யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன ...நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் என்ற மனநிலை கொண்ட மனிதர்களே நம்மைச் சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்களை சந்திப்பது அருகி வருகிறது. ஆசை யாரையும் விடவில்லை. சின்ன சின்ன சேவைகளுக்குக் கூட சன்மானம் எதிர்பார்ப்பதை பலர் ஒரு குற்றமாகவே பார்ப்பதில்லை. கிடைக்கும் வரை லாபம் என்றுதான் எண்ணுகிறார்கள்.
அரசாங்க ஊழியர்கள் பெரும்பான்மையோர் தங்கள் சம்பளம் போக வேறு ஏதேனும் பிரதிபலன்கள் எதிர்பார்த்தே வேலை செய்கிறார்கள். தாங்கள் செய்து கொடுக்கும் வேலைகளால் யாருக்கு என்ன பலன் போகிறதோ அவரிடமிருந்து இன்னொரு ஊதியம் பெற காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு பல பெயர்கள் சொல்லலாம். அன்பளிப்பு, பரிசு, நன்கொடை, கூலி, கையூட்டு என்பவை நாகரீகச் சொற்கள். கொச்சையாக பச்சையாக சொல்வதென்றால் ' லஞ்சம் ' என்ற சொல்லே பொருத்தமானது. காரசாரமாகச் சொன்னால் ' பிச்சை ' என்றும் சொல்லலாம்.
லஞ்சம் எப்போது தோன்றியது என்ற ஆய்வில் இறங்கினால் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்ததாக வரலாறு சொல்கிறது. அப்போதிருந்து இப்போது வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரும் பூதமாய் உருமாறி விட்டது. சட்டங்கள் இட்டு அதை ஒடுக்க நினைப்பது சல்லடை போட்டு நீரைத் தடுக்க நினைப்பது போலத்தான்! மாற்று வழி யோசிப்பதே மாபெரும் வலி.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவிஞன் எழுதி விட்டுப் போனது சத்தியமான வாக்கியம். லஞ்சம் கொடுப்பவன் ' கொடுக்கக் கூடாது ' என்று முடிவெடுக்க வேண்டும் ; லஞ்சம் வாங்குபவன் ' வாங்கக் கூடாது ' என்று உறுதி எடுக்க வேண்டும். இந்த இரண்டுமே சாத்தியப்படாதபோது எந்த வழியில் அதை ஒழிப்பது? அதற்கான தீர்வு வெகு தொலைவில் இருக்கிறது. தேட வேண்டும்.
லஞ்சப்பணம் வாழ்க்கையில் நிம்மதியை தக்க வைக்குமா என்பது கேள்விக் குறியே! அறமற்ற செயல்களிலிருந்து வரும் எந்தப் பொருளும் நிலைப்பதில்லை. லஞ்சத்திற்கு மேல் லஞ்சம் வாங்கிய ஒரு மாநகராட்சி அதிகாரி தன் மனைவிக்கு நிறைய நகைகள் சேர்த்து வைத்தார். நிறைய சிகரெட்டும் பிடித்ததால் திடீரென நோய்வாய்ப்பட்டார் . இரண்டு வருடமாக நோயுடன் போராடியதில் மருத்துவமனைச் செலவுக்காக பணம் பறந்தோடியது. மனைவியின் நகைகள் கரைந்து போயின. வட்டிக்கு பணம் வாங்கி செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் செத்தும் போனார்.
' வாங்கிய லஞ்சத்துக்கு மேலே வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு கடவுள் அவரை கொண்டு போயிட்டான் ' என்று பலரும் அப்போது பேசிக் கொண்டார்கள். தர்மம் தலை காக்கும் என்ற மூத்தோரின் மொழி சற்று புரியலாயிற்று. பலருக்கும் கொடுத்தால் நமக்கும் கிடைக்கும்; பலரிடமிருந்து எடுத்தால் நம்மிடமிருந்து எடுக்கப்படும் . அதுதானே உலக நியதி.
பெரும்பான்மையான அரசியல்வாதிகள் லட்சியவாதிகளாக இருக்கிறார்களோ இல்லையோ லஞ்சவாதிகளாக இருக்கிறார்கள். அமைச்சர் முதல் அதிகாரி மற்றும் அடிமட்ட ஊழியன் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடக்கிறார்கள் . லஞ்சம் புற்று நோயை விட மோசமாக புரையோடிக் கிடக்கிறது.
2015 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 180 நாடுகளில் ஊழல் குறைவான 10 நாடுகளின் பட்டியலும் ஊழல் அதிகமான 10 நாடுகளின் பட்டியலும் தரப்பட்டுள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா ஊழல் நாடுகளின் வரிசையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் 2011 ஆம் ஆண்டில் ஊழலில் 95 ஆவது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா தற்போது 76 ஆம் இடத்திற்கு வந்துள்ளது.
லஞ்சமும் ஊழலும் குறைவான நாடுகள் வரிசையில் ஐஸ்லாண்டும் நியூஸிலாந்தும் முதல் இடத்திற்கு மாறி மாறி வந்துள்ளன. கடைசி இடத்திற்கு பெரும்பாலும் சோமாலியா என்ற நாடே வந்துள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தவுடன் நாடே அதிர்ந்தது. மக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் நின்று சிரமப்பட்டனர். நாட்டின் நன்மைக்காக கொஞ்சம் சிரமப்படுவதால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்று மத்திய அரசு சொன்னது.
சரி. ஏன் இந்த திடீர் நடவடிக்கை என்ற கேள்விக்கு கறுப்பு பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்கான வேட்டை என்று பிரதமர் பதிலளிக்கிறார். நான்கு மணி நேரத்திற்குள் பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் எல்லா பண முதலைகளுக்கும் பணத்தை மாற்றும் அவகாசம் இல்லாமல் போனது. பீதியில் பேதி கண்டிருப்பார்கள்.
ஊழலை ஒழிக்க இது ஒரு நல்ல நடவடிக்கை என்று மக்கள் ஏற்றுக் கொண்டாலும் பலவித சிரமங்கள் ஏற்பட்டதால் கோபப்படுகிறார்கள். எதிர்க் கட்சிக்காரர்கள் மோடியின் நடவடிக்கையை விமர்சனம் செய்கிறார்கள். அதிக குறைகளைச் சொல்கிறார்கள். பாராளுமன்றத்தில் கூச்சலும் எதிர்ப்பும் செய்கிறார்கள்.
எல்லாவற்றையும் பொறுமையாக சந்திக்கும் மோடி அவர்கள் ஒரு அரசு விழாவில் சொன்னதாவது; ' ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், அரசு முன்னேற்பாடு இல்லாமல் இந்த விஷயத்தில் இறங்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். இது உண்மையான காரணமாகத் தெரியவில்லை. அவர்களின் வேதனைக்கு காரணமே , பதுக்கிய பணத்தை பாதுகாக்க அரசு போதிய அவகாசம் அளிக்கவில்லையே என்பதுதான்.
இந்த விஷயத்தில் 72 மணி நேரம் அவகாசம் கொடுத்திருந்தால் இப்போது எதிர்ப்பவர்கள் என்னை வாயார புகழ்ந்திருப்பார்கள். மோடி போல் யாருமில்லை என வாழ்த்தியிருப்பார்கள். இப்போது ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக நாடு மிகப் பெரிய போரில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போரில் சாமானிய மக்கள்தான் போர் வீரர்கள்.
கடந்த 70 ஆண்டுகளில் சட்டமும் அரசியலமைப்பும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் நாடு ஊழலில் சிக்கியுள்ளது. ஊழல் தொடர்பாக சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையிலும் இந்தியாவின் பெயர் அழுத்தமாக பதிந்துள்ளது . ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்தால் நாம் எப்படி பெருமை கொள்ள முடியும்? இதன் காரணமாகவே ரூபாய் நோட்டுத் தடை என்ற மிகப் பெரிய முடிவை எடுக்க வேண்டி இருந்தது. '
சில சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கறுப்புப் பணம் என்பதே கிடையாது என்கிறார்கள். கறுப்புப் பொருளாதாரம் என்பதுதான் சரி . அதில் புழங்கும் பணத்திற்கு கறுப்புப் பணம் என்று வேண்டுமானால் பெயர் சொல்லிக் கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து . ஹவாலா பணம் என்பதும் ஏறக்குறைய கறுப்புப் பணம் அல்லது கள்ளப் பணம்தான்.
டெல்லியில் உள்ள ஒரு தீப்பெட்டி வியாபாரி சிவகாசியில் இருந்து ஒரு மொத்த வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய்க்கு சரக்கு வாங்கி , பணத்தை மதுரையில் உள்ள ஒரு வியாபாரியிடம் வாங்கிக் கொள்ளச் சொல்லுவார். மதுரையில் உள்ள அந்த வியாபாரி டெல்லியில் உள்ள மின் சாதன பொருட்கள் விற்கும் ஒரு கம்பெனியிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு சரக்கு வாங்குவார். பணத்தை டெல்லியில் உள்ள தீப்பெட்டி வியாபாரி மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு கொடுத்து விடுவார். வங்கிக்குச் செல்லாமலேயே பணம் பரிமாறப்பட்டு விட்டது . பலவிதமான வரி விதிப்புகளுக்குள் சிக்காமல் பெரிய அளவில் வியாபாரம் நடந்து முடிந்து விடுகிறது. அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் இங்கு தடுக்கப்படுகிறது.
ஹவாலா பணம் என்பது இப்படித்தான் சுழற்சிக்கு உட்படுகிறது. இது ஒரு உதாரணம் . இது போல லட்சக்கணக்கான வியாபாரங்கள் இப்படித்தான் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. கட்டவேண்டிய பணம் எல்லாம் கட்டுக் கட்டாக அறைகளுக்குள் கட்டி வைக்கப்படுகிறது. அரசுக்கு நட்டமேற்படுத்தும் இந்த மாதிரியான செயல்களைக் கட்டுப்படுத்த எல்லாப் பணப் பரிமாற்றங்களும் டிஜிட்டல் தொழில் நுட்ப முறைப்படி மட்டுமே செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எல்லாப் பணமும் வங்கி வழியேதான் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது . இணையதள தொழில் நுட்பம் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும்படி பொது மக்களும் வியாபாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஊழலை ஒழிக்க இது ஒரு வழி என்று மத்திய அரசு கருதுகிறது. சாத்தியமா என்பதை காலம் சொல்லும்.
மோடி அவர்கள் எடுத்த நடவடிக்கையை மக்கள் விமர்சித்தாலும் பெரியதொரு வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். மோடி அவர்கள் இணையதளத்தில் மக்களின் கருத்தை எதிர்கொண்டபோது 90 சதவீதம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். அரசியலில் ஒவ்வொரு பிரதமரும் ஏதாவது ஒரு தடாலடி மாற்றத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அது எதிர்க்கப்பட்டாலும் காலப்போக்கில் அந்த முடிவுகள் ஜனநாயக முறையில் நன்மையை உருவாக்கியிருக்கின்றன. போலவே பிரதமர் மோடி அவர்களின் இந்த தடாலடி முடிவு நாட்டுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.
காவிரிப் பிரச்சனைக்கு , மீனவர் பிரச்சனைக்கு ஒன்று சேராத எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரூபாய் நோட்டு செல்லாது என்ற திட்டத்தை எதிர்ப்பதற்கு ஒன்று கூடுவது நகைப்புக்குரிய செயலாகவே படுகிறது. தங்களின் பணத்தை பாதுகாத்துக் கொள்ள முனையும் காரியமாகவே இது பார்க்கப்படுகிறது. நாட்டின் நன்மை கருதி கூடும் கூட்டமாக இல்லை. மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றபெயரில் , ஆடுகள் நனைகின்றன என்று ஓநாய்கள் அழுகின்றன. ஆனால் உலக நாடுகள் மோடியின் முடிவினை பாராட்டுகின்றன . புகழாரம் சூட்டுகின்றன. ஒரு பொருளாதார புரட்சியை இது ஏற்படுத்தப் போகிறது என நம்புகின்றன.
ஊழலில் மிகப் பெரிய பங்கினை எடுத்துக் கொள்வது லஞ்சம்தான். அதை எவ்வாறு ஒழித்தெடுப்பது என்பது நம்முன் வைக்கப்படும் சவால். பிரதமர் அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறார் என்பது ஆயிரம் டாலர் கேள்வி.
உயிரினங்களிலேயே பகுத்துணரும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உள்ளதால் நல்லது கெட்டது அறிந்து வைத்திருக்கிறான். ஆனால் அதுவே ஆபத்தாகவும் இருக்கிறது. தீயவைகளை எல்லாம் தெரிந்து கொண்ட மனிதன் அதில் சுகம் காணும் மன நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டது வருத்தமானது. நல்லவைகளுக்கு மேல் தீயவைகளே அதிகம் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல மனிதருக்குள்ளும் தீய எண்ணங்கள் வெளிப்பட்டு விடுகின்றன. பெரும் பாவச் செயல்கள் மட்டுமே தீயவை என்று கருத்தில் எடுக்கலாகாது. அடுத்த மனிதருக்கு இடையூறு செய்யும் செயல்கள் அனைத்தும் தீயவையே!
சுரண்டல்கள், ஏமாற்றுகள், பதுக்கல்கள், தீவிரவாதம் , பயங்கரவாதம் , போதைப் பொருள் கடத்தல்கள் போன்ற எத்தனையோ தீமைகள் இருந்தாலும் லஞ்சம்தான் அதில் பிரதானம் . எல்லா கொடுமைகளும் அதன் வழியே அரங்கேறுகின்றன. எல்லா மீறல்களும் அதனை வாசலாகக் கொண்டுள்ளன . லஞ்சம் வாங்குபவனை விட கொடுப்பவன் குற்றவாளி என நீதிமன்றம் நினைத்தாலும், தண்டனை வாங்குபவனுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இருவருக்கும் தண்டனை சமம் என்ற சட்டம் உருவானால் லஞ்சம் ஒருவேளை குறையுமோ என்னவோ!? சட்டங்கள் தானாக உருவாவதில்லை. அரசே உருவாக்க வேண்டும்.
லஞ்சத்தை எவ்வாறு ஒழிக்கலாம் என்று அப்துல் கலாம் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடியிருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் , மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:
' நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க, ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு குழந்தையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தந்தை ஊழல் செய்பவராக இருந்தால், அவரிடம் குழந்தைகள் அன்பாக பேசி அவரது தவறை உணர்த்த வேண்டும். ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளையும், சமுதாயத்தில் ஊழல் செய்வோரின் நிலையையும் எடுத்துக் கூற வேண்டும். ஊழல் செய்து வரும் பணத்தை வாங்க மறுத்தாலே, ஒரு குடும்பத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது.
நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீடுகளில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருக்கலாம். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்).
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும். '
இரண்டாம் காந்தி என்று அழைக்கப்பட்ட அண்ணா ஹசாரே என்ற சமூக ஆர்வலர் ஒருவர் திடீரென நாட்டில் எல்லோரும் வரவேற்கும் வண்ணம் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான கோஷங்களை உருவாக்கி அரசையே ஆட வைத்தார். லோக் பால் , லோகாயுக்தா சட்டங்களைக் கொண்டு வருவதற்கு மிகவும் பிரயத்தனங்கள் செய்தார். இதுவரை அதையெல்லாம் கொண்டு வருவோம் என்று சொன்ன எந்த மத்திய அரசும் அதற்கான முயற்சியை ஒரு துளியும் செய்யவில்லை. ஹசாரேவையும் விலைக்கு வாங்கி விட்டார்களோ என்னவோ அவர் இப்போது மௌனமாகி விட்டார். பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டிருக்கிறார். செல்லாத நோட்டுத் திட்டத்தை அவசரமாகக் கொண்டு வந்த மோடி அவர்கள் லோக் பால் மசோதாவுக்காக சிறு துரும்பும் எடுத்துப் போடவில்லை என்பது சற்று நெருடலான உண்மை.
மனிதனை பயமுறுத்தி வழிக்குக் கொண்டு வர சாமியையும் பூதத்தையும் மனிதனே பயன்படுத்தினான். இப்போது இந்த இரண்டுக்கும் மனிதன் பயப்படுவதில்லை. கடுமையான சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் மட்டுமே பயப்படுகிறான். யோசனைகள் ஆயிரம் சொன்னாலும் அதில் ஓட்டைகள் இட்டு வெளியில் வர மனிதனுக்குத் தெரிந்து விடுகிறது. எனவே லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க இனி பிறக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத்தான் போதிக்க வேண்டும். வளர்ந்ததை வெட்டுவது கடினம். புதிதாய் விதைப்பது எளிது. கலாம் அவர்கள் அதனால்தான் மாணவர்களிடம் போதித்தார்.
இந்தியாவில் லஞ்சம் ஒழிந்தாலொழிய நம் நாடு வல்லரசு ஆகும் என்ற கனவு கேள்விக் குறியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தனி மனிதனும் லஞ்சம் ஒழிக்கும் லட்சியம் கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிராக மனதில் உறுதி எடுக்க வேண்டும் . தீயவை மேல் தீயை வைக்க வேண்டும்.
சால்ஸ்
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு நிகழ்காலத்திற்குத் தேவையான நிதர்சனமான பதிவு. வழக்கத்திலிருந்து வேறுபட்டிருந்தாலும் வித்தியாசமான அத்தியாவசிய கருத்துக்களை அதிகமாக பதிந்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். புதிய கருத்துக்கள் எக்காலத்துமே அமோக வரவேற்பைப் பெறுவதில்லை.காலம் தான் தீர்மானிக்கும்.மோடி அவர்களது திடீர் அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தை எவ்வகையில் மாற்றப் போகிறதென்பதைப் பொறுத்துருந்து பார்ப்போம்.
ஜீவாவின் வருகைக்கு நன்றி . நாட்டுக்கு அவசியமான ஒன்றை பகிர்வதில் மகிழ்ச்சி . உங்களை போன்றோர் வரவேற்பதில் இன்னும் மகிழ்ச்சி
Deleteவணக்கம்
ReplyDeleteலஞ்சம் ஒழிய மக்கள் மனமாற்றம் வேண்டும்
நல்ல ரைட்அப்
மது தங்களின் வருகைக்கு நன்றி
Deleteசமீபத்தில் மோடி அவர்கள் எடுத்திருக்கும் ' செல்லாது ' என்ற நடவடிக்கைக் குறித்து ஒரு செய்தி வாசித்தேன்.
பிரதமரின் இந்த நடவடிக்கையால் பொது மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பெரும் பண முதலைகளும் பணத்தை மாற்ற வழியில்லாது கஷ்டப்படுகிறார்கள் என்பதே உண்மை. மோடி அவர்கள் எடுத்த முடிவால் கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா? மக்கள் வரிசையில் நின்று கஷ்டப்படுவதுதான் மிச்சம் என்று பலர் நினைக்கலாம்.
இந்தியாவிற்கு உலக அரங்கில் தற்போதுள்ள கடன் 60 லட்சம் கோடி என்று சொல்லப்படுகிறது. வட்டியாக வருடத்திற்கு நாலு லட்சம் கோடி கட்டப்படுகிறது. 46225 ரூபாய் கடன் ஒவ்வொரு இந்தியன் மேலும் சுமத்தப்பட்டிருக்கிறது. இதற்கும் கறுப்புப் பணத்திற்கும் என்ன சம்பந்தம்?
ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டிருந்த நோட்டுகள் 18 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு 500 அல்லது 1000 ரூபாய் நோட்டிலும் I promise to pay the bearer the sum of rupees என்று எழுதப்பட்டு கவர்னரின் கையெழுத்து இருக்கும் . நம்மிடம் அந்தப் பணம் இருந்தால், அரசு நம்மிடம் கடன் வாங்கியுள்ளது என்று அர்த்தம் கொள்ளலாம் . அப்படியானால் 18 லட்சம் கோடி ரூபாய் கடனாக பொது மக்களிடம் உள்ளது. 60 லட்சம் கோடி கடனோடு இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தற்போது செல்லாது என்ற அறிவிப்பில் 50 சதவீத பணம் திரும்ப வெளி வராது. 2000 ஆவது ஆண்டிலிருந்து அச்சடிக்கப்பட்ட 500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் 1 முதல் 100 வரை ஆரம்பிக்கும் வரிசை நோட்டுக்களில் 34 வது வரிசை ஆரம்பித்து 100 வரிசை வரை உள்ள நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. முதல் 33 வரை வரிசையுள்ள நோட்டுகள் மட்டுமே மக்களிடம் உள்ளன. மீதி வரிசை நோட்டுகள் பல லட்சம் கோடிகள் காணவில்லை. மோடியின் நடவடிக்கைக்கு அதுவே முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
எங்கோ முடங்கிப் போன அந்தப் பணத்தை வெளியே கொண்டு வர முடியாது. அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பண முதலைகள் , தீவிரவாதிகள் என்று பலரிடமும் அந்தப் பணம் பதுங்கியுள்ளது. தானாக வெளியே கொண்டு வரச் சொல்லி கோரிக்கை விடுத்தும் பெருமளவில் பணம் வெளியே வரவில்லை. 15 வருடமாக 33% பணம் மட்டும் மக்களிடம் புழங்கி வந்த நேரத்தில் (circulation ) 67% பணம் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் ஆடும் நிலையில் இருந்ததால் மோடி திடீரென இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
திரும்ப வராவிடில் அந்த 67% பணம் டிசம்பர் 31க்குப் பிறகு செல்லாததாகி விடும் . 18 லட்சம் கோடியில் புழக்கத்தில் இருக்கும் 33% சதவீதம் மட்டுமே திரும்பப் பெறப்படும். வெளிவரும் பதுக்கல் பணம் கொஞ்சம் சேர்த்து உத்தேசமாக 9 லட்சம் கோடி மீண்டும் அரசாங்கத்திற்கு வந்து சேரும் அல்லது கடன் அடைக்கப்படும். எந்த வித உற்பத்தியும் செய்யாமலேயே 9 லட்சம் கோடி கடன் அடைக்கப்படுகிறது என்றும் சொல்லலாம்.
எனவே டிசம்பர் 31 இல் இந்தியாவின் கடனில் ஏறக்குறைய 9 லட்சம் கோடி தானாகவே குறைந்து விடும். அதாவது internal debit not external debit . சுருங்கச் சொன்னால் கடன் பத்திரம் செல்லாது. திரும்பக் கொடுங்கள் என்று கேட்டு அரசு வாங்கிவிடுகிறது. இந்தியாவின் கடன் 50 நாளில் கிட்டத்தட்ட 20 % அடைக்கப்பட்டு விடும். It is a great move!
ஜனவரி 1 லிருந்து வெளிநாட்டு பண மதிப்பில் நமது பணம் உயர்ந்து விடும் . டாலர் மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்தியப் பண மதிப்பு உயரும்.
டாலர் மதிப்பு குறையும் . அதிகமாக கரன்சி அச்சடிக்கப்பட்டால் பண மதிப்பு குறையும் . இன்னும் அச்சடிக்க இன்னும் குறையும். இனிமேல் விலைவாசிகள் குறையும். இறக்குமதியாளர்களுக்கு நல்ல பலன். Econamical chain of reaction உருவாகும்.
10 லட்சம் கோடியும் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். முடங்கி விடாது. அரசாங்கத்தின் infrastructure development க்கு அரசாங்கத்திற்கே லோன் கொடுக்க முடியும். வங்கிகள் மீண்டும் வட்டிக்கு லோன் கொடுக்க முடியும் . தொழில் துறை முன்னேறலாம். 10 லட்சம் கோடிகளை மோடி அவர்கள் மீண்டும் வங்கிக்குள் கொடுத்து மீண்டும் கடனளிக்கிறார். செயல்பாட்டில் இல்லாத பணம் செயல்பாட்டிற்கு வருகிறது . செயல்படாத கறுப்புப் பணத்தை invalid செய்து விட்டார் . பாதிப்பு இல்லை. பொருளாதார உயர்வு ஏற்படும் சாத்தியம் அதிகம் இருக்கிறது.
அதிகப் பணம் அச்சடிக்கத் தேவை ஏற்படாது. அதிகம் அடிக்கும்போது மீண்டும் கள்ளப்பணம் உருவாகும் வாய்ப்பு உண்டு. இது ஒரு பொருளாதார புரட்சியாக பார்க்கப்படுகிறது.
நேர்மையாக லஞ்சம் வாங்காமல் வாழ்பவரின் வாழ்வில் வசதி குறையலாம்; சில நன்மைகள் குறையலாம் . ஆனால் நிம்மதியான குற்ற உணர்வு இல்லாத வாழ்க்கை தொடரும். அவர் சந்ததி பாக்கியம் பெரும். தர்மம் தலை காக்கும் என்பதற்கு உதாரணமாக கீழ்கண்ட ஒரு கதையைச் சொல்லலாம்.
ReplyDeleteபொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.
“இறைவா… என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று நா தழு தழுக்க சொன்னார்.
இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள். ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.
“அப்பா…. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களைவிட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….” என்றாள்.
அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.
காலங்கள் உருண்டன.
( தொடர்ச்சி )
ReplyDeleteகல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்துவிட்டாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர். பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.
ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.
அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா?” என்றார்.
“ஆமாம்… சார்…”
உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா?”
“ஆமாம்… சார்…” என்றாள் சற்று நெளிந்தபடி.
“ஒ… நீங்க அவரோட டாட்டரா? இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா… இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னைவிட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை. ஏன்னா… என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”
“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா… யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.
அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது. அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலொவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.
(தொடர்ச்சி )
ReplyDeleteஇரண்டு ஆண்டுகள் சென்றன… ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.
இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.
மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.
அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.
“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”
கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.
“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”
“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க?”
“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்துவிட்டேன்.”
“அப்போது உங்கள் தந்தை உங்களிடம் கேட்டுக்கொண்டது அவர் அடியொற்றி செல்வீர்களா?”
“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவருடைய படத்தை பெரிதாக மாட்டியிருக்கிறேன். அந்த ஆண்டவனுக்கு பிறகு எனக்கு எல்லாமே என் அப்பா தான்….” கண்களை துடைத்தபடி சொன்னாள் ப்ரியா.
நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?
உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை. ஆனால் அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.
நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன. கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.
உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள், ' பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தை சேர்க்கவேண்டும் ' என்று!
நிறைய உண்மை கலந்த கதை இது. நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான் பரிசு என்று மனம் கலங்காதீர்கள் . உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை நிஜமாகக் காப்பாற்றும் . நமது நாட்டையும் நேர்மைதான் காப்பாற்ற வேண்டும் .
லஞ்சம் இல்லா சமுதாயத்தை நிச்சயமாகவே உருவாக்குவோம்.
வாட்ஸப்பில் வந்தது.
ReplyDeleteநான் அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.
ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.
எனக்கு ஓரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன்.
ஒரு கிரவுன்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
நானும் ஓய்வு பெற்றேன்.
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.40,00,000-ல் பிளாட் வாங்கி குடியேறினேன்.
மருமகளும் கர்ப்பமாக இருந்தாள்.
7ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...
"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன்.
என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான்.
என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.
என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு *ஜீவனாம்சம்* மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கிக்கொண்டாள்.
இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...
அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'
என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று.
'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'
அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.
'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.
அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்... உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...
நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.
என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.
நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..?
அப்போது தான் என் காதில் *அபிராமி அந்தாதி* எங்கோ பாடியது என் காதில் விழுந்தது.
*"தனம் தரும், கல்வி தரும்...*
*ஒரு நாளும் தளர் வறியா மனம் தரும்...*
*தெய்வ வடிவும் தரும்...*
*நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்* *அன்பர் என்பருக்கே...*
*கனம் தரும் அபிராமி கடைகண்களே."*
உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே.
நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.
உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன்.
என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.
இன்று...
வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.
*அரசன் அன்று கொல்வான்...*
*தெய்வம் நின்று கொல்லும்...*
*மக்களுக்கு செய்யும் சேவையே...*
*மகேசனுக்கு செய்யும் சேவை...*
- ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...
*லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!*
இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
ReplyDeleteஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி