Saturday 16 January 2016

இசை ராட்சஷன் - 14 ( The Musical Legend )




                    மேற்கத்திய செவ்வியல் இசை உலகத்தில் இரு விதமான இசைப்படைப்பு  இருக்கிறது . முதல்வகை இசை கதை அல்லது கருத்து சார்ந்ததாக அமையும் . இரண்டாம் வகை சுதந்திரமான எண்ண  ஓட்டங்களுக்கேற்றவாறு  மனதில் பட்டதை உருவாக்கும் இசையாக  அமையும் .  இளையராஜா அமைத்த இசை பெரும்பாலும் முதல் வகையே .  திரைப்படத்தில் கொடுக்கப்படும் சூழலுக்கும் காட்சிகளுக்கும் உணர்ச்சிகளுக்கும்  தகுந்த இசை அமைப்பதை மிகுந்த இசைவுடன் செய்பவர். திரைப்படத்திற்கு இரு விதமாக இசை அமைக்க வேண்டும். ஒன்று பாடலுக்கான இசை . மற்றொன்று திரைக்கதைக்கான பின்னணி இசை ( Re -recording ) .  இந்த இரண்டிலும் இளையராஜா தலை சிறந்தவர்.
                               
                                                     


                     ஒரு திரைப்படம்  உருவாக்கப்படுவதற்கு முன்பு இளையராஜா அவர்கள் இயக்குனர் அல்லது தயாரிப்பாளரோடு கதை கேட்க அமருவார்.  கதைக்களம் விளக்கப்பட்டு  தேவைப்படும் இடங்களில் பாடல்கள் அமைக்க  ராஜாவிடம் தெரிவிக்கப்படும். சில வேளைகளில் இயக்குனருக்கோ தயாரிப்பாளருக்கோ எந்த இடத்தில் பாடலை புகுத்துவது என்பதில் குழப்பம்  ஏற்பட்டால் இளையராஜாவே சரியான இடங்களை  தேர்வு செய்வதற்கு ஆலோசனை  வழங்குவார்.  இந்த அமர்வு சில நேரங்களில் இரு முறை  நடக்கும்.  கதை கேட்க ஒரு முறையும் பாடல் compose செய்ய இன்னொரு முறையுமாக இரு அமர்வுகள்.


                       ஒரு திரைப்படத்திற்கு ஐந்து பாடல்கள் தேவை என்று  வரும்போது பல மெட்டுகள் (tunes) வாசித்துக்காட்டப்பட்டு அவைகளிலிருந்து  சில மெட்டுகள் தேர்ந்தெடுக்கப்படும்.  இளையராஜா தனது பிரியமான ஆர்மோனியத்தை பயன்படுத்தி  வாசித்து  பாடியும்  ( Humming  )  காட்டுவார்.  அந்த மெட்டுகள் எல்லாம் டேப் ரெக்கார்டரில் பதிவு செய்யப்படும்.  மெட்டுகளை தேர்ந்தெடுப்பது வெகு நேரம் நீடிப்பதும் உண்டு. சில வேளைகளில் வெறும் 45 நிமிடங்களில் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் தேர்வாகி விடும். உதாரணமாக  இயக்குனர் P. வாசு அவர்கள் இயக்கிய ' சின்ன தம்பி ' திரைப்படத்திற்கு மிகக் குறைவான நேரத்தில் பாடல்கள்  compose  செய்யப்பட்டன.


                       " ஒவ்வொரு சூழலையும் நான் இளையராஜாவிடம் விளக்கிச் சொல்ல சொல்ல  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான டியூன் அவரிடமிருந்து உடனுக்குடன் வெளி வந்தது.  மிகக் குறைவான நேரத்தில் நான் கேட்ட அத்தனைப் பாடல்களுக்கும் டியூன்கள் விரைவாக வாசிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டன  "  என்று  வாசு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


                          ஒரு பாடலுக்கான டியூன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அது தனித்த டேப்பில் பதிவு செய்யப்பட்டு பாடலாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும் .  பாடலுக்கான டியூன் தேர்ந்தெடுக்கும்போதே பாடலாசிரியர் யார் என்பதையும் முடிவு செய்வார்கள்.  இந்த அமர்வின்போது இளையராஜாவின் இசைக்குழுவில் குரல் பிரிவை வழிநடத்தும் சுந்தரராஜன் என்பவர்  உதவியாளராக உடனிருப்பார்.  பாடல்களுக்கு கொடுக்கப்பட்ட ஹம்மிங் அனைத்தும் பதிவு செய்து அந்தப் பதிவு நாடாக்களை  பராமரிக்கும் பொறுப்பினையும் சுந்தரராஜன் மேற்கொள்வார். பாடல்களுக்கான ஸ்வரங்கள் அனைத்தும் சுந்தரராஜன்  எழுதி அவற்றையும்  பதிவும்  பிரதியுமெடுப்பார்.  பாடல் பதிவு  செய்யப்படும் நேரத்தில்  ஸ்வரங்கள் எழுதப்பட்ட பிரதிகள் பாடகர்களுக்கும் இசைக்கருவிகள் இசைப்போருக்கும் கொடுக்கப்படும்.  இதுவரை  சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் கூட முடிந்திருக்கிறது.

               
                               பாடல் பதிவு நடக்கும் நாளில் இளையராஜா பதிவுக் கூடத்திற்கு சரியாக காலை 7 மணிக்கு வந்து விடுவார்.  அதற்கு முன்னரே  அவருடைய உதவியாளர் சுந்தரராஜன் , பாடலுக்கான டியூன் பதிவு செய்த நாடாவினை  இளையராஜாவின் அறையில் வைத்திருப்பார். படத்தின் இயக்குனர் மீண்டும் ஒருமுறை பாடலுக்கான சூழலையும் பாடலை இயக்கப் போகும் விதங்களையும் ராஜாவிடம் விளக்கிச் சொல்லுவார்.


                          ஒரு உதாரணம் பார்ப்போம்.  ஒரு படத்தில் ஒரு கதாநாயகி  பாடலை   பாடும் சூழல் விவரித்துக் காட்டப்படுகிறது.  அவள் பாடும்போதே  அவள் வாழ்க்கையில் ஏற்படப் போகும் இழப்பினையும் சோகத்தையும் இயக்குனர் எடுத்துக் கூறினார் என்றால்  இளையராஜா அதற்குத் தகுந்தாற்போல இடையிசையில்  ( BGM ) சில மாற்றங்களைச் செய்வார். ' நான் பாடும் பாடல் ' என்ற திரைப்படத்தில் வரும் ' பாடவா உன் பாடலை ' என்ற பாடல் இதற்கு உதாரணம்.


                          அம்பிகா ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒரு அழகான பாடலை  பாடிக் கொண்டிருக்க அவர் கணவர் மோகன் தன் மனைவி பாடுவதை நேரில் பார்த்து ரசிக்க தனது காரில் வேகமாக வருவதை இயக்குனர் பரபரப்பாக பாடலின் இடையில் காட்டுவார்.  ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதை காட்சிகள் சொல்லுவதற்கு முன்னரே  இசை சொல்லி விடும்.  நமக்கு ஏற்படும் படபடப்பை இசையிலேயே இளையராஜா கொண்டு வருவது அற்புதம். அதே ஜோடி சேர்ந்து நடித்த ' இதயக்கோயில் ' என்ற படத்தில் மோகன் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடிக்கொண்டிருக்க அம்பிகா அவரைத்  தேடி வந்து சில கயவர்களிடம் மாட்டிக் கொண்டு தப்பித்து ஓடுவதை பிரமாதமான இடையிசையில் ராஜா பரபரப்பூட்டுவார். ' யார் வீட்டில் ரோஜா ' என்ற அந்த தேனிசைப் பாடலுக்கு இளையராஜா இசையாக கோர்த்திருக்கும் string  passages அவ்வளவு  அழகு! வெகுவாக ரசிக்கலாம்.


                              ' ஆனஸ்ட் ராஜ் ' என்ற திரைப்படத்தில்  இது போன்ற இக்கட்டான சூழலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ' வானில் விடிவெள்ளி '  என்ற பாடல்  முழுவதும் நிகழ்  காலத்திலிருந்து இறந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும் புதுமையான காட்சிகளாக இருக்கும் .  இயக்குனர்  குழு நடனம் இருப்பது போன்று சூழல் சொன்னதாலோ என்னவோ  குழுவினரின் குரலோசையோடு  காட்சியும் இசையும் பின்னப்பட்டிருக்கும் .


                               இவ்வாறாக பல்வேறு திரைப்படங்கள், விதவிதமான கதைப்பின்னனிகள், வெவ்வேறு சூழல்கள் , பலவிதமான உணர்ச்சிகள்  அனைத்தையும் உள்வாங்கி, வெவ்வேறு விதமான மெட்டுகளை அமைத்து . ஒன்று போல மற்றொன்று இல்லாதவாறு பலதரப்பட்ட பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்கும் இளையராஜாவின் இசைத் திறமை , உழைப்பு மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாகும் .


                             பாடல் பதிவு ஆரம்பிக்கும் முன்பு  , தந்திக் கருவிகளான violin , viola , cellos , double bass ,  brass section  போன்ற இசைக்கருவிகள் இசைப்போர், சிறப்புக் கருவிகளான sitar , veena , sarangi , chennai  போன்ற இசைக்கருவிகளை மீட்டுவோரையும்  ஒன்று கூட்டிச் சேர்க்கும் பொறுப்பினை ராஜாவின் உதவியாளர்களான திரு. கல்யாணம்  மற்றும்  திரு. சுப்பையா  ஆகிய இருவரிடமும் இளையராஜா ஒப்படைத்திருப்பார். ராஜாவிற்குத் தேவையான கருவிகளையும் அதை இசைக்கும் கலைஞர்களையும் ஒலிப்பதிவு  நேரத்தில் அழைத்து வந்திருக்க வேண்டிய  பொறுப்பு அவர்களதே!


                   இப்போது ஒரு முழுப் பாடலுக்கான இசைக்குறிப்புகள் அடங்கிய தாள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்பட்டு இசை ஒத்திகை ஆரம்பமாகும்.


                             இளையராஜாவின் இசையறிவை வெறும் திறமை என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிட முடியாது . அவர் அதையும் தாண்டியவர்! அவரின் இசைத் திறமை அளவிடற்கரியது .  அவர் மனதில் என்னென்ன  யோசனைகளும் நுணுக்கங்களும் வண்ணங்களாக ஓடுகிறதோ  அவற்றை எண்ணங்களாக்கி  இசைக்குறிப்புகள் உருவாக்கி தாளுக்கு மாற்றுவார்.  இசைக்குறிப்புகளை  வேகமாக எழுதுவதில் ராஜா திறமைசாலி. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து அழகு சேர்க்க நினைத்தாரென்றால் மாற்றங்களையும் உடனுக்குடன் இசைக்கருவி மீட்டுவோரிடம் பகிர்ந்து கொள்வார்.  முன் தயாரிப்பு ஏதும் இல்லாமலேயே மாற்றங்கள் சரி செய்யப்படும். இசைக்குறிப்புகளில் பெரும்பாலும் திருத்தங்கள் இருக்காது. பாடலிலோ பின்னணி இசையிலோ மாற்றங்கள் இருந்தால் அவை மட்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு  சேர்க்கப்படும்.  கடைசி நேர மாற்றங்களை எந்த இசைக்கருவியையும்  இசைத்துப் பார்க்காமலே இசைக்குறிப்புகள் எழுதுவதில் ராஜா கெட்டிக்காரர். அதை வாசிக்கும்போது எந்தத் தவறும் இருக்காது. இசைக்குழுவினர் அதைக் கண்டு ஆச்சரியமடைவர்.


                               ஒரு பாடலை உருவாக்க அவர் அமர்ந்துவிட்டால் முழுப்பாடலும் திடீர் ஒலிப் பிரளயமாக தோன்றி மூன்று படிநிலைகளில் உருப்பெற்று விடும்.  முதல் படிநிலை பாடலுக்கான தாள நடை (Rythm  Pattern ), இரண்டாம் படிநிலை இசைக்கருவிகள் தேர்ந்தெடுத்து இசைக்கும் முறை (Orchestration ), மூன்றாம் படிநிலை குரல் தேர்வு  (Vocal Pattern ).

   
                                           ராஜாவிற்கு உள்ள சிறிய பிரச்சனை  என்னவென்றால் குறிப்புகள் எழுதும் வேகத்தை விட மனது அதிவேகமாக செயல்படுவதுதான்!  கை எழுத முயல்வதற்குள் மனது நிறைய   எழுதி  முடித்து விடுகிறது.


                                              " ஒரு முறை நான் பாடல் எழுத அமர்ந்துவிட்டால், எந்திரத்தனமாக என் மனதில் என்னென்னவோ ஓடுவதை எல்லாம் என்னால் எழுதி முடிக்க முடியாது. பாடல் முழுமை பெறும்போது நான் ஆரம்பத்தில் யோசித்ததெல்லாம் மாறிப் போயிருக்கும். நான் எழுதி முடித்தது சரியா அல்லது ஆரம்பத்தில் எழுத நினைத்தது சரியா என்று என்னாலே பிரித்துப் பார்க்க முடியாது. நான் மனதில் நினைத்ததை எல்லாம் பதிவு செய்யும் கருவி ஏதும் இருக்கிறதா என்ன !? "  என்று இளையராஜா தன் இசைக்குறிப்பு எழுதும் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.


                                                 பாடலுக்கான இசை ஒத்திகை நடைபெறும் முன்பு இசைக்குறிப்பு எழுதப்பட்ட தாள்களின் வலது மூலையில் 7  A.M  அல்லது 2 P.M  என நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.  1989 வரை இளையராஜா ஒரு நாளைக்கு  இரண்டு பாடல்கள் மட்டுமே பதிவு செய்வார். ஒரு பாடல் காலை நேரத்திலும் அடுத்த பாடல் மாலை நேரத்திலும் பதிவு செய்யப்படும். சில நேரங்களில் ஒரே நாளில் நான்கு  பாடல்கள் கூட பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு பதிவுக் கூடங்களில் இரு வேறு இசைக் குழுக்கள் மற்றும் பாடகர்கள் சேர்த்து ஒரே நேரத்தில் பாடல் பதிவு  நடைபெறும். இசைக்குறிப்புத் தாளில்   (Score Sheet)  மேல் இடது மூலையில் பாடகர்களின் பெயர், பாடலாசிரியரின் பெயர்,  படத்தின் தலைப்பு , படக் கம்பெனி பெயர் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்.


                                   காலை 7.45 முதல் 8 மணிக்குள் இசைக்குறிப்புகள் தயாராகி விடும். தன்  இசைமொழியை ராஜா குறிப்புகளாக கொடுத்துவிடுவார்.  அது முழுமையானது அல்ல.  ஒத்திகை  நடக்கும்போது  இசையில் சில மாற்றங்கள் கொண்டு வர நினைத்தால் குறிப்புகளில் திருத்தம் செய்வார்.  பல ஆண்டு காலமாக அவரோடு சேர்ந்து  இசைக்கும் கலைஞர்களுக்கும் அவருக்கும் நல்ல ' புரிதல் ' இருக்கும் காரணத்தினால் திருத்தங்களை உடனே புரிந்து கொண்டு மிகச் சரியாக வாசிப்பார்கள்.

             
                                       அந்த இசைக்குறிப்பேட்டில்  குழுவினர் குரலோசை, வார்த்தைகள், ஆண்  மற்றும்  பெண் பாடகர் பாடும் பகுதி , தனியாக அல்லது குழுவாக பாடும் பகுதி என்று எல்லாமே அடங்கியிருக்கும். தனித்த குழலின் ஓசை அல்லது இரண்டு மூன்று குழல்கள் சேர்ந்து ஒலிக்கும் ஓசை , தனித்த வயலின் அல்லது  வயலின் குழு வாசிக்கும் பகுதி , multitrack-ல் கலப்பு செய்யப்பட வேண்டிய இசைப்பகுதி என்ற விசயமும் எழுதப்பட்டிருக்கும்.


                                               மேற்கத்திய இசைக்குறிப்புகளும் ஸ்வரங்களாக தமிழில் எழுதிக் கொடுக்கப்படுவதால் இசைஞர்களுக்கு அவை எளிதாக புரியும்.  அது கூடுதல் உந்து சக்தியாக இருக்கும். western notation எழுதுவதில் அது  புதிய பாணி.


                                                      Royal Philharmonic Orchestra  விற்காக  அவர்  உருவாக்கிய  அனைத்தும் முழுமை பெற்ற இசைக்குறிப்புகள்  ( full - score format)   அவை பெரிய இசையரங்கில் நடத்தப்படும் இசைக்கான  ( concert  ) குறிப்புகள்  என்று சொல்லலாம். ஒரு முறை அந்த இசை வெளியிடப்பட்டு விட்டால் இந்த உலகத்தில் உள்ள எந்த இசைக்குழுவினரும்  இசைக்கலாம்.  அந்த இசைக் குறிப்பேட்டில் எல்லாமே அடங்கியிருக்கும்.  அதை வழிநடத்தும் இசை நடத்துனர்  இசையின்   tempo வில் சிறிய மாற்றம் செய்து கொள்ளலாம்.  அவ்வளவுதான்!


                                                      ஒலிப்பதிவு கூடத்தில் எழுதப்படும் இசைக்குறிப்பு முழுமை பெற்றது அல்ல. சிறு சிறு குறிப்புகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். வயலின்களின் நாதம் ஒலிக்கப்படும்போது  இடையில் ஒரு புல்லாங்குழல் இழையோட வேண்டுமென்று இளையராஜா நினைத்தாரென்றால் அந்த வேளையில் அதற்கான குறிப்பு தருவார். குழல் இசைப்போருக்குத் தேவையான   சுருதி, மெலடி , டெம்போ எல்லாவற்றையும் வார்த்தைகளாலேயே   தந்து விடுவார். இசை பதிவு செய்யப்பட்ட பிறகு இசைக் கலப்பு செய்கையில் எது உரத்து ஒலிக்கவேண்டும்,  எது சன்னமாக ஒலிக்கவேண்டும்  , எது முதலில், எது அடுத்து  என்பதை இளையராஜா பின்னர் முடிவு செய்வார்.  இசைக்கலவையில் செய்யும் மாற்றங்கள் இளையராஜாவின் தனித்திறமை.


                                              ஆனால்  முழுமையான இசைக்குறிப்பு கொடுக்கப்பட்ட இசையரங்கு நிகழ்ச்சியில் வெவ்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்படும்போது  எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது.  அந்த இசைக்குக் குறிப்புகள் எழுதுவது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல .  எந்தெந்த கருவிகளை எப்படி வாசிக்க வேண்டும் என்ற அதீத இசையறிவு இருந்தால்தான் முழுமையான இசைக்குறிப்புகளை எழுத முடியும் .  கை தேர்ந்த இசைக்கலைஞர்களால்தான்  அதைப் புரிந்து கொள்ளவும் முடியும். சிம்பொனி இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்.   அக்குழுவில் எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் எதுவும் இடம் பெறாது. தனித் தனியே யாரையும் வாசிக்கும்போதே திருத்தவும் முடியாது. ஒரு கருவிக்கு எழுதப்பட்டதை இன்னொரு கருவி கொண்டு வாசிக்கச் சொல்லவும் முடியாது. உதாரணமாக  வயலின் கொண்டு வாசித்த அதே மெலோடியை  sax player கொண்டு வாசிக்க முடியாது.  ஒரு சிம்பொனி இசையமைக்க தகுதிக்கும் மீறிய  கற்பனா சக்தி இருந்தாலொழிய  அதை   யாராலும் எழுதி விட  முடியாது.


                                               Brass section தந்திக் கருவிகளோடு  சேர்ந்து வாசிக்கப்படும்போது  இடையில் ஒரு குழலின் நாதத்தை இழையோட விடுவதற்கு அதன் சுருதி , ஒலித்தரம் புரிந்திருந்தால்தான் மற்றவரின் காதுகளுக்கு வந்து சேரும்படியான இசைகுறிப்பு  எழுத முடியும். செவ்வியல் சிம்பொனி இசை அமைப்பதில் கடினத்தன்மை அதிகம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.    இளையராஜாவின்  இசை ஆளுமையின் மொத்தப்  பரிமாணம்  அவருடைய சிம்பொனி  இசைக்கான  இசைக்குறிப்புகள்.  இதை சிலர் மறுக்கலாம்.  ஆனால்  Royal Philharmonic Orchestra in  London  அதை மறுக்கவேயில்லை .
               

                                       இணையத்தில் கொடுக்கப்பட்டிருந்த செய்திகளின் அடிப்படையில் ஒரு திரைப்படத்திற்கான  பாடலை இளையராஜா  உருவாக்கும் விதத்தை நான் விளக்கிக் கொண்டிருந்தேன்.  இன்னும்  பாடலுக்கான  ஒத்திகையும் பதிவும் கலவையும்  எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை என்னுடைய அடுத்த பதிவில்  பார்க்கலாமே!


                                                           அவருடைய பாடல்கள் பற்றி சிலாகிக்காமல் எப்படி இந்தப் பதிவை முடிப்பது?  மீண்டும்  1979 காலகட்டத்திற்குச்  சென்றால்  ' கல்யாண ராமன் '  படம் பார்த்த ஞாபகம் எழுகிறது.  மறக்க முடியாத படம். அன்றொரு நாள்  திடீரென பள்ளிக்கு அரைநாள் விடுமுறை  கொடுத்து விட்டார்கள். நானும் எனது அண்ணன்மார்களும் சேர்ந்து புத்தகப் பைகளோடும் சீருடையோடும்  தியேட்டருக்குப் போய்விட்டோம் . நல்ல கூட்டம் . வெயிலில் வரிசையில் நின்றோம்.  'பள்ளிக்கூடம்  போகாமல் இங்க எங்கடா வந்தீங்க? ' என்று சில பெரிசுகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது.  அப்போதெல்லாம் சிறுவர்கள் தப்பான காரியம் ஏதாகிலும் செய்வதாக தெரிந்தால் பொது ஜனங்களே கேள்வி கேட்பார்கள்.  கண்டிப்பார்கள்.  சிறு வயதில் பொது இடங்களில் தவறு செய்ய அஞ்சுவோம்.  இப்போது நிலைமை மாறிவிட்டது.  யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை.  சிறு பையன்களின் ரௌடித்தனத்தை நிறைய இடங்களில் பார்க்கலாம்.  no moral fear !


                                             டிக்கெட் எடுக்க வரிசையில்  நிற்கும்போதே நாலாவது தடவையாக  படம் பார்க்க வந்திருக்கும் ஒரு புண்ணியாத்மா படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தது.  எரிச்சலாக இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத வயசு.  சிலர் ஆர்வமாக கேட்பதை பார்த்தால் அதை விட கூடுதலாக  கோபம் வந்தது .  இடத்தை விட்டு நகர்ந்தால் டிக்கெட் கிடைக்காது. நகரவும் முடியாமல் கதை சொல்வதை கேட்காமல் இருக்கவும் முடியாமல்  நெளிந்து கொண்டிருந்தபோது  ஒரு பெரிசு சத்தம் போட்டார்.  கதை சொன்னவன் அடங்கிப் போனான்.  அப்படி வெயில், வியர்வை, இம்சைகளை கடந்து தியேட்டருக்குள்  நுழைந்து   ' அக்கடா '  என்று அமர்ந்தால் பின்னால் இருப்பவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.  எப்படியிருக்கும்!?


                                                    படம் ஆரம்பித்த பிறகு படத்தையும் இசையையும் வெகுவாக ரசித்தேன்.  கமலஹாசன் நடிப்பு , இளையராஜாவின் இசை இரண்டும் படத்தை ஓட வைத்தது என்றால்  யாரும் மறுக்க முடியாது. பல்லழகர்  கமலஹாசனின்  சேட்டைகள் மற்றும்  நகைச்சுவையை தியேட்டரே என்னோடு சேர்ந்து ரசித்தது.  அப்போதிருந்த வெடிச் சிரிப்பெல்லாம் இப்போது தியேட்டரில் கேட்க முடிவதில்லை.


                                                     அந்தப் படத்தில்   ' காதல் வந்துருச்சு ...ஆசையில் ஓடி வந்தேன்....'  என்ற அட்டகாசமான பாடலை  மலேசியா வாசுதேவன் தன்  குரல் மாற்றி வித்தியாசமாக பாடியிருப்பார்.  கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போனது.  பாடல் வரிகளுக்கு தியேட்டரில் சிரிப்பலை கிளம்பியதை பார்த்தேன்.   பஞ்சு அருணாச்சலத்தின் நையாண்டித்தனமான  கவிதை வரிகளுக்கு ராஜாவின் இசையும்  கமலஹாசனின் சேஷ்டைகளும்  ரசிக்கும்படி இருந்தது.   ரஞ்சனி  ராகத்தில்  இரு வேறு சூழலுக்கும் ராஜா இந்த மெலோடியை பயன்படுத்தியிருப்பார்.   மீண்டும் அதே பாடல் ' காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன் '  என்று காதலோடு வாசுதேவனின் வழக்கமான குரலில் ஒலிக்கும் . கேலிக்கும் காதலுக்கும் ஒரே இசை .   வார்த்தைகள் மாறும் . BGM  எல்லாம் வேறுபடும்.  பாங்கோஸ்  தாள கதியை அப்போதே ரசித்து கேட்டது ஞாபகம் இருக்கிறது.  இடையில் தாள நடை மாறுவது வழக்கமான இளையராஜாவின் பாணி. அதை இதிலும் ரசிக்கலாம்.


                                                          பட்டி தொட்டி எல்லாம் பரபரத்த பாடல் . சின்னஞ்சிறுசுகள்  எல்லாம் பாடிக்கொண்டு அலைந்தன . வாய்க்குள் நுழையாத அர்த்தமற்ற வார்த்தைகளைப்  போட்டு  சிறுவர்களைக் கவரும்  முயற்சி எல்லாம் ராஜா செய்ததில்லை.  எல்லோரும் பாடுவதற்கு  ஏற்ற எளிமையான மெட்டு என்பதால்  அந்தப் பாடல் சூப்பர் ஹிட்.


                                                     

                                ' காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்  '  என்ற பாடலை தன வழக்கமான குரலில் வேறுபட்ட இடையிசைகளோடு வாசுதேவன் பாடுவார்.  ஒரே மெட்டுக்கு ஆறு இடையிசைகளில்  இளையராஜா வித்தியாசம் காட்டியிருப்பார்.  அது  நிச்சயம்  பெரிய உழைப்பு. இரண்டாவதாக பாடப்படும் அதே  பாடலில் நாயகி மனப்பிரள்விலிருந்து  மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவது போன்ற காட்சி. அதற்கேற்றார்போல ராஜாவின் இசையும் நமக்குள் வியப்பூட்டும். நையாண்டித்தனம் இல்லாமல் பரபரப்பூட்டும் முற்றிலும் வேறுபட்ட வித்தியாசமான இடையிசை பிரமாதம். பிரமிப்பூட்டும் விதமாய் String Passage அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதுவும் கதை சொல்லும்.  அன்று  பெரும்பாலும் வந்த திரைப்படங்கள் கதையோடு இசையும் இசையோடு கதையும் ஒன்றிணைந்த திரைப்படங்களாகவே  பரிணமித்தன.


                                         கதையின் களத்தை நன்கு உணர்ந்து தன்  கற்பனைக் குதிரையை ஓட வைத்து கதைக்குத் தகுந்தாற்போல் இசையமைப்பதில் இளையராஜாவிற்கு நிகர் யாருமில்லை.  கீழேயுள்ள பாடல் அதை நமக்கு உணர்த்தும். 

                                             


                                ' மலர்களில் ஆடும் இளமை புதுமையே '  என்ற பாடல் பஞ்சு அருணாசலம் எழுதி சுத்த சாவேரி ராகத்தில் எஸ். பி. ஷைலஜா தன் இனிய குரலில்  பாடிய அழகான பாடல்.   மார்கழிப் பனியின் இதமான குளிரில் நனைய வைப்பது போன்ற சுகமான பாடல்.  அன்றலர்ந்த மலர் போல நாயகி உற்சாக வெள்ளத்தில் மிதந்தபடி காலை நேரப் பனியினை  சுகித்துக் கொண்டு ஆடிப்பாடும்  சுகானுபவத்தை ராஜா இன்னிசையில் கொடுத்திருக்கிறார்.  மயிலும் குயிலும் குதூகலமாய்  ஆடுவதை பாடுவதை  முன்னிசையில் கொடுத்ததாலோ  என்னவோ இயக்குனரும் அதையே காட்சிகளாக விரித்திருப்பார்.  அல்லது காட்சிகளை எப்படி எடுப்பீர்கள் என்று இயக்குனரிடம் கேட்ட பிறகு ராஜா இந்தப் பாடலுக்கு இசைத்திருப்பாரோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.   காலை நேரத்து பலவித பறவைகளின் சப்தங்களை  இசைக்கருவிகளின் நாதத்தில்  இழைய விட்டிருப்பார். இடையிசையில் தபேலாவின் நடைமாற்றம் உற்சாகமூட்டும்.  மொத்தத்தில் பல பூக்கள் தொடுத்த மாலையாக பலவித இசைக்கருவிகளின் சங்கமத்தை ஒரே இசைமாலையாக  தொடுத்து நமக்கு இசைவிருந்து  கொடுத்திருக்கிறார்.
 

                                                   

                           அதே ஆண்டில் வெளிவந்த  சிவாஜியின் ' கவரிமான் ' என்ற திரைப்படம் மறக்க முடியாதது.  சிவாஜிக்கும் நான் ரசிகன் என்பதால் அவர் படங்கள் ஒன்று விடாமல் பார்த்துவிடுவேன்.  இந்தப் படத்தில் கதையை திசை திருப்பும் ஒரு முக்கியக் கட்டம் உண்டு. தன் மனைவி யாருடனோ சோரம்  போவதை  நேரில் பார்த்தவுடன்  அவர்  தன்  முகத்திலும் உடல்  அசைவிலும் காட்டும் உணர்ச்சிகளின்  கொந்தளிப்பை  இளையராஜா  பின்னணி இசையில் கூடுதலாக  காட்டியிருப்பார்.  அந்தக் காட்சியையும் அதற்கான பின்னணி இசையையும்  இன்னும் நான் மறக்கவில்லை. படபடப்பூட்டும்  காட்சி பரபரப்பூட்டும் இசை.


                                   அந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும்      ' 'பூப்போலே...உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா ' என்ற பாடல்  என்னை அதிகம்  கவர்ந்த பாடல்.  மாயமாலகௌலை  என்ற ராகத்தில் அமைந்த பாடல். பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளுக்கு எஸ்.பி. பி அவர்களின் குரலில் மனதை மயிலிறகால் வருடும்  அற்புதமான பாடல்.  சிவாஜி தன்  சிறு வயது மகளுக்காக மகிழ்ச்சியாக பாடும் வாழ்த்துப்பாடல் .  தாலாட்டுப் பாடல் இல்லையென்றாலும் நம் எல்லோரின் மனதையும் தாலாட்டிச் செல்லும் பாடல்.  உயிருக்கு உயிராய் நேசித்த தன்  மகளுக்காக பாடிய பாடலை , அதே மகள்  வளர்ந்த பிறகு தந்தையை அவள் வெறுக்கும் சூழலில் , மீண்டும் பாடும்போது அந்தப் பாடலின் அருமை இன்னும் கூடுதலாய் உயர்ந்து நிற்கும். ஒரே பாடலை இரு முறை காட்சிகளாய் காட்டியபோது  சிவாஜியின் நடிப்பை வெகுவாக ரசித்தேன். இளையராஜாவின் இசையை அதை விட ரசித்தேன்.


                                                  மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை மீண்டும் வெளிப்படுத்துதலிலும்  தந்தையின் நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தலிலும் இளையராஜா வெளிக் காட்டும் இடையிசையோடு  சிவாஜியின் நடிப்பும் ஈடு கொடுக்கும்.  இந்தப் படத்திலும் ஒரே பாடல் இரு முறை பாடப்படுகிறது.  இடையிசைகளும் வேறுபடுகிறது.  இரண்டாம் முறை பாடுகையில் இசையில் ஒரு மெல்லிய சோகத்தை ராஜா அற்புதமாக கொடுத்திருப்பார்.  அதிலும் இரண்டாம் இடையிசையில் ஒற்றை வயலின் நாதம் நமக்குள் இனம் புரியா  இம்சையான வலியை ஏற்படுத்தும்  .  இரு முறை பாடப்படுவது ஒரே காணொளிக் காட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது.


                                               


                      கதையின் போக்கிற்கு ஏற்ற  பாடல்களைக் கொடுப்பதில் இளையராஜா எப்போதுமே சளைத்ததில்லை.  கதையை  முழுமையாக கேட்டறிந்த பின்னரே பாடல்களை அவர் கற்பனை செய்து அவற்றையெல்லாம் மக்களின் எல்லா மன உணர்வுகளுக்கு ஏற்ப  பட்டை தீட்டி கொடுத்திருக்கிறார்.  மக்களும் ஏற்றுக் கொண்டதால்தான் அவரை மகத்தான கலைஞராக இசைஞானியாக பார்க்கிறார்கள்.   இசையுலகில் யாரும் அழிக்க முடியாத மறக்கவோ மறுக்கவோ முடியாத பேரிடத்தை  அடைந்து விட்டார்.  இசை உள்ளளவும் இசைஞானியும் உண்டு.



................................தொடர்வேன்.......................