Tuesday, 8 September 2015

இசை ராட்சஷன் - 12 ( The Musical Legend )




                                          இசைஞானியின் புதுமைகள்

                                               
                                                   
                                       


*  ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ , அழகான லொகேஷன்களோ  வார அல்லது மாதக்கணக்கில்  நேரமோ இளையராஜாவிற்குத் தேவைப்பட்டதில்லை . ' தென்றல் வந்து தீண்டும்போது '
என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்!

*   இளையராஜா வெறும் அரை நாளில் மொத்த ரீரெக்கார்டிங்கையும் செய்து முடித்த படம் ' நூறாவது நாள்,

*   சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரெக்கார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம் . மூன்றே நாளில் ஐந்து இசைக் கலைஞர்களைக் கொண்டு அந்தப் படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது.

*  எல்லோரும் பாடலுக்கான இசையை ஒரு கருவி மூலம் வாசித்துத்தான் காட்டுவார்கள்.  ஆனால் ராஜா மட்டும்தான் பாடலுக்கான இசையை 'பக்கா' நோட்ஸ் எடுத்து இசைக்கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

*   அமிர்தவர்ஷிணி என்ற மழையை வரவழைக்கும் ராகத்தை ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில், ' தூங்காத விழிகள் ரெண்டு ' என்ற பாடல் மூலம்  இசைத்து,  மழையை வரவழைத்தவர்  இசைஞானி.

*   பாடலின் மெட்டும் அதற்கான  100 %  இசைக்கோர்ப்பையும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் முழுமை , ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய்  கையாளும் பாங்கு, இசை ஆளுமை எல்லாமே மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

*   இசைஞானிதான் முதல்முறையாக ரீதிகௌளை  என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார். ' கவிக்குயில் ' படத்தில் '  சின்னக் கண்ணன்  அழைக்கிறான் '  என்ற பாடல்தான் அது!

*   சர்வதேச இசை நுட்பமான  counterpoint  யுக்தியை  முதன் முதலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்  இளையராஜாதான் . உதாரணத்திற்கு பல பாடல்கள் இருந்தாலும் ' சிட்டுக் குருவி  ' படத்தில் ' என் கண்மணி ' என்ற பாடலைச் சொல்லலாம் . வேறு இந்திய இசையமைப்பாளர்கள்  அதற்கு முன்னர் அதை பயன்படுத்தியதில்லை .


*    இந்தியத் திரையிசையில் ' காயத்ரி ' என்ற படத்தில் முதன் முதலாக ராஜா ' ' எலெக்ட்ரிக் பியானோ ' உபயோகப்படுத்தினார்.


*    செஞ்சுருட்டி ராகத்தில் ராஜா இசையமைத்த ஒரே பாடல் ' பதினாறு வயதினிலே '  படத்தில் ' ஆட்டுக் குட்டி முட்டையிட்டு ' என்ற பாடல் .

*  உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் செய்து பார்த்திராத பரீட்சார்த்தமான விஷயம் என்னவெனில்,  வேறு இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து படமாக்கப்பட்ட பாடலின் சவுண்ட் ட்ராக்கை நீக்கிவிட்டு , உதடசைவு , உடலசைவு , காட்சி தேவை அனைத்துக்கும் பொருத்தமான புதிய இசையை உருவாக்கி  அதை வெற்றிக்கனியாக்கி , எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியவர்  இசைஞானி . படம் ' ஹே ராம் ' .

*   முன்பெல்லாம் பின்னணி இசைக்கோர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனர்கள்   இசையமைப்பாளரிடம் வந்தமர்ந்து அந்தப் படத்தில் உள்ளது போல போடுங்கள் , இந்தப் படத்தில் வந்தது போல போடுங்கள் என்று  ஆலோசனை சொல்வார்கள் .  இளையராஜா ஒரு ரீலை திரையில் பார்த்ததும் உடனே இசைக் குறிப்புகளை எழுதி இசையமைத்துக் கொடுப்பார் . பெரும்பாலும் மறுப்பதற்கான வாய்ப்பே இயக்குனருக்கு இருக்காது.

*  ஆசியாவிலேயே  முதன்முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி அவர்களே! சிம்பொனி கம்போஸ் செய்ய குறைந்தது ஆறு மாதமாவது ஆகும் . ஆனால் வெறும் 13 நாட்களில் கம்போஸ் செய்து மற்ற கம்போசர்களை மிரள வைத்தவர் இசைஞானி.

*  குரல் சரியில்லாதபோது  ' காதலின்  தீபம் ஒன்று ' என்ற தம்பிக்கு எந்த ஊரு படப் பாடலை விசிலாலேயே டியூன் அமைத்து  பதிவு செய்து  பின்பு பாடகரை பாட வைத்தார்.

*   படத்தின் கதையை கேட்காமல் சூழ்நிலைகளை மட்டுமே கேட்டு இசையமைத்த படம்  ' கரகாட்டக்காரன் ' .

*  வசனமே  இல்லாத காட்சியில் இசையாலும் பாட்டாலும் அவ்விடத்தை நிரப்பி பார்வையாளரை ரசிக்க வைப்பதில் ராஜா கிரேட் . இரு பாத்திரப் படைப்புகளின் மௌனத்தின் மன உணர்வுகளை பார்வையாளருக்கு தன்  இசையால் புரிய வைத்துவிடுவதில் அற்புத ஆற்றல் கொண்டவர் இளையராஜா . கடலோரக் கவிதைகள் படத்தில் '  தாஸ் தாஸ் ...சின்னப்ப தாஸ் தாஸ் '  ,  ஹே ராம் படத்தில் ' இசையில் தொடங்குதம்மா'  போன்ற பாடல்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.

                                                     
   

*    ரீரெக்கார்டிங் செய்வதற்கு முன்னர் ஒரு முறை அல்லது  இரு முறை படத்தை போட்டு பார்த்துவிட்டு , மூன்றாம் முறை திரைப்படம் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிப்பார் . கடைசிக் காட்சி வரை எழுதியதை எல்லோரும் சேர்ந்து இசைத்துப் பார்த்தால் மிகச் சரியாக எல்லா இடங்களிலும் இசை கனக்கச்சிதமாய்  பொருந்தும்படி இருக்கும் .  அந்த அளவிற்கு எந்த இசையமைப்பாளரும் நோட்ஸ் எழுதிவிட முடியாது.

*  இந்தியாவிலேயே பின்னணி இசையை முழு கேசட்டில் பதிவு செய்யப்பட்டு வெளி வந்து ஹிட்டான  படம் இளையராஜாவின் இசையில் வந்த ' பிள்ளை நிலா' .

*   நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் ' பருவமே ... புதிய பாடல் பாடு ' என்ற பாட்டுக்கு ஓடும் மனிதர் இருவரின் காலடிச் சத்தத்திற்கு தாளத்திற்கு தகுந்தபடி தொடைகளைத் தட்டி ஒலி  எழுப்பி  புதிய  பரிமாணம் தந்தவர் இளையராஜா .

*  இந்தியாவில் முதன்முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருதை வாங்கியவர் இளையராஜா. படம் ' பழசி ராஜா ' .


*    முதன் முறையாக படத்தின் பாடல்களை ஸ்டீரியோ ஒலிப்பதிவு  முறையில் பதிவு செய்த படம் ' ப்ரியா '.

*  137  இசைக்கருவிகள் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடல் தளபதி படத்தில் ' சுந்தரி கண்ணால் ஒரு சேதி  ' .


*  இசைஞானி இசையமைத்த  பாடல்களை வாங்கி ,  அதன் பிறகு கதை எழுதி படமாக்கிய இரண்டு  ஹிட் படங்கள்  ' வைதேகி காத்திருந்தாள் ',  'அரண்மனைக் கிளி ' .

* இந்தியாவில் முதன்முறையாக கம்பியூட்டர் பயன்படுத்தி இசையமைத்தவர் ராஜா. படம் ' புன்னகை மன்னன் '.


* ' பஞ்சமுகி ' என்றொரு புதிய ராகம் கண்டறிந்து கொடுத்தவர் ராகதேவன் .  ஆனால் இதுவரை அந்த ராகத்தில் அவர் சினிமா பாடல் இசைத்ததில்லை. ரகசியமாக வைத்துள்ளார்.

*     பொதுவாக ஒரு படத்திற்கான இசைகோர்ப்பினை  இரண்டு அல்லது மூன்று நாளில் முடிப்பவர் ராஜா. ஆனால் அதிகபட்சமாக 24  நாட்கள் பின்னணி இசைக்காக அவர் எடுத்துக் கொண்ட படம் ' காலாபாணி  ' ( தமிழில் '  ' சிறைச்சாலை '  )


* ஆரம்பத்தில் கிடார், தபேலா கலைஞர்களுடன்  ஆர்மோனியம் கொண்டு  பாடலுக்கு  டியூன் போட்டவர் காலப் போக்கில்  கண்களை மூடி சிந்தனை செய்து  கற்பனையில் இசை வடிவங்களை செதுக்க ஆரம்பித்துவிட்டார் . கற்பனா சக்தியிலேயே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விட்டார் . ஆர்மோனியம் கூட இல்லாமல் இசைக் குறிப்பு எழுதும் இந்த இசை ஆற்றல் இளையராஜாவைத் தவிர இந்திய இசையமைப்பாளர்கள் யாரிடமும் இல்லை.


*  இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்ல , நல்ல கவிஞரும் கூட! காவியக் கவிஞர்  வாலி  அவர்களுக்கே வெண்பா காற்றுக் கொடுத்தவர் இளையராஜா . அந்த விசயத்தில் ராஜா தனக்கு குரு என்று வாலி அவர்களே அவரை புகழ்ந்திருக்கிறார்.


Success  in  life  depends upon  two important  things 

Vision seeing the invisible   &    Mission  doing  the impossible 


     இளையராஜாவின் இசை தரும் பிரமிப்புகளை பார்க்கும்போது மேற்சொன்ன வாக்கியம்  அவர்  அடைந்த  வெற்றிக்கு பொருத்தமாய் அமைகிறது.  இசையில் யாராலும் காணாததை கண்டவர் , யாராலும் முடியாததைச் செய்தவர்.

                இதுபோல இன்னும் பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம் ஒரு பதிவிலேயே எல்லாவற்றையும் அடக்கி விட முடியாது.  நீண்டு கொண்டே செல்லும்  அவருடைய சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல . அத்தகைய சாதனைகளை அடைவதற்கு அவர் உழைத்ததும் கொஞ்சமல்ல; ஓடியதும் தேடியதும் கொஞ்சமல்ல.  இசையை தன் உணவாய்  உயிராய்  மூச்சாய் மாற்றிக் கொண்டார்.  அதனால்தான் இசையுலகில் ஒரு உன்னத நிலையை அடைந்தார்.

                மீண்டும் 1979 க்கு வந்தோமென்றால் ' அன்னை ஒர்  ஆலயம்  ' என்றொரு மாபெரும் வெற்றிப் படம் கண் முன் தெரிகிறது.  சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பில்  வெளி வந்து நூறு நாட்களையும் தாண்டி ஓடிய படம் .  ரஜினியின் திரைப் பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் சொல்லலாம்.


              அந்தப் படத்தின் அபார வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் .  யானை வரும் முன்னே மணியோசை வருகிறதோ இல்லையோ இளையராஜாவின் ஒரு இசைத் துணுக்கு ஒன்று ஒலிப்பது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.  டிரம்பெட் ஒலியுடன் அந்த இசைத் துணுக்கு டைட்டில் இசைக்கப்படும்போதே ஆரம்பிக்கும் . யானை காட்டப்படும்போதெல்லாம்
அந்த துள்ளலான டிரம்பெட்  இசை திரைப்படம் பார்ப்போர் அனைவரையும் தாளமிட வைத்ததை கண்டிருக்கிறேன் .  நான் எவ்வளவு குதூகலத்துடன் பார்த்தேனோ அதே உற்சாகம் இப்போது பார்க்கும் குழந்தைகளிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.


                  தேவர் அவர்கள் விலங்குகளை கொண்டு படம் எடுப்பதில் வல்லவர். அதனால் விலங்குகளை வைத்து அவர் எடுத்த எந்த படமும் தோல்வி அடைந்ததில்லை.  " குழந்தைகளுக்கு பிடிச்சதே விலங்குகள்தான் . மனுஷங்க மாதிரி அதுங்க என்ன சாகசம் செஞ்சாலும் ஏன் எதுக்குன்னு கேள்விகேட்காம கை தட்டி ரசிப்பாங்க. அந்த ரசனைக்கு தீனி போடணும். குழந்தைகளை குஷிப்படுத்தணும்  " என்பது தேவர் வாக்கு. அவருடைய வெற்றி சூத்திரமும் அதுவே!


                அன்னை ஒர்  ஆலயம் படத்தில்  ஆறு பாடல்கள் .  பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதியுள்ளார்.  அதில்  ' அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே  '  என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் . பிள்ளையார் கோவில் திருவிழாக்களில் பக்தி பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலையும் சேர்த்து விடுவார்கள். மிகவும் துள்ளலான பாடல் . எஸ்.பி. பி  மற்றும் சுசீலா இணைந்து பாடியிருப்பார்கள்.  யார் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டாலும்  மீண்டும் முணுமுணுப்பார்கள் .  அவ்வளவு உற்சாகமான பாடல் .

                 
                     ஒருமுறை என்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவருடன் இந்தப் படத்தைப்  பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தபோது ,  " அந்தக் காலத்தில் இந்தப் படம் பார்த்திருப்பீர்களே !  பாட்டெல்லாம்  எப்படி!? " என்றேன் . " ஆமாமா... இந்தப் படத்தை மறக்க முடியுமா ? இந்தப் படத்தில் ஸ்ரீ ப்ரியாவை பார்த்துதானே நான் வயசுக்கே வந்தேன்  " என்று சிரிக்காமல் சொன்னவரைப் பார்த்து  நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.

                      'அப்பனே  ' பாடல்  முழுவதும் டிரம்பெட் , கிடார் ,  டிரம்ஸ்  அதிகமாய் நிறைக்கும்.   பல்லவியில்  ' பிள்ளையாரப்பனே ' என்று முடிக்கும்போது இடைச்செருகலாக கொடுக்கப்படும் கிடார் ஒலி அப்போதே என்னை அசத்தியது.  பாடல் முழுக்க  மேற்கத்திய இசை பாணியில் அமைந்திருக்கும் . ஒரு யானைக் குட்டியை சமாதானம் செய்ய பாடப்படும் சூழலுக்கு மிகப் பொருத்தமாக இசையை வழங்கியிருப்பார் இளையராஜா . மூன்று சரணம், மூன்று வெவ்வேறு இடையிசை என்று பிரமாதமாக கொடுத்திருப்பார்.

                                               

                      யானைக் குட்டி செய்யும் சேட்டைகளுக்காக  மற்ற குழந்தைகள் படத்திற்கு மீண்டும் மீண்டும் செல்கையில் நான் இளையராஜாவின் இசைக்காகவும்  மீண்டும்  படத்திற்குச் சென்றிருக்கிறேன். இளையராஜாவின் இசை மெருகேருவதையும்  என் மனதிற்குள் ஒரு இசைப் பிரளயத்தை உருவாக்குவதையும் நான் உணர்ந்தேன்.  இந்தப் படம் ஒரு காரணமாய் அமைந்தது.

                      ' அம்மா நீ சுமந்த பிள்ளை ...சிறகொடிந்த கிள்ளை   '  என்ற சாருகேசி  ராகத்தில் அமைந்த   பாடல் அடுத்த பிரபலமான அம்மா பாடல் என்று சொல்லலாம். இளையராஜா அம்மாவிற்காக இசைத்த பாடல்களில் ஒன்று கூட சோடை போனதில்லை .  தாய்ப் பாசத்திற்காக இசைக்கப்பட்ட பாடல்களில் இந்தப் பாடல் குறிப்பிடத் தகுந்த பாடல் .   டி .எம். சௌந்திரராஜன்  தனது கணீர்  குரலில் தாயைப் பிரிந்து தவிக்கும் ஒரு பிள்ளையின்  பிரிவுற்ற  துயர உணர்ச்சிகளை பிழிந்து எடுத்துத் தந்து விடுவார்.  அதற்குக் கொடுக்கப்படும் பின்னணி இசை நமது மனதையும் உருக்கி விடும்.  ' அ..ம்..மா  ' என்று  சப்தமாக கூவியழைக்கும் குரலுக்குப் பின் வழக்கமாக தமிழ்த் திரையில்  காட்டப்படும் இடி , மின்னல், புயல், மழை , பூகம்ப   காட்சிகளுக்கு பின்னணியாக வயலின்களின் பெருத்த ஆரவார இசையைத் தரும் ராஜா ,  எல்லாம் ஓய்ந்த பின் மென்மையாக ஒரு ஒற்றை வயலின் மற்றும் குழல் கொண்டு  கொடுக்கும் இசை ,  புயலுக்குப் பின் அமைதி என்ற வார்த்தைகளின் அர்த்தம் சொல்வது போலவே இருக்கும். இசை கொண்டு பேச முடியுமா என கேட்டால் அங்கு அது  பேசியிருக்கும்  அற்புதத்தை என்னவென்று சொல்வது!
                               
                                             

                             முதல் இடையிசை பரபரப்பாக ஆரம்பித்து மென்மையாக செல்வது காட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும் . சூழலை காட்சியாக கற்பனை செய்து காட்டிவிடுவது  எளிது . அதை இசையாக கற்பனை செய்து கொடுப்பது  கடினமானது.   இளையராஜா அந்தப் பணியை அழகாக செய்து கொடுத்திருப்பார்.  இரண்டாம் இடையிசையில் தன்  தாயை கோவிலில்  நாயகன் சந்தித்ததை  எண்ணி  கலங்குவதாக  காட்டப்படும்போது ராஜா கொடுத்திருக்கும் இசைக்கோர்வை  இன்னும் அழகானது .  கோவில் மணியோசையுடன் குழலும் மிருதங்கமும் இழையோடி வயலினில் கலந்தாடி மொத்தத்தில் இசையில் விளையாடி இருக்கும் விந்தை வியப்புக்குரியது. இசைக்கப்பட்ட பிறகே காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சூழலை மனதில் வாங்கி உணர்வுகளை இசையாக கொடுப்பது ராஜாவிற்கு கை வந்த கலை. அதை செம்மையாக செய்து காட்டுவது மேதமை. காட்சிகளோடு என்னை ஒன்ற வைத்ததில் இசையின் பங்கு முக்கியமானது.     ' அம்மா நீ சுமந்த பிள்ளை ...சிறகொடிந்த கிள்ளை  ' என்ற வார்த்தைகள் அம்மாவை இழந்த எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும் . அம்மாவை நேசிப்பவர்கள் இந்தப் பாடலையும் நிச்சயம் நேசிப்பார்கள்.  இந்தப் பாடலை கேட்க நேரும்போதெல்லாம் மனது சட்டென அமைதியாவதை இப்போதும் உணர முடிகிறது. கண  நேரத்தில் அம்மாவின் முகம் வந்து போகிறது.


                                  அதே படத்தில் ' நதியோரம் ...நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது மெல்ல ' என்ற பாடல் சுத்த தன்யாசி ராகத்தில் அமைக்கப்பட்ட அற்புதமான பாடல் .  எஸ்.பி.பி ,சுசீலா இணைந்து பாடிய சுகமான ராகம் . காதல் பாடல்களில் இருக்கும் சுகானுபவத்தைத் தரும் பாடல். இருவரும் இளமைத் துள்ளலோடு பாடியிருப்பார்கள்.  கேட்கும் நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இரண்டு இடையிசைகளும் மயக்கும் .  இரண்டாவது  சரணத்தில் ' தேயிலைத் தோட்டம் தேவதையாட்டம் ' என்று ஆரம்பிப்பதால் மலைத் தோட்டம் பின்னணியாக காட்டப்படும் . அதற்கேற்றாற்போல் 'லுலுலு ...லுலு ' என்றொலிக்கும்  மலை வாசம் செய்யும் பெண்களின் குரலிசை சேர்த்திருப்பது அற்புதமாக இருக்கும். இரண்டாம்  இடையிசையே   வித்தியாசமான நடையில் ஒலிக்கும் . அது இசைஞானிக்கே உரிய  சிறப்பு. இதுபோன்று  இசையில்  நடை மாறி மீண்டும் பாடலுக்குள் கொண்டு வரும் லாவகத்தை  பல பாடல்களில்  ரசித்திருக்கிறேன்.

                                                 
                                             
                       அதே படத்தில்  ' நந்தவனத்தில் வந்த குயிலே ' என்றொரு உற்சாகப் பாடலும் ' நிலவு நேரம் இரவு காயும்  ' என்ற போதையூட்டும் பாடலும் , 'மலையருவி மணிக்குருவி ' என்ற மலைஜாதிப் பெண்  பாடுவது போன்ற    பரபரப்பான பாடலும் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு தனி ரகம்.


                         அதே ஆண்டில் வந்த இன்னொரு  திரைப்படம் , ' அழகே உன்னை ஆராதிக்கிறேன் ' . திரைப்படம் வந்து சிறிது நாட்கள் கழித்து பலரும் படத்தைப் பற்றியும் பாடல்கள் பற்றியும் பேச ஆரம்பித்த பிறகு நான் திரைப்படம் பார்த்தேன்.  ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் . ஆனால் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது . பாடல்களுக்காக படம் ஓடியது. ஸ்ரீதர் படம் என்றாலே சிறப்பாக பாடல்கள் அமைந்து விடுவது ஸ்ரீதரின் தேர்ந்தெடுக்கும் ரசனையா இல்லையேல் இசை அமைப்பாளாரின் கரிசனையா என்று தெரியவில்லை.  படம் ஓடாவிட்டாலும் பாடல்கள் எல்லாம் படு ஹிட் அடிப்பது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது.  இளையராஜா அந்தப் படத்தில் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.  

                                   '  குறிஞ்சி மலரில் வடிந்த '
                                   '  நானே நானா யாரோதானா '
                                   '  அபிஷேக நேரத்தில்  '
                                   '  என் கல்யாண வைபோகம் '
                                   '   தனிமையில் யாரிவள் '
                                   '  அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் '
                                   '   ஹே ...மஸ்தானா  '

  அந்தப் படத்தில்  மேற்கண்ட அத்தனை பாடல்களையும் எழுதியது வார்த்தைச் சித்தர் வாலி .   '   ஹே ...மஸ்தானா  '  என்ற பாடல் தவிர அத்தனைப் பாடல்களும்  பிரபலமானவை . மஸ்தானா பாடல் வந்த புதிதில் ஒலி  பெருக்கிகளில் அதிகம் பரப்பப்பட்டது.  காலப் போக்கில் அந்தப் பாடல் எங்கும் கேட்கப்படவில்லை. ஆனால் மற்ற பாடல்கள் எல்லாம் இப்போதும் வானொலியில் இசைக்கப்படுகிறது.

                   
                                 
                                                   

                                 
                          ' அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்  ' என்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல் மனதை மென்மையாய் வருடியது .  கிடார் ஒலியுடன் ஆரம்பிக்கும் முன்னிசை மனதை விட்டு அகன்றதேயில்லை . நீண்ட நாட்களாய் அந்த நாதத்தை என் வாயாலேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் .   இப்போது கேட்டாலும் சுவையே !

                 
                              அது ஒரு சிறிய பாடல் என்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய   மெலடி அந்தப் பாட்டில் உண்டு .  தான் நேசிக்கும் பெண்ணை எந்த விதத்திலும் சலனப்படுத்த நினையாத ஒரு ஆண்மகனின் மன நிலையை சுட்டும் பாடலாக இளையராஜா இசையமைத்திருப்பார்.  இடையிசையில் குழலும் விசில் ஒலியும் கலந்து கொடுத்த இசைக் கோர்வை அற்புதமானது.   காதலின் வலியைச் சொல்லும் பாடல் .  அந்த  அனுபவம் கடந்தவர் அப்பாடலை மறக்க இயலாது. 


                             '  நானே நானா யாரோதானா  '  என்ற பாடல் வாணி ஜெயராம் அவர்களின் தெளிவான தேன் குரலில்  கேட்டபோது குரலாலும் இசையாலும் மயங்கினேன் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தையாக இருக்கும். கேட்டபோதெல்லாம் மதி மயங்கி மனம் கனிந்து உடல் கட்டுண்டு கிடந்தேன் . இப்போது கேட்டாலும்  இசை மெல்ல மெல்ல நம்மை பறக்கச் செய்யும்; நம்மையே மறக்கச் செய்யும் . இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களின் பெண் குரலுக்கு வாணி ஒருவரே போதுமென ராஜா ஏன் முடிவெடுத்தார் என்று தெரியாது.  ஆனால் எல்லாப் பாடல்களும் வாணியின் குரலால் மெருகேறின . ராஜாவின் தேர்வு சரியானதாக இருந்தது.


                                  ஹரிகாம்போதி ராகத்தில் இசைக்கப்பட்ட   '  நானே நானா' பாடலில் மதுவின் மயக்கத்தில் ஒரு பெண் பாடுவதாக உள்ள சூழலுக்கு ஏற்றாற்போல்,  முன்னிசை லீட் கிடாருடன் ஆரம்பித்து பேஸ் புல்லாங்குழலின் நாதத்தை கலந்து , மேற்கத்திய பாணியில் பாடல் கொண்டு செல்லப்பட்டிருக்கும் விதம் , அந்தக் காலத்தில் கேட்க மிகவும் புதுமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது.  மெல்லிய சோகம் இழையோட பாடல் இசைக்கப்பட்ட விதம் நம்மை உறுத்தவோ வருத்தவோ செய்யாது. உற்சாகத்தையே கொடுக்கும் .


                                       டிரிப்பில் பாங்கோஸ் , டிரம்ஸ் இரண்டும் கலந்து செல்லும் தாள கதி ரசனையானது.  நானே நானா என்று வாணி அவர்கள் ஆரம்பிக்கும்போது கொடுக்கப்படும்  பாங்கோஸ் ஒலியை  பள்ளிக்கூடத்து  நண்பர்களோடு சேர்ந்து அடிக்கடி வாயாலேயே ஓசை எழுப்பி ரசித்த சம்பவம் பசுமையாய் இன்னும் நெஞ்சினில் நிறைந்திருக்கிறது. பாடலை மட்டுமல்ல முன்னிசை இடையிசையில் வரும் மெல்லிசையைக் கூட  குரலாலேயே இசைத்து மகிழ்வது இன்னும் நினைவிருக்கிறது.
         
                             
                                           


                                இரண்டாம் இடையிசையின் ஆரம்பத்தில் பரபரப்பான வயலின் இசை அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை உணர்த்தும் இசையாக தோன்றும் . அதன் பிறகு கிடாரும் வயலினும் பின்னிப் பின்னி வரும் இசைக்கோர்வை  இளையராஜாவின் கைவண்ணத்தில் செய்யப்பட அழகோவியம் . '  பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு,உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது ' என்ற வரிகள் ரசிக்கத் தகுந்தவை . அதன் பிறகு உச்சஸ்தாயில் வாணி பாடும்போது கூடவே இழைந்து வரும் வயலின் நாதத்தை இன்னும் ரசிக்கலாம் . மொத்தத்தில் ஆறு பாடல்கள் அறுசுவை உணவு என்று சொன்னாலும் ஒவ்வொரு பாடலிலும் அறுசுவை உணவை இளையராஜா கொடுத்திருப்பார்.

                             
                            '  குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை  ' என்ற பாடல் மோகன ராகத்தில் அமைக்கப்பட்ட அழகிய கீதம்.  திரைப்படம் வந்த புதிதில் சிலோன் வானொலியில் ஒளிபரப்பாத நாட்களே  இல்லை என்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமான பாடல். எஸ்.பி.பி யும் வாணியும் காதல் ரசம் சொட்டும்படி அழகாக பாடியிருப்பார்கள்.  குழலின் நாதத்தோடு உற்சாகமாக ஆரம்பித்து கிடார்  சிந்தசைசர்  எல்லாம் கலந்து  தபேலாவுடன் பல்லவி ஆரம்பிக்கும்போதே மனசு இறக்கை கட்டி பறக்கும் .  மூன்று முத்தான சரணங்களுக்கு மூன்று சத்தான இடையிசை கொடுத்த இளையராஜாவின் கற்பனை வளம் அபாரமானது.  வாலியின் வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை ; ராஜாவின்  இசைகோர்வைகளுக்கும் பஞ்சமில்லை . ஒன்றை மிஞ்சும் வண்ணம் இன்னொன்று அமைந்திருக்கும்.

                                                 

                       ' என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்  ' என்ற பாடல் மத்யமாவதி ராகத்தில் வாணி அவர்களின்  தேன் குரலில் அமைந்த மறக்க முடியாத  மென்மையான பாடல்.  அந்தப் பாடல் கேட்க நேரும்போதெல்லாம் வயல்வெளியின் நடுவில்  அமைந்த வீடும் வைகை ஆற்றில் குளித்து மகிழ்ந்த காலங்களும் ஆற்று ஓரத்து நாணல்களும் சோலைகளும் தென்னந்தோப்புகளும் நினைவுக்கடலில் அலைகள்  போல வந்து மோதுவதை தவிர்க்க முடிவதில்லை.  அந்தப் பாடலின் நயமும் லயமும் இசையும் பலமுறை  என்னைக்  கட்டிப் போடும்.  புல்லாங்குழல் வயலின் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பின்னி விளையாடும் . தபேலாவின் வித்தியாசமான நடை ராஜாவிற்கு உரிய டிரேட் மார்க் என்று சொல்லலாம் . சரணத்தை கூர்ந்து கேட்கும்போது தபேலாவின் தனித்துவ நடை பாட்டுக்கு பரதநாட்டியமாடும் .      ' என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்  '  என்று பல்லவி ஆரம்பித்து முதல் வரி முடிக்க என்னென்னவோ இசைக் கருவிகளின் கலவைகளை எல்லாம் இசைக்கச் செய்து எங்கெங்கோ நம்மை கூட்டிச் சென்று மீண்டும் பாடலுக்குக் கொண்டு வரும் சுகம் கேட்ட காலத்திலிருந்து இன்று வரை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

                                               


                          சண்முகப்பிரியா   ராகத்தில்    பாலு      அவர்களின் மன்மதக் குரலில்  அமைந்த  ' அபிஷேக நேரத்தில் '  பிரமாதமான குத்து பாடல். இளைஞர்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. நான் அந்தப் பாடலில் அதிக அக்கறை செலுத்தியதில்லை. ஆனாலும் பாடலை ரசித்திருக்கிறேன் . பரிச்சயம் இல்லாத வித்தியாசமான இசைக் கருவிகளின் ஒலியெல்லாம் அந்தப் பாடலில் கேட்க நேர்ந்தது.   துள்ளலான பாடல்.  குத்துப் பாடல்களை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் நல்ல விருந்தாக அமைந்தது .

                           ' தனிமையில் ....யாரிவள் ' என்றொரு புதுமையான , கேளிக்கை விடுதியில் பாடுவது  போன்றமைந்த , மேற்கத்திய சாயல் கொண்ட பாடல். அப்போது கேட்டபோது அதன் இசையும் தாளமும் என்னை மிரட்டியது. ஹிப்பிஸ் கலாசாரம் அதிகம் பரவியிருந்த காலகட்டத்தை பிரதிலிக்கும் பாடலாக அமைந்திருந்தது. வாணி அவர்கள் அழகாக பாடியிருந்தாலும் முனகல் சத்தங்கள் அவரின் குரல்  போல இல்லை.

                         இந்தப் பாடல்களை துல்லியமாக மீண்டும் கேட்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இரண்டாம் முறை மூன்றாம் முறையெல்லாம் திரைப்படத்திற்குச்  சென்றதுண்டு.  இசையை ரசிக்கும் என்னைப் போன்ற நிறைய ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து  திரைப்படங்களை வாழவைத்துக் கொண்டிருந்தோம் . இளையராஜாவின் இசைக்காகவே சினிமாவுக்கு சென்ற கூட்டம் நிறைய இருந்தது.  ராஜா தன் இசை மூலம் எல்லோரையும் வரவேற்றார்; அழைத்தார்.  ஆனால்  இப்போது இசைக்காக ஒரு திரைப்படத்திற்குச் செல்வோரின் கூட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

...........................தொடர்வேன் ..............................




37 comments:

  1. இசைஞானியின் புதுமைகள் புதிய பரிணாமம் கண்டிருக்கிறது .இது பலருக்கு புத்துணர்வையும் சிலருக்கு புகைச்சலையும் ஏற்படுத்தலாம் .இங்கே தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல காதலின் வலி அறிந்தவர்களும் தாயை நேசிப்பவர்களும் இத்தகைய பாடல்களை எப்படி மறக்க இயலும் .

    ReplyDelete
  2. அருள்ஜீவா

    முதல் வருகை . உங்கள் பாராட்டுக்கு நன்றி. போற்றுவார் போற்றட்டும் , தூற்றுவார் தூற்றட்டும் . இளையராஜாவின் இசைக்கு எந்தக் குறையும் ஏற்பட்டு விடாது. அது வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் .

    ReplyDelete
  3. சூப்பர் சார்ல்ஸ் ! சாதனைப்பட்டியல் மிகச் சிறப்பு.அழகான தொகுப்பு !

    தங்கள் குறிப்பிட்ட " மஸ்தான " பாடலின் அனுபல்லவி, சரணம் மிகவும் சூப்பர மெலோடி அல்லவா .!
    சாதனைகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. உங்களின் பாராட்டுக்கு நன்றி விமல் . இளையராஜாவின் பெருமைகள் ஊரறியும் . உலகத்திற்கே தெரிவிக்க வேண்டுமென்றால் நம்மைப் போன்ற ரசிகர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தவறான செய்தி ஒன்றும் சொல்லவில்லை . எல்லாமே ராஜாவைப் பற்றிய உண்மைச் செய்திகளே! ஏற்கனவே கேட்டறிந்த செய்திகள்தான்!

    ReplyDelete
  5. சால்ஸ்,

    அடடா என்ன ஒரு பதிவு!

    இளையராஜாவின் சிறப்புகள் என்று இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    அவருக்குத்தான் முதல் முதலாக இசையமைப்பாளருக்கான கட்டவுட் வைக்கப்பட்டது.
    சினிமா போஸ்டரில் ஒரு ஓரத்தில் ஈ என்று ..;.சிரித்தபடி அவர் படம் போட்டது.
    தற்போது பாடிக்கொண்டிருப்பவர் என்று தன் பெயரை தனியாக திரையில் போட்டு தன் அடக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டது.
    நான் துவக்கப் பாட்டு பாடினால் படம் ஓடும் என்று தன்னைப் பற்றி தன்னடக்கத்துடன் சொல்லிக்கொண்டது.
    சினிமா உலகில் முக்கியமான பலருடன் மோதிக்கொண்டு தான் ராஜாதி ராஜா என்று மார் தட்டிக்கொண்டது.
    தனக்குப் பின் வந்த எந்த ஒரு இசையமைப்பாளரையும் தட்டிக்கொடுக்காதது.
    தனக்குத் தெரிந்த இசையையே பதினைந்து வருடங்களாக போட்டுப் போட்டு தமிழ் ரசிகர்களின் இசை ரசனையை மழுங்கடித்தது.
    யாரும் சொந்தம் கொண்டாட முடியாத நாட்டுப்புற மெட்டுக்களை உருவி எதோ தான் அமைத்த மெட்டுக்கள் போல தன் பெயரில் பாடல்களை அமைத்தது.
    சிம்பனி என்று இல்லாத ஒரு பூதத்தை சொல்லி கதை கட்டியது....

    இன்னும் நிறைய இருக்கு.. வரட்டா?

    ReplyDelete
    Replies
    1. அவருக்குத்தான் முதல் முதலாக இசையமைப்பாளருக்கான கட்டவுட் வைக்கப்பட்டது.//


      சும்மா வைக்க வைத்தவர்கள் முட்டாள்களா?

      சினிமா போஸ்டரில் ஒரு ஓரத்தில் ஈ என்று ..;.சிரித்தபடி அவர் படம் போட்டது.//

      உங்கள் படம் போட்டிருந்தால் நீங்கள் சிரித்து கொண்டு போஸ் கொடுக்காமல் அழுது கொண்டா? போஸ் கொடுப்பீர்கள், அதுக்கு வேற அர்த்தம். வேண்டுமென்றால் நீங்களும் தமிழ்நாடு எங்கும் உங்கள் படங்களை ஒட்டி வையுங்கள்...யாரெல்லாம் சீண்டுரங்கன்னு பார்போம் (முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பார்பார்களா?)

      தற்போது பாடிக்கொண்டிருப்பவர் என்று தன் பெயரை தனியாக திரையில் போட்டு தன் அடக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டது. //

      ஏன் பாடியது நீங்களா? நீங்கள் பாடி அவர் தன்னை போட்டுகொண்டாரா?

      நான் துவக்கப் பாட்டு பாடினால் படம் ஓடும் என்று தன்னைப் பற்றி தன்னடக்கத்துடன் சொல்லிக்கொண்டது.//

      அந்த தன்னடக்கம் அவர்க்கு இருந்தது அவர் திறமை. அது உண்மையும் கூட. நீங்கள் வேணா அந்த காலங்களில் ஊர் சுற்ற போயிருக்கலாம். அதனால் தெரியவில்லை.

      சினிமா உலகில் முக்கியமான பலருடன் மோதிக்கொண்டு தான் ராஜாதி ராஜா என்று மார் தட்டிக்கொண்டது.//

      மோதி கொண்டர்வர்கள் எல்லாம் எத்தனை பத்திரிக்கையில் அவரை பற்றி புகார் அளித்தனர். எல்லாம் அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதனை எழுதினர். எங்களுக்கும் அந்த கால கட்டத்தில் நடந்த எல்லா விஷயமும் தெரியும். ஹிட்லர் உதவியாளர் மாதிரி சொன்னதை சொல்லாதிரும்.

      தனக்குப் பின் வந்த எந்த ஒரு இசையமைப்பாளரையும் தட்டிக்கொடுக்காதது. //

      பாராட்டக்கு அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள் என்று எதிர் பார்கிறீர்கள். மூணு படத்துக்கு மியூசிக் போட்டவனை பாராட்ட சொல்கிறீர்கள். அந்த மாதிரி நடிக்க அவருக்கு தெரியாது. முன்னோர்களை மதிக்கவர்களை பற்றி தானே உங்களுக்கு பிடிக்கும். தட்டி கொடுத்தால் அவர்கள் சாப விமோசனம் கிடைத்திடுமா? யாரை எப்படி, எப்பொழுது பாராட்ட வேண்டும், சீராட்ட வேண்டும் என்று அவருக்கு தெரியும் அதையெல்லாம் சொல்வதற்கு நாம் யார்?

      தனக்குத் தெரிந்த இசையையே பதினைந்து வருடங்களாக போட்டுப் போட்டு தமிழ் ரசிகர்களின் இசை ரசனையை மழுங்கடித்தது.//

      பரவில்லை, பதினைந்து வருடம் சொன்னதுக்கு. அவர் காலம் ஐந்து என்று உங்கள் வலைப்பதிவில் என்று சொன்னீர்கள். இன்று வரும் இசையை விடவா அவர் இசை மழுங்கடித்தது, உங்களை சேர்க்க வேண்டிய இடம் வேற என்று தெரிந்துவிட்டது.

      யாரும் சொந்தம் கொண்டாட முடியாத நாட்டுப்புற மெட்டுக்களை உருவி எதோ தான் அமைத்த மெட்டுக்கள் போல தன் பெயரில் பாடல்களை அமைத்தது.//

      சொன்னதுக்கான ஆதாரம் எங்கே சார்? சும்மா உங்கள் கற்பனை குதிரையை உங்கள் பதிவிலும், வேறெங்கிலும் கொண்டு வராதீர்கள்.

      சிம்பனி என்று இல்லாத ஒரு பூதத்தை சொல்லி கதை கட்டியது....

      இன்னும் நிறைய இருக்கு.. வரட்டா?

      இந்த கதைக்கு எங்கள் ஆட்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் பட்டாளத்தை கூட்டிக்கொண்டு வாருங்கள். உண்மை தான் உங்களிடம் நெறைய இருக்கு, புத்தி கேட்ட கருத்துக்கள். சொல்லி சொல்லி எங்களுக்கு சலித்து விட்டது.





      Delete
  6. அடடா ...காரிகன் வந்தாச்சா ...வாங்க

    நீங்கள் கூறியிருப்பதும் இசைஞானியின் சிறப்புகள்தான்! அந்த விஷயங்கள் ஒரு இசையமைப்பாளருக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் . அவருக்கு முன்னால் இருந்த இசையமைப்பாளர்கள் எல்லோரும் யாருடைய எண்ணங்களுக்கோ வடிவம் அமைக்கும் கூஜாக்களாகத்தானே இருந்தார்கள். இசைஞானி மட்டுமே இசையென்றால் நான்தான் ராஜா என்ற மாற்றுச் சிந்தனைக்கு வடிவமிட்டார். அதனால் தனித்துத் தெரிந்தார் . தனக்கென இசையில் தனி ராஜ்ஜியம் அமைத்தார். ரசிகன் ஏற்றுக் கொண்டான் . சில சினிமாக்காரர்கள் வேண்டுமென்றால் அவரை புறந்தள்ளி இருக்கலாம். ரசிகர்கள் அவருடைய இசையை ஒருபோதும் வெறுத்ததில்லை. இன்னும் இளையராஜா சிம்மாசனத்தில்தான் இருக்கிறார்.


    பதினைந்து வருடங்களாக புத்தம் புதிய சிந்தனையில் புதுப் புது பாடல்களும் இசைக்கோர்வைகளும் கலந்து கொடுத்தவரை அரைத்த மாவை அரைத்தவர் என்று பொய் சொல்லலாமா? கூர்ந்து கவனித்தால்
    தெரியும் ....70 களின் இசை , 80 களின் இசை , 90 களின் இசை , 2000 வது ஆண்டுகளின் இசை என ராஜா காலம் சார்ந்த தொழில்நுட்பத்தோடு தனது இசையையும் அந்தந்த காலகட்டத்தோடு புதுமையாக கொடுத்திருக்கிறார். அவருக்குப் பின் வந்தவர்கள்தான் 20 படங்களில் போட்ட மெட்டுகளையே திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் தலையாட்டி கொண்டிருக்கிறார்கள்.

    நாட்டுப்புற மெட்டுக்களுக்கு சொந்தம் கொண்டாட எவருக்கும் உரிமையில்லை . ராஜா அதை மெருகேற்றிக் கொடுத்தார். அவ்வளவுதான்! ஏன்.. அவருடைய முன்னோர்கள் நாட்டுப் புற இசையை திரைப்படத்தில் கொடுத்ததெல்லாம் உங்களுக்கு வெறும் கனவா? அவர்கள் யாரிடமிருந்தும் உருவவில்லையா?

    சிம்பொனி அமைத்தது பற்றி விலாவாரியான விசயங்களை எல்லாம் பெரும்தலைகள் , இசை வல்லுனர்கள் , ராஜாவுடன் பணியாற்றிய இசை விற்பன்னர்கள், வெளிநாட்டு இசை அறிஞர்கள் போன்ற பலரின் பேட்டிகளையும் அவர்களின் ஆச்சரியமான பாராட்டுதல்களையும் ரசிகர்கள் நாங்கள் நிறையவே வாசித்துத் தெரிந்து வைத்திருக்கிறோம் . புதிதாய் உங்களைப் போன்றோர் வந்து பொய் பூதத்தைக் கிளப்பி உசுப்பேத்தப் பார்க்காதீர்கள். அவருக்குப் பின் வந்தவர் சிம்பொனி பற்றி பேசினாலே ' சிம்பொனி அமைத்த இன்டெர்நேசனல் சிங்கம் ' என்று கூவிக் குதிப்பதற்கு உங்களைப் போன்றோர் சிலர் இருப்பார்கள் . அவருடன் குலாவிக் கொள்ளுங்கள்.

    இளையராஜாவைப் பற்றி சொல்வதற்கு எனக்கும் இன்னும் நிறைய இருக்கிறது. மீண்டும் சந்திப்போம்..சிந்திப்போம்!



    ReplyDelete
  7. பொய்யும் புனைந்துரையும் எழுதும் வார்த்தை விருப்ப நாயகரே ...இங்கே சொல்லப்பட்டவை அனைத்தும் ஊரறிந்த உண்மை.ஐய்யா "ஞானப்பிரகாசம்" நீங்கள் சொல்ல வருவது என்னவோ ?

    மீண்டும் மீண்டும் இசை பற்றிய அறியாமை ! தெளிவின்மை ! தனிநபர் வெறுப்பு !

    வாரும் ,,வாரும் உங்கள் ஞானத்தந்தையையும் அழைத்து வாரும்.முன்பு ஒரு "பெரியவர் " எப்படி தாண்டினார் என்று கேட்டு விட்டு ஓடி ஒளிந்தார்.

    கீறல் விழுந்த ரெக்காடு போல உளறும் தங்களது " ஞானத்தை " பார்த்து வியக்கிறேன்! விழுந்தாலும் , மூக்குடைபட்டாலும் மீசையிலே மண் படவில்லை என்ற பாரக்கியரமத்தை ரசிக்கிறேன்.

    மீண்டும் வாரும்!

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் புது புது புனைப்பெயர்களில் புகுந்து பட்டையை கிளப்புவார் காரிகன் !

      Delete
  8. சால்ஸ்,

    இளையராஜாவின் சிம்பனியை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் தொடர்ந்து பேசலாம். இல்லை என்றால் உங்களின் அத்தனை அபத்தமும் அசிங்கப்பட்டுப் போகும். இல்லாத ஊருக்கு ஏனய்யா இத்தனை விளக்கம்?

    நாட்டுபுற பாடல்கள் என்றாலே இரா தான் என்று நீங்கள்தானே சொல்கிறீர்கள்? நீங்கள் என்ன கே வி மகாதேவனையும் எம் எஸ் வி யையுமா நாட்டுபுற இசையின் நாயகன் என்று பாராட்டுகிறீர்கள்? பின் அந்த நாட்டுப்புற இசையை தன் விருப்பத்திற்கு உருவிய இராவை மட்டும் புகழ்வது ஏன்?

    உங்களின் இரா பாசத்தை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். பொதுவான பதிவில் இது போன்ற சல்லித்தனமான அபத்தங்களை எழுதினால் கேள்வி வரத்தான் செய்யும். சிம்பனிக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு பேசுங்கள்.
    சிம்பனியின் அந்த லிங்கை எனக்கு அனுப்பவும். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு மலிவான தனி மனித ஆராதனையில் வேகம் காட்டுங்கள். இன்னும் 50 வருடத்தில் இளையராஜாவை யாரும் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை. He is gonna disappear like a smoke.

    ReplyDelete
    Replies
    1. நெவெர்
      கொஞ்சம் என்னுடன் கிராமங்களின் தெருக்களில் நடந்து வாருங்கள் காரிகன்... நான் ரசிக்கும் தி கார்ஸ், ஈகிள் ஐ செர்ரி, லதா மங்கேஷ்கர் என எந்த ஒரு இசை அனுபவமும் இன்னும் கிராமங்களுக்குள் ஊடுருவ வில்லை.

      இன்னும் இராஜா நமது கிராமங்களின் சக்ரவர்த்தி... இழவு என்றாலும் ஒலிக்கும், திருமணம் என்றாலும் ஒலிக்கும் இத்துணைக்கும் அந்தக் கருவிகளை இயக்குபவர்கள் இன்றய இளம் நடிகர்களின் விசிறிகள்..

      ரொம்பத் தெளிவாக பாடல் என்றால் அது ராஜா பாடல்கள்தான் என்று இருக்கிறார்கள் அவர்கள்.

      நீங்கள் சொல்வது மாதிரி ஐம்பது வருடத்தில் ஒரு புகைமாதிரி ராஜா மறையக் கூடிய சாத்தியங்கள் மிக மிக குறைவு..
      இன்று 22/9/2015 அடுத்த ஆண்டு இதே நாள் இங்கு வருகிறேன்
      ரிமெம்பர் தி மில்க்கில் போட்டு வைக்கிறேன்...
      என்ன பாடல்கள் ஒலிக்கின்றன கிராமங்களில் என்று அப்டேட் செய்கிறேன்...
      தனிமனித ஆராதனைகள் அதிகமாகும் பொழுது சிலருக்கு அந்த ஆளுமைகள் மீது கடும் கோபம் வருவதும் இயல்பே...
      கவுண்டர் பாய்ன்ட் குறித்து தலைகீழ் விகிதங்கள் வவ்வால் ஏற்கனவே சொல்லிவிட்டதால் அதுகுறித்து நான் புதிதாக ஏதும் சொல்ல இல்லை..
      இசை என்பது ஒரு மாபெரும் கடல்...
      சிலருக்கு கரையில் இருந்து ரசிக்கப் பிடிக்கும் சிலருக்கு ஆர்ப்பரிக்கும் அதில் பயணம் செய்ய பிடிக்கும் ...
      நீங்கள் இருவரும் இருவேறு மாதிரி... ரசனைகளை வைத்து நீங்கள் மோதிக் கொள்வது எனக்கு ஒரு செல்லச் சண்டையை பார்ப்பது போல் இருக்கிறது...
      தொடருங்கள்

      Delete
    2. மது,

      நான் சொன்னது தவறுதான். 50 வருடங்களுப் பின் இராவின் இசையை மக்கள் மறந்து விடுவார்கள் என்று சொல்லியிருந்தேன். தற்போது திருத்திக் கொள்கிறேன். 50 அல்ல ஒரு 25, 30 வருடங்களிலேயே இது நடைபெறும். பார்க்கத்தானே போகிறீர்கள்? கிராமங்களில் யார் பாடல்களை கேட்கிறார்கள் என்ற ஆராய்ச்சியெல்லாம் எனக்கும் தெரிந்ததே. நீங்கள் அடிப்படையில் இரா ரசிகராக இருப்பதால் அவர் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களை வைத்து எழுதியிருக்கிறீர்கள்.

      உண்மையில் தமிழ்நாட்டில் அதிகம் கேட்கப்படும் பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்களே. அதில் மருந்துக்கும் ஒன்று கூட இரா இசை அமைத்தது அல்ல. இன்றைய தலைமுறையினர் இன்றைய குத்து பாடல்களை விரும்பிக் கேட்கிறார்கள். அவர்களது முந்தின தலைமுறையினரோ பழைய பாடல்களை கேட்கிறார்கள். பழைய பாடல்கள் என்றாலே அது 60கள்தான். இராவை நீங்கள் பழையது அல்லது புதியது என்ற எதிலும் சேர்க்க முடியாது. இரா இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை. எதோ நடுவில் வந்தார். அவ்வளவே. பரிதாபம்!

      Delete
    3. திரு. காரிகன்,

      இந்த செய்திகள் உண்மையில்லை என்று தயவு செய்து வாதிடாதீர்கள், உங்கள் பார்வைக்கு.

      https://www.facebook.com/sundararajan.narayanan/posts/1064975760201653?fref=nf

      https://www.facebook.com/Prakash.Ramaswamy/posts/10203538708028911?fref=nf

      இதெல்லாம் பொய் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் இங்கே மட்டும் அல்ல எங்கே இந்த விதமான கட்டுரையும் எழுத லாயக்கில்லாத, பேச இயலாத மனுஷன் என்கிற வகையை சார்ந்தவர் என்று உங்கள் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறோம்.

      Delete
    4. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ராஜா சார் பாடல்களை உரிமை மற்றும் ராயல்டி பிரச்சனையில் நிறுத்தி வைக்கப்பட்ட கிளாசிக் சண்டே என்கிற அரைநாள் நிகழ்ச்சியை, இப்போது ஒவ்வொரு ஞாயுறும் மறுபடியும் சூரியன் பண்பலையில் ஒளிபரப்புகின்றனர். இடையில் பழைய பாடல்கள், சங்கர் கணேஷ், டி.ஆர்., சந்திரபோஸ் என மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்கள் ஒளிப்பரப்பினர், ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை. மறுபடியும் கடந்த ஒரு மாதமாக ராஜா சார் இசை இல்லாமல் அவர்களால் ஞாயிறை கடக்க முடியவில்லை. ஏனென்றால் அன்று தான் சலூன் கடை, டீக்கடை, இதர கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர் இசையை ரசிக்கவென்று ஒரு கூட்டம் இருக்கிறது.

      Delete
  9. தவறு காரிகன் ...எம்.எஸ்.வி , கே.வி.எம் போன்றோர் இன்றளவும் எவ்வாறு நினைக்கப்படுகிறார்களோ அதை விட அதிகமாய் இளையராஜா நினைக்கப்படுவார் . அந்த அளவிற்கு தன் முன்னோர்களைப் போலவே இசையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இளையராஜா இசை மறையும் புகையில்லை ; உயிரூட்டும் ஆக்சிஜன் . காலத்தால் அழியாது.

    ReplyDelete
  10. ஐய்யா காரிகன்
    சிம்பனி வெளியிடப்படவில்லை என்பதால் அது இசைக்கப்படவில்லை என்று அர்த்தமா ? முதலில் இதற்கு பதில் சொல்லவும்.மீதியை பிறகு பார்க்கலாம்.

    நாட்டுப்புற இசையை அவர் என்னமாதிரி பயன்படுத்தினார் என்பதை தான் புரிந்து கொள்ள வேண்டும்.அவருக்கு முன்னிருந்தவர்களை செய்ய வேண்டாம் என்று யாரவது தடுத்தார்களா ?

    இளையராஜா புதியவர்களை பாராட்டவில்லை என்று குற்றம் சாட்டும் நீங்கள் அன்னக்கிளி வந்த போது அவரை பாராட்டியவர்களை பற்றிய சுட்டி இருந்தால் தர முடியுமா ?

    அவரது திறமையைக் கண்டு ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தலையாட்டினார்கள் என்பதே உண்மை.

    சூரியனை யாரும் மறைக்க முடியாது! காரிகன் போன்றவர்கள் கையால் முகத்தை மறைத்துக் கொண்டு சூரியனை மறைப்பதாக பாவலா காட்டுகிறார் !பாவம் !

    ReplyDelete
  11. விமல்

    சிம்பொனி பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் எதுவுமே நடவாதது போலவே பேசுவதில் காரிகனும் ' அவரும் ' கெட்டிக்காரர்களாக தங்களை காட்டிக் கொள்வார்கள். இளையராஜா சிம்பொனி அமைத்தது பற்றி பல செய்திகள் இணையத்தில் உள்ளன. அதையெல்லாம் வாசித்திருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. அவர் சிம்பொனி இசைக்கவில்லை என்பதை யாராவது ஒரு இசை விற்பன்னர் சொல்லியதாக காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். சத்தம் இல்லாமல் ஓடி விடுவார்கள். இதில் 'அவர் ' அவருடைய தளத்தில் சிம்பொனி பற்றி அவர் கேட்ட கேள்விக்கு எல்லோரும் பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்கள் என்று மார் தட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் சொன்னதே சரியானது. சிம்பொனி இசைக்கவில்லை என்பதற்கு சான்று தரட்டும், பேசுவோம்.

    ReplyDelete
  12. மது சார்

    அழகாக ஆணித்தரமாக காரிகனுக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள் . எளிதில் மறக்கப்படும் இசையல்ல ராஜாவின் இசை; அழியாத படியுருவம். பல இடங்களுக்கும் பயணிப்போருக்கு அது புரிந்திருக்கும் .

    காரிகன் எனக்கு இனிய இணைய நண்பரே! அதில் எந்த சந்தேகமும் இல்லை. கருத்து மோதல்கள் சண்டை போடுவதைப் போலவே இருக்கும். நீங்கள் சொன்னபடி செல்லச் சண்டைதான்! கொஞ்சம் பதிலூட்டங்களில் காரசாரம் இருக்கும் . அவ்வளவே! இருவரும் தொடர்வோம்.

    ReplyDelete
  13. இனிப்பான பதிவு படித்து பின்னூட்டத்திற்கு வந்தேன். ஒரு மிளகாய் கடித்தேன். சுருக்கென்றது. அதனால் தானோ என்னவோ அதன் பின் இனிப்பு நிரந்தரமாக நாக்கில் இருக்கிறது!!!!
    மிளகாய்க்கு நன்றி

    ReplyDelete
  14. உங்கள் பதிவு மூலம் சொல்வனம் சென்றேன். மனுஷன் அழுக வச்சிட்டார் ... //‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’//.http://solvanam.com/?p=22579

    இங்கேயெல்லாம் ‘மிளகாய்க்காரர்கள்’ செல்லுவதே இல்லை போலும். நாம் பாடல்களை கேட்டு ரசிக்கிறோம். சொல்வனத்துக்காரர் தானும் பாடி, இசைத்து எழுதுகிறார். அதனால் இருக்குமென நினைக்கிறேன்.

    பப்பு வேகாதல்லவா...?!

    ReplyDelete
  15. ‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’. - See more at: http://solvanam.com/?p=22579#respond

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்

      ரொம்ப நாளாச்சு நீங்க வந்து! காரசாரமாகவே இருக்கிறது உங்கள் பின்னூட்டம் . சொல்வனத்திற்குள் சென்றீர்கள் என்றால் இன்னும் பல செய்திகளை பட்டவர்த்தனமாக இலக்கிய நயத்துடன் பகிர்ந்திருப்பார்கள் . இசை படித்தவர்கள் இளையராஜாவின் இசைக்குள் புகுந்து அதன் லயம் , நயம் , மணம், குணம் , சுவை அறிந்து புரிந்து நமக்கு விருந்தே படைக்கிறார்கள். அதெல்லாம் பொய் என்று மிளகாய்க்காரர்கள் நினைத்துக் கொண்டால் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லும் வேடிக்கை மனிதர்களாகவே எனக்குத் தெரிகிறார்கள் . அவர்களைப் பார்த்து சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்!

      Delete
  16. பேராசிரியர் தருமிக்கு,

    வந்தால் வந்த வேலையை மட்டும் பார்த்தவிட்டு செல்லவும். தேவையில்லாமல் பொடி வைத்து கண்டபடி பேசினால் நானும் ஏகத்து பேச வேண்டி வரும். உங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளுங்கள். இதன் பின் எனது எழுத்து வேறு விதமாக இருந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

    ReplyDelete
  17. சால்ஸ்,

    தருமி என்ற கிருமியை நீங்கள் உங்கள் தளத்தில் அதிகம் பேசவிட்டால் பிறகு உங்கள் பாடு பரிதாபமாகிவிடும். கவனம் தேவை. பின்னர் என்னைக் குறை சொல்லவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. அடடா ... பேராசிரியர் யாரையும் ஒன்றும் சொல்லவில்லையே ! தன்னுடைய மைக்ராஸ்கோபிக் பார்வையில் தன்னுடைய கருத்தை அவருக்கே உரிய பாணியில் அழகாக எடுத்துரைத்துள்ளார் . உங்களை எது தொந்திரவு செய்தது என எனக்குப் புரியவில்லை . எதற்காக அவரைச் சாடுகிறீர்கள்? கொஞ்சம் நாகரீகம் கடைப்பிடிக்கலாமே!

      Delete
    2. சால்ஸ்,

      நல்லது. உங்களின் புரிதல் எனக்கு புரிந்துவிட்டது. இனிமேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் தருமி, கிருமிகளை நன்றாக வளர்த்து விடுங்கள். என்னை வைத்துத்தான் உங்கள் கதை ஓடும் என்றால் அப்படியே ஆகட்டும். இனி நான் இங்கே வருவது இயலாத காரியம். வந்தனம்.

      Delete
    3. காரிகன் சார் உங்கள் பதிவுகளை புகழ்ந்து தள்ள ஒரு கோஷ்டி இருந்தால், இங்கேயும் இருக்கத்தான் செய்வார்கள். உங்கள் தளத்திற்கு வந்தால் உங்கள் குழுவுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் மரியாதை கொஞ்சம் அல்ல, அதனாலே நான் அங்கு எந்த விதமான பதிவும் இப்போது செய்வது இல்லை. கல்லுக்கு முன் உட்கார்ந்து பாடம் நடத்துவனேன் என்று என்னை நானே திருத்திகொண்டேன். இங்கேயும் உங்கள் லீலைகளை அரங்கேற்ற மிரட்டும் தொனியில் ஏன் பேசுகிறீர்கள். உங்கள் மேல் இன்னும் ஒரு துளி மரியாதை இருக்கிறது. அதனையும் துடைத்துக்கொண்டு செல்லாதீர்.

      Delete
    4. ஒரு குறுப்பிட்ட அளவு மக்களுக்கு தெரிந்த உங்களை ஒரு சிறு விமர்சனம் செய்தால் உங்கள் கர்வம், தலைக்கனத்தை கொண்டு வரும் நீங்கள், உலகமெல்லாம் அறிந்த, ஒரு துறையில் சாதித்த, சாதித்து கொண்டு வரும் ராஜா சார் பற்றி உங்கள் மனம் போன போக்கிலே அவர் சாதனைகளை விமர்சனம் செய்து பேசுகிறீர்களே... நாலு பேருக்கு தெரிந்த, எந்தவிதமான சாதனைகளும் செய்யாத நமக்கே இப்படி என்றால், அவருக்கு எவ்ளோ கர்வம், தலைக்கனம் இருக்க வேண்டும். தனக்கு பிடிக்கவில்லையென்றால் அவரை பற்றி மட்டுமல்ல, அவர் சம்பந்தப்பட்ட எதனையும் பேசாதிருக்கும் ஒரு மனிதரை பற்றி நாம் புறம் பேசுகிறோமே என்று எண்ணி திருத்திகொள்கிற ஒரு நல்ல குணம் என்ற குணம் உங்கள் உள்ளத்தில் இருக்கிறதா?

      Delete
  18. ஹலோ காரிகன்

    எதையும் விமர்சன கண்ணோட்டத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் . நீங்கள் இளையராஜாவையும் அவர் ரசிகர்களையும் கடுமையாக விமர்சிக்கும்போது மற்றவர்கள் ஏற்பது போல உங்களை 'சின்னதாக ' சொன்னால் ஏற்கலாமே!

    உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் இடும்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாவேன். ஆனால் கவலைப்பட்டதில்லை. நான் சொல்ல வந்த கருத்தை சொல்லிவிட்டுத்தான் செல்வேன். நீங்களும் உங்கள் கருத்திலிருந்து மாற வேண்டிய அவசியமில்லை.

    மீண்டும் சந்திப்போம் உங்கள் பதிவில் அல்லது என் பதிவில்!

    ReplyDelete
  19. Charles ......... sorry about the inconvenience caused to you.

    ReplyDelete
  20. nothing to worry sir ... you can continue your style

    ReplyDelete
  21. இனிய சார்லஸ்

    உங்களிடம் ஒரு விசயம் பேசவேண்டியுள்ளது. உங்கள் தொலைபேசி எண்ணையும் எப்போது ஓய்வாக இருப்பீர்கள் என்பதையும் தெரிவிக்கவும்.
    நன்றி.
    இரா. பிரபாகர்

    ReplyDelete
  22. அருமையான பதிவு சார்லஸ் சார்,

    எனக்கு இந்த இரண்டு படங்களின் பாடல்களும் ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி கேட்கும் ரக படப்பாடல்கள்.

    பிள்ளையாரப்பனே பாடல் இன்று அல்ல என்றும் விநாயக சதுர்த்தி அன்று ஒலிக்க கேட்கலாம். எனது பால்ய கால பாடல்கள் இவை. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் சந்தோசம் தாராமல் ஏதோ சொல்லிடமுடியாத சோகம் என்னை சூழும். சுசீலா அம்மா ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து என்னை அந்த நிலைக்கு கொண்டு செல்லும். இன்று வரை அது ஒரு புதிர் தான்.

    நதியோரம் பாடல் கேட்கும்போதெல்லாம் என்னை மீறி ஒரு உற்சாகம் வந்துவிடும். அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் அன்று எனக்கு பிடிக்கவில்லை, இன்று படம் பார்த்த பின் கேட்கும் போது இசையின் வலிமையோடு இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்கள் வரிசையில் வந்துவிட்டது. நிலவு வரும் நேரம் பாடல் சுசீலா அம்மாவின் மற்றுமொரு வைரக்கல் என்று சொன்னால் மிகையில்லை. மலை அருவி பாடல் கேட்க கேட்க எனக்கு சிறு வயது விளையாட்டு ஞாபகம் வருகிறது, ரேடியோவில் கேட்டுக்கொண்டு குண்டு விளையாடியது என ஞாபகம் வருகிறது.

    அழகே உன்னை ஆராதிக்கிறேன் பாடல்கள் பற்றி சொல்ல இந்த கமெண்ட் பாக்ஸ் பத்தாது. எனக்கு பிடித்த குறுஞ்சி மலரில், நானே நானா? பாடல்கள் நிச்சயமாக எந்த வகையிலும் ஒப்பிடமுடியாத பாடல்கள். உங்கள் பதிவுகள் எங்களை மீண்டும் பால்ய காலத்திற்கு அழைத்து செல்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.

    நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் என்று காத்து கொண்டுஇருக்கேன். உங்கள் பதிலுக்கு.

    ReplyDelete
  23. வாங்க குமார்

    உங்களின் பாராட்டுக்கு நன்றி . என் ரசனைகளுக்கு ஈடான ரசனை உள்ளவர் நீங்கள் என்பது உங்களின் பின்னூட்டத்தில் தெரிகிறது. இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் அசாதாரானமானவர்கள். அவர்களால் ராஜாவின் இசையுலகதிற்குள் ஜீவிக்கத் தெரியவில்லை என்று சொல்லலாம். அவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. நாம் ராஜாவின் இசையை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டே இருப்போம் . ராஜாவின் இசையைப் பற்றி இன்னும் நிறைய சொல்ல வேண்டியதிருக்கிறது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இளையராஜாவின் இசைச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. உண்மையான இசையை இப்போதுதான் நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து பயணியுங்கள். எதிர் காலத்தில் தொடர்பு கொள்வேன்.

    ReplyDelete
  24. தருமி சார்

    சிலர் தாங்கள் சொலவது தான் "காவியம் " என்று எண்ணுகிறார்கள்.அவர் பேசாத பேச்சா ?தங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றிகள்!

    ReplyDelete
  25. சார்ல்ஸ்

    இசையறியா மூக்கரொடு முயல்வது அறியாமை !
    திரையுலகின் சந்து , பொந்துகள் பற்றி தெரிந்தவர் ஒருவர் ஓடிப்போய்விட்டார் ..இன்னொருவரும் விரைவில் ஓடியே போய்விடுவார் !
    சிவகுமார் , சூரியா அமைக்காத சிம்பொனியா ..?

    ReplyDelete
  26. குமார்

    இளையராஜா ரசிகர்கள் இருவரின் அனுபவத்தை நீங்கள் கொடுத்திருந்த லிங்கிலிருந்து வாசித்துப் பார்த்து சிலிர்த்தேன் . என்ன ஒரு அனுபவம் ! இப்படி ஒரு புல்லரிக்கும் அனுபவம் இளையராஜாவின் இசையைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும் . அவர்களின் அனுபவம் போதுமே இளையராஜாவின் இசை இன்பத்தை பறைசாற்ற! ஆனால் இது போன்ற அனுபவங்களையும் கேலி செய்யும் மனப்பான்மை சில மிளகாய்க்காரர்களுக்கு இருக்கும் . நாம் அவர்கள் ரசித்து எழுதும் பாடல்களையும் இசையமைப்பாளர்களையும் அதே போல் கேலி பேசி பழி வாங்கிக்கொள்ளலாம். ஆனால் இளையராஜா ரசிகர்கள் அந்த மாதிரியான கேவலமான செயலை செய்ய மாட்டோம். ஏனென்றால் நாம் அவர்களின் இசையையும் ரசிப்பவர்கள்தான்!

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்