Saturday, 16 January 2016

இசை ராட்சஷன் - 14 ( The Musical Legend )




                    மேற்கத்திய செவ்வியல் இசை உலகத்தில் இரு விதமான இசைப்படைப்பு  இருக்கிறது . முதல்வகை இசை கதை அல்லது கருத்து சார்ந்ததாக அமையும் . இரண்டாம் வகை சுதந்திரமான எண்ண  ஓட்டங்களுக்கேற்றவாறு  மனதில் பட்டதை உருவாக்கும் இசையாக  அமையும் .  இளையராஜா அமைத்த இசை பெரும்பாலும் முதல் வகையே .  திரைப்படத்தில் கொடுக்கப்படும் சூழலுக்கும் காட்சிகளுக்கும் உணர்ச்சிகளுக்கும்  தகுந்த இசை அமைப்பதை மிகுந்த இசைவுடன் செய்பவர். திரைப்படத்திற்கு இரு விதமாக இசை அமைக்க வேண்டும். ஒன்று பாடலுக்கான இசை . மற்றொன்று திரைக்கதைக்கான பின்னணி இசை ( Re -recording ) .  இந்த இரண்டிலும் இளையராஜா தலை சிறந்தவர்.
                               
                                                     


                     ஒரு திரைப்படம்  உருவாக்கப்படுவதற்கு முன்பு இளையராஜா அவர்கள் இயக்குனர் அல்லது தயாரிப்பாளரோடு கதை கேட்க அமருவார்.  கதைக்களம் விளக்கப்பட்டு  தேவைப்படும் இடங்களில் பாடல்கள் அமைக்க  ராஜாவிடம் தெரிவிக்கப்படும். சில வேளைகளில் இயக்குனருக்கோ தயாரிப்பாளருக்கோ எந்த இடத்தில் பாடலை புகுத்துவது என்பதில் குழப்பம்  ஏற்பட்டால் இளையராஜாவே சரியான இடங்களை  தேர்வு செய்வதற்கு ஆலோசனை  வழங்குவார்.  இந்த அமர்வு சில நேரங்களில் இரு முறை  நடக்கும்.  கதை கேட்க ஒரு முறையும் பாடல் compose செய்ய இன்னொரு முறையுமாக இரு அமர்வுகள்.


                       ஒரு திரைப்படத்திற்கு ஐந்து பாடல்கள் தேவை என்று  வரும்போது பல மெட்டுகள் (tunes) வாசித்துக்காட்டப்பட்டு அவைகளிலிருந்து  சில மெட்டுகள் தேர்ந்தெடுக்கப்படும்.  இளையராஜா தனது பிரியமான ஆர்மோனியத்தை பயன்படுத்தி  வாசித்து  பாடியும்  ( Humming  )  காட்டுவார்.  அந்த மெட்டுகள் எல்லாம் டேப் ரெக்கார்டரில் பதிவு செய்யப்படும்.  மெட்டுகளை தேர்ந்தெடுப்பது வெகு நேரம் நீடிப்பதும் உண்டு. சில வேளைகளில் வெறும் 45 நிமிடங்களில் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் தேர்வாகி விடும். உதாரணமாக  இயக்குனர் P. வாசு அவர்கள் இயக்கிய ' சின்ன தம்பி ' திரைப்படத்திற்கு மிகக் குறைவான நேரத்தில் பாடல்கள்  compose  செய்யப்பட்டன.


                       " ஒவ்வொரு சூழலையும் நான் இளையராஜாவிடம் விளக்கிச் சொல்ல சொல்ல  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான டியூன் அவரிடமிருந்து உடனுக்குடன் வெளி வந்தது.  மிகக் குறைவான நேரத்தில் நான் கேட்ட அத்தனைப் பாடல்களுக்கும் டியூன்கள் விரைவாக வாசிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டன  "  என்று  வாசு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


                          ஒரு பாடலுக்கான டியூன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அது தனித்த டேப்பில் பதிவு செய்யப்பட்டு பாடலாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும் .  பாடலுக்கான டியூன் தேர்ந்தெடுக்கும்போதே பாடலாசிரியர் யார் என்பதையும் முடிவு செய்வார்கள்.  இந்த அமர்வின்போது இளையராஜாவின் இசைக்குழுவில் குரல் பிரிவை வழிநடத்தும் சுந்தரராஜன் என்பவர்  உதவியாளராக உடனிருப்பார்.  பாடல்களுக்கு கொடுக்கப்பட்ட ஹம்மிங் அனைத்தும் பதிவு செய்து அந்தப் பதிவு நாடாக்களை  பராமரிக்கும் பொறுப்பினையும் சுந்தரராஜன் மேற்கொள்வார். பாடல்களுக்கான ஸ்வரங்கள் அனைத்தும் சுந்தரராஜன்  எழுதி அவற்றையும்  பதிவும்  பிரதியுமெடுப்பார்.  பாடல் பதிவு  செய்யப்படும் நேரத்தில்  ஸ்வரங்கள் எழுதப்பட்ட பிரதிகள் பாடகர்களுக்கும் இசைக்கருவிகள் இசைப்போருக்கும் கொடுக்கப்படும்.  இதுவரை  சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் கூட முடிந்திருக்கிறது.

               
                               பாடல் பதிவு நடக்கும் நாளில் இளையராஜா பதிவுக் கூடத்திற்கு சரியாக காலை 7 மணிக்கு வந்து விடுவார்.  அதற்கு முன்னரே  அவருடைய உதவியாளர் சுந்தரராஜன் , பாடலுக்கான டியூன் பதிவு செய்த நாடாவினை  இளையராஜாவின் அறையில் வைத்திருப்பார். படத்தின் இயக்குனர் மீண்டும் ஒருமுறை பாடலுக்கான சூழலையும் பாடலை இயக்கப் போகும் விதங்களையும் ராஜாவிடம் விளக்கிச் சொல்லுவார்.


                          ஒரு உதாரணம் பார்ப்போம்.  ஒரு படத்தில் ஒரு கதாநாயகி  பாடலை   பாடும் சூழல் விவரித்துக் காட்டப்படுகிறது.  அவள் பாடும்போதே  அவள் வாழ்க்கையில் ஏற்படப் போகும் இழப்பினையும் சோகத்தையும் இயக்குனர் எடுத்துக் கூறினார் என்றால்  இளையராஜா அதற்குத் தகுந்தாற்போல இடையிசையில்  ( BGM ) சில மாற்றங்களைச் செய்வார். ' நான் பாடும் பாடல் ' என்ற திரைப்படத்தில் வரும் ' பாடவா உன் பாடலை ' என்ற பாடல் இதற்கு உதாரணம்.


                          அம்பிகா ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒரு அழகான பாடலை  பாடிக் கொண்டிருக்க அவர் கணவர் மோகன் தன் மனைவி பாடுவதை நேரில் பார்த்து ரசிக்க தனது காரில் வேகமாக வருவதை இயக்குனர் பரபரப்பாக பாடலின் இடையில் காட்டுவார்.  ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதை காட்சிகள் சொல்லுவதற்கு முன்னரே  இசை சொல்லி விடும்.  நமக்கு ஏற்படும் படபடப்பை இசையிலேயே இளையராஜா கொண்டு வருவது அற்புதம். அதே ஜோடி சேர்ந்து நடித்த ' இதயக்கோயில் ' என்ற படத்தில் மோகன் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடிக்கொண்டிருக்க அம்பிகா அவரைத்  தேடி வந்து சில கயவர்களிடம் மாட்டிக் கொண்டு தப்பித்து ஓடுவதை பிரமாதமான இடையிசையில் ராஜா பரபரப்பூட்டுவார். ' யார் வீட்டில் ரோஜா ' என்ற அந்த தேனிசைப் பாடலுக்கு இளையராஜா இசையாக கோர்த்திருக்கும் string  passages அவ்வளவு  அழகு! வெகுவாக ரசிக்கலாம்.


                              ' ஆனஸ்ட் ராஜ் ' என்ற திரைப்படத்தில்  இது போன்ற இக்கட்டான சூழலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ' வானில் விடிவெள்ளி '  என்ற பாடல்  முழுவதும் நிகழ்  காலத்திலிருந்து இறந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும் புதுமையான காட்சிகளாக இருக்கும் .  இயக்குனர்  குழு நடனம் இருப்பது போன்று சூழல் சொன்னதாலோ என்னவோ  குழுவினரின் குரலோசையோடு  காட்சியும் இசையும் பின்னப்பட்டிருக்கும் .


                               இவ்வாறாக பல்வேறு திரைப்படங்கள், விதவிதமான கதைப்பின்னனிகள், வெவ்வேறு சூழல்கள் , பலவிதமான உணர்ச்சிகள்  அனைத்தையும் உள்வாங்கி, வெவ்வேறு விதமான மெட்டுகளை அமைத்து . ஒன்று போல மற்றொன்று இல்லாதவாறு பலதரப்பட்ட பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்கும் இளையராஜாவின் இசைத் திறமை , உழைப்பு மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாகும் .


                             பாடல் பதிவு ஆரம்பிக்கும் முன்பு  , தந்திக் கருவிகளான violin , viola , cellos , double bass ,  brass section  போன்ற இசைக்கருவிகள் இசைப்போர், சிறப்புக் கருவிகளான sitar , veena , sarangi , chennai  போன்ற இசைக்கருவிகளை மீட்டுவோரையும்  ஒன்று கூட்டிச் சேர்க்கும் பொறுப்பினை ராஜாவின் உதவியாளர்களான திரு. கல்யாணம்  மற்றும்  திரு. சுப்பையா  ஆகிய இருவரிடமும் இளையராஜா ஒப்படைத்திருப்பார். ராஜாவிற்குத் தேவையான கருவிகளையும் அதை இசைக்கும் கலைஞர்களையும் ஒலிப்பதிவு  நேரத்தில் அழைத்து வந்திருக்க வேண்டிய  பொறுப்பு அவர்களதே!


                   இப்போது ஒரு முழுப் பாடலுக்கான இசைக்குறிப்புகள் அடங்கிய தாள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்பட்டு இசை ஒத்திகை ஆரம்பமாகும்.


                             இளையராஜாவின் இசையறிவை வெறும் திறமை என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிட முடியாது . அவர் அதையும் தாண்டியவர்! அவரின் இசைத் திறமை அளவிடற்கரியது .  அவர் மனதில் என்னென்ன  யோசனைகளும் நுணுக்கங்களும் வண்ணங்களாக ஓடுகிறதோ  அவற்றை எண்ணங்களாக்கி  இசைக்குறிப்புகள் உருவாக்கி தாளுக்கு மாற்றுவார்.  இசைக்குறிப்புகளை  வேகமாக எழுதுவதில் ராஜா திறமைசாலி. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து அழகு சேர்க்க நினைத்தாரென்றால் மாற்றங்களையும் உடனுக்குடன் இசைக்கருவி மீட்டுவோரிடம் பகிர்ந்து கொள்வார்.  முன் தயாரிப்பு ஏதும் இல்லாமலேயே மாற்றங்கள் சரி செய்யப்படும். இசைக்குறிப்புகளில் பெரும்பாலும் திருத்தங்கள் இருக்காது. பாடலிலோ பின்னணி இசையிலோ மாற்றங்கள் இருந்தால் அவை மட்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு  சேர்க்கப்படும்.  கடைசி நேர மாற்றங்களை எந்த இசைக்கருவியையும்  இசைத்துப் பார்க்காமலே இசைக்குறிப்புகள் எழுதுவதில் ராஜா கெட்டிக்காரர். அதை வாசிக்கும்போது எந்தத் தவறும் இருக்காது. இசைக்குழுவினர் அதைக் கண்டு ஆச்சரியமடைவர்.


                               ஒரு பாடலை உருவாக்க அவர் அமர்ந்துவிட்டால் முழுப்பாடலும் திடீர் ஒலிப் பிரளயமாக தோன்றி மூன்று படிநிலைகளில் உருப்பெற்று விடும்.  முதல் படிநிலை பாடலுக்கான தாள நடை (Rythm  Pattern ), இரண்டாம் படிநிலை இசைக்கருவிகள் தேர்ந்தெடுத்து இசைக்கும் முறை (Orchestration ), மூன்றாம் படிநிலை குரல் தேர்வு  (Vocal Pattern ).

   
                                           ராஜாவிற்கு உள்ள சிறிய பிரச்சனை  என்னவென்றால் குறிப்புகள் எழுதும் வேகத்தை விட மனது அதிவேகமாக செயல்படுவதுதான்!  கை எழுத முயல்வதற்குள் மனது நிறைய   எழுதி  முடித்து விடுகிறது.


                                              " ஒரு முறை நான் பாடல் எழுத அமர்ந்துவிட்டால், எந்திரத்தனமாக என் மனதில் என்னென்னவோ ஓடுவதை எல்லாம் என்னால் எழுதி முடிக்க முடியாது. பாடல் முழுமை பெறும்போது நான் ஆரம்பத்தில் யோசித்ததெல்லாம் மாறிப் போயிருக்கும். நான் எழுதி முடித்தது சரியா அல்லது ஆரம்பத்தில் எழுத நினைத்தது சரியா என்று என்னாலே பிரித்துப் பார்க்க முடியாது. நான் மனதில் நினைத்ததை எல்லாம் பதிவு செய்யும் கருவி ஏதும் இருக்கிறதா என்ன !? "  என்று இளையராஜா தன் இசைக்குறிப்பு எழுதும் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.


                                                 பாடலுக்கான இசை ஒத்திகை நடைபெறும் முன்பு இசைக்குறிப்பு எழுதப்பட்ட தாள்களின் வலது மூலையில் 7  A.M  அல்லது 2 P.M  என நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.  1989 வரை இளையராஜா ஒரு நாளைக்கு  இரண்டு பாடல்கள் மட்டுமே பதிவு செய்வார். ஒரு பாடல் காலை நேரத்திலும் அடுத்த பாடல் மாலை நேரத்திலும் பதிவு செய்யப்படும். சில நேரங்களில் ஒரே நாளில் நான்கு  பாடல்கள் கூட பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு பதிவுக் கூடங்களில் இரு வேறு இசைக் குழுக்கள் மற்றும் பாடகர்கள் சேர்த்து ஒரே நேரத்தில் பாடல் பதிவு  நடைபெறும். இசைக்குறிப்புத் தாளில்   (Score Sheet)  மேல் இடது மூலையில் பாடகர்களின் பெயர், பாடலாசிரியரின் பெயர்,  படத்தின் தலைப்பு , படக் கம்பெனி பெயர் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்.


                                   காலை 7.45 முதல் 8 மணிக்குள் இசைக்குறிப்புகள் தயாராகி விடும். தன்  இசைமொழியை ராஜா குறிப்புகளாக கொடுத்துவிடுவார்.  அது முழுமையானது அல்ல.  ஒத்திகை  நடக்கும்போது  இசையில் சில மாற்றங்கள் கொண்டு வர நினைத்தால் குறிப்புகளில் திருத்தம் செய்வார்.  பல ஆண்டு காலமாக அவரோடு சேர்ந்து  இசைக்கும் கலைஞர்களுக்கும் அவருக்கும் நல்ல ' புரிதல் ' இருக்கும் காரணத்தினால் திருத்தங்களை உடனே புரிந்து கொண்டு மிகச் சரியாக வாசிப்பார்கள்.

             
                                       அந்த இசைக்குறிப்பேட்டில்  குழுவினர் குரலோசை, வார்த்தைகள், ஆண்  மற்றும்  பெண் பாடகர் பாடும் பகுதி , தனியாக அல்லது குழுவாக பாடும் பகுதி என்று எல்லாமே அடங்கியிருக்கும். தனித்த குழலின் ஓசை அல்லது இரண்டு மூன்று குழல்கள் சேர்ந்து ஒலிக்கும் ஓசை , தனித்த வயலின் அல்லது  வயலின் குழு வாசிக்கும் பகுதி , multitrack-ல் கலப்பு செய்யப்பட வேண்டிய இசைப்பகுதி என்ற விசயமும் எழுதப்பட்டிருக்கும்.


                                               மேற்கத்திய இசைக்குறிப்புகளும் ஸ்வரங்களாக தமிழில் எழுதிக் கொடுக்கப்படுவதால் இசைஞர்களுக்கு அவை எளிதாக புரியும்.  அது கூடுதல் உந்து சக்தியாக இருக்கும். western notation எழுதுவதில் அது  புதிய பாணி.


                                                      Royal Philharmonic Orchestra  விற்காக  அவர்  உருவாக்கிய  அனைத்தும் முழுமை பெற்ற இசைக்குறிப்புகள்  ( full - score format)   அவை பெரிய இசையரங்கில் நடத்தப்படும் இசைக்கான  ( concert  ) குறிப்புகள்  என்று சொல்லலாம். ஒரு முறை அந்த இசை வெளியிடப்பட்டு விட்டால் இந்த உலகத்தில் உள்ள எந்த இசைக்குழுவினரும்  இசைக்கலாம்.  அந்த இசைக் குறிப்பேட்டில் எல்லாமே அடங்கியிருக்கும்.  அதை வழிநடத்தும் இசை நடத்துனர்  இசையின்   tempo வில் சிறிய மாற்றம் செய்து கொள்ளலாம்.  அவ்வளவுதான்!


                                                      ஒலிப்பதிவு கூடத்தில் எழுதப்படும் இசைக்குறிப்பு முழுமை பெற்றது அல்ல. சிறு சிறு குறிப்புகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். வயலின்களின் நாதம் ஒலிக்கப்படும்போது  இடையில் ஒரு புல்லாங்குழல் இழையோட வேண்டுமென்று இளையராஜா நினைத்தாரென்றால் அந்த வேளையில் அதற்கான குறிப்பு தருவார். குழல் இசைப்போருக்குத் தேவையான   சுருதி, மெலடி , டெம்போ எல்லாவற்றையும் வார்த்தைகளாலேயே   தந்து விடுவார். இசை பதிவு செய்யப்பட்ட பிறகு இசைக் கலப்பு செய்கையில் எது உரத்து ஒலிக்கவேண்டும்,  எது சன்னமாக ஒலிக்கவேண்டும்  , எது முதலில், எது அடுத்து  என்பதை இளையராஜா பின்னர் முடிவு செய்வார்.  இசைக்கலவையில் செய்யும் மாற்றங்கள் இளையராஜாவின் தனித்திறமை.


                                              ஆனால்  முழுமையான இசைக்குறிப்பு கொடுக்கப்பட்ட இசையரங்கு நிகழ்ச்சியில் வெவ்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்படும்போது  எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது.  அந்த இசைக்குக் குறிப்புகள் எழுதுவது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல .  எந்தெந்த கருவிகளை எப்படி வாசிக்க வேண்டும் என்ற அதீத இசையறிவு இருந்தால்தான் முழுமையான இசைக்குறிப்புகளை எழுத முடியும் .  கை தேர்ந்த இசைக்கலைஞர்களால்தான்  அதைப் புரிந்து கொள்ளவும் முடியும். சிம்பொனி இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்.   அக்குழுவில் எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் எதுவும் இடம் பெறாது. தனித் தனியே யாரையும் வாசிக்கும்போதே திருத்தவும் முடியாது. ஒரு கருவிக்கு எழுதப்பட்டதை இன்னொரு கருவி கொண்டு வாசிக்கச் சொல்லவும் முடியாது. உதாரணமாக  வயலின் கொண்டு வாசித்த அதே மெலோடியை  sax player கொண்டு வாசிக்க முடியாது.  ஒரு சிம்பொனி இசையமைக்க தகுதிக்கும் மீறிய  கற்பனா சக்தி இருந்தாலொழிய  அதை   யாராலும் எழுதி விட  முடியாது.


                                               Brass section தந்திக் கருவிகளோடு  சேர்ந்து வாசிக்கப்படும்போது  இடையில் ஒரு குழலின் நாதத்தை இழையோட விடுவதற்கு அதன் சுருதி , ஒலித்தரம் புரிந்திருந்தால்தான் மற்றவரின் காதுகளுக்கு வந்து சேரும்படியான இசைகுறிப்பு  எழுத முடியும். செவ்வியல் சிம்பொனி இசை அமைப்பதில் கடினத்தன்மை அதிகம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.    இளையராஜாவின்  இசை ஆளுமையின் மொத்தப்  பரிமாணம்  அவருடைய சிம்பொனி  இசைக்கான  இசைக்குறிப்புகள்.  இதை சிலர் மறுக்கலாம்.  ஆனால்  Royal Philharmonic Orchestra in  London  அதை மறுக்கவேயில்லை .
               

                                       இணையத்தில் கொடுக்கப்பட்டிருந்த செய்திகளின் அடிப்படையில் ஒரு திரைப்படத்திற்கான  பாடலை இளையராஜா  உருவாக்கும் விதத்தை நான் விளக்கிக் கொண்டிருந்தேன்.  இன்னும்  பாடலுக்கான  ஒத்திகையும் பதிவும் கலவையும்  எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை என்னுடைய அடுத்த பதிவில்  பார்க்கலாமே!


                                                           அவருடைய பாடல்கள் பற்றி சிலாகிக்காமல் எப்படி இந்தப் பதிவை முடிப்பது?  மீண்டும்  1979 காலகட்டத்திற்குச்  சென்றால்  ' கல்யாண ராமன் '  படம் பார்த்த ஞாபகம் எழுகிறது.  மறக்க முடியாத படம். அன்றொரு நாள்  திடீரென பள்ளிக்கு அரைநாள் விடுமுறை  கொடுத்து விட்டார்கள். நானும் எனது அண்ணன்மார்களும் சேர்ந்து புத்தகப் பைகளோடும் சீருடையோடும்  தியேட்டருக்குப் போய்விட்டோம் . நல்ல கூட்டம் . வெயிலில் வரிசையில் நின்றோம்.  'பள்ளிக்கூடம்  போகாமல் இங்க எங்கடா வந்தீங்க? ' என்று சில பெரிசுகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது.  அப்போதெல்லாம் சிறுவர்கள் தப்பான காரியம் ஏதாகிலும் செய்வதாக தெரிந்தால் பொது ஜனங்களே கேள்வி கேட்பார்கள்.  கண்டிப்பார்கள்.  சிறு வயதில் பொது இடங்களில் தவறு செய்ய அஞ்சுவோம்.  இப்போது நிலைமை மாறிவிட்டது.  யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை.  சிறு பையன்களின் ரௌடித்தனத்தை நிறைய இடங்களில் பார்க்கலாம்.  no moral fear !


                                             டிக்கெட் எடுக்க வரிசையில்  நிற்கும்போதே நாலாவது தடவையாக  படம் பார்க்க வந்திருக்கும் ஒரு புண்ணியாத்மா படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தது.  எரிச்சலாக இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத வயசு.  சிலர் ஆர்வமாக கேட்பதை பார்த்தால் அதை விட கூடுதலாக  கோபம் வந்தது .  இடத்தை விட்டு நகர்ந்தால் டிக்கெட் கிடைக்காது. நகரவும் முடியாமல் கதை சொல்வதை கேட்காமல் இருக்கவும் முடியாமல்  நெளிந்து கொண்டிருந்தபோது  ஒரு பெரிசு சத்தம் போட்டார்.  கதை சொன்னவன் அடங்கிப் போனான்.  அப்படி வெயில், வியர்வை, இம்சைகளை கடந்து தியேட்டருக்குள்  நுழைந்து   ' அக்கடா '  என்று அமர்ந்தால் பின்னால் இருப்பவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.  எப்படியிருக்கும்!?


                                                    படம் ஆரம்பித்த பிறகு படத்தையும் இசையையும் வெகுவாக ரசித்தேன்.  கமலஹாசன் நடிப்பு , இளையராஜாவின் இசை இரண்டும் படத்தை ஓட வைத்தது என்றால்  யாரும் மறுக்க முடியாது. பல்லழகர்  கமலஹாசனின்  சேட்டைகள் மற்றும்  நகைச்சுவையை தியேட்டரே என்னோடு சேர்ந்து ரசித்தது.  அப்போதிருந்த வெடிச் சிரிப்பெல்லாம் இப்போது தியேட்டரில் கேட்க முடிவதில்லை.


                                                     அந்தப் படத்தில்   ' காதல் வந்துருச்சு ...ஆசையில் ஓடி வந்தேன்....'  என்ற அட்டகாசமான பாடலை  மலேசியா வாசுதேவன் தன்  குரல் மாற்றி வித்தியாசமாக பாடியிருப்பார்.  கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போனது.  பாடல் வரிகளுக்கு தியேட்டரில் சிரிப்பலை கிளம்பியதை பார்த்தேன்.   பஞ்சு அருணாச்சலத்தின் நையாண்டித்தனமான  கவிதை வரிகளுக்கு ராஜாவின் இசையும்  கமலஹாசனின் சேஷ்டைகளும்  ரசிக்கும்படி இருந்தது.   ரஞ்சனி  ராகத்தில்  இரு வேறு சூழலுக்கும் ராஜா இந்த மெலோடியை பயன்படுத்தியிருப்பார்.   மீண்டும் அதே பாடல் ' காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன் '  என்று காதலோடு வாசுதேவனின் வழக்கமான குரலில் ஒலிக்கும் . கேலிக்கும் காதலுக்கும் ஒரே இசை .   வார்த்தைகள் மாறும் . BGM  எல்லாம் வேறுபடும்.  பாங்கோஸ்  தாள கதியை அப்போதே ரசித்து கேட்டது ஞாபகம் இருக்கிறது.  இடையில் தாள நடை மாறுவது வழக்கமான இளையராஜாவின் பாணி. அதை இதிலும் ரசிக்கலாம்.


                                                          பட்டி தொட்டி எல்லாம் பரபரத்த பாடல் . சின்னஞ்சிறுசுகள்  எல்லாம் பாடிக்கொண்டு அலைந்தன . வாய்க்குள் நுழையாத அர்த்தமற்ற வார்த்தைகளைப்  போட்டு  சிறுவர்களைக் கவரும்  முயற்சி எல்லாம் ராஜா செய்ததில்லை.  எல்லோரும் பாடுவதற்கு  ஏற்ற எளிமையான மெட்டு என்பதால்  அந்தப் பாடல் சூப்பர் ஹிட்.


                                                     

                                ' காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்  '  என்ற பாடலை தன வழக்கமான குரலில் வேறுபட்ட இடையிசைகளோடு வாசுதேவன் பாடுவார்.  ஒரே மெட்டுக்கு ஆறு இடையிசைகளில்  இளையராஜா வித்தியாசம் காட்டியிருப்பார்.  அது  நிச்சயம்  பெரிய உழைப்பு. இரண்டாவதாக பாடப்படும் அதே  பாடலில் நாயகி மனப்பிரள்விலிருந்து  மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவது போன்ற காட்சி. அதற்கேற்றார்போல ராஜாவின் இசையும் நமக்குள் வியப்பூட்டும். நையாண்டித்தனம் இல்லாமல் பரபரப்பூட்டும் முற்றிலும் வேறுபட்ட வித்தியாசமான இடையிசை பிரமாதம். பிரமிப்பூட்டும் விதமாய் String Passage அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதுவும் கதை சொல்லும்.  அன்று  பெரும்பாலும் வந்த திரைப்படங்கள் கதையோடு இசையும் இசையோடு கதையும் ஒன்றிணைந்த திரைப்படங்களாகவே  பரிணமித்தன.


                                         கதையின் களத்தை நன்கு உணர்ந்து தன்  கற்பனைக் குதிரையை ஓட வைத்து கதைக்குத் தகுந்தாற்போல் இசையமைப்பதில் இளையராஜாவிற்கு நிகர் யாருமில்லை.  கீழேயுள்ள பாடல் அதை நமக்கு உணர்த்தும். 

                                             


                                ' மலர்களில் ஆடும் இளமை புதுமையே '  என்ற பாடல் பஞ்சு அருணாசலம் எழுதி சுத்த சாவேரி ராகத்தில் எஸ். பி. ஷைலஜா தன் இனிய குரலில்  பாடிய அழகான பாடல்.   மார்கழிப் பனியின் இதமான குளிரில் நனைய வைப்பது போன்ற சுகமான பாடல்.  அன்றலர்ந்த மலர் போல நாயகி உற்சாக வெள்ளத்தில் மிதந்தபடி காலை நேரப் பனியினை  சுகித்துக் கொண்டு ஆடிப்பாடும்  சுகானுபவத்தை ராஜா இன்னிசையில் கொடுத்திருக்கிறார்.  மயிலும் குயிலும் குதூகலமாய்  ஆடுவதை பாடுவதை  முன்னிசையில் கொடுத்ததாலோ  என்னவோ இயக்குனரும் அதையே காட்சிகளாக விரித்திருப்பார்.  அல்லது காட்சிகளை எப்படி எடுப்பீர்கள் என்று இயக்குனரிடம் கேட்ட பிறகு ராஜா இந்தப் பாடலுக்கு இசைத்திருப்பாரோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.   காலை நேரத்து பலவித பறவைகளின் சப்தங்களை  இசைக்கருவிகளின் நாதத்தில்  இழைய விட்டிருப்பார். இடையிசையில் தபேலாவின் நடைமாற்றம் உற்சாகமூட்டும்.  மொத்தத்தில் பல பூக்கள் தொடுத்த மாலையாக பலவித இசைக்கருவிகளின் சங்கமத்தை ஒரே இசைமாலையாக  தொடுத்து நமக்கு இசைவிருந்து  கொடுத்திருக்கிறார்.
 

                                                   

                           அதே ஆண்டில் வெளிவந்த  சிவாஜியின் ' கவரிமான் ' என்ற திரைப்படம் மறக்க முடியாதது.  சிவாஜிக்கும் நான் ரசிகன் என்பதால் அவர் படங்கள் ஒன்று விடாமல் பார்த்துவிடுவேன்.  இந்தப் படத்தில் கதையை திசை திருப்பும் ஒரு முக்கியக் கட்டம் உண்டு. தன் மனைவி யாருடனோ சோரம்  போவதை  நேரில் பார்த்தவுடன்  அவர்  தன்  முகத்திலும் உடல்  அசைவிலும் காட்டும் உணர்ச்சிகளின்  கொந்தளிப்பை  இளையராஜா  பின்னணி இசையில் கூடுதலாக  காட்டியிருப்பார்.  அந்தக் காட்சியையும் அதற்கான பின்னணி இசையையும்  இன்னும் நான் மறக்கவில்லை. படபடப்பூட்டும்  காட்சி பரபரப்பூட்டும் இசை.


                                   அந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும்      ' 'பூப்போலே...உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா ' என்ற பாடல்  என்னை அதிகம்  கவர்ந்த பாடல்.  மாயமாலகௌலை  என்ற ராகத்தில் அமைந்த பாடல். பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளுக்கு எஸ்.பி. பி அவர்களின் குரலில் மனதை மயிலிறகால் வருடும்  அற்புதமான பாடல்.  சிவாஜி தன்  சிறு வயது மகளுக்காக மகிழ்ச்சியாக பாடும் வாழ்த்துப்பாடல் .  தாலாட்டுப் பாடல் இல்லையென்றாலும் நம் எல்லோரின் மனதையும் தாலாட்டிச் செல்லும் பாடல்.  உயிருக்கு உயிராய் நேசித்த தன்  மகளுக்காக பாடிய பாடலை , அதே மகள்  வளர்ந்த பிறகு தந்தையை அவள் வெறுக்கும் சூழலில் , மீண்டும் பாடும்போது அந்தப் பாடலின் அருமை இன்னும் கூடுதலாய் உயர்ந்து நிற்கும். ஒரே பாடலை இரு முறை காட்சிகளாய் காட்டியபோது  சிவாஜியின் நடிப்பை வெகுவாக ரசித்தேன். இளையராஜாவின் இசையை அதை விட ரசித்தேன்.


                                                  மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை மீண்டும் வெளிப்படுத்துதலிலும்  தந்தையின் நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தலிலும் இளையராஜா வெளிக் காட்டும் இடையிசையோடு  சிவாஜியின் நடிப்பும் ஈடு கொடுக்கும்.  இந்தப் படத்திலும் ஒரே பாடல் இரு முறை பாடப்படுகிறது.  இடையிசைகளும் வேறுபடுகிறது.  இரண்டாம் முறை பாடுகையில் இசையில் ஒரு மெல்லிய சோகத்தை ராஜா அற்புதமாக கொடுத்திருப்பார்.  அதிலும் இரண்டாம் இடையிசையில் ஒற்றை வயலின் நாதம் நமக்குள் இனம் புரியா  இம்சையான வலியை ஏற்படுத்தும்  .  இரு முறை பாடப்படுவது ஒரே காணொளிக் காட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது.


                                               


                      கதையின் போக்கிற்கு ஏற்ற  பாடல்களைக் கொடுப்பதில் இளையராஜா எப்போதுமே சளைத்ததில்லை.  கதையை  முழுமையாக கேட்டறிந்த பின்னரே பாடல்களை அவர் கற்பனை செய்து அவற்றையெல்லாம் மக்களின் எல்லா மன உணர்வுகளுக்கு ஏற்ப  பட்டை தீட்டி கொடுத்திருக்கிறார்.  மக்களும் ஏற்றுக் கொண்டதால்தான் அவரை மகத்தான கலைஞராக இசைஞானியாக பார்க்கிறார்கள்.   இசையுலகில் யாரும் அழிக்க முடியாத மறக்கவோ மறுக்கவோ முடியாத பேரிடத்தை  அடைந்து விட்டார்.  இசை உள்ளளவும் இசைஞானியும் உண்டு.



................................தொடர்வேன்.......................


                      

Saturday, 19 December 2015

சொல்லிச் சொல்லி மாளாது ...சொன்னால் துயர் தீராது...



                                          மழை . எப்போதாவது  வரும்போது  பார்த்து மகிழ்வோம் . அடிக்கடி பெய்தால் இன்னும் மகிழ்வோம் . தொடர்ந்து பெய்தால் சற்று மிரள்வோம்.  பேய் மழையாக  இருந்தால் சற்று கலங்குவோம்.  அடிக்கடி தொடர்ந்து எப்போதும் பேய் மழையாக இருந்தால்  என்ன செய்வோம்!? மகிழ்வு மறைந்து மிரட்சி தொடங்கி மனசு கலங்கி பயத்தில் உறைந்து போவோமா இல்லையா?  அதுதான் நடந்தது.  அந்த நான்கு மாவட்டத்து லட்சக்கணக்கான மக்களுக்கும் அதுதான் நடந்தது. 

                                                         

                                      தீபாவளியை கொண்டாடிய சந்தோசம்தான் அந்த ஜனங்களுக்கு சமீபத்திய கடைசி  சந்தோசமாக இருக்கும்.  அதன் பிறகு தொடர் புயலினால் ஏற்பட்ட தொடர் மழையால் ஒரு மாத காலமாக எதையோ பறிகொடுத்தவர்களாகவே  தெரிகிறார்கள். வெள்ளம் வடிந்தாலும் சந்தோசமும் வடிந்த முகத்தோடு திரிகிறார்கள்.  உண்மையில் அவர்களில் பலர் எல்லாவற்றையுமே பறிகொடுத்தவர்கள் . வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த சொத்து,சுகம், உடைமைகள்  அனைத்தும் மழை வெள்ளம் வழித்து எடுத்து விட்டுப் போய்விட்டது .  பலரது வீட்டையும் காணவில்லை.  உயிர் தவிர மிஞ்சியது ஏதும் இல்லாதவர் பலர். கெஞ்சிக் கேட்டு கையை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டவரும் பலர்.


                                  ஊரு விட்டு ஊரு வந்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் ஜனங்கள் நிறைந்த நகரம்  சென்னை. திடீரென பத்து நாட்களுக்குள்  நரகமாகிப் போகும் என யாரும் ஆருடம் கூறவில்லை.  நரகத்தையும் மரணத்தின் விளிம்பினையும்  நேரில் பார்த்ததை செரித்து விடக்கூடிய  மனநிலையில் அங்கு வாழும் மனிதர்கள் யாரும் இல்லை. ஊரை விட்டு உறவை விட்டு ஓடிப்போய் உயிர் தப்ப நினைப்பதற்குள் பல வீடுகளை மழையும் வெள்ளமும் கபளீகரம் செய்தது.  தண்ணீர் சூழ்ந்தது. உயரமான பகுதிகளில் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது.

                                                   

                                  உணவில்லை . குடி நீர் இல்லை.  மாற்றிக் கொள்ள துணி இல்லை. பலருக்கும் வாழ்க்கை சூன்யமாகிப் போனது. உயிராவது  மிஞ்சுமா என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்த வேளையில் உதவிக் கரங்கள் கொஞ்சம் நீள  ஆரம்பித்தன .  அரசிடமிருந்து  அந்த  நேரத்தில் வந்த உதவி ஒன்றுமில்லை.  வந்திருந்தாலும் அது தாமதமாய் வந்தது.  அண்டை வீட்டுக்காரர்கள்,  அடுத்தத் தெருக்காரர்கள், முகமறியா நல்ல மனிதர்களின் நேசக்கரங்கள் தாங்கியதால் போன உயிர் திரும்பி வந்தது.


                                        எல்லாமே கேள்விப்பட்டதுதான்!  தென் தமிழகத்தின் மையப்பகுதியில் புயல் மழை அதிகம் பாதிக்காத மதுரையில் இருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் நிலவரம் அறிந்து கொண்டிருந்த என் போன்றோருக்கு நடந்த கலவரம் தெரியாது. மக்களின் வலி புரிந்திருக்கவும் நியாயமில்லை. அதுவும் என் கசின் சென்னையிலிருந்து வந்து சேர்ந்த பின் புரிய ஆரம்பித்தது.    அவனுடைய  குடும்பம் மதுரையில் இருந்ததால் மழையின் சொரூபம் கண்டு மிரண்டு ஓடி வந்து விட்டான். அன்றே நான் அவனை சந்தித்தபோது  அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அலைகளை என்னால் உணர முடிந்தது.  அவன் அனுபவம் அறிந்தேன்.


                                    இடுப்பளவு தண்ணீரில் சாலையைக் கடந்து எக்மோரை அவன் பயத்துடனேயே அடைந்தபோது டிக்கட் பதிவு செய்யப்பட ரயில் ரத்தானது.  கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்து  கூட்ட நெரிசலில் சமாளித்து  கோயமுத்தூர் வந்து,  பிறகு பஸ் பிடித்து மதுரை வந்து சேர்ந்தான்.
தன்னுடைய நண்பர்கள் , உடன் பணியாற்றுபவர்கள் எல்லோரும் சென்னையிலேயே மாட்டிக் கொண்டதாக வருத்தப்பட்டான்.


                                    " உயிருக்கு பயந்து நான் ஓடி வந்து விட்டேன். அடைக்கலம் தேட எனக்கு மதுரை இருக்கிறது. அவர்கள் சென்னையிலேயே வாழ்பவர்கள் . எங்கே போவார்கள்? " என்று கவலையுற்றான்.

                                    " யாருக்கும் உதவி செய்யாமல் வந்து விட்டேன் . அங்கேயே  இருந்திருக்கலாமோ  என்ற  குற்ற உணர்வு  ஏற்படுது " என்று மிகவும் ஆதங்கப்பட்டான்.

                                   " நீ ஒருவன் மட்டும் என்ன செய்து விட முடியும் ? " என்றேன்.

                                   " ஏதோ என்னால் ஆனதைச் செய்திருப்பேன். "

                                   " அவனவன் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே வழியில்லாதபோது  அடுத்தவனைப் பற்றி யோசிக்கின்றாயே?  "  என்று அன்று நான் அவனை சமாதானப்படுத்துவதற்குச் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு பொய்யாகிப் போயிருக்கிறது  என்பது  இன்று தெரிகிறது.  ஓடி ஓடி உதவி செய்த  இளைஞர்கள் ,  பிறரை காப்பாற்ற தன்னுயிரையே தந்த இளைஞன் ஒருவன்,  மழையில் அயராது பணியாற்றிய சில அரசுப் பணியாளர்கள்,  படகுகளை எடுத்துக் கொண்டு வீதி வீதியாக உதவிக்குச் சென்ற மீனவர்கள்,  தொண்டு நிறுவனங்களின் நல்ல உள்ளங்கள் ,   வெவ்வேறு  இடங்களிலிருந்து உதவி செய்ய ஓடி வந்த இனிய மனிதர்கள்  என்று  ஆயிரக்கணக்கில் உதவிக் கரங்கள் நீட்டப்பட்டதை பிற்பாடு அறிந்தேன்.


                              என்னோடு அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இடையிடையே தன நண்பர்களுக்கு போன் செய்து நிலவரம் கேட்டு கொண்டே இருந்தான். ஜெகன் என்ற ஒரு நண்பரை தொடர்பு கொண்டபோது ,  "சார் ..வீட்டைப் பூட்டிவிட்டு எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் " என்று என் கசின் சொல்ல அவரோ,  " சார்... மழை  பலமாக பெய்கிறது. என் வீட்டு வாசல் வரை தண்ணீர் வந்துவிட்டது. சாலையில் இறங்கிச் செல்ல முடியாது. நானும் மனைவி பிள்ளைகள் நலம்.  ஒன்றும் பயமில்லை.  சமாளித்து விடலாம் . காலையில் எல்லாம் ஓடி அடைந்துவிடும். "  என்றார்.


                         மழையைப் பற்றி அப்போதுதான் அவனிடம் கேட்டேன் .
                   " இப்படி ஒரு மழையை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை. வாளியிலிருந்து தண்ணீரை கொட்டினால் எப்படி கொட்டுமோ அப்படி  கொட்டிக் கொண்டிருக்கிறது.  ஒரு முறை ஆறு மணி நேரத்திற்கு தொடர்ந்தாற்போல பேய் மழை பெய்ததைப் பார்த்துவிட்டுத்தான்  எனக்கு பயம் ஏற்பட்டது. "  என்று அவன் சொன்னதைக் கேட்டு நானும் சிலிர்த்தேன்.


                       மறுநாள்  காலையில் மீண்டும் தன் நண்பரை அவன் தொடர்புகொண்டபோது அவர் போனிலேயே அழ ஆரம்பித்துவிட்டார்.

                        " சார்.. என்னாச்சு? "

                        " என் வீடு தண்ணீரில் மூழ்கிப் போச்சு . நானும் குடும்பமும் இரண்டாவது மாடியில்  அடுத்தவர்  வீட்டில் இருக்கிறோம். வீட்டில் இருந்த எல்லாம் போச்சு சார்.  லோன் போட்டு வாங்கின பொருள் எல்லாம் போச்சு . என் கண் முன்பே எல்லாம் அடிச்சிக்கிட்டு போறதை பார்த்தேன் சார் . என்ன செய்வது என்று தெரியவில்லை. " என்று மிகுந்த கவலையோடு அழுகையுடன் சொன்னார்.

                         என் கசின் முகம் வெளிறிப் போனது.  " பாவம் ... அழுகிறார்"  என்று என்னைப் பார்த்து சொல்லிக் கொண்டே அவரிடம் தொடர்ந்தான்.

                           " உயிர்தான் சார் முக்கியம் . மற்றதைப் பற்றி கவலைப் படாதீங்க.  பொருள் போனால் வாங்கிக் கொள்ளலாம் சார்.  சம்பாதிக்கத்தானே போகிறோம். பத்திரமாக இருங்கள்" என்று அவருக்கு ஆறுதல் கூறினான். சம்பாதித்துக் கொள்ளலாம்  என்று எளிதாக சொல்லி விட்டான்.  எல்லாப் பொருட்களும் இழந்துவிட்டு திரும்ப வாங்குவது அவ்வளவு எளிதான காரியமா என்ன!?  ' என் 20 வருட உழைப்பு  தண்ணியோட போச்சே ' என்று ஒரு பெரியவர் சொன்னதாக பத்திரிக்கையில் வாசித்தபோது அந்த வார்த்தைகளின் கணம் நெஞ்சில் ஆணி அறைந்தது  போல இருந்தது.

                                                             

                          அந்த நண்பர் சென்னையில் செம்பரப்பாக்கம் ஏரி அருகே அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் தரைத்தளத்தில் வீடு வாங்கி குடியேறியிருக்கிறார்.  மழை பலமாக பெய்த அந்த  இரவில் தண்ணீர் மட்டம் திடீரென உயர ஆரம்பிக்க இவர் குடும்பத்தோடு மேல் மாடிக்குச் சென்று மேலே இருந்து எட்டிப் பார்க்க,  அவர் கண் முன்னே அனைத்தும் பறிபோனதை  கண்டு பரிதவித்ததைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.  பெரும் சத்தத்தோடு வெள்ளம் அவர் வீட்டை மூழ்கடித்துச் செல்வதை கண்ணீருடன் பார்த்திருக்கிறார்.  சுனாமி வெள்ளம்  போல் தண்ணீர் தறிகெட்டு ஓடியிருக்கிறது.  என்ன நடக்கிறது  என்று அவருக்குத் தெரியவில்லை . ஒரே  இருட்டு.  தண்ணீர் மட்டம் இன்னும் ஏறியிருக்கிறது .  இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடனேயே பொழுதைக் கழித்திருக்கிறார்.


                                 என்ன நடந்தது என்று மறுநாள் தெரிந்தது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் செம்பரப்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டிருக்கிறது.  முழங்கால் அளவு தண்ணீர் மழையினால் ஏற்பட்டது என்றால் வீட்டையே மூழ்கடித்த தண்ணீர் ஏரி திறந்ததினால் ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள நீண்ட நேரம் பிடித்தது.  மழையினால்  உலகம் அழியப் போவதாக அவர் நினைத்திருக்கிறார்.  கடல் ஊருக்குள் புகுந்து எல்லோரையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போகிறதோ என்ற மரண பீதியில் நடுங்கிப் போய்விட்டார். வீட்டையே பெயர்த்து எடுத்து விடுமோ என்று அச்சப்பட வைக்கும் அளவிற்கு நீரின் ஓட்டம் இருந்திருக்கிறது.  30, 000 கன அடி தண்ணீர்  திறந்ததாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.  85,000 கன  அடி  திறந்து விடப்பட்டிருக்கலாம்  என்று அனுபவம் உள்ளோர் சொல்கிறார்கள்.  ஏரி  உடைந்திருந்தால்  லட்சக்கணக்கானோர்  அழிந்து போயிருப்பார்கள்.


                                    இரவு இரண்டு மணி அளவில் நாய்களின் மரண ஓலம் அதிகமாய் கேட்க எட்டிப் பார்த்தால் ஆயிரக்கணக்கான நாய்கள் கத்தியபடியே அடித்துச் செல்லப்படுவதை  கண்டார்.  அவருடைய அனுபவத்தை என் கசின் விவரிக்க  விவரிக்க  சினிமா போலவே என் கண்களில் அந்தக் காட்சி தெரிந்தது.

                                 வளர்ப்பு பிராணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.  ஆயிரக்கணக்கில் மனிதர்களைக் காணவில்லை. சில பிணங்கள் வெள்ளத்தில் மிதந்து போயின.  அரசிடமிருந்து ஆறுதல் கூட வரவில்லை.  சேரி மக்கள் என்று யாரை தாழ்மையாக மக்கள் நினைத்து வைத்திருந்தார்களோ அவர்கள்தான் ஓடி ஓடி உதவி செய்ய வந்தார்கள். உண்மையான ஹீரோக்கள் யார் என்பது இளைய தலைமுறைக்குத் தெரிய வந்தது.  சேரிப் பகுதியிலிருந்து  வந்த இளைஞர்கள் படகுகளில் சென்று எத்தனையோ மனிதர்களையெல்லாம்   காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். செத்துப் போயிருந்த அன்பு, பரிவு, கருணை,  இரக்கம் , நேசம் , மனிதம் எல்லாமும் கூட காப்பாற்றிக் கரை சேர்க்கப்பட்டன . சினிமாவில் நல்லி எலும்பு கடித்து நாற்பது பேரை பந்தாடிக் காட்டிய நடிகர்  ராஜ்கிரண் கழுத்தளவு தண்ணீரில் காப்பாற்றப்பட்ட காட்சி யதார்த்தத்தை உரைத்தது.  மழைக்கு முன்னாள்  இளம் பெண்களால் பொறுக்கிகளாக பார்க்கப்பட்ட சில இளைஞர்கள்  ஓடி ஓடி எல்லோருக்கும் உதவி செய்ததை வைத்து ஹீரோக்களாக பார்க்கப்பட்டார்கள்.  ஹீரோ ஜீரோ ஆனதும் ஜீரோ ஹீரோ ஆனதும் மழை  கற்றுக் கொடுத்தது. 

                                                       
                                                   

                                      சேரி மக்கள் பலரும் தங்கள் குடிசைகள்  முழுவதையும் இழந்து விட்டார்கள். ஆனாலும் மழையிலும் மற்றவருக்கு முகம் சுளிக்காமல் உதவிகள் செய்திருக்கிறார்கள். ' எல்லாம் இழந்துவிட்டு உதவி செய்ய  எப்படி உங்களால் முடிகிறது ? ' என நிருபர் ஒருவர் கேட்டதற்கு , ' இதற்கு முன்னால்  எங்களிடம் என்ன இருந்தது இழப்பதற்கு? ' என்று மிகவும் சாதாரணமாக ஒரு இளைஞர் கூறியிருக்கிறார் . விளிம்பு நிலை மனிதர்களின் நிலை இன்னும் முன்னேற்றம் காணாத நிலையில்தான் இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் .
                                     

                              வெள்ளம் வடிந்தது. இயல்புநிலை திரும்பியது. தண்ணீர் கிடந்த பகுதியெல்லாம் சேறும் சகதியுமாய் ஆனது.  தொண்டுள்ளங்கள் உணவாய் உடையாய் கொடுத்த உதவிகளை சில நல்லுள்ளங்கள் பிடுங்கி , ' அமைச்சர் வராமல் ஒருத்தரும் எதுவும் கொடுக்கக் கூடாது '  என்று சொல்லி சகதியில் தூக்கி எறிந்ததை நினைத்து நெஞ்சு வலித்தது.

                                 ' எங்க ஏரியாவுக்கு 2000 உணவுப் பொட்டலம் கொடு ' என்று அரசியல் கைக்கூலிகள்  தொண்டு செய்தவர்களை அடித்துக் காயப்படுத்திய காட்சியை தொலைக்காட்சியில்  பார்த்து  கோபம் தலைக்கேறியது.

                                 அத்தியாவசியத் தேவைக்கான  பொருட்களைப்  பிடுங்கி  'ஸ்டிக்கர்' ஒட்டி அனுப்பிய குண்டர் படையின் கூத்துகள் வேதனை அளித்தது.  மழை வெள்ளத்திற்குப் பயந்து வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றவர்களின் வீட்டை சிலர் கொள்ளையடித்திருக்கிறார்கள்.  சில வீடுகளில் ஆண்கள் மட்டும் வீட்டை பாதுகாத்துக் கொண்டு கிடந்திருக்கிறார்கள். தப்பியோட முடியாத வயதானவர்களும் நோயாளிகளும் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள்.  நாள் முழுவதும் கடும் வேலை பார்த்துவிட்டு சம்பாதித்ததை அரசு டாஸ்மாக்குக்கே கொடுத்துவிட்டு நிறைந்த குடி போதையில் குடிசைகளில் படுத்துக் கிடந்தவர்களை எழுப்பக் கூட நேரமில்லாமல் போனதால் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்ற வெள்ளத்தில் அவர்கள் பிணங்களாக மிதந்து போன கதை அதிகம் வெளியில் சொல்லப்படவில்லை.  எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று சிலர் பொருட்களின் விலையை  பத்து  மடங்கு விலையேற்றம் செய்து லாபம் பார்த்திருக்கிறார்கள்.  இன்னும் பல கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.  ' போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று எளிதாக பேசிவிட்டுப் போவது போல ' பேரிடர் என்றால் அழிவு இருக்கத்தான் செய்யும் '
 என்றும் அடுத்து பேச்சு வரலாம் . சாதாரண வார்த்தைகள் . ஆனால் அதனால் ஏற்படும் வலி பெரியது.


                              பேரிடர் என்று பெயர் சூட்டி என்ன பயன்?  இது யாரால் விளைந்தது? இத்தனை அழிவுகளுக்கு   யார் காரணம் ?  இயற்கையா? மழையா?  வடி நீர்  கால்வாய்களை மறைத்து வீடு கட்டிய மனிதர்களா?வழிப்போக்குகளை அடைத்துக்  கொண்ட பிளாஸ்டிக் குப்பைகளா? ஏரிகள், கண்மாய்கள்,குளங்கள் , அணைகள் இருந்த இடங்களிலெல்லாம் வீடு கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கிய அரசு அதிகாரிகளா? அந்த வீடுகளைக் கட்டித்  தந்த பில்டர்களா?  சொந்த வீடு வாங்கும் ஆசையில் அடுக்கு மாடி வீடுகளுக்குக் குடியேறும் மனிதர்களா? முகத்துவாரத்தை மட்டுமல்ல கண்மாய், கால்வாய், ஏரிகளை தூர் வாராத அரசா? எந்த முன்னறிவிப்புமின்றி ஏரியை திறந்துவிட்ட அதிகாரிகளா? அவர்களை ஆரம்பத்திலேயே அணை திறந்து விட  உத்தரவு பிறப்பிக்காத தலைமைச் செயலரா? அவருக்கு உத்தரவு பிறப்பிக்காத தலைமையா?


                               இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யார் பதில் சொல்வது? இந்தக் கேள்விகளை யார் எங்கே கேட்பது என்றே தெரியவில்லை.  மக்களுக்கு அந்த அதிகாரம் உண்டா?  ஊடகங்கள் அதை எடுத்துரைக்கலாம். இந்த விசயத்தில் எல்லா ஊடகமும் பத்திரிக்கைகளும் ஓரணியில் நின்று கேள்விகள் எழுப்ப வேண்டும் . ஆனால் இடித்துரைக்க வேண்டிய  பெரும்பான்மையான தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் ஆளும் அரசுக்கு துதி பாடும் பரிதாபமான நிலைக்கு ஆளாகியிருக்கின்றன .  ஒரு அரசு செய்ய வேண்டிய கடமைகளைச்  சொல்வதை விடுத்து  எதிக்கட்சித் தலைவர்களை  கிண்டலும் கேலியும் பேசி யாரை திருப்திப்படுத்த முயல்கிறார்கள் என்றே தெரியவில்லை.


                                இடரும் துயரும் நிரந்தரமல்ல . பெரிய அழிவை சந்தித்தாலும் மதம் அழித்த மனிதம் பல இடங்களிலும் இருந்ததை சென்னை மக்கள் சந்தித்து விட்டார்கள். அதுவரை யாரென்றே தெரியாத அடுத்தடுத்த  வீட்டுக்காரர்கள்  சினேகமாக சிரிக்கவும் உதவவும் செய்திருக்கிறார்கள்.   நம்பிக்கை  ஒளி  படர்ந்திருக்கிறது .  என்ன நேர்ந்தாலும் இனிமேல் சமாளித்து விடுவார்கள்.   உடம்பில் ஏற்பட்ட ரணங்களை விட மனசில் ஏற்பட்ட ரணங்கள் ஆற பல காலம் பிடிக்கும் .  ரணங்கள் அழியாத  வடுக்களாக மாறிவிட்டன.  செய்யப்பட்ட  அலட்சியங்களும்  அலட்டல்களும் மக்களுக்கு படிப்பினையை தந்திருக்கிறது. இலவசங்களுக்கு மதி மயங்கி  ஓட்டு போடும் பொம்மைகளாக  இனி மாறிப்போக  மாட்டார்கள். 


       
     
                                     

Monday, 23 November 2015

இசை ராட்சஷன் - 13 ( The Musical Legend )


இளையராஜா பற்றி  இணையத்தில் கொட்டிக் கிடக்கும் செய்தி பொக்கிஷங்களிலிருந்து  சில  வித்தியாசமான  செய்திகளைப்  பகிர ஆசைப்படுகின்றேன் ,

                                                       







*பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் அவர்களை பர்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா கடந்த ஆண்டு நடந்தது. விழாவிற்கு இசைஞானி இளையராஜாவோடு மெல்லிசை மன்னரும் கலந்து கொண்டார்.. மேடையின் பின்புறமிருந்த தனி அறையில் அவருக்காக காத்துக்கொண்டிருந்தார் இளையராஜா அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் உள்ளே வர, ‘அண்ணா வாங்க..’ என்று எழுந்து சென்று கையை பிடித்து வரவேற்றார் இசைஞானி. “ராஜா நலம்தானே வந்து ரொம்ப நாழியாச்சா” என்றார். “பராவாயில்லண்ணா” என்று இளையராஜா சிரிக்க எம்.எஸ்.வியும் சேர்ந்து சிரித்தார். “ஹெல்த்தை பார்த்துக்கோங்க ராஜா” என்று எம்.எஸ்.வி சொல்லவும், “நாம எப்படிண்ணா ஹெல்த்தை பார்த்துக்க முடியும் ஹெல்த் தான் நம்மை பார்த்துக்கணும என்று பதில் கொடுக்க, மனம் விட்டு சிரித்தார் மெல்லிசை மன்னர். விழா மேடைக்கு செல்லும்போது இசைஞானி, “அண்ணனை பார்த்து கூட்டிட்டுப்போங்கள்” என்று வழிவிட்டு பின்னால் நின்று கொண்டார்.




**அண்ணன் பாவலர் வரதாரஜன் அவர்களோடு இளையாராஜா கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த சமயம். திருச்சியில் கச்சேரியை முடித்து விட்டு மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள கம்யூனிஸ்ட் நண்பர் வீட்டில் தங்கியிருக்கின்றனர். அப்போது இளையராஜா வீட்டு முன் கட்டிலைப்போட்டு படுத்திருக்கிறார். தூரத்தில் புதியபறவை படத்தின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிற்து. “எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது” என்று வயலின்கள் கூட்டமாய் குரல் எழுப்ப அதில் லயித்துப் போகிறார் இளையராஜா . ' இசையமைத்தால் இப்படி இருக்கணும்  ' என்று மனதுக்குள் விதைபோட்டு வைக்கிறார்.


அந்த லட்சியம்தான் பிறகு ஒரு நாள் மெல்லத்திறந்தது கதவு படத்திற்கு அவரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பை காலம் இளையராஜாவுக்கு கொடுத்தது. மெல்லிசை மன்னரை தன்னுடைய குருநாதர் இடத்தில் வைத்து பார்த்த இளையராஜாவுக்கு எம்.எஸ்.வியின் மறைவு பேரிழப்பு.

**இளையாராஜா அவர்கள் நிற்பதற்கு நேரமில்லாமல் பரபரப்பாக இருந்த எண்பதுகளி்ன்போது இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் தன்னுடைய படத்திற்கு இசைய்மைக்கச்சொல்லி் இளையராஜா அவர்களை சந்திக்க ஏவி.எம். ஸ்டுடியோவிற்கு வந்து காத்திருந்தார். இந்த தகவல் ராஜா சாருக்கும் சொல்லப்பட்டது. ”இருக்கட்டும்” என்று மட்டும் சொல்லி விட்டு வேலையில் கவனமாக இருந்தார். அன்று முழுவதும் ஸ்ரீதரை ராஜா சார் சந்திக்கவேயில்லை.இப்படி இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் ஸ்ரீதர் சாருக்கு கோபம் வந்து விட்டது. விஷயம் ராஜாவிடம்  சொல்லப்பட்டது. ஒலிப்பதிவு கூடத்திலிருந்து வெளியே வந்தார் ராஜா . 



    “ நான் கடந்த மூன்று நாளா வந்து போயிகிட்டிருக்கேன். நான் யார்கிட்டேயும் இது போல போய் நின்னதில்லை. உங்க கிட்டதான் வந்திருக்கேன்” என்று கொஞ்சம் கோபத்துடன் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதர் .  உடனே இளையராஜா, " மூன்று நாளும் நான் உங்களை வரச்சொல்லவில்லையே சார் ” என்று சொல்லவும் அங்கிருந்த அத்தனைபேரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். மிகப்பெரிய இயக்குனர் ஸ்ரீதர் அவரிடம் இப்படி யாரும் பேசியதில்லையே என்று  எல்லோருக்கும்  அதிர்ச்சி.




 ராஜா  பேச ஆரம்பித்தார்.  ” உங்கள் எல்லா படத்திற்கும் அண்ணன் எம்.எஸ்.வி எவ்வளவு அருமையான பாடல்களை போட்டுக்கொடுத்திருக்கிறார். அவரை விட்டு விட்டு என்கிட்ட ஏன் வந்தீங்க? ” என்று கேட்கவும் ஸ்ரீதர் ஆடிப்போய் விட்டார். தொடர்ந்து ராஜா ,  “அண்ணன் இசை வேண்டாம்னு நீங்க நினைச்சதாலதான் நான் சந்திக்கவில்லை ” என்று சொன்னார். அதன்பிறகு பல சமாதானங்கள் செய்த பிறகே இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டார்.


**  "இசைஞானி இசையமைத்த முதல் பாடல் "

                அப்போது இசைஞானி இளையரஜா அவர்கள் ஜி.கே வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்திற்கான இசையமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஒரு பாடலுக்கான டியூனை இயக்குனர் தேவராஜ் மோகனிடம் வாசித்து காட்டினார் ஜி.கே.வி. ஆனல் அந்த டியூன் இயக்குனருக்கு பிடிக்க வில்லை.

       
            நேரம் கடந்து கொண்டே போகிறது. பல டியூன்களை போட்டும் இன்னும் திருப்தி அடையவில்லை இயக்குனர். அப்போது சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்போஸிங்கில் அமர்ந்திருக்கிறார்கள். உடனே இயக்குனர் தேவராஜ் மோகன் ஜி.கே.வெங்கடேஷிடம் ,  “தம்பி ராஜா எனக்கு ஒரு டியூன் வாசிச்சு காண்பிச்சார். அது எனக்கு பிடிச்சிருந்தது” என்று சொல்லவும், “அப்போ அதையே வெச்சுக்கலாம்” என்று ஜி.கே.வி. ஓகே சொல்லிவிட்டார். உடனே பாடலை யாரை வைத்து எழுதச்சொல்லலாம் என்று யோசித்த போது கவிஞர் முத்து லிங்கத்தை வைத்து வைத்து எழுத முடிவானது. உடனே இளையரஜா அவர்கள் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வீட்டிற்கே சென்று அந்த டியூனை வாசிக்க வாசிக்க அவர் பாடல் வரிகளை எழுதிக்கொடுக்கிறார்.


           
                கிராமிய மெட்டுகளை அடிப்படையாக கொண்ட அந்த பாடல் ஒரு ராகமாளிகையாக ஒலிக்கும். “தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்த பொன்னியம்மா” என்று நதிகளின் பெருமை கூறும் அந்த பாடல்தான் இசைஞானி இளையரஜா இசையமைத்த முதல் பாடல் .  ஆனால் படத்தின் டைட்டிலில் பெயர் இருக்காது.  இந்த படம் வெளியாகும்போது இளையராஜா அவர்களின் மூத்த சகோதரர் பாவலர்  வரதராஜன் அவர்கள் படம் வெளியான திரையரங்குகளில் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளை பறக்க விட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அன்று பறக்க ஆரம்பித்த இளையராஜாவின் பாட்டுக்கொடி இன்னும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.


 ** ஒரு விழாவில் இளையராஜா பேசியது .


" சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்தபோது இசைக்கருவிகளுடன்  இசைத்துக் காட்டியபோதும் எங்களுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை.  ஆனால் மேஜையில் தாளம் போட்டு பாட்டு பாடிக் காட்டியபோது , பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் எந்தக் கணக்கில் என்னை அறிமுகப்படுத்தினார் எனத் தெரியாது. "  



                                       
** விஜி  மேனுவல்   இந்தியாவின் தலை சிறந்த கீபோர்ட் பிளேயர்  மற்றும் பியானிஸ்ட் .  ஹன்டல்  மேனுவல்  என்பவரின்  மகனும் மாணவரும்  ஆவார். இளையராஜாவோடு  நாற்பது ஆண்டுகள்  வேலை செய்திருக்கிறார்.     பாஸ் கிடார் , ட்ரம்ஸ் , கீபோர்ட்  வாசிப்பதில்  வல்லவராக  விளங்கியதால்  சிங்கப்பூரில் உள்ள  ஒரு ராக் பேண்ட் அவரை  சேர்த்துக் கொண்டது.  இந்தியாவிலிருந்து முதன் முதலாக சென்ற  ராக் ஆர்கனிஸ்ட்  அவர் மட்டுமே! அப்போது அவர் வயது பதினேழு.  அந்த ராக் பேண்ட் இந்தியா முழுக்க பயணித்தது; இசைத்தது.  இதற்கிடையில்  சினிமாவின் இசைத் துறை அவரை உபசரித்தது.  இசை அமைப்பாளர்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை  அவரே பகிருவதை கேட்போம்.


"  ஒரு பாஸ் கிடாரிஸ்டாக ஷ்யாம் ஜோசப்  என்ற இசையமைப்பாளரிடம் என் இசைப் பயணத்தை ஆரம்பித்தேன் .  பாஸ் கிடார் வாசிப்பில் புதிய யுக்திகளை கையாண்டேன். அது எனக்கு எம்.எஸ்.வி. , கே. வி. மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களிடமும்  வேலை செய்யும் வாய்ப்பினை பெற்றுத் தந்தது.  அதன் பிறகு ஜி. கே. வெங்கடேஷ் அவர்களிடம் பணியாற்றியபோதுதான் இளையராஜாவை சந்தித்தேன்.  Acoustic guitarist ஆக அவர் இசைக் குழுவில் இருந்தார்.  இளையராஜா இசை உலகின் magic என்றே சொல்லலாம்.  அவரின் அபார இசைத்திறமை  எனக்கு ஆச்சரியமூட்டியது.  இளையராஜாவிற்கு  Pink Floyd , Led  Zeppelin , The  beetles , Jimi  Hendrix  போன்ற பல இசைக் குழுக்களின் இசை ஆல்பத்தை அறிமுகம் செய்தேன் . மெலடி மெட்டுக்களுக்கு பயன்படுத்தப்படும் அடிப்படை chords பலவற்றை பகிர்ந்து கொண்டோம்.  Western music  notation எழுதுவதில் அவருக்கிருந்த அபாரத் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  ' வரப்பிரசாதம்  '  என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த கோவர்த்தன் என்ற இசையமைப்பாளர்  சில வேலைகள் காரணமாக  இளையராஜாவை  re-recording செய்யச் சொல்லிவிட்டுப் போனார்.  Major 7th chord  மற்றும் minor 7th  chord  இரண்டுக்கும் இடையே அமையுமாறு அற்புதமான theme music ஒன்றினை இளையராஜா அமைத்ததைப் பார்த்து நான் அசந்து போனேன். "


அதன் பிறகு Jude David என்பவர்  Music notation எழுதுவதில் இளையராஜாவிற்கு  உதவி செய்திருக்கிறார்.  கோவர்த்தன் மாஸ்டரிடமிருந்து  ஜதி , தாளம் , தமிழில் ஸ்வரங்கள் எழுதுதல் போன்றவற்றையும் இளையராஜா தெளிவாகக்  கற்றறிந்தார் . இந்தச் செய்திகளை பகிரும் விஜி மேனுவல் இன்னும்  தொடர்கிறார்.


"  சில படங்கள் இளையராஜாவோடு பணியாற்றிய பிறகு இளையராஜா என்னை அழைத்து அவருடைய மைத்துனர் சசி என்பவருக்கு பாஸ் கிடார் கற்றுக் கொடுக்கச் சொன்னார். நானும் பல நாட்கள் செலவழித்து கற்றுக் கொடுத்தேன். சசி நன்கு தேறிய  பிறகு  நான் கீபோர்ட் பக்கம் நகர்ந்து விட்டேன் .  அதன் பிறகு பல  ஆண்டுகள் ஆர்கனிஸ்டாக  இளையராஜாவோடு பணி  புரிந்தேன்.  பிரியா படத்தில் ' டார்லிங் டார்லிங் ' பாட்டுக்கு முன்பு ஆரம்பிக்கும் பாஸ் கிடார் பீஸ் ,  ராஜ பார்வை படத்தில் கமல் தனியாக வாசிக்கும் வயலினை நரசிம்மன் இசைக்க அதன் கூடவே வரும் கீபோர்ட் இசையை நான் வாசித்தது எல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். இளையராஜா இல்லாமல் அது சாத்தியமாய் இருக்காது. "


                                    
                                               


                      இளையராஜா பற்றி இன்னும் பல செய்திகள் குவிந்து கிடக்கின்றன . இந்தப் பதிவிலேயே எல்லாவற்றையும் பகிர முடியாது.  ராட்சசன் இன்னும் பல காலம் வளர்ந்து கொண்டுதான் செல்லும் .  அவருடைய  பாடல்களுக்குள் செல்வோம்.

                   
                         1979 ல் வந்த படங்களில் ' சக்களத்தி '  என்றொரு படம் பார்த்து விட்டு வீடு திரும்புகையில் பக்கத்துக்கு வீட்டு  பாட்டிகள் இரண்டு பேர்   ' என்ன சினிமா பார்த்தாய் ? '  என்று கேட்டார்கள் . நான் படத்தின் பேரைச் சொன்னவுடன்  பலமாக சிரித்தார்கள்.  எனக்கு கோபம் வந்ததால் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  நீண்ட நாட்கள் கழித்துதான் தெரிந்தது .  அவர்கள் இருவருக்கும் ஒரே  கணவன்.  சக்களத்திக்கு அர்த்தம் அதன் பிறகு  தெரிந்தது.


                         அந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இருந்தாலும் ' என்ன பாட்டு பாட ' , ' வாடை வாட்டுது '  என்ற இரு பாடல்கள் ஹிட் ஆகின.  இரண்டையும் இளையராஜாவின் இளமைக் குரலில் கேட்கலாம்.  புலமைப் பித்தன்,  முத்துலிங்கம் இருவரும் எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள் .

                          ' என்ன பாட்டு பாட ....என்ன தாளம் போட..'  என்ற பாடல் டைட்டில் பாடல்.  மாட்டு வண்டி ஒட்டிக் கொண்டே நாயகன் பாடுவது காட்சி .  அதற்கேற்றார்போல  ராஜா  மாடுகள்  ஓடும்போது  அசையும்  கழுத்துச் சலங்கையின் ஒலியை தாளமாக வைத்து  மிகவும் பொருத்தமாக பாடல் இசைத்திருப்பார்.  அந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரபரப்பாக ஒலிபரப்பப்பட்டது.  அசையும் சதங்கையும் இசையும் இந்தப் பாட்டைக் கேட்டால் நம்மையும் தாளம் போட வைக்கும்.  ஷெனாய் பயன்பாடு இந்தப் பாட்டில் அதிகம் .  மாட்டைப் பார்த்துப்  பேசுவதை பாடலாக மாற்றியிருப்பார்கள்.  கிராமத்தில் மனிதர்கள் விலங்குகளோடு பேசி பழகிக்  கொள்ளும் பாச உணர்வுகளை  எளிதாக  புரியும்  வண்ணம்  பாடல்  கொடுக்கப்பட்டிருக்கும். எளிமையான நாட்டுப்புறப்  பாடலை இளையராஜா இனிமையாக கொடுத்திருக்கிறார்.  மாயமாலகௌளை  என்ற ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. 

                     
                                  
                                                 


                                    ' வாடை வாட்டுது ...ஒரு போர்வை கேட்குது ..' என்ற பாடல் பிரபலம் ஆன அடுத்த பாடல் என்று சொல்லலாம்.  வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் ஒரு கிராமத்து நாயகன்  மனைவியுடன் கொண்ட ஊடலால் விரக தாபத்தோடு  எழுப்பும் மன உணர்வுகளை பாட்டாக பாடுவதை இளையராஜாவின் இசை அப்படியே படம் பிடித்துக் காட்டும்.  சூழலுக்கு மிகவும் பொருத்தமான பாடல் . இரவின் தனிமை , கிராமத்துச சூழலின் ஓசைகள் , ராக்கோழி சப்தம், பூச்சிகளின்  ரீங்காரம் என பின்னணியை இசைக் கருவிகளிலேயே  கொண்டு வரும் அந்த கற்பனையும் லாவகமும் இளையராஜாவிற்கு கை வந்த கலையல்லவா!   கண் மூடி கேட்கும்போது  ஒரு குளிரான இரவை  நாமும் உணர்வோம் ; இனம் புரியா சோகத்தில் நாமும் உழல்வோம் .


                                    
                                            


                          ' தர்மயுத்தம்  '  வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் எனக்கு ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய படம்.  ரஜினியின் நடிப்பை வெகுவாக ரசித்த படம்.  இளையராஜாவின் மிரட்டலான  இசை என்னை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.  பௌர்ணமி  இரவில் நாயகனுக்கு ஏற்படும் வெறித்தனத்தை படு மிரட்டலாக எடுத்திருப்பார்கள்.  அதற்கு ராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசை படம் பார்க்கும் எல்லோருக்கும் நிச்சயம் கிலியை  ஏற்படுத்தும்.  சிகப்பு ரோஜாக்கள் திரைப்பட இசையைப் போலவே இந்தப் படத்திலும்  அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கு பின்னணி இசை மிரட்டும்.

                        இந்தப்  படத்தில் இரண்டு பாடல்கள் மெகா ஹிட் .  அண்ணன் தங்கை பாசத்திற்கு சிவாஜிக்குப் பிறகு அதிகம் பாராட்டப்பட்டவர் ரஜினி . தங்கைக்காக  ரஜினி பாடுவதாக ஒரு பாடல்  இசைக்கப்பட்டிருக்கும் . கண்ணதாசனின் அழகிய வரிகளில்,  மலேசியா வாசுதேவனின்  சுத்தமான உச்சரிப்பில்,  தெளிந்த குரலில்  ' ஒரு தங்க ரதத்தில்  பொன் மஞ்சள் நிலவு  '  என்ற அந்தப் பாடல் இப்போதும் புத்துணர்வை ஊட்டும்.  நினைவலைகள் பின்னோக்கிப் போகும் .  மகத்தான அந்த இசை நெஞ்சத்தை தாலாட்டும்.   மோகன ராகத்தில் இதயத்தை வருடும் அழகிய பாடல்.  தங்கைக்கென்று  இசைக்கப்பட்ட பாடல்களில் இதுவும் சாகா வரம் பெற்ற பாடல் என்று சொல்லலாம். 



                         மூன்று சரணங்கள் மூன்று  இடையிசையில்  வித்தியாசம் காட்டி நம்மை இசை இன்பத்தில் இளையராஜா திளைக்க வைத்திருப்பார்.  பாட்டின் ஆரம்ப இசை பல்லவியின் மெலோடியை கிடார்  கார்ட்ஸ் , மாண்டலின் கொண்டு ஆரம்பித்து மெலிதான ட்ரம்ஸ் சேர்த்து குழலால் ஆலாபனை செய்து கூட்டமாய் வயலின் சேர்க்கும் 
அழகிலே நாம் ஊஞ்சலாட ஆரம்பிக்கலாம்.  பாடல் முடியும் வரை ஊஞ்சலாடிக் கொண்டேதான் இருப்போம். அது தெரிந்துதான் இயக்குனர் ஆர். சி . சக்தி  காட்சியிலும்  ஊஞ்சலாடலை சேர்த்திருப்பார் போலும்!

                                  
                                             


                          சரணத்தில்  ' தங்கையல்ல ......' என்று  ஒரு ஆலாபனை  கொடுத்து மீண்டும் '  தங்கையல்ல  தாயானவள்  ..கோடி பாடல் நான் பாட பொருளானாள் '  என்று முடிக்கும் இடம் சுகமானது.  சிறு வயதில் பாடிக் கொண்டு அலைந்தது எல்லாம் இப்போது  நினைவுப்பறவையாய் சிறகடிக்கிறது .


                         அதே படத்தில்  ' ஆகாய கங்கை பூந்தேன் மலர்ச்சூடி ' என்ற காதல் டூயட் பாடலை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா!? மத்யமாவதி ராகத்தில் எம்.ஜி . வல்லபன்  எழுதிய பாடலுக்கு வாசுதேவனும் ஜானகியும் இணைந்து சுவை கூட்டி கொடுத்திருப்பார்கள்.  அற்புதமான மெலோடியில் இளையராஜாவின் முத்தாய்ப்பான
பாடல்.  ஜானகி ' தா...தான தனா...'  என்ற  ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்கும்போதே  பரபரப்பு  நம்மையும் தொற்றிக் கொள்ளும் . ' தேன் வந்து  பாயுது காதினிலே ' என்பது மொழிக்கு மட்டுமா ...மொழியோடு சேர்ந்த இசைக்கும்  பொருந்தும்; இந்தப் பாடலுக்கும் பொருந்தும்.  இளையராஜாவை ' ராக தேவன் ' என அழைப்பதில் தவறேதுமில்லை.  பாடல் கேட்கும்போது குளிர்ந்த காற்று நம்மை மென்மையாய் தழுவிச் செல்லும் உணர்வு பூப்பதில் அதியசமும் இல்லை.

                         ஜானகியின் ஹம்மிங் முடிந்து பெல் ஒலியுடன் வித்தியாசமான பல இசைக்கருவிகளின்  நாதத்தோடு பல்லவி ஆரம்பிக்கும் லாவகம் மிகவும் சுகமானது.  எந்தப் பாடலாக இருந்தாலும்  ஒரு  பாடலின் போக்கிற்கு  instrumentation  இப்படிதான் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் இளையராஜாவிற்கு நிகர் அவரே !  சமீபத்தில் எஸ்.பி.பி அவர்களே  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதைச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு செய்யப்பட்டிருக்கும்   instrumentation  மிகப் பிரமாதம்.  பல்லவியில் வாசு பாடி முடிக்க ' குங்குமத் தேரில்  ' என்று ஆரம்பிக்கும் ஜானகியின் இளமை கொஞ்சும் குரலை வெகுவாக ரசிக்கலாம்.   புதுமையான  இரண்டு இடையிசைகளுக்காகவே  பலமுறை இந்தப் பாடலை நான் கேட்டிருக்கிறேன். இரண்டாவது இடையிசையில் ஜானகியின் ஹம்மிங் சேர்ந்து இசைகருவிகளின் கூட்டமும் சங்கமிக்கும் அழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரின்பம் தரும்.  

                                   
                                                

                        இடையிசை முழுவதும் பல கருவிகளின் சங்கமம் இருந்தாலும் வயலின்களின் ஆக்கிரமிப்பு எல்லாவற்றையும் விட சற்று தூக்கலாகவே தெரியும் . இப்படிப்பட்ட இசைக்கோர்வைகளை  ஒன்றிணைத்து  இசை மாலையாக தொடுக்கும் இளையராஜாவின்  கற்பனா சக்தியை  எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.  பாடல் கேட்டுக் கொண்டிருக்கும்போதே நமக்கும் இறக்கை முளைத்து பறக்கும் தேவதைகள் ஆகிப் போவோம் .  ராஜாவின் இசைக்கு நம்மை தேவதையாக்கும் வல்லமை உண்டு.  இசையை கேட்கத் தெரிந்தவரல்ல உணரத் தெரிந்தவருக்கே அது புரியும் .  

                        இசைக்கத் தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு.  இசையின் வேர்களை இதயத்தில் பரப்பி  ஆழ்மனத்தின் ஆணிவேராய்  ஊன்றி நமது ஆன்மாவையே  அசைத்துப் பார்க்கும் இசைக் கலைஞர்கள் ஒரு சிலரே!  அதில் இளையராஜாவும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  


....................தொடர்வேன் .....................