Sunday, 18 January 2015

இசை ராட்சஷன் - 6                                                      இசை ராட்சஷன் - 6

                                                        ( The Musical Legend  )        


                                  1978 இல் இளையராஜா இசையமைத்த பாடல்களின் மெருகு கூடிக்கொண்டே சென்றது . தமிழகத்து மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து இசையைக் கொடுப்பதில் வல்லவராக அவர் உருமாறினார் . ஒரு பாடலைப் போல இன்னொரு பாடல் இருந்தது என்று எவரும் கூறிவிட முடியாதபடிக்கு அவருடைய இசைத் தேர்வு பாராட்டும்படி அமைந்தது. பாட்டுக்கும் மெட்டமைத்தார். மெட்டுக்கும் பாட்டு எழுத வைத்தார். காலப் போக்கில் மெட்டுகளுக்கு பாடல் அமைக்கப்படும் யுக்தி அதிகமானது. எதிர்காலத்தில் தன்னுடைய    அண்ணன்  பாவலர் வரதராஜன் அவர்களின் பாட்டுகளுக்கு மெட்டு கட்டி அதையும் ஹிட் ஆக்கியவர்  இளையராஜா.

                                     


                                அவர் இசையில் இசைக்கருவிகளின் நாதம் வித்தியாசமாய் ஒலித்தது . ரசிக்கும்படி இருந்தது. மற்ற இசையமைப்பாளர்களும் இசைக்கருவிகள் பயன்படுத்தி பாடல் அமைத்தார்கள்.  ராஜாவின் பாடல்களில் மட்டும் ஏன் அந்த வித்தியாசம் தெரிந்தது என்பதற்கு அப்போது என்னிடம் விடையில்லை . ஆனாலும் தெரிந்தது. அதுவே இளையராஜாவின் சிறப்பு , மகிமை, திறமை , புதுமை. புதியதொரு புத்துணர்வூட்டும் இசையை கொடுப்பதில் இளையராஜாவிற்கு நிகராக அப்போது யாருமேயில்லை.


                                   அதே காலகட்டத்தில் அவருடைய இசை முன்னோர்களும் இசையமைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். சிலர் ராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ அதிகமாகவோ கூட இசையமைத்தார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. சொற்ப படங்களின் பாட்டுகள் வெற்றியடைந்தன. தமிழகத்து  மூலை முடுக்குகளில் எல்லாம் ராஜாவின் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன . ஒவ்வொரு  படத்திலும்  இரண்டு மூன்று பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்ததை காண முடிந்தது. சில பாடல்கள் நெஞ்சைத் தாலாட்டின ,  சில  நெஞ்சில் தீ மூட்டின . சில பாடல்கள் பன்னீர் தெளித்தன , சில கண்ணீர் வரவழைத்தன .  சில பாடல்கள் போதையைத் தந்தன, சில பாதையைக் காட்டின . சில பாடல்கள் ஆனந்தம் தந்தன , சில ஆர்ப்பரிப்பைத் தந்தன.  தொடர்ந்து அவரிசை கேட்கும் ஆர்வத்தைத் தந்தன .  வார்த்தை ஜாலங்களுக்காய்  வெற்றி பெற்ற பழைய பாடல்கள் உண்டு. வார்த்தைகள் எப்படி இருந்தாலும் இசைக்காக வெற்றி பெற்ற ராஜாவின் பாடல்கள் அதிகம் .


                             சிறு வயதில் இத்தனை விஷயங்கள் புரிபடாமல் இருந்தது. இப்போதுதான் அவர் பாடல்களுக்கிருந்த வரவேற்பு  , அதற்கான காரணங்கள்
தெளிவாக தெரிகின்றன .  1978 இல் ' சிட்டுக் குருவி ' என்ற படத்தில் ' என் கண்மணி உன் காதலி '  என்றொரு புதுமையான பாடல் கேட்டு பிரமித்துப் போனேன். வித்தியாசமான பாடல் . இளமை ததும்பும் இனிமையான பாடல். ஒரு குரல் பாடும்போதே அதே குரல் அதன் மேல் விரவி வருவது போன்ற அமைப்பு.  இரண்டு டியூன்கள் பின்னி வரும் . இருவித  மெலோடியும்  ஒன்றை ஒன்று குறுக்கிடும் . அந்த வகை புதுமைப் பாடல் counter point வகையில் இசைக்கப்பட்ட பாடல் என்பது அப்போது தெரியாது . இளையராஜா பேட்டியில்
சொன்ன பிறகு புரிந்தது . இணைய தளத்தில் பல இசை ரசிகர்கள் பகிரும் செய்திகளின் அடிப்படையில் இப்போது அதன் பரிமாணம் புரிகிறது.


                         கேள்விக்கு பதிலாய்  இரு வேறு மெட்டுகளை ஒரே பாட்டில் சேர்ப்பது இந்த வகை. ஒரு குரல் ஒரு மெட்டில் பாடும்போது அவரின் மனசாட்சிக் குரல் வேறு மெட்டில் அதைத் தொடர்வது  கவுன்ட்டர் பாயிண்ட்
என்று இளையராஜா சொல்லி தெரிந்தது .  பாலுவும் சுசீலாவும் கேள்வியாக ஒரு மெட்டில் பாடிக்கொண்டே வர  இன்னொரு மெட்டில்  அவர்களது குரலே பதில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் . இது வித்தியாசமானதொரு முயற்சி . இதற்கு முன்னர் தமிழ்த் திரையிசையில் இளையராஜாவின் இசை முன்னோர்கள்  இதைச் செய்திருப்பதாக நான் கேள்வியுற்றதில்லை . மேலைநாட்டு இசை பிரபலங்கள் செய்திருக்கிறார்கள்.  அதை அகத் தூண்டலாக எடுத்துக்கொண்ட இளையராஜா புதிய முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இசைத்து வெற்றியும் கண்டார்.  இயக்குனர்கள்  தேவராஜ்- மோகன்  இருவருமே இந்தப் பாடலமைப்புப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லாததால் பாடலை மாற்ற முடிவெடுத்தார்கள் . இளையராஜாவிற்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர்கள் என்ற முறையில் ராஜா அப்பாடலை நிராகரிக்காமல்  அவர்களை சமாதானப்படுத்தி  இசையமைத்துக் காண்பித்தார்.  பாடலை ஹிட் ஆக்கினார்.


                         உற்சாகமாய் ஒலிக்கும் அந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.  எஸ்.பி. பி அவர்களுக்கு இந்த மாதிரி பரிசோதனை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல! அழகாகப்  பாடி அசத்தியிருப்பார். சுசீலா அவர்களும் அவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்திருப்பார்.  காரணம் இளையராஜாவின் இசை அந்த அளவிற்கு அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கவேண்டும் .  ஒரு டவுன் பஸ் பயணத்தில் நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே வரும்போது அவர்களின் உடலிலிருந்து உருவங்கள் பிரிந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டே பாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும் . கண்டக்டரின் குரல் அவ்வப்போது இடைமறிக்கும் . நாமும் பஸ்ஸில் பயணம் செய்வது போலவே பாடல் இசைக்கப்பட்டிருக்கும் . அப்போது  திரையோடு  நாமும் சங்கமிக்கும் அளவிற்கு திரைப்படங்களும் திரையிசையும்  இருந்தன. இப்போது பெரும்பான்மையான படத்தோடும் பாடலோடும் ஒன்றிக்க முடிவதில்லை.  மனதில் ஒட்டுவதில்லை.

         
                         என் கண்மணி என்ற பாடல் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இளையராஜா அவர்களே ஒரு பேட்டியில் சொன்னதை ராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் அழகான பதிவு ஒன்றில்  தந்திருக்கிறார்.  ராஜா நேரடியாக சொல்வதை காணொளியிலும் காணலாம்.

                         http://isaignanibakthan.blogspot.in/2010/12/blog-post.html


                                 


                              அதே படத்தில் ' உன்னை நம்பி நெத்தியிலே'  என்றொரு  சுசீலா பாடும்  கிராமத்து வாசனை தடவிய  நாடோடிப் பாடல் . நாடோடிப் பாட்டு போல தெரியாதவாறு இளையராஜா அற்புதமாகக் கொடுத்திருப்பார். சோகமான சுகராகத்தில் அமைந்த பாடல் . பிரிந்துபோன காதலன் எப்போது திரும்பி வருவான் என ஏங்கித் தவிக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் மனக்குமுறலாய் அப்பாடல் ஒலிக்கும்.  கேட்ட மாத்திரத்தில் இனம் புரியா சோகம் வந்து நம் இதயத்தை அப்பிக் கொள்ளும் . படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் தலைவனைப்  பிரிந்த தலைவியின் புலம்பலை அழகாக
பாட்டெல்லாம் பாடி செய்யுள் விளக்கித்  தந்தபோது  புரியாதது  இந்தப் பாட்டைக் கேட்டவுடன் புரிந்தது.  போதிக்கும்போது புரியாததெல்லாம் பாதிக்கும்போது புரிந்தது.


                        வெள்ளைக் குயில் சுசீலா அதை அழகாக பாடியிருப்பார்.  இனம் புரியா சோகம் இதயத்தைக் கவ்வும் வண்ணம் பாடலும் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டிருக்கும்.  அழகிய வனத்து  ஆலமரத்தின் நிழலில்  நின்று கொண்டு  நாயகன் விட்டுப் போன திசையைத் தொட்டுவிடும் தூரம்வரை பார்வையிட்டு  பாடும் பாடலுக்கு  ஏற்றாற்போல உணர்வுகளை வயலினில் இழையோட வைத்திருப்பார் இளையராஜா . புல்லாங்குழலிலும் அதை நமக்கு புரிய வைத்திருப்பார் . பாட்டிடையே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருப்பவனின் ' ஓ........ஹ ' என்ற  மேய்ச்சல் ஒலியும் ஆடுகளின் பதில் ஒலியும்  சோகத்திற்கு கட்டியம் கூறும் சுருதியுடன்  சேர்த்திருப்பார்.  கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த கலைஞனின் கற்பனை ஊற்று இசையிலேயே கிராமத்துப் பின்னணியை கொண்டு வந்துவிட்ட உணர்வு அலாதியானது.

                                                  

       
  
     ' அடடடா ...மாமரக்கிளியே   உன்னை இன்னும் நான் மறக்கலையே ' என்ற பாடலும் இருமுறை ஒலிக்கும் .  பால்ய வயதில் நாயகனும் நாயகியும் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்த காலத்தில் பாடிய பாட்டை வாலிபத்தில் நாயகனை சந்திக்கும் வேளையில் நாயகி மீண்டும் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும் . சூழலுக்கு ஏற்றாற்போல பாடலின் இசை  பாந்தமாய் அமைத்திருக்கும் . சிறுவர்கள் விளையாடிக் கொண்டே பாடும் பாடல்கள் போலவே  அந்தப் பாடல் ஒலிக்கும் . கேட்டவுடன் மனசுக்குள் புகுந்து கொண்ட பாடல். கதையோட்டத்தோடு கலந்த பாடல்களை அனாயசமாக இளையராஜா கையாள்வார். தேவராஜ், மோகன் இருவருக்கும் தன் நன்றியை தெரிவிக்கும் முகமாக அத்தனைப் பாடல்களையும் தித்திக்கும் பாடல்களாக ராஜா கொடுத்திருப்பார். இப்போதும் தித்திக்கின்றது. ஜானகி அவர்களின் குரலில் அற்புதமான பாடல் .

  

        
                     ' தியாகம் '  என்ற நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவந்த நேரத்தில் எங்களது குடும்பம் மதுரைக்கு குடி பெயர்கிறது. கிராமத்து வாழ்க்கை முடிந்து நரக வாழ்க்கைக்கு ...இல்லை ....நகர வாழ்க்கைக்கு  காலம் இட்டுச் சென்றது .  முழுமையாக  குடிபெயருமுன் மதுரையில் உள்ள ஒரு கிறித்துவப் பள்ளியில் என் தந்தை என்னைச் சேர்த்தார் . குடும்பம் இன்னும் மதுரை வராததால் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன் . ஹாஸ்டல் அப்போது நரகமாய் தெரிந்தது. அடிக்கடி வீட்டு நினைவும் அம்மாவின் நினைவும் வந்து கண்கள் குளமாகி ஒரு மூலையில் சென்று அழுதுகொண்டிருப்பேன். கிராமத்தில் சுதந்திரப் பறவையாய் படபடத்து பறந்துகொண்டு திரைப்படங்கள் பார்த்துக் கொண்டு பாடல்கள் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த என்னை கூண்டுக்குள் கொண்டு வந்து அடைத்ததைப் போல் உணர்ந்தேன். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு ,பள்ளிக்கூடம், விளையாட்டு, தூக்கம் என அட்டவணை போட்டபடி எல்லாம்  நடக்கும். எல்லோரும் அதை ஒழுங்குடன் தொடரவேண்டும். ஒழுங்கு தவறினால் உதை  விழும்.  
                         
            காலை 5 மணிக்கு மணியடித்து எழுப்பி விட்டு முகம் கழுவி உடை மாற்றியோ மாற்றாமலோ ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொள்ளவேண்டும்.  கிராமத்தில் 8 மணிக்கு எழுந்து 10 மணிக்கு பள்ளிக்கூடம் போனதெல்லாம் மாறிப்போனது. சுதந்திரம் சுக்குநூறாய் போனதை நினைத்து கவலை கொண்டிருந்த காலத்தில் ஒரே ஆறுதல் இசைதான்!
                        
               மதியச் சாப்பாடு வேளையில் மட்டும் ஒலிப்பேழை  மூலம் பாடல்கள் ஒலிக்கப்படும். அப்போதுதான் ' தியாகம் '  படத்தின் பாடல்கள் கேட்க நேரிட்டது. இளையராஜாவின் இசையில் இனிமையான பாடல்கள் என் மனசுக்குள் மழைச்சாரலை உணரவைத்தன . முகத்தில் புன்னகைப் பூக்களை மலர வைத்தன. இப்போதும் அந்தப் படத்தின் பாடல்கள் காற்றில் தவழும்போது மனசுக்குள் வலி ஏற்படுத்திய ஹாஸ்டல் நினைவு மயிலிறகு வருடும் அனுபவ சிலிர்ப்பு தருவதை உணர முடிகிறது. அன்று வெறுப்பை ஏற்படுத்திய ஹாஸ்டல் அனுபவங்கள் இன்று கட்டுப்பாடு ஒழுக்கம் கற்றுத் தந்த பாடங்களாய்  பார்க்கத் தோன்றுகிறது.  அன்றைய வலிகள் இன்று  முன்னேற்றப் பாதையின் வழிகளாய் தெரிகின்றன. தியாகம் படத்தின் பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் இந்த சுகமான நினைவுகள்  இப்போது அந்தப் பாடல்களைக் கேட்டாலும் எனக்குள் அலை போல எழுந்து அடங்கும். 
                    
            ' வசந்த கால கோலங்கள் ' என்று ஜானகி அவர்களின் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் தேன் கூட்டைப்  பிழிந்தெடுத்த தேன் மழை . சிலுசிலுவென முகத்தில் மோதும் தென்றல் காற்று. சோகத்தை சுகமாய் மாற்றித் தரும் அற்புதப் பாடல்.  கண்ணதாசனின் வரிகளில் பாடல் மக்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்றது . நாயகன் ஒழுக்கக் கேடானவன் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் நாயகி தன் விதி நினைத்து நொந்து பாடும் சூழலில் ' நல்லவேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் ...நன்றி நன்றி தேவா உன்னை மறக்கமுடியுமா '  என்று சிறிய அழுகையோடு  ஜானகி கொடுக்கும் சங்கதி எனக்கும் மறக்க முடியாது . நல்ல இசையை நல்ல பாடகரிடம் கொடுக்கும்போது அவர்கள் மென்மேலும் மெருகு சேர்ப்பது நம்மை எப்படியெல்லாம் பரவசப்படுத்துகிறது என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். 
                           
              
 அதே படத்தில் இன்னுமொரு  ஹிட் பாடல் 'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ' என்ற  டி .எம் எஸ் அவர்களின் கணீர்  குரலில் வந்த பாடல். ஒருமுறை அவருடைய புதல்வரிடம் ' அப்பாவின் பாடல்களில் எந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் '  என கேட்டபோது  இந்தப் பாடலை குறிப்பிட்டுச் சொன்னார் .  எனக்கும் இந்தப் பாடலின் மீது  அளவிட முடியாத பிரியம்  உண்டு. தனித்திருக்கும்போதோ  கவலை கொள்ளும்போதோ வாய்விட்டுப்  பாடுவேன்.  எம்.எஸ்.வி யின் இசைச் சாயலில் பாடல் இசைக்கப்பட்டிருக்கும் . சிவாஜி படம் என்றால் சோகப்பாடல் இல்லாமல் இருக்குமா!? பெரும்பாலும் அவருடைய படங்களில் சோக கீதங்கள் காலத்தால் அழிக்க முடியாத  எந்தக் காலத்திலும்  அளிக்க முடியாத இனிய கீதங்கள். இளையராஜாவும் அதன் தன்மையோ குணமோ மாறாமல் கொடுத்திருப்பார்.  சாதாரண வார்த்தைகள் கொண்டு அழகான தத்துவம் சொன்ன கண்ணதாசனின் வரிகளுக்கு  உயிரோட்டம் இசையில் இருக்கும் . ' மனிதனம்மா மயங்குகிறேன் ...தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே  ' என்ற வரிகள் பாடல் கேட்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.  இப்போது பாடல் கேட்டாலும் ஹாஸ்டல் வாழ்க்கை ஞாபகம் மலரும் நினைவுகளாய் மனதுக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறது . 
                       
        அதே படத்தில்  ' தேன் மல்லி பூவே ' என்றொரு தேனிசைப் பாடலும் கேட்க சுகமானது.  டி .எம்.எஸ் , ஜானகி  டூயட்டில் இனிய கானம் . இதிலும் எம்.எஸ்.வி தெரிவார். ஆனால் பாடலுக்கான பின்னணி இசை அது இளையராஜா என்று காட்டிக் கொடுத்துவிடும் . 
 
                           ' காற்றினிலே வரும் கீதம் ' என்ற திரைப்படம் அம்மாவோடு பார்த்த ஞாபகம் . எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் மீரா படத்தில் பாடிய மிகவும் பிரபலமான பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்து முத்துராமன் ,கவிதா நடிப்பில் உருவான படம் . அந்த நேரத்தில் கவிதாவிற்கு ரசிகர் மன்றம் மதுரையில்தான் வைத்தார்கள் .  மதுரையில் படம் ஓடினால் அந்தப் படம் ஹிட் ஆகிவிடும் என்ற நம்பிக்கை சினிமாக்காரர்களிடம் அப்போது இருந்தது. 
ஏன் இப்போதும் கூட சிலரிடம் உண்டு . மதுரையை மையமாக வைத்து காட்சி அமைத்தால் படம் ஓடும் என்று நினைக்கிறார்கள். 
           
                 'கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் ' பாடலைக் கேட்டு படம் பார்த்தபோதே அசந்து போனேன். அந்தப் படத்தில் இதைவிட ஹிட் பாடல் இருந்தாலும் இந்தப் பாடல் எனக்குள் ஏற்படுத்திய பரவசம் வார்த்தைகள் கொண்டு வடிக்க முடியாதது.  ஒரு தேவலோக கானம் போன்றே ஒலிக்கும் . படத்தின் காட்சியிலும் நாயகி தேவதையைப் போலவே தோன்றுவார் . நேரடியாகவும் ஆவி போலவும் வந்து  பாடுவதாய் இருமுறை படத்தில் பாடல் ஒலிக்கும் . படம் முழுவதும் இந்தப் பாடலின் ஹம்மிங் ஒலித்துக்  கொண்டேயிருக்கும் . பாடல் ஆரம்பிக்கும்போது ஜானகி அவர்களின் குரலில் எந்த இசைக் கருவியும் இல்லாமல் ஹம்மிங் ஆரம்பிக்கும் . ஏதோ ஒரு மாய உலகத்திலிருந்து ஒலிப்பது போலவே கேட்கும் அந்த ஹம்மிங் முடிந்து வயலினோடு சலங்கையும் சேர்ந்து இசை எழும்பும் . அப்போதே மனசு இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. முதல் BGM  முடிந்து மென்மையாக ஜானகி அவர்கள் கண்டேன் எங்கும் என்று ஆரம்பிக்க அத்துடன் தபேலா சேர்ந்து கொள்ள அந்த சுகானுபவத்தை என்னவென்று சொல்லத் தெரியவில்லை . 
                       
        இரண்டாம் சரணத்திற்கு முன்பு  BGM வித்தியாசமான பாதையில் சென்று  வேறு ஒரு ஹம்மிங் கொடுத்து மீண்டும் அதே பாதைக்குத் திரும்பி வருவது நான் அதுவரை கேட்டிராத புதிய பாணியாக தெரிந்தது. இதற்கு முன்னர் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் கேட்டிராத இசை   இளையராஜாவிடம் தெரிந்தது. இப்போது அந்தப் பாடல் கேட்டாலும் தென்றல் தாலாட்டும்  சுகமும் காலைப் பணியுணரும் சிலிர்ப்பும்  ஏற்படுகிறது . இரண்டாம் முறை அதே பாடல் வாணி ஜெயராமின் குரலில் வித்தியாசமான பின்னணி இசையோடு கொடுக்கப்பட்டிருக்கும் .  மறைந்து போன நாயகி மீண்டும் அதே பாடலை பாடிக்கொண்டிருப்பதைக் காணும் நாயகனின் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் இசையிலேயே இளையராஜா அழகாக கொடுத்திருப்பார். இரு வேறு பின்னனி   இசையோடு ஒரே பாடல் இசைப்பதை இளையராஜாவின் இசை முன்னோர்களும் செய்திருக்கிறார்கள் .
முகநூல் நண்பரின் செய்தி .

பிருந்தாவனசாரங்கா ,மத்யமாவதி போன்ற ராகங்களுக்கு நெருக்கமான "ஸ்ரீராகத்தில்" யாராலும் இது போலதொரு ஒரு பாடல் அமைக்க முடியுமா? எங்கள் ராஜாவைத் தவிர.இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம், ஜானகியின் தேனான குரலும் ராஜாவின் இனிய இசையும் எப்பொழுதும் என்னை என் பால்ய நாட்களுக்குக் கொண்டு சென்று விடுகிறது. Thank you Raja.


                            அதே படத்தில் ' சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் '  என்று ஜெயச்சந்திரனின் மயக்கும் மந்திரக் குரலில் பாடல் கேட்டபோது மனசெல்லாம் மத்தாப்பு. ஒரு படகோட்டி பாடல் பாடினால் 'ஐலசா ' என்ற ஓசை வரும்  குரலிசையோடுதான் இதுவரை பாடல் கேட்டிருந்திரிப்பேன்.  ' தய்யரத் தய்யா ' என்ற ஓசை ஒலிக்கும் பாடல் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது . பாடலின் ஆரம்பமே 'தய்யரத் தய்யா ' என்றே குரலிசையோடு ஒலிக்கும் . இந்தப் பாடலுக்கான இசை எங்கிருந்து வந்தது என்பது தெரியாவிடினும் என்னை எங்கோ கூட்டிச் சென்றது உண்மை . பாடலின் ஒவ்வொரு வரிக்கும் 'தய்யரத் தய்யா ' என்ற குரலிசை கூடவே வந்து நம்மை குதூகலமாக்கும்.  '  ஏ ..குரிய ஏலவாலி தண்டேல வாலி  தய்யரத் தய்யா ' என்று பல்லவியின் முடிவிலும் சரணத்தின் முடிவிலும் ஒலிக்கும் வார்த்தைகள் எந்த மொழி என்று தெரியவில்லை .  ஆனால் கேட்க சுவையாக இருக்கும். பாடலின் கடைசி பல்லவியில்   'தய்யரத் தய்யா' என்ற கோரசோடு  'ஆ..ஹா ' என்ற குரலிசையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே வருவது இன்னும் சிறப்பு.   ஒரு நாடோடிப் பாடலை எல்லோரும் இன்றுவரை முணுமுணுக்கும் வண்ணம் அம்சமாக கொடுத்திருக்கும் இளையராஜாவின் கற்பனை வளம் வார்த்தைகளால் அளவிட முடியாதது .  என்னுடைய ஹாஸ்டல் வாழ்க்கையில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியின்போது இந்தப் பாடலை நான் பாடிய ஞாபகம் இருக்கிறது. 
                         
            ' ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் ' என்ற பாடல் மிக மென்மையாக ஆரம்பிக்கும் பாடல் . ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி அவர்களின் குரலில் வந்த தேவ கானம் என்று சொல்லலாம் . இந்தப் பாடல் அப்போதைய சிலோன் வானொலியில் ஒலிக்காத நாளில்லை. பாடலின் கடைசி பல்லவியில் ஆண் குரல் பாட பெண் ஹம்மிங் கொடுப்பதும் பெண் குரல் பாட ஆண் ஹம்மிங் கொடுத்து முடிப்பதும் நமக்கு மயக்கம் ஏற்படுத்தும்.  படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல் . இளையராஜாவின் மணிமகுடத்தில் இதுவும் ஒரு வைரக்கல் . கிடார், வயலின், புல்லாங்குழல் மூன்றையும் முக்கிய கருவிகளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடல் . ராஜாவின் பின்னணி இசைக்கு பயன்படுத்தப்ப்பட்டிருக்கும் இசைக் கருவிகள் மீது அப்போது என் பார்வை விழுந்தது . அதற்கு முன்னால் அப்படியெல்லாம் யோசித்ததேயில்லை.  பாடலைக் கேட்டு ரசித்ததோடு சரி.  இளையராஜாவின் இந்தப் படத்தின்  பாடல்களை கேட்ட பிறகே அவர் பயன்படுத்திய இசைக்கருவிகள் மீது ஒரு ஆர்வம் உருவானது.  அதற்கு முன்னர் எந்த இசையமைப்பாளரும் அந்த ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியதில்லை . இளையராஜாவை கவனித்தபிறகே மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன் . ஒரு சில பாடல்கள் தவிர இளையராஜா ஏற்படுத்திய  பிரமிப்பை அவர்கள் எனக்கு ஏற்படுத்தவில்லை. 
                   
                     
                        http://play.raaga.com/tamil/album/Kaatrinile-Varum-Geetham-T0001299
                
                   
                                
              கர்னாடக இசையின் பிதாமகனாக போற்றப்படும் செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் இளையராஜாவின் இசை ஞானம் பற்றி சுருங்க அழகாக பேசியிருக்கிறார். கர்னாடக சங்கீதத்தில் அதிக ஞானம்                            
                 
                               
இருந்தால்தான்  சினிமாவிற்கான மெல்லிசையில் திறம்பட செயல்பட முடியும் என்பதை மனம் திறந்து பேசியிருக்கிறார் .  இளையராஜாவிற்கு கர்னாடக சங்கீதம் தெரியுமா என சந்தேகம் கொள்வோர்  சிலருக்கு இவர் விளக்கம் தேவைப்படுவதால் இந்த காணொளி இங்கே அரங்கேறியிருக்கிறது. 
 
                   
    திரைப்படங்களில் இளையராஜா இசைத்திருக்கும் பலவிதமான இசைத் துணுக்குகளை ஒரு தொகுப்பாக ரசிகர் ஒருவர் கொடுத்திருப்பதை கேட்கும்போது  ' இளையராஜா இசை கேட்பதற்கு ராகம் , தாளம், பல்லவி தெரிந்திருக்கவேண்டும் என்று  அவசியமில்லை. தான் உணருவதை மற்றவர்களையும் உணர வைத்துவிடுவார் ' என்று ஒரு இளைய இயக்குனர் சொல்லியிருப்பதை உறுதி செய்கிறது. இளையராஜாவின் இசைக்கோலங்கள் கேட்கக் கேட்க ஆனந்தக்கடலில் மிதந்து கொண்டிருக்கும் அழகிய அனுபவம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. 
...................................தொடர்வேன்..................................