Wednesday, 5 August 2015

அக்கினிச் சிறகு சாய்ந்ததே...


                                                 

                                 இந்திய திருநாட்டின் முன்னால் ஜனாதிபதி , அறிவியல் மாமேதை , மக்களின் நாயகன் , மாணவர்களின் ஹீரோ , அணு விஞ்ஞானி , இந்திய ஏவுகணை நாயகன் , மக்களின் இதயம் வென்ற மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டதை கணத்த  இதயத்தோடு இந்தியர் அனைவரும் பகிர்ந்து கொண்டோம் .


                             குறிப்பாக தமிழர் ஒவ்வொருவரும் மூலைக்கு மூலை தங்களின் இதயம் திறந்த கண்ணீர் அஞ்சலியை  வெளிப்படுத்திய விதம்  அளப்பற்கரியது.  சண்டையில்லை, சச்சரவில்லை,  கூச்சலிடவில்லை,  கல்லெறியவில்லை , கலாட்டா செய்யவில்லை,  காயங்கள் ஏதுமில்லை,  வஞ்சமில்லை , வன்முறையில்லை ,  பிரியாணி  குவார்ட்டருக்கு ஆசைப்பட்டு கூட்டம் சேரவில்லை ,  அடக்கம் செய்யப்படும் வரை தற்கொலையில்லை  ,  தடிகள் எடுத்துக் கொண்டு  தொங்கிக் கொண்டு கொக்கரித்துக் கொண்டு தடியர்களோடு சாரை சாரையாக கார்கள் செல்லவில்லை .  தமிழகம் முழுக்க அமைதி .  இது  எப்படி சாத்தியமாயிற்று?
அப்துல் கலாம் அண்ணலின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

                                               
                                   ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ
                                   உழைத்தது  போதுமென்று  உறங்குகிறாயோ
                                   ஊரார்க்கு அழுதவனே  உறங்குகிறாயோ
                                   ஊராரை அழவைத்து  உறங்குகிறாயோ

                                   நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா - தன்
                                   வீடு பார்க்காமல்  வாழ்வு பார்க்காமல்
                                    நாடு முன்னேற  நாளும்  உழைத்தவனை

                                    பதவி இருந்தாலும் பதவி போனாலும்
                                    உதவி புரிவானடா
                                     தனை பெற்ற தாயைவிட பிறந்த நாடுதான்
                                     பெரிது என்பானடா

                                      வலிமை இருந்த போதும் மிக
                                       எளிமையோடு இருந்தான்
                                       பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள்
                                       கறுப்பு  காந்தி  இவனே


                         'காமராஜ் ' திரைப்படத்திற்காக   இளையராஜா அவர்கள் இசையமைத்துப் பாடியது  அப்துல் கலாம் அவர்களுக்கும் சரியாகப் பொருந்துகிறது. ஏனென்றால்  பள்ளிச்சாலைகள்  தந்த தலைவனுக்கும் அந்தச் சாலைகளில்  பயிலும் மாணவர்களைக் கண்ட தலைவனுக்கும் நோக்கம் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.

                         கனவு காணுங்கள்.   உறக்கத்தில் வருவதல்ல உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு ... அந்தக் கனவை காணுங்கள் ...அதை நனவாக்க பாடுபடுங்கள்  என்று இந்தியாவின்  ஒவ்வொரு மூலையிலும் உள்ள மாணவர்களைப் பார்த்து முழங்கிக் கொண்டே இருந்தவர்  மூச்சடங்கிப் போய்விட்டார் .

                         இந்தியா வல்லரசாக வேண்டும் என்று  கனவு கண்ட அந்த மகானின் இறப்பும் கனவாக இருக்கக் கூடாதா என இளைஞர்கள் ஏங்குகின்றனர்  ஆனால் அவர் கனவின் அர்த்தம் வேறு என்பதை அவர்களும் அறிவர்.

                           நிற்கலாம், நடக்கலாம், உடுக்கலாம், படுக்கலாம் , உறங்கலாம் என்றிருந்த இளையோரை  எழுப்பி படிக்கலாம் , உழைக்கலாம், விழிக்கலாம், சிந்திக்கலாம் , சாதிக்கலாம் என்று வழிகாட்டிய  சிந்தனை சிற்பி கலாம்  இன்று நம்மோடு இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு.  அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம்.
             

                        பாவம் புதைக்கும் இடத்தில் ஒரு புண்ணியம் விதைக்கப்பட்டுள்ளதாக எல்லோரும் பரவசமடைகிறார்கள்.  ஒரு புண்ணிய ஆத்மா   எண்ணியதெல்லாம்  பண்ணியதெல்லாம் வெறும்  கனவாகவே  போய் விடக் கூடாது  என ஒவ்வொரு மனிதரும் நினைக்கும் வண்ணம் உறுதியான எண்ணங்களை  விதைத்துவிட்டு போயிருக்கிறார் . அவர் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவர்  எண்ணங்களை   ஈடேற்றும்   பல   விருட்சங்கள் புறப்படலாம். ராமேஸ்வரத்தில் அவர் பிறப்பு  ஒரு சம்பவம் . ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக மாறிப் போனது.


                     '   நீங்கள் பல பதவிகள் வகித்திருந்தாலும்  பல நிலைகளில் வாழ்ந்திருந்தாலும் என்னவாக அறியப்பட விரும்புகிறீர்கள் ?  '  என்று அவருடைய உதவியாளர் கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் 'ஆசிரியராக' என்று பதில் சொன்னதாக பத்திரிகையில் வந்தது .  நாட்டின் மிகப் பெரிய பதவியில் இருந்தவர் அந்தப் பதவியை எவ்வளவு துச்சமாக மனதில் நினைத்திருந்தால் இப்படி ஒரு பதிலைச் சொல்லுவார். அதனால்தான் குடியரசுத் தலைவராக இருந்தபோது கூட கல்வி நிலையங்களில் அதிகமான மாணவர்களைச் சந்தித்தார் . சிந்திக்க வைத்தார்.  ஆசிரியர் பணியை அவ்வளவு நேசித்திருக்கிறாரே!  நமக்கெல்லாம் அவர் ஹீரோ . அவருக்கு யார் ஹீரோ என்று வினவியபோது  தனது ஆசிரியர்கள் மூவரைத்தானே குறிப்பிட்டார்.  அவருடைய ஆசிரியர் பக்தி குறிப்பிடத் தகுந்தது.


               இந்தியாவின் எதிர்காலம்  நிகழ்  கால மாணவர்களாலேயே உருவாகும் என ஆணித்தரமாக நம்பினார்.  அவருக்கு முன்னாலும் பின்னாலும் வந்த ஜனாதிபதிகள் தங்கள் உறவினர்களோடு ஊரைச் சுற்றிப்  பார்க்க சென்றபோது  அவர் மாணவர்களைச் சுற்றி வந்தாரே !
 அந்த மாமனிதரை மறந்து போகுமா இந்த மாணவ சமுதாயம் ? அடுத்து வரும் மாணவத் தலை முறைகளுக்கும் அவர் கனவை விதைத்து விட்டுத்தானேச்  செல்லும் .

                                                 
         
     
           ஒருமுறை  அவருக்கு போதித்த தத்துவ பேராசிரியர்  ஒருவர் கடவுளை மறுத்திருக்கிறார்.  அறிவியல் ரீதியாக கடவுள் இல்லை என வாதிட்டிருக்கிறார்.  ஐம்புலன்களாலும் கடவுளை நாம் உணரவேயில்லை என்று சாதித்திருக்கிறார்.  அப்துல் கலாம் எழுந்து அறிவியல் பூர்வமாக பல விளக்கங்கள் கொடுத்துவிட்டு மற்ற மாணவர்களைப் பார்த்து ,  " நண்பர்களே !யாராவது பேராசிரியரின்  மூளையைப் பார்த்திருக்கிறீர்களா ?  தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா?  அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா ?  அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா?  ஐம்புலன்களாலும் உணரவில்லை . அப்படியென்றால் எல்லா பரிசோதிக்கத்தக்க வழிமுறைகளிலிருந்தும்  அறிவியல் சொல்கிறது அவருக்கு மூளை இல்லை என்று! சரிதானா? " என பேசியிருக்கிறார்.

            " எனக்கு மூளை உண்டென்று நீ நம்பித்தான் ஆக வேண்டும் "   என்று பேராசிரியர்  பதிலுரைக்க  , கலாம் அவர்கள் அமைதியாக , "  அதுதான் அய்யா... இவ்வளவு நேரம் நான்  சொல்ல வந்தது . ஐம்புலன்களாலும் உணர முடியாத கடவுளையும் நாம் நம்பித்தான் ஆக  வேண்டும். மனிதனையும் கடவுளையும் இணைக்கும்  ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை.  அதுதான் இந்த உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கி கொண்டிருக்கிறது.  நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையில்லை . கடவுளையும் நம்பத்தான் வேண்டும். " என்று வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

             
                    பல்வேறு விதமான  சுவையான சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிறைய உண்டு .  பொக்ரான் அணு குண்டு சோதனை காலத்தில், ராணுவ வீரர்களோடு வீரராக  ராணுவ உடையணிந்து ,  பாலைவனத்தில் வழக்கமாக பயிற்சி எடுப்பது போல பிரமையூட்டி , அமெரிக்காவின் கழுகுக் கண்களை ஏமாற்றி,  சோதனையை தம்  குழுவினருடன் வெற்றிகரமாக செய்து முடித்து  சாதனை புரிந்தவர் கலாம் அவர்கள்.  இல்லாவிடில் உலகத்திற்கே போலிஸ்காரனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா நம்மை அணு குண்டு சோதனை செய்ய அனுமதித்திருக்குமா?

                  அதன் விளைவாக அந்த நேரத்தில்  இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ,  இந்தியா வந்திறங்கியவுடன் தான் பார்க்க விரும்பிய நபராக,  பிரதமரையோ ஜனாதிபதியையோ அவர் குறிப்பிடவில்லை.  அமெரிக்காவின் கண்ணையே கட்டி விட்டு அணு ஆயுதச் சோதனை நடத்திய குழுவின் தலைவரான  அப்துல் கலாமை பார்க்க வேண்டும் என்றே குறிப்பிட்டார் . உலகத்து வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேருவதற்கான வெளிச்சக்  கீற்று அப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது . அது அப்துல் கலாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.  ஆனால் அதே அப்துல் கலாம் 2020 இல் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற வேண்டும் என கூக்குரலிட்டார்.  இளையோரை  அதற்கான கனவு காணச் சொன்னார்.  இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறோம் . வல்லரசு ஆகுமா என்று சொல்ல கலாம் இல்லை . ஆனால்  காலம் சொல்லும்.

         
                        மாணவர்களிடம் கேள்விகள் கேட்பது அவர் வழக்கம் . போலவே  மாணவர்களையும் அவரைப் பார்த்து  கேள்விகள்  கேட்கச்சொல்லுவார். ஒரு முறை அப்படி கேட்கப்பட்ட கேள்விகளில் எது சிறந்த கேள்வி  என்று அவரிடம் கேட்கப்பட்டபோது ,   '  உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானி யார்?  ' என்ற கேள்விதான் என்றார் . அதற்கு உங்களின் பதில் என்ன என்று கேட்டபோது ,
' உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானி ஒரு குழந்தைதான் . ஏனென்றால் அதுதான் எப்போதும் ஆராய்ச்சி மனப்பான்மையிலேயே இருக்கும் . குழந்தையின் கையில் எதைக் கொடுத்தாலும் ஆராயும் . ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வேண்டிய மனப்பான்மையும் அதுவே '  என பதிலுரைத்தார்.


                      மற்றொரு  சம்பவம்.  ஒரு திங்கட்கிழமையில் மதுரை அரவிந்த் கண்   மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிந்த நேரம்.        
கண் ஆபரேசனுக்காக பலர் காத்திருந்தனர் . ஒரு பெரியவரும் காத்திருந்தார். டாக்டர்கள் பற்றாக்குறையால் தலைமை டாக்டர்  ஒரு சிலரை மறு நாள் வந்து ஆபரேசன் செய்து கொள்ளும்படி பரிந்துரைத்தார் . அந்தப் பெரியவரிடமும்   
அவ்வாறே வருமாறு கூறினார் . தான் தொலைவிலிருந்து வந்திருப்பதாகவும் துணைக்கு யாரும் இல்லாததையும் அந்தப் பெரியவர் குறிப்பிட்டார்.  ஆபரேசனுக்கு  ரூபாய் 1500 செலவாகும் என்று சொன்னார்கள் . தன்னிடம் போதிய பணம் இல்லை என பெரியவர் குறிப்பிட தலைமை டாக்டர் ,  ' பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை.  நீங்கள்  இலவசப் பிரிவில் சேர்ந்து 
கொள்ளுங்கள் . பணமில்லாமலேயே ஆபரேசன் நாளைதான் செய்ய முடியும் . 
இன்று இங்கு தங்குங்கள் . மற்றவை எல்லாம் எங்கள் ஊழியர்கள் பார்த்துக்  கொள்வார்கள்  '  என பரிவுடன் அவரை இலவசப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார். 


                     கொஞ்ச நேரத்தில் காக்கி யூனிபார்ம் அணிந்த காவலர் கூட்டம் ஒன்று மருத்துவமனையில் யாரையோ தேடிக் கொண்டிருந்தது.  செய்தி தலைமை டாக்டருக்கு  தெரிய வர விபரம் கேட்டிருக்கிறார்.   Z பிரிவு பாதுகாப்பில் உள்ள அணு விஞ்ஞானி ஒருவர் இங்கு வந்திருப்பதாகவும் தன்  உறவினர் ஒருவரிடம் மட்டும் சொல்லிவிட்டு  தங்களுக்கு அறிவிக்காமல் அவர் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்கள்.  ஊழியர்கள் எல்லோரும் அவரைத் தேடுகிறார்கள். எங்கும் அவர் கிடைக்கவில்லை. மருத்துவமனை பரபரப்பாகி விட்டது.

                       பணம் செலுத்தி பார்க்கும் பிரிவில் அவர் இல்லாவிடில் வேறு எங்கு போயிருக்க முடியும் என்ற குழப்பத்தோடு இலவசப் பிரிவுக்குள் சென்று பல வயோதிகர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சென்று பார்த்தால்  அந்தப் பெரியவர் மேல் சட்டை  இல்லாமல் வேட்டியோடு ஒரு பாய் விரித்து  தரையில் அமர்ந்திருந்தார்.  அவர்தான் நமது அப்துல் கலாம் .


                      ' என்ன சார் இப்படி செய்துவிட்டீர்களே ? உங்களை நீங்கள் அணு விஞ்ஞானி என்று அறிமுகம் செய்திருக்கலாமே ! உங்களுக்கு வேண்டியதை செய்திருப்போமே  ' என்று தலைமை டாக்டர் வருத்தப்பட , ' நான் யாரென்று சொல்லியிருந்தால் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்குமா? இப்படி ஒரு சேவையை நான் எங்கும் பார்த்ததில்லை. இவ்வளவு கூட்டத்திலும் வேலைப் பளுவிலும் யாரும் முகம் சுளிக்கவில்லையே! இரண்டு கண்ணும் தெரியாத ஒரு பெரியவருக்கு இங்கு பணி  புரியும்  சின்னஞ்சிறு  செவிலியர்கள் பாத்ரூம் அழைத்துச் சென்று சேவை  புரிந்ததையும்  சாப்பாடு ஊட்டி விட்டதையும்  நேரில் கண்டேன்.  அவர்களிடமிருந்து நானல்லவோ நிறைய கற்றுக் கொண்டேன் . ' என்று பதிலுரைத்தார் . அதன் பின்பு ஜனாதிபதி ஆன பிறகு அரவிந்தின் முக்கிய நிகழ்ச்சிகளில்  அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

                             
                       

               இது போன்ற இன்னும் அவர் வாழ்வில் நடந்த பற்பல  நிகழ்ச்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம் . எப்போதும் எந்த சூழலிலும் அனுபவமும் அறிவும் தேடுபவராகவே  அவர் இருந்திருக்கிறார்.  அன்னாரது மறைவு இளைஞர்களின் வாழ்விலும் சிந்தனையிலும் எழுச்சியை எழுப்பட்டும். ராமேஸ்வரத்தில் அவருடைய நினைவிடத்தில் வந்து செல்லும் இளைஞர்களும் மாணவர்களும் இந்தியா வல்லரசாகும் கனவை நனவாக்கும் உறுதியை சூளுரைத்துவிட்டுச் செல்கிறார்கள் . அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கட்டும்.