Monday, 11 September 2017

தமிழன் இனி மெல்ல...

                                தமிழைப்  போற்றியும் புகழ்ந்தும் வாழ்த்தியும் வணங்கியும் துதித்தும் உயர்த்தியும் உரமேற்றியும், எத்தனையோ சான்றோர்கள் கல்வியாளர்கள் புலவர்கள் எழுதியதை பேசியதை , கேட்டு வளர்ந்து விட்டோம்.   இனிய தமிழில் பேசியதை கேட்டும் எழுதியதை வாசித்தும் தமிழுணர்வு நிரம்பி ததும்பிப்  பொங்கிப் பெருகி  வழிந்து  நிறைந்து போயிருக்கிறது.  இந்த உணர்வுகள் தமிழை நேசிக்கும் அல்லது தமிழராய் இருக்கும் அத்துனை   மனிதருக்கும் பொருந்தும்  என்பதில்  சந்தேகமில்லை.

                                          

                            பிறப்பால் தமிழர்களாகவும் நினைப்பால் வெள்ளைக்காரர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில்  பலர் தங்களின் தாய் மொழியில் பேசுவது தாழ்ந்தது எனவும் ஆங்கிலத்தில் உரையாடுவதே உத்தமம் எனவும்  கீழ்மை உணர்வு  பீடிக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்.


                           உலக அதிசயங்கள் படைத்திட்ட எகிப்தியர் பேசிய  எகிப்து  மொழி ,  உலகத்தையே வளைக்கத் துடித்து ஆசை கண்ட மகா வீரன் அலெக்சாண்டர்  பேசிய   கிரேக்க மொழி ,  ஆசைகளை துறக்கச் சொன்ன  புத்தர் பேசிய   பாலி மொழி ,   உலக மாந்தருக்காய்  தன்னையே தந்து   இன்னுயிர் ஈந்த  இயேசு பிரான் பேசிய  ஹீப்ருவின்  கிளை மொழியான அராமிக் மொழி  போன்ற பல பழைமையான  மொழிகள் இப்போது உலகத்தில் இல்லை .  வழக்கொழிந்து போனது .  பழமையான மொழியாகினும்  பலராலும் அறிந்திடாத  ஆலய வழிபாட்டுக்கென  சுருங்கிய மொழியான சமஸ்கிருதமும்  இருந்தும் இல்லாமல் போன மொழியாகும்.


                         ஆனால் இத்தனை மொழிகளோடு பிறந்து வளர்ந்து உறவாடி விளையாடி  தன்  தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்த போதிலும் இன்றைக்கும் வாழ்ந்து  வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழியாம் நம் தமிழ் மொழியே!


                           உலகத்தில் இன்னும் உயிர் வாழும்  சீன மொழியும் மிகப்  பழைமையான  மொழியாக கருதப்படுகிறது.  ஆனால் பல கிளைகளாக பிரிந்து போனது. சீன மொழியின் வடிவம் சித்திர வடிவம் .  ஆனால் தமிழின் வடிவம் இசை வடிவம் .  வளமுற  பேசுதல் அழகுற இசைத்தலுக்கு சமமாகும். தமிழினைச்  சுவைத்தவர் அறியும் செய்தி இது .


                         இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் அதிகம்  தமிழில்தான் உள்ளன.  கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்தத் தமிழ் என்று பெருமை பேசும் வண்ணம் கி. மு. 2500 க்கும் முற்பட்ட தமிழ் கல்வெட்டுகள்   தமிழ் அந்தக் காலகட்டத்திற்கு முன்னரும் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான சாட்சிகளாய் உள்ளன.    தமிழ் என்றாலே தொன்மை, முன்மை , செம்மை போன்ற  பண்புகளோடு  உள்ள  மொழி என்பார்கள்.


                           இவ்வளவு பழமையும் பெருமையும் கொண்டிருக்கும் தமிழை  திராவிடர்கள் தங்கள் மொழியாக கொண்டிருந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்.  தமிழ் பேசியதால் தமிழர்கள் ஆனார்கள்.  உலகத்தின் மிகவும் பாரம்பரியமான இனமாக திராவிடம் கருதப்படுகிறது. திராவிடர்கள்  உலகத்தின் மூத்த குடி மக்கள் என்பதற்கான ஆதாரங்கள் இப்போது எழும்பியிருக்கின்றன.  தமிழ் இந்துவில் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து சில செய்திகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

                 
                      Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்.  Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetics ) துறையின் பேராசிரியர்கள் .
.            
                                       
                                                                                       

                 இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது. உலகில் மனிதன் தோன்றியது எங்கே , ஆசியாவின் பூர்வ குடிகள் யார் இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான், ஈராக் , அமெரிக்கா ,ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான்,  பர்மா , மலேசியா,  நேபாளம் , பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் .   இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர் .
.
                 இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும், அப்போது  சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது என்றும்,  அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் என்றும் , அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம் என்றும் அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர் என்றும் ,
.அவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்
.
                  இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது. அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்.   ஏனென்றால்  அவர்கள் அப்போது தான் உள்ளேயே வருகிறார்கள் . அப்போது அவர்கள் நாகரிகமடையாத நாடோடிகளாக இருந்தார்கள்.  அப்படி இருந்தவர்கள் எப்படி நகர நாகரிகத்துடன் வாழ முடியும்??
.
                   இரண்டாவது சமஸ்கிருதம் ஆதி மொழி என்று நமக்கு சொல்லிக்கொடுத்தது பொய் .  ஏனென்றால் அதுதான் உலகமொழிகளிலேயே இளைய மொழி என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது . அதனால் அதற்கு கொடுக்கப்பட்ட செம்மொழி அந்தஸ்து தவறு.  அதே நேரத்தில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து  வாங்குவதற்கு தமிழ் அறிஞர்கள் பல்லாண்டு காலம் போராடினார்கள் என்பதை சொல்லவே வருத்தமாக உள்ளது.
.

                    மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது   என்றும்,  அப்போது இந்திய துணைக்கண்டம் ஆப்பிரிக்காவுடன் ஒட்டியிருந்தது  என்றும் ,      கடல்கோள்களால் இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் ,
.இந்த மண்ணில் திராவிடர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும் ,
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கிறார்கள் என்றும்  இந்த  ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது.


                    தமிழ் மொழி புகழடையக் கூடாது ,  தமிழன் தலை நிமிரக் கூடாது ,  தமிழனின் பெயர் நிலைநாட்டப் படக்கூடாது  என்று வடநாட்டு ஆதிக்க சக்திகளும்  சாதிகளும் அரசியல் பெருச்சாளிகளும் இணைந்து சதி  செய்திருக்கின்றன .
.      
                                  
                 
                     மதுரை கீழடி ஆராய்ச்சியை ஏன் தடுக்கவோ  குலைக்கவோ  கலைக்கவோ எப்போதும் முயன்று கொண்டேயிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக  தெரிகிறது.  கீழடி அகழ்வாராய்ச்சி மிகப் பெரிய உண்மையை ஊருக்கு உரைத்துவிட்டால் என்னாவது என்ற பயம் வடநாட்டு  கயவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  கீழடி ஆராய்ச்சியில் ஒருவேளை சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முற்பட்ட நாகரீகம் என்ற முடிவு அல்லது உண்மை வெளிவந்துவிட்டால் ...?


                   சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டது போல கீழடி என்பது அழிந்து போன ஆதி மதுரையாகக் கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது .  பல இடங்களில் நடந்த அகழ்வாராய்வில் கிடைக்காத ஆதி மனிதனின்  நாகரீகம் , பண்பாடு,  எழுத்து ,  கலை , கட்டடம்  , தொழில்,  வீரம் போன்றவை கண்டறியப்பட்டிருக்கின்றன.  பக்தி இதுவரை கண்டறியப்படவில்லை.  கடவுள்  சான்றுகள் , குறியீடுகள் , சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை.


                        கடவுளை வணங்கியதற்கான  சுவடுகளே இல்லாததால் மதம் என்னும் மாயை உருவாக்கப்படவில்லை என்ற அழுத்தமான உண்மை வெளிப்படும் அச்சம் யாருக்கோ இருக்கிறது.  அதனால் கூட அகழ்வாராச்சியில் அலட்சியம் காட்டப்படுகிறது என்றொரு எண்ணம் கல்வியாளர்களுக்கு  உண்டு.

                  அதற்கு முன்னரே ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி ஏன் மூடி மறைக்கப்பட்டுள்ளது  என்பதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை.
இப்படி தமிழுக்கும் தமிழனுக்கும் துரோகம் இழைக்கும் கூட்டம் ஒன்று உருவாகி வந்துகொண்டுதான் இருக்கிறது.  தமிழன்  சும்மா அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.


காவிரி தொடங்கி..
கதிராமங்கலம் வரை..
கீழடியில் வாங்கிய
உள்ளடி துடைத்து
செருப்படி படுவதையே
குலத்தொழிலாய்க் கொண்ட
தமிழனின் தலைவிதி
சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்டிருக்குமோ?
ஒரு இழவும் புரியவில்லை...
தலைமையற்ற தருதலைகளால்
காணாமல் போன கருமத்தில்
ஒன்று சுயமரியாதையோ?
வாய் மூடிக்  கிடப்பதே வாடிக்கை என்று
தினம் கடக்கும் செய்திகளாய்
சாகுமோ எம் பிள்ளைகள்?
அழும் கண்ணீர் துடைத்து
அடுத்த சேனலுக்குப்
போவதற்குள்
இன்னுமொரு தமிழ் இழவு...
எப்போ வருவார் ரஜினி...
சிஸ்டம் சரி செய்ய?
அவர்   வீ ட்டுப் பள்ளிக்கு
வாடகை கட்டிவிட்டா?
எப்ப வருவார் கமல்...
எல்லோருக்கும் புரியும்படி?
தினம் ஒரு மரணம்
தினமொரு செருப்படி..
திரும்பிய திசையெல்லாம்
துப்பிய எச்சில்...
துடைத்துப்போடும்
நாஞ்சில் சம்பத்தா நாம்?
அட கேடு கெட்ட மானிடமே!
கேட்க நாதியற்ற கதையை
எந்தச் சேனலும் சொல்லாது..
அடுத்த சாவுக்கு
கேமரா வேண்டும்..
ஏனய்யா பெரியாரே....
எங்களை பிரிச்சி விட்டே?
கூழோ கஞ்சியோ
குடுத்ததை குடித்து
கெடந்திருப்போமே...
கன்னடமும், களி தெலுங்கும்
உன் வழியில் போக
பாவிப் பயலுகள் அடித்த
காசுக்கு
அடமானம்  வச்சானே
அத்தனை தமிழனையும்...
ஒரு கால் மாற்றி
மறு காலில் விழுந்து
காணாமல் போச்சே
மொத்த சரித்திரம்.


                          யாரோ எழுதிய இந்தக் கவிதையை  சமீபத்தில் வாசித்தபோது நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும் ஒரு தமிழனின் நெஞ்சக்  குமுறலை உணர முடிந்தது.   காட்டாற்று வெள்ளமாய் ஓடி வரும் நீரைப் போல் தமிழனையும்  அணை போட்டு தடுத்து வைத்திருக்கும் சட்டங்களும் அரசு அதிகாரங்களும் எத்தனை நாள்  நீடித்திருக்கும் ?  ஜல்லிக் கட்டுக்காக துடித்து வெடித்துக் கிளம்பிய கூட்டம் ஒன்று இப்போதும் கிளம்ப ஆயத்தமாகவே உள்ளது.  எப்போது வெடிக்கும் என்றுதான் தெரியவில்லை. 


                 ஒவ்வொரு நாளும் தமிழுக்கும் தமிழனுக்கும் எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  தமிழன் அமைதி காத்து வாய் மூடி மௌனியாய் இருந்தால் கீழே காணும் நிகழ்வுகள் இனி நேரப்போகிறது என்பதில் ஐயமில்லை. 


                 உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கும், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும். அது தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிர்மாறாகவே இருக்கும். முக்கியமாக காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றைப் பற்றி பேச முடியாத அளவிற்கு முடித்து வைக்கப்படும். அணை பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்படும். மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு மோடி அமைச்சரவை அனுமதி அளிக்கும். காவிரி, முல்லைப் பெரியாறு, பவானி போன்றவற்றில் தமிழகத்திற்கான உரிமை மாற்றி அமைக்கப்படும்.


                ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக்கப்படும். பசுமைத் தீர்ப்பாயத்தை கட்டுப்படுத்த முடியுமென்பதால், தடைகள் நீக்கப்பட்டு நியூட்ரினோ திட்டம் மீண்டும் வரும். மருத்துவம், பொறியியல் கல்வி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும். பள்ளிக் கல்வி காவி மயமாக்கப்படும். எங்கும் இந்தியே இருக்கும். தமிழகத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்படும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும். தமிழகத்தின் நிலங்கள் பனியா மார்வாடிகளால் வாங்கி குவிக்கப்படும். 

                        சுருக்கமாக சொன்னால், தமிழகம் முன்னேறிய மாநிலம் என்ற தகுதி பிடுங்கப்பட்டு, பீகார், ஜார்கண்ட் மாநில நிலைமைக்கு தள்ளப்படும்.  இதையெல்லாம் எதிர்த்து போராடும் இயக்கங்களும், செயற்பாட்டளர்களும் அரசினால் ஒடுக்கப்படுவார்கள்.  காவல்துறையின் ஆட்சியே நடைபெறும். மக்கள் போராட்டம் ஒன்று தான் இதில் நம்பிக்கையளிக்கக் கூடிய விசயமாக இருக்கும். ஆனால் தமிழகம் ஒன்று காஷ்மீர் போல் மாறும். இல்லை ஏதோ ஒரு வடமாநிலம் போல் திகழும். கடைசியில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லி பாதையை வேறுபக்கம் திருப்பி விட்டு கதையை முடித்துவிடுவார்கள். வேறென்ன சொல்ல? 


                               தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி தமிழ்நாட்டு மக்களின் மூளையை மழுங்கடித்து தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை முடக்கி வைக்கும்   நிகழ்வுகள்  தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.  Big boss  எனும் நிகழ்ச்சி அவைகளில் ஒன்று!  இளையோர் மனதையும் மூளையையும் மழுங்கடிக்கும்  இது போன்ற நிகழ்ச்சிகள்  இன்னும் எத்தனை வரக்  காத்திருக்கின்றனவோ ?


                         அடிமடியில் கை வைத்து  அடக்கி,  குடியையே கெடுக்க நினைக்கும்  நாசக்காரர்களால் தமிழனின் உரிமைகள் பறி போகும் நிலையில் அருகதை இல்லாத கேளிக்கைக்கு  அர்த்தம் கொடுப்பதை அவன் நிறுத்தினால் நாடு விளங்கும்.  ஆண்டவரும் ஆள்பவரும் சரியில்லாத போது  தங்களை யார் ஆள  வேண்டும் என்பதைக் கூட தெளிவாகத் தேடிக் கொள்ளத்  தெரியவில்லையே இந்தத் தமிழனுக்கு!  காசுக்கு விலை போகும் வேசியை விட மோசமான  ஓட்டுக்கு விலை போகும் சிலரால் ஒட்டு மொத்தத்  தமிழனும்  வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கிறது.   


                  தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க யாரும் களமிறங்கவில்லை. மாநிலமும் சரியில்லை; மத்தியும் சரியில்லை என புத்தி இல்லாமல் ஒட்டு போட்டதை எண்ணி புலம்புவதை விட்டு விட்டு தமிழன் தலை நிமிரவேண்டும். கரம் கோர்க்க வேண்டும். மக்களை குழப்பத்தோடு வைத்து குளிர்காய நினைக்கும் கேடுகெட்ட நரித்தந்திரவாதிகளின் பிடியில் தத்தளிக்கிறது தமிழ்நாடு...!!

                  
                  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தமிழ் அழியவில்லை. உலகத்தின் மூத்த மொழிகளுள்  இப்போதும்  வாழும்  மொழியாகத் திகழ்கிறது.  தமிழ் இனி மெல்ல ....சாகவே சாகாது.


             ஆனால்  சமூக அநீதி கண்டு  தமிழன்  இனி மெல்ல  ...சாவானா... எழுவானா ....போர்க்குணம் புரிவானா... போராடத் துணிவானா ....போர்க்களம்  புகுவானா ???

10 comments:

 1. சால்ஸ்
  காலத்திற்கேற்ற பதிவு.
  தமிழன் இலவசங்களால்
  தன் மதியிழந்திருக்கிறான்.
  ஆடம்பர வாழ்க்கைக்காய்
  அடையாளம் தொலைக்கவும் அஞ்சாதிருக்கிறான்.
  வீறு கொண்டு எழுந்தவன்
  வீழ்ந்து கிடக்கிறான் பதவிமோகத்தில்.
  தனி நாடு கேட்டவன் மானமிழந்து
  தன் மக்களையும் அடகுவைக்கத் துணிகிறான்.
  பைந்தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் அயலானோடு
  கைகோர்த்து களிப்படைகிறான்.
  தமிழனையும்,தமிழ்மொழியையும்
  காலம் காப்பாற்றட்டும்.

  ReplyDelete
 2. நன்றி ஜீவா ....உங்களின் கவித்துவமான கருத்து மிகச் சரியாக உள்ளது. இன்று தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் வந்த தலையங்கப் பகுதியில் வந்த செய்தியை பகிர விரும்புகிறேன்.

  மொழியுரிமை குறித்து கர்நாடகம் , கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமை போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழகம் , இந்த உரிமைப் போராட்டத்தில் பின் தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.

  காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய் மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லை என்றால் , அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகி விடும் என்பது கல்வியாளர்களின் கருத்து. மற்ற மாநிலங்கள் விழித்துக் கொண்டுவிட்டன. என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

  மேலே குறிப்பிட்ட மாநிலங்களின் அரசுகள் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தங்களின் தாய் மொழி கட்டாய பாடமாக எல்லாப் பள்ளிகளிலும் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றன. தமிழக அரசு அதைச் செய்திருக்கிறதா?

  ReplyDelete
 3. தமிழனையும்,தமிழ்மொழியையும்
  காப்பாற்ற போராடுவோம்....

  ReplyDelete
 4. வலிப்போக்கன் போல் இன்னும் பலர் சேர்ந்தால் நிச்சயம் தமிழையும் தமிழரையும் காப்பாற்றலாம் .

  ReplyDelete
 5. நண்பரே,

  தமிழ் எப்போதும் போல இருக்கும். ஏன் வீண் கவலை? தமிழில் பேசுவதை விட நல்ல தமிழில் பேசினாலே போதும். அதுவே நாம் நமது மொழிக்கு செய்யும் தொண்டு.

  பதிவுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. வாதம் இல்லாமல் வாழ்த்த வந்த காரிகனுக்கு நன்றி . தமிழ் அழியாது. தமிழனின் தடம் அழியுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு . நல்ல தமிழில் தாங்கள்தான் அழகாக எழுதுகிறீர்களே!

  ReplyDelete
 7. விகடனில் வெளி வந்தது


  கீழடியில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி இப்போது முடிவடைந்திருக்கும் நிலையில் , ' முதல் இரண்டு கட்ட ஆராய்ச்சி முடிவுகளில் வெளிவந்ததைப் போலத் தமிழரின் தொன்மையை எடுத்துக் கூறும் கட்டுமானங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது கிடைத்திருக்கும் பொருட்களோடு எந்தத் தொடர்பும் இல்லை ' என்று மத்தியத் தொல்லியல் துறை தெரிவித்திருப்பது தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

  முதல் இரண்டு கட்ட ஆராச்சியில் சுமார் 2300 சதுர மீட்டருக்கு தோண்டப்பட்டது. தற்போது 400 சதுர மீட்டருக்கு மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. முதல் இரண்டு ஆராய்ச்சிகளில் கட்டுமானங்கள் தென் திசை நோக்கிப் புதைந்து கிடப்பது தெரியவந்தது. மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி தென் திசை நோக்கியே நீண்டிருக்க வேண்டும். ஆனால் வடதிசை நோக்கித் தோண்டப்பட்டுள்ளது.

  ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணான நிலையை இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது? தமிழர்களின் தொன்மையை நிரூபித்து விடக் கூடாது என்பதில் யாருக்கு இத்தனை ஆர்வம்?

  மீண்டும் அமர்நாத் தலைமையில் ஆராய்ச்சி நடந்தால்தான் உண்மை வெளியில் வரும். அதுவரை , ஆராய்ச்சி முடிந்தது என்று போடப்படும் மண் நம் தமிழரின் தொன்மையான வரலாற்றில் போடப்படும் மண்.

  ReplyDelete
 8. வாட்ஸ் அப் ல் வந்த பதிவு

  வட இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்..
  பொறுத்துக் கொண்டோம்..

  கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..
  பொறுத்துக்
  கொண்டோம்
  கடைகளில் வேலைக்கு வந்தார்கள்..
  பொறுத்துக்
  கொண்டோம்..

  பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றோம்,

  தமிழர்களை ஏமாற்றி குறுக்கு வழியில் மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..
  பொறுத்துக்
  கொண்டோம்.

  தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனை விரட்டிவிட்டு பிராமணர்கள் வந்தார்கள். அவர்கள் தமிழ் மறைகளை அகற்றிவிட்டு சமஸ்கிருத மந்திரம் கொண்டு வந்தார்கள் பொறுத்துக்
  கொண்டோம்

  சிங்கள தெலுங்கர்கள் இலங்கையில் தமிழர்களை கொன்றார்கள் பொறுத்துக்
  கொண்டோம்

  தமிழருடைய கச்சத்தீவை வடஇந்தியர்கள் இலங்கைக்கு கொடுத்தார்கள்.
  பொறுத்துக்
  கொண்டோம்

  ரஷ்யாவில் வெடித்து சிதறி 2 லட்சம் பேர் உயிர் இழந்த அதே ரஷ்ய தொழில்நுட்ப அணு உலைகளை நம் மண்ணில் அமைத்தார்கள்.
  பொறுத்துக்
  கொண்டோம்


  தமிழரின் விவசாயத்தை அழிக்கும் கெயில் குழாய் பதிப்பு
  பொறுத்துக்
  கொண்டோம்

  நம் சுற்றுசூழலை முற்றிலும் அழிக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சி.
  பொறுத்துக்
  கொண்டோம்

  ஆத்து தண்ணீரை பன்னாட்டு கார்ப்ரே நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு.. தண்ணிரை வற்ற செய்து ஆத்து மணலை கொள்ளை அடித்து வடஇந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு கடத்தினார்கள்.
  பொறுத்து கொண்டோம்..

  மலைகளை அழிந்து கிரானைட் குவாரிகளை உருவாக்கினார்கள்.
  பொறுத்துக் கொண்டோம்..

  ஆந்திராவில் நம் தமிழர்களை கொன்றார்கள். பொறுத்துக்
  கொண்டோம்..

  கர்நாடகாவில் தமிழர் சொத்துகளை அழித்தார்கள். தமிழர்களை அடித்து விரட்டினார்கள். பொறுத்துக்
  கொண்டோம்

  முல்லை பெரியாறில் தமிழர்களை விரட்டினார்கள் பொறுத்துக்
  கொண்டோம்

  இனி நீட் தேர்வு மூலம்
  இங்குள்ள
  மருத்துவ
  மனைகளுக்கும் குறுக்கு வழியில் இந்திகார மருத்துவர்கள் வரஉள்ளார்கள். பொறுத்துக்
  கொள்வோம்.

  இன்று தமிழக மாணவர்களுக்கு திறமை குறைந்து விட்டது என பாஜக கட்சியினர் சொல்கிறார்கள்.
  நாளை தமிழர்களுக்கு தமிழ் படிக்கவே தகுதியில்லை என்று ஹிந்தியை திணித்து தமிழை அழிப்பார்கள்..
  பொறுத்துக் கொள்வோம்.

  தமிழர்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ள பழகிக் கொள்வோம்..
  நமக்குத்தான் இலவச அரிசியும், பொழுது கழிக்க நூறு நாள் வேலையும், களைப்பு நீங்க சராயமும், திரையில் சினிமாவும், சண்டையிட்டு சாக சாதியும் எளிதாக கிடைக்கிறதே.

  *இப்படிக்கு*

  *சாதி, மதத்தால் பிளவுபட்டு, வரலாற்றின் வீரத்தையும் மானத்தையும் இழந்து அழிவின் விளிம்பில் நிற்கும் நாதியற்ற தமிழ்இனத்தின் மக்களில் ஒருவன்.

  ReplyDelete
 9. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete
 10. இக்கட்டுரைக்கு ஆதாரமான அக்கட்டுரை எது என்று நினைவிலிருக்கி
  றதா? இருந்தால் சொல்லுங்கள். தேவை.

  ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்