இசை ராட்சஷன் - 6
( The Musical Legend )
1978 இல் இளையராஜா இசையமைத்த பாடல்களின் மெருகு கூடிக்கொண்டே சென்றது . தமிழகத்து மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து இசையைக் கொடுப்பதில் வல்லவராக அவர் உருமாறினார் . ஒரு பாடலைப் போல இன்னொரு பாடல் இருந்தது என்று எவரும் கூறிவிட முடியாதபடிக்கு அவருடைய இசைத் தேர்வு பாராட்டும்படி அமைந்தது. பாட்டுக்கும் மெட்டமைத்தார். மெட்டுக்கும் பாட்டு எழுத வைத்தார். காலப் போக்கில் மெட்டுகளுக்கு பாடல் அமைக்கப்படும் யுக்தி அதிகமானது. எதிர்காலத்தில் தன்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் பாட்டுகளுக்கு மெட்டு கட்டி அதையும் ஹிட் ஆக்கியவர் இளையராஜா.
அதே காலகட்டத்தில் அவருடைய இசை முன்னோர்களும் இசையமைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். சிலர் ராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ அதிகமாகவோ கூட இசையமைத்தார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. சொற்ப படங்களின் பாட்டுகள் வெற்றியடைந்தன. தமிழகத்து மூலை முடுக்குகளில் எல்லாம் ராஜாவின் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன . ஒவ்வொரு படத்திலும் இரண்டு மூன்று பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்ததை காண முடிந்தது. சில பாடல்கள் நெஞ்சைத் தாலாட்டின , சில நெஞ்சில் தீ மூட்டின . சில பாடல்கள் பன்னீர் தெளித்தன , சில கண்ணீர் வரவழைத்தன . சில பாடல்கள் போதையைத் தந்தன, சில பாதையைக் காட்டின . சில பாடல்கள் ஆனந்தம் தந்தன , சில ஆர்ப்பரிப்பைத் தந்தன. தொடர்ந்து அவரிசை கேட்கும் ஆர்வத்தைத் தந்தன . வார்த்தை ஜாலங்களுக்காய் வெற்றி பெற்ற பழைய பாடல்கள் உண்டு. வார்த்தைகள் எப்படி இருந்தாலும் இசைக்காக வெற்றி பெற்ற ராஜாவின் பாடல்கள் அதிகம் .
சிறு வயதில் இத்தனை விஷயங்கள் புரிபடாமல் இருந்தது. இப்போதுதான் அவர் பாடல்களுக்கிருந்த வரவேற்பு , அதற்கான காரணங்கள்
தெளிவாக தெரிகின்றன . 1978 இல் ' சிட்டுக் குருவி ' என்ற படத்தில் ' என் கண்மணி உன் காதலி ' என்றொரு புதுமையான பாடல் கேட்டு பிரமித்துப் போனேன். வித்தியாசமான பாடல் . இளமை ததும்பும் இனிமையான பாடல். ஒரு குரல் பாடும்போதே அதே குரல் அதன் மேல் விரவி வருவது போன்ற அமைப்பு. இரண்டு டியூன்கள் பின்னி வரும் . இருவித மெலோடியும் ஒன்றை ஒன்று குறுக்கிடும் . அந்த வகை புதுமைப் பாடல் counter point வகையில் இசைக்கப்பட்ட பாடல் என்பது அப்போது தெரியாது . இளையராஜா பேட்டியில்
சொன்ன பிறகு புரிந்தது . இணைய தளத்தில் பல இசை ரசிகர்கள் பகிரும் செய்திகளின் அடிப்படையில் இப்போது அதன் பரிமாணம் புரிகிறது.
கேள்விக்கு பதிலாய் இரு வேறு மெட்டுகளை ஒரே பாட்டில் சேர்ப்பது இந்த வகை. ஒரு குரல் ஒரு மெட்டில் பாடும்போது அவரின் மனசாட்சிக் குரல் வேறு மெட்டில் அதைத் தொடர்வது கவுன்ட்டர் பாயிண்ட்
என்று இளையராஜா சொல்லி தெரிந்தது . பாலுவும் சுசீலாவும் கேள்வியாக ஒரு மெட்டில் பாடிக்கொண்டே வர இன்னொரு மெட்டில் அவர்களது குரலே பதில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் . இது வித்தியாசமானதொரு முயற்சி . இதற்கு முன்னர் தமிழ்த் திரையிசையில் இளையராஜாவின் இசை முன்னோர்கள் இதைச் செய்திருப்பதாக நான் கேள்வியுற்றதில்லை . மேலைநாட்டு இசை பிரபலங்கள் செய்திருக்கிறார்கள். அதை அகத் தூண்டலாக எடுத்துக்கொண்ட இளையராஜா புதிய முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இசைத்து வெற்றியும் கண்டார். இயக்குனர்கள் தேவராஜ்- மோகன் இருவருமே இந்தப் பாடலமைப்புப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லாததால் பாடலை மாற்ற முடிவெடுத்தார்கள் . இளையராஜாவிற்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர்கள் என்ற முறையில் ராஜா அப்பாடலை நிராகரிக்காமல் அவர்களை சமாதானப்படுத்தி இசையமைத்துக் காண்பித்தார். பாடலை ஹிட் ஆக்கினார்.
உற்சாகமாய் ஒலிக்கும் அந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. எஸ்.பி. பி அவர்களுக்கு இந்த மாதிரி பரிசோதனை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல! அழகாகப் பாடி அசத்தியிருப்பார். சுசீலா அவர்களும் அவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்திருப்பார். காரணம் இளையராஜாவின் இசை அந்த அளவிற்கு அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கவேண்டும் . ஒரு டவுன் பஸ் பயணத்தில் நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே வரும்போது அவர்களின் உடலிலிருந்து உருவங்கள் பிரிந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டே பாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும் . கண்டக்டரின் குரல் அவ்வப்போது இடைமறிக்கும் . நாமும் பஸ்ஸில் பயணம் செய்வது போலவே பாடல் இசைக்கப்பட்டிருக்கும் . அப்போது திரையோடு நாமும் சங்கமிக்கும் அளவிற்கு திரைப்படங்களும் திரையிசையும் இருந்தன. இப்போது பெரும்பான்மையான படத்தோடும் பாடலோடும் ஒன்றிக்க முடிவதில்லை. மனதில் ஒட்டுவதில்லை.
என் கண்மணி என்ற பாடல் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இளையராஜா அவர்களே ஒரு பேட்டியில் சொன்னதை ராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் அழகான பதிவு ஒன்றில் தந்திருக்கிறார். ராஜா நேரடியாக சொல்வதை காணொளியிலும் காணலாம்.
http://isaignanibakthan.blogspot.in/2010/12/blog-post.html
அதே படத்தில் ' உன்னை நம்பி நெத்தியிலே' என்றொரு சுசீலா பாடும் கிராமத்து வாசனை தடவிய நாடோடிப் பாடல் . நாடோடிப் பாட்டு போல தெரியாதவாறு இளையராஜா அற்புதமாகக் கொடுத்திருப்பார். சோகமான சுகராகத்தில் அமைந்த பாடல் . பிரிந்துபோன காதலன் எப்போது திரும்பி வருவான் என ஏங்கித் தவிக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் மனக்குமுறலாய் அப்பாடல் ஒலிக்கும். கேட்ட மாத்திரத்தில் இனம் புரியா சோகம் வந்து நம் இதயத்தை அப்பிக் கொள்ளும் . படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் தலைவனைப் பிரிந்த தலைவியின் புலம்பலை அழகாக
பாட்டெல்லாம் பாடி செய்யுள் விளக்கித் தந்தபோது புரியாதது இந்தப் பாட்டைக் கேட்டவுடன் புரிந்தது. போதிக்கும்போது புரியாததெல்லாம் பாதிக்கும்போது புரிந்தது.
வெள்ளைக் குயில் சுசீலா அதை அழகாக பாடியிருப்பார். இனம் புரியா சோகம் இதயத்தைக் கவ்வும் வண்ணம் பாடலும் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டிருக்கும். அழகிய வனத்து ஆலமரத்தின் நிழலில் நின்று கொண்டு நாயகன் விட்டுப் போன திசையைத் தொட்டுவிடும் தூரம்வரை பார்வையிட்டு பாடும் பாடலுக்கு ஏற்றாற்போல உணர்வுகளை வயலினில் இழையோட வைத்திருப்பார் இளையராஜா . புல்லாங்குழலிலும் அதை நமக்கு புரிய வைத்திருப்பார் . பாட்டிடையே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருப்பவனின் ' ஓ........ஹ ' என்ற மேய்ச்சல் ஒலியும் ஆடுகளின் பதில் ஒலியும் சோகத்திற்கு கட்டியம் கூறும் சுருதியுடன் சேர்த்திருப்பார். கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த கலைஞனின் கற்பனை ஊற்று இசையிலேயே கிராமத்துப் பின்னணியை கொண்டு வந்துவிட்ட உணர்வு அலாதியானது.