இசை ராட்சஷன் - 4
( The Musical Legend )
பதினாறு வயதினிலே படப் பாடல்களின் தாக்கம் பல நாட்கள் நீடித்தது . பிறகு 'அவர் எனக்கே சொந்தம்' என்ற படத்தில் வந்த 'தேவன் திருச்சபை மலர்களே' பாடல் சிலோன் வானொலியில் அடிக்கடி போடப்பட்டதைக் கேட்டுவிட்டு மிகவும் ரசித்திருக்கிறேன் . இதயத்தை இறகால் வருடும் கானம். இப்போது இசைக்கப்பட்டாலும் பால்ய காலத்தில் சர்ச் பாடகற்குழுவில் நான் சேர்ந்து பாடியது ஞாபகத்தில் வரும் . கன்னியர்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் படித்தபோது எனது 'பாட்டு பாடும்' திறமைக்காக ஒரு சிஸ்டர் என்னை பாடகற்குழுவில் சேர்த்துவிட்டார்கள். எட்டு வயதில் அந்தக் குழுவில் நான் கானக்குயிலாக வலம் வந்தேன் . குரல் பெண் குரலாக இருக்கும் . பதினைந்து வயதுவரை குரல் உடையவேயில்லை.
சர்ச்சில் சொல்லித்தரப்படும் எல்லா பாடல்களையும் எளிதாக மனப்பாடம் செய்து பாடிவிடுவேன் . பெண்கள் பாடும்போதுதான் பாடவேண்டும் என்பது கட்டளை . இல்லாவிடில் 'குட்டு' விழும். கிறித்தவப் பாடல்களுக்கென்று தனித்த இசை ஒன்று இருந்ததை அப்போது உணர்ந்தேன் . மேல்நாட்டு இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களும் மெல்லிசைப் பாடல்களும் நிறைய இருந்தன .அவையெல்லாம் மனதை கொள்ளை கொள்ளும் இசையாக அமைந்தன. ஆனால் இப்போது வரும் கிறித்தவப் பாடல்களில் சினிமாவின் இசை ஏறிக்கொண்டதை பார்க்க முடிகிறது. ரசிக்க முடிவதில்லை . பக்திப் பாடல்களும் நிறம் மாறும் யதார்த்தம் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது .
தேவன் திருச்சபை மலர்களே என்ற பாடல் ஒரு கிறித்துவப் பாடல் போலவே ஒலிக்கும் . சினிமாவிற்கான இசை அதில் மாறாது . கிடார் ஒலியின் கார்ட்ஸ் ஆரம்பித்து பல இசைக்கருவிகளும் சேர்ந்து பல்லவி ஆரம்பிக்கும் அழகு பிரமாதம் . பாடகற்குழுவில் இருந்ததாலோ என்னவோ கேட்ட மாத்திரத்தில் மனதை ஆக்ரமித்தது . புதிது புதிதான இசைக் கருவிகளின் சங்கமம் ஆச்சரியப்பட வைக்கும். இப்போது பல கருவிகள் வந்துவிட்ட போதிலும் அந்த நேரத்தில் இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகளின் இசையொலி , நயம், ஓசை எல்லாமே வினோதமானவை. ஆரம்பத்தில் இளையராஜா ஒரு கிறித்தவராக வளர்ந்தபோது சர்ச்சுகளில் இசை கேட்ட பாதிப்போ என்னவோ இந்தப் பாடல் மட்டுமல்ல . அவர் இசைத்த கிறித்தவப் பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையாகவும் சுகமாகவும் இருக்கும் . 'மாதா உன் கோயிலில்', 'தேவனின் கோயிலிலே ' , 'கடவுள் உள்ளமே கருணை இல்லமே ' , ' ஸ்தோத்திரம் பாடியே ' , போன்ற பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் . அத்தனையும் சூப்பர் ஹிட் !
'தேவன் திருச்சபை மலர்களே ' போன்ற பாடல்களை அப்போது மனப்பாடமாய் பாடுவேன் . இப்போதுள்ள புதுப்பாடல்களில் ஒரு பாட்டு கூட மனப்பாடம் ஆவதில்லை . பிள்ளைகள் கேலியாக 'எங்கே இரு வரிகள் தவறில்லாமல் பாடிக் காட்டுங்கள் ' என்று எனக்கு சவால் விடுகிறார்கள் . நான் கவனித்துக் கேட்டாலும் கவனம் அதில் போவதில்லை. மனப்பாட சக்தி போய்விட்டதா? மனசுக்குள் போகாமலே போய்விட்டதா? ' பாட்டு என்றால் ' இதயம் நுழைந்து உணர்வில் கலந்து உயிரைத் தொடுவதாக இருக்கவேண்டும் ' என்று தத்துவமாகச் சொன்னால் ' பாட்டு கேட்கிற மாதிரி இருக்கணும் ...ஏன் இவ்வளவு யோசிக்கறீங்க ' என்கிறார்கள் பிள்ளைகள். நமக்குப் புரிவது அவர்களுக்குப் புரிவதில்லை . நாம் ரசிப்பது அவர்கள் ரசிப்பதில்லை. நாம் ஏற்றுக்கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை . தலைமுறை இடைவெளி இதுதானோ ? ' அப்பாவிற்கு என்ன பெரிதாகத் தெரியும்' என்று நான் என் தந்தையைப் பற்றிக் கொண்டிருந்த கணிப்பை பிள்ளைகள் எனக்கும் கணிக்கிறார்கள். உலகம் உருண்டை. கிளம்பியவன் கிளம்பிய இடத்திற்கே வந்து சேரவேண்டும் .
முதன்முதலாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தீபம் திரைப்படத்திற்கு இசையமைத்தார் இளையராஜா. அதுவரை எம்.எஸ்.வி. அவர்களே அதிகமாய் சிவாஜி படத்திற்கு இசையமைத்து வந்தார் . அதனால் அந்தப் படத்தின் பாடல்கள் எம்.எஸ்.வி இசையின் சாயல் கொண்ட பாடல்களாகவே அமைந்தன. திரைப்படக் கர்த்தாக்களின் நிர்ப்பந்தமோ என்னவோ சிவாஜிக்கென்று தனது பாணியை மாற்றிக் கொள்ளாமல் முன்னோர் வகுத்த பாணியிலேயே இளையராஜா இசையமைத்திருந்தார் . ஆரம்பத்தில் ஒரு சூழல் கொடுக்கப்பட்டால் பல டியூன்கள் போடப்பட்டு இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டதாக இளையராஜாவே சொல்லியிருக்கிறார். எனவே தீபம் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. காரணம் இயக்குனரா இசையமைப்பாளரா என்ற பட்டிமன்றம் நடத்தினால் வாதங்கள் முடிவுறாது. ஆரம்பத்தில் சுய வளர்ச்சிக்காகவும் வணிகரீதியாகவும் இளையராஜா வளைந்து கொடுத்துதான் போயிருக்க முடியும் .
' அந்தப்புரத்தில் ஒரு மகராணி ' என்ற பாடலில் எம்.எஸ்.வி.தான் அதிகம் தெரிவார். 'ராஜா யுவர் ராஜா ' , 'பேசாதே வாயுள்ள ஊமை நீ ' என்ற மற்ற இரு பாடல்களிலும் கூட இளையராஜாவின் முன்னோர்களே தெரிவார்கள். பின்னணி இசையிலும் இளையராஜாவின் முத்திரை குறைவாக இருக்கும் . ' பூவிழி வாசலில் யாரடி வந்தது ' என்ற பாடலில் மட்டும் இளையராஜா முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் ,ஜானகி டூயட்டில் பாடல் கேட்க சுகமானது . நானும் அந்தப் பாடலை விரும்பிக் கேட்பேன்.
கவிக்குயில் படத்தின் பாடல்கள் மனதைத் தாலாட்டின . 'குயிலே கவிக் குயிலே' என்று ஜானகி அவர்கள் தன் குயில் குரலில் பாடுவதை கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் விடிந்தும் விடியாத காலையும் கதிரவன் மெதுவாய் எட்டிப் பார்க்கும் வேளையும் தோப்புக்குள் இரு குயில்கள் கேள்வி பதிலாய் மாறி மாறி கூவிக் கொள்ளும் இனிய பொழுதும் கற்பனைக்கு வரும் . சில பாட்டுக்கள் கேட்கும்போது நாம் சந்தித்த சில இடங்களையும் சில மனிதர்களையும் ,சில சூழல்களையும் நம் எண்ணச் சிறைக்குள்ளிருந்து இதயத்தின் அறைக்குக் கொண்டு வருகிறோமே அந்த விஞ்ஞானத்தை விளக்க யாரால் முடியும் ? குயில் சப்தத்திற்கு இணையான குழலின் நாதத்தை பாடல் முழுவதும் இழையோடவிட்டு இசைக்கப்பட்ட பாட்டு ! குயில் என்ற வார்த்தை பாடலில் இருந்தாலே புல்லாங்குழல் இசைப்பது எல்லா இசையமைப்பாளருக்கும் மரபே! இளையராஜா அதை கனக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார் .
' சின்னக்கண்ணன் அழைக்கிறான் ' ....ஆகா என்ன ஒரு ஆனந்தமயமான பாடல் ! இசைப்பண்டிதர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் தேமதுரக் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலைக் கேட்டால் மனசு எங்கோ பறக்கும் . பெண் குரலிலும் அதே பாடல் பாடப்பட்டிருந்தாலும் பாலமுரளி அவர்களின் குரலில் அந்தப் பாடலுக்கு தனி மகத்துவம் இருக்கும். இரு ஆண்டுகளுக்கு முன்பு 'என்றென்றும் ராஜா ' என்ற தலைப்பில் இளையராஜாவின் இசைக்கச்சேரி ஆர்ப்பாட்டமாக நடந்தது . ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டது .
நாதகலாஜோதி பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்க இளையராஜா அன்னாரைப் பார்த்து , 'அண்ணா ...மேடைக்கு வர்றேளா ' என்று பவ்வியமாக அழைத்தார் . நிகழ்ச்சி வழிநடத்தும் பிரகாஷ்ராஜ் பெரியவரை அழைத்து வந்தார் . ' உங்களுக்காகவே இந்தப் பாடலை அண்ணா பாடணும்னு சொல்லி நான் கேட்டப்போ ...' என்று கூடியிருந்த மக்களைப் பார்த்துப் பேசிய இளையராஜா சற்று நிறுத்தியவுடன் மக்களின் ஆரவாரம். '.....நான் கேட்டப்போ ...என்ன பாடல் பாடப் போகிறார் என்று உங்களுக்கு நல்லா தெரியும் . நான் சொல்ல வேண்டியதில்லை . அவரை நான் அழைத்தேன் . ஏனா நான் இளையராஜா சின்ன கண்ணன் ...' என்று தொடர்ந்து பேசி அவருக்கு முன்னால் தனது சங்கீத ஞானம் குறைவு என்பதை பணிந்து ஏற்றுக்கொண்டார் .
தொடர்ந்து ' பாலமுரளி கிருஷ்ணா என்றாலும் சின்னக் கண்ணன் என்றுதான் அர்த்தம் ' என்று இளையராஜா முடிக்க பாலமுரளி அவர்கள் ' புதுமை, இனிமை, இளமைக்கு ராஜா ..இளையராஜா ...ராஜா பாட வரச் சொன்னப்போ எனக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது . பெரியவா பாடுற மேடையில எப்படி நான் பாடுறதுனு ... சரி ஏதோ சின்னக் கண்ணன்தானே பாடலாம் ' என்று அவர் பதிலுக்கு சொல்லும்போதே பாட்டிற்கான இசை ஆரம்பித்தது . அற்புதமாக பாடல் சென்றது . அவரும் அற்புதமாக பாடினார் . பின்னணி இசை துளியும் மாறவில்லை . பொதுவாக இசை மேடைகளில் துல்லியம் காட்டுவது அரிதான ஒன்று. இளையராஜா perfectionist என்பதை அங்கும் நிரூபித்தார். இசைக் கருவிகள் அச்சுப் பிசகாமல் வாசிக்கப்பட்டன .
இளையராஜா என்ற இசைக் கலைஞனின் பாதிப்பு தாக்கம் எந்த அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையில் புகுந்திருக்கிறது , அவருடைய இசை எப்படி காற்றோடு காற்றாக கலந்திருக்கிறது , வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் சந்திக்கும் சம்பவங்களோடு எப்படிப் பின்னியிருக்கிறது என்பதை கீழே உள்ள கானொளியில் காணுங்கள்.
எப்போதோ எங்கோ யாருக்கோ கொடுத்த பேட்டியில் தான் செய்த சாதனையை சுட்டிக் காட்டி 'என்னைப் போல் முடியுமா? ' என்று அவர் சவாலுக்கு விடுத்ததை 'தலைக்கணம் ' என்றால் இருந்துவிட்டு போகட்டுமே !
தவறென்ன இருக்கிறது? பதிலுக்கு யாரும் 'முடியும்' என்று சொல்ல முடியவில்லை. இல்லாதவரே இருப்பது போல் ஆடுகிறார். இருப்பவர் இருப்பதைச் சுட்டிக் காட்டக் கூடாதா ? இளையராஜாவை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காமல் போனவர்கள் சொன்ன கர்வம், திமிர் , செருக்கு என்பதெல்லாம் எல்லா மனிதருக்குள்ளும் உண்டு. சாதித்தவருக்கு அது கலைச்செருக்கு. திறமையுள்ளோருக்கு அழகு அவர்களின் ஞானச்செருக்கு !
இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே பயணிக்கும் சிந்தனையில் மீண்டும் 77 க்கு வந்தால் காயத்ரி என்றொரு திரைப்படம் .
சுஜாதாவின் குரலில் ஒரு பாடல் . ' காலைப் பனியில் ஆடும் மலர்கள் ' கேட்க இனிமையான பாடல் . பால்ய காலத்தில் நான் கூர்ந்து நோக்காத பாடல்களின் வரிசையில் இதைச் சேர்க்கலாம் . நான் கவனித்திருக்காவிட்டாலும் சிலோன்வானொலி நல்ல பாடல் எதையும் ஒதுக்குவதேயில்லை. இளையராஜாவின் கானங்கள் காற்றில் கலந்து கொண்டுதான் இருந்தன.
அதே வருடத்தில் மற்ற படங்களில் வந்த பாடல்கள் பெரிதான வரவேற்பைப் பெறவில்லை . அந்தப் படங்களின் பாடல்களை இணையத்தின் உதவியுடன் கேட்டுப் பார்த்தபோது இளையராஜாவின் கைவண்ணம் தெரிந்தாலும் மனம் கவராத சில பாடல்கள் இருந்தன. அவற்றை மக்கள் ஏற்காததால் ' அத்திப்பூ' வரிசையில் இடம் பெற்றன. சிலோன் ரேடியோவில் ' அத்திப்பூ' என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள். சிறிதும் பிரபலம் அடையாத பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும் . அதிலும் சில பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் ஏன் அந்தக் கதிக்கு ஆளாயின என்பது புதிர் !
.............................தொடர்வேன் ......................................