Sunday, 21 February 2016

விழிகள் சிவந்தால் விடியும்



                                         மாற்றம் வேண்டும் ...மாற்றம் வேண்டும் என்று மந்திரம் சொல்வது போல் ஒவ்வொருவரும் மனதுக்குள்தான் நினைக்க முடிகிறது.  செயலில் இறங்க முடிவதில்லை.  யார் முதல் அடி எடுத்து வைப்பது... யார் பூனைக்கு மணி கட்டுவது ...என்று  மக்கள் தமக்குத் தாமே கேட்டுக் கொண்டு போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.

                                             மாற்றம் வேண்டும் . எதில் மாற்றம் வேண்டும் என்பதைக் கூட தேர்ந்தெடுக்கத்  தெரியாத நிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம்.  மனதளவில் மாற்றம் வேண்டும் என்பதும் புரியாதவர்களாய் இருக்கிறோம். எல்லாமே எளிதாய் கிடைக்க நினைக்கும் மனது மாற வேண்டும் . உழைக்காமல் கிடைக்கும் இலவசத்தின்  மேல்  உள்ள ஈர்ப்பு  மாற வேண்டும்.

                                   நம்மிடமிருந்து   எடுத்து  நமக்கே இலவசம் வழங்கும் தந்திரத்தை புரிந்து கொள்ளாதவர்களாய் மாறிப் போனோமே!  இலவசமாய் எதைக் கொடுத்தாலும் கை நீட்டி வாங்கிச் செல்லும் மக்களின் பிச்சைக்கார மனநிலையை  படித்திருக்கும் கசாப்புக் கடைக்காரக் கூட்டம் ஒன்று புல்லைக் கொடுத்து ஆட்டை ஓட்டிச் செல்கிறது.  அதைப் புரியாத மந்தைகள் பின்னாலேயே போகின்றன . நாளை கறியாகப் போகிறோம் என்று புரியாமலே போகின்றன.

                                யாரோ நம்மை சுரண்டுகிறார்களே , நமது ஜீவாதாரம் பறிபோகிறதே, நமது வாழ்வாதார வசதிகள் காணாமல் போனதே என்று மக்கள்  சிந்திப்பதே இல்லை.  இலவசம் கொடுத்துவிட்டு இதர சுகங்கள் எல்லாம் பறித்துக் கொள்ளும் கயவாளித்தனத்தை என்று கண்டுணரப் போகிறார்கள்?

                               இலவசம் கொடுத்துவிட்டு  பஸ் , பால், மின்சாரம்,  பதிவுக் கட்டணம், அரிசி, பருப்பு, காய்கறி , இத்யாதி என்று கட்டணங்களை ஏற்றி வைத்திருக்கும் அவல நிலையை எண்ணி கூக்குரல் இடுவதில்லை ; கூட்டம் சேர்வதில்லை; போராட்டம் நடத்துவதில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்குத் தடை என்று  வந்தவுடன்  '  நமது பாரம்பரியத்தில் கைவைத்து விட்டார்களே ' என்று கூக்குரல் எழுப்பினார்கள்; போராட்டம் நடத்தினார்கள்; வீதிக்கு வீதி வெளியே வந்தார்கள்; மறியல் செய்தார்கள்; செல்போன் டவர் ஏறி மிரட்டினார்கள்; தீக்குளித்தார்கள் . சாதி பேதமில்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள்.  பேரிடரும் பாரம்பரிய இடரும் ஏற்படும்போது மட்டும்  சாதி ஓடி மறைந்து விடுகிறது. ஆனால் இடர் கடந்து போன பின் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்கிறது.


                                                         

                                எந்த ஊர்களிலெல்லாம் ஜல்லிக்கட்டு நடத்துவார்களோ அந்த ஊர்களில் உள்ள ஜனங்கள் மட்டுமே இந்தப்  போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  மற்றவர் வேடிக்கை பார்த்தார்கள்.  தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்திற்கே மறைமுகத் தடைகள் நிறைய இருக்கிறதே அதைப்பற்றி எல்லாம் ஜனங்கள்  சிந்தித்தார்களா என்பது கண் முன்னே நிற்கும் கேள்வி.


                                    ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது ஒரு வணிகவியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது. பால் உற்பத்தியில் பணம் கொழிக்கும் இந்திய நாட்டுப் பணத்தைக் கொள்ளையிட நினைக்கும் மேலை நாடுகளின் வணிக ஊடுருவலுக்கான யுக்தி என்று  நம்பப்படுகிறது.  ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தால் காளை  மாடுகள்  அடி மாடுகளாக மாற்றப்படும்.  வீரியம் குறையும். சினை மாடுகளின் தரம் குறையும்.  பசுக்கள் ஈனும் கன்றுகளின் தரம் குறையும் .  பால் உற்பத்தியே குறையும்.

                               
                                      இங்குதான் மேலை நாடுகளின் வணிக ரீதியான சுரண்டல் ஆரம்பிக்கிறது.  சினை மாடுகளின் தரம் குறைவதால் புதிதாய் பிறக்கும் பசுக்களின் தரமும் குறையும் .  ஆதலால் வீரியமான  காளைகளை வெளி நாட்டிலிருந்து  இந்தியாவிற்குள் கொண்டு வரலாம்.  அல்லது வீரிய கன்றுகள் பிறப்பதற்கான உயர் ரகக் காளைகளின் விந்தணுக்களை  விற்பதற்கு  விலை பேசலாம்.   அயல் நாட்டு விந்து ஊசி மூலம் நமது நாட்டு காளைகள்  மற்றும் பசுக்களின் இனத்தையே அழிக்கலாம்.   எதிர் காலத்தில்  பாலுக்கும்  விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அயல் நாட்டுக்காரன்  பெற்றுவிட்டால் கோடிக்கணக்கில் அள்ளிக் கொண்டு போகும் சுரண்டல் வியாபாரம் ஆரம்பிக்கும்.  PETA  என்ற அமைப்பின் நோக்கமே இதுவாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

                            ஜெர்சி இன பசுக்களின் பால் மூலம் இந்தியாவில் சக்கரை நோயை பரப்புவதும் நோக்கமாக இருக்கலாம்.  சக்கரை நோய்க்கான மருந்தை இறக்குமதி செய்து அதிலும் ஆயிரம் கோடிகளை அள்ளிச் செல்லலாம்.  இது அமெரிக்க NGO  க்களின் தந்திரம் . நமது அரசியல்வாதிகளுக்கோ அமெரிக்கா என்ன சொன்னாலும் அது மந்திரம்.  அதனால்தான் PETA  கேட்டுக் கொண்டதும் உச்ச நீதிமன்றமே ஜல்லிக்கட்டுக்குத் தடையைக்  கொண்டு வந்துவிட்டது.


                                உண்மையிலேயே ஜல்லிக்கட்டுக்கான தடையின்  பின்னனியில்  இவ்வளவு அரசியல் கலந்திருக்குமா என்பது  யூகிக்க முடியாததே! தடை என்று வந்த பின்னரே இந்த மாதிரியான பூதங்கள் கிளம்புகின்றன.  போராட்டங்கள் வெடித்தன.  எல்லா கட்சிகளும் ஓட்டு வங்கிக்காக குரல் கொடுத்தன.  மக்கள் வீதிக்கு வந்தார்கள்.  பொங்கல் முடிந்த பிறகு மீண்டும் வீட்டுக்குள் முடங்கி விட்டார்கள்.  சரி. போராட வேண்டிய விஷயங்கள் இன்னும் எத்தனையோ உள்ளதே ! அதற்கெல்லாம்  எப்போது போராடப் போகிறார்கள்?


                                நமது மண்ணிலிருந்து நீரெடுத்து நமக்கே விலை போட்டு விற்கிறானே அதற்காக என்று போராடப் போகிறார்கள்?  உள்நாட்டு குளிர் பானங்களை  ஒதுங்க வைத்து விட்டு பெப்சி , கோகோ கோலா என்று உடலுக்கு ஒவ்வாத பானங்கள் விற்று ஒரு நாளில் ஆயிரம் கோடிகளை  அள்ளிச் செல்லும் அவலத்தை அரசும் அனுமதிக்கிறதே !  ஒரு நாள் முழுவதும் இந்தியாவில் உள்ள  அனைவரும் அதைக் குடிப்பதை நிறுத்தினால் ஆயிரம் கோடியை சேமிக்கலாம் என்று கெஜ்ரிவால் கூறுகிறாரே ...நடக்குமா? நம் நாட்டுப் பணத்தை அயல் நாட்டிற்குத் தாரை வார்க்கிறோம் .


                                 மேகி , பாண்டா , கார்னியா , ரெவ்லான் , லோரியல், ஹக்கீஸ் , லெவிஸ், நோக்கியா, மெக்டொனால்ட் , கால்வின்கிலீன்,  கிட்  கேட் , நெஸ்லே,  கே எப் சி , போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தியர்கள் அனைவரும் ஒரு நாள் மட்டும் தவிர்த்தால் ஆயிரக்கணக்கான கோடிகள் மிஞ்சும் . கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்துக் கொண்டே வந்தால் டாலர் மதிப்பு குறையும்.  நம் நாட்டு வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர் அனைவரின் வளர்ச்சி மேலோங்கும்.  இதைப் பற்றியெல்லாம் மக்கள் என்றாவது சிந்தித்து,  ' எங்களுக்கு இந்தியத் தயாரிப்புகளே வேண்டும் '  என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்களா ?  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக என்றாவது போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களா ?


                                ஒவ்வொரு முறையும் பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம் கச்சா எண்ணெய் உயர்வுதான் காரணம் என்று ஒரே பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்படும்போது  நமது எண்ணெய் நிறுவனங்கள்  விலையை கணிசமாக குறைப்பதில்லை.  குறைத்தாலும் பைசாக் கணக்கில் குறைக்கிறார்கள்.  ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு பேரலுக்கு 105 டாலர் என்று விலை இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தோராயமாக 75
ரூபாய் என விற்கப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னர் ஒரு பேரலின் விலை மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலைமூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்க வேண்டும். 75 க்கு விற்ற பெட்ரோல் 25 க்கு விற்கப்படவேண்டும்.  ஆனால் ஏறத்தாழ 60 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது . பக்கத்துக்கு நாடுகளில் விலை வெகுவாக குறைக்கப்படும் பட்சத்தில் நமது இந்திய அரசாங்கம் குறைக்காமல் இருக்கும் காரணம் என்ன?

                                                         
                                                       


                            நமது அரசாங்கம் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்குத்  துணை போகிறது என்றுதானே அர்த்தம்.  பெட்ரோல் , டீசல் விலை குறைந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக குறையும் .  அரசாங்கம் சொல்லும் விளக்கம் வினோதம்.  ' விலை குறைத்திருக்கிறோம் . கலால் வரிதான் கூடியிருக்கிறது ' என்று மிக எளிதான விளக்கம் கொடுக்கிறது.  பொருட்களின் விலைக்கும்  பெட்ரோல் டீசல் விலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை உணர்ந்து  இந்தச் சுரண்டலை எதிர்த்து  மக்கள் என்றாவது கூக்குரல் கொடுத்திருக்கிறார்களா ? வீதிக்கு வீதி வெளியே வந்து போராட்டம் நடத்தியிருக்கிறார்களா?



                                  ஐந்து மாவட்டங்களின் குடி நீர் தேவையையும் பாசன வசதியையும் பல வருடங்களாக நிறைவேற்றிக் கொண்டு வரும் முல்லைப் பெரியாற்றின் நீர் இப்போது நமக்கு மறுக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படும்  நீரின் அளவை நம் அண்டை மாநில அரசு குறைத்துக் கொண்டே வருகிறது .  999 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம் எல்லாம் மீறப்பட்டிருக்கிறது.  உச்ச நீதி மன்றம் ஏறி இறங்கி நமது விவசாயிகளும் தமிழக அரசும் தவித்துப் போனார்கள்.    அதை நம்பியிருந்த விவசாயம் அழிந்து கொண்டே வருகிறது. குடிநீருக்காக யாரையாவது கையேந்தும் நிலை.  நீர் மேலாண்மையை தேசிய மயமாக்கி மக்களுக்குத் தேவையான  தண்ணீரைப் பெற்றுத் தராத இந்த இந்திய அரசாங்கத்தை கேள்வி கேட்டு மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்களா? வீதிக்கு வீதி வெளியே வந்தார்களா?  முற்றுகையிட்டார்களா ?


                                  நீர் மின்சாரம், காற்று மின்சாரம், அனல் மின்சாரம் போன்றவற்றிலிருந்துதான் நமது நாட்டின்  மின்சாரத் தேவை  அதிகமாக பூர்த்தி செய்யப்படுகிறது.  அணு உலைகளிலிருந்து  பெறப்படும்  மின்சார அளவு குறைவே! எவ்வளவுதான் பாதுகாப்பானது என்று அறிவியல் அறிஞர்கள் கூறினாலும் அதிக அளவு ஆபத்து மறைந்திருக்கும் அணு உலைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது.  நம் எதிர் காலச் சந்ததிகளுக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற உண்மை எத்தனை பேருக்கு உறைத்திருக்கிறது என்பது தெரியவில்லை.காலம் முழுவதும் தொடர்ந்து கிடைக்கும் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் மெத்தனமே மேலோங்கிக் கிடக்கிறது. அரசாங்கமே அதை எடுத்துச் செய்யாமல் பொறுப்புகளை தனியாருக்கு தாரை  வார்க்கிறது.   சரியான திட்டமிடல் இல்லாததால், மின்சார உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டு , அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி , கோடிக்கணக்கில் இழப்பை அடைந்து ,  அதன் பலனை மின்சாரக் கட்டணமாக உயர்த்தி,  மக்களின் தலையில் சுமத்தி ....இப்படி எல்லாம் உருவாக்கப்பட்ட மாய அநீதிகளை தட்டிக் கேட்க மக்கள் என்றாவது வீதிக்கு வந்து போராடினார்களா? நியாயம் கேட்டார்களா?


                                  நான்கு வழிச் சாலைகளில் 50 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடியை நிறுவி வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் போல பணம் பறிக்கிறார்கள்.  அரசாங்கம் தான் போட வேண்டிய சாலைகளை தனியாருக்குத் தாரை வார்த்ததோடு மட்டுமல்லாமல் அதை வட்டியோடு வசூலித்துக் கொள்ளும் உரிமையையும் அவர்களுக்குக் கொடுத்ததன் விளைவு ,   சாலை போட்டதற்கு ஆன செலவை விட 10 மடங்கு வசூலித்து முடித்து விட்ட பிறகும்  கூட  இன்னும் வசூலிக்கிறார்கள். மக்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  இதை எதிர்த்து என்றாவது மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா ?  சுங்கச்சாவடிகளை முற்றுகை இட்டிருக்கிறார்களா? கேள்விகள் எழுப்பியிருக்கிறார்களா?


                                      கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்காக விவசாய நிலங்களை அபகரிக்க முயல்வதும் , உச்ச நீதி மன்றம் வரை சென்று அதற்கு உத்தரவு வாங்கி  விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும் , சில தனியார் நிறுவனங்கள் காவிரிப்படுகைகளில்  மீத்தேன் எடுக்க முனைவதால் விவசாய நிலங்களை பாழ்படுத்த நினைப்பதும் , எல்லாமே அரசின் துணையோடுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கே  சின்ன சின்ன போராட்டங்களோடு காட்டும் எதிர்ப்புகள் காலப்போக்கில் பிசுபிசுத்துப் போய் விடுகின்றன . தமக்கு நேராதவரை போராட மனம் இல்லாத நிலை மக்கள் எல்லோரிடமும் இருக்கிறது.  ஒட்டு மொத்த மக்களும் எழுந்து ஒன்றாக கை கோர்த்து போராடாதவரை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் மறைமுக அநீதி நடந்து கொண்டேதான் இருக்கும் .


                                      தற்போது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசு சார்ந்த பல துறைகளும் சேர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.  தங்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் சூழலில்தான் அவர்கள் எல்லோரும் போராட வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் போராட்டம்  தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பற்றிய சுயநல போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. பொது நலனுக்காக  இந்த அளவு போராடினார்கள் என்றால் எல்லோரும் பாராட்டும் நிலையை அடைவார்கள்.

                                         
                                             இன்னும் எத்தனையோ மக்களுக்கு எதிரான
சுரண்டல்களையும் அநீதிகளையும் எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். அதையெல்லாம் கண்டும் காணாதது போல எண்ணம் கொண்டு அலையாமல் மனதளவில் மாற்றம் காணும் விழிப்புணர்வு நாம் அடைந்தால் கேள்விகள் பிறக்கும் . நீதி மன்றங்கள் விழிக்கும் ; நீதியும் கிடைக்கும்.

                                 
                        சரி இதற்கெல்லாம் தீர்வு?  தலைப்புதான் தீர்வு!!




6 comments:

  1. சால்ஸ்
    விழிகள் சிவந்தால் விடியும் .ஒரு வித்தியாசமான தற்கால சூழலுக்கு உகந்ததான அருமையானதொரு அற்புத பதிவு .வாழ்த்துக்கள் .
    விழிகள் எங்கே சிவப்பது .அதுதான் இலவசத்திலும் வசீகர வார்த்தைகளிலும் பேராசைகளிலும் கண்களை மறைத்து கருப்புக் கண்ணாடிகளை அணிந்துகொண்டிருக்கிறதே.
    சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியே இதனைப் புலப்படுத்துகிறதே .சகல வசதிகள் அடங்கிய ஆண்டிராய்டு அலைபேசி 250ரூபாய்க்கு கிடைக்கும் என்பதே.இது ஏமாற்று வேலை என்றறிந்தே எத்தனை பேர் முன் பதிவு செய்தார்கள். படித்த முட்டாள்களும் இதில் அடக்கம் என்பது வேதனைக்குரியதே.
    இன்று 15அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உமா மகேஸ்வரி என்றொரு ஆசிரியை வகுப்பறையில் மாணவனால் கொலை செய்யப்பட்டபோது ஏன் போராடவில்லை?வகுப்பறையில் மதுஅருந்தி வந்த மாணவனைக் கண்டித்ததால்ஆசிரியர்,தலைமையாசிரியர் உட்பட சிலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட போது இவர்கள் ஏன் போராடவில்லை .இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .லஞ்சம் ஒழிக்கப்படவேண்டுமென்று விரும்பும் நாம்தான் நமக்கான காரியங்களை விரைவாக முடிக்க லஞ்சத்தைக் கொடுத்து காரியம் சாதிக்கிறோம்.
    சமூகம் என்பதுபல்வகையான தனி மனிதர்களை உள்ளடக்கிய ஓர் அமைப்பு .ஆக ஒவ்வொரு தனிமனிதனும் பேராசைகளைக் (ஆசைகளையல்ல)கடந்து. ஒழுக்க நெறிமுறையோடு மனதை விசாலப்படுத்தும் போதே விழிகள் சிவக்கும் .விடியலும் பிறக்கும் .அந்நாளுக்காய் காத்திருப்போம் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க அருள்ஜீவா

      உங்களின் பின்னூட்டம் ஒரு சிறிய பதிவு போலவே உள்ளது. நல்லது. அரசு ஊழியர்கள் இலஞ்சத்திற்கும் சாதிய சுரண்டல்களுக்கும் மத துவேஷங்களுக்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராக போராடினால் பொது ஜனங்கள் எல்லோரும் போராடுவதற்கு முன் வரலாம். ஆனால் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டுமே போராடுகிறார்கள். அதனால் ஜனங்களின் அதிருப்திக்கு ஆளாகிறார்கள். அவர்களிடமும் மாற்றம் வரவேண்டும்.

      Delete
  2. சால்ஸ்,

    அரசியல் இரண்டு முனையும் கூரான கத்தி போன்றது. அது எடுப்பவனையும், அவன் எதிரே இருப்பவனையும் ஒரே சமயத்தில் தாக்கும்.

    நல்ல பதிவுதான். உங்கள் கேள்விகள் எல்லோருக்கும் எழுபவையே. மக்கள் நலன் என்று வரும் போது கூடாத கூட்டம் தன் சுயநலம் கருதி வெளிப்படுவது அதுவும் தேர்தல் வரும் இந்த சமயத்தில் கண்டிப்பாக பொதுமக்களிடத்தில் எந்தவித அனுதாபத்தையும் ஏற்படுத்தவில்லை.

    நீங்களும் அதே கருத்தை சொல்லியிருப்பதால் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. வாங்க காரிகன்

    நான் அரசியல் பேச வரவில்லை. எந்த அரசு வந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தில் மறைமுகமான அநீதிகள் இழைத்தால் அவற்றைக் கண்டு போராடும் எழுச்சியை இந்த ஜனங்கள் பெறவேண்டும் என்ற சமூக கோபத்தைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறேன் . உங்களின் பாராட்டுக்கு நன்றி .

    தேர்தல் நேரத்தில் மக்கள் இன்னும் விழிப்படைய வேண்டும் . போராட்டங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என நினைப்பது ஆரோக்கியமான சிந்தனை அல்ல . மக்களின் கையில் மாற்றம் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  4. மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து விட்ட பின்னரே போராட வேண்டுமென்றே பழக்கப் படுத்தப்பட்டிருகிறோம். இந்நிலை மாறுவதற்கு சிந்தனையை தூண்டும் நல்ல பதிவு. அமெரிக்க மக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள் என்பதை எனது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறேன்.
    http://tamilcpu.blogspot.com/2016/02/blog-post.html

    ReplyDelete
  5. வாங்க ராஜ்குமார் சார்

    தங்களின் வருகைக்கு நன்றி . உங்களின் பதிவையும் வாசித்தேன். இன்ட்ரெஸ்ட்டிங்! அமெரிக்க அரசியலை அலசியிருக்கிறீர்கள். சீரிய தெளிந்த நடை. நிறைய செய்திகள் .

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்