Saturday, 10 October 2015

பொய்களில் ஒளியாத உண்மைகள்



                  வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியிலும் அதன் அர்த்தம் புரிந்து வாழ்தல் என்பது அவ்வளவு கடினமான காரியமாக பலர் நினைக்கிறார்கள் . எப்போதும் இன்பம் வேண்டும்; நினைத்ததெல்லாம் பெற வேண்டும்;  அத்தனையும் கிடைக்கவேண்டும் ; ஆனந்தமாய் வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பமாய் இருக்கிறது. கொஞ்சம் சலனம் ஏற்பட்டாலும் அதை பெருந்துயரமாய் எண்ணி கலங்குதலும் வருந்துதலும் இந்தக் காலத்து இளைஞர்கள்  பெரும்பான்மையோருக்கு  வழக்கமாகி வருகிறது.

               குறிப்பாக பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களைச் சொல்லலாம் . சிறு ஏமாற்றத்திற்குக் கூட தாங்கும் தன்மையை மனது இழந்து , திரும்பவும் வராத இடத்திற்கே போகத் துடிப்பது வெட்கக் கேடான விஷயம் . சட்டென்று வானிலை மாறி பட்டென்று பெய்யும் மாரியைப்போல நினைத்தவுடன்  தவறான முடிவெடுக்கத் துணிகிறார்கள். தற்கொலை எண்ணங்கள் தலைதூக்கி விடுகின்றன.

                                                     

                         

                    வாழ்க்கை முழுவதும் வசந்தம் மட்டும் வீசி விடுமா என்ன!? சின்னச் சின்ன கஷ்டங்களும் நஷ்டங்களும் தோல்விகளும் ஏமாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். எதிர்த்து நின்று போராடும் போராட்டக்  குணங்களை வளர்த்துக் கொள்ளாமல் துவண்டு போகும் மன நிலையை வளர்ப்பது ஒரு பாவச் செயல் . இருளுக்குள் சிக்கிக் கொண்டு திசை தெரியாமல் போனதைப் போல் திரியும் இந்த இளைஞர்களை யார் வழி நடத்துவது?

                       பெற்றோரா.... ஆசிரியரா... நண்பர்களா ...உறவினரா..சமூகமா ...ஊடகமா... அரசாங்கமா ...யார் வழி காட்டுவது? பள்ளிகளிகளிலும் கல்லூரிகளிலும் மன வளப் பயிற்சிக்கென்று பாடங்கள் வைக்கப்பட வேண்டும் என்ற  கல்வியாளர்களின் கருத்து காற்றில் காணாமல் போனது. படிக்கவேண்டிய பாடங்கள் தலைக்கு மேல் செல்லும் வெள்ளம் போல வைத்துக் கொண்டு வழிகாட்டும் கல்வி, நன்னெறிக் கல்வி  போன்றவற்றை புகட்டுவதற்கு ஆசிரியர்களுக்கும் நேரம் இல்லாமல் போனதுதான் உண்மை.
ஆசிரியர்கள் அந்தக் காலத்தில் செய்தது பணி ; இப்போது செய்வது வேலை . அந்த நிலைமைக்கு ஆசிரியர்கள்  ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.  எப்பாடு பட்டாவது பாடத் திட்டத்தை முடிக்க ஓடுவதே குறிக்கோளாக மாறிப்போனது.

                        தனிப்பட்ட மாணவனை ஆசிரியர் அறிய முடியா அவல நிலை உருவாகிப் போனது.  என் கடன் syllabus முடித்துக் கொடுப்பதே என்ற நிர்ப்பந்தந்ததிலும் ஒப்பந்தத்திலும் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான  கல்வி நிறுவனங்களில்  இன்று இதுதான் நிலை.  ஒவ்வொரு மாணவனும் நல்லொழுக்கத்தில் வளர ஆசிரியரின்  பங்கு  உள்ளது .ஆனால் ஆசிரியருக்கு மட்டுமே பங்கு உள்ளதா என்பது இன்று கேட்கப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது.

                          சமீப காலமாகத்தான் இளம் பருவத்தினரின் தற்கொலைச் செய்திகள் அதிகமாக பத்திரிக்கைகளில் தென்படுகின்றன.  15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்  அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.  அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட செய்திகள் குறைவாகவே இருந்தன. ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள். சிறு தவறு செய்தாலும் அடி உதை என்று வாங்கிக் கொண்டு திரிந்த பலர் இன்று நல்ல நிலையில் சமூக அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். தங்கள் ஆசிரியர்களை நன்றிப் பெருக்குடன் நினைத்தும் பார்க்கிறார்கள்.  ஆசிரியர்களின் கட்டுப்பாடான கண்டிப்பு  எதையும் தாங்கும் இதயங்களை வளர்த்தது என்பது மிகையல்ல ...உண்மை!


                      ஆனால் இப்போது ஆசிரியருக்கு மாணவரைக் கண்டிக்கவோ சிறு தண்டனை கொடுக்கவோ கூட உரிமையில்லை. கண்டித்தால் அது சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு குற்றமான செயலாக சட்டமிடப்பட்டிருப்பதால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது . அதுவும் மறுக்க முடியாத உண்மை.


                       தற்கொலைச் சாவிற்கான காரணங்கள் மிகவும் அற்பமானவை. தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி,  நண்பனின் புறக்கணிப்பு  , பெற்றோரின் கண்டிப்பு, ஆசிரியரின் அவமதிப்பு, படிப்புக்கேற்ற வேலையின்மை போன்றவை தற்கொலைக்கான காரணங்களாக காட்டப்படுகின்றன. சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் மன அழுத்தங்களை வளர்த்துக் கொள்வது கூட ஒழுக்கக்கேடுதான்!

                      இன்று 40 வயதினை கடந்தவர்கள் மேற்சொன்ன எல்லா தோல்விகளையும் கடந்து வந்தவர்களாக இருப்பார்கள்.  ஒவ்வொன்றுக்கும் தற்கொலையே தீர்வு என்றால் 30 வயதை பெருன்பான்மையோர் கடந்து வந்திருக்க முடியாது. காலம் போன போக்கில் வாழ்க்கையை போகவிட்டதும் சட்டையில்  தூசியை தட்டிவிட்டுப் போனதை போல பல இடர்ப்பாடுகளைக் கடந்ததும் கஷ்ட நஷ்டங்களை போராடி வென்றதும் அவர்கள்  சாதாரணமாக சந்தித்திருப்பார்கள்.  இதுவும் கடந்து போகும் என நினைத்ததெல்லாம் மெல்ல நடந்துதான் போனது. காத்திருந்துதான் கடந்து வந்திருப்பார்கள். காலமென்னும் நதியில் பல குப்பைக் கூளங்களோடுதான்  நாமெல்லாம் நீந்திச் செல்ல வேண்டியிருந்தது. இப்போதும் அது ஒரு தொடர்கதை . மேடு பள்ளங்கள் இல்லா பயணமா ?  பிரச்சனைகள் இல்லா வாழ்க்கையா?

                      There is a solution for everything என்ற ஒரு தன்னம்பிக்கை சொற்றொடரைக் கொண்டு எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்று திருப்தி அடையலாம். ஆனால் இளையோர் சிலருக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. தற்கொலையை தீர்வாக  நினைக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும் அந்த முடிவினால் மிஞ்சியிருப்பது இழப்பு ஒன்றே!
பெற்றவர் மற்றவர் செலுத்திய அன்பின் தருணங்கள்  அநியாயமாக  வீணாகிப் போவதோடு காலம் உள்ளவரையில் பிரிவை நினைத்து வருந்தும் ரணங்களாகி வேதனையை அவர்களின் வாழ்க்கையோடு ஒட்ட வைத்து விடுகின்றன.


                     ஒரு ஆசிரியையின் மகன் +2  படித்துக் கொண்டிருந்தான் . ஒரு ஞாயிறு காலை வீட்டில் எல்லோரும் சர்ச்சுக்குப் புறப்பட்டபோது  டியூசன் போகவேண்டுமென கூறி  அவர்களோடு செல்ல மறுத்திருக்கிறான்.  மற்றவர்கள் சர்ச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது  தூக்கில் தொங்கிய அவன் பிணத்தைக்  கண்டு அதிர்ந்தார்கள்.  இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

               
                இன்னொரு சம்பவம் .  நல்ல மதிப்பெண்களோடு  நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் தன அம்மாவிற்கு டீ போட்டு கொடுத்துவிட்டு  படிக்கப் போகிறேன் என்று சொல்லி  தன்  தனியறைக்குச் சென்றவன்  நீண்ட நேரம் வெளிவரவில்லை . தூக்கில் தொங்கிப்போனான் . காரணம் தெரியவில்லை.


                 மேற்சொன்ன சம்பவம் இரண்டிலும் பெற்றோர் அறிய முடியாதவாறு   எந்தவிதமான சலனத்தையும் முகத்தில் வெளிக்காட்டாமலேயே  இருந்து அந்த மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டார்கள் . எப்படிப்பட்ட மன அழுத்தம் அவர்களை இம்சை செய்தது என்பது யாரும் அறியாதது.

                 
                  நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் விருப்பத்திற்கேற்ப வளர்க்க வேண்டும் என நினைத்து குழந்தைகளின் கனவுகளை எல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறார்கள் .  தங்களால் அடைய முடியாத உயரத்தை தன்  பிள்ளைகள் எட்டிவிட வேண்டுமென்று  அவர்களை பாடுபடுத்துகிறார்கள்.  புரிபவன் முயல்கிறான்; சகிப்பவன் சங்கடங்களை  ஏற்றுக் கொள்கிறான்;  முடியாதவன்  ஓடிப் போகிறான்;  தாங்காதவன் தன்னையே மாய்த்துக் கொள்கிறான்.


                   எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பகிர்ந்த பழைய செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது.

                 ***   சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது.  வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல . வாசகரின் தந்தை எழுதியது.  தன்னை அறிமுகம் செய்து கொண்டார் . மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். ஓய்வு பெற்றுவிட்டார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப் படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலை பார்க்கிறார்கள். அங்கேயே குடும்பத்துடன் வாழ்கிறார்கள்.  இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.


             அவரது பிரச்னை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம் . ஆகவே குளிர் நாடுகளில் சென்று வாழ முடியாது.  அவருக்கு ஆஸ்துமா பிரச்னை உண்டு. பிள்ளைகள்  இரண்டாண்டுக்கு ஒருமுறை கூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்து நாட்கள் தங்குவார்கள்.  உடனே கிளம்பி விடுவார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்து மணி நேரம் பெற்றோரிடம் செலவளித்தால் அதிகம்.  " உங்களின் நூல்களை அதிகம் வாங்கிச் செல்கிறான். நீங்கள் ஏன் இதைப் பற்றி அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான் " என்றார்.


              இம்மாதிரியான குடும்ப விசயங்களில் தலையிடக் கூடாது என்பது என் கொள்கை. ஆனால் அவர் திரும்பவும் மின்னஞ்சலில் வலியுறுத்தியதால்   அவர் மின்னஞ்சலை  அவருடைய மகனுக்கு அப்படியே திருப்பிவிட்டேன்.   அவர் மகன் ஒரு வாரம் கழித்து மிக நீளமான  பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  என்னை அது பல கோணங்களில் சிந்திக்க வைத்தது.
\

                   " நான் திருச்சியில் 22 வருடம் வாழ்ந்திருக்கிறேன்.  ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை.  22 வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப் பற்றி ஒரு நல்ல நினைவு கூட இல்லை" என்றார் அவரது மகன்.


                      அவரது தந்தை அவரை நல்ல பொறியாளராக  ஆக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல். கே. ஜி யில் சேருவதற்கு முன்பாகவே ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.  அம்மாவும் பாடம் மட்டுமே நடத்தினார்கள்.  பள்ளிக்கூடப் படிப்பு , டியூசன் , வீட்டுப்படிப்பு தவிர வேறு  இளைமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக் கிழமை என்றாலும் பாடம் பாடம் பாடங்கள்தான்.  கோடை விடுமுறை வந்தால் ஆங்கில மொழியறிவு சிறப்புப் பயிற்சி , கணிதத் திறமை வகுப்பு என்று ஓட வேண்டும்.  தீபாவளி , பொங்கல்  நாட்களில் கூட கொண்டாட்டம் இல்லை. அப்போதும் படிப்புதான்.

                      "  சில சமயம் இரவில் படுத்து சிந்திப்பேன்.  இளைமைக் காலத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று! எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சி கூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒரு முறை எண்ணிக் கொண்டேன். சரி , ஒன்றிரண்டு துயர நினைவாவது இருக்கிறதா என்று!  அப்படியாவது என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாகமாக தொடர்புபடுத்திக் கொள்ளலாமே  என்று பார்த்தால் அப்படி  ஒரு நினைவும் கிடையாது.  


             வீட்டை விட மோசம் பள்ளிக்கூடம். அது தனியார் பள்ளி.  மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றுத் தரும் செலவேறிய பள்ளி.  அங்கே பிள்ளைகளைச் சேர்க்க வரிசை கட்டி நிற்பார்கள். பள்ளிக்குள் நுழைவது முதல்  வெளியே செல்லும் கணம் வரை ஆசிரியர்கள் கூடவே இருப்பார்கள்.  பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்! அந்தப் படிப்பிலும் சுவாரசியமில்லை . பள்ளிப் படிப்புக்கு வெளியே எதையும் வாசித்ததுமில்லை. யாருமே இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை.  நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை  அச்சு அசலாக அப்படியே திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்  "  என்று எழுதியிருந்தார்.

     
                 அப்படியே பொறியியல் முடித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத்  தெரிந்தது  மனித வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சிகள் நிறைந்தது  என்று!  பயணங்கள், நண்பர்களுடனான  சந்திப்புகள்,  இலக்கிய வாசிப்பு , இசை என்று எதையும்  சந்திக்காமலேயே வாழ்ந்திருக்கிறார்.

                     "  எந்த இடத்தில்  நாம் மகிழ்ச்சியாக  இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம்   படிந்து விடுகிறது.  அதுதான் நமது ஊர் என நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் மிகவும் பிடித்திருக்கின்றன . திருச்சி  எனக்கு அந்நிய ஊராகத் தெரிகிறது.  ஒரே நாளில் ஊர் சலித்து விடுகிறது.  என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரை மணி நேரம் என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது. 22  வருடமும் படி படி என்று மட்டுமே சொன்ன இரு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான் ! அவர்களை நேசிக்க அவர்களைப் பற்றி ஒன்றும் எனக்கு தெரியாது.  பேசுவதற்கோ பகிர்வதற்கோ  ஒன்றுமில்லை.  22 வருடமாக எந்தப் பொது விசயமும் அவர்கள் என்னுடன் உரையாடியதில்லை.  படிப்பைப் பற்றியும் எதிர்காலம் பற்றிய கவலைகளையும் மட்டுமே கொட்டிக் கொண்டே இருப்பார்கள். இப்போதும் என்ன சம்பாதிக்கிறாய் என்ன சேமித்தாய் என்று பயம் காட்ட மட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே , பயணம் செய்யாதே  என்று அவர்கள் வாழ்ந்தது போலவே என்னையும் வாழச் சொல்லுகிறார்கள்.


                     நீங்களே சொல்லுங்கள் . அரை மணி நேரம் பேசுவதற்கு எந்த விசயமும் இல்லாதவர்களிடம் நாம் செயற்கையாக முயன்றாலும் பேச முடியுமா?  முற்றிலும் அந்நியமாகத் தெரியும் ஊரில் எவ்வளவு நாள் வாழ முடியும் ? நன்றிக்காக ஐந்து நாள் இருக்கலாம். அதற்கு மேல் என்ன செய்வது?"என்று மகன் எழுதியிருந்தார்.


                      அதை அப்படியே அவர் தந்தைக்கு  அனுப்பினேன். மீண்டும் அவர் தந்தை  ,  " வரும் தீபாவளிக்காவது வந்து விட்டு போகச் சொல்லுங்கள் " என்று மின்னஞ்சல் அனுப்பினார்.  " தீபாவளி  என்பது இளமையில் கொண்டாட வேண்டிய ஒரு பண்டிகை.  அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்த பின் அந்த நினைவுகளைதான் கொண்டாடிக் கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார்.  நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டுவிட்டீர்கள் என்கிறார் "  என்று பதில் எழுதினேன் .  அவர் ஒரு பதிலும் போடவில்லை.

       
                         வாழ்க்கை என்பது எதிர்காலத்திற்கான  போராட்டம் அல்ல வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதே ! அதற்காகத்தான் பண்டிகைகளும் திருவிழாக்களும் உருவாக்கப்பட்டன. நாளை முக்கியம்தான். ஆனால் இன்று அதை விட முக்கியம் .  ***

               
                                         

                       சுஜாதா குறிப்பிட்டிருக்கும் பெற்றோர் பிள்ளைகள் போல கொஞ்சம் பேர்  நமது தெருவுக்குள்  அல்லது  உறவினர்களில்  அல்லது நண்பர்களில் இருக்கவே  செய்கிறார்கள்.  அவர்கள் எல்லோரும் வாழும்போதே இறந்தவர்கள் ;  இறந்த பின்னும் வாழ்பவர்களாக  முடியாது.


                        பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து ஆளாக்கி வளர்த்து ஏதோ ஊருக்கு தத்துக் கொடுத்து விட்டு  அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் இது போன்ற பரிதாப பெற்றோரின் ஏக்கத்தை ஒரு கவிதை ஒன்றில் வாசிக்க நேர்ந்தபோது மனம் கனத்தது.  


                                              மகனே ............

                                              நீ பிறந்த அன்று

                                              தோட்டத்தில் வைத்தோம்

                                              ஒரு தென்னங்கன்று

                                              எங்கள் வியர்வையில்

                                               நீ உயர்ந்தாய்

                                               நாங்கள் வார்த்த தண்ணீரில்

                                               தென்னை வளர்ந்தது

                                                எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்

                                                உனக்கு இன்பம் தருகிறது
                                                   
                                               இங்கே இருக்கும் தென்னை மரம்

                                                எங்கள் இருவருக்கும்

                                                சுக நிழலும் சுவை நீரும் தருகிறது

                                                 ஒரு நாள் ....

                                                  நீ   ஈமெயிலில்  மூழ்கியிருக்கும்போது

                                                எங்களை  ஈ   மொய்த்த சேதி வந்து சேரும்

                                                 இறுதிப் பயணத்தில் நீ இல்லாமற் போனாலும்

                                                 தென்னை ஓலை

                                                 எங்கள் கடைசி மஞ்சமாகும்.
                                                       







                     





9 comments:

  1. சால்ஸ்
    இன்றைய சமுதாயத்திற்கு இத்தருணத்தில் தேவைப்படும் வித்தியாசமான ஆனால் அத்தியாவசியமான பதிவினை தந்தமைக்கு வாழ்த்துக்கள் .அக்காலத்தில் பிள்ளைகளே செல்வமென்றெண்ணி குறைந்தது நான்கைந்து பிள்ளைகளாவது பெற்றுக்கொண்டார்கள் .பற்றாக்குறை இருந்தபோதிலும் பகிர்தல் ,சகிப்புத்தன்மை ,விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் குறைவில்லாமலிருந்தது. இன்ப ,துன்பங்கள் இரண்டறக் கலந்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எல்லோரிடமும் இருந்தது .இன்றைய சூழலில் பணமே பிரதானமாக தெரிகிறது .எங்கு என்ன படித்தால் அதிக வருவாயில் வேலை கிடைக்கும் என்று கணக்கிட்டே குழந்தைகள் ஆரம்பக்கல்விக்கே அனுப்பப்படுகிறார்கள். குழந்தைகள் பணம் ஈட்டக்கூடிய இயந்திரங்களாக அல்லவா உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .

    ReplyDelete
  2. இன்றைய சமூக. சீர்கேட்டிற்கு சமூக வலைதளங்கள் ,தகவல் தொடர்பு சாதனங்கள் என இன்னபிற சாதனங்களும் காரணமாகத்தானிருக்கின்றன. இவைகளின் வரவால் மனிதம் தொலைந்திருக்கிறது .உலகின் எந்த மூலையிலோ நடந்த விபத்தோ பேரழிவோ ஒவ்வொரு மனிதனையும் பாதித்த காலம் மாறி இன்று பக்கத்து வீட்டில் நடந்த துக்க நிகழ்வை வாட்ஸப்பில் விசாரிக்கும் நிகழ்வை என்னவென்று சொல்வது .மனித உறவுகளோடு கூடிக் களித்திருந்த காலம் தொலைத்து இயந்திரத்திற்கல்லவா அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் .

    ReplyDelete
    Replies
    1. அருள்ஜீவா

      நீங்கள் சொல்வது உண்மை. நிறைய குழந்தைகள் உள்ள வீட்டில் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியம் நிறையவே இருந்தது . அவர்கள் எல்லோரும் நல்ல சம்பாத்தியத்தில் இல்லாவிடினும் நல்ல குடிமக்களாக பொறுப்புணர்வுடன் வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளையும் சரியாக வளர்க்கிறார்கள். ஐந்து பிள்ளைகளோடு பிறந்த என் மனைவியை பெண் பார்த்து விட்டு வந்த பிறகு என் நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ' இந்தப் பெண்ணால் உங்களோடு எல்லாவகையிலும் அனுசரித்து வாழ முடியும் . ஏனென்றால் எல்லாவற்றையும் அவர்கள் குடும்பத்திலேயே கற்றிருப்பார். உங்கள் தேர்வு சரியானது ' என்றார் . அவர் சொன்னது சரியானதே!

      குழந்தைகளுக்கு எதைக் கற்றுக் கொள்வது எப்படி கற்றுக் கொள்வது என சொல்லிக் கொடுக்கலாம் . எப்படி சம்பாதிக்கலாம் என்பதற்கு வழிவகைகளை சொல்லிக் கொடுப்பதோ அதற்காக அவர்களை சக்கையாக பிழிந்து வாட்டி எடுப்பதோ ஆரோக்கியமானதல்ல.

      Delete
  3. சால்ஸ்,

    நல்ல தன்னம்பிக்கையூட்டும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள். சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். இளையராஜாவை விட்டு வேறு பக்கம் உங்கள் எழுத்து திரும்பும் போது உங்கள் எழுத்தில் ஒரு வசீகரம் இருப்பது தெரிகிறது.

    சுஜாதாவின் அந்த அனுபவக் கட்டுரையை நான் வாசித்துள்ளேன். இன்றைய தலைமுறைக்கு ரோட்டில் உயிருக்கு போராடும் ஒரு விபத்தில் மாட்டிகொண்ட ஒருவனோடு செல்பி எடுத்து உடனே பேஸ் புக்கில் வாட்சப்பில் ஸ்டேடஸ் போடத்தான் அதிக ஆர்வம் இருக்கிறது. இது போன்ற தொல்லை தரும் மின்சார உபகரணங்கள் இல்லாத காலத்தில் பிறந்த என்னை, உங்களைப் போன்றவர்கள் ஒரு விதத்தில் பாக்கியசாலிகளே.

    இளையராஜாவை தனி மனித ஆராதனை செய்யும் கட்டுரைகளை விட்டு விலகி இது போன்ற பதிவுகள் நிறைய எழுதினால் உங்கள் எழுத்து இன்னும் சிறப்பாக வெளிப்படும் என்று தோன்றுகிறது. தொடருங்கள்..

    ReplyDelete
  4. வாங்க காரிகன்

    உங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. 'காப்பாத்துங்க ' என்று கத்தியபடி ஆற்றில் தத்தளிப்பவனை நோக்கி ஏழெட்டு பேர் ஓடினார்கள் கையில் செல்போனோடு என்று ஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதையில் வாசித்தது ஞாபகம் வருகிறது. மனிதன் செத்துப் போவதை விட மனிதம்தான் அதிகம் செத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ இந்த விஷயத்தை பலரோடு பகிர வேண்டுமென்று ஆசைப்பட்டேன்; பகிர்ந்தேன் .

    இளையராஜா பற்றிய கட்டுரை தனி மனித ஆராதனை என்றால் இந்த உலகத்தில் ஒவ்வொரு துறையிலும் பாண்டித்தியம் பெற்றவர்களைப் பற்றி பலரும் எழுதுவது கூட ஆராதனைதான் ! சாதனையாளர்களைப் பற்றி எழுதுவது வழி வழியாக வந்த மரபு . நானும் அதைதான் செய்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு முன்னாள் நிறைய பேர் அவரைப் பற்றி எழுதி விட்டார்கள் . நான் ஒரு கோணத்தில் பார்க்கிறேன் . அவ்வளவுதான்!

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் எழுத்து. வாழ்த்துக்கள்.
    இங்கேயும் நீதிமான் ராஜாவை தான் வம்புக்கு இழுக்கிறார்!

    ReplyDelete
  6. விமல்
    அவருக்குத் தெரிந்ததைச் சொல்கிறார் . அல்லது தெரிந்தது போல் சொல்கிறார்.

    ReplyDelete
  7. sorry i have missed you all the confrontation between you and kareegan ji is interesting how i missed those things......incidentally this article should be an eyeopener to the present day generation and to the elderly people

    ReplyDelete
  8. மைக் டெஸ்டிங்.

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்