Monday 28 November 2016

தீயவை மேல் தீயை வை



                      யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன ...நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் என்ற மனநிலை  கொண்ட மனிதர்களே நம்மைச் சுற்றி அதிகம் இருக்கிறார்கள்.  அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்களை சந்திப்பது அருகி வருகிறது.  ஆசை யாரையும் விடவில்லை.  சின்ன சின்ன சேவைகளுக்குக் கூட சன்மானம் எதிர்பார்ப்பதை பலர் ஒரு குற்றமாகவே பார்ப்பதில்லை.  கிடைக்கும் வரை லாபம் என்றுதான் எண்ணுகிறார்கள்.


                      அரசாங்க ஊழியர்கள் பெரும்பான்மையோர்  தங்கள் சம்பளம் போக வேறு ஏதேனும் பிரதிபலன்கள் எதிர்பார்த்தே வேலை செய்கிறார்கள். தாங்கள் செய்து கொடுக்கும் வேலைகளால் யாருக்கு என்ன பலன் போகிறதோ அவரிடமிருந்து  இன்னொரு ஊதியம் பெற  காத்திருக்கிறார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்புக்கு பல பெயர்கள் சொல்லலாம்.   அன்பளிப்பு,  பரிசு,  நன்கொடை, கூலி, கையூட்டு  என்பவை நாகரீகச் சொற்கள்.   கொச்சையாக  பச்சையாக சொல்வதென்றால் ' லஞ்சம் '  என்ற சொல்லே பொருத்தமானது.  காரசாரமாகச் சொன்னால்  ' பிச்சை  '  என்றும் சொல்லலாம்.


                      லஞ்சம் எப்போது தோன்றியது  என்ற ஆய்வில் இறங்கினால்  கல் தோன்றி  மண் தோன்றா காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்ததாக வரலாறு சொல்கிறது.   அப்போதிருந்து இப்போது வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து  பெரும் பூதமாய் உருமாறி  விட்டது.  சட்டங்கள் இட்டு அதை ஒடுக்க  நினைப்பது  சல்லடை போட்டு நீரைத் தடுக்க நினைப்பது போலத்தான்!   மாற்று வழி யோசிப்பதே மாபெரும் வலி.


                       திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவிஞன் எழுதி விட்டுப் போனது சத்தியமான வாக்கியம்.   லஞ்சம் கொடுப்பவன்  ' கொடுக்கக் கூடாது ' என்று  முடிவெடுக்க வேண்டும் ;  லஞ்சம் வாங்குபவன்  ' வாங்கக்  கூடாது  '  என்று உறுதி எடுக்க வேண்டும்.  இந்த இரண்டுமே சாத்தியப்படாதபோது  எந்த வழியில் அதை ஒழிப்பது?  அதற்கான தீர்வு வெகு தொலைவில் இருக்கிறது. தேட வேண்டும்.


                         லஞ்சப்பணம்  வாழ்க்கையில் நிம்மதியை தக்க வைக்குமா என்பது கேள்விக் குறியே!   அறமற்ற செயல்களிலிருந்து வரும் எந்தப் பொருளும் நிலைப்பதில்லை.  லஞ்சத்திற்கு மேல் லஞ்சம் வாங்கிய ஒரு மாநகராட்சி அதிகாரி தன்  மனைவிக்கு நிறைய நகைகள் சேர்த்து வைத்தார். நிறைய சிகரெட்டும் பிடித்ததால் திடீரென நோய்வாய்ப்பட்டார் .  இரண்டு வருடமாக நோயுடன் போராடியதில் மருத்துவமனைச் செலவுக்காக பணம் பறந்தோடியது.  மனைவியின் நகைகள் கரைந்து போயின. வட்டிக்கு பணம் வாங்கி செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் செத்தும் போனார்.


                        ' வாங்கிய லஞ்சத்துக்கு மேலே வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு கடவுள் அவரை கொண்டு போயிட்டான் ' என்று பலரும் அப்போது பேசிக் கொண்டார்கள். தர்மம் தலை காக்கும் என்ற மூத்தோரின் மொழி சற்று புரியலாயிற்று.  பலருக்கும் கொடுத்தால் நமக்கும் கிடைக்கும்;  பலரிடமிருந்து  எடுத்தால் நம்மிடமிருந்து எடுக்கப்படும் .  அதுதானே உலக நியதி.

             
                           பெரும்பான்மையான அரசியல்வாதிகள் லட்சியவாதிகளாக இருக்கிறார்களோ இல்லையோ லஞ்சவாதிகளாக இருக்கிறார்கள்.  அமைச்சர் முதல் அதிகாரி மற்றும் அடிமட்ட ஊழியன் வரை  லஞ்சத்தில் ஊறிக் கிடக்கிறார்கள் . லஞ்சம்  புற்று நோயை விட மோசமாக புரையோடிக் கிடக்கிறது.


                          2015 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 180 நாடுகளில் ஊழல் குறைவான  10  நாடுகளின்  பட்டியலும்  ஊழல் அதிகமான  10  நாடுகளின் பட்டியலும் தரப்பட்டுள்ளன.


             

                       

                             
   
   
                          கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா ஊழல் நாடுகளின் வரிசையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்துள்ளது.

   


     கடந்த பத்து ஆண்டுகளில் 2011 ஆம் ஆண்டில் ஊழலில் 95 ஆவது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா தற்போது 76 ஆம் இடத்திற்கு வந்துள்ளது. 


                                    லஞ்சமும் ஊழலும் குறைவான நாடுகள் வரிசையில் ஐஸ்லாண்டும்  நியூஸிலாந்தும்  முதல் இடத்திற்கு மாறி மாறி வந்துள்ளன.  கடைசி இடத்திற்கு பெரும்பாலும்   சோமாலியா  என்ற நாடே வந்துள்ளது.   



                                   சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள்  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தவுடன் நாடே அதிர்ந்தது.  மக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் நின்று சிரமப்பட்டனர்.   நாட்டின் நன்மைக்காக கொஞ்சம் சிரமப்படுவதால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்று மத்திய அரசு சொன்னது.  


                                  சரி. ஏன் இந்த திடீர் நடவடிக்கை என்ற கேள்விக்கு  கறுப்பு பணத்தையும் கள்ளப்  பணத்தையும்   ஒழிப்பதற்கான  வேட்டை என்று  பிரதமர் பதிலளிக்கிறார்.  நான்கு மணி நேரத்திற்குள்  பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் எல்லா பண முதலைகளுக்கும் பணத்தை மாற்றும் அவகாசம் இல்லாமல் போனது. பீதியில் பேதி கண்டிருப்பார்கள்.  


                                ஊழலை ஒழிக்க இது ஒரு நல்ல நடவடிக்கை என்று மக்கள் ஏற்றுக் கொண்டாலும் பலவித சிரமங்கள் ஏற்பட்டதால்  கோபப்படுகிறார்கள்.  எதிர்க் கட்சிக்காரர்கள்  மோடியின் நடவடிக்கையை விமர்சனம் செய்கிறார்கள்.  அதிக குறைகளைச் சொல்கிறார்கள்.  பாராளுமன்றத்தில் கூச்சலும் எதிர்ப்பும் செய்கிறார்கள். 


                                  எல்லாவற்றையும் பொறுமையாக சந்திக்கும் மோடி அவர்கள் ஒரு அரசு விழாவில் சொன்னதாவது;     '   ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், அரசு முன்னேற்பாடு இல்லாமல் இந்த விஷயத்தில் இறங்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.  இது உண்மையான காரணமாகத் தெரியவில்லை. அவர்களின் வேதனைக்கு காரணமே , பதுக்கிய பணத்தை பாதுகாக்க அரசு போதிய அவகாசம் அளிக்கவில்லையே என்பதுதான். 


                                    இந்த விஷயத்தில் 72 மணி நேரம் அவகாசம் கொடுத்திருந்தால் இப்போது எதிர்ப்பவர்கள்  என்னை வாயார புகழ்ந்திருப்பார்கள்.  மோடி போல் யாருமில்லை என வாழ்த்தியிருப்பார்கள். இப்போது ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக நாடு மிகப்  பெரிய போரில் ஈடுபட்டுள்ளது.  இந்தப் போரில் சாமானிய மக்கள்தான்  போர் வீரர்கள். 


                                  கடந்த 70 ஆண்டுகளில் சட்டமும் அரசியலமைப்பும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் நாடு ஊழலில் சிக்கியுள்ளது.   ஊழல் தொடர்பாக சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையிலும் இந்தியாவின் பெயர் அழுத்தமாக பதிந்துள்ளது . ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்தால் நாம் எப்படி பெருமை கொள்ள முடியும்?  இதன் காரணமாகவே ரூபாய் நோட்டுத் தடை என்ற மிகப் பெரிய முடிவை எடுக்க வேண்டி இருந்தது. ' 

                                
                                     சில சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கறுப்புப் பணம் என்பதே கிடையாது என்கிறார்கள்.  கறுப்புப் பொருளாதாரம் என்பதுதான் சரி . அதில் புழங்கும்  பணத்திற்கு கறுப்புப் பணம் என்று வேண்டுமானால் பெயர் சொல்லிக் கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து .  ஹவாலா பணம் என்பதும் ஏறக்குறைய கறுப்புப் பணம் அல்லது கள்ளப்  பணம்தான்.  


                                      டெல்லியில் உள்ள ஒரு தீப்பெட்டி வியாபாரி சிவகாசியில்  இருந்து ஒரு மொத்த வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய்க்கு  சரக்கு  வாங்கி ,  பணத்தை மதுரையில் உள்ள ஒரு வியாபாரியிடம்  வாங்கிக் கொள்ளச் சொல்லுவார்.  மதுரையில் உள்ள  அந்த வியாபாரி டெல்லியில் உள்ள மின் சாதன பொருட்கள்  விற்கும் ஒரு  கம்பெனியிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு சரக்கு  வாங்குவார்.  பணத்தை  டெல்லியில் உள்ள தீப்பெட்டி வியாபாரி மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு கொடுத்து விடுவார்.   வங்கிக்குச் செல்லாமலேயே பணம் பரிமாறப்பட்டு விட்டது .  பலவிதமான வரி விதிப்புகளுக்குள் சிக்காமல் பெரிய அளவில் வியாபாரம் நடந்து முடிந்து விடுகிறது.  அரசுக்கு  வர வேண்டிய வரி வருவாய் இங்கு தடுக்கப்படுகிறது. 


                                     ஹவாலா பணம் என்பது இப்படித்தான் சுழற்சிக்கு உட்படுகிறது.  இது ஒரு உதாரணம் . இது போல லட்சக்கணக்கான வியாபாரங்கள் இப்படித்தான் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.  கட்டவேண்டிய பணம் எல்லாம் கட்டுக் கட்டாக  அறைகளுக்குள் கட்டி வைக்கப்படுகிறது. அரசுக்கு நட்டமேற்படுத்தும் இந்த மாதிரியான செயல்களைக் கட்டுப்படுத்த எல்லாப் பணப் பரிமாற்றங்களும் டிஜிட்டல் தொழில் நுட்ப முறைப்படி மட்டுமே செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எல்லாப் பணமும் வங்கி வழியேதான் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது .  இணையதள தொழில் நுட்பம் மூலம் பணப்  பரிவர்த்தனைகள்  செய்யும்படி பொது மக்களும் வியாபாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ஊழலை ஒழிக்க இது ஒரு வழி என்று மத்திய அரசு கருதுகிறது.  சாத்தியமா என்பதை காலம் சொல்லும்.  


                                     மோடி அவர்கள் எடுத்த நடவடிக்கையை மக்கள் விமர்சித்தாலும் பெரியதொரு வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.  மோடி அவர்கள் இணையதளத்தில் மக்களின் கருத்தை எதிர்கொண்டபோது  90 சதவீதம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.  அரசியலில் ஒவ்வொரு பிரதமரும் ஏதாவது ஒரு தடாலடி மாற்றத்தை எடுத்து வந்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில் அது எதிர்க்கப்பட்டாலும் காலப்போக்கில் அந்த முடிவுகள் ஜனநாயக முறையில் நன்மையை உருவாக்கியிருக்கின்றன.  போலவே பிரதமர் மோடி அவர்களின் இந்த தடாலடி முடிவு நாட்டுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.  


                                      காவிரிப் பிரச்சனைக்கு , மீனவர் பிரச்சனைக்கு ஒன்று சேராத எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரூபாய் நோட்டு செல்லாது என்ற திட்டத்தை எதிர்ப்பதற்கு ஒன்று கூடுவது நகைப்புக்குரிய செயலாகவே படுகிறது.  தங்களின் பணத்தை பாதுகாத்துக் கொள்ள முனையும் காரியமாகவே இது பார்க்கப்படுகிறது.  நாட்டின் நன்மை கருதி  கூடும் கூட்டமாக இல்லை.  மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றபெயரில் , ஆடுகள் நனைகின்றன என்று ஓநாய்கள் அழுகின்றன.  ஆனால் உலக நாடுகள் மோடியின் முடிவினை பாராட்டுகின்றன .  புகழாரம் சூட்டுகின்றன.  ஒரு பொருளாதார புரட்சியை இது ஏற்படுத்தப் போகிறது என நம்புகின்றன. 


                                   ஊழலில் மிகப் பெரிய பங்கினை எடுத்துக் கொள்வது லஞ்சம்தான்.  அதை எவ்வாறு ஒழித்தெடுப்பது  என்பது நம்முன் வைக்கப்படும் சவால்.  பிரதமர் அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறார்  என்பது ஆயிரம் டாலர் கேள்வி. 


                                          உயிரினங்களிலேயே பகுத்துணரும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உள்ளதால் நல்லது கெட்டது  அறிந்து வைத்திருக்கிறான். ஆனால் அதுவே ஆபத்தாகவும்  இருக்கிறது.   தீயவைகளை எல்லாம் தெரிந்து கொண்ட மனிதன் அதில்  சுகம் காணும் மன நிலைக்கு  தன்னை மாற்றிக் கொண்டது வருத்தமானது.  நல்லவைகளுக்கு மேல் தீயவைகளே அதிகம் கொட்டிக் கிடக்கின்றன.   நல்ல மனிதருக்குள்ளும் தீய எண்ணங்கள் வெளிப்பட்டு விடுகின்றன.  பெரும் பாவச் செயல்கள் மட்டுமே தீயவை என்று கருத்தில் எடுக்கலாகாது.  அடுத்த மனிதருக்கு இடையூறு செய்யும்  செயல்கள் அனைத்தும் தீயவையே! 


                                        சுரண்டல்கள், ஏமாற்றுகள், பதுக்கல்கள், தீவிரவாதம் , பயங்கரவாதம் , போதைப் பொருள் கடத்தல்கள்  போன்ற எத்தனையோ தீமைகள் இருந்தாலும்   லஞ்சம்தான் அதில் பிரதானம் . எல்லா கொடுமைகளும் அதன் வழியே அரங்கேறுகின்றன.  எல்லா மீறல்களும் அதனை வாசலாகக் கொண்டுள்ளன .  லஞ்சம் வாங்குபவனை விட கொடுப்பவன் குற்றவாளி என நீதிமன்றம் நினைத்தாலும்,  தண்டனை வாங்குபவனுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.  இருவருக்கும் தண்டனை சமம் என்ற சட்டம் உருவானால் லஞ்சம் ஒருவேளை குறையுமோ என்னவோ!?  சட்டங்கள் தானாக உருவாவதில்லை. அரசே உருவாக்க வேண்டும். 


                              லஞ்சத்தை எவ்வாறு ஒழிக்கலாம் என்று அப்துல் கலாம் அவர்கள்  ஒரு சந்தர்ப்பத்தில்  ஆசிரியர்களும் மாணவர்களும் கூடியிருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் , மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது: 
              
          ' நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க, ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு குழந்தையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தந்தை  ஊழல் செய்பவராக இருந்தால், அவரிடம் குழந்தைகள் அன்பாக பேசி அவரது தவறை உணர்த்த வேண்டும். ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளையும், சமுதாயத்தில் ஊழல் செய்வோரின் நிலையையும் எடுத்துக் கூற வேண்டும்.  ஊழல் செய்து வரும் பணத்தை வாங்க மறுத்தாலே, ஒரு குடும்பத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது. 


                                   நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீடுகளில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருக்கலாம். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள்.   துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்). 

                                     இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும். ' 


                                          இரண்டாம் காந்தி என்று அழைக்கப்பட்ட அண்ணா ஹசாரே என்ற  சமூக ஆர்வலர் ஒருவர் திடீரென நாட்டில் எல்லோரும் வரவேற்கும் வண்ணம் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான கோஷங்களை உருவாக்கி  அரசையே ஆட வைத்தார்.    லோக் பால் , லோகாயுக்தா  சட்டங்களைக் கொண்டு வருவதற்கு  மிகவும் பிரயத்தனங்கள்  செய்தார்.  இதுவரை அதையெல்லாம் கொண்டு வருவோம் என்று சொன்ன எந்த மத்திய அரசும் அதற்கான முயற்சியை ஒரு துளியும் செய்யவில்லை.  ஹசாரேவையும்  விலைக்கு வாங்கி விட்டார்களோ என்னவோ அவர் இப்போது  மௌனமாகி விட்டார்.  பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டிருக்கிறார்.   செல்லாத நோட்டுத் திட்டத்தை அவசரமாகக் கொண்டு வந்த மோடி அவர்கள்  லோக் பால் மசோதாவுக்காக சிறு துரும்பும் எடுத்துப்  போடவில்லை என்பது  சற்று நெருடலான உண்மை.  


                                      மனிதனை பயமுறுத்தி வழிக்குக் கொண்டு வர   சாமியையும் பூதத்தையும்  மனிதனே பயன்படுத்தினான்.  இப்போது  இந்த இரண்டுக்கும் மனிதன்  பயப்படுவதில்லை.  கடுமையான சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும்  மட்டுமே பயப்படுகிறான்.   யோசனைகள் ஆயிரம் சொன்னாலும் அதில் ஓட்டைகள் இட்டு வெளியில் வர மனிதனுக்குத் தெரிந்து விடுகிறது.   எனவே லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க  இனி பிறக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத்தான் போதிக்க வேண்டும்.  வளர்ந்ததை வெட்டுவது  கடினம்.  புதிதாய் விதைப்பது  எளிது.  கலாம் அவர்கள் அதனால்தான் மாணவர்களிடம்  போதித்தார். 

                                     
                                        இந்தியாவில் லஞ்சம் ஒழிந்தாலொழிய  நம் நாடு  வல்லரசு ஆகும் என்ற கனவு  கேள்விக் குறியாகத்தான் இருக்கும்.   ஒவ்வொரு  தனி மனிதனும்  லஞ்சம் ஒழிக்கும்   லட்சியம் கொள்ள  வேண்டும்.  ஊழலுக்கு எதிராக  மனதில் உறுதி எடுக்க வேண்டும் . தீயவை மேல் தீயை  வைக்க வேண்டும்.