Monday, 28 November 2016

தீயவை மேல் தீயை வை                      யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன ...நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் என்ற மனநிலை  கொண்ட மனிதர்களே நம்மைச் சுற்றி அதிகம் இருக்கிறார்கள்.  அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்களை சந்திப்பது அருகி வருகிறது.  ஆசை யாரையும் விடவில்லை.  சின்ன சின்ன சேவைகளுக்குக் கூட சன்மானம் எதிர்பார்ப்பதை பலர் ஒரு குற்றமாகவே பார்ப்பதில்லை.  கிடைக்கும் வரை லாபம் என்றுதான் எண்ணுகிறார்கள்.


                      அரசாங்க ஊழியர்கள் பெரும்பான்மையோர்  தங்கள் சம்பளம் போக வேறு ஏதேனும் பிரதிபலன்கள் எதிர்பார்த்தே வேலை செய்கிறார்கள். தாங்கள் செய்து கொடுக்கும் வேலைகளால் யாருக்கு என்ன பலன் போகிறதோ அவரிடமிருந்து  இன்னொரு ஊதியம் பெற  காத்திருக்கிறார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்புக்கு பல பெயர்கள் சொல்லலாம்.   அன்பளிப்பு,  பரிசு,  நன்கொடை, கூலி, கையூட்டு  என்பவை நாகரீகச் சொற்கள்.   கொச்சையாக  பச்சையாக சொல்வதென்றால் ' லஞ்சம் '  என்ற சொல்லே பொருத்தமானது.  காரசாரமாகச் சொன்னால்  ' பிச்சை  '  என்றும் சொல்லலாம்.


                      லஞ்சம் எப்போது தோன்றியது  என்ற ஆய்வில் இறங்கினால்  கல் தோன்றி  மண் தோன்றா காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்ததாக வரலாறு சொல்கிறது.   அப்போதிருந்து இப்போது வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து  பெரும் பூதமாய் உருமாறி  விட்டது.  சட்டங்கள் இட்டு அதை ஒடுக்க  நினைப்பது  சல்லடை போட்டு நீரைத் தடுக்க நினைப்பது போலத்தான்!   மாற்று வழி யோசிப்பதே மாபெரும் வலி.


                       திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவிஞன் எழுதி விட்டுப் போனது சத்தியமான வாக்கியம்.   லஞ்சம் கொடுப்பவன்  ' கொடுக்கக் கூடாது ' என்று  முடிவெடுக்க வேண்டும் ;  லஞ்சம் வாங்குபவன்  ' வாங்கக்  கூடாது  '  என்று உறுதி எடுக்க வேண்டும்.  இந்த இரண்டுமே சாத்தியப்படாதபோது  எந்த வழியில் அதை ஒழிப்பது?  அதற்கான தீர்வு வெகு தொலைவில் இருக்கிறது. தேட வேண்டும்.


                         லஞ்சப்பணம்  வாழ்க்கையில் நிம்மதியை தக்க வைக்குமா என்பது கேள்விக் குறியே!   அறமற்ற செயல்களிலிருந்து வரும் எந்தப் பொருளும் நிலைப்பதில்லை.  லஞ்சத்திற்கு மேல் லஞ்சம் வாங்கிய ஒரு மாநகராட்சி அதிகாரி தன்  மனைவிக்கு நிறைய நகைகள் சேர்த்து வைத்தார். நிறைய சிகரெட்டும் பிடித்ததால் திடீரென நோய்வாய்ப்பட்டார் .  இரண்டு வருடமாக நோயுடன் போராடியதில் மருத்துவமனைச் செலவுக்காக பணம் பறந்தோடியது.  மனைவியின் நகைகள் கரைந்து போயின. வட்டிக்கு பணம் வாங்கி செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் செத்தும் போனார்.


                        ' வாங்கிய லஞ்சத்துக்கு மேலே வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு கடவுள் அவரை கொண்டு போயிட்டான் ' என்று பலரும் அப்போது பேசிக் கொண்டார்கள். தர்மம் தலை காக்கும் என்ற மூத்தோரின் மொழி சற்று புரியலாயிற்று.  பலருக்கும் கொடுத்தால் நமக்கும் கிடைக்கும்;  பலரிடமிருந்து  எடுத்தால் நம்மிடமிருந்து எடுக்கப்படும் .  அதுதானே உலக நியதி.

             
                           பெரும்பான்மையான அரசியல்வாதிகள் லட்சியவாதிகளாக இருக்கிறார்களோ இல்லையோ லஞ்சவாதிகளாக இருக்கிறார்கள்.  அமைச்சர் முதல் அதிகாரி மற்றும் அடிமட்ட ஊழியன் வரை  லஞ்சத்தில் ஊறிக் கிடக்கிறார்கள் . லஞ்சம்  புற்று நோயை விட மோசமாக புரையோடிக் கிடக்கிறது.


                          2015 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 180 நாடுகளில் ஊழல் குறைவான  10  நாடுகளின்  பட்டியலும்  ஊழல் அதிகமான  10  நாடுகளின் பட்டியலும் தரப்பட்டுள்ளன.


             

                       

                             
   
   
                          கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா ஊழல் நாடுகளின் வரிசையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்துள்ளது.

   


     கடந்த பத்து ஆண்டுகளில் 2011 ஆம் ஆண்டில் ஊழலில் 95 ஆவது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா தற்போது 76 ஆம் இடத்திற்கு வந்துள்ளது. 


                                    லஞ்சமும் ஊழலும் குறைவான நாடுகள் வரிசையில் ஐஸ்லாண்டும்  நியூஸிலாந்தும்  முதல் இடத்திற்கு மாறி மாறி வந்துள்ளன.  கடைசி இடத்திற்கு பெரும்பாலும்   சோமாலியா  என்ற நாடே வந்துள்ளது.                                      சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள்  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தவுடன் நாடே அதிர்ந்தது.  மக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் நின்று சிரமப்பட்டனர்.   நாட்டின் நன்மைக்காக கொஞ்சம் சிரமப்படுவதால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்று மத்திய அரசு சொன்னது.  


                                  சரி. ஏன் இந்த திடீர் நடவடிக்கை என்ற கேள்விக்கு  கறுப்பு பணத்தையும் கள்ளப்  பணத்தையும்   ஒழிப்பதற்கான  வேட்டை என்று  பிரதமர் பதிலளிக்கிறார்.  நான்கு மணி நேரத்திற்குள்  பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் எல்லா பண முதலைகளுக்கும் பணத்தை மாற்றும் அவகாசம் இல்லாமல் போனது. பீதியில் பேதி கண்டிருப்பார்கள்.  


                                ஊழலை ஒழிக்க இது ஒரு நல்ல நடவடிக்கை என்று மக்கள் ஏற்றுக் கொண்டாலும் பலவித சிரமங்கள் ஏற்பட்டதால்  கோபப்படுகிறார்கள்.  எதிர்க் கட்சிக்காரர்கள்  மோடியின் நடவடிக்கையை விமர்சனம் செய்கிறார்கள்.  அதிக குறைகளைச் சொல்கிறார்கள்.  பாராளுமன்றத்தில் கூச்சலும் எதிர்ப்பும் செய்கிறார்கள். 


                                  எல்லாவற்றையும் பொறுமையாக சந்திக்கும் மோடி அவர்கள் ஒரு அரசு விழாவில் சொன்னதாவது;     '   ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், அரசு முன்னேற்பாடு இல்லாமல் இந்த விஷயத்தில் இறங்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.  இது உண்மையான காரணமாகத் தெரியவில்லை. அவர்களின் வேதனைக்கு காரணமே , பதுக்கிய பணத்தை பாதுகாக்க அரசு போதிய அவகாசம் அளிக்கவில்லையே என்பதுதான். 


                                    இந்த விஷயத்தில் 72 மணி நேரம் அவகாசம் கொடுத்திருந்தால் இப்போது எதிர்ப்பவர்கள்  என்னை வாயார புகழ்ந்திருப்பார்கள்.  மோடி போல் யாருமில்லை என வாழ்த்தியிருப்பார்கள். இப்போது ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக நாடு மிகப்  பெரிய போரில் ஈடுபட்டுள்ளது.  இந்தப் போரில் சாமானிய மக்கள்தான்  போர் வீரர்கள். 


                                  கடந்த 70 ஆண்டுகளில் சட்டமும் அரசியலமைப்பும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் நாடு ஊழலில் சிக்கியுள்ளது.   ஊழல் தொடர்பாக சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையிலும் இந்தியாவின் பெயர் அழுத்தமாக பதிந்துள்ளது . ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்தால் நாம் எப்படி பெருமை கொள்ள முடியும்?  இதன் காரணமாகவே ரூபாய் நோட்டுத் தடை என்ற மிகப் பெரிய முடிவை எடுக்க வேண்டி இருந்தது. ' 

                                
                                     சில சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கறுப்புப் பணம் என்பதே கிடையாது என்கிறார்கள்.  கறுப்புப் பொருளாதாரம் என்பதுதான் சரி . அதில் புழங்கும்  பணத்திற்கு கறுப்புப் பணம் என்று வேண்டுமானால் பெயர் சொல்லிக் கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து .  ஹவாலா பணம் என்பதும் ஏறக்குறைய கறுப்புப் பணம் அல்லது கள்ளப்  பணம்தான்.  


                                      டெல்லியில் உள்ள ஒரு தீப்பெட்டி வியாபாரி சிவகாசியில்  இருந்து ஒரு மொத்த வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய்க்கு  சரக்கு  வாங்கி ,  பணத்தை மதுரையில் உள்ள ஒரு வியாபாரியிடம்  வாங்கிக் கொள்ளச் சொல்லுவார்.  மதுரையில் உள்ள  அந்த வியாபாரி டெல்லியில் உள்ள மின் சாதன பொருட்கள்  விற்கும் ஒரு  கம்பெனியிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு சரக்கு  வாங்குவார்.  பணத்தை  டெல்லியில் உள்ள தீப்பெட்டி வியாபாரி மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு கொடுத்து விடுவார்.   வங்கிக்குச் செல்லாமலேயே பணம் பரிமாறப்பட்டு விட்டது .  பலவிதமான வரி விதிப்புகளுக்குள் சிக்காமல் பெரிய அளவில் வியாபாரம் நடந்து முடிந்து விடுகிறது.  அரசுக்கு  வர வேண்டிய வரி வருவாய் இங்கு தடுக்கப்படுகிறது. 


                                     ஹவாலா பணம் என்பது இப்படித்தான் சுழற்சிக்கு உட்படுகிறது.  இது ஒரு உதாரணம் . இது போல லட்சக்கணக்கான வியாபாரங்கள் இப்படித்தான் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.  கட்டவேண்டிய பணம் எல்லாம் கட்டுக் கட்டாக  அறைகளுக்குள் கட்டி வைக்கப்படுகிறது. அரசுக்கு நட்டமேற்படுத்தும் இந்த மாதிரியான செயல்களைக் கட்டுப்படுத்த எல்லாப் பணப் பரிமாற்றங்களும் டிஜிட்டல் தொழில் நுட்ப முறைப்படி மட்டுமே செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எல்லாப் பணமும் வங்கி வழியேதான் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது .  இணையதள தொழில் நுட்பம் மூலம் பணப்  பரிவர்த்தனைகள்  செய்யும்படி பொது மக்களும் வியாபாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ஊழலை ஒழிக்க இது ஒரு வழி என்று மத்திய அரசு கருதுகிறது.  சாத்தியமா என்பதை காலம் சொல்லும்.  


                                     மோடி அவர்கள் எடுத்த நடவடிக்கையை மக்கள் விமர்சித்தாலும் பெரியதொரு வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.  மோடி அவர்கள் இணையதளத்தில் மக்களின் கருத்தை எதிர்கொண்டபோது  90 சதவீதம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.  அரசியலில் ஒவ்வொரு பிரதமரும் ஏதாவது ஒரு தடாலடி மாற்றத்தை எடுத்து வந்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில் அது எதிர்க்கப்பட்டாலும் காலப்போக்கில் அந்த முடிவுகள் ஜனநாயக முறையில் நன்மையை உருவாக்கியிருக்கின்றன.  போலவே பிரதமர் மோடி அவர்களின் இந்த தடாலடி முடிவு நாட்டுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.  


                                      காவிரிப் பிரச்சனைக்கு , மீனவர் பிரச்சனைக்கு ஒன்று சேராத எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரூபாய் நோட்டு செல்லாது என்ற திட்டத்தை எதிர்ப்பதற்கு ஒன்று கூடுவது நகைப்புக்குரிய செயலாகவே படுகிறது.  தங்களின் பணத்தை பாதுகாத்துக் கொள்ள முனையும் காரியமாகவே இது பார்க்கப்படுகிறது.  நாட்டின் நன்மை கருதி  கூடும் கூட்டமாக இல்லை.  மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றபெயரில் , ஆடுகள் நனைகின்றன என்று ஓநாய்கள் அழுகின்றன.  ஆனால் உலக நாடுகள் மோடியின் முடிவினை பாராட்டுகின்றன .  புகழாரம் சூட்டுகின்றன.  ஒரு பொருளாதார புரட்சியை இது ஏற்படுத்தப் போகிறது என நம்புகின்றன. 


                                   ஊழலில் மிகப் பெரிய பங்கினை எடுத்துக் கொள்வது லஞ்சம்தான்.  அதை எவ்வாறு ஒழித்தெடுப்பது  என்பது நம்முன் வைக்கப்படும் சவால்.  பிரதமர் அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறார்  என்பது ஆயிரம் டாலர் கேள்வி. 


                                          உயிரினங்களிலேயே பகுத்துணரும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உள்ளதால் நல்லது கெட்டது  அறிந்து வைத்திருக்கிறான். ஆனால் அதுவே ஆபத்தாகவும்  இருக்கிறது.   தீயவைகளை எல்லாம் தெரிந்து கொண்ட மனிதன் அதில்  சுகம் காணும் மன நிலைக்கு  தன்னை மாற்றிக் கொண்டது வருத்தமானது.  நல்லவைகளுக்கு மேல் தீயவைகளே அதிகம் கொட்டிக் கிடக்கின்றன.   நல்ல மனிதருக்குள்ளும் தீய எண்ணங்கள் வெளிப்பட்டு விடுகின்றன.  பெரும் பாவச் செயல்கள் மட்டுமே தீயவை என்று கருத்தில் எடுக்கலாகாது.  அடுத்த மனிதருக்கு இடையூறு செய்யும்  செயல்கள் அனைத்தும் தீயவையே! 


                                        சுரண்டல்கள், ஏமாற்றுகள், பதுக்கல்கள், தீவிரவாதம் , பயங்கரவாதம் , போதைப் பொருள் கடத்தல்கள்  போன்ற எத்தனையோ தீமைகள் இருந்தாலும்   லஞ்சம்தான் அதில் பிரதானம் . எல்லா கொடுமைகளும் அதன் வழியே அரங்கேறுகின்றன.  எல்லா மீறல்களும் அதனை வாசலாகக் கொண்டுள்ளன .  லஞ்சம் வாங்குபவனை விட கொடுப்பவன் குற்றவாளி என நீதிமன்றம் நினைத்தாலும்,  தண்டனை வாங்குபவனுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.  இருவருக்கும் தண்டனை சமம் என்ற சட்டம் உருவானால் லஞ்சம் ஒருவேளை குறையுமோ என்னவோ!?  சட்டங்கள் தானாக உருவாவதில்லை. அரசே உருவாக்க வேண்டும். 


                              லஞ்சத்தை எவ்வாறு ஒழிக்கலாம் என்று அப்துல் கலாம் அவர்கள்  ஒரு சந்தர்ப்பத்தில்  ஆசிரியர்களும் மாணவர்களும் கூடியிருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் , மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது: 
              
          ' நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க, ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு குழந்தையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தந்தை  ஊழல் செய்பவராக இருந்தால், அவரிடம் குழந்தைகள் அன்பாக பேசி அவரது தவறை உணர்த்த வேண்டும். ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளையும், சமுதாயத்தில் ஊழல் செய்வோரின் நிலையையும் எடுத்துக் கூற வேண்டும்.  ஊழல் செய்து வரும் பணத்தை வாங்க மறுத்தாலே, ஒரு குடும்பத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது. 


                                   நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீடுகளில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருக்கலாம். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள்.   துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்). 

                                     இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும். ' 


                                          இரண்டாம் காந்தி என்று அழைக்கப்பட்ட அண்ணா ஹசாரே என்ற  சமூக ஆர்வலர் ஒருவர் திடீரென நாட்டில் எல்லோரும் வரவேற்கும் வண்ணம் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான கோஷங்களை உருவாக்கி  அரசையே ஆட வைத்தார்.    லோக் பால் , லோகாயுக்தா  சட்டங்களைக் கொண்டு வருவதற்கு  மிகவும் பிரயத்தனங்கள்  செய்தார்.  இதுவரை அதையெல்லாம் கொண்டு வருவோம் என்று சொன்ன எந்த மத்திய அரசும் அதற்கான முயற்சியை ஒரு துளியும் செய்யவில்லை.  ஹசாரேவையும்  விலைக்கு வாங்கி விட்டார்களோ என்னவோ அவர் இப்போது  மௌனமாகி விட்டார்.  பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டிருக்கிறார்.   செல்லாத நோட்டுத் திட்டத்தை அவசரமாகக் கொண்டு வந்த மோடி அவர்கள்  லோக் பால் மசோதாவுக்காக சிறு துரும்பும் எடுத்துப்  போடவில்லை என்பது  சற்று நெருடலான உண்மை.  


                                      மனிதனை பயமுறுத்தி வழிக்குக் கொண்டு வர   சாமியையும் பூதத்தையும்  மனிதனே பயன்படுத்தினான்.  இப்போது  இந்த இரண்டுக்கும் மனிதன்  பயப்படுவதில்லை.  கடுமையான சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும்  மட்டுமே பயப்படுகிறான்.   யோசனைகள் ஆயிரம் சொன்னாலும் அதில் ஓட்டைகள் இட்டு வெளியில் வர மனிதனுக்குத் தெரிந்து விடுகிறது.   எனவே லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க  இனி பிறக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத்தான் போதிக்க வேண்டும்.  வளர்ந்ததை வெட்டுவது  கடினம்.  புதிதாய் விதைப்பது  எளிது.  கலாம் அவர்கள் அதனால்தான் மாணவர்களிடம்  போதித்தார். 

                                     
                                        இந்தியாவில் லஞ்சம் ஒழிந்தாலொழிய  நம் நாடு  வல்லரசு ஆகும் என்ற கனவு  கேள்விக் குறியாகத்தான் இருக்கும்.   ஒவ்வொரு  தனி மனிதனும்  லஞ்சம் ஒழிக்கும்   லட்சியம் கொள்ள  வேண்டும்.  ஊழலுக்கு எதிராக  மனதில் உறுதி எடுக்க வேண்டும் . தீயவை மேல் தீயை  வைக்க வேண்டும். 


                  

Sunday, 2 October 2016

இசை ராட்சஷன் - 17 ( The Musical Legend )


நாற்பது ஆண்டுகளாக இசைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் இசை ஆளுமையை இசைஞர்கள்  மட்டுமல்ல என் போன்ற  இசை ரசிகர்களும் எவ்வாறு  பார்க்கிறார்கள்  என்பதை அவர்களின் முகநூல் பதிவிலிருந்து எடுத்தியம்ப விழைகின்றேன் .

                                               


***மார்கழியில் ...குளிர்பதன அரங்குகளில்...முன்பதிவு செய்த இருக்கைவாசிகளுக்காக இசைக்க கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.
இவற்றில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கனவே எழுதப்பட்டவை.
இதன் ராகம், தாளம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை.  இது 
ஒருவிதத்தில்  காலங்காலமாக பிரதியெடுக்கிற வேலை.    நவீன 
இசைக்கருவிகளுடன் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுகின்ற பாடகனின் 
வேலையை விட,  கொஞ்சம் கூடுதல் லாவகத்துடன், நேர்த்தியுடன் செய்கிற வேலைதான்!

இது  இரண்டுமே முன்தீர்மானம் உடையவை.   ஒத்திகை செய்யப்படுபவை. பாடப்படும் விஷயங்களை பொறுத்து உள்ளடக்க ரீதியான வித்தியாசம் இருக்கும்.  இரண்டுமே பிரதியெடுக்கிற செயலைத்தான் செய்கிறது.


இவ்வாறு பிரதியெடுக்கிற சங்கீதப்பாடகன், தனது அதிகபட்ச படைப்பாக கல்பனாஸ்வரங்கள் பாடுகிறான்.   அதில் அவன் காந்தாரத்தையும் பஞ்சமத்தையும் அசைப்பது குறித்து சிலாகிக்கின்ற இசைவிமர்சனங்கள், திரைத்துறையில் நிகழ்கின்ற உண்மையான இசை முயற்சிகளை கண்டு கொள்வதில்லை.
சிறந்த இசைமுயற்சிக்கு இணையான ஒன்று திரைப்படத்தில் நிகழும்போது அது எப்படி கவனிக்கப்பட முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்ததாகும் ?    மூன்றாம்தரமான வழிபாட்டுப்பாடல்  சபாக்களில் ஒலிப்பதால் மட்டும் அது எப்படி விமர்சனத்திற்கு உண்டான தகுதியைப்பெறுகிறது ?திரைப்படப்பாடலில் பயன்படுத்தப்படும் இசை மலிவானது, மேலோட்டமானது என்று எப்படி தீர்மானிக்கமுடியும் ?


இவ்வாறான தீர்மானங்களை உடைத்து, உயர்ந்த இசைக்கு ஈடான பல 
பரிசோதனைகளை இளையராஜா திரைப்படத்தில் நிகழ்த்தி இருக்கிறார்.


இளையராஜா போன்ற தேர்ந்த இசைப்படைப்பாளி தன் ஆழ்ந்த புலமை கொண்டு ஒரு ஸ்வரக்கோவையை எழுதி,அதனை எந்த இசைக்கருவியில் வாசித்தால் உயிர்ப்பாக இருக்கும் என்று யோசித்து எழுதிய...ஒரு பாடலின் வயலின் இசைக்கு...எந்த யோசிப்புமற்று படத்தின் நாயகி தன் பின்புறத்தை ஆட்டுவாள்.


இது எவ்வளவு அபத்தமானது. ஒரு கலைஞனின் படைப்பு  அவன் சார்ந்த ஊடகத்தின் உள்ளாகவே கேலி செய்யப்படுகிறது.


ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால் 
மட்டுமே இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க 
வேண்டியிருக்கிறது. அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ,  ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால் இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது.


நம் அருகில், நாம் பேசுகிற மொழியில் பாடுகிற கலைஞன் என்பதாலேயே நமக்கு நேரும் அலட்சிய உணர்வு கண்டிக்கத்தக்கது.
எழுதியவர் : செழியன்
நூல்: பேசும்படம்
***இசை­ய­மைப்­பாளர்,  கம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்  யார்?
-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா
யூ டியூப்பில் இசை சம்­பந்­த­மான பழைய நிகழ்ச்­சி­யொன்றைப் பார்க்கும் சந்­தர்ப்பம் எதேச்சையாக  ஏற்­பட்­ட­போது மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்­தது. அதே நிகழ்ச்­சியை சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் நேர­டி­யாக தொலைக்­காட்­சியில் பார்த்­த­போது இதே மனக்குடைச்சல் அன்றும் எனக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.. பாடகர் ஒரு­வரால் நடத்­தப்­பட்­டி­ருந்த அதில் பங்கு பெற்றவர்  ஒரு தமிழ் இசை­ய­மைப்­பாளர்.

அந்தப் பாடகர் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த அந்த இசை­ய­மைப்­பா­ள­ரிடம் மிகவும் பவ்வியமாக, கூனிக் குறுகி உரை­யா­டிக்­கொண்­டி­ருந்தார். அது பர­வா­யில்லை.  சினிமா உலகில் இப்­ப­டி­யான மரி­யா­தையை எல்­லோ­ருமே எதிர்­பார்க்­கி­றார்கள் போலும்!   இங்கே அது­வல்ல  பிரச்­சினை. எனக்குள் ஏற்­பட்ட கேள்­விக்குக் காரணம் பாடகர் அந்த இசை­ய­மைப்­ப­ாளரை வார்த்­தைக்கு வார்த்தை Legend (மேதை) என்றும் கம்­போசர் என்றும் கூறிக் கொண்­டி­ருந்­த­துதான். அதுதான் தவறு. அங்கு வந்­தி­ருந்­த­வரை இசையமைப்­பா­ள­ராக வேண்­டு­மானால் யாரும் அழைத்துக் கொள்­ளுங்கள்.  ஆனால் அவர் நிச்­ச­ய­மாக ஒரு கம்­போசர் (Composer) அல்ல. இதை என்னால் உறு­தி­படக் கூற முடியும்.

ஆங்­கி­லத்தில் இசை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அவர்­களின் செயற்­பா­டு, திற­மை, புலமை,  அனு­ப­வம், சாத­னை  போன்ற இன்னும் பல கார­ணங்­களை அள­வு­கோ­லாகக் கொண்டு பல உப பெயர்­களில் பிரித்­துள்­ளார்கள். அப்­ப­டி­யான இரண்டு திறமைசாலிகளின் பெயர்தான் Music Director மற்றும் Music Composer ஆகும். பொது­வாக நோக்­கும்­போது இரு­வ­ருமே ஒரே தொழி­லைத்தான் செய்­வ­தாகத் தோன்றும். ஆனால் அது தவறு. இதனை விளங்கிக் கொள்­வ­தற்கு அந்த இரு­வ­ருக்கும் இடை­யி­லுள்ள வித்தியாசத்தையும் தனித்­த­ன்­மை­க­ளையும் புரிந்து கொள்ளல் வேண்டும்.


பாடல் ஒன்­றுக்­கான மெட்டை அல்­லது காட்சி ஒன்­றுக்­கான மெட்­டைப்­போட்டு அதை பாட­லா­சி­ரி­ய­ரிடம் காட்­டு­ப­வரை இசை­ய­மைப்­பளர் என்று அழைக்­கலாம். அதா­வது அவர் ஒரு பாட­லுக்­கான மெட்டை அமைக்­கிறார். இதை யார் செய்­தாலும் அவர் இசை­ய­மைப்­பா­ளரே!


அதன் பின் அந்த மெட்டும் பாடல் வரி­களும் இன்­னொ­ரு­வ­ரிடம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. அவ­ரது தொழிற்­பெயர் Arranger (அரேஞ்சர்)

(An arrangement is the adaptation of a previously written musical composition for presentation. It may differ from the original form by reharmonization, paraphrasing or development of the melodic, harmonic, and rhythmic structure)

இவர்தான் அந்­தப்­பா­ட­லுக்­கான வயி­லின்கள் எத்­த­னை­யென்­ப­தையும் எங்கு வாசிக்க வேண்டும் என்­ப­தை­யும் என்ன தாள­வாத்­தியம் எப்­படி வாசிக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தை­யும் Brass Section எனப்­படும் ஊதும்­வாத்­தி­யங்­க­ளை­யும் கிட்­டார் மற்றும் Beats. களையும் எவ்­வாறு எங்கு வர­வேண்டும் என்­ப­தைப்­போன்ற பின்­னணி இசை­களை எழு­து­பவர் அல்­லது கோர்ப்­பவர். ஒரு பாடலின் தரத்தை இவரின் இசை­ய­றிவும் இசை அனு­ப­வமும் தீர்­மா­னிக்­கி­றது. இவரின் இசை­ய­றிவும் அனு­ப­வமும் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட்ட­தாக இருக்­கு­மாயின் அதை இவர் அரேஞ் செய்யும்  பாடல்­களில் புரிந்து கொள்­ளலாம்.


இத­னால்தான் சில இசை­ய­மைப்­பா­ளர்­களின் பாடலைக் கேட்கும் போது பாடலின் மெட்டு புதி­தாக இருந்­தாலும் அதைத் தாங்கிச் செல்லும் பின்­ன­ணி­யி­சையை ஏற்­க­னவே எங்கோ கேட்­டதைப் போன்று உண­ர்­கின்றோம். காரணம் அரேஞ்சர் என்­ப­வ­ருக்கு அது ஒரு தொழில் அவ்­வ­ள­வுதான். அதில் அவரின் பெயர் வெளியே தெரியப் போவ­தில்லை. எனவே பத்­தோடு பதி­னொன்­றாக ஒரு பாடலை உரு­வாக்­கி­விட்டால் அவரின் கடமை முடிந்­து­விடும். ஒரு இசை­ய­மைப்­பா­ளரின் மெட்டை முழு­மை­யான பாட­லாக மாற்­று­பவர் Musical Arranger. ஆனால் இசை­ய­மைப்­பாளர் அந்தப் பாடல் உரு­வாகும் போது அதை மேற்­பார்வை செய்­து­கொள்வார்.


இசை­ய­மைப்­பாளர் தேவாவின் அரே­ஞ்­ச­ராக அவரின் தம்­பிகள் மற்றும் இப்­போ­தைய இசை­ய­மைப்­பாளர் தினா ஆகியோர் இருந்­துள்­ளார்­கள்.   டி.ராஜேந்­தரின் அரேஞ்­ச­ராக வைத்­ய­நாதன் என்­பவர் இருந்­துள்ளார்.   எஸ்­.ஏ.ராஜ்­கு­மாரின் அரேஞ்­ச­ராக வித்­யா­சாகர் இருந்­துள்ளார் என்று கேள்­விப்­பட்­டுள்ளேன். ( மன­சுக்குள் மத்­தாப்பு படத்தின்  பாட­லான பொன்­மாங்­குயில் பாடலைக் கேட்­டுப்­பா­ருங்கள்.  அதில் ஒரு வித்­தி­யா­ச­மான வித்­தி­யா­சத்தை உண­ரலாம். )


பொது­வாக இசை­ய­மைப்­பாளர் எனப்­ப­டு­ப­வ­ருக்கு இசைக்­க­ரு­விகள் வாசிக்­கத்­தெ­ரி­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

எம்மில் பலர் நினைப்­ப­தைப்­போல தமிழ்த்­தி­ரை­யி­சை­யில், இரு இசை­ய­மைப்­பா­ளர்­களின் பாடல்­க­ளைத்­த­வி­ர, நாம் கேட்­டு­வ­ளர்ந்து சிலா­கித்துப் பாராட்­டிய பல பாடல்­களின் இனி­மைக்கு முழுச்­சொந்­தக்­காரர் அந்தப் பாட்டின் இசை­ய­மைப்­பா­ள­ரல்ல. அவர் அந்தப் பாட்டின் மெட்­டுக்கு வேண்­டு­மானால் உரிமை கோரலாம் அவ்­வ­ள­வுதான்.

சரி, இனி Composer என்று அழைக்­கப்­படக் கூடிய தகுதி யாருக்கு இருக்­கின்­றது?

ஒரு பாடலை அல்­லது இசையை அதன் சூழ்­நி­லைக்கு ஏற்ப மெட்­டாகப் போட்டு, தான் உரு­வாக்­கிய அந்த மெட்­டுக்கு தானே பார்த்துப் பார்த்து இசை அரேஞ்­மெண்ட்­டுக்­கான இசைக்­கு­றிப்­புக்­களை எழு­தி, அந்­தப்­பா­ட­லுக்கு ஜீவனைக் கொடுக்­கக்­கூ­டிய இசை­களை தானே உரு­வாக்­கி, அந்த இசைக் குறிப்பை இசைக்­க­லை­ஞர்­க­ளுக்கு விளங்­க வைத்து , அந்த மெட்­டிற்குள் ஜீவனைக் கொடுத்­து, கலை­ஞர்­களின் வாசிப்பில் தடங்கல் ஏற்படும்போது சரி செய்யக்­கூ­டிய திற­மையைத் தன்­ன­கத்தே கொண்­டி­ருந்­து, பாட­லையும் எழுதக் கூடிய வல்­ல­மை­யுடன் பாட­லை பாடும் திற­மையுடன் மிக முக்­கி­ய­மான ஒரு தன்­மையைக் கொண்­டி­ருக்­க­ வே­ண்டும்.


அதா­வது, இசையை இழை இழை­யா­க, அணு அணு­வாக, அறிந்­து­வைத்­து, ஒரு பாட­லுக்கு அல்­லது இசைக் கோர்­வைக்கு சேர்க்கும் இசையை ஒன்று ஒன்­றாக ரசித்து ரசித்து தானே கோர்க்­க­வேண்டும். புதிது புதி­தாக உரு­வாக்­க­வேண்டும். தான் எதிர்­பார்ப்­பதை கலை­ஞர்­க­ளி­ட­மி­ருந்து அட்­சரம் பிச­காமல் வெளிக்­கொ­ணரத் தெரிய வேண்டும்.

உலக இசை வர­லாற்றில் இந்தத் திற­மை­களை தம்­ம­கத்தே கொண்­டி­ருந்த சிலரைப் பட்­டி­ய­லி­டு­கின்றேன்.

Johann Sebastian Bach,
Wolfgang Amadeus Mozart ,
Ludwig van Beethoven
Richard Wagner ,
Franz Schubert

நான் மேலே குறிப்­பிட்ட ஐவ­ரை­விட இன்னும் பலர் இருக்­கின்­றார்கள்.
ஒருவர் வெள்­ளை­வெ­ளே­ரென்ற நீள நஷனல் ஷர்ட்டும் வெள்ளை குர்தா போன்ற பாண்டும் வெள்ளைக் கால­ணியும் நெற்­றியில் குங்­குமப் பொட்டும் வைத்­து­விட்டு பந்தாவாக வந்தால் அவரை மிகப்­பெரும் இசை­மேதை என எண்­ணு­வது எங்­களின் வழக்கமாகிப்  ­போய்­விட்­டது.


எனது சிற்­ற­றி­வுக்குப் புரிந்­த­வ­ரையில் தமிழ்த் திரை­யி­சையில் கம்­போ­சர்  ­என அழைக்கக் ­கூ­டிய தகுதி இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வுக்கு இருக்­கின்­றது.


மெல்­லிசை மன்­னர்கள் இசை­மே­தைகள். ஆனால் அவர்கள் மெட்டை மட்டும் போடு­வார்கள். அதை வைத்துக் கொண்டு அரேஞ்மெண்ட் மற்றும் மேலைத்­தேய முறையில் இசைக்­கு­றிப்­புக்­களை கால­கா­ல­மாக எழு­தி­வந்­த­வர்கள் அவர்­களின் உத­வி­யா­ளர்­க­ளான ஹென்றி டானியல். ஜோசப் கிருஷ்ணா, மற்றும் ஷியாம் போன்றவர்கள்.


இதில் இசைஞானியை ஒரு கொம்போசர் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அதற்கான சான்றுகளில் இது ஒன்று:

வா பொன்மயிலே ..நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது !

உலகின் பிரசித்தமான கம்போசர்களில் ஒரு ஒற்றைப் புல்லாங்குழலையும் அதற்குப் பக்கத்துணையாக வயிலின் கூட்டணியையும் மிக அழகாக, மனித உணர்வுகளை கன கச்சிதமாக வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகப் பயன்படுத்தியுள்ளவர்களில் முதல் ஐவரைப் பட்டியலிடச் சொன்னால் கண்டிப்பாக ராசையாவை அங்கே முன்னணியில் வைப்பேன். ராசையா அளவுக்கு அந்த ஒற்றைப் புல்லாங்குழலை பாடல்களுள் மிக அழகாக எவரும் பயன்படுத்தியிருப்பார்களா என்பது சொல்லத் தெரியவில்லை.

80 களில் வெளிவந்த இந்தப்பாடலை அதன் ஆரம்ப இசையை அந்த ஆரம்ப இசைக்குள் தட்டுத் தட்டாக புல்லாங்குழல் பாவிக்கப்பட்டுள்ள விதத்தை.. அந்தப் புல்லாங்குழலுடன் வயிலின் கூட்டணி இணைக்கப்பட்டுள்ள லாவகத்தை அவற்றின் சேர்க்கையானது பாலு என்ற ஒப்பற்ற பாடகனுக்குள் ஏற்படுத்தியுள்ள கிளு கிளுப்பைக் கேட்டுத்தான் பாருங்களேன். மனம் அப்படியே இலேசாகிப்போவது திண்ணம்.


இந்தப்பாடலை எழுதியிருக்கும் பஞ்சு அருணாசலம் அதன் ஆரம்ப இசைக்குள் புல்லாங்குழல் பாவிக்கப்பட்டுள்ள விதத்திற்கு ஏற்றாற்போல ( குயிலின் கூவலை ஒத்த வாசிப்பது ) பொன் மயிலே என்பதற்குப்பதிலாக குயிலே என்று எழுதியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ ????
உலகின் சிறந்த இசைக்கோர்வைகளில் புல்லாங்குழலை மிகச் சிறந்தமுறையில் பயன்படுத்தியவர்களாக:
பிரான்சின் பிலிப் போடின்,
இங்கிலாந்தின் அனா கிளின்
ஆர்ஜண்டீனாவின் மார்சல்லோ கொனோலஸ்
அமெரிக்காவின் அந்தோனி கொமிசெல்லோ
ஐரிஷின் ஜெறாட் பஃறி
அவுஸ்திரேலியாவின் ஆன் போய்ட்

போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள் ஆனால் இவர்களின் இசைகளைத் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான விதத்தில் புல்லாங்குழலைப் பயன்படுத்தியிருப்பது ஞானியாராகத்தான் இருக்க முடியும்.

உன் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றார் நபிகள்
இங்கே....
ஞானியார் அந்த ஒற்றைப் புல்லாங்குழலுடன் வயிலின் கூட்டணியை கவித்துவமாகப் பயன்படுத்தியுள்ள விதத்தால் உந்தப்பட்டு, அந்தப்பாட்டுக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு பாடும் பாலுவின் குரலையும் அவருக்கேயுரித்தான சில்மிஷ சங்கதிகளுடன் கூடிய பாடும் பாணியையும் கேட்டுக் கிறங்கும் போது
சொர்க்கம்......
இங்கேயும் ஞானியின் இசைக்குள்ளும் இருக்கிறது !!


இந்த இடத்தில் இன்னுமொரு மிக முக்கியமான விசயம் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது கடந்த 35 வருடங்களாக ஞானியாரின் புல்லாங்குழல்  கலைஞர்களாக இந்தத் தமிழ் இனத்துக்கு அரும்பணியாற்றிய அவரின் முதல்  புல்லாங்குழல்  கலைஞரான திரு. குணசிங் தொடங்கி  தற்போது அவருடன் பணிபுரிபவரும் நீண்ட நாட்களாக ஞானியின் கலைஞராக இருப்பவருமான  திரு.நெப்போலியன் வரை அசாதாரணக் கலைஞர்கள்.   இவர்களும் இசையில்  Creaters  என்பது இவர்களின் வாசிப்புக்களைக் கூர்ந்து கேட்போரால் புரிந்து கொள்ள முடியும்.


இந்த மகா கலைஞர்களும் இசையில் அவர்களின் பங்களிப்புக்களும் பாடல்களின் பெயர்களுடன் ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.

இளையராஜாவின் இசையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றிரண்டு அல்ல ஆயிரமாயிரம் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.  அதில் சொற்ப செய்திகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன். மீண்டும் 1979 ஆம் ஆண்டுக்குச் சென்றால்,  ' நல்லதொரு குடும்பம் ' என்ற படத்தின் பாடல்கள்  நினைவிற்கு வருகிறது .  அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள்இருந்தாலும்  இரண்டு பாடல்கள் எல்லோராலும் அதிகம் பேசப்பட்ட பாடல்கள்.  


' செவ்வானமே  பொன் மேகமே '  என்ற பாடல் இளமை துள்ளலுடன் இனிமையாக இருக்கும் .  டி . எல் . மகாராஜன்,  சசி ரேகா ,ஜெயச்சந்திரன், கல்யாணி மேனன்  ஆகிய நான்கு பாடகர்கள் பாடியிருப்பார்கள்.  இரண்டு ஜோடிகள்  ஆடிப்பாடி மகிழ்வதை ராஜா இசையில் அழகாக கொண்டு வந்திருப்பார்.  கண்ணதாசன் வரிகளுக்கு கொடுக்கப்பட்ட இசை சுகம் தரும். ' ஹம்சத்வனி  ' ராகத்தில் உற்சாகமூட்டும் பாடலுக்கு கிடார், வயலின், குழல் கொண்டு மயக்கும் இசையை கொடுத்திருப்பார். இந்தப் பாடல் ஒலிக்கும்போதெல்லாம்   கூடவே சேர்ந்து பாடிக் கொண்டு திரிந்தது  இப்போது நினைத்தாலும்  இனிக்கிறது.  

                                                   

                            அதே படத்தில் '  சிந்து நதிக் கரையோரம் '  என்ற டூயட் பாடல் அதிகம் வானொலியில் இசைக்கப்பட்ட பாடல்.  டி . எம். எஸ்  , சுசீலாஇருவரும் இணைந்து  கண்ணதாசனின் வார்த்தைகளுக்கு உடல் அமைத்திட ஆபேரி ராகத்தில்  ராஜா அதற்கு உயிரூட்டியிருப்பார்.   இசையில் ராஜாவின் முன்னோர் பிரதிபலித்தாலும்  பின்னணி இசையில் ராஜாவின் கை  வண்ணம்தெளிவாகத் தெரியும் . சிவாஜி கணேசனுக்கு என்றே தனியொரு இசையை  கற்பனை செய்து வைத்திருப்பாரோ என நினைக்கத்  தோன்றும்.  நாற்பதை தாண்டியவர்கள்  இந்தப் பாடலை நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை.  நடுத்தர வயதில் ஏற்படும் காதல் ரசனைகளை பிரபலிக்கும் பாடலாக அமைந்து விடும் என்பது அந்த வயதில் புரியவில்லை.  இப்போது கேட்கும்போது  இனம் புரியாத எண்ண அலைகள் அலை மோதுவதை தவிர்க்க முடிவதில்லை.   இந்தப் பாடலை பாடியவர்கள் , பாடலுக்கு நடித்தவர்கள் , இசையமைத்தவர் என்று எல்லோருமே நடுத்தர வயதில் இருந்தார்கள்.  அதனால்தான் அந்த அலைநீளம் எல்லோருக்கும் பொருந்தும் வகையில் மனதை வருடும் பாடலாக அமைந்து போனது .                                          

                           நாற்பது வருடங்களாய் கொஞ்சமும் அசராமல் இசைக்காக தன்னையே அர்ப்பணித்துக்  கொண்டிருக்கும்  இசை ஞானியின் இந்தப் பாடல்கள்  எல்லாம் இன்னும் நாற்பது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் அதன்  இனிமை மாறாமல் இருக்கும்.  எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்த போதிலும் குறைவான தொழில் நுட்பத்தில் மிகவும் விரைவாகவும் தரமாகவும் ஆயிரக்கணக்கான பாடல்கள் ஆத்மார்த்தமாக படைத்திருக்கும் அந்த இசைப் பிரம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . 


                            பொருள் சேர்த்து விருது வாங்க நினைக்கும் மனிதரல்ல.  கொடுக்கப்பட்ட விருது சரியான அளவுகோலுக்கானது  அல்ல எனத்  தெரிந்து  அந்த விருதை நிராகரித்தவர்.  அதற்காக அவர் வெட்கப்படவில்லை. அவரைச் சென்று சேராமைக்காக விருதுகள்தான் வெட்கப்பட வேண்டும் . 


............................தொடர்வேன்..............................

Monday, 1 August 2016

அப்பா அம்மா கணக்கு
                                                    சமீபத்தில் வந்த திரைப்படங்களின் விமர்சனத்திலிருந்தும் படம் பார்த்த அனுபவத்திலிருந்தும்   இந்தப்  பதிவை எழுதும் எண்ணம்  ஏற்பட்டது.  அப்பா அம்மாவைப்  பற்றி ஒவ்வொருவரும் என்ன கணக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை மீட்டெடுக்கும் நினைவலையாக இது சிலருக்கு அமையலாம்.

                                                   
                
                                   
                                                         'அப்பா ' என்ற  திரைப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும்  தம் அப்பாவின் நினைவில் மூழ்கிப் போகாமல் வெளியேறி விட முடியாது.  படம் பார்த்து முடித்த பிறகு சிலர் மனம்  கனத்துப் போகலாம். சிலர் சிரித்துவிட்டுப் போகலாம்.  சிலர் தம்  தந்தையை நினைத்து எரிச்சலும் கோபமும் அடையலாம்.  ஏனென்றால் அப்பாக்கள்  பலவிதம்.


                                                           ஒரு முறை என்னோடு படித்த தோழியுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது  அப்பா பற்றிய பேச்சு வந்தது.  நான் என் அப்பாவைப் பற்றி பெருமையாக பேசிவிட்டு அவள் அப்பாவின்  விபரம் அறிய   வினவியபோது  சட்டென , ' அவன் இல்லை' என்றாள் .  இலேசான அதிர்ச்சியுடன் மீண்டும் வினவியபோது , ' அவன் இல்லை ' என்று மறுபடியும் அதே பதிலை அலட்சியமாக சந்திக்க நேர்ந்தபோது , ' இதில் ஏதோ விவகாரம் உள்ளது'  என நானே டாபிக்கை மாற்றி  விட்டேன்.   இவ்வளவு மரியாதையுடன்  தன் தந்தையை விளித்த தோழியின் அப்பா தம் குடும்பத்தை ' அம்போ' என விட்டு விட்டு ஓடிப் போனவர்  என்பது தாமதமாக தெரிய வந்தது.   அதன் பிறகு ஒரு நாளும் அவளிடம் என் அப்பாவைப் பற்றி கூட நான் பேசியது கிடையாது.   அவள்  வலி  புரிந்தது.


                                                          நாம் குழந்தையாய் இருந்தபோது அப்பாவை ஒரு ஹீரோவாக  வைத்திருந்தோம் .  வளர வளர ஜீரோவாக மனசுக்குள் உருவகப்படுத்திக்  கொண்டோம் .  ' எனக்கு என்ன  பெரிதாக செய்து வைத்தார், என்ன பெரிதாக வைத்து  விட்டுப் போனார் ' என்று இழந்த   வாய்ப்புகளையும் வசதிகளையும் மட்டுமே  சிந்தித்துக் கொண்டிருக்கும் நம்மில் பலர்  அப்பாவை இழந்த பிறகோ அல்லது  அப்பாவாக ஆன பிறகோதான்  மீண்டும் அவரை ஹீரோவாக்குவோம்.   வாழ்க்கையை வாழ எவ்வளவு அழகாக நமக்குக்  கற்றுக் கொடுத்திருக்கிறார் என்பதை தாமதமாக புரிந்து கொள்வோம்.  பத்து  மாதம் சுமந்தது  அம்மா  என்றால் காலம்  முழுவதும்  சுமந்தது அப்பா  என்பதை காலம் கடந்த பிறகே சிந்திக்கின்றோம்.

                                         
                                                       ' அப்பா '  திரைப்படத்தில் மூன்று விதமான  அப்பாக்களை காட்டுகிறார்கள்.  மூவரும் அவர்களின்  குழந்தைகளை  தங்கள் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஊட்டி வளர்க்கிறார்கள்.  சமுத்திரக்கனியின் குழந்தை கட்டுப்பாட்டோடு கூடிய சுதந்திரத்தோடு வளர்வதாக காட்டப்படுகிறது.   படத்தில் அவர் ஹீரோ என்பதால்  தமிழ் சினிமாவுக்குரிய பாணியில்  அவர் குழந்தை மற்ற எல்லா குழந்தைகளை விட புத்திசாலியாகவும் சமயோசித புத்தி உள்ளவனாகவும் திறமைசாலியாகவும்  காட்டப்படுவதை  ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும்  மற்ற குழந்தைகளின் அப்பாக்கள் வளர்ப்பில் பெரிய குறை இருப்பதாகத் தெரியவில்லை.   ஏனென்றால்  இந்த மூன்று அப்பாக்களையும்  ஒரே  அப்பாவிடம் பார்க்கலாம்.


                                                 ' இருக்கிற இடம் தெரியாம இருக்கணும் ' என்று சொல்லியே ஒரு தந்தை வளர்ப்பது போலவும் , '  படிப்பில் எப்போதும் முதல் மாணவனாய் இருக்கணும் '  என்று மற்றொரு தந்தை கண்டிப்பாய் வளர்ப்பது போலவும் காட்டப்படுகிறது.   படி படி என்று வலியுறுத்தி  வளர்ப்பதால் நாம் ஏதாவது ஒரு வகையில்  பிள்ளைகளை இழந்து விடுவோம்  என்பதை படம் சுட்டிக் காட்டுகிறது.  பெற்றோர் தங்களின் விருப்பத்தையும் கனவுகளையும் பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது  என்பது மறைமுக பிரச்சாரம் .


                                               நாமக்கல் , திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள விடுதிப்  பள்ளிகளில்   வரும்  வருமானம்  கருதி இப்போது  எல்லா ஊர்களிலிலும் அதே  போன்ற பள்ளிகள் உருவாகி விட்டன. கோழிப்பண்ணைகளில்  பிராய்லர் வகை கோழிகள் வளர்க்கப்படுவதைப் போலவே  மாணவர்களும்  படிக்க வைக்கப்படும்  கொடுமைகளை படத்திலும் எடுத்திருக்கிறார்கள்.  அதை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே  காட்சிப்படுத்தியிருக்கலாம்.  பெற்றோர்கள் பலருக்கு உறைத்திருக்கும் .  ஆனாலும் பெற்றோர்கள் திருந்தவா போகிறார்கள்? இன்னும் அந்தப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வரிந்து கட்டிக்கொண்டு  வரிசையில் நிற்கிறார்கள்.


                                            படித்தவன் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்த முடியும் . படிக்காதவன் பள்ளிக்கூடமே நடத்த முடியும்.  கோழிப்பண்ணை வைத்திருந்த படிப்பறிவில்லா முதலாளிகள்தான்  அந்தப் பள்ளிக்கூடங்களை நடத்திக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் பண்ணுகிறார்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்.


                                          அங்கு லட்சக்கணக்கில் பணம் கட்டி சேர்த்து விடப்படும்  சில பிள்ளைகள்  சிலுவைகளை சுமந்தபடி படிக்கிறார்கள் ;  சிலர்  பாரம் தாங்காமல் வெடிக்கிறார்கள்.   எனக்குத் தெரிந்து  ஒரு பெற்றோர் தங்கள் மகளை டாக்டராக்கும்  கனவில் அந்த மாதிரி ஒரு பள்ளியில் சேர்த்து விட்டு வந்த பிறகு  சில நாட்களில் மகள் போனில் , ' என்னை டாக்டராக பார்க்க ஆசையா ...இல்லை நோயாளியாக பார்க்க ஆசையா ? ' என்று கேட்ட பிறகு  விழித்துக் கொண்டார்கள்.  மீண்டும் பழைய படித்த பள்ளியிலேயே சேர்த்தார்கள்.  சில பிள்ளைகள் என்ன சொல்லியும் பெற்றோர் அவர்களுக்கு இசைவாக மாறாத காரணத்தால்   தற்கொலையும் செய்திருக்கிறார்கள்.  படத்திலும் அது போன்ற காட்சியை கொண்டு வந்து  நம்மை கலங்க வைக்கிறார்கள் .

                     
                                      ' நிராசையாகிப் போனால் என்ன அடைய நினைக்கும் இலக்கை உயர்வாக நினைப்போம்  ' என்பது பிள்ளைகள் மேல் சுமத்தப்படும் கனவில்  இருக்கக் கூடாது  என்று நிறைய அப்பாக்களுக்கு தெரிவதேயில்லை. ' எதிலும் first  எதிலும் best '  என்ற நிலை பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் அப்பாக்கள் இப்போது அதிகரித்து விட்டார்கள்.    40 வருடங்களுக்கு முந்தைய அப்பாக்கள் அப்படி இருந்ததில்லை.  ' படிக்க பணம் கட்டுவேன்.  நீதான் நல்லா படிச்சுக்கணும் '  என்று ஒரு வரியில் முடித்துக் கொள்வார்கள்.  'படி படி' என்று படுத்த மாட்டார்கள்.   கண்டிப்பு இருந்தது. சுதந்திரமும் நிறைய இருந்தது.  படித்தோம்; வளர்ந்தோம் ; இப்போது நன்றாகவே இருக்கிறோம்.


                                        அப்பாக்கள் ஆயிரம் விதம்.  குடித்துவிட்டு வந்து குடும்பத்தை அடித்துப் போடும் அப்பாக்கள்;  பொறுப்புடன் இருப்பதாய் நடித்துவிட்டுப் போகும் அப்பாக்கள்;  வேலை வெட்டிக்குப் போகாமல் சம்சாரம் சம்பாதிப்பதையும் பிடுங்கி கொள்ளும் அப்பாக்கள்;  பிள்ளைகளை வேலைக்கு  அனுப்பி  காசு பார்க்க நினைக்கும் அப்பாக்கள்;  காரணமேயில்லாமல் கரடு முரடாய்  கடுமை காட்டும் அப்பாக்கள்; கடைசி வரை கஞ்சத்தனத்தில் ஊறிக் கிடந்து   காசு பணம் சொத்து சேர்க்கும் அப்பாக்கள்; கர்ணப்பிரபுவைப் போல  ஊருக்கெல்லாம் அள்ளிக் கொடுத்து இருக்கும் சொத்துக்களை இழக்கும்  அப்பாக்கள்;   ஊதாரியாய் சுற்றித் திரியும் அப்பாக்கள்; மனைவி பேச்சை மீற  முடியாமல் முடிவெடுக்கும் திராணி இல்லாமல் ஊமையாகவே வாழ்ந்து விட்டுப் போகும் அப்பாக்கள்;   மனைவி  குழந்தைகளை  'அம்போ '  என கைவிடுத்து  ஊரை  விட்டே ஓடிப் போன அப்பாக்கள்;   பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத அப்பாக்கள்;  உள்ளத்தில்  ஊனமாக வாழும்  அப்பாக்கள்;  பிள்ளைகளின் எதிர்காலத்தை தான் மட்டுமே தீர்மானிக்கும் அப்பாக்கள்;  பிள்ளைகளை கூடவே கூட்டிக் கொண்டு திரியும் அப்பாக்கள்  என சந்தித்தவர்கள் கேள்வியுற்றவர்கள் பலர்.


                                               மோசமான அப்பாக்களால் சீரழிந்த பிள்ளைகளும் உண்டு ; நல்ல நிலைக்குப் போனவர்களும் உண்டு .  நன்றாக வளர்த்து படிக்க வைத்து நல்ல நிலையில் உருவாக்கி விட்ட அப்பாக்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட பிள்ளைகளும் உண்டு. எந்த ethics அவர்களை அப்படி மாற்றுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்து அறுதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது.  அந்த ரசாயனத்தை புரியவும் முடியாது.


                                               மேற்சொன்ன அப்பாக்களில் என் அப்பாவை தேடுகிறேன்.  இவர்களில் யாருமே இல்லை . அவரிடம் கண்டிப்பு இருந்தது;   கனிவும் இருந்தது.  கட்டுப்பாடு இருந்தது; சுதந்திரமும் இருந்தது.  அறிவுரையும் செய்வார்; சில சமயங்களில் மௌனமும் காப்பார்.  அவர் அறிவுரையை விட  மௌனம் நிறைய  .அறிவுறுத்தியது . படிப்பின் அருமையை அடிக்கடி பகிர்வார்.  ஆனால் படி படி என்று நச்சரிக்க மாட்டார். கடைசிவரை தன் சம்பாத்தியத்தில் எனக்கும் சேர்த்து செலவுகள்  செய்து மரித்தும் போனார்.  ' இந்த இடத்தில் தற்காலிகமாக  சேர்ந்து கொள் . எதிர் காலத்தில் நிரந்திரப் பணியிடத்தில் அமர்வாய்  '  என்று கைப் பிடித்துக் கூட்டி வந்து எனக்கு வழிகாட்டி விட்டு  தன்  இறுதிப்  பயணத்தை முடித்துக் கொண்டார்.  அவர் போதனையை ஏற்றதால் இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன். பதவி உயர்வு அடைந்ததை பார்க்காமலே போய் விட்டார்.  அவரை நினைக்கையில் அப்பாக்களுக்காக கவிதை எழுதும் ஆர்வம் வந்தது. நான் கவிஞனில்லை   .  ஆனால் நல்ல ரசிகன் .

                 
                                                வயிற்றில் சுமக்க முடியாததால்
                                                 நெஞ்சினில் சுமந்திடும்
                                                  சுமைதாங்கி
                                                 
                                                 பொம்மை கேட்டு அழும்போது
                                                  காசில்லா நிலையை  காட்டாது
                                                  பொம்மையாக தானே மாறிடும்
                                                  பொறுமைசாலி
                                             
                                                  ஆடலையும் பாடலையும்
                                                  ஆடி வரும் தேரினையும்
                                                   தோள்  மீது  தூக்கி வைத்து
                                                   தூரத்துக்  காட்சிதனை காட்டும்
                                                   பளு தூக்கி

                                                   தேங்கி வழிந்து அழிந்து  போகும்
                                                   குளம் குட்டையல்ல
                                                   வாழ்ந்து மறைந்தாலும் நம்
                                                    வாழ்க்கையில் அழியாத
                                                    கற்படியுருவம்
                                                   
                                                    எடுத்து வைத்த  அடிகள் தரும் வலி
                                                   பயணம் போகும் பாதை வழி
                                                   அடுத்து செய்வது அறியாது
                                                   திகைத்து  நிற்கையில்
                                                    நிமிர்ந்து நிற்கும் வழிகாட்டி

                                                    புயல் மழை வெள்ளம் என
                                                    புரியாத குழப்பங்களில்
                                                    புதிர்க் கடலில் தத்தளித்தால்
                                                    கலங்காது நமக்கு  கரை  காட்டும்
                                                    கலங்கரை விளக்கம்

                                                    எந்த வழி  போவதென்று
                                                    வந்த வழியில் குழம்பும்போது
                                                    சொந்த வழியை காட்டும்
                                                     திசை காட்டி

                                                     அக்கறை  காட்ட ஆயிரம் பேர்
                                                     சொந்த பந்தம் இருந்துமென்ன
                                                     அறியாத குளத்தில் நீந்தும்போது
                                                      அக்கரையில்   சேர்க்கும்
                                                      கட்டுமரம்

                                                      பள்ளிப்பாடங்கள்
                                                      சொல்லிக்கொடுப்பதிலும்
                                                       வாழ்க்கைக் கல்விப்  பாடங்கள்
                                                       அள்ளிக் கொடுப்பதிலும்
                                                       அற்புத ஆசிரியன்
                                                       
                                                       தான் படிக்காததை
                                                       தான்  முடிக்காததை
                                                       தன்  பிள்ளை அடைய
                                                       தவமிருந்து  பெற நினைக்கும்
                                                       தன்னிகரற்ற தங்கம்
                                                       தனி ஒருவன் வாழ்க்கையின்
                                                       பேரங்கம்

                                                       உயிரோடு  இருக்கையில்
                                                      ஊட்டிய அறிவுரைகள்
                                                      காலி இருக்கையை
                                                      காணும்போது  உறைக்கும்                                                                                         இருந்தபோது  மறைந்த மதிப்பு
                                                      இறந்த பிறகே  உதிக்கும்             

                                                       புரியாத பிரியம் 
                                                        பிரிந்த பின் புரியும் 

                                                 

                         ' அம்மா கணக்கு '  என்ற திரைப்படம் தன் மகள் மேல் தாய் வைத்திருக்கும் கனவினையும் எதிர்பார்ப்பையும் எடுத்துச் சொல்கிறது.  'வேலைக்காரி மகள் வேலைக்காரியாகத்தானே ஆக  வேண்டும் '  என்று மகள் போடும் தப்புக்கணக்கை   அம்மா  மாற்றியமைப்பதாக திரைப்படம் சொல்கிறது.  ' வேலைக்காரியின் மகள் கலெக்டர் ஆகக் கூடாதா? ' என்பது அம்மாவின் கணக்கு.  ஒரு கலெக்டரை  நேரில் சந்தித்து , ' எப்படி கலெக்டர் ஆவது? '   என்று  தன் குழந்தைக்காக  ஒரு குழந்தையைப்  போல் அவரிடம் கேள்வி கேட்கும் அம்மா கேரக்டர் பாராட்டப்படத் தக்கது.  அப்பாக்கள்  இல்லாத குடும்பங்களில் அம்மாக்களே தந்தை நிலையிலும்  இருந்து வழிநடத்திச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

                                                         

                                                   இருந்தும் இல்லாத அப்பாவின் கடமைகளையும் அம்மா எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலை பல குடும்பங்களில் தொடர்கதை.  பிள்ளைகள் ஒத்துப்  போகவில்லை என்றால் ஏற்படும் மனக்காயம் மிகப் பெரிய  சோர்வினைத் தரும்.  மகளுக்கு கணக்குப்  பாடம் வரவில்லை என்ற  காரணத்திற்காக மட்டுமல்ல , படிப்பின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைப்பதற்காகவும் அம்மாவே மகள் படிக்கும் பள்ளியில் மாணவியாக சேர்வது இதுவரை திரையில் சொல்லப்படாத விஷயம் .  இது சாத்தியமா என்று ஆராய்வதை விட அப்படி மகளோடு கூடவே சேர்ந்து படித்தால் ஏற்படும் மனப்போராட்டங்கள் எப்பயிருக்கும் என்பதை திரைப்படம் நமக்குச் சொல்கிறது.  மகளின் கோபம் அதிகரிக்கிறது.  ஒத்துழைக்க மறுக்கிறாள். அம்மாவை அலட்சியப்படுத்துவதோடு சந்தேகிக்கவும் செய்கிறாள்.  ஒரு கட்டத்தில் தனக்காகத்தான்  தன்  தாய்  இன்னல்களில் உழன்று கொண்டிருக்கிறாள் என்பதை மகள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க ஆரம்பிக்கிறாள் .  அம்மாவின் கணக்கையல்ல கனவையே நிறைவேற்றுகிறாள் என படம் முடிகிறது.


                                                  அம்மாவைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள் , ஆயிரமாயிரம் கவிதைகள்  எழுதப்பட்டிருந்தாலும் இலக்கியச் சுவையைக் கொடுக்கும் புதினங்களாக மட்டுமே இருந்து விடுகின்றன. உண்மையில் அம்மாவைப் பற்றிய பெருமிதங்கள் பிள்ளைகளிடம் எந்த அளவு உள்ளது என்று ஆய்வு செய்தால் அதன் சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொருவரும் தங்கள் அப்பாவை தூக்கி வைத்துப் பேசும் அளவிற்கு அம்மாவை வைப்பதில்லை என்பதே நெஞ்சில் நெருடும் நிஜம்.


                                            அம்மா என்றாலே சமையல்காரியாகவும் வேலைக்காரியாகவும் உருவகப்படுத்தி வைத்திருக்கும் பிள்ளைகள் சமூகம்  .அதிகரித்திருக்கிறது.  அம்மா என்று மனதில் நினைத்தவுடன் சமையல் செய்யும்  பரிமாறும்  வீட்டு வேலை செய்யும் உருவமே  தெரிகிறது.  இந்த சமூகமும்  குடும்ப அமைப்பும் அந்தக் கற்பிதங்களைத்தான் கற்றுக் கொடுத்திருக்கின்றன.  வேலை பார்த்து சம்பாதிக்கும் அம்மாவாக இருந்தாலும் அப்பாவின்  வேலையைத்தான் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் பிள்ளைகள் அதிகம் இருக்கிறார்கள்.  கதைகளிலும் திரைப்படங்களிலும் அம்மாவை உயர்த்திக்  கொண்டாடும் காட்சிகள் அதிகம். ஆனால் 'அம்மா கணக்கு '   படத்தில் அது இல்லை. அம்மாவை துதிக்கும் காட்சி எங்கும் மிகைப்படுத்தவில்லை. இறுதியில் அம்மா படும் கஷ்டம் மகளுக்குப் புரிவதாகக் காட்டப்படுகிறது. அது கூட அழுத்தமாக சொல்லப்படவில்லை. அம்மாவை மகள் புரிந்து கொள்ளும் சூழலை இன்னும் அழகாக பெருமைப்படுத்திக் காட்டியிருக்கலாம். இயக்குனர் இயல்பாக கொண்டு செல்கிறார்.

                                                             

                                            பலரிடமும்   ' உங்கள்  குடும்பம் பற்றி சொல்லுங்கள் ' என்று வினவினால் அப்பாவைப் பற்றி சிலாகித்து பெருமையாக பேசும் அளவிற்கு அம்மாவைப் பற்றி பேசுவதில்லை.  இதில் நானும் விதி விலக்கல்ல .  அப்பாவைப் பற்றிச் சொல்வதற்கு  ஆயிரம் எடுத்து  வைக்கிறோம். அம்மாவைப் பற்றி சொல்ல சிறிது யோசிக்கிறோம்.  அப்பாவின் தியாகங்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அம்மாவின் தியாகமும் என்பது  காலம் கடந்த பிறகே உணர்கிறோம்.  ஒன்று உண்மை. அம்மா இல்லாத அப்பா வளர்க்கும் பிள்ளைகளின் வளர்ச்சியை விட அப்பா இல்லாத அம்மா  வளர்க்கும் பிள்ளைகளின் வளர்ச்சி உன்னத நிலையை அடையும் . அதற்கு பல குடும்பங்கள் எடுத்துக் காட்டு.  சமீபத்தில் வாசித்த சிறு கதை ஒன்று ஞாபகம் வருகிறது.


                                          அப்பா இல்லாத அம்மாவின் வளர்ப்பில் வளரும் ஒரு இளைஞன் .  படித்து முடித்து  வேலை தேடுகிறான்.  பல இடங்களில் தேர்வு, நேர்காணல் சந்தித்தும் வேலை சரிவர அமையவில்லை.  ஒரு கம்பெனியில் நேர்காணலுக்காக அழைப்பு வருகிறது.  ' வேலை கிடைத்தால் அம்மாவை விட்டு விட்டு  தொலை தூரம் போய் விட வேண்டும் ' என்று நினைத்தவனாய் கம்பெனியைத் தேடிப்  போகிறான்.

                                         கட்டிடத்தின் நுழைவாயிலில் யாருமில்லை. கதவில் தாழ்ப்பாள் ஒன்று நீட்டிக் கொண்டிருக்கிறது.  உள்ளே நுழைபவர்    மேல் இடித்து விடும்படி இருக்கிறது.  எல்லோரும் இடி வாங்கி கொண்டு நுழைய இவன் அதைச் சரி செய்துவிட்டு நுழைகிறான்.   நடை ஓரங்களில் பூச்செடிகள் .  செடிகளுக்காக திறந்து விடப்பட்ட  தண்ணீர்  வீணாக நடை பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது.  குழாயை மூடி விட்டு  நகர்கிறான் .

                                       உள்ளே தரைத்தளத்தில் யாருமில்லை.  முதல் தளத்தில் நேர்காணல் என்று  குறிப்பு காட்டுகிறது. மாடிப்படி வழியாக ஏறும்போது பகலிலும் இரு விளக்குகள் எரிவதைப் பார்க்கிறான்.  அதையும் அணைத்து விட்டு படி ஏறி முதல் தளத்திற்குச்  .செல்கிறான். உள்ளே நுழையுமிடத்தில் ' வெல்கம் ' என்று  எழுதப்பட்ட கால்மிதி ஒன்று தலைகீழாக உள்ளது. அதையும் சரி செய்து நுழைகிறான். பலரும் அமர்ந்திருக்கும் அந்த அறையில் ஒரு வாஷ்பேசினில் திறந்து விடப்பட்ட குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவன் மட்டும் அதையும் நிறுத்திவிட்டு வந்து அமர்கிறான்.

                                 
                                         சிறிது நேரம் கழித்து  அவன் மட்டும் உள்ளே அழைக்கப்படுகிறான்.  ' இந்த வேலை மிகவும் பொறுப்பானது. பொறுப்பானவர்கள் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும்.  நீங்கள் உள்ளே நுழைந்ததிலிருந்து  வந்து அமரும் வரை செய்தவற்றையெல்லாம் கேமரா மூலமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம் . பொறுப்புடன் செயல்பட்டதால் இந்த வேலையை உங்களுக்குத் தரலாம் என்ற  முடிவிற்கு வந்தோம் '  என்று நிர்வாகத்தினர் அவனிடம் அப்பாயிண்ட்மெண்ட்  ஆர்டரை நீட்டுகிறார்கள் .


                                       அவனுக்குக் கண்ணில்  நீர் தளும்பியது.  ' அங்கு போகாதே, அதைச் செய்யாதே,  தண்ணீரை வீணாக்காதே , சிக்கனமாக இரு,  வீணாக எரியும் விளக்கை அணை , எடுத்தப் பொருளை எடுத்த இடத்தில் வை '  என்று தன் அம்மா இட்ட கட்டளைகள் அப்போது  எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் இப்போது  புரிகின்றன.   அம்மா படுத்தி  எடுக்கவில்லை  பாடங்கள்தான் நடத்தியிருக்கிறார்கள் .  அந்தப் பாடங்களே  தனக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கின்றன என்று தன் தாயை பெருமிதமாக நினைக்கிறான்.   அவர்களை தொலைத்துவிட்டு தூரமாக போக நினைத்ததை எண்ணி வருந்துகிறான்.


                                    மேலே சொல்லப்பட்டது சாதாரண கதை என்றாலும் என் இதயத்தைத்  தொட்டது.  அம்மாவின் நினைவுகளை மறுபரிசீலனை செய்து பார்க்க வைத்தது.  'அம்மா கணக்கு ' பார்த்தபோதும் அதே உணர்வுகள் . அம்மாவின் அன்பும் பாசமும் கனிவும் துணிவும் கண்டிப்பும் ஒவ்வொன்றும் நெஞ்சக்  கடலில் அலைகளாக எழும்பி மறைகின்றன.  அம்மாவை அலட்சியப்படுத்திய கணங்கள், குறைவாக பேசிய தருணங்கள், அவமதித்த நேரங்கள் எல்லாம் நெஞ்சில் குத்திய நெருஞ்சி முட்களாய் நெருடிக் கொண்டேயிருக்கின்றன. அப்போது எனக்குள் விதைக்கப்பட்ட ஆணாதிக்க சிந்தனைகளும் என்னை கண்டிக்காமல் விட்ட அப்பாவின் போக்கும் காரணமாக இருக்கலாம் என்ற  சமாதானத்தை நானே கற்பித்துக்  கொள்கிறேன். என்னை எப்போதும் விட்டுக் கொடுக்காத அம்மாவின் தியாகங்களை இப்போது அமைதியாக நினைத்துப் பார்க்கிறேன். அம்மாவுக்கு கவிதை எழுத நினைக்கிறேன் .  அம்மாவே கவிதைதான்!


                                             
                                                         

Friday, 10 June 2016

இசை ராட்சஷன் - 16 ( The Musical Legend )                          ஆயிரம் படங்களுக்கு மேல் இசை , ஐந்து முறை தேசிய விருது என இளையராஜாவை குறித்து பட்டியலிட  ஆயிரம் டேட்டாக்கள் இருக்கின்றன.  பெரும்பாலான தமிழர்களை சோகத்தில் இருந்து மீட்பதும்  நீண்ட  தூர பயணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றுவதும் இளையராஜாவின் பாடல்கள்தான்.  எந்தத் தமிழரைக் கேட்டாலும் இதைதான் சொல்வார் .   இளையராஜாவை சிலாகிப்பார்.

                                                         
         
                          ஆனால் இதையே பின்லாந்தில் உள்ள குக்கிராம இளைஞரான ஜூஹாமட் என்ற இளைஞரும் சொல்கிறார் என்பதுதான் ஹைலைட் .  அது மட்டுமல்ல . ' இளையராஜா உங்களுக்கு கிடைத்த வரம் ' என்றும் சொல்கிறார்.

                            ரஷ்யாவிற்கு அருகில்  கிழக்கு பின்லாந்தில் உள்ள  சிறு நகரில் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த இந்த இளைஞர் கணிதவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  இசையார்வம் அவருடைய தந்தையிடமிருந்து தனக்கு வந்ததாக சொல்கிறார்.   இசையும் பயின்றிருக்கிறார் .

                            2008 ம் ஆண்டு தன்னுடன்  கணிதம் பயின்ற தமிழ் நண்பர்கள்  'பெண்ணின்  மனதை தொட்டு ' என்ற படத்தில் ' கல்லூரி வானில்...' என்ற பாடலை ரசித்துக் கேட்டபோதுதான் ,  தானும் முதன் முறையாக தமிழ் பாடலை கேட்டேன் என்கிறார்.  அவருக்கு அதுதான் முதல் தமிழ் இசை கேட்டல். கேட்டு உற்சாகமும் அடைந்திருக்கிறார்.  அதன் பிறகே தமிழ் இசை பற்றிய தேடலைத் தொடங்கியிருக்கிறார்.


                                பின்பு ரகுமான் பாடல்களையும் ரசித்துக் கேட்டிருக்கிறார்.  மற்றொரு தமிழ் நண்பர் முத்து என்பவர் , ' தமிழ் இசை என்பது வெவ்வேறு  பரிமாணங்களை  கொண்டது ' என்பதை விளக்கினார்.  தமிழ்த் திரையிசையின் தலை மகன் என அவர் அறிமுகப்படுத்தியது  இளையராஜாவை.  இளையராஜாவின் அற்புத இசையில் தெய்வீகம் ததும்பும் ஜேசுதாசின் பாடல்களை  பின்லாந்து இளைஞருக்கு அறிமுகப்படுத்தினார்.


                              ' இளையராஜா ஜேசுதாஸ் இருவரின் கூட்டணியில் வந்த பாடல்களை எல்லாம் முழுமையாக ரசித்து முடிக்க எனக்கு நான்கு மாதங்கள் ஆனது ' என்கிறார்  ஜூஹாமட் . அவருடைய நண்பர் அந்தப் பாடல்களின் உள்ளார்ந்த பொருளையும் சொல்லித்தர , பாடல்களை மனதுக்குள் வாங்குவதிலும் அதனால் ஏற்படும் இனம் புரியாத மகிழ்விலும்  நாட்களைக் கழித்திருக்கிறார்.

                                    கேளடி கண்மணியின்  ' மண்ணில் இந்த காதலன்றி ',  கண்ணதாசன் வரிகளில் ' கண்ணே கலைமானே ' ,  தர்ம யுத்தம் படத்தில் ' ஆகாய கங்கை ' போன்ற பாடல்கள் தினம் தினம் அவர் வாழ்வை இனிமையாக்கியதாய் சொல்கிறார்.  ' எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் ' ஆறும் அது ஆழம் இல்ல...' என்ற பாடலை 2016 ஆம் ஆண்டு கேட்டு நான் உருகி கரைகிறேன் என்றால் , அந்தப் பாடலின் உலகத் தரமும் இறவாத தன்மையும் ஆச்சரியம் இல்லையா!? ' என  மனம் திறந்து பேசுகிறார்.


                                  ' இளையராஜாவின் பாடல்களில் நீங்கள் காணும் தனிச் சிறப்புகள் என்ன ? '  என்று அவரை கேட்டபோது ,  '  இளையராஜா ஆயிரத்தில் ஒருவர்.  அவருடைய பாடல்களுக்கு எத்தனை ஆஸ்கர் அவார்டு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவர் பாடல்களில் இருக்கும் மெல்லிய உணர்வுகளை இதுவரை உலகின் எந்த இசையமைப்பாளர் பாடல்களிலும் கண்டதில்லை.  இதயத்தின் அடி ஆழத்தில்  நேரடியாக நுழையும் அவரது இசையை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் தவித்த நாட்கள் உண்டு.  அந்த இசையின் நேர்மையும் உண்மையும் நெஞ்சில் ஏற்படுத்தும் உணர்வுகள் இனி பல காலம் கடந்தாலும் புத்தம் புதிதாக இருக்கும் என்பதில்  ஐயமில்லை ' என கூறுகிறார்.


                             '  மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் கேட்டதில்லையா? ' என  கேட்டபோது , '  கேட்டிருக்கிறேன். தேவா, ரகுமான் பாடல்களையும் கேட்டிருக்கிறேன்.  மிகுந்த வெஸ்டர்னைஸ் செய்யப்பட்டு தமிழின் தனித்துவத்தை இழந்துவிட்ட பாடல்கள் . சில ரசிக்கும்படி இருக்கும் .  இளையராஜாவின் பாடல்கள் சோதனையான காலகட்டங்களில் தனிமையும் தவிப்புமாக இருக்கும்போது அந்தச் சோதனையிலிருந்து மீண்டு வர பெரிதும் உதவியிருக்கின்றன  '  என்றும் கூறுகிறார்.


                                       ' வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? ' என்று வினவியபோது , '  வருடத்தின் பெரும்பாலான நாட்கள் குளிரும் இருளும் இருக்கும் எங்கள் நாட்டில் வசந்தம் வருவது சில மாதங்கள்தான். ஆனால்  இளையராஜா பாடல்களை  கேட்டு ரசித்து தினமும் வசந்தம் வரும் வாய்ப்பு உங்களுக்குத்தான் இருக்கிறது. அவரை இன்னும் கொண்டாட வேண்டும் . அவரது இசையை இன்னும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது தமிழர்களுக்கு என் கோரிக்கை ' என்று முத்தாய்ப்பாக சொல்லி முடிக்கிறார்.


                             இணையத்தில் அவர்  இளையராஜாவின் பாடலைப் பாடி யு டியூபில் வெளியிட்டதில் அது பிரபலமானது.  அதன் மூலம் 'இளையராஜா 1000 '  என்ற விழாவிற்கு அவருக்கும் அழைப்பு விடப்பட்டு அதிலும் ஒரு பாடலை கொஞ்சு தமிழில் பாடியதை  காணலாம்.


                                     http://www.manithan.com/news/20160212118783


                                 தயவு செய்து இளையராஜாவை கொண்டாடுங்கள் என்று வெளி நாட்டுக்காரர் கோரிக்கை வைக்கிறார்.  ஆனால் நம் தமிழர்களில் சிலர் ஆகப் பொருத்தமில்லாத வர்ணனைகளில்  அவரை இழித்துரைப்பதிலும்  அவரது இசையை பழித்துரைப்பதிலும்  தங்கள் எழுத்துத் திறமையை காட்டி இணையத்தில் எழுதியும் வருகிறார்கள். அதைப் பாராட்டுவதற்கும் நாலு பேர் அங்கே வருகிறார்கள்.  மேலை நாட்டவரின் இசைக்கு அடிமையாகி ஆங்கில மோகம் கொண்டு அலைகின்றவர்கள்  காலம் கழிந்த பிறகே அவர்கள்  என்றாவது ஒரு நாள் இளையராஜாவின் இசைத் திறனை புரிந்து கொள்வார்கள். அவர்களுக்காக காலம் காத்திருக்கட்டும் .  ராஜாவின் இசையை ரசிப்பவர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல்  அவரைக் கொண்டாடுவோம்.


                                      சமீபத்தில் ஒரு ரசிகர் அவரைக் கொண்டாடி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  எண்பதுகளில்  தென்னிந்திய மொழிகளில் அனைத்து  இதயங்களும் கேட்டு மயங்கும் வண்ணம் நாட்டுப்புற இசை, கர்னாடக இசை , ஜாஸ் இசை ,  பாப் இசை, ராக் இசை,  மேற்கத்திய செவ்வியல் இசை , ஹிந்துஸ்தானி இசை என்று பலவிதமான இசைக் கோர்வைகளை பாடல்கள் மூலம் அள்ளி வழங்கியதை அற்புதமாக  பகிர்ந்து அளித்திருக்கிறார்.


    http://www.thehindu.com/features/magazine/baradwaj-rangan-on-growing-up-in-the-ilayaraja-era/article8629657.ece#comments
                                               

                    இளையராஜாவின்   இசை தோண்டத்  தோண்ட  வரும் புதையல் .  எவ்வளவு தோண்டினாலும் இசைப் பொக்கிஷங்கள்  நிறைய கிடைக்கும் .


                           மீண்டும் 79 க்குச் சென்றால் ' நான் வாழ வைப்பேன் ' என்ற திரைப்படம் பார்த்து ரசித்த ஞாபகம் மறுபடியும்  துளிர்க்கிறது.  சிவாஜி, ரஜினி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நடித்த திரைப்படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது .  கூட்டத்தோடு கூட்டமாக புகுந்து விசில் சப்தங்கள் காதைக் கிழிக்கும் ஆரவாரத்தோடு படம் பார்த்து வந்த நினைவு இப்போதும் பசுமையாய் நெஞ்சில் உண்டு .

                   
                  இளையராஜாவின் பின்னனி இசை பிரமாதம்.  பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.  இன்றும் அந்தப் பாடல்களை அப்படிக் கொண்டாடலாம்.  எதைச் சொல்வது...எதை விடுவது என்றே தெரியவில்லை. அத்தனை பாடல்களும் வெவ்வேறு சுவை கொண்ட கனிகளைப் போல இனிமை தரக்கூடியவை. இப்போது கேட்டாலும் நெஞ்சம் இனிக்கும் நினைவுகளை தரக்கூடியவை.


                                   டி .எம்.எஸ்  அவர்களின் வளமான குரலில் வாலியின் வரிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்ட பாடல் ' எந்தன் பொன் வண்ணமே ...அன்பு பூ வண்ணமே  ' என்ற பாடல்.  அப்போது  சிவாஜி தன்  தங்கைக்காக பாடும் காட்சியில் கண்களில் பொங்கும் பாசத்தின் பரவசம் இசையோடு என்னை ஒன்ற வைத்தது.  இப்போது கேட்டாலும் பார்த்தாலும்  தாய் தந்தையோடும் சகோதரர்களோடும் வாழ்ந்த காலங்கள் மனதில் வந்து மோதி மின்னலாய் மறையும் . விழியின் ஓரம் துளிர்க்க வைக்கும்  மென்மையான பாடல்.  வீணையும் வயலினும் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடும் பின்னணி இசையோடு ராகதேவன் அற்புதமாக இசைத்திருப்பார்.
                               

                                             

                                       
                                  ' திருத்தேரில் வரும் சிலையோ ....சிலை பூஜை ஒரு நிலையோ  ' என்ற அடுத்த பாடல் பாலுவும் சுசீலாவும் அனுபவித்துப் பாடிய அழகான மெலொடி கொண்ட பாடல் .  வாலியின் வரிகளுக்கு ராஜாவின்  இசை வண்ணம் உற்சாகமானது.  கேட்கும்போதே மனசுக்குள் குதூகுலம் கும்மாளமிடும்.  பாடலின் ஆரம்பத்தில் கிடார் ஒலிக்க வயலின் கூட்டங்கள் சேரும் நேர்த்தி அற்புதமானது . பல்லவி வித்தியாசமான தாள நடையில் தபேலாவும் டிரம்சும் கலந்து  கொடுக்கப்பட்டிருக்கும்.  எஸ்.பி. பி பல்லவி முடிக்க  இடைச் செருகலாக கிடார் பீஸ் கொடுத்து சுசீலா  மீண்டும்  பாடுவது சுகமானது .   இந்த மாதிரியான இடைச் செருகல்கள் இளையராஜாவின் பாடல்களில்  சிறப்பு.  பல பாடல்களில்  நான் ரசிப்பேன்.   இடையிசையில் கிடார் மற்றும் வயலின்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் . அத்தனை இசைக்கருவிகளோடு ஆங்காங்கே  குழலின் நாதமும் இழையோடுவது பிரமிப்பூட்டும் .  பின்னணி இசையையும் முனகிக் கொண்டு இந்தப் பாடலையும் பாடிக்கொண்டு  எத்தனையோ நாட்கள்  நான் அலைந்ததுண்டு.

                               
 

                            ' என்னோடு பாடுங்கள் ...நல்வாழ்த்து பாடல்கள் ..'  என்று வாலியின் வார்த்தைகளில் எஸ்.பி.பி . பாடும் அடுத்த பாடல்  ரசிக்கத் தகுந்த மற்றுமொரு அருமையான பாடல் .  பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக  குழுவினரின்  நடனத்தோடு அமைந்த காட்சிப் பின்னனிக்கு  நல்லதொரு உற்சாகமான இசையை ராஜா கொடுத்திருப்பார். கிடார் , டிரம்பெட் அதிகம் ஆக்ரமிக்கும் பின்னணி இசை பாடலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும்.  இசைக் கருவிகளை இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா என்ற வியப்பு மேலிட வைக்கும்.  தன் வாழ்க்கையின் சோகத்தை மனதில் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு காதலிக்காக பாடும் வாழ்த்துப் பாடலை மென்மையாக ஆரம்பித்து பிறகு வேகம் கூட்டுவது  வித்தியாசமான அணுகுமுறை.  கொடுக்கப்பட்ட சூழலுக்கு பொருத்தமாக ஒரு  பார்ட்டிக்கு ஏற்றாற்போல இசை அமைக்கப்பட்ட பாடல் . பாடலின் இடையே கொடுக்கப்படும் கை தட்டல் ஒலி தாளத்தோடு மிகச் சரியாக பொருந்தியிருக்கும். 
  
                           
                                           


                         ' ஆகாயம் மேலே...பாதாளம் கீழே ...'  என்ற பாடல் ஜேசுதாஸ் பாடியது.  "  ஜேசுதாசுக்கு சோகம்,  கர்நாடகம் மட்டுமே நன்றாக வரும். இந்த மாதிரி ஜாலியான பாட்டுக்கெல்லாம் அவர் குரல் பொருந்தாது  " என்று சகோதரர்களுடன்  தர்க்கம் செய்திருக்கிறேன் .  ஆனால் இப்போது கேட்கும்போது  தாஸ் அவர்கள் அவருக்குரிய பாணியில் இந்தப் பாடலை அழகாக பாடியிருக்கிறார் என்று புரிகிறது.

       
                 ரஜினி அறிமுகமாகும் காட்சி இது. தியேட்டரில் விசிலும் பேப்பரும் பறக்கும். ரஜினி  தனக்குரிய மேனரிசத்துடன்  இந்தப் பாடலுக்கு துள்ளலான வேகமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  அவருக்கு ரசிகர்கள் அதிகம் பெருகிக் கொண்டிருந்த காலம் அது.  கொஞ்ச நேரம் திரையில் தோன்றினாலும் அசத்தி விட்டுப் போகும் ஸ்டைலுடன் வந்து மக்களின் மனதில் இடம்   .பிடித்தார்.  அதனால் சிவாஜி ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சண்டை மூண்ட கதையையெல்லாம்  பார்த்திருக்கிறேன்.

       
                                             

     
                                 இந்தப் பாட்டிலே வரும் பின்னணி இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாத்தியக்கருவிகளும்  ஹிந்திப் பாடல்களின் சாயலைக் கொண்டிருக்கும் .  70 களில் வந்து பிரபலமான ஹிந்திப் பாடல்களை தூண்டலாக  எடுத்துக் கொண்டு இளையராஜாவும்  அதே போன்ற பாடலை அவருக்குரிய பாணியில் அழகுற அமைத்துக் கொடுத்திருப்பார்.  அப்போதே அந்த சந்தேகம் இருந்தது. தற்போது 70 களின் பல பாடல்களைக் கேட்கும்போது  அது ஊர்ஜிதமாகிறது.  கிடார் , டிரம்பெட் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹிந்தி பாடல்களை அப்போது நான் கேட்டதுண்டு . 


                                  70 களில் ஏற்கனவே  ஹிந்தி பாடல்களின் மாய வலையில் சிக்குண்டதைப் போல  மக்கள் மயங்கிக் கிடந்ததை மீட்டுக் கொண்டு  வர  இளையராஜாவால் மட்டுமே முடிந்தது. மீண்டும் தமிழிசையின் பக்கம்   மக்களின் சிந்தை   திரும்பியதை  பலர் சொல்ல கேட்டதுண்டு;  நானே நேரடியாக புரிந்ததுமுண்டு.   நான் சொல்வதை சிலர் மறுக்கலாம்.  ஆனால் இளையராஜாவை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம் சொல்வதும் பொய்யாகி விடுமா என்ன!? 

               
                                   விகடனில்  ' திரைத்தொண்டர்  ' என்ற தலைப்பில் தொடராக  பஞ்சு  அருணாசலம் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரையின் ஒரு சிறு பகுதி   கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. 
                 

                                                             

                                      70 களில் தமிழ் சினிமாக்கள் தொடர் வெற்றியை சந்திக்கவில்லை.  காரணம் ஹிந்திப் படங்களின் ஆதிக்கம்.  பாபி, ஆராதனா, ஷோலே,  யாதோங்கி பாரத் போன்ற ஹிந்தி படங்கள் தமிழ்ப் படங்களை விட அதிக நாட்கள் ஓடின .

                                        தென்னிந்தியாவைத் தாண்டினால் எல்லா மாநிலங்களிலும்  இந்தி பேசுபவர்கள் இருப்பதால் இந்தியாவில் பாலிவுட் படங்களுக்கு நல்ல மார்க்கெட்  .  வேர்ல்ட் மார்க்கெட்டும் பெரிது .  ஆனால் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிய தமிழ்ப் படங்களை விட இந்திப் படங்கள் நாலு மடங்கு அதிகமாக வசூலித்தன.  சென்னையில் கூட ஓகே.  தமிழ்நாடு முழுவதும் எப்படி அந்தப் படங்கள் ஓடின?  அதில் மக்களுக்கு அப்படி பிடித்த அம்சங்கள் என்னென்ன?  கதை ஓரளவுக்கு புரியும் . வசனம் புரியாதே.  அந்த நடிகர் நடிகைகளும் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள் . அப்புறம் எப்படி அவை பட்டிதொட்டி எங்கும் இப்படி ஓடுகின்றன?  ஆச்சரியமாக இருக்கும்.


                                        விளையாட்டு மைதானங்கள், கல்யாண வீடுகள், திருவிழாக்கள்... இப்படி கிராமம் , நகரம் வித்தியாசமின்றி எங்கும் இந்திப் பாடல்கள்தான் நீக்கமற நிறைந்திருந்தன.  தமிழ்ப் பாடல்களையே கேட்க முடியாது. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. ஆர். டி . பர்மன் ,  எஸ். டி . பர்மன் ,  லக்ஷ்மிகாந்த் பியாரிலால்... என இந்தி சினிமாவில் இருந்த இசை அமைப்பாளர்களின் புது மாதிரியான இசைதான் காரணம் என தெரிந்தது.  அதற்கு முன்னரும் இந்தியில் மிகப் பெரிய இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.  ஆனாலும் அப்போது அவர்களை மீறி இங்கு தமிழ்ப் படங்கள் ஓட  , தமிழ்ப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கக் காரணம்  விஸ்வநாதன் - ராமமூர்த்தி , கே. வி . மகாதேவன்  என்ற இரு பெரும் இசை அரசர்களின் செல்வாக்கு.  அப்படி செல்வாக்கோடு இருந்த இவர்களின் திறமை , இவர்களின் மீதான மரியாதை 70 களுக்குப் பிறகு குறைந்து விட்டதா என்றால்,  இல்லை. ஆனால், அவர்கள் 60 களிலேயே தங்களின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள்.  அதனால் எத்தனைப் படங்களுக்கு இசையமைத்தாலும் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பது போன்ற உணர்வு. 


                                  ஆனால், இந்திப் பாடல்களில் இளைமையான புதுப்புது சவுண்டுகளுடன் கூடிய இசை.  அது இளைஞர்களை அலை அலையாக ஈர்த்தது.  அதுதான் அவர்களை இந்திப்படங்களையும் பார்க்கத் தூண்டியது.  'நம்  ரசிகர்கள் ஏதோ ஒன்னை புதுசா எதிர்பாக்குறாங்க '  என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.   '  நம்மால் படமே எழுத முடியாது  ' என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ' கல்யாணமாம் கல்யாணம் ' ஓடி , ஒரு சின்னத் திருப்பத்தை ஏற்படுத்தியதுபோல '  ஏன் ஒரு நல்ல இசை அமைப்பாளரை கொண்டு வரக் கூடாது? '  என்று என் மனதுக்குத் தோன்றியது.  அப்படி ஓர் இசையமைப்பாளர் வந்தால் , தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தை ,  திருப்பத்தைப் பார்க்க முடியுமே என்ற பேராசை ஏற்பட்டது. 


                              அப்படியான பெரிய இசையமைப்பாளர் கிடைத்தால்தான் இங்கு ஓடும் இந்திப் படங்களைத் தாண்டி நாம் வெற்றி பெற முடியும் , அதன் ஆதிக்கத்தைக்  குறைக்க முடியும் என உறுதியாக நம்பினேன். 


                                நல்ல இசையமைப்பாளரைத்  தேடத் தொடங்கினேன். '  இது நான் புதுசா போட்ட கேசட் '  என்று இசை வாய்ப்புக்காக யார் வந்தாலும் அவர்களின்  இசைக்குக் காது  கொடுத்துக் காத்திருந்தேன்.  ' நல்ல நேரம் வரும்போது  எல்லாமும் நல்லதாகவே நடக்கும் ' என்பார்களே... அப்படி என் காத்திருப்புக்குப் பலன் கிடைத்தது.  அந்த இளைஞன் வந்தான். ஆனால், அவன் இசையை வேறு எவரும் நம்பவில்லை, என்னைத் தவிர.  ஆனால், அவன் இசை வெளி வந்த பிறகோ ,  அவனைத் தவிர வேறு எவரையும் நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை. 


                               இத்துடன் தொடரும் என நிறுத்திய பஞ்சு அவர்கள்  இனி கட்டுரையை தொடர்ந்து அவர்தான் இளையராஜா என்று சொல்லாமலாப்  போய்விடப் போகிறார்!?  இளையராஜாவைப் பற்றி இனிமேல்தான் நிறைய சொல்வார்.  நானும் சொல்வதற்கு நிறைய உள்ளது.


.............தொடர்வேன்................