Sunday 19 March 2017

இசை ராட்சஷன் - 18 ( The Musical Legend )


                                அள்ள அள்ள  குறையாத இசைச் செல்வத்தை வழங்கியிருக்கும் ...இன்னும் வழங்கிக் கொண்டிருக்கும் இராக தேவனைப் பற்றியும்  அவரின்  இன்னிசை  பற்றியும்   இசை  நண்பர்கள்  பலர் கொடுத்திருக்கும் செய்திகளை எல்லோருடனும் பகிர ஆசைப் படுகிறேன்.

                                             

*  இசைஞானியை பற்றி இயக்குனர் சிகரம் திரு. கே. பாலசந்தர் சொன்னது 

 "  இந்த விழாவிற்கு என்னால் வர இயலாத சூழ்நிலையிலும் ஒரு ஐந்து நிமிடங்களாவது வந்துவிட்டு செல்கிறேன்  என்று சொன்னேன்.  நான் சொன்னது பிரகாஷ் ராஜுக்காக  அல்ல... இளையராஜாவுக்காக!

               இளையராஜாவை சந்தித்து நெடுநாட்கள் ஆகிவிட்டன. அவரை சந்திக்கின்ற ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டுமே என்றுதான் வருகிறேன் என்று சொன்னேன். ஆரம்பகாலத்தில் நான் இயக்கிய படங்களுக்கு திரு. எம்.எஸ்.வி. அவர்கள்தான் இசையமைத்துக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்டத் திரைப்படத்திற்கு  இளையராஜாதான் பொருத்தமாக இருப்பார் என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் எம்.எஸ்.வி.யை விட்டுப் போவதற்குத் தயக்கமாக இருந்தது. 

                                                           


               
                    எனவே நான் திரு. எம்.எஸ்.வி. அவர்களிடமே சென்று, ‘இது போல ஒரு படம் இயக்க இருக்கிறேன்.. அதற்கு இளையராஜா இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே உங்கள் அனுமதியுடன் அவரை இசையமைக்கக் கேட்கப் போகிறேன்’ என்று கூறினேன். 

            அதற்கு அவர், ‘நிச்சயமாக இது போன்ற ஒரு கதைக்கு இளையராஜாவின் இசைதான் சரியாக இருக்கும்’ என்று கூறினார். உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தத் திரைப்படம்தான்  ' சிந்து பைரவி ' .


             முதல்முறையாக அவர் எனக்கு இசையமைக்கப் போவதால் எனக்கு ஒரு Excitement. அவருக்கும் அப்படியே..! படத்தின் கதையைச் சொல்லி அவரிடம் நான், ‘இந்தப் படத்திற்கு நீங்கள் தேசிய விருது வாங்க வேண்டும்’ என்று கூறினேன். உடனே அவர், ‘நிச்சயம் வாங்குவேன்’ என்று கூறினார்.

           ‘பாடறியேன் படிப்பறியேன்’ மாதிரி ஒரு Folk Song-ல் இருந்து கர்நாடிக் பாடலுக்குப் போவது போன்ற ஒரு Situation-க்கு இசையமைப்பது என்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது எனக்குத் தெரியும். அந்த சிச்சுவேஷனை அவரிடம் சொல்லும்போது மிகவும் ரசித்தார். ரசித்துவிட்டு ‘எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்கள்’ என்று கேட்டார்.

          மறுநாள், ‘முடித்துவிட்டீர்களா’ என்று கேட்டேன். ‘முடித்துவிட்டேன்’ என்றார். அந்த ஒரு நாளில், Folk-ல் இருந்து ஆரம்பித்து Carnatic-ல் முடியும் அந்த சிரமமான பாடலை இசையமைத்து முடித்திருந்தார். அந்தப் படத்தின் Highlight அந்தப் பாடல்தான். மேலும் படம் முழுவதும் இசைஞானியின் Contribution அளப்பறியது.

          அடுத்து ஒருமுறை, சிரஞ்சீவி நடித்த ஒரு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும்போதும், ‘இந்தப் படத்திற்கும் நீங்கள் தேசிய விருது வாங்க வேண்டும்’ என்று சொன்னேன். அந்தப் படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. நாம் எதை Aim பண்ணுகிறோமோ, எதை நோக்கிப் போகின்றோமோ அது நமக்குக் கிடைப்பதை விட ஒரு கலைஞனுக்கு வேறென்ன வேண்டும்?

       நான்காவது முறையாக அவர் தேசிய விருது பெற்றபோதும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்னேன். ‘இதில் பாதி நீங்கள்தான்’ என்றார். எனக்குப் புரியவில்லை. ‘இது நான்காவது விருது. அதில் இரண்டு விருது உங்கள் படம்’ என்றார்.


       இளையராஜா தமிழகத்திற்கு வாய்த்ததும் சரி.. இந்தியாவிற்கு வாய்த்ததும் சரி.. அது ஒரு பெரிய Historic Accident " .


   இத்தனை புகழ்மாலைகளையும் வாங்கிக்கொண்டிருந்த கேட்டுக்கொண்டிருந்த அந்த மாபெரும் இசை மேதையின் முகத்தில் சற்றும் சலனமில்லை. அரங்கினுள் இருந்த 4 மணி நேரமும் அவர் விரல்கள் நாற்காலியில் தாளமிட்டபடி இருந்தன.


** (4 ஜூன் 1946) ”பாடும் நிலா”வின் பிறந்த நாள். இசைஞானி, 27.2.1997 குமுதம் வார இதழில் தன் நண்பனுக்காய் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:



பாலா!

உனக்கு நினைவிருக்கோ இல்லையோ.. வெங்கட்ராவ் என்கிற தெலுங்கு நண்பரின் மனைவி நடத்திய நர்சரி ஸ்கூலுக்காக நீ இசை நிகழ்ச்சி நடத்தின இடத்துல நான் உன்னை முதன் முதலா பார்த்தேன். அப்போது ஒண்ணு, ரெண்டு படத்துல நீ பாடி இருந்தே! ‘ஆயிரம் நிலவே’ பாட்டுக்குப்பின் உன் பேர் வெளியில தெரிஞ்சுது.


உன்னோட இசைக்குழுவிலிருந்த அனிருத்ரா என்ற ஆர்மோனியக் கலைஞர் எனக்கும் நண்பர். உனக்குன்னு இசைக்குழு ஒன்று அமைக்க நீ என்னைக் கேட்டபோது நான் ’ஏற்கனவே அனிருத்ரா இருக்காரே’ன்னு தயங்கினேன். ஆனா நீயும் வெங்கட்ராவும் நீ பாடின இசைத் தட்டுக்களை, நொட்டேஷன் எடுப்பதற்காக என் கைகளில் திணிச்சிட்டுப் போயிட்டீங்க.


அப்புறம், மாலை நேரங்களில், உன்னோட ரங்கராஜபுரம் வாடகை வீட்டுல நாம அடிச்ச இசைக் கொட்டங்களை, மனசுக்குள்ளார இருக்கும் அந்த தூசு படிஞ்சுபோன பக்கங்களை, தூசி தட்டிவிட்டு, படிச்சுப் பார்க்க இதை ஒரு சந்தர்ப்பமா நான் பயன்படுத்திக்கறேன். நீ ஒண்ணும் கண்டுக்காதே!

                                            

ஜி.கே.வி. (ஜி.கே. வெங்கடேஷ்) இசையமைச்ச ‘நாட்டக்கார ராயலு’ என்ற படத்துல எப்படியாவது உனக்கு ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கிக் கொடுத்திடணும்னு நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நினைச்சா சிரிப்பு வருது. காரணம் பலாப் பழத்துல ஈயைப் பிடிச்சு உட்கார வைக்கிற வேலை அது! மடையா! மடையா! உன்னை இல்லடா, என்னை சொல்றேன்!


அனங்கா பள்ளி என்ற ஊர்ல கச்சேரியை முடிச்சிட்டு ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் இல்லாத காரணத்தால ராத்திரி ரெண்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கம்பார்ட்மெண்ட்ல ஏறி, தூங்கிப் போனதும், காலையில பத்து மணிக்கு ரயில் ஆடின ஆட்டத்துல கண் விழிச்சுப் பார்த்தபோது, அது ஆடு மாடுகளை அடைச்சுப் போடுற கம்பார்ட்மெண்ட்டுனு தெரிஞ்சு, வாத்தியக்காரர்கள் கத்துனதும், உனக்கு அப்போது தெரிஞ்சிருக்க  நியாயமில்லை. ஏன்னா, நீ ஹைதராபாத்ல இருந்து ஃபிளைட்ல போயிட்ட! அப்புறம் தெரிஞ்சிருக்கும்!


இசையமைப்பாளனா ஆனபின் ஏதோ ஒரு மனத்தாங்கல்ல, உனக்கு நான் பாட்டே கொடுக்கல. ஏதோ ஒரு இடத்துல நீயும் நானும் சந்திச்சபோது, “ஏண்டா மடையா! என்னையெல்லாம் பார்த்தா உனக்கு ஒரு பாடகனாத் தெரியலையா?ன்னு நீ கேட்டவுடன், என்னுடைய மனத்தாங்கல் எல்லாம் காற்றுப்போன பலூன் போல ஆனது.

 என்னுடைய படத்துக்காக நீ பாடின முதல் பாட்டு “ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்”..! டேய் பாலா.. உன்னோட நட்பு ஒரு நாளோட போற விஷயமா என்ன? அந்த ஒரு நாள், இன்னிக்குக் கேட்டாலும் கடந்த முப்பது வருஷங்களையும் கடந்து நிற்பதை உணர முடியுது. என்னோட கற்பனைக்கு நீ குரலா இருந்திருக்கே. மறக்கவே முடியாத பாடல்களையெல்லாம் நீதான் எனக்குப் பாடியிருக்கே. வேறு யாராவது கூட பாடியிருக்கலாம். ஆனா ஏன் அப்படி நடக்கலே?


உன்னிடம் எனக்குப் பிடித்த சமாச்சாரங்கள்:
• ஒரு பிரபலமான பாடகனாக நீ இருந்தபோதுகூட, உன்னிடம் ஆர்மோனியம் வாசிக்கிறவனாக இருந்த என்னிடமும், மற்ற வாத்தியக்காரர்களிடமும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் நீ பழகியது.
• பாட்டு சொல்லிக்கொடுத்தவுடன் பிளாட்டிங் பேப்பர்போல ஒத்தி எடுப்பது.
• ரெக்கார்டிங்கில் பாடுவதைவிட கச்சேரிகளில் நன்றாக மெருகேற்றிப் பாடுவது.


நீயும் நானும் ஒரே நேரத்தில் சினிமாவுக்கு வந்தோம். உன்னை ஒரு பாடகனாக நானும், என்னை ஒரு இசையமைப்பாளனாக நீயும் நினைக்கறதில்லை என்பது உனக்கும், எனக்கும்தான் தெரியும்.
மனசுக்குள்ளே எவ்வளவு அசிங்கங்கள் இருந்தாலும், அதே மனசுக்குள்ளே இருந்து எவ்வளவு புனிதமான இசை வெளியில் வருது! அசிங்கமான மனசுன்னு தெரிஞ்சிருந்தும், ஏதோ ஒரு சக்தி மனசுல உட்கார்ந்து, என்னென்னத்தைக் கொண்டு வருது! அடேயப்பா!


மாமேதை மோசார்ட் சொன்னான்: “நான் ஒரு அசிங்கமானவன். ஆனால் என் இசை அசிங்கமானது அல்ல”


ஒண்ணா ரெண்டா, எத்தனை தடவை அந்த சக்தி, நம்மோட கலந்து எத்தனையோ வடிவங்களை வெளியேத்திட்டுப் போயிருக்கு!
தவறு பண்ணியிருந்தாலும் மன்னிச்சு அந்த சக்தி வந்து கலந்து போறதனால நீ கர்வப்படு! கர்வப்படும் அருகதை உனக்கு இருக்கிறது.
நல்லதோர் வீணையைப் புழுதியில் எறிந்த பராசக்தி, உன்னை, என்னைப் போன்ற புல்லை எடுத்துப் புல்லாங்குழலாக்கிவிட்டாள். இந்தப் புல்லுக்குத் தெரியும் இது புல்லாங்குழல் இல்லை என்று!


பராசக்தி என்று எங்கேயோ தனியா இல்லை. நமக்கு வேலை கொடுத்த தயாரிப்பாளர்கள். வேலை வாங்கிய டைரக்டர்கள், வேலையை ரசிக்கிற ஜனங்கள்தான் பராசக்திகள். பாரதி... பராசக்தி உன்னைப் புழுதியில் எரியவில்லை. எங்க மனசுக்குள்ளதான் எறிந்திருக்கிறாள். ஓ! நீ எங்க மனசைத்தான் புழுதின்னு சொன்னாயா? ஆமாம்! ஆமாம்! அதென்னமோ நிஜம்தான்!


ஒண்ணா வந்தோம்; ஒண்ணா வேலை செஞ்சோம் என்பதல்ல. அதற்கும் அப்பால என்னமோ இருக்கு பாலா! சூரியன் தனியாத்தான் இருக்கு. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு வெளிச்சம் மட்டுமில்லை. இன்னும் என்னென்னமோ இருக்கு. உனக்கும் எனக்கும் இடையிலேயும் அப்படி என்னென்னமோ இருக்கு!

நன்றி: குமுதம் 27.2.1997


*** பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா...
Ilayaraja - king of Orchestration...
இந்தப்பாடலுக்குள் ஞானியார் பாவித்துள்ள வாத்தியங்களையும் , அவற்றை ஏன் எதற்காக எப்படிப் பாவித்துள்ளார் என்பதையும்  ஓரளவு என் சிற்றறிவுக்கு ஏற்றாற்போல கிரகித்தேன்;  நெகிழ்ந்துபோனேன். அதற்குமுன்னர் இந்த வாத்தியங்களைப்பற்றிய சில தகவல்கள்.
அறிந்த தகவல்...
வயலின்

இதன்  குடும்ப வாத்தியங்களான வயலின், வயலோ , செல்லோ , டபுள் பேஸ் ஆகியவற்றை தந்திக்குடும்ப வாத்தியங்கள் (String family Instruments) என அழைக்கிறார்கள், உலகின் தலைசிறந்த கம்போசர்கள் தமது இசையில் செய்யும் ஆர்கஸ்ட்ரேஷனுக்கு இந்தத் தந்திக்குடும்ப வாத்தியங்களையே முக்கியமாகப் பாவிக்கிறார்கள்.

தேடித் தீர்த்த தகவல் 3
சாரங்கி

இற்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இசைக்கருவி . இது வட இந்தியாவில் உருவானதென்றும் நேபாளத்தில் உருவானதென்றும் ஃபாசி இனத்தவர்களின் வழி வந்ததென்றும் பல்வேறு வரலாறுகள் கூறப்படுகின்றன.

 தில்ரூபா.

 இதன் வரலாறு சுமார் 300 வருடங்களுக்கு மேற்பட்டது என்பதும் இதன் ஆரம்பம் சீக்கியர்களிடமிருந்து வந்தது என்பதும் பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாத்தியங்களின் தனித்தன்மையென்னவென்றால் மனிதனின் நாடி நரம்புகளை புரட்டிப்போடக்கூடிய வல்லமை இவற்றிற்கு உண்டு. இவற்றிலிருந்து வெளிப்படும் இசைக்குள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஏதோவொரு சோகம் பின்னிப்பிணைந்து வெளிப்பட்டு கேட்போரின் மகிழ்ச்சியை இல்லாதொழித்துவிடும்.

புல்லாங்குழல்

உலகின் மிகப்பழமையான வாத்தியமான இது 35,000 -43,000 வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டதென்போரும் கி. மு. காலத்திலேயே    இந்தியாவில் காணப்பட்டதாகக் கூறுவோரும் உள்ளார்கள். இங்கு அதைப்பற்றி ஆராய்வதல்ல எனது நோக்கம் .  மாறாக அந்த இசையைக் கேட்போருக்குள் ஏற்படுத்தப்படும் மனநிலை மாற்றங்களை வெளிக்காட்டுவதே என் நோக்கம்.


புல்லாங்குழல் இசைக்கு... நீறுபூத்த நெருப்பாக காயம்பட்டுப்போயிருக்கும் மனித மனங்களை மீளவும் ஊதிப்பெருப்பித்து வேதனையில் உழலவிடும் வல்லமை உண்டு.

'பிரண்ட்ஸ் ' படத்தில் ஒரு காட்சி.  பலவருடங்களுக்கு முன்னர் அறிந்தும் அறியாமலும் சின்ன வயதில் செய்த செயலொன்றுக்காக குற்ற உணர்ச்சியால் சாகடிக்கப்படுகிறான் ஒருவன். அவன் செய்த அந்தக்குற்றம் ஒருநாளில் பகிரங்கப்படுத்தப்படுகின்றது. அதனால் கூனிக்குறுகி வேதனையில் துவளும் அந்தக்காட்சிக்காக ராஜாவிடமொரு பாடல் இயக்குனரால் கேட்கப்படுகின்றது.
அதற்கான பாடல்தான்...


பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் ஞாயம் சாட்சி சொல்லி போவாயா
மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே
கலங்குமா..
ஆறுதல்கூறாயோஅருகில் வந்து..

ஹரிகரன் பாடியுள்ள இந்தப்பாடலைத்தான் சமீபநாட்களில் அதிகம் கேட்கிறேன், அதன் மெட்டும் ஆர்கஸ்ட்ரேஷனும் ஆர்க்ஸ்ட்ரேஷனுக்குள் முக்கியமாகச் செய்யப்பட்டுள்ள தந்தி வாத்தியங்களின் ஒருங்கமைப்பும் சிலிர்க்க வைக்கிறது.

இந்தப்பாடலுக்குள் அதன் சோகமான விரக்தியான காட்சிக்கும் ஜீவனுக்கும் ஏற்ற வாத்தியங்களான மேற்கூறிய மூன்று வாத்தியங்களையும் ( Sarangi, string family instruments, Flute ) ஞானியார் பயன்படுத்தியிருக்கும் விதமானது அவரை உலகின் தலைசிறந்த கம்போசர்களில் ஒருவராக  king of Orchestration என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

பாடலுக்கான காட்சி, அந்தக்காட்சிக்கான மெட்டு , அந்த மெட்டின் ஜீவன் கெடாமல்  செய்யப்பட்டுள்ள ஆர்கஸ்ட்ரேஷன், அந்த ஆர்கஸ்ட்ரேஷனுக்கு மிகப்பொருத்தமாக உட்சேர்க்கப்பட்டுள்ள சாரங்கி அல்லது தில்ரூபா அல்லது அவறின் குணபியல்பைக்கொண்ட வாத்தியமொன்று , அதனுடன் சரிக்குச் சமமாக சேர்க்கப்பட்டுள்ள புல்லாங்குழல்,  குறிப்பாக , இரண்டாவது இடையிசையில் அந்த சோகமான புல்லாங்குழகானது விசும்பியபடி தில்ரூபாவுடன் போட்டிபோட்டு வாசித்து அசத்திவிட்டு அப்படியே மெதுவாகச் சென்று ஹரிகரனின் சுருதியில் நிறுத்தும் கச்சிதம் ..எல்லாமே அழகு.  ( அனேகமாக இந்த வாசிப்பு அண்ணன் நெப்போலியன் செல்வராஜின் வாசிப்பாகத்தான் இருக்க முடியும் )

பாடலின் ஒவ்வொரு வரிக்கான  வார்த்தைகளுக்கு ஹரிகரன் தனது குரலில் காட்டியிருக்கும்  பாவங்கள்... சங்கதிகள்...அபாரம்!


பாடலில் ராஜாவால் அற்புதமாகச் செய்யப்பட்டுள்ள String arrangementம் அவை பல்லவியின் முடிவிலே "ஆறுதல் சொல்லாயோ அருகில் வந்து " என்று ஹரிகரன் பாடி முடிக்கும்போது பின்னாலிருந்து எழுந்து அடங்கும் பாங்கும் நேர்த்தியும்...அற்புதம்!

ஒன்றுமட்டும் எனக்கு நன்றாக  தெரிகின்றது. இளையராஜாவின் இசைமேதமை எதிர்காலத்தில்  அல்லது பல வருடங்களுக்குப் பின்னர் இன்னும் அதிகமாக ஆராயப்படும்... பேசப்படும்...அதிசயிக்கப்படும். அப்போது நாம் இருப்போமோ இல்லையோ தெரியாது.  ஆனால் அவரது பாடல்களும் அவற்றின் ஜீவன்களும்  அப்படியே இருக்கும்.


**** புதுமைகளின் ராஜா. ...

இளையராஜா என்றோ இசையமைத்த பாடல்களுக்கெல்லாம் இப்போது தான் அந்த பாடல்களிலெல்லாம் என்னென்ன உள்ளது என்று அலசும் நிலை வருகிறது.


என்றும் இனியவை என்று எல்லோராலும் கருதப்படும் பாடலாக இருக்கட்டும், கவனத்தில் வராத பல நூறு எண்ணிக்கையில் உள்ள பாடல்களாக இருக்கட்டும், ஒவ்வொரு பாடலையும், பாட்டின் வரிகளோடு ரசிக்கத் தெரிந்த மனதுக்கு அந்த பாடலின் இசையில் அடங்கியிருந்த விருட்சம் (அன்று) விளங்காமல் போனதென்னவோ உண்மைதான்.


இசையினை ரசிக்க தெரிந்தால் போதும், அது எந்த மாதிரியான எந்த வகையான இசை என்று தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் இசை என்பது மனம் சார்ந்த ஒன்று. ஒவ்வொருவரின் மனதுக்கும் ஒவ்வொருவிதமான குணாதிசியம் இருக்கும். இவருக்கு இன்னதுதான் பிடிக்கும் என்று கருதி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பாடலை அமைக்க முடியாது. ஆனால் இளையராஜா இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் எல்லா வயது வரம்புக்குள் (குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை) இருக்கிறவர்களுக்கும் பிடிக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்?
                                     
                                             

இளையராஜா இசைக்கதொடங்கிய போன நூற்றாண்டின் கடைசி கால்நூற்றாண்டில் இருந்து இந்த நூற்றாண்டின் இன்றுவரை “இளையராஜா பாடல்களை நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை” என்று சொல்லிய ஒருவர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்று யாராவது ஒருவரை கண்டுபிடித்திருந்தால் என்றால்.. ஆச்சர்யம் வேண்டாம்..அவர் அருங்காட்சியகத்தில் சிலையாகத்தான் இருந்திருப்பார்.


தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்த்து கொண்டு உலக இசையை தமிழர்க்கு ஊட்டிவளர்த்தவர் நமது ராஜா. பாரம்பரிய இசைக்கு என்றும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் அவர் அவர்களது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இசையினை இங்குள்ளவர்களுக்கு இன்னதென்று சொல்லாமலேயே செவிவழி தாரைவார்த்த பெருமை இளையராஜா அவர்களையே சாரும்.


உலகத்தில் உள்ள எல்லா இசையமைப்பாளர்களும் அவர்கள் நாடும், நாடு சார்ந்த இசையினையையும் படைத்திடுவார்கள். எங்கே.. யாரவது ஒரு வேற்று நாட்டை சார்ந்த ஒரு இசையமைப்பாளர் தமிழகத்தின் பாரம்பரிய இசையினை வைத்து இசைத்திருக்கிறாரா? இல்லை என்பதே உண்மை. ஆனால் இளையராஜா அவர்கள் எல்லா நாடுகளில் உள்ள இசையை, இசைக்கும் முறையை அறிந்தவராக இருப்பதனால் அவரால் முடிகிறது.


லத்தின் ரிதம் என்றொரு வகை உண்டு. இந்த வகை இசையின் ஆணிவேர் கியூபா. இவ்வகை ரிதத்தில் பல வகை உண்டு. இவ்விசையை இசைத்திட என்று ஒரு சில இசைக்கருவிகள் உள்ளன. Salsa/Son montuno/Mambo/Guaracha என பல வகையை கொண்டது லத்தின் ரிதம். இவ்வகையாக இசைக்கப்படும் பாடல்களில் Conga, Bongos, Trumpet, Double Bass / Bass Guitar, flute, saxophone, violin போன்ற இசைக்கருவிகளின் ஆதிக்கத்தை கேட்கலாம்.


அரங்கேற்ற வேளை படத்தில் “தாயறியாத தாமரையே” என்ற பாடலை கேட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தாள மாற்றம் அதிகமாக ஆச்சர்யப்பட வைத்தது. மனோ ரொம்ப சோகமாக பாடியவாறு இருக்க திடீரென அப்படியே அதற்கு நேர் எதிராக உற்சாக குரலில் சைலஜா வேறு ஒரு தாளத்தில் பாடிட, அதுவரை மனதில் குடிகொண்டிருந்த சோகம் மறைந்துபோய் உற்சாகம் தொற்றிக்கொண்டது.


இப்படியாக இந்த பாடல் முழுவதும்  மாறி மாறி தாளம் மாற்றம் கொண்டு இறுதியில் லத்தின் ரிதத்தில் முடிவடையும். ஒரு பாடலில் சோகத்தையும் உற்சாகத்தையும் உள்ளடக்கிய அரிய பாடல் இது. (இது போல இன்னும் சில பாடல்கள் உள்ளன)


லத்தின் ரிதம் தமிழகத்திற்கு சம்பந்தம் இல்லை. இளையராஜா இல்லையேல் தமிழர்க்கு இவ்வகை இசை பற்றி தெரிந்திருக்க சாத்தியமே இல்லை. “தாயறியாத” பாடலை கேட்ட பிறகு லத்தின் ரிதத்தில் அமைந்த வேறு பாடல்களை தொகுத்திடவேண்டும் என்ற நோக்கத்தில் தேடியதில் கிடைத்த சில பாடல்கள்.....


1. தாயரியாத – அரங்கேற்ற வேளை
2. யூ அண்ட் ஐ (You and I) – நாடி துடிக்கிதடி
3. ஆண் பிள்ளை என்றால் – என் ஜீவன் பாடுது
4. எங்கிருந்தோ என்னை – பிரம்மா
5. சம்போன்னு சொல்லிவந்த – டிசம்பர் பூக்கள்
6. மஞ்சக்குருவி மஞ்சக்குருவி – பிக்பாக்கெட்
7. மாமாவுக்கு குடும்மா – புன்னகை மன்னன்
8. மாமாவுக்கு மயிலாபூருதான் – வேலைக்காரன்
9. நிலவு வரும் நேரம் – ஜகன் மோகினி
10. கறவமாடு மூணு – மகளிர் மட்டும்.......

                        
                          இன்னும்  இதுபோன்று    எவ்வளவோ  சுவையான செய்திகளை  சொல்லிக் கொண்டே போகலாம்.  மீண்டும் ராஜாவின் பாடல்களை அசை போடுவோம்.      
                  
                                       
   
                     ' நிறம் மாறாத பூக்கள்  '  படத்தின் பாடல்கள்  எளிதில் மறக்கக் கூடியவையா என்ன!?  ஒவ்வொன்றும் மணி மணியான பாடலல்லவா!  பாரதிராஜாவின்  படம் என்ற பிரமிப்பும் எதிர்பார்ப்பும் கூடுதலான  கவர்ச்சியை அந்தத் திரைப்படத்திற்குத் தந்தது.  பாடல்கள் அத்தனையும் அமுது.


                           ' ஆயிரம் மலர்களே மலருங்கள்  '  பாடல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் கூட மனசுக்குள் மத்தாப்பாய் விரிகிறது.  இப்போது நினைத்தாலும் மனசை மயக்கும் அந்த ஆரம்ப ஹம்மிங் ரீங்காரமிடுகிறது.  கண்ணதாசன் வரிகளில் மலேசியா வாசுதேவன், ஜென்சி,  ஷைலஜா  குரல்களில் ஒலிக்கும் என்றும் அழியாத இனிய கானம்.  சிறு வயதிலேயே இதயத்தின் ஆழத்தில் இறுக்கமாக பதிந்து போன பாடல்.

   ' சுத்த தன்யாசி ' ராகத்தில்  இளையராஜா  கொடுத்த இசை இப்போதும் எப்போதும் தேனிசைதான்.   ஹம்மிங் ஆரம்பிக்கும்போதே  புதிய உலகத்திற்குள் ராஜா  நம்மை கூட்டிச் சென்று சேர்த்து விடுவார். அவ்வளவு அழகான ஹம்மிங் . ஜென்சி  குரலில்  போதையூட்டும்!

                              

                               முதன்முதலாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவை விட்டு வெளியில் வந்து  ' என்றென்றும் ராஜா ' என்ற தலைப்பில் ஒரு பிரமாண்டமான Music concert  கொடுத்த இளையராஜா இந்தப்  பாடல் அமைந்த விதத்தையும்  கண்ணதாசனைப் பற்றியும் சுவையாக பேசியிருப்பார்.

             
                               ' மாட்டு வண்டி போகாத ஊருக்கெல்லாம் பாட்டு வண்டி போக வைத்தவர் கண்ணதாசன் அவர்கள். அவர் இந்தப் பாடலை எழுதிய அனுபவத்தை பகிருங்கள் ' என  நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க , இளையராஜா அவர்கள்  போகிற போக்கில் சுவையாக சொன்ன செய்தி.

                      '  கவிஞர் மாதிரி இந்த உலகத்தில் ஒரு கவிஞர் இல்லை.   ஏன்னா ...கவிதை எழுதுவது வேறு ...போடும் மெட்டுக்கு எழுதுவது என்பது வேறு.

                                  இந்தப் பாடலை கம்போஸ் செய்ய எனக்கு நேரமில்லாமல் இருந்த நேரத்தில் ஒரு ரீரெக்கார்டிங் வைத்திருந்தேன். கவிஞர் ஏழு மணிக்கு வருவது ரொம்ப கஷ்டம் . பத்து மணிக்குத்தான் வருவார்.  அண்ணா எனக்கு background  score  போய்க் கொண்டிருக்கிறது.   தயவு செய்து  கொஞ்சம் முன்னாடியே நேரத்துக்கு வந்து விடுங்கள் என்றேன்.

                         
                               டியூன் கம்போஸ் செய்யவில்லை. பாரதிராஜா பாடலின் சூழலை சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் கண்ணதாசன் ஏழு மணிக்கு வந்து விட்டார்.  நான் ஆறு மணிக்கு இருக்கணும்.  டியூன் கம்போஸ் முடித்து அவரிடம் மெட்டைப் பாடிக் காட்டுகிறேன்.  Situation என்ன என்று கேட்டார்.  அவர் கேட்கும்போதே நமக்கு எரிச்சல் வருவது போலத்தான் கேட்பார். டைரக்டரை  கண்டு கொள்ளவே மாட்டார்.

        
                                   பாடலின் சூழல் என்ன என்று கேட்டு விட்டு  சிகரெட் பிடிப்பார்.  பக்கத்தில் ash tray இருக்கும் . situation  கேட்டுவிட்டு '  தூ ' என்று துப்புவார்.  situation க்கு துப்புகிறாரா நிஜமாகவே துப்புகிறாரா என்று தெரியாது. துப்பிவிட்டு , ' டியூன் போட்டிருக்கியா இல்லாட்டி பாட்டு எழுதணுமா  ? ' என்று கேட்டார்   டியூன் போட்டிருக்கிறேன் என்று சொன்னேன்.  பாடு என்றார். மெட்டைப் பாடினேன்.  'ஆயிரம் மலர்களே மலருங்கள் ' என்று உடனே ஆரம்பித்தார்.

                             நான் பாடிக் காண்பித்ததற்கும் அவர் சொன்ன வார்த்தைகளுக்கும்   பொருத்தமே இல்லாத டெம்போவில் சொன்னார்.  நான் பாடிக் காட்டுவதற்குள் அவர் சொல்லி முடித்தார். எப்படி இந்த வார்த்தைகள் சேரும் என்று நான் யோசித்துக்  கொண்டிருப்பேன்.  அடுத்ததைப்  பாடு என்றார்.  பாடினேன். ' அமுத கீதம் பாடுங்கள் '  என்று சொல்லிவிட்டு 'அடுத்து ' என்றார்.  அடுத்தடுத்து  வார்த்தைகள் வந்து விழுந்தன.  மெட்டுக்கு அப்படியே பொருந்தின.  பாட்டு எழுத யோசிக்கவே மாட்டார்.  அவர் யோசித்து நான் பார்த்ததேயில்லை.  நான் music எழுதுவது போலவே அவர் பாட்டு எழுதி போட்டு விடுவார்.

                             இதுபோல instant  ஆக கவிதை எழுதக்  கூடிய கவிஞர்கள் யாருமில்லை.   நானும் பல  பேரிடம் சேர்ந்து பாட்டு அமைத்திருக்கிறேன்.  கண்ணதாசன் போல கவிஞர்  யாருமில்லை.  " 

                                          

                                                
    
                              அதே படத்தில் ' இரு பறவைகள் மலை முழுவதும்  இங்கே இங்கே பறந்தன '  என்ற பாடல் எப்போது கேட்டாலும் எனக்கு சிறகு முளைக்கும். மகிழ்ச்சியான  தருணங்களில் எல்லாம் மனசுக்குள் ஒலிக்க ஆரம்பிக்கும்.  ஜென்சியின் வித்தியாசமான குரலில் பல தேவதைகள் சேர்ந்து கானம் பாடும் களிப்பினை  ஏற்படுத்தும்.  


                             மோகன ராகத்தில் கண்ணதாசன் வரிகளில் ராஜாவின் இசை உற்சாகத்தை உற்பவிக்கும் . பாடல்  குரலிசையோடு  ஆரம்பிக்கும்போதே குதூகலம் தொற்றிக் கொள்ளும் .  ஹம்மிங் முடிந்து வயலின் இழுத்து புல்லாங்குழல் சேர்த்து சிந்தசைசரோடு பறவைகளின் ஒலியையும் கலந்து பல்லவி ஆரம்பிக்கும் அழகே தனிதான்.  பல்லவியின் ஒவ்வொரு வரியின் முடிவிலும்  கேள்வி பதில் போல கிடார் பீஸ்  சேர்த்திருப்பது  ராஜாவின் திறமைக்குக்  கட்டியம்  கூறும் . 


                                                                             

                       முதல் இடையிசையில் கிடார் ஒலியின் பின்னணியில் ஒற்றை வயலின் நாதத்தோடு குரலிசையும்  கூட்டிச் சேர்த்திருக்கும் அழகு அற்புதமாக இருக்கும் . பாடல் முழுவதும் கூடவே வரும் குரலிசை  குயில்கள் சேர்ந்திசைக்கும் கற்பனையை கலை வடிவில் வடித்தது போலிருக்கும். கிடார், குரலிசை இரண்டும் பாடலின் பிரதானம்.  பாடல் கேட்டு முடித்தால் பிறக்குமே  ஒரு புத்துணர்ச்சி ...அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. 

சிறு வயதில் கேட்டபோது இருந்த அந்த ஆனந்தம் இப்போதும் சற்றும் குறையவில்லை.  அது இசையின் மகிமையா இளையராஜாவின் மகிமையா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. 
              
                          
 ....................தொடர்வேன்............