Sunday, 7 December 2014

இசை ராட்சஷன் - 5




                                        இசை ராட்சஷன் -  5

                                        ( The Musical Legend )


                      1977 ஆம் ஆண்டில் இளையராஜாவை விட எம்.எஸ்.வி இசையமைத்தத் திரைப்படங்கள் அதிக அளவில் வந்தன. சில படங்களின் பாடல்கள்  மட்டும் வெற்றி பெற்றன என்பது மறுப்பதற்கில்லை . ஆனால் அதிக அளவில் இளையராஜா பாடல்கள் வரவேற்புப் பெற்றதும் கவனிக்கப்பட்டதும் கூட மறுப்பதற்கில்லை.  காரணம் பாடலுக்கான பின்னணி இசை அவரை மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது. இசையில் அவர் செய்த புதுமைகள் போற்றப்பட்டன, கொண்டாடப்பட்டன . அது மறுக்க முடியாத வரலாறு . 





                        என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி அவர்களை மனதளவில் ஒதுக்கித் தள்ளாதவாறு  அவருக்கென்று ஒரு தனி இடம் வைத்திருந்தேன் . இளையராஜாவின் பாடல்களை ரசித்தாலும் வெளியே காட்டிக் கொண்டதில்லை. இளையராஜாவா எம்.எஸ்.வி யா என்ற கேள்விகளும் வாதங்களும் உருவாகும் இடங்களில் நான் எம்.எஸ்.வி பக்கம் நின்றேன் . பெரிய அண்ணன்மார்களிடம் கூட அதற்காக சண்டை போட்ட அனுபவம் உண்டு. வகுப்புத் தோழர்களோடு வயதுக்கேற்ற வார்த்தைச் சண்டை நடந்தது. 


                           நான் வளர்ந்த கிராமத்தில் சினிமா கொட்டகை இல்லை. தியேட்டர் இல்லாத ஊராட்சி ஒன்றியம் அதுவாகத்தான் இருந்தது என்பது பத்திரிக்கையிலும் வந்தது. அதனால் ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருந்த மற்றொரு கிராமத்து சினிமா கொட்டகைக்குச் செல்வோம்.  பஸ்  வசதி இல்லை . சைக்கிள் எடுத்துப் போகவேண்டும் . இல்லாவிடில் நடராஜா சர்வீஸ்தான் !  சினிமாவிற்கு போகப் போகிறோம் என்று தெரிந்துவிட்டால் கால் வலியாவது கை வலியாவது! எதையும் பார்ப்பதில்லை. உற்சாகத்தோடு நடந்தே போய் படம் பார்த்துவிட்டு இரவு திரும்பும்போது எல்லாமே வலிக்க ஆரம்பிக்கும் . தூக்கம் தூக்கமாய் வரும் . விட்டால் ரோட்டிலேயே படுத்துத் தூங்கிடச் சொல்லும் அளவிற்குக் கண்ணைச் சுழற்றும் .  அம்மா என்னுடன் வரும்போது,  'என்னைத் தூக்குமா ' என்று அழுது அடம் பிடித்து அடி வாங்கி நடந்தே வந்திருக்கிறேன் . சில நேரங்களில் அடியும் போட்டு என்னைத் தூக்கிக் கொண்டும் அம்மா நடந்து வந்ததை இளையராஜாவின் ஆரம்ப காலப்  பாடல்கள்  ஞாபகமூட்டுகின்றன.  இப்போது  அந்தப் பாடல்களை  கேட்கும்போது எண்ணம் பெருகி இதயம் உருகி கண்ணீர் அருவி கன்னம் வழிவதை யாரும் பார்ப்பதற்குள் துடைத்துக் கொள்வேன்.  விலை மதிப்பிலா உணர்வுகள்!






                          டூரிங் டாக்கீஸில் படம் பார்க்கும் அனுபவமே தனி!  நடுவில் கூடாரம் .இருபுறமும் திறந்த வெளி. 'நம்பர் ஒன் ' சமாச்சாரங்களும் அங்கேதான் . தரை டிக்கெட் , பெஞ்சு , சேர்  என்று மூன்று வகுப்புகள் . தரை டிக்கெட் 25 பைசாவிற்கு நான் படம் பார்த்த அனுபவம் நினைவிருக்கிறது . தரையில்  மண்ணைக் குவித்து சற்று உயரமாக்கிக் கொண்டு உட்கார்ந்து படம் பார்ப்பேன் . கூட்டம் இல்லாவிட்டால் படுத்துக் கொண்டே படம் பார்த்த அனுபவமும் உண்டு . துப்பி வைப்பார்கள் . 'இருந்து'   தொலைப்பார்கள். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு படம் பார்த்திருக்கிறேன் . திரைப்படம் பார்க்கும்  சுவாரசியத்தில்  அதெல்லாம் ஒரு பொருட்டாகவே பட்டதில்லை. 



                       அப்படி ஓடி ஓடி படம் பார்த்த அனுபவங்கள் மனசுக்குள் ஓடும்போது சினிமா கொட்டகையை நெருங்கும் கணங்களும் நினைவிற்கு வருகின்றன. டென்ட் கொட்டகையின் உச்சியில் கட்டிய குழாயில் பாடல் ஒலிக்கும் .  ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நெருங்கும்போதே பாடல்கள் ஒலிப்பது தெளிவாகக் கேட்கும் . எல்லாமே ஹிந்திப் பாடல்கள்தான் ! 

ஆராதனா, கேரவன், பாபி , யாதோங்கி பாரத் , ஹம் கிசிசே கம் நகி போன்ற படங்களிலிருந்து அதிகப் பாடல்கள் போடுவார்கள்.  ஹிந்திப் பாடல்களை முதன்முறையாக நான் அங்குதான் கேட்டேன். ரேடியோவில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே கேட்டிருக்கிறேன் . அப்போது  சினிமா கொட்டகையில் ஏன் ஹிந்திப் பாடல்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்விக்கு இப்போது விடை தெரிகிறது . 70 கள்  ஆரம்பித்து  அதன் மையம் வரை ஹிந்திப் பாடல்களின் சாயலில் நமது தமிழ்த் திரை இசை அமைப்பாளர்களும் பாடல்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் .


                     இளையராஜாவின் வருகை அதையெல்லாம் மாற்றிப் போட்டது . திரை இசையின் போக்கு திசை மாறியது. ஒட்டு மொத்தத்  தமிழர்களும் இசை கிளம்பிய திசையைத் திரும்பிப் பார்த்தார்கள் . தமிழன் தமிழ்ப் பாடல்களைக் கேட்கச் செய்ய தலையெடுத்தார் இளையராஜா. மண்ணின் மணம் சார்ந்த பாடல்கள் கேட்டு மக்கள் மனது மாறிப் போனது. எங்கும் அதன் பிறகு தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன . இளையராஜாவின் கானங்கள் கேட்கக் கேட்க 'பானங்கள்'  உண்ட போதையைத் தந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இளையராஜா ஒரு இசை அசுரனாக வளர்ந்து கொண்டே வந்ததை கண்கூடாக பார்த்தேன். மற்ற இசை அமைப்பாளர்களும் அதே காலகட்டத்தில் இசை அமைத்துக் கொண்டிருந்தாலும்  இளையராஜாவின் இசையோடு அவர்களால் போட்டியிட முடியவில்லை.  பெரும்பான்மையான மக்களின் நெஞ்சங்களை ஆக்ரமித்த பாடல்களை இளையராஜா ஒருவராலேயே கொடுக்க முடிந்தது. 


                     காலம் உருண்டது. 77 முடிந்தது. 78 இல் இளையராஜா இசையமைத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. 

                                        -   அச்சாணி 
                                        -   அவள் அப்படித்தான் 
                                        -    பைரவி 
                                        -    சிட்டுக் குருவி 
                                        -    இளமை ஊஞ்சலாடுகிறது 
                                        -    இது எப்படி இருக்கு 
                                        -    காற்றினில் வரும் கீதம் 
                                        -    கண்ணன் ஒரு கைக்குழந்தை 
                                        -    கிழக்கே போகும் ரயில் 
                                        -     மாரியம்மன் திருவிழா 
                                        -     முள்ளும் மலரும் 
                                        -     ப்ரியா 
                                        -     சட்டம் என் கையில் 
                                        -     சிகப்பு ரோஜாக்கள் 
                                        -     சொன்னது நீதானா 
                                        -     திருக்கல்யாணம் 
                                        -     திரிபுர சுந்தரி 
                                        -     தியாகம் 
                                        -     வாழ நினைத்தால் வாழலாம் 
                                        -     வட்டத்துக்குள் சதுரம் 



                  அச்சாணி என்ற திரைப்படத்தில் ' மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன் ' பாடல் வெளிவந்தபோது அது சினிமா படத்தில் வந்த பாடல் போல எனக்குத்  தோன்றவில்லை . இன்னுமொரு பக்தி பாடல் உருவாகி இருக்கிறது என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. 'இடைவிடா சகாய மாதா' என்றொரு கிறித்துவ பக்தி பாடல் சுசீலாவின் குரலில் அற்புதமான  இசையோடு  ஒலிப்பதை அடிக்கடி கேட்டிருக்கிறேன் .  கிறித்துவ ஆலயத்தின் திருவிழா காலங்களில் அந்தப் பாடல் ஒலிப்பேழை மூலம் ஒலிக்கப்படும்.    

சுசீலாவின் குரலா பாடலுக்கான மெலோடியா அல்லது இரண்டுமா என்பதை  பிரித்தறிய முடியாமல்  மெய்மறந்து பாடல் கேட்பேன்.  ' மாதா உன் கோயிலில் ' என்ற பாடல் முதன்முறையாக அங்கு நான் கேட்டபோதும் அதேபோல்  மெய்மறந்து போனேன் . என்ன ஒரு மனதுருக்கும் மெலடி !





              'மச்சானைப் பாத்தீங்களா பாடின அதே ஜானகி அம்மாதான் இதையும் பாடி இருக்காங்க' என்ற செய்தி கேட்டவுடன்  தன்னுடைய இனிய குரலால் நம்மை குதூகலிக்க வைக்கவும்  கும்பிட வைக்கவும் செய்கிறார்களே என்று வியந்து போனேன் . வீணையையும் வயலினையும் இளையராஜா வாசிக்க வைத்தது போல இல்லாமல் அழ வைத்துக் காண்பித்திருப்பார். பாடலோடு இழையோடும் இசைக் கருவியிலும் அழுகையை கொண்டுவர முடியும் என்பதை ராஜா நிரூபித்திருப்பார். 

முகநூலில் படித்த செய்தியைப்  பகிர ஆசைப்படுகிறேன்.

பல டேக்குகள் எடுத்த பாடல் .
பாடலை ரெகார்ட் செய்யும் போதே தனது கற்பனையில் தோன்றிய சங்கதிகளை ஜானகியிடம் அவ்வப்போது சென்று சொல்லி பாடலை மெருகேற்றினார் ராஜா .
இறுதியில் அனைத்தும் நன்றாக வந்த நேரத்தில் பாடலில் மெய் மறந்து BGM க்கு கை காட்ட மறந்துவிட்டார் இசையை conduct செய்த கோவர்த்தன்.
அடுத்த டேக்கில் மூன்றாவது சரணத்தில் ''பிள்ளை பெறாத பெண்மை தாயானது ,அன்னை இல்லாத மகனை தாலாட்டுது ''என்ற வரிகளை பாடிய ஜானகி தொடர்ந்து பாடாமல் நிறுத்தி விட்டார் .
என்னவென்று ராஜா வாய்ஸ் ரூமை பார்த்தால் ஜானகி கர்சீப்பால் கண்களை துடைத்து கொண்டிருப்பது கண்ணாடி வழியே தெரிந்தது
என்னவென்று கேட்க பாடலின் டியூனும் வார்த்தையும் கலந்து பாவத்தில் ஏதோ ஒன்றை உணர்த்த அழுகையை நிறுத்த முடியவில்லை என்றார் ஜானகி .இதை கேட்டு எல்லோரும் உருகி விட்டார்களாம் .
பாடல் இசையை coduct செய்தவர் ,பாடலை பாடியவர் இருவருக்குமே உணர்ச்சி மயமான அனுபவத்தை தந்த பாடல் இது .
இப்போது கூட இந்த பாடலை கேளுங்கள் .அதன் tune ,bgm குறிப்பாக 2nd interlude அதில் வரும் bass flute இசை சிலிர்ப்பூட்டும்.
 

               அதே படத்தில் வரும் ' தாலாட்டு பிள்ளை  ஒன்று  தாலாட்டு ' என்ற பாடலும் நல்லதொரு மெலடி . வானொலியில் அதிகம் தாலாட்டப்பட்டது. 
எஸ்.பி.பி அவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொருவிதமான expression கொடுப்பதில் வல்லவர் . இந்தப் பாட்டிலும் அவருடைய பங்கை 'வெள்ளைக் குயில்'  சுசீலா அவர்களுடன் சேர்ந்து அழகாக கொடுத்திருப்பார். 



                'அவள் அப்படித்தான் '  என்ற படம் அப்போது புரியவில்லை . ஆனால் இந்திய சினிமாக்களைப் பற்றி பேசினால் அந்தப் படத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது எனும் அளவிற்கு அந்தஸ்து பெற்ற படம் என்பது இப்போது தெரிந்து கொண்ட செய்தி . புதுமையான ஒரு stylish திரைப்படம் . படத்தில் வரும் 'உறவுகள் தொடர்கதை ' என்ற பாடலைக் கேட்டு மதிமயங்கி போயிருக்கிறேன் . கிடார் இசையின் அற்புதம் புரிய வைத்த பாட்டு. தாஸ் அவர்களின் குரலில் அது ஒரு தேவகானம் . இளையராஜாவின் இசைப்  பொக்கிஷத்தில் வைரமாய் மின்னும் பாடல் . இன்னும் கூட மின்னிக் கொண்டுதான் இருக்கிறது .  உறுத்தாத வார்த்தைகள் வருத்தாத இசை கொண்டதொரு பாடல் .  எவருக்கும் பிடிக்கும் .  ஜேசுதாஸ் அவர்கள் சமீபத்தில் ' கர்னாடக இசையே எனக்கு முதலிடம். சினிமா இசையெல்லாம் எனக்கு சும்மா ' என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  அது அவருடைய உணர்வாகவிருந்தாலும் இப்படிப்பட்ட  சினிமா பாடல்கள்தான் அவரை வெகு ஜனங்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அந்தக் காந்தர்வக் குரலை எத்தனையோ பாடல்களில்  எத்தனை  ஆயிரம் முறை கேட்டிருப்பேன்  என்று கணக்கிடவே முடியாது . 
            

  
                                     


                அதே படத்தில் கமலஹாசன் அவர்கள் பாடிய ' பன்னீர் புஷ்பங்களே
என்ற பாடலும் சுகமானது .  பாடலின்  பதிவில்   மலையாள  உச்சரிப்பு அதிகம்
இருந்ததை ராஜா திருத்திப் பாடவைத்தார் என கமலஹாசன் நினைவு  கூர்ந்திருக்கிறார்.  இசைக் கருவிகளின்  ஆக்ரமிப்பு  இல்லாவிட்டாலும்  வீணை,  வயலின்  இரண்டின் சோகமும் இழையோடும் . 


                      ' பைரவி' படத்தில் '  நண்டூருது  நரியூருது  '  என்ற பாடலின் சோகம் சுகமான ராகம் . ரஜினிகாந்த்துக்கு   டி .எம்.எஸ்  அவர்களின்  குரல் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால்  இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது ஒலிப்பதிவுக் கூடத்திற்கு சென்று இரண்டு மணி நேரம் கண்டு ரசித்ததாக  செய்தி படித்திருக்கிறேன் . இரண்டாவது சரணத்தில் பாட்டோடு சேர்ந்து வயலின்களின் கூட்டம் ஒரு சேர  பேசிக் கொண்டே வருவதை ரசிக்கலாம் . முதல் சரணம் வரை பாசத்தோடு வளர்த்த தங்கையின்  நினைவுகளை  எண்ணிப் பார்க்கும் நாயகனின்  உணர்வுகளை  வெளிப்படுத்தும் இசையை மென்மையாய்  கொடுக்கும் இளையராஜா,  இரண்டாம் சரணத்தில்   ' நாளுக்கு நாள் உழைத்தேன் ...நன்றியில்லை அங்கே '  என்று தங்கையின் மரணத்திற்கு காரணமான முதலாளி வில்லனை பழி  வாங்க  ஏற்கும் சபதத்திற்கு  தகுந்தாற்போல்  இசையின் போக்கை வீரியத்தோடு வெளிப்படுத்தும் விதம் அருமை .  இளையராஜாவின் சிறப்புகளில் இதுவும் ஒன்று . பாடல் முடியும் நேரம் ஏதோ ஒன்று நடக்கப் போவதை இசையிலேயே உச்சகட்டம் கொண்டு வந்து எதிர்பார்ப்பை  கூட்டுவது இளையராஜாவின் திறமைக்கு சான்று .  இன்னும் சில பாடல்களையும்  உதாரணம் சொல்லலாம்  :  'பாடவா உன் பாடலை ' , ' யார் வீட்டில் ரோஜா பூ பூத்தது ' .


                   

                       '  நண்டூருது ' பாடலுக்கு ரஜினிகாந்த் நடித்திருந்தாலும்  தன்  வளமான குரலால் டி . எம் .எஸ்  அவர்களும்  நடித்திருப்பார் . தன்  புதுமை இசையால் இளையராஜாவும்  நடித்திருப்பார் . அதுவே அந்த பாடலின் சிறப்பு.
அதே படத்தில் வரும் ' கட்ட புள்ள குட்ட புள்ள ' என்ற பாடல்  குத்துப்  பாடல்
ஆட்டம் போட வைக்கும் பாட்டு . ஆனால் நான் ஆட்டம் போடவில்லை . கொஞ்சம் வளர்ந்துட்டேனாக்கும் ! திரும்பிய திசையெல்லாம் அந்தப்பாடல்   ஒலிபரப்பப்பட்டது .


                        மக்களின் மனதை  தனது பாடல்களால் கட்டிப் போட்டு வைத்திருந்த இளையராஜா எங்கிருந்து முளைத்தார் , எந்த மூலையிலிருந்து வந்தார், இசை தொடர்பான விசயங்களை எங்கே கற்றார்  என்ற செய்தி பெரும்பான்மையானவருக்கு தெரியாமலே இருந்தது. ஏனென்றால் அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை . 35 வருடங்களாக தொலைகாட்சி , ரேடியோ , பத்திரிக்கை போன்ற ஊடகங்களிலும் பேட்டி கொடுத்ததுமில்லை . அதனால் அவரை arrogant  என்று விமர்சித்தார்கள் . தான் அப்படிப்பட்டவன் இல்லை என்பதை நிரூபிக்க  சமீப காலங்களில்தான் தன்னை அவர் வெளிப்படுத்துகிறார் . இசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். நிறைய செய்திகளை வெளியிடுகிறார் .  35 வருடங்களாக ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை  என்பதற்கும் இப்போது ஏன் வெளிப்படுத்துகிறார் என்பதற்கும் பலரும் பல்வேறு கற்பிதங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்  .  Interpretations  உருவாக்கலாம் .அது முக்கியமில்லை . இசை எனும் இன்பத்தில் இத்தனை  ஆண்டுகளாக  நம்மை  நீந்த வைத்துக் கொண்டிருக்கிறார் .  அதுவே முக்கியமாக தெரிகிறது .


                    தன் இசைப் பயணம் எங்கு ஆரம்பித்தது , தன்னுடைய தாயார் அவரை  எப்படி வழியனுப்பினார் , இந்த உலகத்தை எப்படி புரிந்து கொண்டார் , தன்  இசை முன்னோர்களை எப்படி சந்தித்தார் , இசையை கற்க எடுத்த முயற்சிகள் என்னென்ன , தான் சந்தித்த திறமையான இசைக் கலைஞர்கள் யார் என்ற கேள்விகளுக்கு எல்லாம் கீழே உள்ள காணொளியில்  ஜி. வெங்கட் ராம்  என்பவர் தன் இணையதள சானலுக்காக எடுத்த பேட்டியில்  இளையராஜா அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுப்பதை பார்க்கலாம்.


                     




              தலை முறைகள் கொண்டாடும் இசைப் புதையலை நமக்கு அள்ளி  வழங்கியிருக்கும் இளையராஜாவை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம், புகழலாம் , வாழ்த்தலாம்.


.................................தொடர்வேன் ..........................................

Thursday, 13 November 2014

இசை ராட்சஷன் - 4



                                         இசை ராட்சஷன் - 4

                              ( The Musical Legend )

               பதினாறு வயதினிலே படப்  பாடல்களின் தாக்கம் பல நாட்கள் நீடித்தது .  பிறகு 'அவர் எனக்கே சொந்தம்'  என்ற படத்தில் வந்த 'தேவன் திருச்சபை மலர்களே' பாடல் சிலோன் வானொலியில் அடிக்கடி போடப்பட்டதைக் கேட்டுவிட்டு மிகவும் ரசித்திருக்கிறேன் . இதயத்தை இறகால்  வருடும் கானம்.  இப்போது இசைக்கப்பட்டாலும் பால்ய காலத்தில் சர்ச் பாடகற்குழுவில் நான் சேர்ந்து பாடியது ஞாபகத்தில் வரும் . கன்னியர்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் படித்தபோது எனது 'பாட்டு பாடும்' திறமைக்காக  ஒரு சிஸ்டர்  என்னை பாடகற்குழுவில் சேர்த்துவிட்டார்கள். எட்டு வயதில் அந்தக் குழுவில் நான் கானக்குயிலாக வலம்  வந்தேன் . குரல் பெண் குரலாக இருக்கும் . பதினைந்து வயதுவரை குரல் உடையவேயில்லை.


                    சர்ச்சில் சொல்லித்தரப்படும் எல்லா பாடல்களையும் எளிதாக மனப்பாடம் செய்து பாடிவிடுவேன் . பெண்கள் பாடும்போதுதான் பாடவேண்டும் என்பது கட்டளை . இல்லாவிடில் 'குட்டு' விழும். கிறித்தவப் பாடல்களுக்கென்று தனித்த இசை ஒன்று இருந்ததை அப்போது உணர்ந்தேன் . மேல்நாட்டு இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களும் மெல்லிசைப் பாடல்களும்  நிறைய இருந்தன .அவையெல்லாம் மனதை கொள்ளை கொள்ளும் இசையாக அமைந்தன. ஆனால் இப்போது வரும் கிறித்தவப் பாடல்களில் சினிமாவின் இசை ஏறிக்கொண்டதை பார்க்க முடிகிறது. ரசிக்க முடிவதில்லை . பக்திப் பாடல்களும் நிறம் மாறும் யதார்த்தம் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது .


                                                               

               

                          தேவன் திருச்சபை மலர்களே என்ற பாடல் ஒரு கிறித்துவப் பாடல் போலவே ஒலிக்கும் . சினிமாவிற்கான இசை அதில் மாறாது . கிடார் ஒலியின்  கார்ட்ஸ் ஆரம்பித்து பல இசைக்கருவிகளும் சேர்ந்து பல்லவி ஆரம்பிக்கும் அழகு பிரமாதம் . பாடகற்குழுவில் இருந்ததாலோ என்னவோ கேட்ட மாத்திரத்தில் மனதை ஆக்ரமித்தது . புதிது புதிதான இசைக் கருவிகளின் சங்கமம் ஆச்சரியப்பட வைக்கும். இப்போது பல கருவிகள் வந்துவிட்ட போதிலும் அந்த நேரத்தில் இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகளின் இசையொலி , நயம், ஓசை  எல்லாமே வினோதமானவை.  ஆரம்பத்தில் இளையராஜா ஒரு கிறித்தவராக வளர்ந்தபோது  சர்ச்சுகளில்  இசை கேட்ட பாதிப்போ என்னவோ இந்தப் பாடல் மட்டுமல்ல . அவர் இசைத்த கிறித்தவப் பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையாகவும் சுகமாகவும் இருக்கும் . 'மாதா  உன் கோயிலில்',   'தேவனின் கோயிலிலே ' ,  'கடவுள் உள்ளமே கருணை இல்லமே ' , ' ஸ்தோத்திரம் பாடியே ' , போன்ற பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் . அத்தனையும்  சூப்பர் ஹிட் !  




               



                                           'தேவன் திருச்சபை மலர்களே ' போன்ற பாடல்களை அப்போது மனப்பாடமாய் பாடுவேன் . இப்போதுள்ள புதுப்பாடல்களில் ஒரு பாட்டு கூட  மனப்பாடம் ஆவதில்லை . பிள்ளைகள் கேலியாக 'எங்கே இரு வரிகள் தவறில்லாமல் பாடிக் காட்டுங்கள் '  என்று எனக்கு சவால் விடுகிறார்கள் . நான் கவனித்துக் கேட்டாலும் கவனம் அதில் போவதில்லை.  மனப்பாட சக்தி போய்விட்டதா?  மனசுக்குள் போகாமலே போய்விட்டதா?  ' பாட்டு என்றால் '  இதயம் நுழைந்து உணர்வில் கலந்து உயிரைத் தொடுவதாக இருக்கவேண்டும் '   என்று தத்துவமாகச் சொன்னால்  ' பாட்டு கேட்கிற மாதிரி இருக்கணும் ...ஏன் இவ்வளவு யோசிக்கறீங்க ' என்கிறார்கள் பிள்ளைகள். நமக்குப் புரிவது அவர்களுக்குப் புரிவதில்லை . நாம் ரசிப்பது அவர்கள் ரசிப்பதில்லை. நாம் ஏற்றுக்கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை . தலைமுறை இடைவெளி இதுதானோ ?  ' அப்பாவிற்கு என்ன பெரிதாகத் தெரியும்' என்று நான் என் தந்தையைப் பற்றிக்  கொண்டிருந்த  கணிப்பை பிள்ளைகள் எனக்கும் கணிக்கிறார்கள். உலகம் உருண்டை.  கிளம்பியவன் கிளம்பிய  இடத்திற்கே வந்து சேரவேண்டும் .


                                      முதன்முதலாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தீபம் திரைப்படத்திற்கு இசையமைத்தார்  இளையராஜா. அதுவரை எம்.எஸ்.வி. அவர்களே அதிகமாய் சிவாஜி படத்திற்கு இசையமைத்து வந்தார் . அதனால் அந்தப் படத்தின் பாடல்கள் எம்.எஸ்.வி இசையின் சாயல் கொண்ட பாடல்களாகவே  அமைந்தன.  திரைப்படக் கர்த்தாக்களின் நிர்ப்பந்தமோ என்னவோ சிவாஜிக்கென்று தனது பாணியை மாற்றிக் கொள்ளாமல் முன்னோர் வகுத்த பாணியிலேயே இளையராஜா இசையமைத்திருந்தார் . ஆரம்பத்தில் ஒரு சூழல் கொடுக்கப்பட்டால் பல டியூன்கள்  போடப்பட்டு இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டதாக இளையராஜாவே  சொல்லியிருக்கிறார். எனவே தீபம் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. காரணம் இயக்குனரா இசையமைப்பாளரா என்ற பட்டிமன்றம் நடத்தினால் வாதங்கள் முடிவுறாது. ஆரம்பத்தில் சுய வளர்ச்சிக்காகவும் வணிகரீதியாகவும் இளையராஜா வளைந்து கொடுத்துதான் போயிருக்க முடியும் .

       
                            ' அந்தப்புரத்தில் ஒரு மகராணி ' என்ற பாடலில் எம்.எஸ்.வி.தான் அதிகம் தெரிவார்.  'ராஜா யுவர் ராஜா ' , 'பேசாதே வாயுள்ள ஊமை நீ '  என்ற மற்ற இரு பாடல்களிலும் கூட இளையராஜாவின் முன்னோர்களே  தெரிவார்கள். பின்னணி இசையிலும் இளையராஜாவின் முத்திரை குறைவாக இருக்கும் . ' பூவிழி வாசலில் யாரடி வந்தது ' என்ற பாடலில் மட்டும் இளையராஜா முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் ,ஜானகி டூயட்டில் பாடல் கேட்க  சுகமானது .  நானும் அந்தப் பாடலை விரும்பிக் கேட்பேன்.


                              கவிக்குயில்  படத்தின் பாடல்கள் மனதைத் தாலாட்டின . 'குயிலே கவிக் குயிலே' என்று ஜானகி அவர்கள் தன்  குயில் குரலில் பாடுவதை  கண்ணை மூடிக் கொண்டு கேட்டால்  விடிந்தும் விடியாத காலையும் கதிரவன் மெதுவாய் எட்டிப் பார்க்கும் வேளையும் தோப்புக்குள் இரு குயில்கள் கேள்வி பதிலாய் மாறி மாறி கூவிக் கொள்ளும் இனிய பொழுதும் கற்பனைக்கு வரும் . சில பாட்டுக்கள் கேட்கும்போது நாம் சந்தித்த சில இடங்களையும் சில மனிதர்களையும் ,சில சூழல்களையும் நம் எண்ணச் சிறைக்குள்ளிருந்து இதயத்தின் அறைக்குக் கொண்டு வருகிறோமே அந்த விஞ்ஞானத்தை விளக்க யாரால் முடியும் ? குயில் சப்தத்திற்கு இணையான குழலின் நாதத்தை பாடல் முழுவதும் இழையோடவிட்டு இசைக்கப்பட்ட பாட்டு !  குயில் என்ற வார்த்தை பாடலில் இருந்தாலே புல்லாங்குழல் இசைப்பது எல்லா இசையமைப்பாளருக்கும் மரபே! இளையராஜா அதை கனக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார் .


                             ' சின்னக்கண்ணன் அழைக்கிறான் ' ....ஆகா என்ன ஒரு ஆனந்தமயமான பாடல் ! இசைப்பண்டிதர்  பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் தேமதுரக் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலைக் கேட்டால் மனசு எங்கோ பறக்கும் . பெண் குரலிலும் அதே பாடல் பாடப்பட்டிருந்தாலும் பாலமுரளி அவர்களின்  குரலில் அந்தப் பாடலுக்கு தனி மகத்துவம் இருக்கும். இரு ஆண்டுகளுக்கு முன்பு   'என்றென்றும் ராஜா ' என்ற தலைப்பில்  இளையராஜாவின் இசைக்கச்சேரி ஆர்ப்பாட்டமாக நடந்தது . ஜெயா  டிவியில் ஒளிபரப்பப்பட்டது .


                நாதகலாஜோதி பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்க இளையராஜா அன்னாரைப் பார்த்து , 'அண்ணா ...மேடைக்கு வர்றேளா ' என்று பவ்வியமாக அழைத்தார் . நிகழ்ச்சி வழிநடத்தும் பிரகாஷ்ராஜ் பெரியவரை அழைத்து வந்தார் .  ' உங்களுக்காகவே இந்தப் பாடலை அண்ணா பாடணும்னு சொல்லி நான்  கேட்டப்போ ...' என்று கூடியிருந்த மக்களைப் பார்த்துப்  பேசிய இளையராஜா சற்று நிறுத்தியவுடன் மக்களின் ஆரவாரம்.  '.....நான் கேட்டப்போ ...என்ன பாடல் பாடப் போகிறார் என்று உங்களுக்கு நல்லா தெரியும் . நான் சொல்ல வேண்டியதில்லை . அவரை நான் அழைத்தேன் . ஏனா நான் இளையராஜா சின்ன கண்ணன் ...' என்று தொடர்ந்து பேசி அவருக்கு முன்னால் தனது  சங்கீத ஞானம் குறைவு என்பதை பணிந்து ஏற்றுக்கொண்டார் .


                      தொடர்ந்து ' பாலமுரளி கிருஷ்ணா என்றாலும் சின்னக் கண்ணன் என்றுதான் அர்த்தம் ' என்று இளையராஜா முடிக்க பாலமுரளி அவர்கள் ' புதுமை, இனிமை, இளமைக்கு ராஜா ..இளையராஜா ...ராஜா பாட வரச் சொன்னப்போ எனக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது . பெரியவா பாடுற மேடையில எப்படி நான் பாடுறதுனு ...  சரி ஏதோ சின்னக் கண்ணன்தானே பாடலாம் '  என்று அவர் பதிலுக்கு சொல்லும்போதே பாட்டிற்கான இசை ஆரம்பித்தது . அற்புதமாக பாடல் சென்றது . அவரும்  அற்புதமாக பாடினார் . பின்னணி இசை துளியும் மாறவில்லை .  பொதுவாக இசை மேடைகளில் துல்லியம் காட்டுவது அரிதான ஒன்று. இளையராஜா perfectionist என்பதை அங்கும் நிரூபித்தார். இசைக் கருவிகள் அச்சுப் பிசகாமல் வாசிக்கப்பட்டன .
                                                   

                                                 



                                       
                     

                               இளையராஜா யாரையும் மதிப்பதில்லை . தலைக்கணம் பிடித்தவர். கர்வம் கொண்டவர் என்று சிலருடைய தவறான எண்ணங்களுக்குச் சாட்டையடி கொடுக்கக்கூடியதாயிருந்தது அந்த சந்திப்பு.  இளையராஜா எப்போதும் தன்னுடைய இசை முன்னோர்களை பெருமிதமாகவும் மரியாதையாகவும் வியந்துமே பேசுவார் .  சமீபத்தில் எம்.எஸ்.வி பற்றிச் சொல்ல வரும்போது , 'அவர் துப்பிய எச்சில் எங்களுக்கு சாப்பாடு  ' என்று அவர் இசை கேட்டு வளர்ந்து, அவர் பாதையில் இசைக்க ஆரம்பித்து , அவரிசையை  அகத்தூண்டலாகக்  கொண்டு தனித்துவம் அடைந்ததை பூடகமாகச் சொன்னவர் இளையராஜா . தன் முன்னோர்களை மதிக்கத் தெரிந்தவர் .


                            இளையராஜா என்ற இசைக் கலைஞனின் பாதிப்பு தாக்கம் எந்த அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையில்  புகுந்திருக்கிறது  , அவருடைய இசை எப்படி காற்றோடு காற்றாக கலந்திருக்கிறது , வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் சந்திக்கும் சம்பவங்களோடு எப்படிப் பின்னியிருக்கிறது என்பதை கீழே உள்ள கானொளியில் காணுங்கள்.




                             


               எப்போதோ  எங்கோ யாருக்கோ கொடுத்த பேட்டியில் தான் செய்த சாதனையை சுட்டிக் காட்டி  'என்னைப் போல் முடியுமா? ' என்று அவர் சவாலுக்கு விடுத்ததை  'தலைக்கணம் ' என்றால் இருந்துவிட்டு போகட்டுமே !
தவறென்ன இருக்கிறது? பதிலுக்கு யாரும் 'முடியும்' என்று சொல்ல முடியவில்லை. இல்லாதவரே  இருப்பது போல் ஆடுகிறார்.  இருப்பவர் இருப்பதைச் சுட்டிக் காட்டக் கூடாதா ? இளையராஜாவை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காமல் போனவர்கள் சொன்ன கர்வம், திமிர் , செருக்கு என்பதெல்லாம் எல்லா மனிதருக்குள்ளும் உண்டு.  சாதித்தவருக்கு அது கலைச்செருக்கு.  திறமையுள்ளோருக்கு  அழகு  அவர்களின்  ஞானச்செருக்கு !


                      இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே பயணிக்கும் சிந்தனையில் மீண்டும் 77 க்கு வந்தால் காயத்ரி என்றொரு திரைப்படம் .
 சுஜாதாவின் குரலில் ஒரு பாடல் . ' காலைப் பனியில்  ஆடும் மலர்கள் ' கேட்க இனிமையான பாடல் . பால்ய காலத்தில் நான் கூர்ந்து நோக்காத பாடல்களின் வரிசையில் இதைச் சேர்க்கலாம் . நான் கவனித்திருக்காவிட்டாலும் சிலோன்வானொலி நல்ல பாடல் எதையும் ஒதுக்குவதேயில்லை.  இளையராஜாவின் கானங்கள் காற்றில் கலந்து கொண்டுதான் இருந்தன. 

               
                                         



                       அதே வருடத்தில் மற்ற படங்களில் வந்த பாடல்கள் பெரிதான வரவேற்பைப் பெறவில்லை . அந்தப் படங்களின் பாடல்களை இணையத்தின் உதவியுடன் கேட்டுப் பார்த்தபோது இளையராஜாவின் கைவண்ணம் தெரிந்தாலும் மனம் கவராத சில பாடல்கள் இருந்தன. அவற்றை மக்கள் ஏற்காததால்  ' அத்திப்பூ'  வரிசையில் இடம் பெற்றன. சிலோன் ரேடியோவில்    ' அத்திப்பூ'   என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  சிறிதும் பிரபலம் அடையாத பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும் . அதிலும் சில பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் ஏன் அந்தக்  கதிக்கு ஆளாயின என்பது புதிர் !   


.............................தொடர்வேன் ......................................






Tuesday, 28 October 2014

இசை ராட்சஷன் - 3

                                     

                            இசை ராட்சஷன்  -  3


                                    (The Musical Legend )

 அன்னக்கிளி ,பத்ரகாளி படத்திற்குப்  பிறகு   பாலூட்டி வளர்த்த கிளி  படம் வந்ததாக ஞாபகம் .  அந்தப் படத்திலும்  ' கொல கொலயா  முந்திரிக்கா ' என்ற பாடலே மனசுக்குள் நுழைந்தது . சின்ன வயசுதானே ! ஜாலியான பாட்டுக்களாய் இருந்தால் எனக்கும் ஜாலிதான் ! அந்த வயதிற்கு சோகப் பாட்டுக்களே எனக்குப் பிடிக்காது . சினிமாவில் சோகக் காட்சிகள் சோகப் பாடல்கள் பார்த்து அழுகை அழுகையாக வரும். அதுவும் சிவாஜி கணேசன் படம் என்றால் சொல்லவே வேண்டாம் . நான்தான் சிறு பையன் அழுகை வருகிறதாக்கும் என நினைத்து அருகில் அமர்ந்திருக்கும்  பெருசுகளை திரை வெளிச்சத்தில்  பார்த்தால் அவர்களும்  அழுவதைப் பார்க்கும்போது வியப்பாக  இருக்கும்.  சிவாஜி எல்லோரையும் அழ வைத்து விடுகிறாரே . அவர் மகா கலைஞன் என்று  நினைத்திருக்கிறேன் . நான் அவருக்கும் ரசிகனானேன் . அவருடைய படங்களை நான் விரும்பி பார்க்கவும் ஆரம்பித்தேன் . அதைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம் .
                                  


                        நன்றாக ஞாபகம் இருக்கிறது .   ' கொல கொலயா  முந்திரிக்கா ' என்று பாடிக் கொண்டே   பால்ய பருவத்தில் விளையாடும்போது சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து வட்டமாக அமர ஒருவர் மட்டும் சுற்றிச் சுற்றி ஓடி வந்து  யாராவது  ஒருவரிடம் துணி ஒன்றைப் போட்டுவிட்டு ஓட வேண்டும் . துணியை எவன் பெற்றானோ அவன் எடுத்துக் கொண்டு ஓடுபவனை விரட்டிப் பிடித்தால் அவன் அவுட் ! விரட்டுபவனின் காலி இடத்தில் வந்து அமர்ந்துவிட்டால் அவுட் இல்லை .  அப்போதெல்லாம் சிறுமிகளும் எங்களோடு சேர்ந்து விளையாடுவார்கள் .  கொஞ்ச காலம்தான் . பிறகு காணாமல் போய் விடுவார்கள் .  என்ன ஆச்சு என்று புரியாமல் அவர்கள் வீடு தேடிச் சென்று அழைப்போம் . அம்மாக்கள் எங்களை விரட்டி விடுவார்கள்.  என் மகளுக்கும் அதே கதி . மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே பையன்களோடு சேர்ந்து விளையாடாதே என்று என் மனைவி அவளை அறிவுறுத்துவதைப்  பார்த்தேன் . என்னுடைய பரிந்துரை எதுவும்  எடுபடவில்லை . என் மகள் அவள் வழிக்கு வந்துவிட்டாள். நம் சமூகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது! ஹூ...ம்!


                     இளையராஜா பாட்டு வெளி வரும் முன்பே அதே பாட்டைப்  பாடி விளையாடி இருக்கிறோம் . ஆனால் இளையராஜா இசைத்தது போல இல்லாமல் ஏறக்குறைய அதே ராகத்தோடு  இருந்த மாதிரி ஞாபகம் இருக்கிறது. மக்களிடமிருந்து கேட்ட  மக்களால் பாடப்பட்ட பாட்டுக்களைதானே ஆரம்பத்தில் இளையராஜா இசைத்தார். அதுவும் சொற்ப  படங்களில் மட்டுமே! அதனால்தான் சில பத்திரிக்கைகள் அவரை மோசமாக விமர்சனம் செய்தன . குத்துப் பாட்டுக்கும் கிராமியப்  பாட்டுக்கும் மட்டுமே அவர் லாயக்கு என கேலி பேசின. காலம் செல்லச் செல்ல எடுத்தாரே ஒரு விஸ்வரூபம் ! இன்றுவரை அது எழும்பித்தான் நிற்கிறது .


                              நான்கு வருடங்கள் கழித்தே ' நான் பேச வந்தேன் ' என்ற பாட்டை விரும்பிக் கேட்டேன் . அற்புதமான பாடல் . மனதை மயக்கும் மாய வித்தை பாடலில் ஒளிந்திருந்ததை உணர்ந்தேன் . சிலோன் வானொலி இல்லாமல் போயிருந்தால் இந்த இசை தொலைந்து போயிருக்குமோ என்னவோ!? இல்லையில்லை . விளக்கை குடத்திற்குள் மறைத்து குப்புறக் கவிழ்த்தாலும் ஒளிக் கதிர் விளிம்பின் வழியே கசிந்து வளைந்து வெளியே வரத்தான் செய்யும் . சிலோன் வானொலி இல்லை என்ற நிலை வந்திருந்தால் வேறு வழிகள் பிறந்திருக்கலாம் . ஆனால் வேறு வழியே இல்லை. நம்ம ஊரு வானொலிகள் பாட்டு போடும் நேரம் மிகக் குறைவு . ஒரு நாளில் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அவ்வளவுதான் . அந்த நேரத்தில் நாம் வானொலி அருகே இருந்தால்தான் போச்சு . ஆனால் சிலோன் வானொலி நம்மை ஏமாற்றவில்லை . எப்போதும் பாட்டுக்கள் உள்ள வேறு வேறு நிகழ்ச்சிகள்  ஒலி  பரப்பிக் கொண்டே இருப்பார்கள். வானொலியோடு சேர்ந்து பாடிக்கொண்டே திரிவோமே! ஐய்யகோ நமது பிள்ளைகள் இழந்துவிட்டார்களே!  காலம் பதில் சொல்லும் . இலங்கை திரும்ப இறைஞ்சிக் கொண்டிருக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் அந்தத் தமிழர்களுக்காக நாமும் இறைவனிடம் இறைஞ்சுவோம் . மீண்டும் அந்த " வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி " என்றொலிக்கும் கவர்ச்சிக் குரலை மீண்டும் கேட்போம் .
FM ரேடியோ வடிவில் மீண்டும் உயிர் பெறட்டும் .
                   
                           நான் பேச வந்தேன் பாடல் எப்படி இசைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு நண்பர்  அழகாகவும் அனுபவப்பூர்வமாகவும்  விளக்கிக் கொடுத்திருக்கிறார் . கீழே உள்ள link பார்த்துவிட்டுத் தொடருங்கள் .



                            இன்னொருவரின் பார்வையில் இளையராஜாவின் பாடல் எவ்வளவு அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது  என்பதை பாருங்கள். இவரைப் போல பல லட்சம் ரசிகர்கள் இன்னும் இளையராஜாவின் பாடல்களை உருகி உருகி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்  .


                           உறவாடும் நெஞ்சம் படப் பாடல் அப்போது என் செவிகளில் விழவில்லை . 'ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் ' என்றொலிக்கும் பாடலை அப்போது சரியாக கேட்டிருக்காவிட்டாலும் பின்னொரு நாள் வானொலியில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் . எம்.எஸ்.வி பாடல்களின் சாயல் அதில் தெரியும் . பின்னணி இசையில் வித்தியாசம் கண்டு பிடித்து விடலாம் . என்ன இருந்தாலும் அவரிடமிருந்து வந்தவர்தானே ! நல்ல ஒரு மெலடி .


                                 1977 வது வருடத்திற்குள் வந்த இளையராஜாவின் இசை சிறிது சிறிதாக சிகரம் தொடும் முயற்சிக்குப் போய்க் கொண்டிருந்ததை நான் உணர்ந்திருக்காவிட்டாலும்  காலம் பலருக்கு உணர்த்தியது . அவர் இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.
                         
                           -- ஆளுக்கொரு ஆசை
                           -- அவர் எனக்கே சொந்தம்
                           -- புவனா ஒரு கேள்விக் குறி
                           --  தீபம்
                           --  துர்கா தேவி
                           -- காயத்ரி
                           -- கவிக் குயில்
                           -- பெண் ஜென்மம்
                           -- சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
                           -- துணையிருப்பாள் மீனாட்சி
                           -- பதினாறு வயதினிலே

இத்தனைப் படங்கள் வந்தாலும் என் அம்மாவோடு  சேர்ந்து நான் பார்த்த படங்கள் இரண்டு . புவனா ஒரு கேள்விக் குறி , பதினாறு வயதினிலே . இந்த  இரண்டு படத்தையும் தியேட்டரில் பார்த்தபோது படத்தை விட பாட்டுக்கள் என்னை அதிகமாய் ஈர்த்தன . 'ராஜா என்பார் மந்திரி என்பார்' என்ற பாடலில் உள்ள சோகம் சுகமானதாய் முதன் முறையாக எனக்குத் தோன்றியது . ஏனென்றால் அதுவரை சோகப் பாடல்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்தேன் . எம். எஸ்.வி. இசையமைத்த சோகப் பாடல்களும் ஆரம்பத்தில் பிடிக்காமல்தான் இருந்தது . போக போகத்தான் அவையெல்லாம் சுகமான ராகங்கள் என்ற உண்மை புலப்பட்டது. போலவே  இளையராஜாவின் சோகப் பாடல்கள் வரிசையில் அந்தப் பாடலை இன்னும் மறக்க முடியவில்லை.  அம்மாவோடு சேர்ந்து பார்த்த பாடல் காட்சியும் இசையும் இன்னும் என் நெஞ்சில் அறைவது போன்ற உணர்வு இப்போது நினைத்தாலும் இருக்கும். அம்மா மறைந்துவிட்டாலும் அந்த கணங்கள் இன்னும் மறையவில்லை. அந்தப் பாடலும் மறையவில்லை. எப்போதெல்லாம் நான் அதைக் கேட்கும்படி ஒலிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் என் அம்மாவும் உயிர்த்தெழுகிறார்கள்.
                             
                                     



                         
                                  அதே படத்தில் ' விழியிலே மலர்ந்தது ' என்ற பாடலும் அற்புதமான ஒன்று. அந்த சமயத்தில் பாடல் மட்டுமே மனதில் நிரம்பும் . பின்னணி இசை பற்றி யோசிப்பதில்லை. வருடங்கள் கடந்து மீண்டும் அந்தப் பாட்டைக் கேட்டபோதும்  பாடலோடு இழையோடி வரும் வயலின் இசையின் செழுமையை கூர்ந்து கவனித்தபோதும் இளையராஜா என் மனதில் உயர்ந்து நின்றதை   சொல்லாமல் எப்படிக்  கடப்பது!? எஸ்.பி.பி யின் கொஞ்சலான குரலில் மீண்டும் கெஞ்ச வைக்கும் பாடல் அல்லவா! எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.
 
 
                                   

சும்மா ... பாடிப் பார்த்தேன் . பாட்டு வரிகளில் எல்லாம் அந்த வயதில் ஞானம் ஏதுமில்லை. அழகான ராகத்தில் இசைக்கப்பட்ட இளையராஜாவின் பாடல்கள் மட்டுமல்ல  மற்றவர் பாடல்களும் கேட்க பிடித்தது. இளையராஜா பாட்டுக்கள் கூடுதலாக கேட்கப் பிடித்தது. ஆனால் நான் இன்னும் எம்.எஸ்.வி யின் ரசிகனாகத்தான் இருந்தேன் . அவரை விட்டுவிட மனசு தயாராகவில்லை .


                        அதே படத்தில் ' பூந்தென்றலே ' என்ற அழகான இன்னொரு பாடலும் உண்டு . அந்த நேரத்தில் மனதில் பதியவில்லை . எதிர்காலத்தில்
  கேட்டு ரசித்தேன் .

                                   காலம் அப்படியே ஓடிக் கொண்டிருந்த காலத்தில்தான் ' பதினாறு வயதினிலே ' படம் வந்தது. பல பாடல்கள் இருந்தாலும் படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே  'செந்தூரப் பூவே ' என்ற பாடல் என்னை அதிகம் பிரமிக்க வைத்தது . என்ன ஒரு அற்புதமான பாடல் ! கேட்ட மாத்திரத்தில் மலைத்துப் போனேன் . இசை மனிதனுக்குள் என்ன செய்துவிட முடியும் என்ற ஞானமெல்லாம் இல்லாத வயதில் ஏதோ எனக்குள் செய்ததை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை . பித்துப் பிடிக்க வைத்த  பாடல் . இப்போது அந்தப் பாட்டை நான் கேட்டாலும் அந்தப் பிராயத்து நினைவுகளும் கனவுகளும் கிராமத்துப் பொழுதுகளும் கடகடவென மனதுக்குள் கடந்து போகும். ஸ்ரீதேவி  மட்டுமல்ல நானும் ஊஞ்சலாடுவேன் . அருமையான composition . ஆனந்த மயமான ஒரு பாடல்...சுகந்தமணம் கமழும் சோலைக்குள் புகுந்த மாதிரி நம்மை தாக்கும் ஒரு பாடல். அந்தச் சிறுவயதிலும் சில ஹார்மோன்களை விழிக்க வைத்த பாடல் . அந்தப் பாடலுக்காக ஜானகி அவர்கள் தேசிய விருது பெற்றார்கள் என்ற செய்தி தாமதமாக தெரிந்தது. இளையராஜா மனசுக்குள் ஏறி அமர்ந்தார் . ஆனால்  எம்.எஸ். வி இன்னும் வெளியேறவில்லை . நான் வெளியேற்றவுமில்லை  .




                                 மற்ற பாடல்கள் எல்லாம் கிராமத்து வாசனை கொண்ட  வித்தியாசமான பாடல்களாக இருந்தன. ' சோளம் வெதைக்கயிலே ' என்ற இளையராஜா பாடிய முதல் பாடல் ஆரம்பத்தில் மலேசியா வாசுதேவன் குரல் போலவே ஒலித்தது. கூர்ந்து கேட்டபோது வித்தியாசம் தெரிந்தது . எஸ். பி.பி அவர்கள் பாடவேண்டிய பாடல்கள் எல்லாம் மலேசியா வாசுதேவனுக்கு வாய்ப்பாக அமைந்தது என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன் . இளையராஜாவின் குரல் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை . நண்பர்களோடு சேர்ந்து அதை விமர்சனம் செய்தேன் . போகப் போகத்தான் அவர் குரலிலும் ஈர்ப்பு ஏற்பட்டது . சில பாடல்கள் அவர் குரலுக்கு மட்டுமே பொருந்தும் . படத்தின் அந்த டைட்டில் பாடல் கிராமத்துப் பின்னணியை அப்பட்டமாக காட்டியிருக்கும் . இப்போது ஒலித்தாலும் நான் சுற்றித் திரிந்த கிராமம் என் கண்ணுக்குள் வந்து நிற்கிறது . படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருந்தது . பாட்டுக்கள் எல்லாம் படு ஹிட் !

                       
                                    ' செவ்வந்தி பூ முடித்த',  'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' என்ற மற்ற இரண்டு பாடல்களும் பசங்களோடு சேர்ந்து ஆட்டம் போட வைத்த  பாட்டுக்கள் . இரண்டாவது பாட்டின்  கடைசியில் கழுதையை கத்த விட்டு முடித்திருப்பார்கள் . அந்த நேரத்தில்  சிலர்  அதை குறையாக கூறினார்கள் .  ஆனால் எனக்கு ஆச்சரியம். ' நீ பாடினால் கழுதை கத்தும் ' என்று பொதுவாக கிண்டல் செய்து பேசுவதை   பாட்டிலேயே இளையராஜா கொண்டு வந்து விட்டாரே ! கழுதையின் சப்தம் மட்டுமா ...இயற்கையின் ஒலி , குயில்களின் கூவல் , நீரோடும் சலசலப்பு , காற்றின் பேரோசை , அலைகளின் பேரிரைச்சல் , தவளையின் கத்தல் , குருவிகளின் கொஞ்சல் , குலவையிடும் பெண்கள் என்று இன்னும் நான் சொல்ல மறந்த வித்தியாசமான ஒலிகளையெல்லாம் இசையோடு இசையாக பாட்டோடு பாட்டாக கொடுத்தவர்தானே இளையராஜா! இதையெல்லாம் புகுத்தியதால் அவர் இசை என்றுமே தரமிழந்து போனதில்லை . புதுமை இசை நாயகனாக உருமாறினார். கதைப்பின்னணிக்காக  கழுதையை  கத்தவைத்து  பாட்டமைத்ததை  குறையாகக்  காட்டி பதிவு எழுதுபவர்களும்  இருக்கிறார்கள் .  ஆனால் அந்தப் பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதே ! மறக்க முடியுமா ...இல்லை ..மறைக்க முடியுமா!? கழுதையின் சப்தத்தையும் இசையாக மாற்ற இளையராஜவிற்கு தெரிந்திருக்கிறதே என்ற மாற்றுச் சிந்தனைக்கு பலரைப் போல நானும் மாறினேன் . 

                       
                     பதினாறு வயதினிலே படத்தின் ஒலிச்சித்திரத்தை எல்லா இடங்களிலும் ஒலிக்கச் செய்தார்கள். படம் நன்றாக ஓடினால் ஒலிச்சித்திரமும்  உருவாகிவிடும் . வசனங்கள் கேட்டுக்  கேட்டு  அலுத்துப் போயின.  பாடல்கள் அலுக்கவேயில்லை. இன்றும் பசுமையாகத்தான் உள்ளன. படத்தில் வரும் பின்னணி இசையை ஒலிச்சித்திரத்தால் கூர்ந்து கேட்கும் சூழல் அப்போது உருவானது . ஷெனாய் ஒலியை படம் முழுக்க நிறைத்திருப்பார். இப்போது அந்தப் படத்தை நினைத்தாலும் நெஞ்சுக்குள் நீங்காதஅந்த ஷெனாய்ஒலிகேட்டுக்கொண்டேஇருக்கிறது.  இளையராஜாவின் பின்னணி இசை மீது ஈர்ப்பு அதிகமானது. சோக காட்சிகள் காட்டப்படும்போதேல்லாம் ஷெனாய் ஒலி இழையோடுவதை படம் முழுவதும் கேட்டு   ரசிக்கலாம் . பாரதிராஜா படம் என்றாலே இளையராஜா ரசித்து ரசித்து இசைப்பதை அவருடைய எல்லாப் படங்களிலும் பார்க்கலாம் . 


             
..........................தொடர்வேன்...............................................

   
                           



Thursday, 9 October 2014

இசை ராட்சஷன்- 2






                                        இசை ராட்சஷன்- 2

                                                    (The Musical Legend )



                         பட்டி தொட்டிஎங்கும் பாடல்கள் பரபரத்தன. காற்றில் கலகலத்தன. செல்லுமிடமெல்லாம் அன்னக்கிளி பாடல்கள். யார் இந்த இளையராஜா ?
எம்.எஸ்.வி யை விட சிறந்தவரா என்ன? ஒரு படம் அல்லது இரண்டு படத்தோடு இவர் காணாமல் போய் விடுவார் .  (இன்று ஆயிரம் படங்கள் முடித்திருப்பார்  என்று அப்போது தெரிந்திருக்க ஞாயமில்லை. )  எம்.எஸ்.வி முன்னாள் இவர் நிற்க முடியுமா ? இது போன்று நானாகவே கேள்வியும் பதிலும் மனதுக்குள் போட்டுக் கொண்டேன் . நண்பர்களோடும் சேர்ந்து விமர்சனம் செய்தேன் . எம்.எஸ்.வி இசை அமைக்காத பாடலை ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புக்கொள்ளவில்லை . ஆனாலும் அன்னக்கிளி  பாடல்கள் என்னைக் கவர்ந்தன . வேண்டா வெறுப்பாய்  கேட்பதாக நண்பர்கள் முன் பாசாங்கு செய்து கொண்டு விரும்பித்தான்  கேட்டுக் கொண்டிருந்தேன்.
                       
                           பக்கத்துக்கு வீட்டுத் தாத்தா ஒருவர் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். நான் வழக்கம் போல ஒரு எம்.ஜி.ஆர் பாடல் பாடினேன் .  ' அன்னக்கிளி ஒன்ன தேடுதே பாடுடா ' என்றார். எனக்கு இரு வரிகளே தெரியும். அதை மனனம் செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததில்லை . நான்தான்
எம்.எஸ்.வி ரசிகனாச்சே ! எப்படி அடுத்தவர் பாடலை பாடுவது என்ற இறுமாப்பு ...ஈகோ ! பாருங்கள் சின்ன வயசிலேயே நம்மை எப்படி கெடுத்து வைத்திருக்கிறது இந்த சமூகம் !?  'எனக்கு அந்தப் பாட்டு தெரியாது தாத்தா '
என்றேன் .  'அடப் போடா ! ஊரே அந்தப் பாட்டதான் பாடுது . பாட்டுப் பாடுறவன் நீ தெரிஞ்சிருக்க  வேண்டாமா?' என்று தாத்தா சொன்னது எனக்கு அவமானமாகப் பட்டது .


                            அதற்குப் பிறகுதான் அன்னக்கிளி பாடல்கள் முழுவதையும் கவனிக்க ஆரம்பித்தேன் . பாடல்களை மனனம் செய்தேன் .பாடச் சொல்லிக் கேட்கும் இடங்களில் எல்லாம் பாட ஆரம்பித்தேன் .' மச்சானைப் பாத்தீங்களா ' மக்களின் மனசுக்குள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் பாடும்போது அவர்களின் முகம் பிரகாசமடைவதைக் கொண்டு என்னால் உணர முடிந்தது . ஆனாலும் மனதுக்குள் இளையராஜாவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . இந்தப் பாட்டை எம்.எஸ்.வி தானே  போட்டிருக்க வேண்டும் . யார் அது இளையராஜா?எப்படி அவர் இதற்கு இசை அமைக்கலாம் ? இது போன்ற கேள்விகள் எல்லாம் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தன . நண்பர்களிடமும் விவாதம் வேறு!  ஆனால் அவரைப் பற்றி ஒரு துரும்பும் தெரியாது. பேப்பர் படிக்கும் வயசும் இல்லை .

                                அப்போதெல்லாம் நினைத்தவுடன் நமக்குப் பிடித்த பாடல்களை உடனே கேட்டுவிட முடியாது . காத்திருக்க வேண்டும் . எங்காவது எப்போதாவது வானொலியிலோ இசைத்தட்டு ஒலிக்கப்படும் இடத்திலோ இசைக்கப்படும்போதுதான் கேட்க முடியும் . ரெகார்ட் பிளேயர் உள்ள வீடுகள் அபூர்வம் .'வடிவேலு'  மாதிரி  யாராவது 'துபாய்' போய்விட்டு வந்தவர் வீட்டில் கேட்கலாம் . ' அவனுக்கென்னையா  வெளிநாட்டுக் காசு ...கூந்தல் இருக்கு அள்ளி முடியிறான் ' என்று பெரிசுகள் பேசுவது புரியாது என்றாலும் ஏதோ ஒரு பொறாமை ஒளிந்திருக்கிறது என்பது அச்சிறுவயதிலும் புரிந்தது .  எனக்கு அதுவா முக்கியம்?  பாட்டு கேட்க வேண்டும். எங்கு கேட்கலாம்  ?  போகிற போக்கில் எங்காவது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தால் நின்று  விடுவேன் . முழுப் பாடலும் முடியும்வரை அப்படி நின்று கேட்டுவிட்டுப் போன காலங்கள் இனிமையானவை . இப்போது எந்தப் பாட்டையும் எப்போதும் கேட்கலாம் . உள்ளங்கையில் உலகம் ஸ்மார்ட் போன் என்ற பெயரில் இருக்கிறது . ஆனால் உட்கார்ந்து கேட்கத்தான் நேரமில்லை . ஒரு பழமொழி சொல்வார்களே ...நாய்க்கு நிக்கவும் நேரமில்லை , நக்கவும் ...மன்னிக்கணும் நடக்கவும் நேரமில்லை என்று! அது போல காலத்தின் கோலம் பொதுவானதுதான் போலிருக்கிறது . நண்பர்களைக் கேட்டால் அவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். நேரமில்லை.. நேரமில்லை .

                               உலகம் உருள என் இசைத் தாகமும் வளர்ந்து கொண்டே சென்றது . இளையராஜா பற்றிய எந்த செய்தியும் எனக்கு அப்போது தெரியாது. பத்திரிக்கைகள் அப்போது டீக்கடையில்தான் வாசிக்க முடியும் . டீக்கடைப் பக்கம் ஒதுங்காத வயசு . இளையராஜா பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்த வண்ணம் இருந்ததும் தெரியாது . அவர் யாராய்  இருந்தால் என்ன? நமக்கு எம்.எஸ்.வி தான் . அவரை 'அடிச்சிக்க' ஆள் இல்லை என்று நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

                             ' லாலி லாலி லாலோ' என்று ஜானகி அவர்களின் ஹம்மிங் ஒலிக்க ஆரம்பித்தாலே ஏதோ இனம் புரியாத சந்தோஷ பிரவாகம் உள்ளுக்குள் சுரக்க ஆரம்பித்தது . 'அன்னக்கிளி உன்னத் தேடுதே ' என்று பாட்டு வரிகள் ஆரம்பித்ததும் மனசுக்குள் ஏதோ ஒன்று விழித்துக் கொள்வதை  உணர்ந்தாலும் எம்.எஸ்.வி இசை அமைக்காத பாடலை ரொம்பவும் நேசித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் . ' சுத்தச் சம்பா பச்ச நெல்லு ' பாட்டில் வரும் சப்தங்களும் கிராமிய மணம்  கமழ்ந்ததாகவே இருந்தது . அந்த நேரத்திற்கு  அந்த சப்தங்கள் எனக்கு  புதுமையாய் இருந்தது. அதுவரை கேட்காத ஒலி , கேட்காத இசைக் கருவிகளின் நாதம், லயம் எல்லாமே வித்தியாசமாய் இருந்ததை ரசித்தேன். ஆனால் ரசிக்கவில்லை. இல்லை அது போல காட்டிக் கொண்டேன் .







                             கிராமத்தில் அன்னக்கிளி பாடல்கள் அனைத்தும் அதிகமாய் கொண்டாடப்பட்டன .  " அன்னக்கிளி உன்ன தேடுதே பாட்டு மாதிரியே நிறைய பாட்டுகளை வயலில் வேலை செய்யிறவங்க பாடி நாங்க கேட்டிருக்கோம் . கூத்துக் கட்டுறவங்களும் பாடுவாங்க . என்ன...கூத்துல ஆர்மோனிய பொட்டி மட்டும் கூட வரும் . இவரு நிறைய வாத்தியங்கள் சேர்த்து அழகாக்கி இருக்காரு ...இந்த பாட்டக் கேட்டா சின்ன வயசு ஞாபகம் வருது " என்று என் தந்தையார் அன்று கூறிய வார்த்தைகள் இப்போதும் என் நினைவில் வலம் வரும் .  அவ்வப்போது அந்த பாட்டை அவர் லேசாக முனகிப் பாடுவதை கேட்டிருக்கிறேன். அந்தப் பாட்டு தாத்தாவிற்கும் பிடித்தது , அப்பாவிற்கும் பிடித்தது , எனக்கும் பிடித்தது , எல்லோருக்கும் பிடித்தது .

                              அன்னக்கிளி படத்திற்கான முதல் பாடல் பதிவு செய்ய ஒலிப்பதிவுக் கூடத்தில் இசைக் கலைஞர்களும் ஜானகியும் காத்திருக்க இளையராஜா டைமிங் கொடுத்து ஆரம்பிக்கும்போது மின்சாரம் தடைப்பட்டது என்று பின்னாளில் நான் தெரிந்து கொண்டேன் .  எல்லோரும் அந்த கணத்தை அபச குணமாக நினைத்தார்கள் . இளையராஜாவின் காதுபடவே குறை சொன்னார்கள். அத்தோடு அவருக்கு முடிந்து போனது என எல்லோரும் நினைக்க கால தேவன் வேறு மாதிரி கணக்குப் போடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . இசை உலகின் மணி மகுடத்தில் ஒரு வைரக் கல்லாக ஜொலிக்கப் போகிறார் என்று யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை .


                                சிறு வயதில் இசை அனுபவம் என்பது ஏதோ 'பிடிக்கிறது ' என்ற வகையில்தான் சொல்ல முடியுமே ஒழிய பெரியவர்களைப்  போல் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு பெரிதாக சிலாகித்துச் சொல்லும் அளவிற்கு இல்லை . இப்போதும் அந்தப் பாடல்களை கேட்கிறேன். மனம் விழிக்கிறது . நினைவலைகள் துளிர்க்கிறது . இதயத்தின் அறைகள் திறக்கிறது . இன்பத்தை நிறைக்கிறது .  இசை அனுபவம் அன்று போல் இன்று இல்லை . ஆழமும் அகலமும் அதிகரித்திருக்கின்றது.  அன்று ரசித்த இளையராஜாவை இன்றும் ரசிக்கின்றேன் கூடுதலாக! ஆரம்பித்து நாற்பது வருடங்களைத்  தொடப் போகிறது . இப்போதும் அவர் இசைத்த அந்தப் பாடல்கள்  அதே புத்துணர்வுடன் இருக்கின்றன  .

                                 அன்னக்கிளி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த போதே அடுத்த பாடல் ஒன்றை நான் கேட்க நேர்ந்தது.   ' கேட்டேளா அங்கே அதைப் பார்த்தேளா இங்கே ' என்ற ஊரெங்கும் தூள் கிளப்பிய பாடல் . குத்துப் பாடல்தான் என்றாலும் தாரை தப்பட்டைகள் கிழிய அடிக்கப்பட்ட பாடல் . அந்த நேரத்தில் படம் பெயர் தெரியாது . சின்னஞ்சிறு பசங்களோடு ஆட்டம் போடுவோம் . இந்தப்  பாடல் மச்சானைப் பாத்தீங்களாவை விட அதிகம் ஆட்டம் போட வைத்த பாட்டு . அண்ணன்மார்களிடம் என்ன படம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன் . பத்ரகாளி இசை இளையராஜா என்றார்கள் . எனக்கு ஏமாற்றம் . எம்.எஸ்.வி. என்று சொல்ல மாட்டார்களா என ஏங்கினேன். இளையராஜாவை மனசு இன்னும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.   வறட்டுப்  பிடிவாதம். ஆனாலும் பாடலை ரசிக்கிறேன் . அதே படத்தில் வரும் ' கண்ணன் ஒரு கைக்குழந்தை ' என்ற பாடலை கேட்கவே இல்லை . ஆட்டம் போடும் பாடல்கள்தான் திருவிழா காலங்களில் அதிகமிருக்கும் . மெலடி பாடல்கள் போட ஆரம்பித்தால் பசங்கள் களைந்து விடுவார்கள். நானும் காது கொடுத்துக் கேட்பதில்லை . ஆட்டம் போடும் வயது  . அதற்கேற்ற பாடல்கள் வந்தால் உற்சாகம் பிறந்து விடும் .



                                கேட்டேளா பாடலில் கடைசியாக வரும்  வசனத்தை பசங்கள் எல்லோரும் சேர்ந்து சத்தமாக சொல்லுவோம் . சொல்லிவிட்டு ஆனந்தமாய் சிரிப்போம் . பெருசுகள் திட்டுவார்கள் .  'குழாய்ச் சத்தத்துக்கு மேல கத்துறானுகப்பா... இதெல்லாம் பாட்டுன்னு போடுறாணுக பாரு'  என்று பெருசுகளின் அங்கலாய்ப்பை நாங்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதே கிடையாது .   இப்போதும் அந்த கணங்களை நினைத்தால் ஆனந்தம்தான்! 'கண்ணன் ஒரு கைக்குழந்தை ' என்ற பாடல் போகப் போகத்தான் ஈர்த்தது. கண்ணன் என்ற குழந்தைக்கு தாலாட்டு பாடுவார்கள் போலிருக்கிறது என்று நானாக கற்பனை செய்து கொண்டேன் . படம் பார்த்த பிறகு விபரம் புரிந்தது. அன்று அவ்வளவாக புரியாத பாடல் திருமணத்திற்குப்  பிறகு மனைவியோடு சேர்ந்து அமர்ந்து டிவியில் பார்த்தபோது கண்ணில் நீர் துளிர்க்கச் செய்தது . ' ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா '  என்று ஜேசுதாஸ் தன் காந்தர்வக் குரலில் பாடும்போது கண்ணில் துளிர்த்த அந்த நீர்  தாஸின் குரலாலா ....பாட்டு வரிகளாலா ...இளையராஜாவின் இசையாலா ?  வரிகளை சாதாரணமாகச் சொல்லிப் பார்த்தேன்  . அதில் லயிப்பு இல்லை . வேறு ராகத்தில் பாடிப் பார்த்தால் ஈர்ப்பு இல்லை . தாஸ் பாடிய மற்ற பாடலை கேட்டுப் பார்த்த போதும் கவரவில்லை. ஆக இளையராஜாவின் இசைக்குத்தான் அந்த மகிமை உள்ளது என்பதை நான் வளர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன் .
                   
                              அது அவரது இரண்டாவது படப்பாடலா இல்லை அதற்கு முன்னர் வேறு படங்கள் வந்திருக்கிறதா என்பதை ஆராயும் வயது இல்லை . பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தால் என் காதுக்கும் எட்டும் . நானும் ரசிப்பேன் .
பசங்களோட சேர்ந்து ஆட்டம் போடுவேன் . பசுமரத்தாணி போல மனதில்  பதிந்து கிடக்கும் நாட்கள் அவை . மறக்கக் கூடியவையா? இருந்தபோதிலும் இன்னும் இளையராஜாவை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அந்தக் கால கட்டத்தில் வந்த எம்.எஸ்.வி. யின் பாடல்களை கவனித்துக் கேட்டாலும் ரசித்தாலும்  இளையராஜாவின் பாடல்கள் சொல்லாமல் கொள்ளாமல் மனக் கதவினைத் திறந்து உள்ளே நுழைந்தன ... ஆட்டுவித்தன.

                   அந்த வருடம் 1976 ல் இளையராஜா இசைத்தத் திரைப்படங்கள்


                                       - அன்னக்கிளி
                                       -  பத்ரகாளி
                                       -  பாலூட்டி வளர்த்த கிளி
                                       -  உறவாடும் நெஞ்சம்





...........................தொடர்வேன் ..........................................











Wednesday, 1 October 2014

இசை ராட்சஷன் - I

                          இசை ராட்சஷன் - I    
                         
                                              ( The Musical Legend ) 


 அது ஒரு அழகிய கிராமம் . சிறு வயதில் தொடக்கப்பள்ளி படிப்பை அங்கே தொடர வேண்டிய சூழல் . குளங்களும் கண்மாய்களும் சுற்றிலும் நிறைந்து காணப்படும் ஊர்.  தெருவில் வசிக்கும் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து கொண்டு கோலி ,கில்லி ,பட்டம் , பம்பரம் ,பாண்டி என்று பல விளையாட்டுக்களை விளையாடியது இன்றும் பசுமையான நினைவுகளைத் தரும் . நண்பர்களோடு சேர்ந்து கொண்டு குளங்களில் குளிக்கச் செல்வதும்  புளியம்பழம் பொறுக்குவதும் 'டயர் வண்டி' 'நொங்கு வண்டி' ஓட்டிக்  கொண்டு  அலைவதுமாய் துள்ளித் திரிந்த காலங்கள் அவை.

                           பக்கத்து  ஊரில் ஒரு சினிமா கொட்டகை.  வாடகைக்கு சைக்கிள்  எடுத்துக் கொண்டு ஆள் மாற்றி ஆள் மிதித்துக் கொண்டு ஓட்டிச் செல்வோம் . என் சினிமா உலக அறிமுகம் அங்கேதான் உருவானது திரைப் படங்களில் வரும் காட்சிகளை விட திரைப்பாடல்கள் மனதை ஆக்ரமித்தன. வாரம் ஒரு சினிமா வீதம் பழைய படங்கள் புது படங்கள் என்று அடிக்கடி பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். சினிமாக்கள் நிறைய கற்றுக் கொடுத்தன ...நல்லது ...கெட்டது ...  அனைத்துமே! 

                           சினிமா பாடல்கள் நிறைய கேட்கக்  கேட்க  கேள்வி ஞானத்தால் இசை ஞானம் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது . படம்  பார்த்து  விட்டு வந்த அடுத்த நாளிலிருந்து மனதுக்குப் பிடித்த பாடல் ரீங்காரமிட ஆரம்பித்தது பல்லவியாவது மனப்பாடம் ஆகிவிடும். எனக்குக் கொஞ்சம் பாட வரும் என்பதால் அந்தப் பாட்டுக்களை எல்லாம் பாடிக் கொண்டே விளையாடுவதும் சைக்கிள் ஒட்டுவதுமாக பொழுதுகளைக் கழித்துக்  கொண்டிருந்தேன்.

                           பள்ளிக்கூடம் படித்த காலத்தில் பாட்டுப் போட்டி என்றால் முதல் ஆளாக எழுந்து நிற்பேன் .  அந்த சமயத்தில் நாளை நமதே என்ற படம் வெளியாகி இருந்தது .  அதில் ' அன்பு மலர்களே ' என  எஸ். பி . பி  ஆரம்பிக்கும்  பாடல் மிகவும் பிரபலம் அடைந்திருந்தது . எல்லா போட்டிகளிலும் அதே பாடலைப் பாடி பரிசு வாங்கி விடுவேன் .

                            ஒரு சமயம் டீச்சருக்கு எரிச்சல் வந்துவிட்டது . ' வேற பாட்டை பாடுடா ' என்றார்கள் . மற்ற பாட்டுக்கள் மனப்பாடமாய் தெரியாது . சில பாடல்களுக்கு பல்லவி மட்டும்  தெரியும். ' டீச்சர் நாலு வரி தெரியும் ' என்பேன் . ' பாடித் தொலை ...அதே பாட்டையே எத்தனை தடவைதான் பாடுவாய் '  என்று முனகுவார்கள் . அப்போதும் நான் பாடுவது ஒரு எம். ஜி. ஆர் பாட்டாகத்தான்      இருக்கும். எம். ஜி. ஆர் படங்கள் என்றால் நிச்சயம் பாடல்கள் ஹிட் . ஹிட் ஆகாத படங்களே இல்லை. பல்லாண்டு வாழ்க படத்தில் ' அன்பெல்லாம் தமக்குரியர் ' எனத் தொடங்கும் பாடலை பாடுவேன் . நாலு வரிக்கு மேல் தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பேன் . ' முழுசா பாட கற்றுக் கொள்  ' என்பார் டீச்சர் . எங்கே போய்  கற்றுக் கொள்வது ? வீட்டில் அப்போது ரேடியோ பெட்டி ஏதும் இல்லை .

                                 பக்கத்து வீட்டு வானொலி இசைக்கும்போதேல்லாம் என் வீட்டு வாசலில் அமர்ந்து காது  கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பேன் . கேட்டு கேட்டு பாடல்கள் மனப்பாடம் செய்த காலங்கள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது .  ஏதேனும் விஷேசம் என்றால் அடிக்கடி  'குழாய் ' கட்டி பாடல்கள் போடுவார்கள். சோறு தண்ணி மறந்து பாட்டுக்களுக்கு அடிமையாகத் திரிந்த காலங்கள் நினைத்தால் இப்போதும் பசுமையே!  பசி வரும்போது வீடு தேடும்.  அம்மா என்னை தேடவும்  அலட்டிக் கொள்ளவும்  மாட்டார்கள்.  இருப்பதே நாலு தெரு . அதற்குள்தான் நான்  வலம் வருவேன் என்று அம்மாவிற்கு தெரியும் . ' குதிரைக்கு ........காய்ந்தால் கொள்ளு திங்கும் ' என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள் .  இப்போது பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் 'டார்ச்சர்'  போல அந்த காலத்து பெற்றோர் கொடுத்ததில்லை . அப்படி ஒரு  தனிமனித சுதந்திரத்தை அனுபவித்த நான் என் பிள்ளைகளுக்கு அதை கொடுப்பதில்லை என்பது எனக்கே தெரிகிறது. வேறுவழி....? சமூக வழக்கங்கள் மாறிவிட்டன. கோலி,பம்பரம்,பாண்டி போன்ற விளையாட்டுகள் வழக்கொழிந்து கொண்டே வருகின்றன.

                 தெருச் சிறார்களின் நட்பு என்பது அரிதான ஒன்றாகி வருகிறது. அவசர கதியில் பிள்ளைகளின் வாழ்க்கை. பள்ளியில் பாடம் முடிந்து கூடுதல் வகுப்பு வேறு!  ஆட்டோவில்  பயணம். பயணக் களைப்பு தெளிவதற்குள் டியுஷன் அது இல்லாத நாட்களில் வேறு ஏதாவது கற்றுக்கொள்ளும் பயிற்சி, வீட்டுப்பாடம் ...படிப்பு....கொஞ்சம் டிவி ... சாப்பாடு.. தூக்கம்... தூங்கி எழுந்தால் ஓட ஆரம்பிக்கவேண்டும் மீண்டும்! பாவம் குழந்தைகள். படுத்திக்கொண்டிருக்கிறோம்  நாம் எல்லோரும். எதிர்காலத்தை வளமாக்க நினைத்து அவர்களின் நிகழ் காலத்தை நரகமாக்கிகொண்டிருக்கிறோம்.

           என் சிறு வயது பிராயத்தில் நான் பள்ளியில் படித்த போது பாடங்களை எல்லாம் விழுந்து விழுந்து படித்ததாக ஞாபகம் இல்லை. பாடம் படித்த நாட்களும் ஞாபகத்தில் இல்லை. பாட்டுக்கள் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும் திரிந்த நாட்கள்தான் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இசையுலகம் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது.



                 அப்போது மெல்லிசை மன்னரின் பாடல்கள் என்றால் கொள்ளைப்பிரியம். கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்களை வழங்குவதில் அவருக்கு யாரும் நிகரேயில்லை. "பாடல்கள் எட்டு அத்தனையும் தேன் சொட்டு" என்று ஏதாவது ஒரு படத்திற்கு விளம்பரம் கொடுப்பார்கள். உடனே படம் பார்க்க ஓடுவேன். மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் என்று பெயர் போடும் போது எல்லோரோடும் சேர்ந்து நானும் கைதட்டுவேன். அந்த டைட்டில் கார்டு வரும்போது இசையமைப்பே வித்தியாசமாக மாறும்.எல்லா இசை கருவிகளையும் ஒரு சேர இசைப்பது போன்ற ஒலி உச்சத்தில் ஒலிக்கும்.  இனம் புரியா படபடப்பும் பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். டைட்டில் இசையையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். இசை அமைப்பாளர் என்றால் எம் எஸ் விதான் வேறு யாருமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த காலமது.மற்ற இசை அமைப்பாளர்களைப் பற்றி  எதுவும் தெரியாது. யார் இசை அமைத்தாலும் அது எம் எஸ் விதான் என்று நினைத்தேன். முகம் தெரியாத அவரின் தீவிர ரசிகனாக மாறினேன்.

              கோவில் திருவிழாக்கள் வருடத்திற்கு மூன்று தடவை வெவ்வேறு இடங்களில் நடக்கும். மூன்று நாட்களுக்கு திரைப்பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆனந்த மயமான அந்த நாட்களில் பாடல்கள் ஒலிக்கும் போதே நானும் நண்பர்களும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்  அங்குதான் அலைவோம். போவோர் வருவோர் யாவரும் எங்களை சட்டை செய்வதில்லை.

            அப்படி ஒரு கோவில் திருவிழாவின் போதுதான் அந்தப் பாட்டைக் கேட்டேன். வித்தியாசமான பாட்டு. கேட்டவுடன் மனதுக்குப் பிடித்துப்போகும் பாட்டு. ஆட்டம் போடவைக்கும் பாட்டு. சும்மாவே ஆடிக்கொண்டிருந்த எனக்கும் நண்பர்களுக்கும் சொல்லவா வேண்டும்? பாடல் முடிந்த பின்னரும் மீண்டும் போடச் சொல்லி ஒலிப்பரப்பாளரிடம் கேட்போம்.எங்களுக்காக மீண்டும் போடுவார் . என்ன ஒரு கொண்டாட்டமான பாடல்! தாளம், மெட்டு,  ராகம் எல்லாமே வித்தியாசமாக இருந்தது. எந்த படத்தில் இந்தப் பாடல்? யார் இசை?யார் பாடியது? போன்ற கேள்விகள் அப்போது எனக்கு கேட்க தோன்றவேயில்லை. நிச்சயம் எம் எஸ் வியின் பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் புதியவர் ஒருவர் இசை அமைத்த பாடல் என்பது தாமதமாகத்தான் தெரிய வந்தது.



             பாடல்: மச்சானைப் பாத்தீங்களா?

             படம்:  அன்னக்கிளி.

             பாடியவர்: ஜானகி

              இசை: இளையராஜா.



..........................தொடர்வேன்...........................