Sunday, 7 December 2014

இசை ராட்சஷன் - 5




                                        இசை ராட்சஷன் -  5

                                        ( The Musical Legend )


                      1977 ஆம் ஆண்டில் இளையராஜாவை விட எம்.எஸ்.வி இசையமைத்தத் திரைப்படங்கள் அதிக அளவில் வந்தன. சில படங்களின் பாடல்கள்  மட்டும் வெற்றி பெற்றன என்பது மறுப்பதற்கில்லை . ஆனால் அதிக அளவில் இளையராஜா பாடல்கள் வரவேற்புப் பெற்றதும் கவனிக்கப்பட்டதும் கூட மறுப்பதற்கில்லை.  காரணம் பாடலுக்கான பின்னணி இசை அவரை மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது. இசையில் அவர் செய்த புதுமைகள் போற்றப்பட்டன, கொண்டாடப்பட்டன . அது மறுக்க முடியாத வரலாறு . 





                        என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி அவர்களை மனதளவில் ஒதுக்கித் தள்ளாதவாறு  அவருக்கென்று ஒரு தனி இடம் வைத்திருந்தேன் . இளையராஜாவின் பாடல்களை ரசித்தாலும் வெளியே காட்டிக் கொண்டதில்லை. இளையராஜாவா எம்.எஸ்.வி யா என்ற கேள்விகளும் வாதங்களும் உருவாகும் இடங்களில் நான் எம்.எஸ்.வி பக்கம் நின்றேன் . பெரிய அண்ணன்மார்களிடம் கூட அதற்காக சண்டை போட்ட அனுபவம் உண்டு. வகுப்புத் தோழர்களோடு வயதுக்கேற்ற வார்த்தைச் சண்டை நடந்தது. 


                           நான் வளர்ந்த கிராமத்தில் சினிமா கொட்டகை இல்லை. தியேட்டர் இல்லாத ஊராட்சி ஒன்றியம் அதுவாகத்தான் இருந்தது என்பது பத்திரிக்கையிலும் வந்தது. அதனால் ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருந்த மற்றொரு கிராமத்து சினிமா கொட்டகைக்குச் செல்வோம்.  பஸ்  வசதி இல்லை . சைக்கிள் எடுத்துப் போகவேண்டும் . இல்லாவிடில் நடராஜா சர்வீஸ்தான் !  சினிமாவிற்கு போகப் போகிறோம் என்று தெரிந்துவிட்டால் கால் வலியாவது கை வலியாவது! எதையும் பார்ப்பதில்லை. உற்சாகத்தோடு நடந்தே போய் படம் பார்த்துவிட்டு இரவு திரும்பும்போது எல்லாமே வலிக்க ஆரம்பிக்கும் . தூக்கம் தூக்கமாய் வரும் . விட்டால் ரோட்டிலேயே படுத்துத் தூங்கிடச் சொல்லும் அளவிற்குக் கண்ணைச் சுழற்றும் .  அம்மா என்னுடன் வரும்போது,  'என்னைத் தூக்குமா ' என்று அழுது அடம் பிடித்து அடி வாங்கி நடந்தே வந்திருக்கிறேன் . சில நேரங்களில் அடியும் போட்டு என்னைத் தூக்கிக் கொண்டும் அம்மா நடந்து வந்ததை இளையராஜாவின் ஆரம்ப காலப்  பாடல்கள்  ஞாபகமூட்டுகின்றன.  இப்போது  அந்தப் பாடல்களை  கேட்கும்போது எண்ணம் பெருகி இதயம் உருகி கண்ணீர் அருவி கன்னம் வழிவதை யாரும் பார்ப்பதற்குள் துடைத்துக் கொள்வேன்.  விலை மதிப்பிலா உணர்வுகள்!






                          டூரிங் டாக்கீஸில் படம் பார்க்கும் அனுபவமே தனி!  நடுவில் கூடாரம் .இருபுறமும் திறந்த வெளி. 'நம்பர் ஒன் ' சமாச்சாரங்களும் அங்கேதான் . தரை டிக்கெட் , பெஞ்சு , சேர்  என்று மூன்று வகுப்புகள் . தரை டிக்கெட் 25 பைசாவிற்கு நான் படம் பார்த்த அனுபவம் நினைவிருக்கிறது . தரையில்  மண்ணைக் குவித்து சற்று உயரமாக்கிக் கொண்டு உட்கார்ந்து படம் பார்ப்பேன் . கூட்டம் இல்லாவிட்டால் படுத்துக் கொண்டே படம் பார்த்த அனுபவமும் உண்டு . துப்பி வைப்பார்கள் . 'இருந்து'   தொலைப்பார்கள். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு படம் பார்த்திருக்கிறேன் . திரைப்படம் பார்க்கும்  சுவாரசியத்தில்  அதெல்லாம் ஒரு பொருட்டாகவே பட்டதில்லை. 



                       அப்படி ஓடி ஓடி படம் பார்த்த அனுபவங்கள் மனசுக்குள் ஓடும்போது சினிமா கொட்டகையை நெருங்கும் கணங்களும் நினைவிற்கு வருகின்றன. டென்ட் கொட்டகையின் உச்சியில் கட்டிய குழாயில் பாடல் ஒலிக்கும் .  ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நெருங்கும்போதே பாடல்கள் ஒலிப்பது தெளிவாகக் கேட்கும் . எல்லாமே ஹிந்திப் பாடல்கள்தான் ! 

ஆராதனா, கேரவன், பாபி , யாதோங்கி பாரத் , ஹம் கிசிசே கம் நகி போன்ற படங்களிலிருந்து அதிகப் பாடல்கள் போடுவார்கள்.  ஹிந்திப் பாடல்களை முதன்முறையாக நான் அங்குதான் கேட்டேன். ரேடியோவில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே கேட்டிருக்கிறேன் . அப்போது  சினிமா கொட்டகையில் ஏன் ஹிந்திப் பாடல்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்விக்கு இப்போது விடை தெரிகிறது . 70 கள்  ஆரம்பித்து  அதன் மையம் வரை ஹிந்திப் பாடல்களின் சாயலில் நமது தமிழ்த் திரை இசை அமைப்பாளர்களும் பாடல்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் .


                     இளையராஜாவின் வருகை அதையெல்லாம் மாற்றிப் போட்டது . திரை இசையின் போக்கு திசை மாறியது. ஒட்டு மொத்தத்  தமிழர்களும் இசை கிளம்பிய திசையைத் திரும்பிப் பார்த்தார்கள் . தமிழன் தமிழ்ப் பாடல்களைக் கேட்கச் செய்ய தலையெடுத்தார் இளையராஜா. மண்ணின் மணம் சார்ந்த பாடல்கள் கேட்டு மக்கள் மனது மாறிப் போனது. எங்கும் அதன் பிறகு தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன . இளையராஜாவின் கானங்கள் கேட்கக் கேட்க 'பானங்கள்'  உண்ட போதையைத் தந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இளையராஜா ஒரு இசை அசுரனாக வளர்ந்து கொண்டே வந்ததை கண்கூடாக பார்த்தேன். மற்ற இசை அமைப்பாளர்களும் அதே காலகட்டத்தில் இசை அமைத்துக் கொண்டிருந்தாலும்  இளையராஜாவின் இசையோடு அவர்களால் போட்டியிட முடியவில்லை.  பெரும்பான்மையான மக்களின் நெஞ்சங்களை ஆக்ரமித்த பாடல்களை இளையராஜா ஒருவராலேயே கொடுக்க முடிந்தது. 


                     காலம் உருண்டது. 77 முடிந்தது. 78 இல் இளையராஜா இசையமைத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. 

                                        -   அச்சாணி 
                                        -   அவள் அப்படித்தான் 
                                        -    பைரவி 
                                        -    சிட்டுக் குருவி 
                                        -    இளமை ஊஞ்சலாடுகிறது 
                                        -    இது எப்படி இருக்கு 
                                        -    காற்றினில் வரும் கீதம் 
                                        -    கண்ணன் ஒரு கைக்குழந்தை 
                                        -    கிழக்கே போகும் ரயில் 
                                        -     மாரியம்மன் திருவிழா 
                                        -     முள்ளும் மலரும் 
                                        -     ப்ரியா 
                                        -     சட்டம் என் கையில் 
                                        -     சிகப்பு ரோஜாக்கள் 
                                        -     சொன்னது நீதானா 
                                        -     திருக்கல்யாணம் 
                                        -     திரிபுர சுந்தரி 
                                        -     தியாகம் 
                                        -     வாழ நினைத்தால் வாழலாம் 
                                        -     வட்டத்துக்குள் சதுரம் 



                  அச்சாணி என்ற திரைப்படத்தில் ' மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன் ' பாடல் வெளிவந்தபோது அது சினிமா படத்தில் வந்த பாடல் போல எனக்குத்  தோன்றவில்லை . இன்னுமொரு பக்தி பாடல் உருவாகி இருக்கிறது என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. 'இடைவிடா சகாய மாதா' என்றொரு கிறித்துவ பக்தி பாடல் சுசீலாவின் குரலில் அற்புதமான  இசையோடு  ஒலிப்பதை அடிக்கடி கேட்டிருக்கிறேன் .  கிறித்துவ ஆலயத்தின் திருவிழா காலங்களில் அந்தப் பாடல் ஒலிப்பேழை மூலம் ஒலிக்கப்படும்.    

சுசீலாவின் குரலா பாடலுக்கான மெலோடியா அல்லது இரண்டுமா என்பதை  பிரித்தறிய முடியாமல்  மெய்மறந்து பாடல் கேட்பேன்.  ' மாதா உன் கோயிலில் ' என்ற பாடல் முதன்முறையாக அங்கு நான் கேட்டபோதும் அதேபோல்  மெய்மறந்து போனேன் . என்ன ஒரு மனதுருக்கும் மெலடி !





              'மச்சானைப் பாத்தீங்களா பாடின அதே ஜானகி அம்மாதான் இதையும் பாடி இருக்காங்க' என்ற செய்தி கேட்டவுடன்  தன்னுடைய இனிய குரலால் நம்மை குதூகலிக்க வைக்கவும்  கும்பிட வைக்கவும் செய்கிறார்களே என்று வியந்து போனேன் . வீணையையும் வயலினையும் இளையராஜா வாசிக்க வைத்தது போல இல்லாமல் அழ வைத்துக் காண்பித்திருப்பார். பாடலோடு இழையோடும் இசைக் கருவியிலும் அழுகையை கொண்டுவர முடியும் என்பதை ராஜா நிரூபித்திருப்பார். 

முகநூலில் படித்த செய்தியைப்  பகிர ஆசைப்படுகிறேன்.

பல டேக்குகள் எடுத்த பாடல் .
பாடலை ரெகார்ட் செய்யும் போதே தனது கற்பனையில் தோன்றிய சங்கதிகளை ஜானகியிடம் அவ்வப்போது சென்று சொல்லி பாடலை மெருகேற்றினார் ராஜா .
இறுதியில் அனைத்தும் நன்றாக வந்த நேரத்தில் பாடலில் மெய் மறந்து BGM க்கு கை காட்ட மறந்துவிட்டார் இசையை conduct செய்த கோவர்த்தன்.
அடுத்த டேக்கில் மூன்றாவது சரணத்தில் ''பிள்ளை பெறாத பெண்மை தாயானது ,அன்னை இல்லாத மகனை தாலாட்டுது ''என்ற வரிகளை பாடிய ஜானகி தொடர்ந்து பாடாமல் நிறுத்தி விட்டார் .
என்னவென்று ராஜா வாய்ஸ் ரூமை பார்த்தால் ஜானகி கர்சீப்பால் கண்களை துடைத்து கொண்டிருப்பது கண்ணாடி வழியே தெரிந்தது
என்னவென்று கேட்க பாடலின் டியூனும் வார்த்தையும் கலந்து பாவத்தில் ஏதோ ஒன்றை உணர்த்த அழுகையை நிறுத்த முடியவில்லை என்றார் ஜானகி .இதை கேட்டு எல்லோரும் உருகி விட்டார்களாம் .
பாடல் இசையை coduct செய்தவர் ,பாடலை பாடியவர் இருவருக்குமே உணர்ச்சி மயமான அனுபவத்தை தந்த பாடல் இது .
இப்போது கூட இந்த பாடலை கேளுங்கள் .அதன் tune ,bgm குறிப்பாக 2nd interlude அதில் வரும் bass flute இசை சிலிர்ப்பூட்டும்.
 

               அதே படத்தில் வரும் ' தாலாட்டு பிள்ளை  ஒன்று  தாலாட்டு ' என்ற பாடலும் நல்லதொரு மெலடி . வானொலியில் அதிகம் தாலாட்டப்பட்டது. 
எஸ்.பி.பி அவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொருவிதமான expression கொடுப்பதில் வல்லவர் . இந்தப் பாட்டிலும் அவருடைய பங்கை 'வெள்ளைக் குயில்'  சுசீலா அவர்களுடன் சேர்ந்து அழகாக கொடுத்திருப்பார். 



                'அவள் அப்படித்தான் '  என்ற படம் அப்போது புரியவில்லை . ஆனால் இந்திய சினிமாக்களைப் பற்றி பேசினால் அந்தப் படத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது எனும் அளவிற்கு அந்தஸ்து பெற்ற படம் என்பது இப்போது தெரிந்து கொண்ட செய்தி . புதுமையான ஒரு stylish திரைப்படம் . படத்தில் வரும் 'உறவுகள் தொடர்கதை ' என்ற பாடலைக் கேட்டு மதிமயங்கி போயிருக்கிறேன் . கிடார் இசையின் அற்புதம் புரிய வைத்த பாட்டு. தாஸ் அவர்களின் குரலில் அது ஒரு தேவகானம் . இளையராஜாவின் இசைப்  பொக்கிஷத்தில் வைரமாய் மின்னும் பாடல் . இன்னும் கூட மின்னிக் கொண்டுதான் இருக்கிறது .  உறுத்தாத வார்த்தைகள் வருத்தாத இசை கொண்டதொரு பாடல் .  எவருக்கும் பிடிக்கும் .  ஜேசுதாஸ் அவர்கள் சமீபத்தில் ' கர்னாடக இசையே எனக்கு முதலிடம். சினிமா இசையெல்லாம் எனக்கு சும்மா ' என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  அது அவருடைய உணர்வாகவிருந்தாலும் இப்படிப்பட்ட  சினிமா பாடல்கள்தான் அவரை வெகு ஜனங்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அந்தக் காந்தர்வக் குரலை எத்தனையோ பாடல்களில்  எத்தனை  ஆயிரம் முறை கேட்டிருப்பேன்  என்று கணக்கிடவே முடியாது . 
            

  
                                     


                அதே படத்தில் கமலஹாசன் அவர்கள் பாடிய ' பன்னீர் புஷ்பங்களே
என்ற பாடலும் சுகமானது .  பாடலின்  பதிவில்   மலையாள  உச்சரிப்பு அதிகம்
இருந்ததை ராஜா திருத்திப் பாடவைத்தார் என கமலஹாசன் நினைவு  கூர்ந்திருக்கிறார்.  இசைக் கருவிகளின்  ஆக்ரமிப்பு  இல்லாவிட்டாலும்  வீணை,  வயலின்  இரண்டின் சோகமும் இழையோடும் . 


                      ' பைரவி' படத்தில் '  நண்டூருது  நரியூருது  '  என்ற பாடலின் சோகம் சுகமான ராகம் . ரஜினிகாந்த்துக்கு   டி .எம்.எஸ்  அவர்களின்  குரல் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால்  இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது ஒலிப்பதிவுக் கூடத்திற்கு சென்று இரண்டு மணி நேரம் கண்டு ரசித்ததாக  செய்தி படித்திருக்கிறேன் . இரண்டாவது சரணத்தில் பாட்டோடு சேர்ந்து வயலின்களின் கூட்டம் ஒரு சேர  பேசிக் கொண்டே வருவதை ரசிக்கலாம் . முதல் சரணம் வரை பாசத்தோடு வளர்த்த தங்கையின்  நினைவுகளை  எண்ணிப் பார்க்கும் நாயகனின்  உணர்வுகளை  வெளிப்படுத்தும் இசையை மென்மையாய்  கொடுக்கும் இளையராஜா,  இரண்டாம் சரணத்தில்   ' நாளுக்கு நாள் உழைத்தேன் ...நன்றியில்லை அங்கே '  என்று தங்கையின் மரணத்திற்கு காரணமான முதலாளி வில்லனை பழி  வாங்க  ஏற்கும் சபதத்திற்கு  தகுந்தாற்போல்  இசையின் போக்கை வீரியத்தோடு வெளிப்படுத்தும் விதம் அருமை .  இளையராஜாவின் சிறப்புகளில் இதுவும் ஒன்று . பாடல் முடியும் நேரம் ஏதோ ஒன்று நடக்கப் போவதை இசையிலேயே உச்சகட்டம் கொண்டு வந்து எதிர்பார்ப்பை  கூட்டுவது இளையராஜாவின் திறமைக்கு சான்று .  இன்னும் சில பாடல்களையும்  உதாரணம் சொல்லலாம்  :  'பாடவா உன் பாடலை ' , ' யார் வீட்டில் ரோஜா பூ பூத்தது ' .


                   

                       '  நண்டூருது ' பாடலுக்கு ரஜினிகாந்த் நடித்திருந்தாலும்  தன்  வளமான குரலால் டி . எம் .எஸ்  அவர்களும்  நடித்திருப்பார் . தன்  புதுமை இசையால் இளையராஜாவும்  நடித்திருப்பார் . அதுவே அந்த பாடலின் சிறப்பு.
அதே படத்தில் வரும் ' கட்ட புள்ள குட்ட புள்ள ' என்ற பாடல்  குத்துப்  பாடல்
ஆட்டம் போட வைக்கும் பாட்டு . ஆனால் நான் ஆட்டம் போடவில்லை . கொஞ்சம் வளர்ந்துட்டேனாக்கும் ! திரும்பிய திசையெல்லாம் அந்தப்பாடல்   ஒலிபரப்பப்பட்டது .


                        மக்களின் மனதை  தனது பாடல்களால் கட்டிப் போட்டு வைத்திருந்த இளையராஜா எங்கிருந்து முளைத்தார் , எந்த மூலையிலிருந்து வந்தார், இசை தொடர்பான விசயங்களை எங்கே கற்றார்  என்ற செய்தி பெரும்பான்மையானவருக்கு தெரியாமலே இருந்தது. ஏனென்றால் அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை . 35 வருடங்களாக தொலைகாட்சி , ரேடியோ , பத்திரிக்கை போன்ற ஊடகங்களிலும் பேட்டி கொடுத்ததுமில்லை . அதனால் அவரை arrogant  என்று விமர்சித்தார்கள் . தான் அப்படிப்பட்டவன் இல்லை என்பதை நிரூபிக்க  சமீப காலங்களில்தான் தன்னை அவர் வெளிப்படுத்துகிறார் . இசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். நிறைய செய்திகளை வெளியிடுகிறார் .  35 வருடங்களாக ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை  என்பதற்கும் இப்போது ஏன் வெளிப்படுத்துகிறார் என்பதற்கும் பலரும் பல்வேறு கற்பிதங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்  .  Interpretations  உருவாக்கலாம் .அது முக்கியமில்லை . இசை எனும் இன்பத்தில் இத்தனை  ஆண்டுகளாக  நம்மை  நீந்த வைத்துக் கொண்டிருக்கிறார் .  அதுவே முக்கியமாக தெரிகிறது .


                    தன் இசைப் பயணம் எங்கு ஆரம்பித்தது , தன்னுடைய தாயார் அவரை  எப்படி வழியனுப்பினார் , இந்த உலகத்தை எப்படி புரிந்து கொண்டார் , தன்  இசை முன்னோர்களை எப்படி சந்தித்தார் , இசையை கற்க எடுத்த முயற்சிகள் என்னென்ன , தான் சந்தித்த திறமையான இசைக் கலைஞர்கள் யார் என்ற கேள்விகளுக்கு எல்லாம் கீழே உள்ள காணொளியில்  ஜி. வெங்கட் ராம்  என்பவர் தன் இணையதள சானலுக்காக எடுத்த பேட்டியில்  இளையராஜா அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுப்பதை பார்க்கலாம்.


                     




              தலை முறைகள் கொண்டாடும் இசைப் புதையலை நமக்கு அள்ளி  வழங்கியிருக்கும் இளையராஜாவை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம், புகழலாம் , வாழ்த்தலாம்.


.................................தொடர்வேன் ..........................................