லோரும் நினைக்க கால தேவன் வேறு மாதிரி கணக்குப் போடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . இசை உலகின் மணி மகுடத்தில் ஒரு வைரக் கல்லாக ஜொலிக்கப் போகிறார் என்று யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை .


                                சிறு வயதில் இசை அனுபவம் என்பது ஏதோ 'பிடிக்கிறது ' என்ற வகையில்தான் சொல்ல முடியுமே ஒழிய பெரியவர்களைப்  போல் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு பெரிதாக சிலாகித்துச் சொல்லும் அளவிற்கு இல்லை . இப்போதும் அந்தப் பாடல்களை கேட்கிறேன். மனம் விழிக்கிறது . நினைவலைகள் துளிர்க்கிறது . இதயத்தின் அறைகள் திறக்கிறது . இன்பத்தை நிறைக்கிறது .  இசை அனுபவம் அன்று போல் இன்று இல்லை . ஆழமும் அகலமும் அதிகரித்திருக்கின்றது.  அன்று ரசித்த இளையராஜாவை இன்றும் ரசிக்கின்றேன் கூடுதலாக! ஆரம்பித்து நாற்பது வருடங்களைத்  தொடப் போகிறது . இப்போதும் அவர் இசைத்த அந்தப் பாடல்கள்  அதே புத்துணர்வுடன் இருக்கின்றன  .

                                 அன்னக்கிளி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த போதே அடுத்த பாடல் ஒன்றை நான் கேட்க நேர்ந்தது.   ' கேட்டேளா அங்கே அதைப் பார்த்தேளா இங்கே ' என்ற ஊரெங்கும் தூள் கிளப்பிய பாடல் . குத்துப் பாடல்தான் என்றாலும் தாரை தப்பட்டைகள் கிழிய அடிக்கப்பட்ட பாடல் . அந்த நேரத்தில் படம் பெயர் தெரியாது . சின்னஞ்சிறு பசங்களோடு ஆட்டம் போடுவோம் . இந்தப்  பாடல் மச்சானைப் பாத்தீங்களாவை விட அதிகம் ஆட்டம் போட வைத்த பாட்டு . அண்ணன்மார்களிடம் என்ன படம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன் . பத்ரகாளி இசை இளையராஜா என்றார்கள் . எனக்கு ஏமாற்றம் . எம்.எஸ்.வி. என்று சொல்ல மாட்டார்களா என ஏங்கினேன். இளையராஜாவை மனசு இன்னும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.   வறட்டுப்  பிடிவாதம். ஆனாலும் பாடலை ரசிக்கிறேன் . அதே படத்தில் வரும் ' கண்ணன் ஒரு கைக்குழந்தை ' என்ற பாடலை கேட்கவே இல்லை . ஆட்டம் போடும் பாடல்கள்தான் திருவிழா காலங்களில் அதிகமிருக்கும் . மெலடி பாடல்கள் போட ஆரம்பித்தால் பசங்கள் களைந்து விடுவார்கள். நானும் காது கொடுத்துக் கேட்பதில்லை . ஆட்டம் போடும் வயது  . அதற்கேற்ற பாடல்கள் வந்தால் உற்சாகம் பிறந்து விடும் .



                                கேட்டேளா பாடலில் கடைசியாக வரும்  வசனத்தை பசங்கள் எல்லோரும் சேர்ந்து சத்தமாக சொல்லுவோம் . சொல்லிவிட்டு ஆனந்தமாய் சிரிப்போம் . பெருசுகள் திட்டுவார்கள் .  'குழாய்ச் சத்தத்துக்கு மேல கத்துறானுகப்பா... இதெல்லாம் பாட்டுன்னு போடுறாணுக பாரு'  என்று பெருசுகளின் அங்கலாய்ப்பை நாங்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதே கிடையாது .   இப்போதும் அந்த கணங்களை நினைத்தால் ஆனந்தம்தான்! 'கண்ணன் ஒரு கைக்குழந்தை ' என்ற பாடல் போகப் போகத்தான் ஈர்த்தது. கண்ணன் என்ற குழந்தைக்கு தாலாட்டு பாடுவார்கள் போலிருக்கிறது என்று நானாக கற்பனை செய்து கொண்டேன் . படம் பார்த்த பிறகு விபரம் புரிந்தது. அன்று அவ்வளவாக புரியாத பாடல் திருமணத்திற்குப்  பிறகு மனைவியோடு சேர்ந்து அமர்ந்து டிவியில் பார்த்தபோது கண்ணில் நீர் துளிர்க்கச் செய்தது . ' ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா '  என்று ஜேசுதாஸ் தன் காந்தர்வக் குரலில் பாடும்போது கண்ணில் துளிர்த்த அந்த நீர்  தாஸின் குரலாலா ....பாட்டு வரிகளாலா ...இளையராஜாவின் இசையாலா ?  வரிகளை சாதாரணமாகச் சொல்லிப் பார்த்தேன்  . அதில் லயிப்பு இல்லை . வேறு ராகத்தில் பாடிப் பார்த்தால் ஈர்ப்பு இல்லை . தாஸ் பாடிய மற்ற பாடலை கேட்டுப் பார்த்த போதும் கவரவில்லை. ஆக இளையராஜாவின் இசைக்குத்தான் அந்த மகிமை உள்ளது என்பதை நான் வளர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன் .
                   
                              அது அவரது இரண்டாவது படப்பாடலா இல்லை அதற்கு முன்னர் வேறு படங்கள் வந்திருக்கிறதா என்பதை ஆராயும் வயது இல்லை . பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தால் என் காதுக்கும் எட்டும் . நானும் ரசிப்பேன் .
பசங்களோட சேர்ந்து ஆட்டம் போடுவேன் . பசுமரத்தாணி போல மனதில்  பதிந்து கிடக்கும் நாட்கள் அவை . மறக்கக் கூடியவையா? இருந்தபோதிலும் இன்னும் இளையராஜாவை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அந்தக் கால கட்டத்தில் வந்த எம்.எஸ்.வி. யின் பாடல்களை கவனித்துக் கேட்டாலும் ரசித்தாலும்  இளையராஜாவின் பாடல்கள் சொல்லாமல் கொள்ளாமல் மனக் கதவினைத் திறந்து உள்ளே நுழைந்தன ... ஆட்டுவித்தன.

                   அந்த வருடம் 1976 ல் இளையராஜா இசைத்தத் திரைப்படங்கள்


                                       - அன்னக்கிளி
                                       -  பத்ரகாளி
                                       -  பாலூட்டி வளர்த்த கிளி
                                       -  உறவாடும் நெஞ்சம்





...........................தொடர்வேன் ..........................................











22 comments:

  1. ஹலோ சால்ஸ்,

    இத்தனை விரைவில் உங்களின் இரண்டாவது ராட்சஷன் வருவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடடா என்ன ஒரு வேகம்! வாழ்த்துக்கள். பால்ய நாட்களின் வசீகரத்தை மறுபடி ருசிக்க வைக்கிறது எழுத்து.

    -----" அன்னக்கிளி உன்ன தேடுதே பாட்டு மாதிரியே நிறைய பாட்டுகளை வயலில் வேலை செய்யிறவங்க பாடி நாங்க கேட்டிருக்கோம் . கூத்துக் கட்டுறவங்களும் பாடுவாங்க . என்ன...கூத்துல ஆர்மோனிய பொட்டி மட்டும் கூட வரும் . இவரு நிறைய வாத்தியங்கள் சேர்த்து அழகாக்கி இருக்காரு ...இந்த பாட்டக் கேட்டா சின்ன வயசு ஞாபகம் வருது " என்று என் தந்தையார் அன்று கூறிய வார்த்தைகள் இப்போதும் என் நினைவில் வலம் வரும் . -----

    உண்மைதான். அந்தப் பாடல் தேனி மாவட்டப்பக்கம் மக்கள் பாடும் நாட்டுப்புற வகையைச் சேர்ந்த கிராமத்துப் பாடல். அதை இளையராஜா அப்படியே "எடுத்துக் கொண்டதாக" அப்போது ஒருவர் அவரை கடுமையாக சாடியிருந்தார். அது என் நினைவில் வலம் வருகிறது. உங்கள் தந்தையாரின் கூற்று அதற்கு அடர்த்தி சேர்க்கிறது.

    உங்கள் எம் எஸ் வி- இளையராஜா ரசனை ஊசல் தொண்ணூறுகளின் ராஜா-ரஹ்மான் சார்பு போன்ற ஒன்று. இந்தச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். நானோ உங்களைப் போலில்லாமல் மச்சானப் பாத்தீங்களா பாடலை எந்தவித முரண்பாடுமில்லாமல் நன்றாகவே ரசித்தேன் அப்போது.

    பத்ரகாளி படத்தின் வாங்கோனா இளையராஜாவுக்கு அதிக வெளிச்சம் கொடுத்த பாடல். டப்பாங்குத்து இசைக்கு என்னை விட்டால் வேற யாருமில்லை என்று அவர் உணர்த்திய பாடல். ஆனால் இந்தப் பாடலை சுசீலாவை பாடவைத்து பெரிய புரட்சியே செய்திருப்பார் அவர். என்ன ஒரு கலை ரசனை! நீங்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வதைப் போல கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் ஒரு அற்புதம். அதேபோல் ஒரு நாள் உன்னோடு ஒருநாள் (உறவாடும் நெஞ்சம்) நான் பேச வந்தேன் (பாலூட்டி வளர்த்த கிளி) என் மனதை கவர்ந்த பாடல்கள்.

    மூன்றாவது ராட்சஷன் வரட்டும். சந்திப்போம்.

    ReplyDelete
  2. சால்ஸ்,

    நல்லாத்தான் எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  3. ஹலோ காரிகன்

    உங்களின் பின்னூட்டம் ரசித்தேன் . இளையராஜா ஒரு கிராமத்து மண்ணில் பிறந்து வளர்ந்தவர் . கிராமத்து மக்கள் பாடும் மண் சார்ந்த இசை கேட்டு வளர்ந்தவர் . இயற்கையான இசை ஞானம் இருந்ததால் கிராமத்து இசையில் கில்லாடியாக அவர் உருவாகி இருக்கலாம் . முதல் படம் கிராமத்துப் பின்னணியில் அமைய அவருக்கு மிட்டாய் கொடுத்த மாதிரி ஆகிவிட்டது . அன்னக்கிளி பாட்டு அகத்தூண்டலினால் இசைத்திருக்கலாம். ஆனால் அந்தப் பாட்டை நயத்தோடும் லயத்தோடும் அழகாக அமைத்திருக்கிறார் . ஒருவருக்கு சொந்தமான பாட்டாக ஆகிவிடாது . நாட்டுப்புறப் பாடல்.


    ///உங்கள் எம் எஸ் வி- இளையராஜா ரசனை ஊசல் தொண்ணூறுகளின் ராஜா-ரஹ்மான் சார்பு போன்ற ஒன்று. இந்தச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.///


    உண்மைதான் . காலச் சக்கரம் மாற்றங்களை கொண்டு வரலாம் . மனசுக்குள் மாற்றங்கள் ஏற்பட்டதா என்பதுதான் முக்கியம் .

    ///பத்ரகாளி படத்தின் வாங்கோனா இளையராஜாவுக்கு அதிக வெளிச்சம் கொடுத்த பாடல். டப்பாங்குத்து இசைக்கு என்னை விட்டால் வேற யாருமில்லை என்று அவர் உணர்த்திய பாடல். ஆனால் இந்தப் பாடலை சுசீலாவை பாடவைத்து பெரிய புரட்சியே செய்திருப்பார் அவர். என்ன ஒரு கலை ரசனை!///


    சுசீலா டப்பாங்குத்து பாட்டு பாடக் கூடாது என்று எந்த விதியும் இல்லையே ! எந்த விதமான பாட்டையும் பாடுவதுதான் ஒரு பாடகரின் திறமை . கர்னாடக இசை படித்திருக்காமலையே எஸ்.பி.பி அவர்கள் சங்கராபரணத்தில் கலக்கவில்லையா!? போலவே சுசீலாவிற்கு குத்துப் பாட்டும் பாட வரும் என்பதை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக எடுத்துக்கொள்வோம் .


    நான் பேச வந்தேன் ,ஒரு நாள் போன்ற பாடல்கள் அந்த வயதில் என்னை ஈர்க்கவில்லை . பின்னர் ஈர்த்தது.

    ReplyDelete
  4. சேகர் சார்

    நீங்கள் கலகம் செய்வதாய் இருந்தால் இன்னும் நன்றாக எழுதுவேன் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை எழுதுங்கள் அதுவே என்னைப் போன்ற பாமரர்களுக்குத் தேனாக இனிக்கும். (எதற்குத் தேவையில்லாமல் கலகம் செய்து சுவையைக் கெடுக்கவேண்டும்?)

      Delete
  5. மனதில் உள்ளதை அப்படியே எழுத்தில் கொண்டு வர சில பேரால்தான் முடியும். உங்களுக்கு அது சுலபமாக வருகிறது., வாழ்த்துக்கள் ,தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  6. ஆல்பிரெட் சார்

    தங்கள் வருகைக்கு நன்றி . இளவயது ஞாபகங்கள் உங்களுக்கும் என்னைப் போல இருப்பதில் சந்தோசம் . நீங்களும் அழகான பதிவு எழுதுகிறீர்கள் . என்னோடு தொடர்ந்து வாருங்கள் .

    ReplyDelete
  7. சரி இம்மாதிரி தனிப்பட்ட ரசனை வெளிப்பாடுகளை ஒவ்வொருவரும் அந்தந்த காலத்திற்கு ஏற்றமாதிரி அவரவர் அனுபவங்களிலிருந்தும் தொடங்க முடியும். ரோஜாவிலிருந்து தொடங்கிய, காதலனிலிருந்து தொடங்கிய அனுபவங்கள்.... ஏன் மைனாவிலிருந்து தொடங்கிய அனுபவங்கள், இப்போது மெட்றாஸிலிருந்து தொடங்கும் அனுபவங்கள் கூட இருக்கக்கூடும். இருந்துவிட்டுப் போகட்டும். பொதுவெளிக்கு எப்போது வரப்போகிறீர்கள்?......... எம்எஸ்வி எல்லாம் சும்மா ........ 'உலகின் ஒரே இசை ராட்சஸன் இவர்தான்' என்பதை எப்போது உணர்ந்தீர்கள்? உங்கள் ஞானக்குடத்தைப் போட்டு உடையுங்கள்.......

    ReplyDelete
  8. அமுதவன் சார்

    உங்களுக்கு பொறுமை இல்லை. இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறேன் . இன்னும் ஞானம் உருவாகவில்லை போட்டு உடைக்க ! இசை ராட்சஷனாக நாலு படங்களிலேயே உருவாகிவிட முடியுமா !? இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு . பிறகு இன்னொரு விஷயம் . இசை ராட்சஷன்கள் உலகில் பலர் உண்டு. இளையராஜா அதில் ஒன்று . 'அவர் மட்டுமே ' என்று எங்கிலும் சொல்லவில்லை.

    சமீபத்தில் படித்த ட்விட்டர் துணுக்கு ஒன்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் . " ஒருவரின் ரசனை இன்னொருவருக்கு மொக்கை . ஒருவரின் மொக்கை இன்னொருவருக்கு ரசனை ."

    ReplyDelete
  9. ---பிறகு இன்னொரு விஷயம் . இசை ராட்சஷன்கள் உலகில் பலர் உண்டு. இளையராஜா அதில் ஒன்று . 'அவர் மட்டுமே ' என்று எங்கிலும் சொல்லவில்லை. -----

    சால்ஸ்,

    இதைச் சொல்ல கொஞ்சம் இசைஞானம் வேண்டும். இதைத்தானே அமுதவன் மற்றும் நான் போன்றோர் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உங்களின் கருத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  10. " ஒருவரின் ரசனை இன்னொருவருக்கு மொக்கை . ஒருவரின் மொக்கை இன்னொருவருக்கு ரசனை ."

    சரி, அதே ஒருவரின் ரசனை பலருக்கு மொக்கையாக இருந்தால்?

    ReplyDelete
  11. சார்லஸ்
    .\\ இசை ராட்சஷன்கள் உலகில் பலர் உண்டு. இளையராஜா அதில் ஒன்று\\
    சார்லஸ் இங்கே ஒரு சின்னத் திருத்தத்துடன் உங்கள் கட்டுரையைத் தொடருங்கள்......'இசை ராட்சஷன்கள் தமிழ்த்திரையுலகிலேயே பலர் உண்டு. அந்த வரிசையில் இளையராஜாவுக்கும் இடம் உண்டு'........இந்தக் கணிப்புடன் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். அது எந்த இடம், எத்தனையாவது இடம் என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  12. காரிகன் , சேகர், அமுதவன் சார் மூவரின் கருத்துகளுக்கு நன்றி . நம்மில் ரசனைகளில் வேறுபாடு இருக்கலாம் . கருத்துகளிலும் வேறுபடலாம் . ஆனால் நீங்கள் சொல்ல வரும் செய்தி ஒன்றுதான் . இசை . நல்லதொரு இசை . ஒருவரிடமிருந்து மட்டும் வரவில்லை . ஜாம்பவான்கள் பலரிடமிருந்து உருவாகி வந்துள்ளது . சரியே ! நானும் உங்களோடு நடக்கிறேன் . ஆனால் இளையராஜாவால் எந்தவொரு விளைவும் ஏற்படவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் நான் சற்று நின்று உங்களை திரும்பிப் பார்க்கிறேன். அவ்வளவுதான் !

    ReplyDelete
  13. பதிவுகளிலும், பின்னூட்டங்களில் மெல்ல வரும் ;சூடு’ கணப்பாக இருக்கிறது.

    வளர்க

    ReplyDelete
  14. வாங்க தருமி சார்

    வளர்க என்று சொல்கிறீர்களே ! சூடு வளரட்டும் எனச் சொல்கிறீர்களா ? பதிவுகள் வளரட்டும் என்று சொல்கிறீர்களா!?

    ReplyDelete
  15. தங்கள் இசை இராட்சசன் அருமை.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

    ReplyDelete
  16. இந்த பாடல் எப்போது கேட்டாலும் எனது பால்யகால ஞாபகங்கள் வந்துவிடும்.

    காரிகன், அமுதவன் சார் அவர்கள் எழுதினால் நம்மை பொறுமை காக்க சொல்வார்கள். இங்கே ரொம்பவும் அவசர படுகிறார்களே. ராஜா சார் பற்றி பெருமை சொன்னால் அவரின் எதிரியை விட அதிகம் ஆத்திரம் வருகிறது இந்த இருவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. குமார் சார்

      அவர்கள் இருவரும் இளையராஜாவைத் தவிர எல்லோரையும் ஏற்றுக் கொண்டவர்கள் . நாம் எல்லோரது இசையையும் கேட்டுவிட்டுத்தான் இளையராஜாவை ரசிக்கிறோம் . அவர் இசையை ரசிப்பவர்கள் ' அற்பப் பதர்கள் ' என்ற எண்ணத்தோடு பேசுவார்கள். அவர்கள் ரசிப்பதை அப்படியே ஏற்க வேண்டும் என நினைப்பார்கள் . இது ஒரு தொடர்கதை . நமக்கு வழக்கமான கதை

      Delete
  17. //சூடு வளரட்டும் எனச் சொல்கிறீர்களா ? பதிவுகள் வளரட்டும் என்று சொல்கிறீர்களா!??/

    பதிவுகளும். அவை தரும் சூடும், ... ஒரு vicious cycleல் மாறி மாறி வளரட்டும்!

    ReplyDelete
  18. தகவலுக்கு ......

    ReplyDelete
  19. தருமி சார்

    தகவலுக்கு ....என்று என்ன சொல்ல வருகிறீர்கள்?

    ReplyDelete
  20. ஒ! அதுவா/! Notify me என்று உள்ளதை முதலில் டிக் செய்யாமல் விட்டு விட்டேன். பின்னூட்டங்களைக் காண்பதற்காக அதை மீண்டும் டிக் செய்தேன் - ப்ளாக் வழக்கம் தான் இது!

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்