Wednesday, 1 October 2014

இசை ராட்சஷன் - I

                          இசை ராட்சஷன் - I    
                         
                                              ( The Musical Legend ) 


 அது ஒரு அழகிய கிராமம் . சிறு வயதில் தொடக்கப்பள்ளி படிப்பை அங்கே தொடர வேண்டிய சூழல் . குளங்களும் கண்மாய்களும் சுற்றிலும் நிறைந்து காணப்படும் ஊர்.  தெருவில் வசிக்கும் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து கொண்டு கோலி ,கில்லி ,பட்டம் , பம்பரம் ,பாண்டி என்று பல விளையாட்டுக்களை விளையாடியது இன்றும் பசுமையான நினைவுகளைத் தரும் . நண்பர்களோடு சேர்ந்து கொண்டு குளங்களில் குளிக்கச் செல்வதும்  புளியம்பழம் பொறுக்குவதும் 'டயர் வண்டி' 'நொங்கு வண்டி' ஓட்டிக்  கொண்டு  அலைவதுமாய் துள்ளித் திரிந்த காலங்கள் அவை.

                           பக்கத்து  ஊரில் ஒரு சினிமா கொட்டகை.  வாடகைக்கு சைக்கிள்  எடுத்துக் கொண்டு ஆள் மாற்றி ஆள் மிதித்துக் கொண்டு ஓட்டிச் செல்வோம் . என் சினிமா உலக அறிமுகம் அங்கேதான் உருவானது திரைப் படங்களில் வரும் காட்சிகளை விட திரைப்பாடல்கள் மனதை ஆக்ரமித்தன. வாரம் ஒரு சினிமா வீதம் பழைய படங்கள் புது படங்கள் என்று அடிக்கடி பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். சினிமாக்கள் நிறைய கற்றுக் கொடுத்தன ...நல்லது ...கெட்டது ...  அனைத்துமே! 

                           சினிமா பாடல்கள் நிறைய கேட்கக்  கேட்க  கேள்வி ஞானத்தால் இசை ஞானம் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது . படம்  பார்த்து  விட்டு வந்த அடுத்த நாளிலிருந்து மனதுக்குப் பிடித்த பாடல் ரீங்காரமிட ஆரம்பித்தது பல்லவியாவது மனப்பாடம் ஆகிவிடும். எனக்குக் கொஞ்சம் பாட வரும் என்பதால் அந்தப் பாட்டுக்களை எல்லாம் பாடிக் கொண்டே விளையாடுவதும் சைக்கிள் ஒட்டுவதுமாக பொழுதுகளைக் கழித்துக்  கொண்டிருந்தேன்.

                           பள்ளிக்கூடம் படித்த காலத்தில் பாட்டுப் போட்டி என்றால் முதல் ஆளாக எழுந்து நிற்பேன் .  அந்த சமயத்தில் நாளை நமதே என்ற படம் வெளியாகி இருந்தது .  அதில் ' அன்பு மலர்களே ' என  எஸ். பி . பி  ஆரம்பிக்கும்  பாடல் மிகவும் பிரபலம் அடைந்திருந்தது . எல்லா போட்டிகளிலும் அதே பாடலைப் பாடி பரிசு வாங்கி விடுவேன் .

                            ஒரு சமயம் டீச்சருக்கு எரிச்சல் வந்துவிட்டது . ' வேற பாட்டை பாடுடா ' என்றார்கள் . மற்ற பாட்டுக்கள் மனப்பாடமாய் தெரியாது . சில பாடல்களுக்கு பல்லவி மட்டும்  தெரியும். ' டீச்சர் நாலு வரி தெரியும் ' என்பேன் . ' பாடித் தொலை ...அதே பாட்டையே எத்தனை தடவைதான் பாடுவாய் '  என்று முனகுவார்கள் . அப்போதும் நான் பாடுவது ஒரு எம். ஜி. ஆர் பாட்டாகத்தான்      இருக்கும். எம். ஜி. ஆர் படங்கள் என்றால் நிச்சயம் பாடல்கள் ஹிட் . ஹிட் ஆகாத படங்களே இல்லை. பல்லாண்டு வாழ்க படத்தில் ' அன்பெல்லாம் தமக்குரியர் ' எனத் தொடங்கும் பாடலை பாடுவேன் . நாலு வரிக்கு மேல் தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பேன் . ' முழுசா பாட கற்றுக் கொள்  ' என்பார் டீச்சர் . எங்கே போய்  கற்றுக் கொள்வது ? வீட்டில் அப்போது ரேடியோ பெட்டி ஏதும் இல்லை .

                                 பக்கத்து வீட்டு வானொலி இசைக்கும்போதேல்லாம் என் வீட்டு வாசலில் அமர்ந்து காது  கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பேன் . கேட்டு கேட்டு பாடல்கள் மனப்பாடம் செய்த காலங்கள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது .  ஏதேனும் விஷேசம் என்றால் அடிக்கடி  'குழாய் ' கட்டி பாடல்கள் போடுவார்கள். சோறு தண்ணி மறந்து பாட்டுக்களுக்கு அடிமையாகத் திரிந்த காலங்கள் நினைத்தால் இப்போதும் பசுமையே!  பசி வரும்போது வீடு தேடும்.  அம்மா என்னை தேடவும்  அலட்டிக் கொள்ளவும்  மாட்டார்கள்.  இருப்பதே நாலு தெரு . அதற்குள்தான் நான்  வலம் வருவேன் என்று அம்மாவிற்கு தெரியும் . ' குதிரைக்கு ........காய்ந்தால் கொள்ளு திங்கும் ' என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள் .  இப்போது பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் 'டார்ச்சர்'  போல அந்த காலத்து பெற்றோர் கொடுத்ததில்லை . அப்படி ஒரு  தனிமனித சுதந்திரத்தை அனுபவித்த நான் என் பிள்ளைகளுக்கு அதை கொடுப்பதில்லை என்பது எனக்கே தெரிகிறது. வேறுவழி....? சமூக வழக்கங்கள் மாறிவிட்டன. கோலி,பம்பரம்,பாண்டி போன்ற விளையாட்டுகள் வழக்கொழிந்து கொண்டே வருகின்றன.

                 தெருச் சிறார்களின் நட்பு என்பது அரிதான ஒன்றாகி வருகிறது. அவசர கதியில் பிள்ளைகளின் வாழ்க்கை. பள்ளியில் பாடம் முடிந்து கூடுதல் வகுப்பு வேறு!  ஆட்டோவில்  பயணம். பயணக் களைப்பு தெளிவதற்குள் டியுஷன் அது இல்லாத நாட்களில் வேறு ஏதாவது கற்றுக்கொள்ளும் பயிற்சி, வீட்டுப்பாடம் ...படிப்பு....கொஞ்சம் டிவி ... சாப்பாடு.. தூக்கம்... தூங்கி எழுந்தால் ஓட ஆரம்பிக்கவேண்டும் மீண்டும்! பாவம் குழந்தைகள். படுத்திக்கொண்டிருக்கிறோம்  நாம் எல்லோரும். எதிர்காலத்தை வளமாக்க நினைத்து அவர்களின் நிகழ் காலத்தை நரகமாக்கிகொண்டிருக்கிறோம்.

           என் சிறு வயது பிராயத்தில் நான் பள்ளியில் படித்த போது பாடங்களை எல்லாம் விழுந்து விழுந்து படித்ததாக ஞாபகம் இல்லை. பாடம் படித்த நாட்களும் ஞாபகத்தில் இல்லை. பாட்டுக்கள் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும் திரிந்த நாட்கள்தான் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இசையுலகம் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது.                 அப்போது மெல்லிசை மன்னரின் பாடல்கள் என்றால் கொள்ளைப்பிரியம். கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்களை வழங்குவதில் அவருக்கு யாரும் நிகரேயில்லை. "பாடல்கள் எட்டு அத்தனையும் தேன் சொட்டு" என்று ஏதாவது ஒரு படத்திற்கு விளம்பரம் கொடுப்பார்கள். உடனே படம் பார்க்க ஓடுவேன். மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் என்று பெயர் போடும் போது எல்லோரோடும் சேர்ந்து நானும் கைதட்டுவேன். அந்த டைட்டில் கார்டு வரும்போது இசையமைப்பே வித்தியாசமாக மாறும்.எல்லா இசை கருவிகளையும் ஒரு சேர இசைப்பது போன்ற ஒலி உச்சத்தில் ஒலிக்கும்.  இனம் புரியா படபடப்பும் பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். டைட்டில் இசையையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். இசை அமைப்பாளர் என்றால் எம் எஸ் விதான் வேறு யாருமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த காலமது.மற்ற இசை அமைப்பாளர்களைப் பற்றி  எதுவும் தெரியாது. யார் இசை அமைத்தாலும் அது எம் எஸ் விதான் என்று நினைத்தேன். முகம் தெரியாத அவரின் தீவிர ரசிகனாக மாறினேன்.

              கோவில் திருவிழாக்கள் வருடத்திற்கு மூன்று தடவை வெவ்வேறு இடங்களில் நடக்கும். மூன்று நாட்களுக்கு திரைப்பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆனந்த மயமான அந்த நாட்களில் பாடல்கள் ஒலிக்கும் போதே நானும் நண்பர்களும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்  அங்குதான் அலைவோம். போவோர் வருவோர் யாவரும் எங்களை சட்டை செய்வதில்லை.

            அப்படி ஒரு கோவில் திருவிழாவின் போதுதான் அந்தப் பாட்டைக் கேட்டேன். வித்தியாசமான பாட்டு. கேட்டவுடன் மனதுக்குப் பிடித்துப்போகும் பாட்டு. ஆட்டம் போடவைக்கும் பாட்டு. சும்மாவே ஆடிக்கொண்டிருந்த எனக்கும் நண்பர்களுக்கும் சொல்லவா வேண்டும்? பாடல் முடிந்த பின்னரும் மீண்டும் போடச் சொல்லி ஒலிப்பரப்பாளரிடம் கேட்போம்.எங்களுக்காக மீண்டும் போடுவார் . என்ன ஒரு கொண்டாட்டமான பாடல்! தாளம், மெட்டு,  ராகம் எல்லாமே வித்தியாசமாக இருந்தது. எந்த படத்தில் இந்தப் பாடல்? யார் இசை?யார் பாடியது? போன்ற கேள்விகள் அப்போது எனக்கு கேட்க தோன்றவேயில்லை. நிச்சயம் எம் எஸ் வியின் பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் புதியவர் ஒருவர் இசை அமைத்த பாடல் என்பது தாமதமாகத்தான் தெரிய வந்தது.             பாடல்: மச்சானைப் பாத்தீங்களா?

             படம்:  அன்னக்கிளி.

             பாடியவர்: ஜானகி

              இசை: இளையராஜா...........................தொடர்வேன்...........................
     41 comments:

 1. ஹலோ புதிய காற்றே,

  உங்களிடமிருந்து வரும் இந்த இசை பற்றிய முதல் கட்டுரைக்கு வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து இயல்பான நடையில் அலங்காரங்கள் இல்லாத அழகுடன் நேர்த்தியாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. கடைசியில் ஒரு பதிவை எழுதிவிட்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். எழுதுவீர்கள் என்றே தோன்றுகிறது. முதலில் எனது பாராட்டைத் தெரிவிக்கிறேன்.

  இசை ராட்சஷன் என்று ஒரு முறை எஸ் பி பி ஒரு மேடையில் இளையராஜாவைக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இந்தத் தலைப்பைக் கண்டதுமே நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள் அல்லது பேச வருகிறீர்கள் என்பதை எந்தவிதமான சிக்கல்களுமின்றி எளிதில் யூகிக்க முடிகிறது. அதுசரி நீங்கள் என்ன மற்றவர்களைப் பற்றியா புகழ்ந்து பேசுவீர்கள்? எல்லாம் தெரிந்ததுதானே!

  எம் எஸ் வி பற்றி உங்களின் ரசனை கலந்த பிடிப்பு ஒருவித கடுமையான சாடலுக்கான முன்னோட்டம் போல தெரிகிறது. அதை உறுதி செய்வதைப் போல மச்சானைப் பாத்தீங்களா பாடலை குறிப்பிட்டு அங்கேயே தொடரும் போட்டது உங்களின் அடுத்து வரும் பதிவுகள் எந்த திசையில் போகும் என்பதை துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இருந்தும் பதிவின் நடுவே உங்களின் பால்ய நாட்களின் நினைவலைகள் பற்றிய குறிப்புகளை நான் வெகுவாகவே ரசித்தேன். எனக்கும் இதேபோன்று அனுபவங்கள் உண்டு. ஏன்? எல்லோருக்கும் இது போல நடந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

  இதுவரை எல்லாமே நல்லபடியாகத்தான் இருக்கிறது. ஆனால் இனிமேல் உங்கள் எழுத்து எப்படி ஒருவரை மட்டுமே துதி பாடப் போகிறது என்று நினைத்தால் இதுவும் ஒரு வழக்கமான ராஜா ராஜாதான் கட்டுரையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

  இருப்பினும் உங்களின் முதல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹலோ காரிகன்

   வருகைக்கு நன்றி! யாரும் கருத்து சொல்ல வரமாட்டார்கள் என்று நினைத்தேன் . முதன் முறையாக வந்துள்ளமைக்கு நன்றி. படம் போட்டே காட்டி விட்டேனே ...நான் யாரை பற்றி எழுதப் போகிறேன் என்று! உங்களுக்கு அதில் சந்தேகமே வர வேண்டாம் . எனக்கு பிடித்த விசயங்களைதானே நான் எழுத முடியும் . அதைதான் நான் மற்றவர்களுக்கு பகிரப் போகிறேன் . உங்களுக்கு பிடிக்காது . இருந்தாலும் படித்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு . கடுமையான விமர்சனங்களுக்கும் தயார்தான்!

   Delete
  2. திரு. காரிகனுக்கு இசைஞானி பற்றி யாராவது தங்களது பதிவு இட்டால், உள்ளதை சொல்ல விட மாட்டார். அவரது பதிவில் போய் எழுதினால், எனது கருத்தை தான் எழுதுகிறேன் என்று சொல்லுவர். இவருக்கு இசைஞானி பத்தி எழுதினாலே கம்பளி பூச்சி ஊறுவது போல் இருக்கும் போல.

   Delete
 2. அருமையான பதிவு. பழைய ஞாபகத்தை கிளறிவிட்டது உங்கள் பதிவு. இளையராஜாவின் பாட்டைக் கேக்க நானும் தெருவிலே அலைந்தது சண்டைபோட்டது குளத்தில் குளித்தது என எல்லா ஞாபகமும் வருகிறது.

  ReplyDelete
 3. ஹல்லோ சார்லஸ்,
  நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
  அருண் குமார், மதுரை

  ReplyDelete
 4. வாங்க சோமசுந்தரம்

  வருகைக்கு நன்றி . 'என்னைப் போல் ஒருவன்' என்று உங்களை நினைத்துக் கொள்கிறேன் . என் அனுபவம் போல பல லட்சம் பேருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம் . நீங்கள் லட்சத்தில் ஒருவர் . தொடர்ந்து பயணியுங்கள்.

  ReplyDelete
 5. ஹலோ அருண்குமார்

  மதுரைக்காரரே வருக ! 'பேச்சு இல்லை வீச்சு ' என்று மதுரையை தப்பாக சினிமாவில் பிரச்சாரம் செய்கிறார்கள் . ஆனால் அந்த ஊர்க்காரர்களின் கலாரசனை தமிழ்நாட்டுக்கே தெரியும் . தமிழ் சினிமாவை புடமிட்டவர்கள் புரட்டிப் போட்டவர்கள் பலர் மதுரைப் பக்கத்திலிருந்து வந்தவர்கள்தானே ! அதில் இளையராஜாவும் ஒருவர் என்பதில் நீங்கள் மட்டுமல்ல நானும் பெருமிதம் கொள்வேன் .

  ReplyDelete
 6. அந்தக்கால நினைவுகள், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என சுற்றித்திரிந்த காலங்கள் வாசு சவுண்டு சர்விஸ் ஸ்பீக்கரில் அன்னக்கிளி பாட்டு கேட்டது எல்லாமே என் ஞாபகத்துக்கு வருகிறது. அடுத்த பதிவு எப்போது?

  ReplyDelete
 7. கோபால கிருஷ்ணன் சார்

  தங்கள் வருகைக்கு நன்றி . மற்றவரின் அனுபவத்தோடு நம் நினைவுகளையும் சேர்த்து அசை போடுவது என்பது ஒரு அலாதியான விஷயம் . சுவையும் கூட! என்னோடு சேர்ந்து உங்கள் மனசையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள் அடுத்த பதிவிற்காக !

  ReplyDelete
 8. புது வரவு.
  வாருங்கள் ,,,,,,,,,, நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 9. சார்லஸ் முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். திரு காரிகன் அவர்கள் தெரிவித்து தங்கள் பதிவுக்கு வந்தேன். உங்கள் எழுத்து ஆர்வத்திற்கு நல்ல ஒரு பிளாட்பார்மாக இந்தத் தளம் அமையட்டும். என்ன எழுதப்போகிறீர்கள் என்பதையும் இங்கே கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள். 'எனக்குப் பிடித்ததைத்தானே நான் எழுத முடியும்' என்று நீங்கள் எழுதப்போகும் விஷயத்திற்கான ஆலாபனைக்கும் நீங்களே பதியமும் போட்டுவிட்டீர்கள். நல்லது. ஒவ்வொருவருக்கும் 'தனிப்பட்ட முறையில் பிடித்தது' பொதுவான இடத்தில் வைக்கப்படும் விஷயமாகிவிடாது. அது சில 'தனிப்பட்டவர்களுக்குப் பிடித்தது' என்பதாக மட்டுமே அமையும் என்பதைத்தான் நான் திரும்பத் திரும்ப என்னுடைய தளத்தில் தெரியப்படுத்திவருகிறேன்.
  நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் முற்றிலும் உண்மை. இப்போது பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் காதுகளில் ஒலிக்கும் கும்கி பாடலிலிருந்தோ, ஊதாக்கலரு ரிப்பன் பாடலிலிருந்தோதான் தமது இசை ரசனைகளை ஆரம்பிக்கப்போகிறார்கள். அவர்கள் 'அனுபவம்' அதுதானே.........? மறக்கப்படுபவர்கள் பட்டியலில் நிறையப்பேர் சேரப்போகிறார்கள். எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

  ReplyDelete
  Replies
  1. எனக்குப் பிடித்ததைத்தானே நான் எழுத முடியும்' என்று நீங்கள் எழுதப்போகும் விஷயத்திற்கான ஆலாபனைக்கும் நீங்களே பதியமும் போட்டுவிட்டீர்கள். நல்லது. ஒவ்வொருவருக்கும் 'தனிப்பட்ட முறையில் பிடித்தது' பொதுவான இடத்தில் வைக்கப்படும் விஷயமாகிவிடாது. அது சில 'தனிப்பட்டவர்களுக்குப் பிடித்தது' என்பதாக மட்டுமே அமையும் என்பதைத்தான் நான் திரும்பத் திரும்ப என்னுடைய தளத்தில் தெரியப்படுத்திவருகிறேன்.//

   காரிகனுக்கு இணையானவர். இந்த கருத்து உங்கள் இருவருக்கும் பொருந்தாது நீங்கள் நினைத்துகொண்டு எழுதுவதை நாங்கள் என்னவென்று சொல்வது. சொல்வது சுலபம். செயல் கடினம் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு. நீங்களும் உங்கள் ப்ளாக்கில் இதனை follow பண்ண வேண்டும்.

   Delete
 10. உங்கள் புதிய பாதைக்கு என் வாழ்த்துகள். வருக. வருக.

  ReplyDelete
 11. தருமி சார்

  வணக்கம். தங்களின் மேலான வருகைக்கும் நன்றி. உங்களைப் போன்ற பெரிய பதிவர்கள் என் பதிவிற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் . உங்களின் பதிவுகளையும் நான் ஆர்வமாக படிப்பதுண்டு. தொடர்ந்து என்னோடு பயணியுங்கள்.

  ReplyDelete
 12. அமுதவன் சார்

  தங்களின் வருகை எனக்கு உவகை. காரிகனும் நீங்களும் இல்லாத பின்னூட்டங்களால் ஒரு குறை இருந்து விடுமோ என்று நினைத்தேன் . குறை நிவர்த்தியாகிவிட்டது. காரிகன் என் பதிவினை உங்களுக்குச் சுட்டிக் காட்டியமைக்கு அவருக்கும் நன்றி .

  'எனக்குப் பிடித்தத் தலைவர்' என்று சிறு வயதில் கட்டுரை எழுதி இருப்போம் . நீங்களும் எழுதியிருக்கலாம். அது போல இந்தப் பதிவையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்! இது ஒரு அனுபவப் பகிர்வே! மனதில் பட்டதை எழுதுகிறேன் . பிடித்ததை எழுதும்போது சரளமாக வருகிறது . அவ்வளவுதான் . நீங்களும் என்னோடு சேர்ந்து வாருங்கள் . உங்களைப் போன்ற நல்ல எழுத்தாளரின் கருத்துக்கள் எனக்கு நிச்சயம் வேண்டும் .

  ReplyDelete
 13. ----இப்போது பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் காதுகளில் ஒலிக்கும் கும்கி பாடலிலிருந்தோ, ஊதாக்கலரு ரிப்பன் பாடலிலிருந்தோதான் தமது இசை ரசனைகளை ஆரம்பிக்கப்போகிறார்கள். அவர்கள் 'அனுபவம்' அதுதானே.........? மறக்கப்படுபவர்கள் பட்டியலில் நிறையப்பேர் சேரப்போகிறார்கள். எனக்கு ரொம்பவே சந்தோஷம்.----

  அமுதவன் அவர்களே,

  என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிந்ததினால் ஒரு சிறிய உவகை ஏற்படுகிறது. உண்மையே. இதுதானே நிதர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே, அப்போ உங்க வயசு 100+ இருக்குமா?

   Delete
 14. ஜோதிஜி சார்

  வருகைக்கு நன்றி . நீங்களும் ஒரு நல்ல பதிவர் . என் பதிவைத் தொடர்வீர்கள் என நம்புகிறேன் .

  ReplyDelete
 15. காரிகன் அவர்களே

  பதினாறு வயதினிலே பரட்டை வேலை இலேசாக ஆரம்பிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நாரதர் கலகம் நல்லதாகவே முடியும். தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 16. கலகம் செய்ய ஒரு கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு!

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. சேகர் அவர்களே

  நீங்களும் வந்திட்டீங்களா !? வெல்கம். கலகம் செய்தாலும் எங்கள் கழகம் மென்மேலும் வளரும் . கழகக் கண்மணிகள் யாரும் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை போலும் ! பார்த்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் உங்கள் கலகத்தை ! காரிகன் கலகத் தலைவராக இருப்பாரே ! தொடர்ந்து வாருங்கள் .

  ReplyDelete
 19. ஹலோ ஜெஸ்ஸிகா

  வெல்கம் . ஏதாவது கருத்து சொல்லி இருக்கலாம் . ஒன்றும் சொல்லாமல் உன் பதிவைப் பார்க்க வைக்க செய்த தந்திரமா!

  ReplyDelete
 20. சார்லஸ் அவர்களே. உங்கள் இசை இராட்சசன் மிக அருமை. பலரின் உள்ளம் கவர்ந்த இசைஞானியின். இசையமுத்த்தை உலகறிய உங்கள் பதிவை தொடர எனது வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 21. ஹலோ அனானிமஸ்

  நீங்கள் யாரோ . ஆனால் என் கருத்தோடு ஒத்துப் போகும் ரசனையுள்ளவர் என்பது தெரிகிறது . தொடர்ந்து வாருங்கள் . நன்றி.

  ReplyDelete
 22. //ஹலோ ஜெஸ்ஸிகா

  வெல்கம் . ஏதாவது கருத்து சொல்லி இருக்கலாம் . ஒன்றும் சொல்லாமல் உன் பதிவைப் பார்க்க வைக்க செய்த தந்திரமா!//

  அப்பதிவு என் பேத்தியின் ;பதிவு. தவறுதலாக அவள் பெயரிலிருந்து உங்களுக்குப் பின்னூட்டமிட்டேன். அதனால் நீக்கி விட்டேன்.

  ReplyDelete
 23. //...என் பதிவிற்கு வந்ததை....// .

  ராஷசன் என்னை உங்களிடம் இழுத்து வந்து விட்டார்

  //உங்களின் பதிவுகளையும் நான் ஆர்வமாக படிப்பதுண்டு//

  நன்றி. another silent spectator.

  நீங்கள் எனக்குத் தெரிந்த “அந்த” சார்லஸ்தானா என்று ஒரு சந்தேகம்!!!
  பாட்டு பாடுகிறீர்கள்; ”அந்த” சார்லஸ் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் ‘I love S.P.B. But I admire jesudoss' என்றார். அவர் தானோ நீங்கள் என்று ஒரு ஐயம்!

  ReplyDelete
 24. ’அந்த’ சார்லஸ் சொன்னதை கொஞ்சம் மாற்றிச் சொல்லி விட்டேன்; - I admire S.P.B. but i adore jesudoss

  ReplyDelete
 25. தருமி சார்

  அந்த 'சார்லஸ்' ஒருவேளை இப்படிச் சொல்லி இருப்பாரோ!? ...I like S.P.B but I love Jesudoss.

  ReplyDelete
 26. சார்லஸ் அவர்களே,

  உங்களது முதல் பதிவு இன்னும் நெறைய பதிவை எதிர்பார்க்க வைக்கிறது. இடையில் வரும் சில கலகங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாம். அவர்கள் 1976 இருந்து 1992 நேரடியாக வந்தவர்கள்.

  ReplyDelete
 27. குமார் சார்

  உங்களின் முதல் வருகை . நன்றி . கலகம் யார் வேண்டுமென்றாலும் செய்துவிட்டு போகட்டுமே ! அதற்காக கலங்கவா போகிறோம் ? மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லுவோம் . தர்க்கத்திற்கு வந்தால் தயாராக இருக்க வேண்டியதுதான் . நன்றாக பாருங்கள் . 92 க்கு வந்தவர்களைவிட 56 இல் 66 இல் இருப்பவர்களே அதிகமாய் தர்க்கம் செய்பவர்கள் .

  ReplyDelete
 28. Replies
  1. அருள் ஜீவா அவர்களுக்கு,

   அது என்ன சத்தம் ஜங் சக்?

   Delete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. காரிகன் அவர்களுக்கு , அந்த ஜங் சக் சத்தம் இசையின் ஓர் அங்கமாக இருப்பதை இசையறிவுப்பிம்பமாய் பிரதிபலித்துக் கொண்டிருப்பவருக்குப் புரியவில்லையோ!

  ReplyDelete
  Replies
  1. ஹலோ அருள்ஜீவா

   அந்த ஜங் சக் சத்தம் ' ஜால்ரா ' சத்தமாம் ! இளையராஜாவிற்கு ரசிகர் இருந்தால் எனக்கு ஜால்ரா என்றால் எம்.எஸ்.வி யை புகழ்ந்தோ அல்லது அவருக்குப் பிடித்தவர் பற்றி புகழ்ந்தோ யாராவது பேசினால் அதே ஜங் சக் சத்தம் வராதா? 'சிஞ்சா' என்று சொல்வார்கள் .

   Delete
 31. உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

  சிறுவயது நினைவலைகள் அநேகமாக நம் அனைவருக்கும் (ஒரு தலைமுறைக்கு முந்தியவர்கள்) இதுபோலவே ஆட்டமும் பாட்டமுமாகத்தான் இருந்திருக்கும்.

  இப்போதுள்ள குழந்தைகள்.... பாவம்:(

  தருமியின் பதிவிலிருந்து இங்கு வந்தேன்.

  இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 32. வாங்க துளசி கோபால்

  முதல் முறை வருகை . நன்றி. தருமி சாருக்கு உங்களைப் போல நிறைய நல்ல வாசகர்கள் இருப்பார்கள். அவர் தளம் மூலம் என் தளமும் வெளியில் தெரிந்தது. தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 33. துளசி சார்

  உங்கள் ' துளசி தளமும் ' அருமையான தளம் . நான் அடிக்கடி வாசித்திருக்கிறேன் . உங்களைப் போன்ற நல்ல பதிவர்கள் வருகை எனக்குப் பெருமை .

  ReplyDelete
 34. சார்லஸ்
  அவங்க துளசி ‘சார்’ இல்லை ... மீண்டும் வாசித்துப் பாருங்கள்

  ReplyDelete
 35. சார் நான் கவனிக்கவில்லை . துளசி என்ற பெயர் பொதுவானதே . இரு பாலினருக்கும் இந்தப் பெயர் வைப்பார்கள். அதனால் சிறு குழப்பம். எனது பெயர் பெண்ணுக்கும் வைக்கப்பட்டிருக்கிறது . தெரியுமா? எனது பெயரில் ஒரு கன்னியாஸ்திரியை சந்தித்திருக்கிறேன்.

  ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்