மழை . எப்போதாவது வரும்போது பார்த்து மகிழ்வோம் . அடிக்கடி பெய்தால் இன்னும் மகிழ்வோம் . தொடர்ந்து பெய்தால் சற்று மிரள்வோம். பேய் மழையாக இருந்தால் சற்று கலங்குவோம். அடிக்கடி தொடர்ந்து எப்போதும் பேய் மழையாக இருந்தால் என்ன செய்வோம்!? மகிழ்வு மறைந்து மிரட்சி தொடங்கி மனசு கலங்கி பயத்தில் உறைந்து போவோமா இல்லையா? அதுதான் நடந்தது. அந்த நான்கு மாவட்டத்து லட்சக்கணக்கான மக்களுக்கும் அதுதான் நடந்தது.
தீபாவளியை கொண்டாடிய சந்தோசம்தான் அந்த ஜனங்களுக்கு சமீபத்திய கடைசி சந்தோசமாக இருக்கும். அதன் பிறகு தொடர் புயலினால் ஏற்பட்ட தொடர் மழையால் ஒரு மாத காலமாக எதையோ பறிகொடுத்தவர்களாகவே தெரிகிறார்கள். வெள்ளம் வடிந்தாலும் சந்தோசமும் வடிந்த முகத்தோடு திரிகிறார்கள். உண்மையில் அவர்களில் பலர் எல்லாவற்றையுமே பறிகொடுத்தவர்கள் . வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த சொத்து,சுகம், உடைமைகள் அனைத்தும் மழை வெள்ளம் வழித்து எடுத்து விட்டுப் போய்விட்டது . பலரது வீட்டையும் காணவில்லை. உயிர் தவிர மிஞ்சியது ஏதும் இல்லாதவர் பலர். கெஞ்சிக் கேட்டு கையை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டவரும் பலர்.
ஊரு விட்டு ஊரு வந்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் ஜனங்கள் நிறைந்த நகரம் சென்னை. திடீரென பத்து நாட்களுக்குள் நரகமாகிப் போகும் என யாரும் ஆருடம் கூறவில்லை. நரகத்தையும் மரணத்தின் விளிம்பினையும் நேரில் பார்த்ததை செரித்து விடக்கூடிய மனநிலையில் அங்கு வாழும் மனிதர்கள் யாரும் இல்லை. ஊரை விட்டு உறவை விட்டு ஓடிப்போய் உயிர் தப்ப நினைப்பதற்குள் பல வீடுகளை மழையும் வெள்ளமும் கபளீகரம் செய்தது. தண்ணீர் சூழ்ந்தது. உயரமான பகுதிகளில் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது.
உணவில்லை . குடி நீர் இல்லை. மாற்றிக் கொள்ள துணி இல்லை. பலருக்கும் வாழ்க்கை சூன்யமாகிப் போனது. உயிராவது மிஞ்சுமா என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்த வேளையில் உதவிக் கரங்கள் கொஞ்சம் நீள ஆரம்பித்தன . அரசிடமிருந்து அந்த நேரத்தில் வந்த உதவி ஒன்றுமில்லை. வந்திருந்தாலும் அது தாமதமாய் வந்தது. அண்டை வீட்டுக்காரர்கள், அடுத்தத் தெருக்காரர்கள், முகமறியா நல்ல மனிதர்களின் நேசக்கரங்கள் தாங்கியதால் போன உயிர் திரும்பி வந்தது.
எல்லாமே கேள்விப்பட்டதுதான்! தென் தமிழகத்தின் மையப்பகுதியில் புயல் மழை அதிகம் பாதிக்காத மதுரையில் இருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் நிலவரம் அறிந்து கொண்டிருந்த என் போன்றோருக்கு நடந்த கலவரம் தெரியாது. மக்களின் வலி புரிந்திருக்கவும் நியாயமில்லை. அதுவும் என் கசின் சென்னையிலிருந்து வந்து சேர்ந்த பின் புரிய ஆரம்பித்தது. அவனுடைய குடும்பம் மதுரையில் இருந்ததால் மழையின் சொரூபம் கண்டு மிரண்டு ஓடி வந்து விட்டான். அன்றே நான் அவனை சந்தித்தபோது அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அலைகளை என்னால் உணர முடிந்தது. அவன் அனுபவம் அறிந்தேன்.
இடுப்பளவு தண்ணீரில் சாலையைக் கடந்து எக்மோரை அவன் பயத்துடனேயே அடைந்தபோது டிக்கட் பதிவு செய்யப்பட ரயில் ரத்தானது. கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்து கூட்ட நெரிசலில் சமாளித்து கோயமுத்தூர் வந்து, பிறகு பஸ் பிடித்து மதுரை வந்து சேர்ந்தான்.
தன்னுடைய நண்பர்கள் , உடன் பணியாற்றுபவர்கள் எல்லோரும் சென்னையிலேயே மாட்டிக் கொண்டதாக வருத்தப்பட்டான்.
" உயிருக்கு பயந்து நான் ஓடி வந்து விட்டேன். அடைக்கலம் தேட எனக்கு மதுரை இருக்கிறது. அவர்கள் சென்னையிலேயே வாழ்பவர்கள் . எங்கே போவார்கள்? " என்று கவலையுற்றான்.
" யாருக்கும் உதவி செய்யாமல் வந்து விட்டேன் . அங்கேயே இருந்திருக்கலாமோ என்ற குற்ற உணர்வு ஏற்படுது " என்று மிகவும் ஆதங்கப்பட்டான்.
" நீ ஒருவன் மட்டும் என்ன செய்து விட முடியும் ? " என்றேன்.
" ஏதோ என்னால் ஆனதைச் செய்திருப்பேன். "
" அவனவன் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே வழியில்லாதபோது அடுத்தவனைப் பற்றி யோசிக்கின்றாயே? " என்று அன்று நான் அவனை சமாதானப்படுத்துவதற்குச் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு பொய்யாகிப் போயிருக்கிறது என்பது இன்று தெரிகிறது. ஓடி ஓடி உதவி செய்த இளைஞர்கள் , பிறரை காப்பாற்ற தன்னுயிரையே தந்த இளைஞன் ஒருவன், மழையில் அயராது பணியாற்றிய சில அரசுப் பணியாளர்கள், படகுகளை எடுத்துக் கொண்டு வீதி வீதியாக உதவிக்குச் சென்ற மீனவர்கள், தொண்டு நிறுவனங்களின் நல்ல உள்ளங்கள் , வெவ்வேறு இடங்களிலிருந்து உதவி செய்ய ஓடி வந்த இனிய மனிதர்கள் என்று ஆயிரக்கணக்கில் உதவிக் கரங்கள் நீட்டப்பட்டதை பிற்பாடு அறிந்தேன்.
என்னோடு அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இடையிடையே தன நண்பர்களுக்கு போன் செய்து நிலவரம் கேட்டு கொண்டே இருந்தான். ஜெகன் என்ற ஒரு நண்பரை தொடர்பு கொண்டபோது , "சார் ..வீட்டைப் பூட்டிவிட்டு எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் " என்று என் கசின் சொல்ல அவரோ, " சார்... மழை பலமாக பெய்கிறது. என் வீட்டு வாசல் வரை தண்ணீர் வந்துவிட்டது. சாலையில் இறங்கிச் செல்ல முடியாது. நானும் மனைவி பிள்ளைகள் நலம். ஒன்றும் பயமில்லை. சமாளித்து விடலாம் . காலையில் எல்லாம் ஓடி அடைந்துவிடும். " என்றார்.
மழையைப் பற்றி அப்போதுதான் அவனிடம் கேட்டேன் .
" இப்படி ஒரு மழையை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை. வாளியிலிருந்து தண்ணீரை கொட்டினால் எப்படி கொட்டுமோ அப்படி கொட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு முறை ஆறு மணி நேரத்திற்கு தொடர்ந்தாற்போல பேய் மழை பெய்ததைப் பார்த்துவிட்டுத்தான் எனக்கு பயம் ஏற்பட்டது. " என்று அவன் சொன்னதைக் கேட்டு நானும் சிலிர்த்தேன்.
மறுநாள் காலையில் மீண்டும் தன் நண்பரை அவன் தொடர்புகொண்டபோது அவர் போனிலேயே அழ ஆரம்பித்துவிட்டார்.
" சார்.. என்னாச்சு? "
" என் வீடு தண்ணீரில் மூழ்கிப் போச்சு . நானும் குடும்பமும் இரண்டாவது மாடியில் அடுத்தவர் வீட்டில் இருக்கிறோம். வீட்டில் இருந்த எல்லாம் போச்சு சார். லோன் போட்டு வாங்கின பொருள் எல்லாம் போச்சு . என் கண் முன்பே எல்லாம் அடிச்சிக்கிட்டு போறதை பார்த்தேன் சார் . என்ன செய்வது என்று தெரியவில்லை. " என்று மிகுந்த கவலையோடு அழுகையுடன் சொன்னார்.
என் கசின் முகம் வெளிறிப் போனது. " பாவம் ... அழுகிறார்" என்று என்னைப் பார்த்து சொல்லிக் கொண்டே அவரிடம் தொடர்ந்தான்.
" உயிர்தான் சார் முக்கியம் . மற்றதைப் பற்றி கவலைப் படாதீங்க. பொருள் போனால் வாங்கிக் கொள்ளலாம் சார். சம்பாதிக்கத்தானே போகிறோம். பத்திரமாக இருங்கள்" என்று அவருக்கு ஆறுதல் கூறினான். சம்பாதித்துக் கொள்ளலாம் என்று எளிதாக சொல்லி விட்டான். எல்லாப் பொருட்களும் இழந்துவிட்டு திரும்ப வாங்குவது அவ்வளவு எளிதான காரியமா என்ன!? ' என் 20 வருட உழைப்பு தண்ணியோட போச்சே ' என்று ஒரு பெரியவர் சொன்னதாக பத்திரிக்கையில் வாசித்தபோது அந்த வார்த்தைகளின் கணம் நெஞ்சில் ஆணி அறைந்தது போல இருந்தது.
அந்த நண்பர் சென்னையில் செம்பரப்பாக்கம் ஏரி அருகே அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் தரைத்தளத்தில் வீடு வாங்கி குடியேறியிருக்கிறார். மழை பலமாக பெய்த அந்த இரவில் தண்ணீர் மட்டம் திடீரென உயர ஆரம்பிக்க இவர் குடும்பத்தோடு மேல் மாடிக்குச் சென்று மேலே இருந்து எட்டிப் பார்க்க, அவர் கண் முன்னே அனைத்தும் பறிபோனதை கண்டு பரிதவித்ததைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. பெரும் சத்தத்தோடு வெள்ளம் அவர் வீட்டை மூழ்கடித்துச் செல்வதை கண்ணீருடன் பார்த்திருக்கிறார். சுனாமி வெள்ளம் போல் தண்ணீர் தறிகெட்டு ஓடியிருக்கிறது. என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை . ஒரே இருட்டு. தண்ணீர் மட்டம் இன்னும் ஏறியிருக்கிறது . இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடனேயே பொழுதைக் கழித்திருக்கிறார்.
என்ன நடந்தது என்று மறுநாள் தெரிந்தது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் செம்பரப்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டிருக்கிறது. முழங்கால் அளவு தண்ணீர் மழையினால் ஏற்பட்டது என்றால் வீட்டையே மூழ்கடித்த தண்ணீர் ஏரி திறந்ததினால் ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள நீண்ட நேரம் பிடித்தது. மழையினால் உலகம் அழியப் போவதாக அவர் நினைத்திருக்கிறார். கடல் ஊருக்குள் புகுந்து எல்லோரையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போகிறதோ என்ற மரண பீதியில் நடுங்கிப் போய்விட்டார். வீட்டையே பெயர்த்து எடுத்து விடுமோ என்று அச்சப்பட வைக்கும் அளவிற்கு நீரின் ஓட்டம் இருந்திருக்கிறது. 30, 000 கன அடி தண்ணீர் திறந்ததாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. 85,000 கன அடி திறந்து விடப்பட்டிருக்கலாம் என்று அனுபவம் உள்ளோர் சொல்கிறார்கள். ஏரி உடைந்திருந்தால் லட்சக்கணக்கானோர் அழிந்து போயிருப்பார்கள்.
இரவு இரண்டு மணி அளவில் நாய்களின் மரண ஓலம் அதிகமாய் கேட்க எட்டிப் பார்த்தால் ஆயிரக்கணக்கான நாய்கள் கத்தியபடியே அடித்துச் செல்லப்படுவதை கண்டார். அவருடைய அனுபவத்தை என் கசின் விவரிக்க விவரிக்க சினிமா போலவே என் கண்களில் அந்தக் காட்சி தெரிந்தது.
வளர்ப்பு பிராணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஆயிரக்கணக்கில் மனிதர்களைக் காணவில்லை. சில பிணங்கள் வெள்ளத்தில் மிதந்து போயின. அரசிடமிருந்து ஆறுதல் கூட வரவில்லை. சேரி மக்கள் என்று யாரை தாழ்மையாக மக்கள் நினைத்து வைத்திருந்தார்களோ அவர்கள்தான் ஓடி ஓடி உதவி செய்ய வந்தார்கள். உண்மையான ஹீரோக்கள் யார் என்பது இளைய தலைமுறைக்குத் தெரிய வந்தது. சேரிப் பகுதியிலிருந்து வந்த இளைஞர்கள் படகுகளில் சென்று எத்தனையோ மனிதர்களையெல்லாம் காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். செத்துப் போயிருந்த அன்பு, பரிவு, கருணை, இரக்கம் , நேசம் , மனிதம் எல்லாமும் கூட காப்பாற்றிக் கரை சேர்க்கப்பட்டன . சினிமாவில் நல்லி எலும்பு கடித்து நாற்பது பேரை பந்தாடிக் காட்டிய நடிகர் ராஜ்கிரண் கழுத்தளவு தண்ணீரில் காப்பாற்றப்பட்ட காட்சி யதார்த்தத்தை உரைத்தது. மழைக்கு முன்னாள் இளம் பெண்களால் பொறுக்கிகளாக பார்க்கப்பட்ட சில இளைஞர்கள் ஓடி ஓடி எல்லோருக்கும் உதவி செய்ததை வைத்து ஹீரோக்களாக பார்க்கப்பட்டார்கள். ஹீரோ ஜீரோ ஆனதும் ஜீரோ ஹீரோ ஆனதும் மழை கற்றுக் கொடுத்தது.
சேரி மக்கள் பலரும் தங்கள் குடிசைகள் முழுவதையும் இழந்து விட்டார்கள். ஆனாலும் மழையிலும் மற்றவருக்கு முகம் சுளிக்காமல் உதவிகள் செய்திருக்கிறார்கள். ' எல்லாம் இழந்துவிட்டு உதவி செய்ய எப்படி உங்களால் முடிகிறது ? ' என நிருபர் ஒருவர் கேட்டதற்கு , ' இதற்கு முன்னால் எங்களிடம் என்ன இருந்தது இழப்பதற்கு? ' என்று மிகவும் சாதாரணமாக ஒரு இளைஞர் கூறியிருக்கிறார் . விளிம்பு நிலை மனிதர்களின் நிலை இன்னும் முன்னேற்றம் காணாத நிலையில்தான் இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் .
வெள்ளம் வடிந்தது. இயல்புநிலை திரும்பியது. தண்ணீர் கிடந்த பகுதியெல்லாம் சேறும் சகதியுமாய் ஆனது. தொண்டுள்ளங்கள் உணவாய் உடையாய் கொடுத்த உதவிகளை சில நல்லுள்ளங்கள் பிடுங்கி , ' அமைச்சர் வராமல் ஒருத்தரும் எதுவும் கொடுக்கக் கூடாது ' என்று சொல்லி சகதியில் தூக்கி எறிந்ததை நினைத்து நெஞ்சு வலித்தது.
' எங்க ஏரியாவுக்கு 2000 உணவுப் பொட்டலம் கொடு ' என்று அரசியல் கைக்கூலிகள் தொண்டு செய்தவர்களை அடித்துக் காயப்படுத்திய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து கோபம் தலைக்கேறியது.
அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களைப் பிடுங்கி 'ஸ்டிக்கர்' ஒட்டி அனுப்பிய குண்டர் படையின் கூத்துகள் வேதனை அளித்தது. மழை வெள்ளத்திற்குப் பயந்து வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றவர்களின் வீட்டை சிலர் கொள்ளையடித்திருக்கிறார்கள். சில வீடுகளில் ஆண்கள் மட்டும் வீட்டை பாதுகாத்துக் கொண்டு கிடந்திருக்கிறார்கள். தப்பியோட முடியாத வயதானவர்களும் நோயாளிகளும் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். நாள் முழுவதும் கடும் வேலை பார்த்துவிட்டு சம்பாதித்ததை அரசு டாஸ்மாக்குக்கே கொடுத்துவிட்டு நிறைந்த குடி போதையில் குடிசைகளில் படுத்துக் கிடந்தவர்களை எழுப்பக் கூட நேரமில்லாமல் போனதால் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்ற வெள்ளத்தில் அவர்கள் பிணங்களாக மிதந்து போன கதை அதிகம் வெளியில் சொல்லப்படவில்லை. எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று சிலர் பொருட்களின் விலையை பத்து மடங்கு விலையேற்றம் செய்து லாபம் பார்த்திருக்கிறார்கள். இன்னும் பல கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ' போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று எளிதாக பேசிவிட்டுப் போவது போல ' பேரிடர் என்றால் அழிவு இருக்கத்தான் செய்யும் '
என்றும் அடுத்து பேச்சு வரலாம் . சாதாரண வார்த்தைகள் . ஆனால் அதனால் ஏற்படும் வலி பெரியது.
பேரிடர் என்று பெயர் சூட்டி என்ன பயன்? இது யாரால் விளைந்தது? இத்தனை அழிவுகளுக்கு யார் காரணம் ? இயற்கையா? மழையா? வடி நீர் கால்வாய்களை மறைத்து வீடு கட்டிய மனிதர்களா?வழிப்போக்குகளை அடைத்துக் கொண்ட பிளாஸ்டிக் குப்பைகளா? ஏரிகள், கண்மாய்கள்,குளங்கள் , அணைகள் இருந்த இடங்களிலெல்லாம் வீடு கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கிய அரசு அதிகாரிகளா? அந்த வீடுகளைக் கட்டித் தந்த பில்டர்களா? சொந்த வீடு வாங்கும் ஆசையில் அடுக்கு மாடி வீடுகளுக்குக் குடியேறும் மனிதர்களா? முகத்துவாரத்தை மட்டுமல்ல கண்மாய், கால்வாய், ஏரிகளை தூர் வாராத அரசா? எந்த முன்னறிவிப்புமின்றி ஏரியை திறந்துவிட்ட அதிகாரிகளா? அவர்களை ஆரம்பத்திலேயே அணை திறந்து விட உத்தரவு பிறப்பிக்காத தலைமைச் செயலரா? அவருக்கு உத்தரவு பிறப்பிக்காத தலைமையா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யார் பதில் சொல்வது? இந்தக் கேள்விகளை யார் எங்கே கேட்பது என்றே தெரியவில்லை. மக்களுக்கு அந்த அதிகாரம் உண்டா? ஊடகங்கள் அதை எடுத்துரைக்கலாம். இந்த விசயத்தில் எல்லா ஊடகமும் பத்திரிக்கைகளும் ஓரணியில் நின்று கேள்விகள் எழுப்ப வேண்டும் . ஆனால் இடித்துரைக்க வேண்டிய பெரும்பான்மையான தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் ஆளும் அரசுக்கு துதி பாடும் பரிதாபமான நிலைக்கு ஆளாகியிருக்கின்றன . ஒரு அரசு செய்ய வேண்டிய கடமைகளைச் சொல்வதை விடுத்து எதிக்கட்சித் தலைவர்களை கிண்டலும் கேலியும் பேசி யாரை திருப்திப்படுத்த முயல்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இடரும் துயரும் நிரந்தரமல்ல . பெரிய அழிவை சந்தித்தாலும் மதம் அழித்த மனிதம் பல இடங்களிலும் இருந்ததை சென்னை மக்கள் சந்தித்து விட்டார்கள். அதுவரை யாரென்றே தெரியாத அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் சினேகமாக சிரிக்கவும் உதவவும் செய்திருக்கிறார்கள். நம்பிக்கை ஒளி படர்ந்திருக்கிறது . என்ன நேர்ந்தாலும் இனிமேல் சமாளித்து விடுவார்கள். உடம்பில் ஏற்பட்ட ரணங்களை விட மனசில் ஏற்பட்ட ரணங்கள் ஆற பல காலம் பிடிக்கும் . ரணங்கள் அழியாத வடுக்களாக மாறிவிட்டன. செய்யப்பட்ட அலட்சியங்களும் அலட்டல்களும் மக்களுக்கு படிப்பினையை தந்திருக்கிறது. இலவசங்களுக்கு மதி மயங்கி ஓட்டு போடும் பொம்மைகளாக இனி மாறிப்போக மாட்டார்கள்.