Wednesday, 5 August 2015

அக்கினிச் சிறகு சாய்ந்ததே...


                                                 

                                 இந்திய திருநாட்டின் முன்னால் ஜனாதிபதி , அறிவியல் மாமேதை , மக்களின் நாயகன் , மாணவர்களின் ஹீரோ , அணு விஞ்ஞானி , இந்திய ஏவுகணை நாயகன் , மக்களின் இதயம் வென்ற மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டதை கணத்த  இதயத்தோடு இந்தியர் அனைவரும் பகிர்ந்து கொண்டோம் .


                             குறிப்பாக தமிழர் ஒவ்வொருவரும் மூலைக்கு மூலை தங்களின் இதயம் திறந்த கண்ணீர் அஞ்சலியை  வெளிப்படுத்திய விதம்  அளப்பற்கரியது.  சண்டையில்லை, சச்சரவில்லை,  கூச்சலிடவில்லை,  கல்லெறியவில்லை , கலாட்டா செய்யவில்லை,  காயங்கள் ஏதுமில்லை,  வஞ்சமில்லை , வன்முறையில்லை ,  பிரியாணி  குவார்ட்டருக்கு ஆசைப்பட்டு கூட்டம் சேரவில்லை ,  அடக்கம் செய்யப்படும் வரை தற்கொலையில்லை  ,  தடிகள் எடுத்துக் கொண்டு  தொங்கிக் கொண்டு கொக்கரித்துக் கொண்டு தடியர்களோடு சாரை சாரையாக கார்கள் செல்லவில்லை .  தமிழகம் முழுக்க அமைதி .  இது  எப்படி சாத்தியமாயிற்று?
அப்துல் கலாம் அண்ணலின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

                                               
                                   ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ
                                   உழைத்தது  போதுமென்று  உறங்குகிறாயோ
                                   ஊரார்க்கு அழுதவனே  உறங்குகிறாயோ
                                   ஊராரை அழவைத்து  உறங்குகிறாயோ

                                   நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா - தன்
                                   வீடு பார்க்காமல்  வாழ்வு பார்க்காமல்
                                    நாடு முன்னேற  நாளும்  உழைத்தவனை

                                    பதவி இருந்தாலும் பதவி போனாலும்
                                    உதவி புரிவானடா
                                     தனை பெற்ற தாயைவிட பிறந்த நாடுதான்
                                     பெரிது என்பானடா

                                      வலிமை இருந்த போதும் மிக
                                       எளிமையோடு இருந்தான்
                                       பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள்
                                       கறுப்பு  காந்தி  இவனே


                         'காமராஜ் ' திரைப்படத்திற்காக   இளையராஜா அவர்கள் இசையமைத்துப் பாடியது  அப்துல் கலாம் அவர்களுக்கும் சரியாகப் பொருந்துகிறது. ஏனென்றால்  பள்ளிச்சாலைகள்  தந்த தலைவனுக்கும் அந்தச் சாலைகளில்  பயிலும் மாணவர்களைக் கண்ட தலைவனுக்கும் நோக்கம் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.

                         கனவு காணுங்கள்.   உறக்கத்தில் வருவதல்ல உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு ... அந்தக் கனவை காணுங்கள் ...அதை நனவாக்க பாடுபடுங்கள்  என்று இந்தியாவின்  ஒவ்வொரு மூலையிலும் உள்ள மாணவர்களைப் பார்த்து முழங்கிக் கொண்டே இருந்தவர்  மூச்சடங்கிப் போய்விட்டார் .

                         இந்தியா வல்லரசாக வேண்டும் என்று  கனவு கண்ட அந்த மகானின் இறப்பும் கனவாக இருக்கக் கூடாதா என இளைஞர்கள் ஏங்குகின்றனர்  ஆனால் அவர் கனவின் அர்த்தம் வேறு என்பதை அவர்களும் அறிவர்.

                           நிற்கலாம், நடக்கலாம், உடுக்கலாம், படுக்கலாம் , உறங்கலாம் என்றிருந்த இளையோரை  எழுப்பி படிக்கலாம் , உழைக்கலாம், விழிக்கலாம், சிந்திக்கலாம் , சாதிக்கலாம் என்று வழிகாட்டிய  சிந்தனை சிற்பி கலாம்  இன்று நம்மோடு இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு.  அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம்.
             

                        பாவம் புதைக்கும் இடத்தில் ஒரு புண்ணியம் விதைக்கப்பட்டுள்ளதாக எல்லோரும் பரவசமடைகிறார்கள்.  ஒரு புண்ணிய ஆத்மா   எண்ணியதெல்லாம்  பண்ணியதெல்லாம் வெறும்  கனவாகவே  போய் விடக் கூடாது  என ஒவ்வொரு மனிதரும் நினைக்கும் வண்ணம் உறுதியான எண்ணங்களை  விதைத்துவிட்டு போயிருக்கிறார் . அவர் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவர்  எண்ணங்களை   ஈடேற்றும்   பல   விருட்சங்கள் புறப்படலாம். ராமேஸ்வரத்தில் அவர் பிறப்பு  ஒரு சம்பவம் . ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக மாறிப் போனது.


                     '   நீங்கள் பல பதவிகள் வகித்திருந்தாலும்  பல நிலைகளில் வாழ்ந்திருந்தாலும் என்னவாக அறியப்பட விரும்புகிறீர்கள் ?  '  என்று அவருடைய உதவியாளர் கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் 'ஆசிரியராக' என்று பதில் சொன்னதாக பத்திரிகையில் வந்தது .  நாட்டின் மிகப் பெரிய பதவியில் இருந்தவர் அந்தப் பதவியை எவ்வளவு துச்சமாக மனதில் நினைத்திருந்தால் இப்படி ஒரு பதிலைச் சொல்லுவார். அதனால்தான் குடியரசுத் தலைவராக இருந்தபோது கூட கல்வி நிலையங்களில் அதிகமான மாணவர்களைச் சந்தித்தார் . சிந்திக்க வைத்தார்.  ஆசிரியர் பணியை அவ்வளவு நேசித்திருக்கிறாரே!  நமக்கெல்லாம் அவர் ஹீரோ . அவருக்கு யார் ஹீரோ என்று வினவியபோது  தனது ஆசிரியர்கள் மூவரைத்தானே குறிப்பிட்டார்.  அவருடைய ஆசிரியர் பக்தி குறிப்பிடத் தகுந்தது.


               இந்தியாவின் எதிர்காலம்  நிகழ்  கால மாணவர்களாலேயே உருவாகும் என ஆணித்தரமாக நம்பினார்.  அவருக்கு முன்னாலும் பின்னாலும் வந்த ஜனாதிபதிகள் தங்கள் உறவினர்களோடு ஊரைச் சுற்றிப்  பார்க்க சென்றபோது  அவர் மாணவர்களைச் சுற்றி வந்தாரே !
 அந்த மாமனிதரை மறந்து போகுமா இந்த மாணவ சமுதாயம் ? அடுத்து வரும் மாணவத் தலை முறைகளுக்கும் அவர் கனவை விதைத்து விட்டுத்தானேச்  செல்லும் .

                                                 
         
     
           ஒருமுறை  அவருக்கு போதித்த தத்துவ பேராசிரியர்  ஒருவர் கடவுளை மறுத்திருக்கிறார்.  அறிவியல் ரீதியாக கடவுள் இல்லை என வாதிட்டிருக்கிறார்.  ஐம்புலன்களாலும் கடவுளை நாம் உணரவேயில்லை என்று சாதித்திருக்கிறார்.  அப்துல் கலாம் எழுந்து அறிவியல் பூர்வமாக பல விளக்கங்கள் கொடுத்துவிட்டு மற்ற மாணவர்களைப் பார்த்து ,  " நண்பர்களே !யாராவது பேராசிரியரின்  மூளையைப் பார்த்திருக்கிறீர்களா ?  தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா?  அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா ?  அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா?  ஐம்புலன்களாலும் உணரவில்லை . அப்படியென்றால் எல்லா பரிசோதிக்கத்தக்க வழிமுறைகளிலிருந்தும்  அறிவியல் சொல்கிறது அவருக்கு மூளை இல்லை என்று! சரிதானா? " என பேசியிருக்கிறார்.

            " எனக்கு மூளை உண்டென்று நீ நம்பித்தான் ஆக வேண்டும் "   என்று பேராசிரியர்  பதிலுரைக்க  , கலாம் அவர்கள் அமைதியாக , "  அதுதான் அய்யா... இவ்வளவு நேரம் நான்  சொல்ல வந்தது . ஐம்புலன்களாலும் உணர முடியாத கடவுளையும் நாம் நம்பித்தான் ஆக  வேண்டும். மனிதனையும் கடவுளையும் இணைக்கும்  ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை.  அதுதான் இந்த உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கி கொண்டிருக்கிறது.  நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையில்லை . கடவுளையும் நம்பத்தான் வேண்டும். " என்று வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

             
                    பல்வேறு விதமான  சுவையான சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிறைய உண்டு .  பொக்ரான் அணு குண்டு சோதனை காலத்தில், ராணுவ வீரர்களோடு வீரராக  ராணுவ உடையணிந்து ,  பாலைவனத்தில் வழக்கமாக பயிற்சி எடுப்பது போல பிரமையூட்டி , அமெரிக்காவின் கழுகுக் கண்களை ஏமாற்றி,  சோதனையை தம்  குழுவினருடன் வெற்றிகரமாக செய்து முடித்து  சாதனை புரிந்தவர் கலாம் அவர்கள்.  இல்லாவிடில் உலகத்திற்கே போலிஸ்காரனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா நம்மை அணு குண்டு சோதனை செய்ய அனுமதித்திருக்குமா?

                  அதன் விளைவாக அந்த நேரத்தில்  இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ,  இந்தியா வந்திறங்கியவுடன் தான் பார்க்க விரும்பிய நபராக,  பிரதமரையோ ஜனாதிபதியையோ அவர் குறிப்பிடவில்லை.  அமெரிக்காவின் கண்ணையே கட்டி விட்டு அணு ஆயுதச் சோதனை நடத்திய குழுவின் தலைவரான  அப்துல் கலாமை பார்க்க வேண்டும் என்றே குறிப்பிட்டார் . உலகத்து வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேருவதற்கான வெளிச்சக்  கீற்று அப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது . அது அப்துல் கலாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.  ஆனால் அதே அப்துல் கலாம் 2020 இல் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற வேண்டும் என கூக்குரலிட்டார்.  இளையோரை  அதற்கான கனவு காணச் சொன்னார்.  இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறோம் . வல்லரசு ஆகுமா என்று சொல்ல கலாம் இல்லை . ஆனால்  காலம் சொல்லும்.

         
                        மாணவர்களிடம் கேள்விகள் கேட்பது அவர் வழக்கம் . போலவே  மாணவர்களையும் அவரைப் பார்த்து  கேள்விகள்  கேட்கச்சொல்லுவார். ஒரு முறை அப்படி கேட்கப்பட்ட கேள்விகளில் எது சிறந்த கேள்வி  என்று அவரிடம் கேட்கப்பட்டபோது ,   '  உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானி யார்?  ' என்ற கேள்விதான் என்றார் . அதற்கு உங்களின் பதில் என்ன என்று கேட்டபோது ,
' உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானி ஒரு குழந்தைதான் . ஏனென்றால் அதுதான் எப்போதும் ஆராய்ச்சி மனப்பான்மையிலேயே இருக்கும் . குழந்தையின் கையில் எதைக் கொடுத்தாலும் ஆராயும் . ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வேண்டிய மனப்பான்மையும் அதுவே '  என பதிலுரைத்தார்.


                      மற்றொரு  சம்பவம்.  ஒரு திங்கட்கிழமையில் மதுரை அரவிந்த் கண்   மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிந்த நேரம்.        
கண் ஆபரேசனுக்காக பலர் காத்திருந்தனர் . ஒரு பெரியவரும் காத்திருந்தார். டாக்டர்கள் பற்றாக்குறையால் தலைமை டாக்டர்  ஒரு சிலரை மறு நாள் வந்து ஆபரேசன் செய்து கொள்ளும்படி பரிந்துரைத்தார் . அந்தப் பெரியவரிடமும்   
அவ்வாறே வருமாறு கூறினார் . தான் தொலைவிலிருந்து வந்திருப்பதாகவும் துணைக்கு யாரும் இல்லாததையும் அந்தப் பெரியவர் குறிப்பிட்டார்.  ஆபரேசனுக்கு  ரூபாய் 1500 செலவாகும் என்று சொன்னார்கள் . தன்னிடம் போதிய பணம் இல்லை என பெரியவர் குறிப்பிட தலைமை டாக்டர் ,  ' பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை.  நீங்கள்  இலவசப் பிரிவில் சேர்ந்து 
கொள்ளுங்கள் . பணமில்லாமலேயே ஆபரேசன் நாளைதான் செய்ய முடியும் . 
இன்று இங்கு தங்குங்கள் . மற்றவை எல்லாம் எங்கள் ஊழியர்கள் பார்த்துக்  கொள்வார்கள்  '  என பரிவுடன் அவரை இலவசப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார். 


                     கொஞ்ச நேரத்தில் காக்கி யூனிபார்ம் அணிந்த காவலர் கூட்டம் ஒன்று மருத்துவமனையில் யாரையோ தேடிக் கொண்டிருந்தது.  செய்தி தலைமை டாக்டருக்கு  தெரிய வர விபரம் கேட்டிருக்கிறார்.   Z பிரிவு பாதுகாப்பில் உள்ள அணு விஞ்ஞானி ஒருவர் இங்கு வந்திருப்பதாகவும் தன்  உறவினர் ஒருவரிடம் மட்டும் சொல்லிவிட்டு  தங்களுக்கு அறிவிக்காமல் அவர் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்கள்.  ஊழியர்கள் எல்லோரும் அவரைத் தேடுகிறார்கள். எங்கும் அவர் கிடைக்கவில்லை. மருத்துவமனை பரபரப்பாகி விட்டது.

                       பணம் செலுத்தி பார்க்கும் பிரிவில் அவர் இல்லாவிடில் வேறு எங்கு போயிருக்க முடியும் என்ற குழப்பத்தோடு இலவசப் பிரிவுக்குள் சென்று பல வயோதிகர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சென்று பார்த்தால்  அந்தப் பெரியவர் மேல் சட்டை  இல்லாமல் வேட்டியோடு ஒரு பாய் விரித்து  தரையில் அமர்ந்திருந்தார்.  அவர்தான் நமது அப்துல் கலாம் .


                      ' என்ன சார் இப்படி செய்துவிட்டீர்களே ? உங்களை நீங்கள் அணு விஞ்ஞானி என்று அறிமுகம் செய்திருக்கலாமே ! உங்களுக்கு வேண்டியதை செய்திருப்போமே  ' என்று தலைமை டாக்டர் வருத்தப்பட , ' நான் யாரென்று சொல்லியிருந்தால் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்குமா? இப்படி ஒரு சேவையை நான் எங்கும் பார்த்ததில்லை. இவ்வளவு கூட்டத்திலும் வேலைப் பளுவிலும் யாரும் முகம் சுளிக்கவில்லையே! இரண்டு கண்ணும் தெரியாத ஒரு பெரியவருக்கு இங்கு பணி  புரியும்  சின்னஞ்சிறு  செவிலியர்கள் பாத்ரூம் அழைத்துச் சென்று சேவை  புரிந்ததையும்  சாப்பாடு ஊட்டி விட்டதையும்  நேரில் கண்டேன்.  அவர்களிடமிருந்து நானல்லவோ நிறைய கற்றுக் கொண்டேன் . ' என்று பதிலுரைத்தார் . அதன் பின்பு ஜனாதிபதி ஆன பிறகு அரவிந்தின் முக்கிய நிகழ்ச்சிகளில்  அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

                             
                       

               இது போன்ற இன்னும் அவர் வாழ்வில் நடந்த பற்பல  நிகழ்ச்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம் . எப்போதும் எந்த சூழலிலும் அனுபவமும் அறிவும் தேடுபவராகவே  அவர் இருந்திருக்கிறார்.  அன்னாரது மறைவு இளைஞர்களின் வாழ்விலும் சிந்தனையிலும் எழுச்சியை எழுப்பட்டும். ராமேஸ்வரத்தில் அவருடைய நினைவிடத்தில் வந்து செல்லும் இளைஞர்களும் மாணவர்களும் இந்தியா வல்லரசாகும் கனவை நனவாக்கும் உறுதியை சூளுரைத்துவிட்டுச் செல்கிறார்கள் . அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கட்டும்.  

                                 

25 comments:

 1. ஒருமுறை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஒரு பெரியவர் மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுக்க நின்றுகொண்டிருந்தார். கவுண்டரில் இருந்த மனிதர் " டிக்கட் ரயில் புறப்படும் முன்தான் கொடுப்போம்" என்று சொல்லிவிட, எல்லா ஜனமும் அப்படியே அங்கேயே உட்கார்ந்துவிட்டது. அது பெரிய வரிசை. அந்த பெரியவரும் கூட்டத்தின் மத்தியில் தன் வேஷ்டியை அவிழ்த்து வெறும் அரை டவுசருடன் அங்கேயே படுத்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் அங்கு மத்திய அரசின் சிறப்புப் படை காவலர்கள் மோப்ப நாய்களுடன் அங்கே வந்தார்கள்."இங்கே ஒரு அணு விஞ்ஞானி வந்திருக்கிறார். அவரைப் பார்த்தீர்களா?" என கேட்டபடியே அவர்கள் ரயில் அதிகாரிகளை விசாரிக்க, அவர்களும் படபடத்துப் போய் எ சி கோச், முதல் வகுப்பு என்ற தேடினார்கள். அந்த அணு விஞ்ஞானி அங்கே இல்லை. கடையிசில் மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுக்க காத்திருந்த கூட்டத்தில் அவரை கண்டுபிடித்தார்கள். அந்த ஆள் வேறு யாருமல்ல. அந்த அரை டவுசர் பெரியவர்தான். அவர் தான் அப்துல் கலாம். என்ன ஒரு எளிமை என்று மொத்த ரயில் நிலையமுமே வியந்தது." ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டபோது அவர் சொன்னார்"நான் எ சி கோச்சில் போயிருந்தால் இந்த அன்பும், மரியாதையும், நட்பும் கிடைத்திருக்குமா?"

  சத்தியமா சொல்றேன். இது உண்மையிலேயே நடந்தது. அப்போ நான் கலாம் பின்னாடிதான் நின்னுகிட்டு இருந்தேன். இதுபோல நெறைய இருக்கு என்கிட்டே.

  ReplyDelete
 2. வாருங்கள் ஜகன் மோகன்

  அரவிந்த் மருத்துவமனையில் நடந்தது போலவே மற்றுமொரு சம்பவத்தை அழகாக கொடுத்துள்ளீர்கள். இந்த மனிதர்களோடு எளிமையிலும் எளிமையாகவே அவர் வாழ நினைத்திருக்கிறார். தன் பலத்தையோ பதவியையோ மகுடமாக சூட்டிக் கொள்ள அவர் எப்போதும் நினைக்கவில்லை . தன்னையே தாழ்த்திக் கொள்வதிலும் எல்லோருக்கும் முன் மாதிரியாகவும் இருந்திருக்கிறார். அதனால்தான் மக்களின் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரை நேரில் பக்கத்தில் பார்த்த நீங்கள் பாக்கியவான். செய்தி சுவையானது . பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. சார்லசு தம்பி,

  இத்தன வெகுளியா இருக்கியேப்பா?

  ReplyDelete
 4. அனானிமஸ் அண்ணா

  ஏண்ணா அப்படிச் சொல்றீங்க?

  ReplyDelete
 5. சால்ஸ்,

  அப்துல் கலாம் காய்ச்சல் இன்னும் ஓயவில்லையா? இணையம் முழுவதும் அவர் புகழ் பாடி, இதெல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. உங்கள் பங்குக்கு எழுதியிருக்கிறீர்கள்.

  பொக்ரான் அணுவெடிப்பு சோதனை பற்றி அதிகாரபூர்வமாக வெளியே வராத தகவல் ஒன்று அந்த அணு சோதனை ஒரு தோல்வி என்றும் அது அடைய வேண்டிய இலக்கை தவற விட்ட சோதனை என்றும் சொல்கிறது. அமெரிக்கா நம்மைப் பற்றி அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.நாம்தான் அவர்களை நோக்கிப் பார்த்துக்கொண்டு புறம் பேசியபடி இருக்கிறோம். ஒன்னையே நாங்க கலாய்ப்போம்ல என்ற முரட்டு வீரம்தான் இதன் பின்னணி.

  அந்த மதுரை அரவிந்த் கண் மருத்தவமனை சங்கதியை எங்கிருந்து பிடித்தீர்கள் என்று தெரியவில்லை. யாரும் கேள்விப்படாத ஒன்று. இதுபோல ஏகப்பட்ட கதைகள் இனி இணையத்தில் காணக் கிடைக்கும். வாட்ஸப்பில் வலம் வரும். ஏற்கனவே ஒரு நண்பர் மேலே சாம்பிளுக்கு ஒன்றை எழுதியிருக்கிறார். நல்ல நகைச்சுவை.

  அஞ்சலி என்ற வகையில் இந்தப் பதிவு சரிதான்.
  ஒருவர் இறந்தால்தான் அவரை நாம் புகழ்வோம் போல.

  ReplyDelete
  Replies
  1. Jeganmohan feed was prank?!
   ROFL

   Delete
  2. ஜகன் மோகன் என்பவர் பொய்யான புனைவை புகுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதை எல்லாம் நான் ஆராயவில்லை . அதை ஒரு செய்தியாகவே நான் பார்க்கிறேன். பொய்யான செய்தியாக இருந்தால் அவர் என்னையல்ல கலாம் என்ற மேதையை கேலி செய்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

   Delete
  3. இப்புடித்தான் ஒரு தடவ நான் மதுரை சினிபிரியா தியட்டரில ஓர் ரூபா டிக்கட் கவுண்டர்ல நிக்கறப்ப எனக்கு முன்னாடி ஒரு வயசான ஆளு நின்னுகிட்டு இருந்தாரு. ரொம்ப கூட்டமா வேறு இருந்திச்சு. அவர் பாத்தா பாவமா இருந்திச்சி. வேர்த்து விறுவிறுத்து அவர் மயக்கம் போடாத குறைதான். அப்ப அங்க கூட்டமா பத்து பதினஞ்சு சிப்பாய்கள் வந்தாங்க. கூடவே நாய்களும் இருந்துச்சு. என்னன்னா "எதோ ஒரு அணு விஞ்ஞானியாம். அவர தேடி வந்துருக்கோம் " ன்னாங்க. அட அப்புடி யாருடா இங்கே வந்துருக்கான்னு பாத்தா எனக்கு முன்னாடி நின்னுகிட்டு இருந்த அந்த வயசான பெரியவர்தான் அந்த அணு விஞ்ஞானி. அவர்தான் அப்துல் கலாம் அப்படின்னு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன். "நீங்க ஏன் சார் இங்கே நிக்கிறீங்க? உங்களுக்கு எ சி டிக்கட்டே கெடைக்குமே?" ன்னு கேட்டா, அவர் சொல்றாரு"எ சி ல போயிருந்தா இத்தனை அன்பு அக்கறை பாசம் எல்லாம் எனக்கு கெடச்சிருக்குமா ?" அப்படின்னு சொல்லிட்டு அழுதாரு. ரொம்ப சிம்பிளான ஆளு.

   Delete
  4. மைக் மோகன் என்ற பெயரில் ஜகன் மோகன் மறுபடியும் நக்கலோடு வந்திருக்கிறார் . எனவே அவர் சொன்ன செய்தி பொய் என்பது உறுதியாகிறது. இந்த மனிதர்களோடும் சேர்ந்துதான் நாம் வாழ வேண்டியிருப்பது துரதிரிஷ்டவசமானது.

   Delete
  5. வாருங்கள் ஜகன் மோகன்
   அரவிந்த் மருத்துவமனையில் நடந்தது போலவே மற்றுமொரு சம்பவத்தை அழகாக கொடுத்துள்ளீர்கள். இந்த மனிதர்களோடு எளிமையிலும் எளிமையாகவே அவர் வாழ நினைத்திருக்கிறார். தன் பலத்தையோ பதவியையோ மகுடமாக சூட்டிக் கொள்ள அவர் எப்போதும் நினைக்கவில்லை . தன்னையே தாழ்த்திக் கொள்வதிலும் எல்லோருக்கும் முன் மாதிரியாகவும் இருந்திருக்கிறார். அதனால்தான் மக்களின் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரை நேரில் பக்கத்தில் பார்த்த நீங்கள் பாக்கியவான். செய்தி சுவையானது . பகிர்ந்தமைக்கு நன்றி.
   ன்னு அப்ப சொல்லிட்டு இப்ப என்னன்னா
   "மைக் மோகன் என்ற பெயரில் ஜகன் மோகன் மறுபடியும் நக்கலோடு வந்திருக்கிறார் . எனவே அவர் சொன்ன செய்தி பொய் என்பது உறுதியாகிறது. இந்த மனிதர்களோடும் சேர்ந்துதான் நாம் வாழ வேண்டியிருப்பது துரதிரிஷ்டவசமானது."
   ன்னு சொல்றீங்க.
   ஹீ ஹீ ஹீ .. சரியான ஆளப்பா நீயி!

   Delete
  6. என்ன பண்றது ஊர் பேரு தெரியாத ஆளெல்லாம் கருத்து சொல்ல வரும்போது ஒரு பேரோடு வருபவர் உண்மையைச் சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன் . என்னைப் பற்றி கவலை கொள்ளும் முகமூடி யாரப்பா நீ?

   Delete
 6. வாங்க காரிகன்

  இருக்கும்போது எவன் நல்ல மனுசனை மதிக்கிறான்? செத்த பிறகுதான் அருமை பெருமை எல்லாம் தெரியுது. மதுரை அரவிந்த் மருத்துவமனை நிகழ்ச்சி உண்மைதான் . அங்குள்ள ஊழியர் மற்றவரிடம் பகிர்ந்ததை நான் பதிவில் பகிர்ந்துள்ளேன் . இன்னும் அவரைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் அவரைச் சந்தித்த நபர்களிடம் உள்ளன . இனிமேல்தான் ஒவ்வொன்றாக வெளியே வரும் . அவை எல்லாம் முக்கியப் பதிவுகளாக மாற்றப்படும் .

  அணு குண்டு சோதனை நடந்ததா இல்லையா என்பது நமக்கு அல்ல நாட்டின் பிரதமருக்குக் கூட தெரியாது. அணு சக்தித் துறையில் பிரதமர் கூட தலையிட முடியாது என்று நான் படித்திருக்கிறேன் . அதனால் பொக்ரான் அணு ஆயுதச் சோதனை நடந்தது என்பதற்கான சான்று ஊடகங்கள் சொன்ன செய்தியின் பொருட்டே எல்லோருக்கும் தெரியும் .

  நிலாவில் மனிதர் யாரும் கால் வைக்கவில்லை என்றும் ஹாலிவுட் படத்தில் போடப்படும் செட் போல அமைத்து எடுக்கப்பட்ட போட்டோவை காண்பித்து நிலா என்று பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும் செய்தி உண்டு . நம்புகிறீர்களா? அதை மட்டும் நம்ப மாட்டீர்களே!

  அமெரிக்கா என்றால் உயர்ந்த ஜாதி , இந்தியன் தாழ்ந்த ஜாதியாக பார்க்கும் பகடிப் பார்வை என்றுதான் மாறுமோ!? அமெரிக்கனுக்கு வழிந்தால் ரத்தம் , இந்தியனுக்கு வழிந்தால் அது தக்காளிச் சட்னியா?

  உங்களைப் போல பலருக்கும்அமெரிக்காவை உயர்த்திப் பிடிக்கும் எண்ணங்கள் மாறாதவரை அப்துல் கலாமின் வல்லரசு கனவு நிறைவேறப் போவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. Karigan ji told me he started to believe that US never landed on the Moon...
   In one of his feed backs to my review for A Space Odyssey
   for u r info

   Delete
  2. Thanks Mathu.

   I became aware of this Moon landing Hoax some 25 years ago. There was no internet way back in the early 90s. Hardly could I get hold of books on this subject then. But the seed of doubt went deep in me.

   Some people like Charles think that I'm biased. I pity them.

   Delete
 7. தன்னை வெளிப்படுத்திக் கொள்வதால் கிடைக்கும் சௌகரியங்களை விரும்பாத அற்புத மனிதர் வாழ்ந்த இந்நாட்டில் தான் அனானியாகவே தோன்றி அடுத்தவரைக் கலாய்த்தே பேர் வாங்க நினைப்பவர்களும் வாழ்வது நகைச்சுவை யாகத்தானிருக்கிறதுபிரிவுஎன்பது பல நினைவுகளை மீட்டுக்கொணருதல் தானே .எனில் ஒருவர் இறந்த பின் புகழ்தல் இயற்கை தானே .

  ReplyDelete
 8. So many new inputs about dr.apj
  I have shared this in whatsapp
  and fb ...
  with out ur permission
  I have shared with the url
  hope it is ok...
  nice write up gentleman...
  superb

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கு நன்றி மது சார்

   Delete
 9. For several days i wanted to add ur blog to my ticker ...
  today its done...
  hope to visit very often

  ReplyDelete
 10. சால்ஸ்,

  ----நிலாவில் மனிதர் யாரும் கால் வைக்கவில்லை என்றும் ஹாலிவுட் படத்தில் போடப்படும் செட் போல அமைத்து எடுக்கப்பட்ட போட்டோவை காண்பித்து நிலா என்று பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும் செய்தி உண்டு . நம்புகிறீர்களா? அதை மட்டும் நம்ப மாட்டீர்களே! ----

  அப்படி அதை படமாக எடுத்த புண்ணியவான் யார் என்றும் எனக்குத் தெரியும். இந்தத் தகவலை நான் பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். ஏன் இணையத்திலேயே ஒரு சினிமா விமர்சனத்தில் பின்னூட்டமாக எழுதியிருக்கிறேன். நிலவின் கதை என்று ஒரு கட்டுரை இன்னும் டிராப்ட் அளவிலேயே நின்றுகொண்டிருக்கிறது. கொஞ்சம் இசையை விட்டு நகர்ந்ததும் இதுபோல பலர் நம்ப மறுக்கும் விஷயங்களை எழுத உத்தேசம்.

  அமெரிக்க மோகம் கொண்டு நான் அலைவதைபோல ஒரு பிம்பம் ஏற்படுத்த முயல்கிறீர்கள். எனக்கு நம் மண் மீதே தீரா காதல் உண்டு. சுற்றிப் பார்க்கக் கூட வெளிநாடுகள் செல்ல வேண்டும் என்ற ஆசை கிடையாது.

  கலாம் சொன்ன வல்லரசு கதையெல்லாம் நம் நாட்டில் உண்மையாக இன்னொரு நூற்றாண்டு ஆகலாம். சில ராக்கெட்டுக்குகளை விட்டுவிட்டு நானும் பெரிய ஆளுதான் என்று மார் தட்டுவதைதான் நீங்கள் வல்லரசு என்று சொல்கிறீர்கள் போல. அவர் சும்மா சொல்லிவிட்டுப் போய்விட்டார். கரன்சி நோட்டின் மதிப்பு டாலர் அளவுக்கு வளருவதிலிருந்து, , ராணுவ ஒழுங்குமுறை, சுகாதாரம், அதிக ஏற்றுமதி, அடிப்படை கல்வி, ,மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்கும் வசதி, சாலை வசதிகள், இங்கு வரும் வெளிநாட்டினர் பாதுகாப்பு என ஏகத்துக்கு இருக்கின்றன வல்லரசு என்ற கனவின் பின்னே. வெறும் ராக்கெட் தொழில் நுட்பமோ, பாஹுபலி பிரமாண்டாமோ, சில அரசியல் தலைவர்கள் உதார்விடும் மேடை சொற்பொழிவோ கிடையாது. முதலில் வல்லரசு என்ற பதமே தற்போது புழக்கத்தில் இல்லை. அதெல்லாம் உசுப்பேற்றும் பேச்சு.

  ReplyDelete
  Replies
  1. காரிகன்

   வல்லரசு என்பது உலக அளவில் எல்லா நிலைகளிலும் நம் நாடு உயர்வதைதான் குறிக்கும் என்பதை நானும் அறிவேன் . அது இப்போதைய நிலை. ஆனால் ஒரு காலத்தில் எத்தனை அணு ஆயுதங்கள் ஒருநாடு தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதையும் அதன் ராணுவ பலத்தையும் வைத்துதான் வல்லரசு நாடு என்ற பெயர் கொண்டிருந்தது. அமெரிக்காவிற்கு இன்னும் அந்த நினைப்பு மேலோங்கி இருப்பதால்தான் எல்லா நாட்டு உள் விவகாரங்களில் கூட மூக்கை நுழைக்கப் பார்க்கிறது. தன்னைக் கண்டு எல்லோரும் அஞ்ச வேண்டும் என்ற இறுமாப்பு இன்னுமிருக்கிறது.

   அறிவியல் , கல்வி, வானவியல் தொழில் நுட்பம் , பொருளாதாரம் , சமூக முன்னேற்றம் போன்ற பல நிலைகளில் நம் நாடு முன்னேற வேண்டும் என்ற ஆசையில் மாணவர்களை கனவு காணச் சொன்னார் அப்துல் கலாம் . அவருடைய இலக்கு 2020 ஆம் ஆண்டு . நீங்களோ இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம் என்கிறீர்கள் . காலத்தையும் அது செய்யும் மாயத்தையும் யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது .

   ஒரு காலத்தில் நாம் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அமெரிக்காவை விட 50 ஆண்டுகள் பின் தங்கியிருந்தோம் என்று ஆசிரியர்கள் சொல்வார்கள் . ஆனால் இப்போது சமமாக இருக்கிறோம் என்று என்னுடன் படித்த அமெரிக்காவில் வாழும் நண்பன் ஆச்சரியமாகவே சொல்கிறான் . அறிவியல் வளர்ச்சி உலகளாவிய விசயமாக ஆகிப் போனது நண்பரே ! வல்லரசு என்ற நிலைக்கு வெகு தூரமில்லை.

   Delete
 11. அற்புதமான அஞ்சலி, சார்லஸ். மதுரை மருத்துவமனையின் செய்தி நான் இதுவரை அறியாதது. உண்மையிலேயே, காமராஜருக்கு பிறகு தமிழகம் பெற்ற தன்னிகரில்லா தலைவர் அப்துல் கலாம் அவர்கள். பேசாமல் ஒரு ஐந்து ஆண்டுகள் இவரை விட்டு தமிழகத்தை ஆட்சி செய்ய சொல்லி இருந்தால் எங்கேயோ கூட்டி சென்றிருப்பார். இனி இப்படி ஒருவர் நமக்கு கிடைப்பாரா என்பது சந்தேகமே.

  ReplyDelete
  Replies
  1. வாங்க குரு

   இருக்கும்போது ஒதுக்கிவிட்டு இழந்த பிறகுதான் தமிழன் எதையும் கொண்டாடுவான் . தன்னிகரில்லா தலைவனை நாடும் நாமும் இழந்தோம் . அவருடைய கொள்கைகளையாவது காற்றில் பறக்க விடாமல் கடைப்பிடிக்கப் பார்ப்போம்.

   Delete
 12. நல்ல அஞ்சலி சார்ல்ஸ்.

  இறப்பின் போது தான் ஒருவரின்
  அருமையை உணர்ந்து கொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க விமல்

   இந்தப் பக்கம் நீங்கள் வந்து ரொம்ப நாளாச்சு . நீங்கள் சொன்னது மிகச் சரி . இழந்த பிறகு உணர்கிறோம்.

   Delete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்