Sunday 13 March 2016

இசை ராட்சஷன் - 15 ( The Musical Legend )


                                                     
                           

திரைஉலகில் வெற்றி பெற எது அவசியம் ?


பொறுமை. உதாரணத்திற்கு ஒரு சம்பவம். எழுபதுகளின் ஆரம்பத்தில் மேடைக் கச்சேரிகளில் ஒருவர் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.  யதேச்சையாக அதைக் கேட்டார் தயாரிப்பாளர் ஒருவர். அப்போது ' உயிர் ' என்ற படத்துக்கு அவர் பூஜை போட்டிருந்த நேரம்.  முத்துராமன் ,  சரோஜா தேவி ஜோடி. அந்தப் படத்துக்கு மேடைக் கச்சேரியில் இசைப்பவரை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் .


                              தனக்கு விடிவு காலம் கிடைத்து விட்டது என்று நம்பிய அந்த இசை அமைப்பாளர் அதிகாலையில் எழுந்து கருமாரியம்மன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து விட்டு ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வந்தார்.


                                 ஆனால் , '  உங்க டியூன் நல்லா இல்ல.  அதனால இன்னைக்கி ரெக்கார்டிங் இல்ல ...' என்று அந்த தயாரிப்பாளர் சொல்லிவிட்டார்.  மட்டுமல்ல. ரமணி ஸ்ரீதர் என்பவரை இசை அமைப்பாளாராக ஒப்பந்தம் செய்து  அடுத்த வந்த முகூர்த்த நாளில் ரெக்கார்டிங்கை ஆரம்பித்தும் விட்டார்.


                                   இந்த சம்பவம் மேடைக் கச்சேரிகளை நிகழ்த்திக் கொண்டிருந்தவரை  பாதித்தது. ஆனாலும் மனம் தளராது தன்  போராட்டத்தைத் தொடர்ந்தார். அதற்கான  பலன்  கிடைத்தது.  கம்யூனிஸ்ட் தலைவரான என். சங்கரையாவின் சகோதரர் மகனான கதாசிரியர் ஆர். செல்வராஜ் , தனது படத்துக்கு இவரையே ஒப்பந்தம் செய்து  திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.


                                      அந்தப் படம் ' அன்னக்கிளி ' . பொறுமையுடன் இருந்த அந்த இசை அமைப்பாளர்  இளையராஜா . இவரது டியூன் சரியில்லை என்று சொல்லி நிராகரித்த அந்த தயாரிப்பு நிறுவனம் ' ஜெமினி ' .


                                       மேற்கண்ட இந்தச் செய்தி ஒரு வாரப் பத்திரிகையில் வந்தது.  மேடைக்கச்சேரிகளில் தனது இசை முன்னோர்களின் பாடல்களை இசைத்து வந்த இளையராஜா ,  அவ்வப்போது அமர் எழுதி தானே இசையமைத்து அதைப் பாடியும் வந்திருக்கிறார். அதற்கும் மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்திருக்கிறது.   சினிமாப் பாடல்கள் போலவே அந்தப் பாடல்களும் அமைந்து விட மக்கள் அதிகம் ரசித்திருக்கிறார்கள்.  அந்தக் கணங்கள்தான் சினிமாவில் இசையமைத்து இசையில் சிகரம் தொட்டு விடும் உத்வேகத்தை அவருக்கு அளித்தன . அன்று புறப்பட்ட இசைப் பயணம் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


                                            ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதல்ல ,  என்ன விதமான அதிர்வை இந்த உலகத்திற்குக் கொடுத்திருக்கிறார் என்பதே முக்கியம். அந்த வகையில் இளையராஜா தன்  இசையால்  மிகப் பெரிய அதிர்வினை  ஏற்படுத்தி இருக்கிறார் .  ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள்  அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்  என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகிறது.  இளையராஜாவின் இசை பலருக்கும் அப்படிப்பட்ட பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


                                         ஒரு பாடலுக்கான ஒத்திகையும் பாடல் பதிவும் எவ்வாறு இளையராஜாவால் நிறைவேற்றப்படுகிறது என்று பார்ப்போம்.

                                                       
                                   
                                  

                         ஒரு பாடல் தேர்வான பின்னர் இசைக் குழுவினர்  அனைவரும் ஒலிப்பதிவுக் கூடத்தில் கூடுவார்கள். தேர்வறைக்கு வெளியே  காத்திருக்கும்  மாணவர்களைப் போல காத்திருப்பார்கள்.  வயலின் வாசிப்பவர்களில் மூத்தக் கலைஞர் திரு. ஜூடி அவர்கள் இளையராஜாவின் அறைக்குச் சென்று இசைக் குறிப்பு அடங்கிய தாளினைப் பெற்று வருவார்.  இசைக் குறிப்புகளை பிரதி எடுத்து மற்றவருக்குக் கொடுப்பது இவரின் பொறுப்பு.


                                          ஒத்திகை நடக்கும் நேரத்தில் இளையராஜா கொடுக்கும் திருத்தங்கள் , மாற்றங்கள் ஏதும் இருப்பின் அவற்றையெல்லாம் ஒத்திகை நேரத்திலேயே சரி செய்து மீண்டும் பிரதிகள் எடுத்து எல்லோரிடமும் கொடுப்பதும்  இவர் வேலையே!  இசைக் குறிப்புத் தாளினை ஜூடி தன் கையில் வைத்திருக்க மற்றவரெல்லாம் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள் .


                                     இசைக் குறிப்புகள் எளிமையாக இருந்தால் இசைக்குழுவினருக்கு நிம்மதியாக இருக்கும் . கடினமாக இருந்தால் அதை மீண்டும் மீண்டும் வாசித்துப்  பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இசைக்குறிப்புகளை முழுமையாக வாசிக்க முடிந்தால் 20 அல்லது 30 பிரதிகள் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கப்படும்.


                                     ராஜா 9  மணிக்குள்ளாக தன் காலை உணவை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வருவார். ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர் உள்ளே நுழைய எல்லோரும் தங்களின் இசைக் கருவிகளை இசைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


                                        முதலில்  Rhythm section  ஐ  வழிநடத்தும் திரு. புருஷோத்தமனிடமிருந்து இளையராஜா ஆரம்பிப்பார்.  குறிப்பிட்ட பாடலுக்கான தாள நடை எப்படி இருக்க வேண்டும் என்பதை கைகளைத் தட்டிக் காட்டுவார்.  பாடல் முழுமைக்கும் வரக்கூடிய தாள நடை பொதுவானதாக இருந்தாலும் இடையில் நடையில் மாற்றம் வேண்டியிருப்பின் அதையும் சுட்டிக் காட்டுவார்.  வேறுபட்ட தாள லயங்களோடு  பாடல் ஒலிக்கும். பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் தாள ஒலியில்  தேவையான ஏற்ற இறக்கங்களையும் புருஷோத்தமனிடம் விளக்குவார். புருஷோத்தமன் தனது octo pad ல் அதை வாசித்துக் காட்டுவார் . எந்த நடை , எப்படிப்பட்ட தாள லயம் , என்ன சுருதி வேண்டும் என்பதை ராஜா தேர்ந்தெடுப்பார்.


                                       அவர்  விரும்புகிற தாள லயத்தை  புருஷோத்தமன்  புரிந்த கொண்ட பிறகே ராஜா தோல் கருவிகள்  ( Tabla , Dolak  etc  )  பிரிவுக்கு நகருவார். அவர்களுக்கு  புரிந்த மொழியில் நடை, தாளக் கட்டை போன்ற வார்த்தைகளை  பிரயோகித்து  அவர்களையும் தெளிவு படுத்துவார். இப்போதுதான் புருஷோத்தமனுக்கு ஒட்டு மொத்தமான தாள லயம் புரிய வரும்.


                                     அடுத்து  Keybord , Electric guitar வாசிக்கக் கூடிய பிரிவுக்கு ராஜா  நகர்ந்து  அவர்களுக்கு விளக்கம் கொடுப்பார்.  Keybord பிரிவை  திரு. விஜி மேனுவல் மற்றும் திரு. பரணி பார்த்துக் கொள்ள , கிடார்  பிரிவை திரு. சதானந்தம் வழி  நடத்துவார். ( தமிழ்த்திரையிசையின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சுதர்சனின் மகன்தான் சதானந்தம்  )

                                                           
                               

                                        இசைக்குறிப்பேட்டில் பாடலுக்குத் தேவையான Chords  முழுவதும் எழுதப்பட்டிருக்கும்.  Keyboard  மற்றும் Synthesizer இசைப்போர் இசைக்குறிப்பில் குறித்துள்ளபடி தேவையான கருவிகளை  தேர்ந்தெடுக்கும் இடங்களைக் குறித்து வைத்துக் கொள்வார்கள்.  Bagpiper , Santoor , Oboe  (ஓபோ என்ற மரத்தாலான குழல் இசைக்கருவி )  போன்ற கருவிகளின் ஒலியை  Keyboard ல் தேர்வு செய்வார்கள்.   (  அந்தக் கருவிகள் எளிதில் கிடைக்காதவை;  அவைகளை மீட்டுவோரும் குறைவு  )


                                          புல்லாங்குழல் , வயலின், Brass section மீட்டப்படும்போது  Keyboard லும் அதே கருவிகள் தேர்ந்தெடுத்து  சேர்ந்து வாசிப்பதும் சில நேரங்களில் நடக்கும்.  அதனால் இசையின் தரம் கூடும்.  Keyboard ல் இந்த மாதிரி பல கருவிகள் தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளதால்  உண்மையான Brass  Players குறைந்து விட்டார்கள் .  போலவே ,  ஒலியின் தரம் கூட்டுவதற்காக Synthesizer பயன்படுத்தி கோரஸ் குழுவினரின் குரலோசையோடு சேர்த்தும் இசைக்கப்படும். வேறுபடுத்த முடியாதது போல இருக்கும்.
( விக்ரம் படத்தில் கமலஹாசன் பாடியிருக்கும் அந்த டைட்டில் பாடலில் வரும் ஜானகியின் ஹம்மிங் கேட்டால் புரியும் )

                                              புல்லாங்குழலை இசைக்கும் நெப்போலியன்    (அருண்மொழி என்ற பாடகர் )  என்பவரோடு சேர்ந்து விஜி மானுவல்  தன் Keyboard ல் அதே பகுதியை வாசிப்பார். எனவே இரட்டைப் புல்லாங்குழல் (double flute passaage )  இசைத்த நாதம் ஒலிக்கும். மீண்டும் நெப்போலியன் இரண்டாவது முறை வாசித்து அதை track ல்  சேர்க்கும்போது ஒரே நேரத்தில் மூன்று குழல்கள் ( treble flute passage )  சேர்ந்து ஒலிப்பது போல் இருக்கும்.


                                               உதாரணமாக , கோபுர வாசலிலே எனும் திரைப்படத்தில் எஸ்பி.பி , சித்ரா பாடிய  'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்  என்ற பாடல் , சின்ன தம்பி திரைப்படத்தில் ' போவோமா ஊர்கோலம் ' என்ற பாடல் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம் .  இரண்டாவது  BGM  ல் வரும் அந்தப் புல்லாங்குழலின் நாதம் அழகான double flute passage ஐக் கொண்டிருக்கும்


                                                கோபுர வாசலிலே படப் பாடல் அற்புதமான இசைக்கோர்ப்பு செய்யப்பட பாடல். எஸ்.பி.பி  அவர்கள் அந்தப் பாடலின் பல்லவி பாட கடைசி வரியில் சித்ரா சேர ,  தொடர்ந்து சித்ரா பல்லவி பாட ஆரம்பிக்கும்போது எஸ்.பி.பி  நிறுத்திக் கொள்ள ...Orchestration பிரமாதமாக இருக்கும்.  பகல் நிலவு படத்தில் வரும் ' பூ மாலையே தோள் சேரவா '  என்ற பாடல் ஆய்வுக்குரிய ஒரு படைப்பு. இளையராஜாவும் ஜானகியும் வேறுபட்ட சரணங்களை வேறுபட்ட Octave ல் ஒரே நேரத்தில் பாடுவது அசாத்தியமானது.
   
                                                                                           


                                                ஒலிப்பதிவுக் கூடத்தின் மையப் பகுதிக்கு ராஜா வந்து நிற்க அவருக்கு முன்னால்  திருத்தப்பட்ட இசைக்குறிப்பேடு பொருத்திய தாங்கி இருக்கும்.  முதலில் தந்திக் கருவிகளை வாசிக்கச் சொல்லி பார்ப்பார்.  பிறகு ஒவ்வொரு பிரிவினரின் பங்கினை  வாசிக்கச் சொல்லுவார்.  BGM   1, 2, 3  என்று வெவ்வேறு பின்னனி இசையையும்  வாசிக்கச் சொல்லி சரி பார்ப்பார்.  ஆரம்ப இசை முதல்  BGM ,  முதல் சரணத்திற்கு முன் வரும் இடையிசை  இரண்டாம்  BGM ,  இரண்டாம் சரணத்திற்கு முன் வரும் மூன்றாம்  BGM என ஒவ்வொன்றையும்  இசைக்கச் சொல்லி , தவறு இருந்தால் அதையும் திருத்துவார்.   முதல் வயலின் குழு  அடுத்து இரண்டாம் வயலின் குழு  அடுத்து Cello வாசிக்கும் குழு என தனித் தனியாக சரி பார்ப்பார்.
                                                                 
                                                    


                                                இசையின் போக்கு அவர்களுக்குத் தெளிவாக புரியும்வரை  தனியாகவும் மெதுவாகவும் வாசிக்கச் சொல்லி , தொடர்ச்சி மற்றும் நிறுத்தம் வரும் இடங்களை புரிய வைப்பார்.  திடீர் நிறுத்தங்கள் அவருடைய இசையில் முத்திரை பாதிக்கும் லாவகம் ஆகும்.  பல்லவி மற்றும் சரணம் பாடும்போது வரிகளுக்கு இடையே, சில நேரம் வார்த்தைகளுக்கு இடையே , இழைந்து வரும் மின்னல் நேர இசையையும் வாசிக்க வைத்து சரி பார்ப்பார்.

                                                               
                                                             

                                               இவ்வாறு ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று ஒத்திகை பார்த்து சரி செய்த பின்பு  முழுப் பாடலுக்கான இசை தயாராகி விடும்.  சுந்தரராஜன் பாடலை ஹம்மிங் செய்து   பாட , எல்லா கலைஞர்களும் சேர்ந்து பாடல் முழுவதும் இசைக்குறிப்பேட்டில் உள்ளபடி  இசைப்பார்கள்.  ஆனால் Rhythm Section இன்னும் முழுமையடையாததால்  புருஷோத்தமன் அதை ராஜாவின் முன்னிலையில் சரி செய்வார்.


                                                இளையராஜா தான் எதிர்பார்த்த கற்பனைகளும் எண்ணங்களும் வண்ணங்களாக  இசை வடிவில் வெளிப்படாதவரை  மீண்டும் மீண்டும் சரி செய்தும் திருத்தியும் ஒத்திகை பார்த்துக் கொண்டேயிருப்பார். ராஜாவின் பாடல்களில் இசைக்கருவிகள் பாடகரோடு சேர்ந்து பேசுவது போல கூடவே இழையோடி வரும் . உதாரணமாக ஏழை ஜாதி என்ற திரைப்படத்தில் ' அதோ அந்த நதியோரம் ' என்ற பாடலின் சரணத்தை கவனித்தால் String Section பாடலோடு சேர்ந்து பாடுவது போல மிக அற்புதமாக பின்னப்பட்டு இருக்கும் .


                                               ஒத்திகை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசிக்க மிகவும் சிரமம் இருக்கும்பட்சத்தில் இளையராஜா அவர்களை எளிதில் விட்டுவிட மாட்டார். மீண்டும் மீண்டும் சரியாகும் வரை ஒத்திகை பார்க்கச் சொல்வார்.  பாடல் பதிவு நடக்கும்போது கடினமான பகுதியை வாசிப்பதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டால் மட்டுமே அதில் சிறு மாற்றம் செய்யச் சொல்வார்.  பெரும்பாலும் ராஜா நினைத்ததை கொண்டு வரவே முயற்சிப்பார்.


                                               ஒத்திகை முடிந்தவுடன் ராஜா தன் தனியறைக்குச் செல்வார்.  அவர் சற்று ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் மீண்டும் தங்களுக்குரிய பங்கினை ஒத்திகை பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள்.  இதற்கிடையில் பாடலாசிரியர் உள்ளே வந்து அமர்ந்து எழுதிய முழுப் பாடலையும்  வாசித்து காட்ட , ராஜா மெட்டுக்கு பொருத்தமாக எல்லா வார்த்தைகளும் அமைந்திருக்கிறதா என்று பாடிப் பார்த்து சரி பார்ப்பார்.  இப்போது பாடல் பதிவு தயார் நிலைக்கு வந்து விட்டது.  Voice Mixing செய்வது அடுத்த வேலை.


                                          பாடகர்கள்  பாடலைப் பாடி பயிற்சி  எடுக்கும் வேளையில் இளையராஜா மற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்.  அது அவரது தனிப்பட்ட வேலையாக இருக்கலாம்.  யாரையாவது சந்திப்பார்; அல்லது மறுநாளைக்குரிய  பாடல் தயாரிப்பாக  இருக்கலாம் ; அல்லது அடுத்த புத்தக வெளியீடு பற்றிய சிந்தனையாக இருக்கலாம் .  ' How to Name it  ' மற்றும் ' Nothing but Wind  '  போன்ற ஆல்பங்கள் ( albums ) அவர் எண்ணத்தில் அந்த நேரங்களில் உதித்தவைதான்!!


                                             சரியாக  12: 30 மணியளவில் எல்லோரும் ஒத்திகை முடித்து ஆயத்த நிலையில் இருக்கும்போது புருஷோத்தமன் ஒலிக் கலவை  செய்யும் அறைக்குச் சென்று அமர்ந்து ஒலிக்கலவை செய்யும் பணியில் (Music Producer )  ஈடுபடுவார்.  பலவித இசைக்கருவிகள் எழுப்பும் நாதங்களை  வெவ்வேறு Channel வழியே balance செய்யும் வேலைகளைச் செய்பவர்  Music Producer .  இப்போது புருஷோத்தமன் ஒவ்வொரு பிரிவிலுள்ள எல்லா கலைஞர்களையும் அவரவர் இசைக் கருவிகளை  வாசிக்க வைத்து அதன் ஒலிச்சுருதி தரத்தை  ( Volume Level ) கூட்டியோ குறைத்தோ balance  செய்வார்.


                                            
                                            எலெக்ட்ரானிக் கருவிகள் நேரடியாக mixer உடன் இணைப்பில் உள்ளதால் அதன் ஒலித்தரம் கூடுதலாக இருக்கும் . Manuel instrument மற்றும்  electronic instrument இரண்டையும் ஒலிக்கலவையின்போது balance செய்வது எளிமையான வேலையல்ல. 


                                             பாடல் பதிவு ஆரம்பிக்கும்போது ஜூடி  மற்றும் பிரபாகரன் ( Senior Violinist  )  சேர்ந்து முழுப்பாடலையும் வழி  நடத்துவார்கள்.  ஒவ்வொரு இசைப்பிரிவினரும் தனித் தனி  அறைகளில் இருப்பார்கள்.  மைய அறையில் எலெக்ட்ரானிக் கருவிகள் வாசிப்போரும் string section குழுவினரும் இருப்பார்கள். 

                                                          
                          

                                              சுந்தரராஜன் பாடும் அறைக்குச் ( Voice booth ) சென்று பாடலை  ஹம் செய்வார். சில நேரங்களில் பிரபாகரன் அவர்கள் முழுப்பாடலையும் வயலினிலேயே  இசைத்துக் காட்டுவார்.  ராஜா ஏற்றுக் கொள்ளும் வண்ணம் முழுப்பாடலும் அரங்கேற புருஷோத்தமன் ஒலிக்கலவையினை   கச்சிதமாக  செய்து  முடிப்பார். புருஷோத்தமன் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே இளையராஜாவோடு நல்ல புரிதலோடு பழகியவர் என்பதால் ராஜாவின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்தவராய் ஒலிக்கலவை  செய்து கொடுப்பார்.  பாடல் பதிவு  இறுதிக் கட்டத்தை எட்டும். 


                                              பதிவு செய்யும் அறையிலிருந்து இளையராஜா முழுப்பாடலையும் கவனிப்பார். அப்போதும் அவர் நினைத்த இசை வரவில்லை என்றால் அங்கும் திருத்தங்கள் உண்டு. கடைசி திருத்தத்தின்போது கூட ஒரு சிறு பயிற்சி எடுத்த பிறகே எல்லோரும் மீண்டும் ஆயத்தமாவார்கள்.  ராஜா திருப்தி அடைந்த பின் மீண்டும் take நடக்கும். 


                                             ஒரு முழுப்பாடலுக்கான  தயாரிப்பு முழுமை பெற்றவுடன் சில நேரங்களில் ராஜா அவர்கள் புருஷோத்தமனிடம் பாடல் பதிவுப்  பொறுப்பினை ஒப்படைத்து விட்டு மதிய உணவிற்காக தன் அறைக்குத் திரும்புவார்.  அல்லது நடக்கவிருக்கும் அடுத்தப் பாடல் பதிவிற்கான இசைக்குறிப்புகளை எழுதப் போய் விடுவார். 


                                              கடினமான பாடல் என்றால் பாடகரை தாளத்துடன் பாட வைத்து தனி track எடுத்துவிட்டு , மற்ற வாத்தியக்கருவிகளின் பங்கினையும் தனியாக எடுத்து இரண்டையும் கலவை செய்யக் கூடிய முறையும் நடக்கும் . 


                                             ராஜாவிடம் பணிபுரியும் அந்தக் கலைஞர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்பதால் அவர் மனதில் ஓடும் படைப்புத் திறனையையும் கற்பனையையும் செயல் வடிவமாக்குவதில் வல்லவர்கள்.  செயல் திறனுள்ள எந்திரம் போல அந்தக் கலைஞர்கள் அனைவரும் ராஜா நினைத்ததை இசையில் கொண்டு வந்து விடுவார்கள் . 


                                             சுந்தரராஜனுக்குப் பதிலாக இளையராஜாவே voice trackல் பாடுவதுண்டு. எடுத்துக்காட்டாக , ஈரமான ரோஜாவே படத்தில் வரும் 'வா..வா..அன்பே  ' என்ற பாடல் முழுவதையும் ராஜா பாடி வைக்க பிறகுதான் ஜேசுதாஸ் , ஜானகி குரலில் பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்த மாதிரி பாடிய பாடல்கள் அவரது குரலில் நன்றாக ஒலித்தால் cassette , CD  களில் ராஜா பாடிய version சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் திரைப்படத்தில் பாடல் ஒலிக்காது. 


                                              இதயக்கோயில் படத்தில் ' இதயம் ஒரு கோயில் ' என்ற பாடல் அதற்கு உதாரணம் . முதலில் ஜானகி ஹம் செய்ய ராஜா பாடி பதிவு  செய்யப்பட்டது. பிறகுதான் பாலுவின் குரலில் மீண்டும் பதிவானது .  படத்தில் பாலுவின் குரல் மட்டுமே ஒலிக்கும் . காதலுக்கு மரியாதை படத்தில் 'என்னைத் தாலாட்ட வருவாளோ ' என்ற பாடலும் அதுபோலவே பதிவு செய்யப்பட்டு பின்னர் ஹரிஹரனின் குரலில் ஒலித்தது.     


                                                 BGM  எல்லாம் வாசிக்கப்பட்டு பதிவு செய்த பிறகு குரல் பதிவு இறுதியாக நடக்கும் . சுந்தரராஜன்  BGM களை ஓடவிட்டு, பாடகர்களுக்கு சரியான ஸ்வரங்கள் சொல்லி , திருத்தி சரி செய்து , குரல் பதிவு செய்வார். பாடகர்களின் குரல் இறுதியாக கலவை செய்யப்படும். கடினமான பாடல் என்றால் இளையராஜாவே கூட அமர்ந்து கவனித்து ஒலிக்கலவை செய்யச் சொல்வார்.  மற்றபடி சுந்தரராஜனே முடித்து விடுவார்.  போலவே , குழுவினரின் குரலோசையும் இறுதியாகத்தான் சேர்க்கப்படும்.  இப்போது முழுப்பாடலும் பதிவு செய்து முடிக்கப்பட்டுவிட்டது .  பாடல் தயார்.


                                           
                                                 
                                              
                            மேலே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளி இளையராஜாவின் இசைக்கோர்ப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் . வயலின் என்ற வாத்தியக் கருவியைக் கொண்டு எத்தனையோ விதமான நாதங்களை அவர் பல பாடல்களில் பலவிதமாக பயன்படுத்தியிருக்கிறார். பலவித வேறுபட்ட உணர்வுகளை வயலின் கொண்டே எல்லோருக்கும் விருந்தாகவே படைத்திருக்கிறார்.

                                         
                              மேற்கண்ட காணொளியில்  ராஜாவுடன் 40 வருடங்களாய், ராஜாவின் இசைப்பாதியாய்  பங்கு கொண்ட ,  மறைந்த மேதை பியானிஸ்ட்  விஜி  மானுவல்  அவர்களுடன் கலந்து ராஜா  இசைக்கோர்ப்பு செய்யும் காட்சி அருமை.

                அடுத்து வரும் காணொளி மூலம்  தோல் கருவிகளைக் கொண்டு வெவ்வேறு தாள லயங்களை  எப்படி உருவாக்குவது ,  வெவ்வேறு இடங்களில்  என்ன நடை பயன்படுத்துகிறார்கள் , அந்தக் கருவிகள் எங்கிருந்து வந்தன என்று பல செய்திகளை ராஜா ஒருவருக்கு விளக்குவதன் மூலம் அவருடைய இசை ஞானமும் வெளிப்படுவதைக் காணலாம்.

                                           


                    முகநூல் நண்பர்  ஒருவர்  இளையராஜாவின் ஒரு பாடலில் அவர் வடித்திருக்கும்  பின்னணி  இசையை  அவருக்குரிய  பாணியில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார் .


                           இசை Arrangement ராஜா
பல வருட மேற்குலக வாழ்வில் எனக்குக் கிடைத்த அனுகூலங்களில் ஒன்று உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல இனத்தவர்களிலிருந்து தோன்றிய இசை மேதைகளின் இசைகளைக் கேட்கக்கூடிய வாய்ப்பு அமைந்ததுதான். இந்த இசைகளை விரும்பியோ விரும்பாமலோ கேட்டே ஆகவேண்டிய சூழ்நிலை எனக்கிருந்தது காரணம் பல வருடங்கள் நான் மிக ஆடம்பரமான Discotheque ஒன்றில் பணியாற்றியிருந்தேன்.
பல நாட்டு மக்களின் பாரம்பரியங்களின் வெளிப்பாடுகளின் ஊடாக உருவான இசை மேதைகளின் பல்வேறுவிதமான இசையைக் கேட்டவன் என்ற வகையில்...
உலகத்தவரின் இசையெல்லாவற்றிலும் பார்க்க இளையராஜாவின் இசை ஒரு படி மேலேயே உள்ளது. அவரின் இசை மிகவும் கட்டுக் கோப்பானது, கண்ணியமானது அதற்குள் விபரிக்கமுடியாத ஆசுவாசம் இருக்கிறது.
உலகின் இசையமைப்பாளர்களும் கொம்போசர்களும் பாடல்களையும், பின்னணியிசைகள், இசைக்கோர்வைகள், மற்றும் தீம் இசைகளை உருவாக்குகிறார்கள், அவற்றில் ஆயிரக்கணக்கானவைகளை எங்கள் செவிகள் கேட்கின்றன அத்துடன் அவைகள் முற்றுப்பெற்றுவிடுகின்றன அல்லது காற்றோடுகாற்றாய் கரைந்து விடுகின்றன அவை மனதுக்குள் நுழைந்து காலகாலத்துக்கும் நிலைத்து நிற்பதில்லை. ஆனால் ராஜாவின் பாடல்கள் அப்படியல்ல. அவை ஒவ்வொன்றைக்கேட்கும் போதும் கடந்து போன பல சம்பவங்களை மனம் நினைத்துக்கொள்ளும், அந்தப்பாடலில் ராஜாவால் செய்யப்பட்டிருக்கும் பல இசைச்சூட்சுமங்களில் ஒன்றில் அது என்னவென்றே தெரிந்து கொள்ளாமல் லயித்துப்போகும் அப்படி ராஜாவால் செய்யப்பட்டிருக்கும் இசைச்சூட்சுமங்களில் ஒன்று அந்தப்பாடலின் இசை அரேஞ்மெண்ட். ( Musical arrangement )
இசையொன்றினை யாரும் உருவாக்கிவிட்டுப் போகலாம் ஆனால் அந்த இசை உயிரை ஊடுருவவேண்டுமானால் அதைத் தாங்கிப்பிடித்திருக்கும் அரேஞ்மெண்ட் மிக முக்கியம். அது என்ன இசை அரேஞ்மெண்ட்
Music arranging is the ability to change a piece of music to a specific vocal and/or instrumental combination.
musical arrangement - a piece of music that has been adapted for performance by a particular set of voices or instruments.
இசைக்கோட்பாடுகளில் ஒன்றான இதில் (Arranging) ஞானியார் அசகாயசூரர். அது அவருக்கு பிறவியிலேயே கிடைத்த கொடை என்றே நான் எண்ணுவதுண்டு. தனது ஒவ்வொரு பாட்டிலும் இதனை அவர் மிகப்பிரமாதமாக செய்துவந்துள்ளார். அதன் காரணமாகவும் அவரின் பாடல்கள் பல வருடங்களாகியும் முதலில் கேட்கும்போது கொடுத்த அதே ஆனந்தத்தை இன்றும் கொடுக்கின்றன. எமது நெஞ்செல்லாம் நின்று நிலைக்கின்றன. அவரின் பாடல்களில் என்னைக் கிறங்க வைக்கும் Arrangement செய்யப்பட்டுள்ள பாடல்களில் அம்மன் கோயில் கிழக்காலே என்ற படத்தில் பாலு பாடியுள்ள "சின்னமணிக் குயிலே" யை மறக்க இயலாது. இந்தப்பாடலில் :
ஆர்மோனியம்
புல்லாங்குழல்
கிட்டார்
கீபோர்ட்
ஆகிய வாத்தியங்களை எவ்வாறாக அரேன்ஞ் பண்ணியுள்ளார் என்பதைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்:
முதலில் பாலு சின்ன மணீக்குயிலே என்பார்
உடனே ஆர்மோனியம் தக தக தக.. என்றவாறு ஏதோ கூறும்.
பின்பு மீண்டும் "சின்ன மணிக்குயிலே " என்று பாலு ஆரம்பித்ததும் "ட்டீய்ங்" என்று விறைப்பாகப் பதிலளிக்கிறது கிட்டார்
தொடர்ந்து "மெல்ல வரும் மயிலே ".. என்பார் பாலு அதற்கு "லலா ல லா" என்று வேறு விதமாகச் சிணுங்கிப் பதிலளிக்கிறது புல்லாங்குழல் இப்படியே கிட்டாரும் புல்லாங்குழலும் மாறி மாறி பாலுவுக்குப் பதிலளித்துக்கொண்டே செல்கின்றன. சற்றே சிந்தித்துப்பாருங்கள் இந்தப்பாடலின் பல்லவியில் பாலுவுக்குச் சரிக்குச் சமனாக புல்லாங்குழலும் கிட்டாரும் ஞானியாரால் அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதல்லவா அவை மட்டும் இங்கே பயன்படுத்தப்படாது அந்த இடம் வெறுமையாக விடப்பட்டிருந்தால் இந்தப்பாடல் இப்படி இனிமையாக இருந்திருக்குமா ? அந்த இடத்தில் அந்தப் புல்லாங்குழலையும் கிட்டாரையும் மாறி மாறிப் பயன்படுத்தினால்தான் பாடலிற்கு ஒரு தனித்தன்மை கிடைக்கும் என உணர்ந்து அவற்றை அப்படிப் பயன்படுத்தியதுதான் Arrangement .
இந்தப் பாடலின் முதலாவது இடையிசையிலும் ஞானியாரின் அபரிமிதமான இசைக்கற்பனை உள்ளது குறிப்பாக இடையிசையின் 1:03 வது நிமிடத்தில் ஷெனாயைக் (?) கொண்டு ஆரம்பிக்கும் ராஜா அதே ஷெனாயை முடிக்கும் போது ஆர்மோனியத்தை அதே Range இல் ஒன்றாக்கி முடிக்கிறார், அதாவது அந்த இடத்தில் அது ஷெனாயா அல்லது ஆர்மோனியமா என்று குழம்பியபடியே ரசிப்பதிலும் ஒரு த்ரில் உள்ளது.
பாடல் முழுவதுமே பாலுவுக்குச் சமனாக புல்லாங்குழலும் கிட்டாரும் பாவிக்கப்பட்டு அசத்தியிருக்கும் அதேவேளை சரணங்களின் இரண்டாவது பகுதியில் அமரர் விஜி மனுவலின் கீபோர்ட் வாசிப்பு பின்னணியில் நின்றபடி அந்த வரிகளுக்குக் கொடுக்கும் புதிய பரிமாணத்தையும் பதிந்தே ஆகவேண்டும்,
இந்தப்பாடலை புல்லாங்குழல் கிட்டார் கீபோர்ட் இல்லாமல் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. அதுதான் ஞானியாரின் Music Arrangement இன் சாணக்கியம்/ தனித்துவம்.
இப்படியான மிக நுண்ணியமான நுணுக்கங்களையெல்லாம் சாதாரணமாக கிராமத்தில் இடம்பெறும் பாடல் காட்சியொன்றுக்காக அவர் செய்துபார்த்துள்ளதுதான் வியப்பு. இந்தப்பாடலில் செய்துள்ள புதுமையைப்போல இன்னும் பல பாடல்களிலும் வெவ்வேறுவிதமாகச் செய்து பார்த்துள்ள அவர் தனது இந்தச் சின்னச் சின்ன ஆனால் அற்புதமான வேலைப்பாடுகளை அந்தப் பாடல்களின் இயக்குனர்களிடமோ நிருபர்களிடமோ பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை அதற்குக்காரணம் பாடல்களின் பிரபலத்தையும் அதனூடான படங்களின் வெற்றியையும் மட்டுமே எதிர்பார்க்கும் வியாபார உலகில் தனது இந்த முயற்சிகளின் பெறுமதி புரிந்துகொள்ளப்படமாட்டாது என அவர் நினைத்திருக்கக் கூடும். ஆனால் இசையில் அவரின் அற்பணிப்புக்களும், தேடல்களும், சேவைகளும் எதிர்கால நல்ல இசையமைப்பாளர்களுக்கு பிள்ளையார்சுழியாக இருக்கும் என்பது திண்ணம்.

                              
                               இவ்வாறு இசைக்கற்பனையின் அதீதமாய் , இசைப்படைப்பின் மேலாதிக்கமாய் ,  இசை அறிவின் உன்னதமாய் , இசைத் திறனில் மேன்மையாய் திகழும் இளையராஜாவின் படைப்புகளை எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் . இளையராஜா ஓர்  இசை  ஊற்று!

........................................தொடர்வேன்...................