Monday, 23 November 2015

இசை ராட்சஷன் - 13 ( The Musical Legend )


இளையராஜா பற்றி  இணையத்தில் கொட்டிக் கிடக்கும் செய்தி பொக்கிஷங்களிலிருந்து  சில  வித்தியாசமான  செய்திகளைப்  பகிர ஆசைப்படுகின்றேன் ,

                                                       *பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் அவர்களை பர்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா கடந்த ஆண்டு நடந்தது. விழாவிற்கு இசைஞானி இளையராஜாவோடு மெல்லிசை மன்னரும் கலந்து கொண்டார்.. மேடையின் பின்புறமிருந்த தனி அறையில் அவருக்காக காத்துக்கொண்டிருந்தார் இளையராஜா அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் உள்ளே வர, ‘அண்ணா வாங்க..’ என்று எழுந்து சென்று கையை பிடித்து வரவேற்றார் இசைஞானி. “ராஜா நலம்தானே வந்து ரொம்ப நாழியாச்சா” என்றார். “பராவாயில்லண்ணா” என்று இளையராஜா சிரிக்க எம்.எஸ்.வியும் சேர்ந்து சிரித்தார். “ஹெல்த்தை பார்த்துக்கோங்க ராஜா” என்று எம்.எஸ்.வி சொல்லவும், “நாம எப்படிண்ணா ஹெல்த்தை பார்த்துக்க முடியும் ஹெல்த் தான் நம்மை பார்த்துக்கணும என்று பதில் கொடுக்க, மனம் விட்டு சிரித்தார் மெல்லிசை மன்னர். விழா மேடைக்கு செல்லும்போது இசைஞானி, “அண்ணனை பார்த்து கூட்டிட்டுப்போங்கள்” என்று வழிவிட்டு பின்னால் நின்று கொண்டார்.
**அண்ணன் பாவலர் வரதாரஜன் அவர்களோடு இளையாராஜா கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த சமயம். திருச்சியில் கச்சேரியை முடித்து விட்டு மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள கம்யூனிஸ்ட் நண்பர் வீட்டில் தங்கியிருக்கின்றனர். அப்போது இளையராஜா வீட்டு முன் கட்டிலைப்போட்டு படுத்திருக்கிறார். தூரத்தில் புதியபறவை படத்தின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிற்து. “எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது” என்று வயலின்கள் கூட்டமாய் குரல் எழுப்ப அதில் லயித்துப் போகிறார் இளையராஜா . ' இசையமைத்தால் இப்படி இருக்கணும்  ' என்று மனதுக்குள் விதைபோட்டு வைக்கிறார்.


அந்த லட்சியம்தான் பிறகு ஒரு நாள் மெல்லத்திறந்தது கதவு படத்திற்கு அவரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பை காலம் இளையராஜாவுக்கு கொடுத்தது. மெல்லிசை மன்னரை தன்னுடைய குருநாதர் இடத்தில் வைத்து பார்த்த இளையராஜாவுக்கு எம்.எஸ்.வியின் மறைவு பேரிழப்பு.

**இளையாராஜா அவர்கள் நிற்பதற்கு நேரமில்லாமல் பரபரப்பாக இருந்த எண்பதுகளி்ன்போது இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் தன்னுடைய படத்திற்கு இசைய்மைக்கச்சொல்லி் இளையராஜா அவர்களை சந்திக்க ஏவி.எம். ஸ்டுடியோவிற்கு வந்து காத்திருந்தார். இந்த தகவல் ராஜா சாருக்கும் சொல்லப்பட்டது. ”இருக்கட்டும்” என்று மட்டும் சொல்லி விட்டு வேலையில் கவனமாக இருந்தார். அன்று முழுவதும் ஸ்ரீதரை ராஜா சார் சந்திக்கவேயில்லை.இப்படி இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் ஸ்ரீதர் சாருக்கு கோபம் வந்து விட்டது. விஷயம் ராஜாவிடம்  சொல்லப்பட்டது. ஒலிப்பதிவு கூடத்திலிருந்து வெளியே வந்தார் ராஜா .     “ நான் கடந்த மூன்று நாளா வந்து போயிகிட்டிருக்கேன். நான் யார்கிட்டேயும் இது போல போய் நின்னதில்லை. உங்க கிட்டதான் வந்திருக்கேன்” என்று கொஞ்சம் கோபத்துடன் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதர் .  உடனே இளையராஜா, " மூன்று நாளும் நான் உங்களை வரச்சொல்லவில்லையே சார் ” என்று சொல்லவும் அங்கிருந்த அத்தனைபேரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். மிகப்பெரிய இயக்குனர் ஸ்ரீதர் அவரிடம் இப்படி யாரும் பேசியதில்லையே என்று  எல்லோருக்கும்  அதிர்ச்சி.
 ராஜா  பேச ஆரம்பித்தார்.  ” உங்கள் எல்லா படத்திற்கும் அண்ணன் எம்.எஸ்.வி எவ்வளவு அருமையான பாடல்களை போட்டுக்கொடுத்திருக்கிறார். அவரை விட்டு விட்டு என்கிட்ட ஏன் வந்தீங்க? ” என்று கேட்கவும் ஸ்ரீதர் ஆடிப்போய் விட்டார். தொடர்ந்து ராஜா ,  “அண்ணன் இசை வேண்டாம்னு நீங்க நினைச்சதாலதான் நான் சந்திக்கவில்லை ” என்று சொன்னார். அதன்பிறகு பல சமாதானங்கள் செய்த பிறகே இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டார்.


**  "இசைஞானி இசையமைத்த முதல் பாடல் "

                அப்போது இசைஞானி இளையரஜா அவர்கள் ஜி.கே வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்திற்கான இசையமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஒரு பாடலுக்கான டியூனை இயக்குனர் தேவராஜ் மோகனிடம் வாசித்து காட்டினார் ஜி.கே.வி. ஆனல் அந்த டியூன் இயக்குனருக்கு பிடிக்க வில்லை.

       
            நேரம் கடந்து கொண்டே போகிறது. பல டியூன்களை போட்டும் இன்னும் திருப்தி அடையவில்லை இயக்குனர். அப்போது சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்போஸிங்கில் அமர்ந்திருக்கிறார்கள். உடனே இயக்குனர் தேவராஜ் மோகன் ஜி.கே.வெங்கடேஷிடம் ,  “தம்பி ராஜா எனக்கு ஒரு டியூன் வாசிச்சு காண்பிச்சார். அது எனக்கு பிடிச்சிருந்தது” என்று சொல்லவும், “அப்போ அதையே வெச்சுக்கலாம்” என்று ஜி.கே.வி. ஓகே சொல்லிவிட்டார். உடனே பாடலை யாரை வைத்து எழுதச்சொல்லலாம் என்று யோசித்த போது கவிஞர் முத்து லிங்கத்தை வைத்து வைத்து எழுத முடிவானது. உடனே இளையரஜா அவர்கள் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வீட்டிற்கே சென்று அந்த டியூனை வாசிக்க வாசிக்க அவர் பாடல் வரிகளை எழுதிக்கொடுக்கிறார்.


           
                கிராமிய மெட்டுகளை அடிப்படையாக கொண்ட அந்த பாடல் ஒரு ராகமாளிகையாக ஒலிக்கும். “தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்த பொன்னியம்மா” என்று நதிகளின் பெருமை கூறும் அந்த பாடல்தான் இசைஞானி இளையரஜா இசையமைத்த முதல் பாடல் .  ஆனால் படத்தின் டைட்டிலில் பெயர் இருக்காது.  இந்த படம் வெளியாகும்போது இளையராஜா அவர்களின் மூத்த சகோதரர் பாவலர்  வரதராஜன் அவர்கள் படம் வெளியான திரையரங்குகளில் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளை பறக்க விட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அன்று பறக்க ஆரம்பித்த இளையராஜாவின் பாட்டுக்கொடி இன்னும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.


 ** ஒரு விழாவில் இளையராஜா பேசியது .


" சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்தபோது இசைக்கருவிகளுடன்  இசைத்துக் காட்டியபோதும் எங்களுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை.  ஆனால் மேஜையில் தாளம் போட்டு பாட்டு பாடிக் காட்டியபோது , பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் எந்தக் கணக்கில் என்னை அறிமுகப்படுத்தினார் எனத் தெரியாது. "                                         
** விஜி  மேனுவல்   இந்தியாவின் தலை சிறந்த கீபோர்ட் பிளேயர்  மற்றும் பியானிஸ்ட் .  ஹன்டல்  மேனுவல்  என்பவரின்  மகனும் மாணவரும்  ஆவார். இளையராஜாவோடு  நாற்பது ஆண்டுகள்  வேலை செய்திருக்கிறார்.     பாஸ் கிடார் , ட்ரம்ஸ் , கீபோர்ட்  வாசிப்பதில்  வல்லவராக  விளங்கியதால்  சிங்கப்பூரில் உள்ள  ஒரு ராக் பேண்ட் அவரை  சேர்த்துக் கொண்டது.  இந்தியாவிலிருந்து முதன் முதலாக சென்ற  ராக் ஆர்கனிஸ்ட்  அவர் மட்டுமே! அப்போது அவர் வயது பதினேழு.  அந்த ராக் பேண்ட் இந்தியா முழுக்க பயணித்தது; இசைத்தது.  இதற்கிடையில்  சினிமாவின் இசைத் துறை அவரை உபசரித்தது.  இசை அமைப்பாளர்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை  அவரே பகிருவதை கேட்போம்.


"  ஒரு பாஸ் கிடாரிஸ்டாக ஷ்யாம் ஜோசப்  என்ற இசையமைப்பாளரிடம் என் இசைப் பயணத்தை ஆரம்பித்தேன் .  பாஸ் கிடார் வாசிப்பில் புதிய யுக்திகளை கையாண்டேன். அது எனக்கு எம்.எஸ்.வி. , கே. வி. மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களிடமும்  வேலை செய்யும் வாய்ப்பினை பெற்றுத் தந்தது.  அதன் பிறகு ஜி. கே. வெங்கடேஷ் அவர்களிடம் பணியாற்றியபோதுதான் இளையராஜாவை சந்தித்தேன்.  Acoustic guitarist ஆக அவர் இசைக் குழுவில் இருந்தார்.  இளையராஜா இசை உலகின் magic என்றே சொல்லலாம்.  அவரின் அபார இசைத்திறமை  எனக்கு ஆச்சரியமூட்டியது.  இளையராஜாவிற்கு  Pink Floyd , Led  Zeppelin , The  beetles , Jimi  Hendrix  போன்ற பல இசைக் குழுக்களின் இசை ஆல்பத்தை அறிமுகம் செய்தேன் . மெலடி மெட்டுக்களுக்கு பயன்படுத்தப்படும் அடிப்படை chords பலவற்றை பகிர்ந்து கொண்டோம்.  Western music  notation எழுதுவதில் அவருக்கிருந்த அபாரத் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  ' வரப்பிரசாதம்  '  என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த கோவர்த்தன் என்ற இசையமைப்பாளர்  சில வேலைகள் காரணமாக  இளையராஜாவை  re-recording செய்யச் சொல்லிவிட்டுப் போனார்.  Major 7th chord  மற்றும் minor 7th  chord  இரண்டுக்கும் இடையே அமையுமாறு அற்புதமான theme music ஒன்றினை இளையராஜா அமைத்ததைப் பார்த்து நான் அசந்து போனேன். "


அதன் பிறகு Jude David என்பவர்  Music notation எழுதுவதில் இளையராஜாவிற்கு  உதவி செய்திருக்கிறார்.  கோவர்த்தன் மாஸ்டரிடமிருந்து  ஜதி , தாளம் , தமிழில் ஸ்வரங்கள் எழுதுதல் போன்றவற்றையும் இளையராஜா தெளிவாகக்  கற்றறிந்தார் . இந்தச் செய்திகளை பகிரும் விஜி மேனுவல் இன்னும்  தொடர்கிறார்.


"  சில படங்கள் இளையராஜாவோடு பணியாற்றிய பிறகு இளையராஜா என்னை அழைத்து அவருடைய மைத்துனர் சசி என்பவருக்கு பாஸ் கிடார் கற்றுக் கொடுக்கச் சொன்னார். நானும் பல நாட்கள் செலவழித்து கற்றுக் கொடுத்தேன். சசி நன்கு தேறிய  பிறகு  நான் கீபோர்ட் பக்கம் நகர்ந்து விட்டேன் .  அதன் பிறகு பல  ஆண்டுகள் ஆர்கனிஸ்டாக  இளையராஜாவோடு பணி  புரிந்தேன்.  பிரியா படத்தில் ' டார்லிங் டார்லிங் ' பாட்டுக்கு முன்பு ஆரம்பிக்கும் பாஸ் கிடார் பீஸ் ,  ராஜ பார்வை படத்தில் கமல் தனியாக வாசிக்கும் வயலினை நரசிம்மன் இசைக்க அதன் கூடவே வரும் கீபோர்ட் இசையை நான் வாசித்தது எல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். இளையராஜா இல்லாமல் அது சாத்தியமாய் இருக்காது. "


                                    
                                               


                      இளையராஜா பற்றி இன்னும் பல செய்திகள் குவிந்து கிடக்கின்றன . இந்தப் பதிவிலேயே எல்லாவற்றையும் பகிர முடியாது.  ராட்சசன் இன்னும் பல காலம் வளர்ந்து கொண்டுதான் செல்லும் .  அவருடைய  பாடல்களுக்குள் செல்வோம்.

                   
                         1979 ல் வந்த படங்களில் ' சக்களத்தி '  என்றொரு படம் பார்த்து விட்டு வீடு திரும்புகையில் பக்கத்துக்கு வீட்டு  பாட்டிகள் இரண்டு பேர்   ' என்ன சினிமா பார்த்தாய் ? '  என்று கேட்டார்கள் . நான் படத்தின் பேரைச் சொன்னவுடன்  பலமாக சிரித்தார்கள்.  எனக்கு கோபம் வந்ததால் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  நீண்ட நாட்கள் கழித்துதான் தெரிந்தது .  அவர்கள் இருவருக்கும் ஒரே  கணவன்.  சக்களத்திக்கு அர்த்தம் அதன் பிறகு  தெரிந்தது.


                         அந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இருந்தாலும் ' என்ன பாட்டு பாட ' , ' வாடை வாட்டுது '  என்ற இரு பாடல்கள் ஹிட் ஆகின.  இரண்டையும் இளையராஜாவின் இளமைக் குரலில் கேட்கலாம்.  புலமைப் பித்தன்,  முத்துலிங்கம் இருவரும் எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள் .

                          ' என்ன பாட்டு பாட ....என்ன தாளம் போட..'  என்ற பாடல் டைட்டில் பாடல்.  மாட்டு வண்டி ஒட்டிக் கொண்டே நாயகன் பாடுவது காட்சி .  அதற்கேற்றார்போல  ராஜா  மாடுகள்  ஓடும்போது  அசையும்  கழுத்துச் சலங்கையின் ஒலியை தாளமாக வைத்து  மிகவும் பொருத்தமாக பாடல் இசைத்திருப்பார்.  அந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரபரப்பாக ஒலிபரப்பப்பட்டது.  அசையும் சதங்கையும் இசையும் இந்தப் பாட்டைக் கேட்டால் நம்மையும் தாளம் போட வைக்கும்.  ஷெனாய் பயன்பாடு இந்தப் பாட்டில் அதிகம் .  மாட்டைப் பார்த்துப்  பேசுவதை பாடலாக மாற்றியிருப்பார்கள்.  கிராமத்தில் மனிதர்கள் விலங்குகளோடு பேசி பழகிக்  கொள்ளும் பாச உணர்வுகளை  எளிதாக  புரியும்  வண்ணம்  பாடல்  கொடுக்கப்பட்டிருக்கும். எளிமையான நாட்டுப்புறப்  பாடலை இளையராஜா இனிமையாக கொடுத்திருக்கிறார்.  மாயமாலகௌளை  என்ற ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. 

                     
                                  
                                                 


                                    ' வாடை வாட்டுது ...ஒரு போர்வை கேட்குது ..' என்ற பாடல் பிரபலம் ஆன அடுத்த பாடல் என்று சொல்லலாம்.  வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் ஒரு கிராமத்து நாயகன்  மனைவியுடன் கொண்ட ஊடலால் விரக தாபத்தோடு  எழுப்பும் மன உணர்வுகளை பாட்டாக பாடுவதை இளையராஜாவின் இசை அப்படியே படம் பிடித்துக் காட்டும்.  சூழலுக்கு மிகவும் பொருத்தமான பாடல் . இரவின் தனிமை , கிராமத்துச சூழலின் ஓசைகள் , ராக்கோழி சப்தம், பூச்சிகளின்  ரீங்காரம் என பின்னணியை இசைக் கருவிகளிலேயே  கொண்டு வரும் அந்த கற்பனையும் லாவகமும் இளையராஜாவிற்கு கை வந்த கலையல்லவா!   கண் மூடி கேட்கும்போது  ஒரு குளிரான இரவை  நாமும் உணர்வோம் ; இனம் புரியா சோகத்தில் நாமும் உழல்வோம் .


                                    
                                            


                          ' தர்மயுத்தம்  '  வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் எனக்கு ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய படம்.  ரஜினியின் நடிப்பை வெகுவாக ரசித்த படம்.  இளையராஜாவின் மிரட்டலான  இசை என்னை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.  பௌர்ணமி  இரவில் நாயகனுக்கு ஏற்படும் வெறித்தனத்தை படு மிரட்டலாக எடுத்திருப்பார்கள்.  அதற்கு ராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசை படம் பார்க்கும் எல்லோருக்கும் நிச்சயம் கிலியை  ஏற்படுத்தும்.  சிகப்பு ரோஜாக்கள் திரைப்பட இசையைப் போலவே இந்தப் படத்திலும்  அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கு பின்னணி இசை மிரட்டும்.

                        இந்தப்  படத்தில் இரண்டு பாடல்கள் மெகா ஹிட் .  அண்ணன் தங்கை பாசத்திற்கு சிவாஜிக்குப் பிறகு அதிகம் பாராட்டப்பட்டவர் ரஜினி . தங்கைக்காக  ரஜினி பாடுவதாக ஒரு பாடல்  இசைக்கப்பட்டிருக்கும் . கண்ணதாசனின் அழகிய வரிகளில்,  மலேசியா வாசுதேவனின்  சுத்தமான உச்சரிப்பில்,  தெளிந்த குரலில்  ' ஒரு தங்க ரதத்தில்  பொன் மஞ்சள் நிலவு  '  என்ற அந்தப் பாடல் இப்போதும் புத்துணர்வை ஊட்டும்.  நினைவலைகள் பின்னோக்கிப் போகும் .  மகத்தான அந்த இசை நெஞ்சத்தை தாலாட்டும்.   மோகன ராகத்தில் இதயத்தை வருடும் அழகிய பாடல்.  தங்கைக்கென்று  இசைக்கப்பட்ட பாடல்களில் இதுவும் சாகா வரம் பெற்ற பாடல் என்று சொல்லலாம்.                          மூன்று சரணங்கள் மூன்று  இடையிசையில்  வித்தியாசம் காட்டி நம்மை இசை இன்பத்தில் இளையராஜா திளைக்க வைத்திருப்பார்.  பாட்டின் ஆரம்ப இசை பல்லவியின் மெலோடியை கிடார்  கார்ட்ஸ் , மாண்டலின் கொண்டு ஆரம்பித்து மெலிதான ட்ரம்ஸ் சேர்த்து குழலால் ஆலாபனை செய்து கூட்டமாய் வயலின் சேர்க்கும் 
அழகிலே நாம் ஊஞ்சலாட ஆரம்பிக்கலாம்.  பாடல் முடியும் வரை ஊஞ்சலாடிக் கொண்டேதான் இருப்போம். அது தெரிந்துதான் இயக்குனர் ஆர். சி . சக்தி  காட்சியிலும்  ஊஞ்சலாடலை சேர்த்திருப்பார் போலும்!

                                  
                                             


                          சரணத்தில்  ' தங்கையல்ல ......' என்று  ஒரு ஆலாபனை  கொடுத்து மீண்டும் '  தங்கையல்ல  தாயானவள்  ..கோடி பாடல் நான் பாட பொருளானாள் '  என்று முடிக்கும் இடம் சுகமானது.  சிறு வயதில் பாடிக் கொண்டு அலைந்தது எல்லாம் இப்போது  நினைவுப்பறவையாய் சிறகடிக்கிறது .


                         அதே படத்தில்  ' ஆகாய கங்கை பூந்தேன் மலர்ச்சூடி ' என்ற காதல் டூயட் பாடலை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா!? மத்யமாவதி ராகத்தில் எம்.ஜி . வல்லபன்  எழுதிய பாடலுக்கு வாசுதேவனும் ஜானகியும் இணைந்து சுவை கூட்டி கொடுத்திருப்பார்கள்.  அற்புதமான மெலோடியில் இளையராஜாவின் முத்தாய்ப்பான
பாடல்.  ஜானகி ' தா...தான தனா...'  என்ற  ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்கும்போதே  பரபரப்பு  நம்மையும் தொற்றிக் கொள்ளும் . ' தேன் வந்து  பாயுது காதினிலே ' என்பது மொழிக்கு மட்டுமா ...மொழியோடு சேர்ந்த இசைக்கும்  பொருந்தும்; இந்தப் பாடலுக்கும் பொருந்தும்.  இளையராஜாவை ' ராக தேவன் ' என அழைப்பதில் தவறேதுமில்லை.  பாடல் கேட்கும்போது குளிர்ந்த காற்று நம்மை மென்மையாய் தழுவிச் செல்லும் உணர்வு பூப்பதில் அதியசமும் இல்லை.

                         ஜானகியின் ஹம்மிங் முடிந்து பெல் ஒலியுடன் வித்தியாசமான பல இசைக்கருவிகளின்  நாதத்தோடு பல்லவி ஆரம்பிக்கும் லாவகம் மிகவும் சுகமானது.  எந்தப் பாடலாக இருந்தாலும்  ஒரு  பாடலின் போக்கிற்கு  instrumentation  இப்படிதான் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் இளையராஜாவிற்கு நிகர் அவரே !  சமீபத்தில் எஸ்.பி.பி அவர்களே  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதைச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு செய்யப்பட்டிருக்கும்   instrumentation  மிகப் பிரமாதம்.  பல்லவியில் வாசு பாடி முடிக்க ' குங்குமத் தேரில்  ' என்று ஆரம்பிக்கும் ஜானகியின் இளமை கொஞ்சும் குரலை வெகுவாக ரசிக்கலாம்.   புதுமையான  இரண்டு இடையிசைகளுக்காகவே  பலமுறை இந்தப் பாடலை நான் கேட்டிருக்கிறேன். இரண்டாவது இடையிசையில் ஜானகியின் ஹம்மிங் சேர்ந்து இசைகருவிகளின் கூட்டமும் சங்கமிக்கும் அழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரின்பம் தரும்.  

                                   
                                                

                        இடையிசை முழுவதும் பல கருவிகளின் சங்கமம் இருந்தாலும் வயலின்களின் ஆக்கிரமிப்பு எல்லாவற்றையும் விட சற்று தூக்கலாகவே தெரியும் . இப்படிப்பட்ட இசைக்கோர்வைகளை  ஒன்றிணைத்து  இசை மாலையாக தொடுக்கும் இளையராஜாவின்  கற்பனா சக்தியை  எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.  பாடல் கேட்டுக் கொண்டிருக்கும்போதே நமக்கும் இறக்கை முளைத்து பறக்கும் தேவதைகள் ஆகிப் போவோம் .  ராஜாவின் இசைக்கு நம்மை தேவதையாக்கும் வல்லமை உண்டு.  இசையை கேட்கத் தெரிந்தவரல்ல உணரத் தெரிந்தவருக்கே அது புரியும் .  

                        இசைக்கத் தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு.  இசையின் வேர்களை இதயத்தில் பரப்பி  ஆழ்மனத்தின் ஆணிவேராய்  ஊன்றி நமது ஆன்மாவையே  அசைத்துப் பார்க்கும் இசைக் கலைஞர்கள் ஒரு சிலரே!  அதில் இளையராஜாவும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  


....................தொடர்வேன் .....................