நாற்பது ஆண்டுகளாக இசைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் இசை ஆளுமையை இசைஞர்கள் மட்டுமல்ல என் போன்ற இசை ரசிகர்களும் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அவர்களின் முகநூல் பதிவிலிருந்து எடுத்தியம்ப விழைகின்றேன் .
***மார்கழியில் ...குளிர்பதன அரங்குகளில்...முன்பதிவு செய்த இருக்கைவாசிகளுக்காக இசைக்க கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.
இவற்றில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கனவே எழுதப்பட்டவை.
இதன் ராகம், தாளம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை. இது
ஒருவிதத்தில் காலங்காலமாக பிரதியெடுக்கிற வேலை. நவீன
இசைக்கருவிகளுடன் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுகின்ற பாடகனின்
வேலையை விட, கொஞ்சம் கூடுதல் லாவகத்துடன், நேர்த்தியுடன் செய்கிற வேலைதான்!
இது இரண்டுமே முன்தீர்மானம் உடையவை. ஒத்திகை செய்யப்படுபவை. பாடப்படும் விஷயங்களை பொறுத்து உள்ளடக்க ரீதியான வித்தியாசம் இருக்கும். இரண்டுமே பிரதியெடுக்கிற செயலைத்தான் செய்கிறது.
இவ்வாறு பிரதியெடுக்கிற சங்கீதப்பாடகன், தனது அதிகபட்ச படைப்பாக கல்பனாஸ்வரங்கள் பாடுகிறான். அதில் அவன் காந்தாரத்தையும் பஞ்சமத்தையும் அசைப்பது குறித்து சிலாகிக்கின்ற இசைவிமர்சனங்கள், திரைத்துறையில் நிகழ்கின்ற உண்மையான இசை முயற்சிகளை கண்டு கொள்வதில்லை.
சிறந்த இசைமுயற்சிக்கு இணையான ஒன்று திரைப்படத்தில் நிகழும்போது அது எப்படி கவனிக்கப்பட முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்ததாகும் ? மூன்றாம்தரமான வழிபாட்டுப்பாடல் சபாக்களில் ஒலிப்பதால் மட்டும் அது எப்படி விமர்சனத்திற்கு உண்டான தகுதியைப்பெறுகிறது ?திரைப்படப்பாடலில் பயன்படுத்தப்படும் இசை மலிவானது, மேலோட்டமானது என்று எப்படி தீர்மானிக்கமுடியும் ?
இவ்வாறான தீர்மானங்களை உடைத்து, உயர்ந்த இசைக்கு ஈடான பல
பரிசோதனைகளை இளையராஜா திரைப்படத்தில் நிகழ்த்தி இருக்கிறார்.
இளையராஜா போன்ற தேர்ந்த இசைப்படைப்பாளி தன் ஆழ்ந்த புலமை கொண்டு ஒரு ஸ்வரக்கோவையை எழுதி,அதனை எந்த இசைக்கருவியில் வாசித்தால் உயிர்ப்பாக இருக்கும் என்று யோசித்து எழுதிய...ஒரு பாடலின் வயலின் இசைக்கு...எந்த யோசிப்புமற்று படத்தின் நாயகி தன் பின்புறத்தை ஆட்டுவாள்.
இது எவ்வளவு அபத்தமானது. ஒரு கலைஞனின் படைப்பு அவன் சார்ந்த ஊடகத்தின் உள்ளாகவே கேலி செய்யப்படுகிறது.
ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால்
மட்டுமே இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க
வேண்டியிருக்கிறது. அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ, ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால் இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது.
நம் அருகில், நாம் பேசுகிற மொழியில் பாடுகிற கலைஞன் என்பதாலேயே நமக்கு நேரும் அலட்சிய உணர்வு கண்டிக்கத்தக்கது.
எழுதியவர் : செழியன்
நூல்: பேசும்படம்
***இசையமைப்பாளர், கம்போசர் என அழைக்கப்பட தகுதியானவர் யார்?
-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா
யூ டியூப்பில் இசை சம்பந்தமான பழைய நிகழ்ச்சியொன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் எதேச்சையாக ஏற்பட்டபோது மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அதே நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன்னர் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்தபோது இதே மனக்குடைச்சல் அன்றும் எனக்கு ஏற்பட்டிருந்தது.. பாடகர் ஒருவரால் நடத்தப்பட்டிருந்த அதில் பங்கு பெற்றவர் ஒரு தமிழ் இசையமைப்பாளர்.
அந்தப் பாடகர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அந்த இசையமைப்பாளரிடம் மிகவும் பவ்வியமாக, கூனிக் குறுகி உரையாடிக்கொண்டிருந்தார். அது பரவாயில்லை. சினிமா உலகில் இப்படியான மரியாதையை எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள் போலும்! இங்கே அதுவல்ல பிரச்சினை. எனக்குள் ஏற்பட்ட கேள்விக்குக் காரணம் பாடகர் அந்த இசையமைப்பாளரை வார்த்தைக்கு வார்த்தை Legend (மேதை) என்றும் கம்போசர் என்றும் கூறிக் கொண்டிருந்ததுதான். அதுதான் தவறு. அங்கு வந்திருந்தவரை இசையமைப்பாளராக வேண்டுமானால் யாரும் அழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் நிச்சயமாக ஒரு கம்போசர் (Composer) அல்ல. இதை என்னால் உறுதிபடக் கூற முடியும்.
ஆங்கிலத்தில் இசையுடன் சம்பந்தப்பட்டவர்களை அவர்களின் செயற்பாடு, திறமை, புலமை, அனுபவம், சாதனை போன்ற இன்னும் பல காரணங்களை அளவுகோலாகக் கொண்டு பல உப பெயர்களில் பிரித்துள்ளார்கள். அப்படியான இரண்டு திறமைசாலிகளின் பெயர்தான் Music Director மற்றும் Music Composer ஆகும். பொதுவாக நோக்கும்போது இருவருமே ஒரே தொழிலைத்தான் செய்வதாகத் தோன்றும். ஆனால் அது தவறு.
இதனை விளங்கிக் கொள்வதற்கு அந்த இருவருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் தனித்தன்மைகளையும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
பாடல் ஒன்றுக்கான மெட்டை அல்லது காட்சி ஒன்றுக்கான மெட்டைப்போட்டு அதை பாடலாசிரியரிடம் காட்டுபவரை இசையமைப்பளர் என்று அழைக்கலாம். அதாவது அவர் ஒரு பாடலுக்கான மெட்டை அமைக்கிறார். இதை யார் செய்தாலும் அவர் இசையமைப்பாளரே!
அதன் பின் அந்த மெட்டும் பாடல் வரிகளும் இன்னொருவரிடம் கொடுக்கப்படுகின்றது. அவரது தொழிற்பெயர் Arranger (அரேஞ்சர்)
(An arrangement is the adaptation of a previously written musical composition for presentation. It may differ from the original form by reharmonization, paraphrasing or development of the melodic, harmonic, and rhythmic structure)
இவர்தான் அந்தப்பாடலுக்கான வயிலின்கள் எத்தனையென்பதையும் எங்கு வாசிக்க வேண்டும் என்பதையும் என்ன தாளவாத்தியம் எப்படி வாசிக்கப்படவேண்டும் என்பதையும் Brass Section எனப்படும் ஊதும்வாத்தியங்களையும் கிட்டார் மற்றும் Beats. களையும் எவ்வாறு எங்கு வரவேண்டும் என்பதைப்போன்ற பின்னணி இசைகளை எழுதுபவர் அல்லது கோர்ப்பவர். ஒரு பாடலின் தரத்தை இவரின் இசையறிவும் இசை அனுபவமும் தீர்மானிக்கிறது. இவரின் இசையறிவும் அனுபவமும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமாயின் அதை இவர் அரேஞ் செய்யும் பாடல்களில் புரிந்து கொள்ளலாம்.
இதனால்தான் சில இசையமைப்பாளர்களின் பாடலைக் கேட்கும் போது பாடலின் மெட்டு புதிதாக இருந்தாலும் அதைத் தாங்கிச் செல்லும் பின்னணியிசையை ஏற்கனவே எங்கோ கேட்டதைப் போன்று உணர்கின்றோம். காரணம் அரேஞ்சர் என்பவருக்கு அது ஒரு தொழில் அவ்வளவுதான். அதில் அவரின் பெயர் வெளியே தெரியப் போவதில்லை. எனவே பத்தோடு பதினொன்றாக ஒரு பாடலை உருவாக்கிவிட்டால் அவரின் கடமை முடிந்துவிடும். ஒரு இசையமைப்பாளரின் மெட்டை முழுமையான பாடலாக மாற்றுபவர் Musical Arranger. ஆனால் இசையமைப்பாளர் அந்தப் பாடல் உருவாகும் போது அதை மேற்பார்வை செய்துகொள்வார்.
இசையமைப்பாளர் தேவாவின் அரேஞ்சராக அவரின் தம்பிகள் மற்றும் இப்போதைய இசையமைப்பாளர் தினா ஆகியோர் இருந்துள்ளார்கள். டி.ராஜேந்தரின் அரேஞ்சராக வைத்யநாதன் என்பவர் இருந்துள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமாரின் அரேஞ்சராக வித்யாசாகர் இருந்துள்ளார் என்று கேள்விப்பட்டுள்ளேன். ( மனசுக்குள் மத்தாப்பு படத்தின் பாடலான பொன்மாங்குயில் பாடலைக் கேட்டுப்பாருங்கள். அதில் ஒரு வித்தியாசமான வித்தியாசத்தை உணரலாம். )
பொதுவாக இசையமைப்பாளர் எனப்படுபவருக்கு இசைக்கருவிகள் வாசிக்கத்தெரியவேண்டிய அவசியமில்லை.
எம்மில் பலர் நினைப்பதைப்போல தமிழ்த்திரையிசையில், இரு இசையமைப்பாளர்களின் பாடல்களைத்தவிர, நாம் கேட்டுவளர்ந்து சிலாகித்துப் பாராட்டிய பல பாடல்களின் இனிமைக்கு முழுச்சொந்தக்காரர் அந்தப் பாட்டின் இசையமைப்பாளரல்ல. அவர் அந்தப் பாட்டின் மெட்டுக்கு வேண்டுமானால் உரிமை கோரலாம் அவ்வளவுதான்.
சரி, இனி Composer என்று அழைக்கப்படக் கூடிய தகுதி யாருக்கு இருக்கின்றது?
ஒரு பாடலை அல்லது இசையை அதன் சூழ்நிலைக்கு ஏற்ப மெட்டாகப் போட்டு, தான் உருவாக்கிய அந்த மெட்டுக்கு தானே பார்த்துப் பார்த்து இசை அரேஞ்மெண்ட்டுக்கான இசைக்குறிப்புக்களை எழுதி, அந்தப்பாடலுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய இசைகளை தானே உருவாக்கி, அந்த இசைக் குறிப்பை இசைக்கலைஞர்களுக்கு விளங்க வைத்து , அந்த மெட்டிற்குள் ஜீவனைக் கொடுத்து, கலைஞர்களின் வாசிப்பில் தடங்கல் ஏற்படும்போது சரி செய்யக்கூடிய திறமையைத் தன்னகத்தே கொண்டிருந்து, பாடலையும் எழுதக் கூடிய வல்லமையுடன் பாடலை பாடும் திறமையுடன் மிக முக்கியமான ஒரு தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது, இசையை இழை இழையாக, அணு அணுவாக, அறிந்துவைத்து, ஒரு பாடலுக்கு அல்லது இசைக் கோர்வைக்கு சேர்க்கும் இசையை ஒன்று ஒன்றாக ரசித்து ரசித்து தானே கோர்க்கவேண்டும். புதிது புதிதாக உருவாக்கவேண்டும். தான் எதிர்பார்ப்பதை கலைஞர்களிடமிருந்து அட்சரம் பிசகாமல் வெளிக்கொணரத் தெரிய வேண்டும்.
உலக இசை வரலாற்றில் இந்தத் திறமைகளை தம்மகத்தே கொண்டிருந்த சிலரைப் பட்டியலிடுகின்றேன்.
Johann Sebastian Bach,
Wolfgang Amadeus Mozart ,
Ludwig van Beethoven
Richard Wagner ,
Franz Schubert
நான் மேலே குறிப்பிட்ட ஐவரைவிட இன்னும் பலர் இருக்கின்றார்கள்.
ஒருவர் வெள்ளைவெளேரென்ற நீள நஷனல் ஷர்ட்டும் வெள்ளை குர்தா போன்ற பாண்டும் வெள்ளைக் காலணியும் நெற்றியில் குங்குமப் பொட்டும் வைத்துவிட்டு பந்தாவாக வந்தால் அவரை மிகப்பெரும் இசைமேதை என எண்ணுவது எங்களின் வழக்கமாகிப் போய்விட்டது.
எனது சிற்றறிவுக்குப் புரிந்தவரையில் தமிழ்த் திரையிசையில் கம்போசர் என அழைக்கக் கூடிய தகுதி இசைஞானி இளையராஜாவுக்கு இருக்கின்றது.
மெல்லிசை மன்னர்கள் இசைமேதைகள். ஆனால் அவர்கள் மெட்டை மட்டும் போடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அரேஞ்மெண்ட் மற்றும் மேலைத்தேய முறையில் இசைக்குறிப்புக்களை காலகாலமாக எழுதிவந்தவர்கள் அவர்களின் உதவியாளர்களான ஹென்றி டானியல். ஜோசப் கிருஷ்ணா, மற்றும் ஷியாம் போன்றவர்கள்.
இதில் இசைஞானியை ஒரு கொம்போசர் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அதற்கான சான்றுகளில் இது ஒன்று:
வா பொன்மயிலே ..நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது !
உலகின் பிரசித்தமான கம்போசர்களில் ஒரு ஒற்றைப் புல்லாங்குழலையும் அதற்குப் பக்கத்துணையாக வயிலின் கூட்டணியையும் மிக அழகாக, மனித உணர்வுகளை கன கச்சிதமாக வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகப் பயன்படுத்தியுள்ளவர்களில் முதல் ஐவரைப் பட்டியலிடச் சொன்னால் கண்டிப்பாக ராசையாவை அங்கே முன்னணியில் வைப்பேன். ராசையா அளவுக்கு அந்த ஒற்றைப் புல்லாங்குழலை பாடல்களுள் மிக அழகாக எவரும் பயன்படுத்தியிருப்பார்களா என்பது சொல்லத் தெரியவில்லை.
80 களில் வெளிவந்த இந்தப்பாடலை அதன் ஆரம்ப இசையை அந்த ஆரம்ப இசைக்குள் தட்டுத் தட்டாக புல்லாங்குழல் பாவிக்கப்பட்டுள்ள விதத்தை.. அந்தப் புல்லாங்குழலுடன் வயிலின் கூட்டணி இணைக்கப்பட்டுள்ள லாவகத்தை அவற்றின் சேர்க்கையானது பாலு என்ற ஒப்பற்ற பாடகனுக்குள் ஏற்படுத்தியுள்ள கிளு கிளுப்பைக் கேட்டுத்தான் பாருங்களேன். மனம் அப்படியே இலேசாகிப்போவது திண்ணம்.
இந்தப்பாடலை எழுதியிருக்கும் பஞ்சு அருணாசலம் அதன் ஆரம்ப இசைக்குள் புல்லாங்குழல் பாவிக்கப்பட்டுள்ள விதத்திற்கு ஏற்றாற்போல ( குயிலின் கூவலை ஒத்த வாசிப்பது ) பொன் மயிலே என்பதற்குப்பதிலாக குயிலே என்று எழுதியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ ????
உலகின் சிறந்த இசைக்கோர்வைகளில் புல்லாங்குழலை மிகச் சிறந்தமுறையில் பயன்படுத்தியவர்களாக:
பிரான்சின் பிலிப் போடின்,
இங்கிலாந்தின் அனா கிளின்
ஆர்ஜண்டீனாவின் மார்சல்லோ கொனோலஸ்
அமெரிக்காவின் அந்தோனி கொமிசெல்லோ
ஐரிஷின் ஜெறாட் பஃறி
அவுஸ்திரேலியாவின் ஆன் போய்ட்
போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள் ஆனால் இவர்களின் இசைகளைத் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான விதத்தில் புல்லாங்குழலைப் பயன்படுத்தியிருப்பது ஞானியாராகத்தான் இருக்க முடியும்.
உன் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றார் நபிகள்
இங்கே....
ஞானியார் அந்த ஒற்றைப் புல்லாங்குழலுடன் வயிலின் கூட்டணியை கவித்துவமாகப் பயன்படுத்தியுள்ள விதத்தால் உந்தப்பட்டு, அந்தப்பாட்டுக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு பாடும் பாலுவின் குரலையும் அவருக்கேயுரித்தான சில்மிஷ சங்கதிகளுடன் கூடிய பாடும் பாணியையும் கேட்டுக் கிறங்கும் போது
சொர்க்கம்......
இங்கேயும் ஞானியின் இசைக்குள்ளும் இருக்கிறது !!
இந்த இடத்தில் இன்னுமொரு மிக முக்கியமான விசயம் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது கடந்த 35 வருடங்களாக ஞானியாரின் புல்லாங்குழல் கலைஞர்களாக இந்தத் தமிழ் இனத்துக்கு அரும்பணியாற்றிய அவரின் முதல் புல்லாங்குழல் கலைஞரான திரு. குணசிங் தொடங்கி தற்போது அவருடன் பணிபுரிபவரும் நீண்ட நாட்களாக ஞானியின் கலைஞராக இருப்பவருமான திரு.நெப்போலியன் வரை அசாதாரணக் கலைஞர்கள். இவர்களும் இசையில் Creaters என்பது இவர்களின் வாசிப்புக்களைக் கூர்ந்து கேட்போரால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த மகா கலைஞர்களும் இசையில் அவர்களின் பங்களிப்புக்களும் பாடல்களின் பெயர்களுடன் ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.
இளையராஜாவின் இசையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றிரண்டு அல்ல ஆயிரமாயிரம் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் சொற்ப செய்திகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.
மீண்டும் 1979 ஆம் ஆண்டுக்குச் சென்றால், ' நல்லதொரு குடும்பம் ' என்ற படத்தின் பாடல்கள் நினைவிற்கு வருகிறது . அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள்இருந்தாலும் இரண்டு பாடல்கள் எல்லோராலும் அதிகம் பேசப்பட்ட பாடல்கள்.
' செவ்வானமே பொன் மேகமே ' என்ற பாடல் இளமை துள்ளலுடன் இனிமையாக இருக்கும் . டி . எல் . மகாராஜன், சசி ரேகா ,ஜெயச்சந்திரன், கல்யாணி மேனன் ஆகிய நான்கு பாடகர்கள் பாடியிருப்பார்கள். இரண்டு ஜோடிகள் ஆடிப்பாடி மகிழ்வதை ராஜா இசையில் அழகாக கொண்டு வந்திருப்பார். கண்ணதாசன் வரிகளுக்கு கொடுக்கப்பட்ட இசை சுகம் தரும். ' ஹம்சத்வனி ' ராகத்தில் உற்சாகமூட்டும் பாடலுக்கு கிடார், வயலின், குழல் கொண்டு மயக்கும் இசையை கொடுத்திருப்பார். இந்தப் பாடல் ஒலிக்கும்போதெல்லாம் கூடவே சேர்ந்து பாடிக் கொண்டு திரிந்தது இப்போது நினைத்தாலும் இனிக்கிறது.
அதே படத்தில் ' சிந்து நதிக் கரையோரம் ' என்ற டூயட் பாடல் அதிகம் வானொலியில் இசைக்கப்பட்ட பாடல். டி . எம். எஸ் , சுசீலாஇருவரும் இணைந்து கண்ணதாசனின் வார்த்தைகளுக்கு உடல் அமைத்திட ஆபேரி ராகத்தில் ராஜா அதற்கு உயிரூட்டியிருப்பார். இசையில் ராஜாவின் முன்னோர் பிரதிபலித்தாலும் பின்னணி இசையில் ராஜாவின் கை வண்ணம்தெளிவாகத் தெரியும் . சிவாஜி கணேசனுக்கு என்றே தனியொரு இசையை கற்பனை செய்து வைத்திருப்பாரோ என நினைக்கத் தோன்றும். நாற்பதை தாண்டியவர்கள் இந்தப் பாடலை நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை. நடுத்தர வயதில் ஏற்படும் காதல் ரசனைகளை பிரபலிக்கும் பாடலாக அமைந்து விடும் என்பது அந்த வயதில் புரியவில்லை. இப்போது கேட்கும்போது இனம் புரியாத எண்ண அலைகள் அலை மோதுவதை தவிர்க்க முடிவதில்லை. இந்தப் பாடலை பாடியவர்கள் , பாடலுக்கு நடித்தவர்கள் , இசையமைத்தவர் என்று எல்லோருமே நடுத்தர வயதில் இருந்தார்கள். அதனால்தான் அந்த அலைநீளம் எல்லோருக்கும் பொருந்தும் வகையில் மனதை வருடும் பாடலாக அமைந்து போனது .
நாற்பது வருடங்களாய் கொஞ்சமும் அசராமல் இசைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இசை ஞானியின் இந்தப் பாடல்கள் எல்லாம் இன்னும் நாற்பது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் அதன் இனிமை மாறாமல் இருக்கும். எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்த போதிலும் குறைவான தொழில் நுட்பத்தில் மிகவும் விரைவாகவும் தரமாகவும் ஆயிரக்கணக்கான பாடல்கள் ஆத்மார்த்தமாக படைத்திருக்கும் அந்த இசைப் பிரம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
பொருள் சேர்த்து விருது வாங்க நினைக்கும் மனிதரல்ல. கொடுக்கப்பட்ட விருது சரியான அளவுகோலுக்கானது அல்ல எனத் தெரிந்து அந்த விருதை நிராகரித்தவர். அதற்காக அவர் வெட்கப்படவில்லை. அவரைச் சென்று சேராமைக்காக விருதுகள்தான் வெட்கப்பட வேண்டும் .
............................தொடர்வேன்..............................