Tuesday, 8 September 2015

இசை ராட்சஷன் - 12 ( The Musical Legend )




                                          இசைஞானியின் புதுமைகள்

                                               
                                                   
                                       


*  ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ , அழகான லொகேஷன்களோ  வார அல்லது மாதக்கணக்கில்  நேரமோ இளையராஜாவிற்குத் தேவைப்பட்டதில்லை . ' தென்றல் வந்து தீண்டும்போது '
என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்!

*   இளையராஜா வெறும் அரை நாளில் மொத்த ரீரெக்கார்டிங்கையும் செய்து முடித்த படம் ' நூறாவது நாள்,

*   சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரெக்கார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம் . மூன்றே நாளில் ஐந்து இசைக் கலைஞர்களைக் கொண்டு அந்தப் படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது.

*  எல்லோரும் பாடலுக்கான இசையை ஒரு கருவி மூலம் வாசித்துத்தான் காட்டுவார்கள்.  ஆனால் ராஜா மட்டும்தான் பாடலுக்கான இசையை 'பக்கா' நோட்ஸ் எடுத்து இசைக்கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

*   அமிர்தவர்ஷிணி என்ற மழையை வரவழைக்கும் ராகத்தை ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில், ' தூங்காத விழிகள் ரெண்டு ' என்ற பாடல் மூலம்  இசைத்து,  மழையை வரவழைத்தவர்  இசைஞானி.

*   பாடலின் மெட்டும் அதற்கான  100 %  இசைக்கோர்ப்பையும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் முழுமை , ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய்  கையாளும் பாங்கு, இசை ஆளுமை எல்லாமே மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

*   இசைஞானிதான் முதல்முறையாக ரீதிகௌளை  என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார். ' கவிக்குயில் ' படத்தில் '  சின்னக் கண்ணன்  அழைக்கிறான் '  என்ற பாடல்தான் அது!

*   சர்வதேச இசை நுட்பமான  counterpoint  யுக்தியை  முதன் முதலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்  இளையராஜாதான் . உதாரணத்திற்கு பல பாடல்கள் இருந்தாலும் ' சிட்டுக் குருவி  ' படத்தில் ' என் கண்மணி ' என்ற பாடலைச் சொல்லலாம் . வேறு இந்திய இசையமைப்பாளர்கள்  அதற்கு முன்னர் அதை பயன்படுத்தியதில்லை .


*    இந்தியத் திரையிசையில் ' காயத்ரி ' என்ற படத்தில் முதன் முதலாக ராஜா ' ' எலெக்ட்ரிக் பியானோ ' உபயோகப்படுத்தினார்.


*    செஞ்சுருட்டி ராகத்தில் ராஜா இசையமைத்த ஒரே பாடல் ' பதினாறு வயதினிலே '  படத்தில் ' ஆட்டுக் குட்டி முட்டையிட்டு ' என்ற பாடல் .

*  உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் செய்து பார்த்திராத பரீட்சார்த்தமான விஷயம் என்னவெனில்,  வேறு இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து படமாக்கப்பட்ட பாடலின் சவுண்ட் ட்ராக்கை நீக்கிவிட்டு , உதடசைவு , உடலசைவு , காட்சி தேவை அனைத்துக்கும் பொருத்தமான புதிய இசையை உருவாக்கி  அதை வெற்றிக்கனியாக்கி , எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியவர்  இசைஞானி . படம் ' ஹே ராம் ' .

*   முன்பெல்லாம் பின்னணி இசைக்கோர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனர்கள்   இசையமைப்பாளரிடம் வந்தமர்ந்து அந்தப் படத்தில் உள்ளது போல போடுங்கள் , இந்தப் படத்தில் வந்தது போல போடுங்கள் என்று  ஆலோசனை சொல்வார்கள் .  இளையராஜா ஒரு ரீலை திரையில் பார்த்ததும் உடனே இசைக் குறிப்புகளை எழுதி இசையமைத்துக் கொடுப்பார் . பெரும்பாலும் மறுப்பதற்கான வாய்ப்பே இயக்குனருக்கு இருக்காது.

*  ஆசியாவிலேயே  முதன்முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி அவர்களே! சிம்பொனி கம்போஸ் செய்ய குறைந்தது ஆறு மாதமாவது ஆகும் . ஆனால் வெறும் 13 நாட்களில் கம்போஸ் செய்து மற்ற கம்போசர்களை மிரள வைத்தவர் இசைஞானி.

*  குரல் சரியில்லாதபோது  ' காதலின்  தீபம் ஒன்று ' என்ற தம்பிக்கு எந்த ஊரு படப் பாடலை விசிலாலேயே டியூன் அமைத்து  பதிவு செய்து  பின்பு பாடகரை பாட வைத்தார்.

*   படத்தின் கதையை கேட்காமல் சூழ்நிலைகளை மட்டுமே கேட்டு இசையமைத்த படம்  ' கரகாட்டக்காரன் ' .

*  வசனமே  இல்லாத காட்சியில் இசையாலும் பாட்டாலும் அவ்விடத்தை நிரப்பி பார்வையாளரை ரசிக்க வைப்பதில் ராஜா கிரேட் . இரு பாத்திரப் படைப்புகளின் மௌனத்தின் மன உணர்வுகளை பார்வையாளருக்கு தன்  இசையால் புரிய வைத்துவிடுவதில் அற்புத ஆற்றல் கொண்டவர் இளையராஜா . கடலோரக் கவிதைகள் படத்தில் '  தாஸ் தாஸ் ...சின்னப்ப தாஸ் தாஸ் '  ,  ஹே ராம் படத்தில் ' இசையில் தொடங்குதம்மா'  போன்ற பாடல்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.

                                                     
   

*    ரீரெக்கார்டிங் செய்வதற்கு முன்னர் ஒரு முறை அல்லது  இரு முறை படத்தை போட்டு பார்த்துவிட்டு , மூன்றாம் முறை திரைப்படம் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிப்பார் . கடைசிக் காட்சி வரை எழுதியதை எல்லோரும் சேர்ந்து இசைத்துப் பார்த்தால் மிகச் சரியாக எல்லா இடங்களிலும் இசை கனக்கச்சிதமாய்  பொருந்தும்படி இருக்கும் .  அந்த அளவிற்கு எந்த இசையமைப்பாளரும் நோட்ஸ் எழுதிவிட முடியாது.

*  இந்தியாவிலேயே பின்னணி இசையை முழு கேசட்டில் பதிவு செய்யப்பட்டு வெளி வந்து ஹிட்டான  படம் இளையராஜாவின் இசையில் வந்த ' பிள்ளை நிலா' .

*   நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் ' பருவமே ... புதிய பாடல் பாடு ' என்ற பாட்டுக்கு ஓடும் மனிதர் இருவரின் காலடிச் சத்தத்திற்கு தாளத்திற்கு தகுந்தபடி தொடைகளைத் தட்டி ஒலி  எழுப்பி  புதிய  பரிமாணம் தந்தவர் இளையராஜா .

*  இந்தியாவில் முதன்முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருதை வாங்கியவர் இளையராஜா. படம் ' பழசி ராஜா ' .


*    முதன் முறையாக படத்தின் பாடல்களை ஸ்டீரியோ ஒலிப்பதிவு  முறையில் பதிவு செய்த படம் ' ப்ரியா '.

*  137  இசைக்கருவிகள் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடல் தளபதி படத்தில் ' சுந்தரி கண்ணால் ஒரு சேதி  ' .


*  இசைஞானி இசையமைத்த  பாடல்களை வாங்கி ,  அதன் பிறகு கதை எழுதி படமாக்கிய இரண்டு  ஹிட் படங்கள்  ' வைதேகி காத்திருந்தாள் ',  'அரண்மனைக் கிளி ' .

* இந்தியாவில் முதன்முறையாக கம்பியூட்டர் பயன்படுத்தி இசையமைத்தவர் ராஜா. படம் ' புன்னகை மன்னன் '.


* ' பஞ்சமுகி ' என்றொரு புதிய ராகம் கண்டறிந்து கொடுத்தவர் ராகதேவன் .  ஆனால் இதுவரை அந்த ராகத்தில் அவர் சினிமா பாடல் இசைத்ததில்லை. ரகசியமாக வைத்துள்ளார்.

*     பொதுவாக ஒரு படத்திற்கான இசைகோர்ப்பினை  இரண்டு அல்லது மூன்று நாளில் முடிப்பவர் ராஜா. ஆனால் அதிகபட்சமாக 24  நாட்கள் பின்னணி இசைக்காக அவர் எடுத்துக் கொண்ட படம் ' காலாபாணி  ' ( தமிழில் '  ' சிறைச்சாலை '  )


* ஆரம்பத்தில் கிடார், தபேலா கலைஞர்களுடன்  ஆர்மோனியம் கொண்டு  பாடலுக்கு  டியூன் போட்டவர் காலப் போக்கில்  கண்களை மூடி சிந்தனை செய்து  கற்பனையில் இசை வடிவங்களை செதுக்க ஆரம்பித்துவிட்டார் . கற்பனா சக்தியிலேயே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விட்டார் . ஆர்மோனியம் கூட இல்லாமல் இசைக் குறிப்பு எழுதும் இந்த இசை ஆற்றல் இளையராஜாவைத் தவிர இந்திய இசையமைப்பாளர்கள் யாரிடமும் இல்லை.


*  இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்ல , நல்ல கவிஞரும் கூட! காவியக் கவிஞர்  வாலி  அவர்களுக்கே வெண்பா காற்றுக் கொடுத்தவர் இளையராஜா . அந்த விசயத்தில் ராஜா தனக்கு குரு என்று வாலி அவர்களே அவரை புகழ்ந்திருக்கிறார்.


Success  in  life  depends upon  two important  things 

Vision seeing the invisible   &    Mission  doing  the impossible 


     இளையராஜாவின் இசை தரும் பிரமிப்புகளை பார்க்கும்போது மேற்சொன்ன வாக்கியம்  அவர்  அடைந்த  வெற்றிக்கு பொருத்தமாய் அமைகிறது.  இசையில் யாராலும் காணாததை கண்டவர் , யாராலும் முடியாததைச் செய்தவர்.

                இதுபோல இன்னும் பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம் ஒரு பதிவிலேயே எல்லாவற்றையும் அடக்கி விட முடியாது.  நீண்டு கொண்டே செல்லும்  அவருடைய சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல . அத்தகைய சாதனைகளை அடைவதற்கு அவர் உழைத்ததும் கொஞ்சமல்ல; ஓடியதும் தேடியதும் கொஞ்சமல்ல.  இசையை தன் உணவாய்  உயிராய்  மூச்சாய் மாற்றிக் கொண்டார்.  அதனால்தான் இசையுலகில் ஒரு உன்னத நிலையை அடைந்தார்.

                மீண்டும் 1979 க்கு வந்தோமென்றால் ' அன்னை ஒர்  ஆலயம்  ' என்றொரு மாபெரும் வெற்றிப் படம் கண் முன் தெரிகிறது.  சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பில்  வெளி வந்து நூறு நாட்களையும் தாண்டி ஓடிய படம் .  ரஜினியின் திரைப் பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் சொல்லலாம்.


              அந்தப் படத்தின் அபார வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் .  யானை வரும் முன்னே மணியோசை வருகிறதோ இல்லையோ இளையராஜாவின் ஒரு இசைத் துணுக்கு ஒன்று ஒலிப்பது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.  டிரம்பெட் ஒலியுடன் அந்த இசைத் துணுக்கு டைட்டில் இசைக்கப்படும்போதே ஆரம்பிக்கும் . யானை காட்டப்படும்போதெல்லாம்
அந்த துள்ளலான டிரம்பெட்  இசை திரைப்படம் பார்ப்போர் அனைவரையும் தாளமிட வைத்ததை கண்டிருக்கிறேன் .  நான் எவ்வளவு குதூகலத்துடன் பார்த்தேனோ அதே உற்சாகம் இப்போது பார்க்கும் குழந்தைகளிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.


                  தேவர் அவர்கள் விலங்குகளை கொண்டு படம் எடுப்பதில் வல்லவர். அதனால் விலங்குகளை வைத்து அவர் எடுத்த எந்த படமும் தோல்வி அடைந்ததில்லை.  " குழந்தைகளுக்கு பிடிச்சதே விலங்குகள்தான் . மனுஷங்க மாதிரி அதுங்க என்ன சாகசம் செஞ்சாலும் ஏன் எதுக்குன்னு கேள்விகேட்காம கை தட்டி ரசிப்பாங்க. அந்த ரசனைக்கு தீனி போடணும். குழந்தைகளை குஷிப்படுத்தணும்  " என்பது தேவர் வாக்கு. அவருடைய வெற்றி சூத்திரமும் அதுவே!


                அன்னை ஒர்  ஆலயம் படத்தில்  ஆறு பாடல்கள் .  பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதியுள்ளார்.  அதில்  ' அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே  '  என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் . பிள்ளையார் கோவில் திருவிழாக்களில் பக்தி பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலையும் சேர்த்து விடுவார்கள். மிகவும் துள்ளலான பாடல் . எஸ்.பி. பி  மற்றும் சுசீலா இணைந்து பாடியிருப்பார்கள்.  யார் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டாலும்  மீண்டும் முணுமுணுப்பார்கள் .  அவ்வளவு உற்சாகமான பாடல் .

                 
                     ஒருமுறை என்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவருடன் இந்தப் படத்தைப்  பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தபோது ,  " அந்தக் காலத்தில் இந்தப் படம் பார்த்திருப்பீர்களே !  பாட்டெல்லாம்  எப்படி!? " என்றேன் . " ஆமாமா... இந்தப் படத்தை மறக்க முடியுமா ? இந்தப் படத்தில் ஸ்ரீ ப்ரியாவை பார்த்துதானே நான் வயசுக்கே வந்தேன்  " என்று சிரிக்காமல் சொன்னவரைப் பார்த்து  நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.

                      'அப்பனே  ' பாடல்  முழுவதும் டிரம்பெட் , கிடார் ,  டிரம்ஸ்  அதிகமாய் நிறைக்கும்.   பல்லவியில்  ' பிள்ளையாரப்பனே ' என்று முடிக்கும்போது இடைச்செருகலாக கொடுக்கப்படும் கிடார் ஒலி அப்போதே என்னை அசத்தியது.  பாடல் முழுக்க  மேற்கத்திய இசை பாணியில் அமைந்திருக்கும் . ஒரு யானைக் குட்டியை சமாதானம் செய்ய பாடப்படும் சூழலுக்கு மிகப் பொருத்தமாக இசையை வழங்கியிருப்பார் இளையராஜா . மூன்று சரணம், மூன்று வெவ்வேறு இடையிசை என்று பிரமாதமாக கொடுத்திருப்பார்.

                                               

                      யானைக் குட்டி செய்யும் சேட்டைகளுக்காக  மற்ற குழந்தைகள் படத்திற்கு மீண்டும் மீண்டும் செல்கையில் நான் இளையராஜாவின் இசைக்காகவும்  மீண்டும்  படத்திற்குச் சென்றிருக்கிறேன். இளையராஜாவின் இசை மெருகேருவதையும்  என் மனதிற்குள் ஒரு இசைப் பிரளயத்தை உருவாக்குவதையும் நான் உணர்ந்தேன்.  இந்தப் படம் ஒரு காரணமாய் அமைந்தது.

                      ' அம்மா நீ சுமந்த பிள்ளை ...சிறகொடிந்த கிள்ளை   '  என்ற சாருகேசி  ராகத்தில் அமைந்த   பாடல் அடுத்த பிரபலமான அம்மா பாடல் என்று சொல்லலாம். இளையராஜா அம்மாவிற்காக இசைத்த பாடல்களில் ஒன்று கூட சோடை போனதில்லை .  தாய்ப் பாசத்திற்காக இசைக்கப்பட்ட பாடல்களில் இந்தப் பாடல் குறிப்பிடத் தகுந்த பாடல் .   டி .எம். சௌந்திரராஜன்  தனது கணீர்  குரலில் தாயைப் பிரிந்து தவிக்கும் ஒரு பிள்ளையின்  பிரிவுற்ற  துயர உணர்ச்சிகளை பிழிந்து எடுத்துத் தந்து விடுவார்.  அதற்குக் கொடுக்கப்படும் பின்னணி இசை நமது மனதையும் உருக்கி விடும்.  ' அ..ம்..மா  ' என்று  சப்தமாக கூவியழைக்கும் குரலுக்குப் பின் வழக்கமாக தமிழ்த் திரையில்  காட்டப்படும் இடி , மின்னல், புயல், மழை , பூகம்ப   காட்சிகளுக்கு பின்னணியாக வயலின்களின் பெருத்த ஆரவார இசையைத் தரும் ராஜா ,  எல்லாம் ஓய்ந்த பின் மென்மையாக ஒரு ஒற்றை வயலின் மற்றும் குழல் கொண்டு  கொடுக்கும் இசை ,  புயலுக்குப் பின் அமைதி என்ற வார்த்தைகளின் அர்த்தம் சொல்வது போலவே இருக்கும். இசை கொண்டு பேச முடியுமா என கேட்டால் அங்கு அது  பேசியிருக்கும்  அற்புதத்தை என்னவென்று சொல்வது!
                               
                                             

                             முதல் இடையிசை பரபரப்பாக ஆரம்பித்து மென்மையாக செல்வது காட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும் . சூழலை காட்சியாக கற்பனை செய்து காட்டிவிடுவது  எளிது . அதை இசையாக கற்பனை செய்து கொடுப்பது  கடினமானது.   இளையராஜா அந்தப் பணியை அழகாக செய்து கொடுத்திருப்பார்.  இரண்டாம் இடையிசையில் தன்  தாயை கோவிலில்  நாயகன் சந்தித்ததை  எண்ணி  கலங்குவதாக  காட்டப்படும்போது ராஜா கொடுத்திருக்கும் இசைக்கோர்வை  இன்னும் அழகானது .  கோவில் மணியோசையுடன் குழலும் மிருதங்கமும் இழையோடி வயலினில் கலந்தாடி மொத்தத்தில் இசையில் விளையாடி இருக்கும் விந்தை வியப்புக்குரியது. இசைக்கப்பட்ட பிறகே காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சூழலை மனதில் வாங்கி உணர்வுகளை இசையாக கொடுப்பது ராஜாவிற்கு கை வந்த கலை. அதை செம்மையாக செய்து காட்டுவது மேதமை. காட்சிகளோடு என்னை ஒன்ற வைத்ததில் இசையின் பங்கு முக்கியமானது.     ' அம்மா நீ சுமந்த பிள்ளை ...சிறகொடிந்த கிள்ளை  ' என்ற வார்த்தைகள் அம்மாவை இழந்த எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும் . அம்மாவை நேசிப்பவர்கள் இந்தப் பாடலையும் நிச்சயம் நேசிப்பார்கள்.  இந்தப் பாடலை கேட்க நேரும்போதெல்லாம் மனது சட்டென அமைதியாவதை இப்போதும் உணர முடிகிறது. கண  நேரத்தில் அம்மாவின் முகம் வந்து போகிறது.


                                  அதே படத்தில் ' நதியோரம் ...நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது மெல்ல ' என்ற பாடல் சுத்த தன்யாசி ராகத்தில் அமைக்கப்பட்ட அற்புதமான பாடல் .  எஸ்.பி.பி ,சுசீலா இணைந்து பாடிய சுகமான ராகம் . காதல் பாடல்களில் இருக்கும் சுகானுபவத்தைத் தரும் பாடல். இருவரும் இளமைத் துள்ளலோடு பாடியிருப்பார்கள்.  கேட்கும் நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இரண்டு இடையிசைகளும் மயக்கும் .  இரண்டாவது  சரணத்தில் ' தேயிலைத் தோட்டம் தேவதையாட்டம் ' என்று ஆரம்பிப்பதால் மலைத் தோட்டம் பின்னணியாக காட்டப்படும் . அதற்கேற்றாற்போல் 'லுலுலு ...லுலு ' என்றொலிக்கும்  மலை வாசம் செய்யும் பெண்களின் குரலிசை சேர்த்திருப்பது அற்புதமாக இருக்கும். இரண்டாம்  இடையிசையே   வித்தியாசமான நடையில் ஒலிக்கும் . அது இசைஞானிக்கே உரிய  சிறப்பு. இதுபோன்று  இசையில்  நடை மாறி மீண்டும் பாடலுக்குள் கொண்டு வரும் லாவகத்தை  பல பாடல்களில்  ரசித்திருக்கிறேன்.

                                                 
                                             
                       அதே படத்தில்  ' நந்தவனத்தில் வந்த குயிலே ' என்றொரு உற்சாகப் பாடலும் ' நிலவு நேரம் இரவு காயும்  ' என்ற போதையூட்டும் பாடலும் , 'மலையருவி மணிக்குருவி ' என்ற மலைஜாதிப் பெண்  பாடுவது போன்ற    பரபரப்பான பாடலும் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு தனி ரகம்.


                         அதே ஆண்டில் வந்த இன்னொரு  திரைப்படம் , ' அழகே உன்னை ஆராதிக்கிறேன் ' . திரைப்படம் வந்து சிறிது நாட்கள் கழித்து பலரும் படத்தைப் பற்றியும் பாடல்கள் பற்றியும் பேச ஆரம்பித்த பிறகு நான் திரைப்படம் பார்த்தேன்.  ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் . ஆனால் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது . பாடல்களுக்காக படம் ஓடியது. ஸ்ரீதர் படம் என்றாலே சிறப்பாக பாடல்கள் அமைந்து விடுவது ஸ்ரீதரின் தேர்ந்தெடுக்கும் ரசனையா இல்லையேல் இசை அமைப்பாளாரின் கரிசனையா என்று தெரியவில்லை.  படம் ஓடாவிட்டாலும் பாடல்கள் எல்லாம் படு ஹிட் அடிப்பது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது.  இளையராஜா அந்தப் படத்தில் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.  

                                   '  குறிஞ்சி மலரில் வடிந்த '
                                   '  நானே நானா யாரோதானா '
                                   '  அபிஷேக நேரத்தில்  '
                                   '  என் கல்யாண வைபோகம் '
                                   '   தனிமையில் யாரிவள் '
                                   '  அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் '
                                   '   ஹே ...மஸ்தானா  '

  அந்தப் படத்தில்  மேற்கண்ட அத்தனை பாடல்களையும் எழுதியது வார்த்தைச் சித்தர் வாலி .   '   ஹே ...மஸ்தானா  '  என்ற பாடல் தவிர அத்தனைப் பாடல்களும்  பிரபலமானவை . மஸ்தானா பாடல் வந்த புதிதில் ஒலி  பெருக்கிகளில் அதிகம் பரப்பப்பட்டது.  காலப் போக்கில் அந்தப் பாடல் எங்கும் கேட்கப்படவில்லை. ஆனால் மற்ற பாடல்கள் எல்லாம் இப்போதும் வானொலியில் இசைக்கப்படுகிறது.

                   
                                 
                                                   

                                 
                          ' அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்  ' என்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல் மனதை மென்மையாய் வருடியது .  கிடார் ஒலியுடன் ஆரம்பிக்கும் முன்னிசை மனதை விட்டு அகன்றதேயில்லை . நீண்ட நாட்களாய் அந்த நாதத்தை என் வாயாலேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் .   இப்போது கேட்டாலும் சுவையே !

                 
                              அது ஒரு சிறிய பாடல் என்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய   மெலடி அந்தப் பாட்டில் உண்டு .  தான் நேசிக்கும் பெண்ணை எந்த விதத்திலும் சலனப்படுத்த நினையாத ஒரு ஆண்மகனின் மன நிலையை சுட்டும் பாடலாக இளையராஜா இசையமைத்திருப்பார்.  இடையிசையில் குழலும் விசில் ஒலியும் கலந்து கொடுத்த இசைக் கோர்வை அற்புதமானது.   காதலின் வலியைச் சொல்லும் பாடல் .  அந்த  அனுபவம் கடந்தவர் அப்பாடலை மறக்க இயலாது. 


                             '  நானே நானா யாரோதானா  '  என்ற பாடல் வாணி ஜெயராம் அவர்களின் தெளிவான தேன் குரலில்  கேட்டபோது குரலாலும் இசையாலும் மயங்கினேன் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தையாக இருக்கும். கேட்டபோதெல்லாம் மதி மயங்கி மனம் கனிந்து உடல் கட்டுண்டு கிடந்தேன் . இப்போது கேட்டாலும்  இசை மெல்ல மெல்ல நம்மை பறக்கச் செய்யும்; நம்மையே மறக்கச் செய்யும் . இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களின் பெண் குரலுக்கு வாணி ஒருவரே போதுமென ராஜா ஏன் முடிவெடுத்தார் என்று தெரியாது.  ஆனால் எல்லாப் பாடல்களும் வாணியின் குரலால் மெருகேறின . ராஜாவின் தேர்வு சரியானதாக இருந்தது.


                                  ஹரிகாம்போதி ராகத்தில் இசைக்கப்பட்ட   '  நானே நானா' பாடலில் மதுவின் மயக்கத்தில் ஒரு பெண் பாடுவதாக உள்ள சூழலுக்கு ஏற்றாற்போல்,  முன்னிசை லீட் கிடாருடன் ஆரம்பித்து பேஸ் புல்லாங்குழலின் நாதத்தை கலந்து , மேற்கத்திய பாணியில் பாடல் கொண்டு செல்லப்பட்டிருக்கும் விதம் , அந்தக் காலத்தில் கேட்க மிகவும் புதுமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது.  மெல்லிய சோகம் இழையோட பாடல் இசைக்கப்பட்ட விதம் நம்மை உறுத்தவோ வருத்தவோ செய்யாது. உற்சாகத்தையே கொடுக்கும் .


                                       டிரிப்பில் பாங்கோஸ் , டிரம்ஸ் இரண்டும் கலந்து செல்லும் தாள கதி ரசனையானது.  நானே நானா என்று வாணி அவர்கள் ஆரம்பிக்கும்போது கொடுக்கப்படும்  பாங்கோஸ் ஒலியை  பள்ளிக்கூடத்து  நண்பர்களோடு சேர்ந்து அடிக்கடி வாயாலேயே ஓசை எழுப்பி ரசித்த சம்பவம் பசுமையாய் இன்னும் நெஞ்சினில் நிறைந்திருக்கிறது. பாடலை மட்டுமல்ல முன்னிசை இடையிசையில் வரும் மெல்லிசையைக் கூட  குரலாலேயே இசைத்து மகிழ்வது இன்னும் நினைவிருக்கிறது.
         
                             
                                           


                                இரண்டாம் இடையிசையின் ஆரம்பத்தில் பரபரப்பான வயலின் இசை அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை உணர்த்தும் இசையாக தோன்றும் . அதன் பிறகு கிடாரும் வயலினும் பின்னிப் பின்னி வரும் இசைக்கோர்வை  இளையராஜாவின் கைவண்ணத்தில் செய்யப்பட அழகோவியம் . '  பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு,உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது ' என்ற வரிகள் ரசிக்கத் தகுந்தவை . அதன் பிறகு உச்சஸ்தாயில் வாணி பாடும்போது கூடவே இழைந்து வரும் வயலின் நாதத்தை இன்னும் ரசிக்கலாம் . மொத்தத்தில் ஆறு பாடல்கள் அறுசுவை உணவு என்று சொன்னாலும் ஒவ்வொரு பாடலிலும் அறுசுவை உணவை இளையராஜா கொடுத்திருப்பார்.

                             
                            '  குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை  ' என்ற பாடல் மோகன ராகத்தில் அமைக்கப்பட்ட அழகிய கீதம்.  திரைப்படம் வந்த புதிதில் சிலோன் வானொலியில் ஒளிபரப்பாத நாட்களே  இல்லை என்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமான பாடல். எஸ்.பி.பி யும் வாணியும் காதல் ரசம் சொட்டும்படி அழகாக பாடியிருப்பார்கள்.  குழலின் நாதத்தோடு உற்சாகமாக ஆரம்பித்து கிடார்  சிந்தசைசர்  எல்லாம் கலந்து  தபேலாவுடன் பல்லவி ஆரம்பிக்கும்போதே மனசு இறக்கை கட்டி பறக்கும் .  மூன்று முத்தான சரணங்களுக்கு மூன்று சத்தான இடையிசை கொடுத்த இளையராஜாவின் கற்பனை வளம் அபாரமானது.  வாலியின் வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை ; ராஜாவின்  இசைகோர்வைகளுக்கும் பஞ்சமில்லை . ஒன்றை மிஞ்சும் வண்ணம் இன்னொன்று அமைந்திருக்கும்.

                                                 

                       ' என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்  ' என்ற பாடல் மத்யமாவதி ராகத்தில் வாணி அவர்களின்  தேன் குரலில் அமைந்த மறக்க முடியாத  மென்மையான பாடல்.  அந்தப் பாடல் கேட்க நேரும்போதெல்லாம் வயல்வெளியின் நடுவில்  அமைந்த வீடும் வைகை ஆற்றில் குளித்து மகிழ்ந்த காலங்களும் ஆற்று ஓரத்து நாணல்களும் சோலைகளும் தென்னந்தோப்புகளும் நினைவுக்கடலில் அலைகள்  போல வந்து மோதுவதை தவிர்க்க முடிவதில்லை.  அந்தப் பாடலின் நயமும் லயமும் இசையும் பலமுறை  என்னைக்  கட்டிப் போடும்.  புல்லாங்குழல் வயலின் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பின்னி விளையாடும் . தபேலாவின் வித்தியாசமான நடை ராஜாவிற்கு உரிய டிரேட் மார்க் என்று சொல்லலாம் . சரணத்தை கூர்ந்து கேட்கும்போது தபேலாவின் தனித்துவ நடை பாட்டுக்கு பரதநாட்டியமாடும் .      ' என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்  '  என்று பல்லவி ஆரம்பித்து முதல் வரி முடிக்க என்னென்னவோ இசைக் கருவிகளின் கலவைகளை எல்லாம் இசைக்கச் செய்து எங்கெங்கோ நம்மை கூட்டிச் சென்று மீண்டும் பாடலுக்குக் கொண்டு வரும் சுகம் கேட்ட காலத்திலிருந்து இன்று வரை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

                                               


                          சண்முகப்பிரியா   ராகத்தில்    பாலு      அவர்களின் மன்மதக் குரலில்  அமைந்த  ' அபிஷேக நேரத்தில் '  பிரமாதமான குத்து பாடல். இளைஞர்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. நான் அந்தப் பாடலில் அதிக அக்கறை செலுத்தியதில்லை. ஆனாலும் பாடலை ரசித்திருக்கிறேன் . பரிச்சயம் இல்லாத வித்தியாசமான இசைக் கருவிகளின் ஒலியெல்லாம் அந்தப் பாடலில் கேட்க நேர்ந்தது.   துள்ளலான பாடல்.  குத்துப் பாடல்களை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் நல்ல விருந்தாக அமைந்தது .

                           ' தனிமையில் ....யாரிவள் ' என்றொரு புதுமையான , கேளிக்கை விடுதியில் பாடுவது  போன்றமைந்த , மேற்கத்திய சாயல் கொண்ட பாடல். அப்போது கேட்டபோது அதன் இசையும் தாளமும் என்னை மிரட்டியது. ஹிப்பிஸ் கலாசாரம் அதிகம் பரவியிருந்த காலகட்டத்தை பிரதிலிக்கும் பாடலாக அமைந்திருந்தது. வாணி அவர்கள் அழகாக பாடியிருந்தாலும் முனகல் சத்தங்கள் அவரின் குரல்  போல இல்லை.

                         இந்தப் பாடல்களை துல்லியமாக மீண்டும் கேட்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இரண்டாம் முறை மூன்றாம் முறையெல்லாம் திரைப்படத்திற்குச்  சென்றதுண்டு.  இசையை ரசிக்கும் என்னைப் போன்ற நிறைய ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து  திரைப்படங்களை வாழவைத்துக் கொண்டிருந்தோம் . இளையராஜாவின் இசைக்காகவே சினிமாவுக்கு சென்ற கூட்டம் நிறைய இருந்தது.  ராஜா தன் இசை மூலம் எல்லோரையும் வரவேற்றார்; அழைத்தார்.  ஆனால்  இப்போது இசைக்காக ஒரு திரைப்படத்திற்குச் செல்வோரின் கூட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

...........................தொடர்வேன் ..............................