Thursday, 19 March 2015

இசை ராட்சஷன் - 8


                                                     இசை ராட்சஷன் -  8
                                                 
                                                   (  The  Musical Legend  )

                     
                                      தமிழ்த் திரையிசைக்குள்  இளையராஜா பிரவேசித்தபோது   நாட்டுப்புற இசை மட்டுமே  கொடுத்து வந்ததாக பலர் நினைத்தனர் .   ஆனால்  தனது முதல் திரைப்படத்திலிருந்தே கர்னாடக இசை , மேலை நாட்டு செவ்வியல் இசை , நாட்டுப்புற  இசை மூன்றையும் கலந்துதான்  கொடுத்து வந்திருக்கிறார் . ' கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக ' என்ற தெய்வப் புலவரின் வாக்கினுக்கேற்ப தான் பயின்ற கர்னாடக இசை , மேலை நாட்டு இசையை அதன் வர்ணம் மாறாதபடி கலந்து கலப்பிசையாக கொடுத்த பாடல்கள் ஏராளம் . மேலோட்டமாக பார்த்தால் இளையராஜாவின் பாடல்கள் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும் .  கூர்ந்து நோக்கும்போது கற்றுத் தேர்ந்த வித்தைகளைக்  கலவையாக்கி  சுவை குழைத்து இனிமை கூட்டி புதுமை சேர்த்துக் கொடுத்திருப்பார்.  மண் வாசமும் மக்கள் நேசமும் கொண்ட பல பாடல்கள் அவர் படைப்பாற்றலின் சிகரங்கள் ; நெஞ்சில் பதிந்த பசுமரத்தாணிகள் ; வார்த்தைகளில் வடிக்க இயலா பிரமிப்புகள்.

                                                     


                                  1968 இல் பிழைப்பிற்காக  பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு சென்னையை அடைந்து , மாஸ்டர் தனராஜிடம் மேலைநாட்டு செவ்வியல் இசை பயின்று , டி .வி . கோபாலகிருஷ்ணனிடம்  கர்னாடக இசை கற்று டிரினிட்டி இசைக் கல்லூரி நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று,  கிடார் கருவி பயின்றதில் தங்கப்பதக்கம் பெற்று ,  ஜி . கே. வெங்கடேஷ்  என்ற இசையமைப்பாளரிடம் துணை  இசையமைப்பாளராய் பணியாற்றி அதன் பிறகே  ' அன்னக்கிளி '  படத்திற்கு இசையமைப்பாளராய் பஞ்சு அருணாசலம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார்.  முதல் படமே மிகப் பெரிய வெற்றி . அந்த வெற்றியை அடைய அவர் பல மேடு பள்ளங்களை தாண்டி வரவேண்டியிருந்தது.  ஒரே படத்திலேயே தனது மொத்த ஆற்றலையும் அவர் வடித்துவிடவில்லை.  அவரது இசை வற்றாத ஊற்று , நிற்காத நதி ,  இறைக்காத கேணி , சறுக்காத ஏணி ,  மாறாத அமுதசுரபி ,  தீராத அட்சய பாத்திரம் . இளையராஜாவின் இசை நம் மக்களின் கலாச்சாரத்தோடு கலந்து நிற்கின்ற பண்பாட்டு அடையாளம் . அதனால்தான் ஆயிரம் படங்களையும் தாண்டி போய்க் கொண்டேயிருக்கிறார்.

                     
                            இத்தனை சிறப்புகளை பெற்ற மனிதராக விஸ்வரூபம் எடுத்து இசை ராஜ்ஜியத்தில்  பல இசை விநோதங்களை  படைக்கப் போகிறார் என்பது தெரியாமலே நான் அவர் இசை கேட்டு ரசித்து வளர்ந்து வந்திருக்கிறேன்.

                       1978 இல் எனக்கு கிடைக்கக் கூடிய ' பாக்கெட் மணி ' சேமிக்கும் பழக்கம் என்னிடம் இருந்தது . எனது அண்ணனிடமிருந்து கற்றுக் கொண்டேன் எனது மூத்த அண்ணன் என்னையும் இளைய அண்ணனையும் அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க கிளம்பினார். சினிமா முடிந்து மாலை வேளையில் ஹோட்டல் , பிறகு நடையோரக் கடைகளில் ஷாப்பிங் என்று அது ஆனந்தமான நேரம்.  ஒரு முறை நானும் எனது சேமிப்பை எடுத்துக் கொண்டு அண்ணன்களை  அது போலவே அழைத்துக்கொண்டு சென்றேன் . அண்ணன் காட்டிய வழியில் சினிமா, ஹோட்டல் , பிளாட்பார ஷாப்பிங் இத்யாதி என்று அதைப்  போலவே செய்தேன் . அண்ணன் என்ன வாங்கினாரோ அதைப் போலவே சின்னச்  சின்ன பொருட்கள் வாங்கினேன் . அவர் என்ன செய்தாரோ அதையே நானும் செய்தேன் . என் பிள்ளைகளும் இப்போது அப்படித்தான் இருக்கிறார்கள். மூத்தவள் என்ன செய்தாலும் இளையவள் பின்பற்றுவாள். அவளுக்குப் பிடித்தால் இவளுக்கும் பிடிக்கும் . இது என்ன பரம்பரை குணமா !?  பிள்ளைகளின் செய்கைகள் எனக்கு பின்னோக்கிப் போக தூண்டுகிறது .

                         
                                    அப்படி நான்  அண்ணன்களை  அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள  குளிரூட்டப்பட்ட ஒரு திரையரங்கிற்குச் சென்றேன் . ஒரு சில ஏ.சி தியேட்டர்களே அப்போது இருந்தன .  அந்தக் காலகட்டத்தில் ஏ .சி  அரங்கத்தில் படம் பார்ப்பதை பெரிய கௌரவமாக நினைப்போம் .  நான் ஏ.சி தியேட்டரில் படம் பார்த்தேன் என்பதை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொள்வேன் . அதை ஆச்சரியமாக கேட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்.   ஏ.சி தியேட்டரில் அந்தப் படம் பார்த்து மிரண்டு போனேன் . படமும் இசையும் என்னை வெகுவாக மிரட்டியது.  அந்தப் படம்,  '  சிகப்பு ரோஜாக்கள் ' .


                         பாரதிராஜாவின் மூன்றாவது படம். ' கிராமத்துப் பின்னணியை விட்டால் பாரதிராஜாவிற்கு ஒன்றும் தெரியாது ' என விமர்சனம் வந்தவுடன் , 'எனக்கு நகரச் சூழல் வைத்தும் படம் எடுக்கத் தெரியும் ' என சவாலாகவே எடுக்கப்பட்ட திரைப்படம் . அதை முதல் படமாக பாரதிராஜா எடுக்க நினைத்தார். ராஜ்கண்ணு அவர்கள் வேறு கதை எதிர்பார்த்ததால் பதினாறு  வயதினிலே நமக்கு கிடைத்தது .  இல்லாவிட்டால் காலத்தின் கோலம்  மாறியிருக்கும் .  சிகப்பு ரோஜாக்கள் ஏறக் குறைய ஆங்கில சினிமாவிற்கு நிகராக எடுக்கப்பட்ட திரைப்படம் . வெற்றிப்படம். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பங்கு 50 சதவீதம் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது . அப்பப்பா ! என்ன ஒரு இசை ஆக்ரமிப்பு !

                     
                            அந்த  நேரத்தில் உள்ளடக்கமான குளிரூட்டப்பட்ட அரங்கில் படம் பார்த்து மிரண்ட அனுபவம் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கிறது. இளையராஜாவின் பின்னணி இசையை நீக்கிவிட்டு படம் பார்த்தால் எந்த மிரட்டுலும் தெரியாது.  படத்திற்கு உயிரே இளையராஜாவின் இசைதான்!  இந்தப் படத்திலிருந்துதான் ராஜாவின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரு குறிப்பிட்ட  இசைத்துணுக்கை  பின்னணியாக படம் முழுவதும் ஆங்காங்கே வருமாறு இசைத்திருப்பார். கமலஹாசன் சாதாரணப் பார்வை கொண்டு பார்க்கையில் மென்மையாகவும் விஷமப் புன்னகையுடன்
பார்க்கையில் வித்தியாசமான மிரட்டல் இசையும் கொடுத்திருப்பார். ஒரு திகில் படம் பார்க்கும் அனுபவம் இசையினால் ஏற்பட்டது.  படத்தின் பிற்பாதியில் மிரட்டும் இசையின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்லும் .
                                                 

                              கிளைமாக்ஸ் காட்சிகளில் படபடப்பும் பரபரப்பும் என்னைத் தொற்றிக் கொண்டது. தோட்டத்தின் மண்ணுக்குள்ளிருந்து கை ஒன்று நீள்வதைப் பார்க்கும் நாயகி அலறிக்கொண்டே ஓடுவதும்  ரத்த வெறி கொண்ட பூனை துரத்துவதும்  நாயகனும் அவளை கொலை செய்ய விரட்டுவதுமான பரபரப்பான காட்சிகளில் பூனையின் அலறல் சப்தம் கலந்து நூறு  வயலின்கள்  வாசிக்கப்படும்  பின்னணி இசை கொடுத்து காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருப்பார் இளையராஜா. மனதை விட்டு நீங்காத அனுபவம் . திகில் படங்கள் பார்த்தால் கால்களைத் தூக்கி மேலே வைத்துக் கொள்வேன் . காலை ஏதோ ஒன்று பிடித்து இழுத்து விடுமென்று நான்தான் அப்படி பயப்படுகிறேன் என்று பார்த்தால் பக்கத்தில் அண்ணன்களும் காலை தூக்கி வைத்தபடி படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

                                அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்  மட்டுமே !  ' இந்த மின்மினிக்கிக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது ...'  என்றொரு அழகான உற்சாகமான டூயட் பாடல். வாசுதேவனும் ஜானகியும் சேர்ந்து பாடி கலக்கியிருப்பார்கள். இனிமையான மெலடி . கேட்பவருக்கு உற்சாகம் உடனே தொற்றிக் கொள்ளும்  .இசையமைப்பு. வயலினால் இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். கண்ணதாசனின் வார்த்தைச் சிக்கல் இல்லா வரிகள் . சங்கராபரணம் என்ற ராகத்தை அடிப்படியாகக் கொண்டு ஏக தாளத்தில்  வடிவமைக்கப்பட்டப் பாடல் . பாட்டின் இசைக்கேற்றவாறு காட்சியமைப்பிலும் பாரதிராஜா பின்னி எடுத்திருப்பார். இளமை கொலுவிருக்கும் கமலஹாசன், ஸ்ரீதேவி இருவரின் காதல் ஆட்டமும் ஓட்டமும் பேசுவதும் சிரிப்பதும் சுற்றுவதும் அழகிய காட்சியாக விரிக்கப்பட்டிருக்கும். பாரதிராஜாவும் இளையராஜாவும் இணைந்தால் மக்களையெல்லாம் இன்பக்கடலில் மூழ்க வைத்து எழ வைப்பதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் . அப்போது இருவரும் இணைந்தால் வெற்றி ஒன்றைத் தவிர வேறில்லை .


                               '  தோட்டத்திலே பல பூக்கள் உண்டு ..நீதானே சிகப்பு ரோஜா ..' என்ற ஆண் குரலுக்கு , ' இன்றும் என்றும் என்னை உன்னுடனே ...நான் தந்தேன் என் ஆசை ராஜா ...' என்று பெண் குரல் பதில் பாட ,  ' மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன் ... ன ...ன...ன ...ன ..ன  இனி தடை என்ன  அருகினில் இருக்கிறேன் ..'  என்று கேள்வி பதிலாக மாற்றி மாற்றி இருவரும் பாட கடைசியில் , ' னா ன ன்ன... னா ன ன்ன... னா ன ன்ன... னா ன ன்ன ..னான ..னான..னா ' என்ற ஹம்மிங்கோடு சரணம் முடியும் . ஹம்மிங் வரும் இடத்தில் வார்த்தைகள் போட்டு நிரப்பி இருக்கலாம் . ஆனால் ஹம்மிங் வைத்து முடிப்பது புதுமையாக இருந்தது. சரணம் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் , விதி எல்லாம் வேறுபடுத்தி இசையமைப்பது  இளையராஜாவின் புது முயற்சி. இரண்டாவது இடையிசையில் ஜானகியின் ஹம்மிங் நம்மை வேறுலகம் கூட்டிச் செல்லும் பாட்டின் முடிவில் ஜானகி கலகலவென சிரித்து முடிப்பது நமக்கும் புன்னகை பூக்க வைக்கும் .

                                           

                                பாடகர்கள் பாடுவதோடு  பாட்டில் நடிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் . இல்லாவிடில் பாடலுக்குத் தேவையான உணர்ச்சிகள்  காணாமல் போய்விடும் . டி.எம்.எஸ் , பாலு ,  ஜானகி ,  சுசீலா ,  எல்.ஆர்.ஈஸ்வரி  போன்ற பாடகர்கள் பாடும் பாட்டினில் அத்துணை உணர்ச்சிகளையும்  வெளிப்படுத்துவதில் முக்கியமானவர்கள்.  ' அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..' என்ற பாடலுக்கு டி.எம்.எஸ் அவர்கள் ஒலிப்பதிவுக் கூடத்திற்குள்ளேயே ஓடி ஓடி மூச்சு வாங்கி தத்ரூபமாக பாடினார்  என்பது ஒரு உதாரணம் .  போலவே ஜானகி அவர்கள் பாடலில் நடிப்பது மட்டுமல்லாது ஐந்து வயது குழந்தை போலவும் என்பது வயது பாட்டி போலவும்   குரல் மாற்றிப் பாடுவதில் வல்லவர்.  பாடிக்கொண்டே நடிப்பது நடித்துக் கொண்டே பாடுவது இரண்டுமே கடினமானது. குரல் மாற்றிப் பாடுவது அதை விட கடினமானது. ஆனால்  பாட்டில் சிரிப்பதும்  அழுவதும் ஜானகி அவர்களுக்கு  சுலபமாக வரும்.


                              ' நினைவோ ஒரு பறவை ' இன்னொரு சுகமான கீதம் .   வாலியின் வைர வரிகளில் கமலஹாசன் மற்றும் ஜானகி சேர்ந்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார்கள். திசுர  நடையில்  மென்மையாய் ஆரம்பித்து சுகமாய் பயணம் செய்யும் பாடல். காட்சியமைப்பையும்  பாரதிராஜா அழகிய கவிதை போலவே வடித்திருப்பார்.  பாடியவர்களா அல்லது இசைக்கருவிகளா எது நமை தாலாட்டுகிறது என்பதைச் சொல்ல முடியாத அளவிற்கு இசையின் வலிமை இருக்கும் .  '  ஹும் ...ஹும் ...' என்று ஜானகி கிடார் கார்டுகளுடன் காதல் வழிந்தோடும்  ஹம்மிங் கொடுத்து , ' நினைவோ ஒரு பறவை  ' என்று  ஆரம்பிக்க , கமலஹாசன்  '  பா ...ப..ப .பாப ...பா.. ' என்று   உச்சஸ்தாயில் ஹம்மிங்  கொடுத்துக் கொண்டே வர , ஜானகி பல்லவி பாடி முடிக்க , ஹம்மிங் முடித்து கமல்  பல்லவியை மீண்டும் பாட ஆரம்பமே அமர்க்களமான இசையோடு அமையும் .


                               இந்தப் பாடலுக்கு இடையிசை அற்புதமானது . ஒரு டிரம்பெட்  கருவி ஒலிக்கப்படும்போது  கோவில் மணியோசை இருமுறை சேருவது  வார்த்தைகளில் வடிக்க இயலா கலவை. அருமையான கற்பனை . இசைக்கருவிகளின் நாதம் ஒன்றின் மேல் ஒன்று மேவி வரும்  லாவகம் இளையராஜாவின் சிறப்பு . இசைக்கருவிகளின்   INTERPRETATION  , SUPERIMPOSITION  என்பது அந்த வயதுக்கு எனக்கு புரிந்திராவிட்டாலும் இளையராஜாவின் இசை மாயத்தை கேட்டுணரும் ஞானம் இருந்தது. அப்போதே இசையில் அவர் காட்டிய வித்தை  இப்போது இன்னும் தெளிவாக தெரிகிறது .


 ஆண்          ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்

பெண்          அதுவல்லவோ பருகாத தேன் அதை  இன்னும் நீ பருகாததேன்

ஆண்         அதற்காகத்தான் அலைபாய்கிறேன்

பெண்         வந்தேன் தரவந்தேன்

                           பெண்        பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ

ஆண்       அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்

பெண்       மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

ஆண்       நீ தான் இனி நான் தான்


                             ஆண்  குரலும் பெண் குரலும் கேள்வி பதிலாய்  பாடிக்கொண்டே வர இறுதியில் பெண் பாடி ஆண் ஹம்மிங் கொடுப்பதும் ஆண் பாடி பெண் ஹம்மிங் கொடுத்து முடிப்பதும் கேட்பதற்கு அலாதி ஆனந்தமாக இருக்கும் . பல்லவி எப்படி ஆரம்பித்ததோ அப்படியே இறுதியிலும் முடியும்.  கமலஹாசனுக்கு இது அவர் பெயர் சொல்லும் பாடல் . இந்தப் பாடல் ஆரம்பித்து  இறுதிவரை  ஏதோ படகொன்றில் மெதுவாக ஆடி காற்றில் நகரும் அனுபவமாய் வயலின் இழைத்து இசைத்துப் பாடலை நகர்த்தும் விதத்தில் இளையராஜா உயர்ந்து நிற்பார். அபார கற்பனைத் திறன்!


                             அதே வருடத்தில்  ' ப்ரியா ' என்றொரு திரைப்படம் வெளிவந்தது. இளையராஜாவின் இசையும் பாடல்களும் முதன்முறையாக ஸ்டீரியோபோனிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. அதுவரை  'மோனோ ரெக்கார்டிங்' என்ற சாதாரண பதிவு முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல்கள் எல்லாம் மயக்கும் பாடல்களாக கொடுத்து வந்த இளையராஜா  புதிய தொழில்நுட்பத்திலும்  மனதுருக்கும் பாடல்களைக் கொடுத்தார்.

                                           

                                இசைப் பதிவில் புது உலகம் பிறந்தது. பாடல்களில் பதிவு செய்யப்பட்ட   இசைக் கருவிகளின்  ஒலி அழகாக பிரித்துக் கொடுக்கப்பட்டது.
பாடல்களின் ஓசை நயம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டது. சின்னச் சின்ன இசைக் கருவிகளின் சப்தம் கூட அழகாக கேட்கும் வண்ணம் கொடுக்கப்பட்டது.  இப்போது அதை விட பெரிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் அந்தக் காலத்தில்  முதன்முதலாக ஸ்டீரியோ  ரெகார்டிங்  கேட்டபோது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் நினைவிருக்கிறது. பாடங்கள் படித்தது தேர்வு எழுதியது எல்லாம் நினைவில் இல்லை.


                                      ' ப்ரியா ' திரைப்படம் பார்த்தது நன்றாக நினைவில் உள்ளது.
ஒரு மதிய நேரத்தில், சுட்டெரிக்கும் வெயிலில், வியர்வைக் கசகசப்பில் கூட்டத்தில் முட்டி மோதி, டிக்கெட் கொடுக்கப்படும் கவுண்டர் அருகே கஷ்டப்பட்டு சென்று வாங்கி, நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, சட்டையெல்லாம் கசங்கிப் போய் கிழிந்து போய், தியேட்டருக்குள்ளே நுழைந்து ரசிகர்களின் விசில் சத்தத்தோடு படத்தைப் பார்த்தேன்.    அப்படி படம் பார்க்கும் சுகமே அலாதி சுகம் . எதையோ சாதித்த உணர்வு . சுகமான நினைவு.


                                       படத்தில் முதல் பாடல் ' டார்லிங் டார்லிங் டார்லிங்  ' . வெள்ளைக்குயில் என்று எஸ்.பி.பி அவர்கள் அன்புடன் அழைக்கும் சுசீலாவின் இனிய குரலில் ஆரம்பிக்கும். முதல் பாட்டுக்கே  விசில் சத்தம் பறந்தது.  ரஜினி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஸ்ரீதேவிக்கும் கிடைத்தது . கதாநாயகிகளை  திரையில் முதலில் காட்டும்போது கைதட்டல் கேட்பதை மதுரையில்தான் பார்த்திருக்கிறேன் . பாடலின் பல்லவி ஆரம்பிக்கும் முன் ட்ரம்பெட் ஒலியுடன் அட்டகாசமாக வயலின்,  ட்ரிப்பில் பாங்கோஸ் சேர்ந்து முதல் BGM ஆரம்பிக்கும் .  BoneyM  குழுவினரின் ஆல்பத்தில் வந்த பாடலின் முதல் வரியை அகத் தூண்டலாக எடுத்துக் கொண்டு  இந்தப் பாடலை வடிவமைத்தார் இளையராஜா . ஏக தாளத்தில் அமைத்த சுவாரசியமான பாடல் . படத்தில் எல்லா பாடல்களையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருக்கிறார் .  தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் . அவருக்கு தன் நன்றிப் பூக்களை காணிக்கையாக அழகிய இசை மாலையாக பின்னிக் கொடுத்திருப்பார் இளையராஜா.  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.

                                           

.                                    
                                       வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படத்திற்குத் தனித்த சிறப்பான இசையை இதற்கு முன்னர்  எம்.எஸ்.வி அவர்களிடம் கண்டிருக்கிறேன் .  இளையராஜாவும் அவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்திருப்பார்.    வெளிநாடுகளை சினிமாவில் காட்டும்போதே பின்னணி இசைக்கென்று புதிய பரிமாணம் கிடைத்துவிடும் . இதுவரை கேட்டிராத இசைக்கருவிகளின் நாதம் ஒலிக்கும். வெளிநாட்டு இசை இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை இசையமைப்பாளர்கள் உருவாக்கினார்கள்.  ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாரம்பரிய இசை ஒன்று உண்டு. அதைத்தான் வாசித்தளித்தார்களா  இல்லை கற்பனையா என்ற  ஆராய்ச்சி செய்ததில்லை . கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் . பிரியா படத்தின் பின்னணி இசையும் அப்படித்தான் இருந்தது. இப்போதுள்ள படங்களில் வெளிநாடுகளை காட்டும்போது பிரத்தியேக இசையெல்லாம் கொடுப்பதில்லை.


                                          ' ஹேய் ...பாடல் ஒன்று ...ராகம் ஒன்று '  என்ற பாடல் வித்தியாசமான தாள நடையில் ஜேசுதாஸ் ஜானகி அவர்களின் குரல்களில் காப்பி ராகத்தில் திசுர நடையில் ஒலிக்கும் என்றும் அழியா இனிய கானம் . காலத்தால் அழிக்க முடியா காதல் கீதம். கிடார் கார்ட்ஸ் ஆரம்பித்து ஜானகி ஹம்மிங் கொடுக்க ஜேசுதாஸ் ஹம்மிங் தொடர ஆரம்பமே அமர்க்களமாக இரு தேவதைகளின் தேவ கானம் போலவே இருக்கும். பாடலின் இடையிசையில் ஷெனாய்  பயன்படுத்தப்படிருக்கும். ஷெனாய் ஒலிக்கப்படும்போது  தாள நடையும் மாறி வரும் .  பொதுவாக இந்த ஷெனாய் சோக கீதங்களுக்கே இசைக்கப்படும் இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டு  வந்தது. சந்தோசமான கீதங்களுக்கும் அதை இசைக்கச் செய்தவர் இளையராஜா .  இந்தப் பாடல் மட்டுமல்ல . அதன் பிறகு வந்த ஏராளமான சந்தோசப் பாடல்களில் ஷெனாய் பயன்படுத்தியிருப்பார் .

                                                     

                                           சிறு வயதில் பாடல் கேட்டபோது அதைப் பற்றி எதுவும் அறிந்ததில்லை. நாட்டில் முக்கியமான தலைவர்கள் மறைந்து போனால் வானொலியில் அன்றைய நாள்  முழுவதும் இசைக்கப்பட்டுக் கொண்டேயிருந்த ஒரு இசைக்கருவிதான் ஷெனாய் என்பது அப்போது தெரியாது . ஆனால் கேட்கும்போதே  மனசுக்குள் ஆழப் புதைந்த துக்கமெல்லாம் நினைவலைகளில் வந்து மோதும் உணர்வினைத் தரும். இந்தப் பாடலில் அதன் நாதம் கேட்டபோது  எங்கோ கேட்ட நினைவு எழும்பியது. புதுமையாகவும் தெரிந்தது. சோகத்திற்கு இசைப்பதை சுகத்திற்கும் இசைக்கின்ற இளையராஜாவின் கற்பனையை நான் வெகுவாக ரசித்திருக்கிறேன்.  வீணையின் நாதமும் இந்தப் பாடலில் அதிக சுகம் தரும் .


                                               ' அக்கரைச் சீமை அழகினிலே  '  என்ற பாடல் ஜேசுதாஸ் தனித்துப் பாடியது.  ஏக தாளத்தில் அமைந்த உற்சாகமான பாடல்.  இந்தப் பாடலும் வெளிநாட்டு இசையில் வந்த ஒரு பாடலை அகத்தூண்டலாக எடுத்துக் கொண்டு இளையராஜா தனது பாணியில் அழகாக கொடுத்திருப்பார்.
( "Akarai Cheemai" song was loosely inspired by "Kites by Simon Dupree and the Big Sound. )
சிங்கப்பூர் மக்களின் பண்பாடு கலாச்சாரம் போற்றும் பாடல் . வயலினின் ஆக்ரமிப்பை பாடல் முழுவதும் கேட்கலாம் . ஆரம்ப இசையே அமர்க்களமாக அமையும் . கிடாரில் ஆரம்பித்து வயலின் தொடர்ந்து புல்லாகுழல் இழைத்து மீண்டும் வயலின் இசைத்து நிறுத்த ஜேசுதாஸ் பல்லவி ஆரம்பிப்பது கேட்க அலாதி ஆனந்தம்.  மூன்று சரணம் , மூன்று வெவ்வேறு இடையிசை என்று பாடல் அற்புதமாக இருக்கும்.  இரண்டாம் இடையிசையில் வரும் குரலிசை மனதை கொள்ளை கொள்ளும் . பல்லவி, சரணம்   ஒலிக்கப்படும்போது  கூடவே இசைக்கப்படும் வயலின் நம்மை எங்கெங்கோ இட்டுச் செல்லும் .

                                               

                             ' என்னுயிர் நீதானே  ' என்ற பாடல் ஜேசுதாஸ் மற்றும் ஜென்சி குரல்களில் காப்பி ராகத்தில் உருவாக்கப்பட்ட பாடல். இந்தப் படத்திற்கு உருவான முதல் பாடல் இதுதான் என சொல்லப்படுகிறது.  ஆரம்பமே வேற்று மொழியில் இருக்கும்.   ' ஹத்தியக்கு ஷூக்காவா ..ஸ்லாலுவத்கு சின்தாவா ...'
என்று பாடல் ஆரம்பிக்கும். என்னுயிர் நீதானே... உன்னுயிர் நான்தானே  என்பதே அதன் அர்த்தம்  எனப் புரிந்தது. இந்தப் பாடலும் வித்தியாசமான பாடல் . சந்தோசமான காதல் கீதம். ஜென்சி அவர்களின் குரலும் வித்தியாசமானதே.  கேரளத்திலிருந்து வந்த ஒரு மலையாளக் குயில்.
 .இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களில் வலம் வந்தார்.  மூக்கிலிருந்து பாடுவதாக குற்றச்சாட்டு உண்டு . ஆனாலும்  அதுவும் அழகாகவே இருக்கும் .


                                     ' ஸ்ரீ ராமனின்  ஸ்ரீ தேவியே  ' என்ற பாடல் க்ளைமாக்ஸ்   காட்சியில் வரும் கடைசி பாடல் .  ஜேசுதாஸ் குரலில் அமர்க்களமான பாடல் .
முழுக்க முழுக்க வயலின் கொண்டு இழைக்கப்படும் பாடல். இளையராஜா ஒரு இசை விளையாட்டையே நடத்தியிருப்பார். பரபரப்பான காட்சி . கடத்தி அடைக்கப்பட்ட நாயகி எந்த கட்டடத்தில் இருக்கிறாள் என்பதை குறிப்பால் உணர்த்தச் சொல்லி நாயகன் பாடல் பாடுவதாக கொடுக்கப்பட்ட சூழலுக்கு இளையராஜாவின் இசை கற்பனைக்குத் தகுந்தாற்போல காட்சி அமைத்திட இயக்குனர் சிரமப்பட்டிருப்பார்.  பெரும்பான்மையான படங்களில் இளையராஜாவின்  இசையமைப்புக்குப் பொருத்தமான காட்சிகள் சரியாக எடுக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.  இந்தப் பாடலில் கோவில் மணியோசையோடு ஆரம்பித்து வயலினால் வேகம் கூட்டி கிடாரில் மென்மையாக்கி ஜேசுதாஸ் பல்லவி ஆரம்பிப்பதே அற்புதமாக அமைந்திருக்கும். இடையிசையில் மீண்டும் வேகம் கூட்டுவதும் ட்ரம்பட் கொண்டு குறைப்பதும் இறுதியில் ஏதோ நடக்கப் போவதைப் போல வயலின் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உச்சஸ்தாயில் முடிப்பதும் இசையிலேயே கதையை சொல்லிவிடும் இளையராஜாவின் இசை யுக்தி அபாரம்.

                                         

                                     பிரியா  படத்தில் ஐந்து பாடல்களும் ஐந்து விதம் . ஐந்தும் வித்தியாசமானவை . கேட்க கேட்கத் திகட்டாத தேனமுது. இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான சலீல் சௌத்ரி இளையராஜாவை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்தப் படத்திற்கான பாடல் கம்போசிங் நடந்த விதம் பற்றியும் சிகப்பு ரோஜாக்கள் பாடல்கள் அமைத்த விதம் பற்றியும் இளையராஜா சொல்வதை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம் .


             http://cinema.maalaimalar.com/2013/03/30233025/Priya-in-the-film-Music-Music.html


                                ஷெனாய் வாத்தியக்கருவியை இளையராஜா  பிரியா படத்தின் பாடலான ' ஹேய் ...பாடல் ஒன்று ...ராகம் ஒன்று' என்ற பாடலில் பயன்படுத்திய விதத்தை வியந்து சொல்லியிருந்தேன் . பாடலின் விளக்கம் தடைப்படும் என்று   அங்கே நீட்டிக்காமல்  மீண்டும் அதைப் பற்றி  சொல்ல இங்கு ஒரு  'லிங் 'குடன்  வருகிறேன். தமிழ்நாட்டின் சிறந்த தமிழ்ப் பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்களின் குமாரன் திரு . சுகா என்பவர் கீழ்க்கண்ட பதிவு ஒன்றைத் தந்திருக்கிறார்.
                                     

     

                  
         உலகின் மிகப் பிரபல ஷெனாய் வித்வான் மேன்மைமிகு உஸ்தாத்  பிஸ்மில்லா கான் அவர்களின் சீடர் பண்டிட் பாலேஷ்  என்பவர்  இளையராஜாவிடம்  ஷெனாய்  கலைஞராக பல ஆண்டுகள் பணி  புரிந்து வருகிறார்.   இளையராஜாவிற்கு முந்தைய அல்லது பிந்தைய எத்தனையோ இந்திய இசையமைப்பாளர்களிடம் அவர்  வேலை செய்திருந்தாலும் இளையராஜாவிடம் பணியாற்றியபோது  ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களையும் புதுமையான அணுகுமுறைகளையும் இளையராஜாவின் இசைத் திறமையையும் மற்ற இசையமைப்பாளரிடமிருந்து எந்த அளவு இசை அறிவிலும் நுணுக்கக்கங்களிலும் வேறுபட்டிருக்கிறார் என்பதையும்  நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதை சுகா அழகாக பதிவிட்டிருக்கிறார்.  தவறாமல் வாசியுங்கள் . 

                     http://venuvanam.com/?m=201104
                        
                           


...............................தொடர்வேன் ................................................