இசை ராட்சஷன் - 7
( The Musical Legend )
தமிழ்த் திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்களும் மெல்லிசைப் பாடல்களும் கொடுக்கப்பட்ட பின்னரே பாமர ஜனங்களும் அதை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். இளையராஜாவின் வருகைக்கு முன்னர் பல இசை முன்னோர்களால் படைக்கப்பட்ட அற்புத பாடல்கள் போலவே இளையராஜாவும் நாட்டுப்புறப் பாடல்களை அனாயசமாக கையாண்டார் . தனது இசை முன்னோர்கள் கொடுத்த படைப்புகளையும் தாண்டி செவ்வியல் இசை கலந்த நாட்டுப்புற பாடல்களை கொடுத்தவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.
' ஞானதேசிகன் ' என்ற இயற்பெயர் கொண்டு பிறந்து, கிறித்தவராக ' ' டேனியல் ' என்ற பெயரும் கொண்டு , வீட்டில் ' ராசய்யா ' என்று அன்பொழுக அழைக்கப்பட்டு, திரையுலகத்திற்காக 'இளையராஜா ' என்று உருவெடுத்தவர் நமது இளையராஜா . தமிழகத்தின் கடைக்கோடியில் பண்ணைபுரத்தில் பிறந்து வளர்ந்து, மக்களிசை கேட்டு, இசையின்பால் ஈர்க்கப்பட்டு, பெண் குரலில் பாடிக் கொண்டு, நாடகங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று ஊர் ஊராக தன் சகோதரர்களுடன் சுற்றி இசைக்கச்சேரி நடத்தி, சென்னைக்குக் குடி புகுந்து, இசை அறிவை வளர்த்துக் கொண்டு , சினிமா உலகத்தில் பிரவேசித்தவருக்கு என்ன கொடுத்தால் இந்த ஜனங்களுக்குப் பிடிக்கும் என்பது தெரிந்து கொடுத்த இசைஞானம் அளப்பற்கரியது. நாடக இசையிலிருந்துதான் இந்த சினிமா இசை வளர்ந்திருக்க முடியும் என்பதால் இளையராஜாவிற்கு அந்த நாடக இசை அனுபவம் ஏற்கனவே இருந்தது ; அதனால் அவரால் சிறப்பானதொரு இசை வழங்க முடிந்தது .
1978 இல் இளையராஜாவின் இசைப்பயணத்தில் நானும் பயணித்துக்கொண்டிருந்த காலம் . குறுகிய ஹாஸ்டல் வாழ்க்கை முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். டேப்ரெக்கார்டர் வசதி படைத்தோர் வீட்டில் மட்டும் இருக்கும். எனக்கு வாய்த்தது ரேடியோ மட்டுமே! சிலோன் வானொலி ஒலிபரப்பாத பாட்டுக்களா! எத்தனையோ இசை அமுதங்களை அள்ளி வழங்கிய அட்சயபாத்திரமல்லவா ! பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே தூங்கிப் போன காலமும் பாட்டுக்கள் கேட்பதற்காகவே தூங்காத காலமும் நெஞ்சில் நிழலாடுகின்றது. அரை மணிக்கொரு முறை வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு காலத்துப் பாடல்களை ஒலிபரப்புவதில் இலங்கை வானொலியை முந்தவே முடியாது.
அந்த சமயத்தில் ' இளமை ஊஞ்சலாடுகிறது ' என்ற ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் வெளிவந்தது. ரஜினி , கமல் என்று இரு மெகா ஸ்டார்கள் இணைந்து நடித்த படம் . அவர்களின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக உச்சிக்கு சென்று கொண்டிருந்த காலமது. எம்.ஜி. ஆர் , சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார்களாக பேசப்பட்டு வந்தார்கள். திரைப்படம் பெரிய ஹிட். பாடல்கள் அதைவிட பெரிய ஹிட்.
இலங்கை வானொலியில் 'இசைச்செல்வம்' என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு மணி நேரம் நடத்தப்படும். பல புதிய பாடல்கள் ஒலிபரப்பப்படும் . மக்களை எது அதிகமாய் கவருகின்றதோ அந்தப் பாடலுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து அப்பாடல் எந்தத் தரத்தில் இடம் பிடிக்கிறது என்பதை தேன்குரல் அறிவிப்பாளர் கே.எஸ் . ராஜா அறிவிப்பார். கடைசியாக இருக்கும் பாடல் அந்த வாரம் வெளியேற்றப்படும். புதிய பாடல் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் . ' என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு ' என்ற பாடல் அப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே வாரத்தில் மூன்றாம் இடம் பிடித்தது. அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஏறக்குறைய என் நினைவில் உள்ளவரை 30 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக முதலிடத்தைப் பிடித்தது .
என்ன ஒரு இளமைத் துள்ளலான பாடல்! கிடார் , டிரம்பெட் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடல் . கிடாரை இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா என என்னை வியக்க வைத்தது . தான் காதலித்தப் பெண்ணொருத்தித் தன் நண்பனுடன் சேர்ந்து வந்து தானாடும் நடன நிகழ்ச்சியை காண அமர்ந்திருப்பதை பார்க்கும் நாயகன் உற்சாக உணர்வு சட்டென வடிந்துபோய் ஏமாற்றம், பிரிவு, நம்பிக்கைத் துரோகம் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொள்ள முடியாமல் வெடித்து , 'வார்த்தைத் தவறி விட்டாய் கண்ணம்மா ...மார்பு துடிக்குதடி ' என்று வேதனைக் குரலோடு பாடல் பாடி ஆடுவதாக காட்சி. கமலஹாசனின் ஆவேசமான ஆட்டம், எஸ்.பி.பி யின் இளமை பீறிடும் உணர்ச்சிப் பூர்வமான குரல், 'அதுக்கும் மேல' இளையராஜாவின் அட்டகாசமான இசையமைப்பு என்று எல்லாம் பொருந்தி நம்மையும் கலங்கடிக்கும் பாடல் அது. சொல்லப்பட்ட சூழலை மனதில் உள்வாங்கி அதை அப்படியே இசைமாலையாக கொடுத்திருப்பார் இளையராஜா. நாயகி அங்கிருக்கவும் இயலாமல் நகரவும் முடியாமல் தவிப்பதை மேலை நாட்டு இசைக்கலப்பில் அழகாக எடுத்துரைப்பார்.
'உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம் ' என்ற வரிகள் சரணத்தில் பாடப்பட்டு ஒரு இடையிசை வந்து மறுபடியும் அதே வரிகள் பாடப்படும். அடுத்த சரணத்திலும் அது போலவேதான்! அந்த இடையிசைக்கு ரஜினி செய்யும் மேனரிசம் இப்போதும் ரசிக்கலாம் . அதற்காகவே அந்த இடையிசையை கூர்ந்து கேட்டு ரசிப்பேன் . அவ்வளவு ஆர்ப்பாட்டமாய் ஒலிக்கும் பாடல் எல்லா இசையும் நிறுத்தப்பட்டு மீண்டும் தொகையறா வரிகளோடு முடிவதெல்லாம் எனக்கு புதுமையாக தெரிந்தது. இன்று அந்தப் படம் , நடிகர், நடனம் , நடனத்திற்கான உடை , இசையமைத்தவர் , பாடியவர் எல்லாம் பழசு . ஆனால் அந்த இசை மட்டும் எனக்கு புதுசு. ஏன் என்று எளிதாக கேட்கும் அளவிற்கு விளக்கம் எளிதாக சொல்ல முடியவில்லை.
அதே படத்தில் ' ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது ' என்ற இனிய கானம் கேட்பவரை காதல் கொள்ளச் செய்யும் ; காதலிப்போரை முணுமுணு க்கச் சொல்லும்; காதலிக்காதவரை ஏங்கச் சொல்லும் . அன்று அந்தப் பாடல் கேட்டு நிறைய இளைஞர்கள் அப்படித்தான் திரிந்தார்கள்.
படம் மட்டுமா ' இளமை ஊஞ்சலாடுகிறது ' ...இப்போது கேட்டாலும் பாட்டைப் பாடிய பாலுவிற்கும் வாணி அவர்களுக்குமல்லவா குரலில் இளமை ஊஞ்சலாடுகிறது . இருவரும் இணைந்து கனிந்து குரலில் அப்படி ஒரு குழைவைக் கூட்டிச் சேர்க்கும் வித்தையை கொண்டுவந்திருப்பார்கள். அந்தக் கனிவிற்கும் குழைவிற்கும் இளையராஜாவின் அருமையான இன்னிசையே காரணம். 'கற்பனைகளில் ...சுகம்... சுகம்...' என்று எஸ்.பி.பி கொஞ்சிப் பாடும்போதே கேட்பவருக்கும் சுகம்தான்! சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பில் இந்தப் பாடலையும் நிச்சயம் சேர்க்கலாம் .
மலேசியா வாசுதேவன் குரலில் ' தண்ணி கருத்துருச்சு ...அங்கு தவளை சத்தம் கேட்டுருச்சு ' என்ற பாடல் ஊரெல்லாம் உற்சாகப்படுத்திய குத்துப் பாடல். பாடலின் பின்னணியில் காட்சிகள் கொஞ்சம் அடல்ஸ் ஒன்லி . நாயகனும் நாயகனின் தோழியும் ஒன்று கூடுவதாக வரும் காட்சியமைப்பில் வெளியே நாடோடிக் கூட்டத்து ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடலுக்கு முகவுரையாக ஆடிப் பாடி மகிழ்வதின் பின்னணியில் இப்பாடல் ஒலிக்கும். மலேசியா வாசுதேவனின் குரல் குத்துப் பாட்டுக்கும் நாடோடிப் பாட்டுக்கும் சரியாக பொருந்தும் . யாருக்கு எந்தப் பாடல் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை தேர்வு செய்வதிலும் ஒரு இசையமைப்பாளனின் பங்கு இருக்கிறது . இளையராஜா அதிலும் கெட்டிக்காரர்.
' ஏ .....காதும் காதும் வச்சது போல் வாடி புள்ள ...கண்ணும் கண்ணும் பேசுறப்போ வார்த்தையில்ல ...' என்ற வரிகள் வரும்போது பாட்டின் போக்கும் இசையின் போக்கும் வித்தியாசமாய் இருக்கும் . பின்னணியில் இருவரின் உணர்ச்சிகளும் இலைமறை காயாக அதற்கேற்றார்போல காட்டப்பட்டிருப்பதை பார்த்தபோது எனக்கும் பற்றிக் கொண்டதெல்லாம் பகிர முடியாது . இளையராஜாவின் இசையும் சேர்ந்து பற்ற வைத்தது.
http://play.raaga.com/tamil/album/Illamai-Oonjaladuthu-songs-T0000059
எல்லா பாட்டுக்களும் வாலி அவர்களின் கை வண்ணமே! வார்த்தைச் சித்தர் என்று ஏன் அழைக்கிறார்கள் என இப்போது புரிகிறது . 'கிண்ணத்தில் தேன் வடித்து ' , ' நீ கேட்டால் ' என்ற மேலும் இரு அருமையான வித்தியாசமான பாடல்களும் அதே படத்தில் உண்டு . அந்நேரத்தில் நான் அதை அதிகம் ரசிக்கவில்லை. இப்போது கேட்டால் ஐந்து பாடல்களும் ஐந்து விதமான வித்தியாசம் கொண்ட பாடல்கள் என்பது புரிகிறது . இன்னும் இன்னும் கேட்கத் தூண்டும் இளையராஜாவின் இசைக்குத்தான் எத்துனை பலம் !
' இது எப்படி இருக்கு ' என்றொரு படம் . ஜேசுதாஸ் மற்றும் ஜானகி குரலில் ' எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ ' என்ற பாடலை கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போனது. இயற்கையின் அழகையெல்லாம் அள்ளிக் குடித்து விடத் தோன்றும் அழகியல் உணர்வோடு காதலின் மென்மையையும் சேர்த்து வெளிக்காட்டும் நாயகனும் நாயகியும் ஆடிப் பாடுவதாக அமைக்கப்பட்ட சூழலுக்கு இளையராஜா இசையை அள்ளித் தெளித்த வண்ணம் அற்புதமானது. பாடல் கேட்கும்போதெல்லாம் இறக்கை முளைத்துப் பறப்பதைப் போன்ற உணர்வு. ' குக்கூ ....குகுகுக்கூ ...' என்று இரு குயில்களின் குரலொலி போல் குரலிசை சேர்த்து பின்னணி இசை அமைத்திருப்பார். நாமும் பறவைகளாகாமல் என்ன செய்ய?
'கண்ணன் ஒரு கைக்குழந்தை ' என்ற திரைப்படத்தில் ' மேகமே ...தூதாக வா ... அழகின் ஆராதனை ' என்று எஸ்.பி பி. மற்றும் சுசீலாவின் ஜோடிக் குரல்களோடு ஒரு உல்லாசப் பாடல். பகடி ராகத்தில் அமைக்கப்பட்ட இளமையும் இனிமையும் ததும்பும் பாடல். காதல் பாடல்கள் பல இசையமைப்பாளர்கள் அமைத்து இருக்கிறார்கள். அதே விதமான உணர்வை அதை விட மேலான உணர்வை இவர் பாடல்களும் ஏற்படுத்துவதே இளையராஜாவின் சிறப்பு.