Thursday, 2 July 2015

இசை ராட்சஷன் - 11 ( The Musical Legend )


                                                     

                                       

                              இளையராஜாவின் பாடல்களை இப்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்கிறார்களே , இளையராஜா இதுபோல பழைய இசை அமைப்பாளர்களின் பாடல்களை செய்ததுண்டா ?

                                  ஒரு வார பத்திரிக்கையில் ஒரு வாசகரின் கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் கீழே .

                            

       "  இளையராஜாவைப் போல சென்சிபிலான கலைஞரை காண்பது அரிது. கதைக்குத்  தேவைப்படாத எதையும்  சும்மா பரபரப்புக்காக செய்ய மாட்டார் . 1986 இல் சிவாஜி, பத்மினி ஜோடி நடித்த  படம்  ' தாய்க்கு ஒரு தாலாட்டு  ' . அந்த ஜோடியின் கடைசி டூயட்டுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான் .  ' பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அட்டகாசமான பாட்டு அது.   டி. எம். எஸ் , சுசீலா பாடியிருந்தார்கள் . இணையத்தில் கிடைத்தால் தேடி கேளுங்கள்.

                                         இந்தப் பாடலை கேட்டு முடித்ததுமே  அப்படியே ' புதிய பறவை '  படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன்  இசையில் ' உன்னை ஒன்று கேட்பேன் ' பாடலையும் கேளுங்கள். எம்.எஸ்.வி. க்கு எவ்வளவு  கௌரவமான tribute செய்திருக்கிறார் என்பதும் , இளையராஜா ஏன் மேஸ்ட்ரோ என்பதும் புரியும்.

                                            ரீமிக்ஸ் என்றால் இடையிடையே மேற்கத்திய கத்தல்களை செருகுவது மட்டுமல்ல என்கிற பாடத்தை இளையராஜாவிடமிருந்து  இன்றைய இளம் இசை அமைப்பாளார்கள் கற்றுக் கொள்ள வேண்டும். "

                                           இதை வாசித்தவுடன் எனக்கும் அது மிகச் சரியெனவே பட்டது . எத்தனையோ ஜனங்கள்  பழைய பாடல்களில், உள்ளம் உருகி உயிர் உருகி , தன்னையே மறந்து தவித்து லயித்து  ரசித்துக் கேட்டதை , அதன் ஆன்மா சிதைத்து ரீமிக்ஸ் செய்து கற்பழித்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இசையமைப்பாளர்கள்.   ரீமிக்ஸ் செய்வதில் இளையராஜாவின்  பெருமை என்னவெனில் தான் இசையமைத்த பாடல்களை தானே ரீமிக்ஸ் செய்து கொடுப்பதுதான் .  சமீபத்தில் ' மேகா '  என்ற படத்தில் 'புத்தம் புது காலை ', ஷமிதாப்  என்ற படத்தில் ' ஆசைய  காத்துல தூது விட்டு ' என்பதின் ஹிந்தி வடிவமும் எடுத்துக்காட்டுகள்.  இளையராஜாவே ஆனாலும் அந்தப்  பழைய பாடல்களில் இருந்த ஜீவன் இப்போது கொடுத்த பாடல்களில் இல்லாதது போல என் மனதில் பட்டது.  குரல்களும் இசைக் கருவிகளும் மாறியது காரணமாக இருக்கலாம் .  ' பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அவரே  நமக்குச் சொன்னவர்தானே!  ' நான் கடவுள் ' படத்தில் பாடப்பட்ட 'மாதா உன் கோவிலில் ' என்ற பாடல் விதிவிலக்கு.


                                     கர்னாடக இசை புரியாத மக்கள் கூட்டம் மெல்லிசை என்ற சினிமா இசைக்கு அடிமையாகிப் போனதின் விளைவு , கர்னாடக இசை பண்ணவும் பேணவும் தெரிந்த சில மேல் தட்டு மேதைகளுக்கு எரிச்சலை மூட்டியதால் , இளையராஜாவிற்கு முந்தைய இசை அமைப்பாளர்களையும் 
இளையராஜாவையும் கீழ்மைப் படுத்தவே முனைந்தார்கள்.  பக்திக்காக மட்டுமே பயன்பட்டு வந்த கர்னாடக இசையை சினிமாவின் இசைக்குள்ளும் சிலர் புகுத்தியதை கடவுளுக்கு விரோதமாக பார்த்தார்கள். கர்னாடக இசை தனித்துவமிக்கதாகவும் மெல்லிசை சுயம் இழந்த தனித்துவமற்ற இசையாகவும் அவர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் கர்னாடக இசையே நாடோடிப் பாட்டுகளிலிருந்து திருடப்பட்டு உருமாற்றம் அடைந்ததாக பல இசை ஆய்வாளர்கள் உண்மை எடுத்தியம்புகிறார்கள்.  அது மறைக்கப்பட்டு வந்துள்ளது.


        மெல்லிசை ஒரு கலவை இசை என்பதில் ஐயமில்லை என்றாலும் , அதிலும் கர்நாடக இசையின் ராகத்தில் அமைத்து மேனாட்டு சங்கீதம் கலந்து அழகிய கலவையாக கொடுக்கப்படும்போது , மக்களுக்கு புரிந்த மொழியில் எளிய இசையாக அது போற்றப்படுகிறது.  மக்களின் மனசுக்குள் நர்த்தனமாடுகிறது. உணர்வுகளில் ஊறி கலந்து உற்சாகப்படுத்துகிறது.  இளையராஜாவின் இசை அதில் முக்கியப் பங்கெடுத்திருக்கிறது . ராகம் ஏதும் அறியாத ஜனங்கள் அவ்வளவு ரசிக்கையில் , ராகங்கள் புரிந்து தெளிந்த இசை வல்லுனர்கள் இளையராஜாவின் இசையின் அழகுகளை இன்னும் இன்னும் வியந்து ரசிக்கிறார்கள் . மேலோட்டமாக கேட்பவர்களே இன்புறும்போது  ஆழ்ந்து ரசிப்பவர்கள் பிரமிப்பதில் வியப்பில்லை. அவர்களுக்குத் தெரியும் ....'அவர்' யார் என்று?      

                                       உதாரணத்திற்கு ஒரு காணொளியில் , ஒரு இசைக் கலைஞர் ஒருவர்  ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த மொசார்ட் இசை வல்லுனரின் சிம்பொனி இசையிலிருந்து ஒரு பகுதியை வயலினில் வாசிக்க எல்லோரும் ரசிப்பதும் ,  வாசித்துக்கொண்டே அந்த சிம்போனியை அகத்தூண்டலாக எடுத்து இளையராஜா இசைத்திருக்கும் ஒரு பாடலை விடாமல் தொடர ,   அங்குள்ள எல்லோரும் அதைவிட உற்சாகமடைவதும் , மீண்டும் அவர் அந்த சிம்பொனிக்கு வருவதும் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.  இது இளையராஜாவின் படைப்பாற்றலுக்கு சரியான சான்று என்று எடுத்துக் கொள்ளலாம்.
                 
                                                   


                 'ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை ' என்று அவரே எழுதி இசையமைத்துப் பாடியது இங்கு நிரூபணமாகிறது.  ' ஏற்கனவே எங்கெங்கோ இருப்பதைத்தான் நான் மீண்டும் படைக்கிறேன். புதிதாய் இசைக்க ஒன்றுமில்லை '  என சொல்லாமல் சொல்கிறார் இளையராஜா.  ஆனால் நமக்கோ அவரின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொன்றாக தனித்துத் தெரிகிறது.


                                      சரி மீண்டும் 1979 க்கு வருவோம் . ' அன்பே சங்கீதா ' என்ற படத்தில் ' கீதா...சங்கீதா.. சங்கீதமே... சௌபாக்யமே .. ஜீவ அமுதம் உன் மோகனம் .. ' என்றொரு மனசு மயக்கும் காதல் கீதம் மோகன கல்யாணி ராகத்தில் இசைக்கப்பட்டிருக்கும். ஜெயச்சந்திரனும் ஜென்சியும் இணைந்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார்கள்.   ' லால..லலலா  லால..லலலா ' என்ற ஹம்மிங்குடன் ஜென்சி ஆரம்பிக்க மௌத் ஆர்கன் சப்தத்தில் அதே மெலடி ஒலிக்க , கேட்க ஆரம்பிக்கும்போதே உடலை விட்டு மனசு பறக்கும் சுகானுபவம் தோன்றும்.   மீண்டும் ஹம்மிங் மீண்டும் இசைப் பின்னணியோடு வயலின்களில் ஆலாபனை செய்து கிடாரை வீணை போல இசைத்து,  ஜெயச்சந்திரன் 'கீ..தா...' என்று பல்லவி ஆரம்பிக்க  மனசு இன்னும் உயர பறக்கும் .

                 
                                அப்போது படம் பார்க்கவில்லை. தயவு செய்து பார்த்து விடாதே என்று நண்பர்கள் சொன்னார்கள். ஒரு வாரம்தான் தியேட்டரில் ஓடியது. பாட்டு மட்டும் காதுகளில் அடிக்கடி ஒலித்தது. பாடல் கேட்கும்போதெல்லாம் மனசு கிடந்து தவிக்கும்.  இளையராஜாவின் பாட்டுக்காக  படம் பார்ப்போமா என்று நினைப்பேன் . அப்படி நிறைய படங்கள் பார்த்ததில் நொந்து போக வேண்டி வந்தது. இளையராஜாவின் சில பாடல்களுக்காக  படம் முழுவதும் உட்கார வேண்டியிருக்கும் . பாட்டு ரசிக்கலாம் ; படம் ரசிக்க முடியாது.  இளையராஜா அற்புதமாய் இசைக் கோர்வை செய்திருக்கும் இடங்களில் எல்லாம் படம் பிடித்திருக்கும் லட்சணம் கண்றாவியாக இருக்கும்.  அதை சகிக்க முடியாது.  அதனால் போகப் போக பாடல்கள் மட்டுமே கேட்டுப் பழகினேன் . இளையராஜாவின் இசைக்கு நான் செய்யும் கற்பனை எனக்கு திருப்தியாக இருந்தது.  


                                        முதல் இடையிசையில்  வயலினில் கேள்வி கேட்க குழலால் பதில் சொல்வது போல் ராஜா கொடுத்திருக்கும் இசைக்கோர்வை பிரமாதம் . கூடவே கிடாரிலும் அழகு மீட்டிக் கொடுக்க பின்னனியில் பாஸ் கிடாரின் இசைக் கோர்வையும் சேர  ,  ' பகலென்ன இரவென்ன நாம் காண வேண்டும் ...மதனோற்சவம் ' என ஸ்பஷ்டமாக ஜெயச்சந்திரன் சரணம் பாடும்போது வார்த்தைகளின் தெளிவில் கூடுதல் இனிமை சேர்த்தது போல இருக்கும்.  கூர்ந்து கேட்டால் இரண்டாம் இடையிசையிலும் பாஸ் கிடாரின் ஆட்சி தனித்துத் தெரியும் . பெண் குரலில் வார்த்தை சுத்தம் கொஞ்சம் குறைவே ! காட்சியை விட பாடல் கேட்பது சுகம்.


                                               

                                  அதே படத்தில் அடுத்த பாடல் சூப்பர் ஹிட் !  ரேடியோவில் ஒலி  பரப்பாத நாளே இல்லை என்று சொல்லுமளவிற்கு  அவ்வளவு பிரபலம். எஸ்.பி பி.யின் மிக நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.  படத்தில் தேங்காய்  சீனிவாசன்   பாடுவது போல் காட்சி.  காட்சியை பார்த்தவுடன் அதிர்ச்சி .  உயிர் உருக பாடும் எஸ்.பி.பி யின் குரலுக்கு அவர் பொருத்தமானவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பாடலை அண்ணன் தங்கையான எஸ்.பி.பி மற்றும் சைலஜா சேர்ந்து பாடியிருப்பார்கள். சைலஜாவிற்கு முதல் பாடல். ஹம்மிங் மட்டுமே கொடுத்திருப்பார். பாட்டின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் சைலஜாவின் குரல் இனிக்கும்.


                                சிறு வயதில் இந்தப் பாட்டைக் கேட்டு நெக்குருகி போயிருக்கிறேன்.  பாட்டின் மெலடி மனசை பிசைவது போல ஒரு சிறு வலியை ஏற்படுத்தியது . பாட முயன்று தோற்றிருக்கிறேன் . பாட்டை கேட்டு பல சந்தர்ப்பங்களில் அசையாமல் நின்றிருக்கிறேன் . சில நேரங்களில் அழுதுமிருக்கிறேன் . ஒரு சில பாடல்கள் என்னை இம்சைக்கு உள்ளாக்கும் . அதில் இந்தப் பாடலும் ஒன்று என்பதை உளப்பூர்வமாக நான் சொல்ல வேண்டும்.  எஸ்.பி. பி யின் குரலில் இழையோடும் சோகம் கேட்பவர் யாரையும் தாக்கும் .  எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் இப்போதும் பசுமையாய் இருக்கும் இந்தப் பாடலுக்காக இளையராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

         
                              '  சின்னப் புறா ஒன்று ...எண்ணக் கனாவினில் ..வண்ணம் கெடாமல் வாழ்கின்றது ..... '  என்ற  வாலி அவர்கள்  எழுதிய இந்தப் பாடல் தெய்வீக கானம் போலவே எனக்கு ஒலித்தது.  இப்போதும் அப்படியே ஒலிக்கிறது.     இரண்டு  சரணம் ,  இரண்டு  வேறுபட்ட  இடையிசையோடு  உணர்ச்சிப் பெருக்கின் உச்சமாய்  எஸ்.பி.பி குரலில் பாடல் எங்கெங்கோ கூட்டிச் செல்லும். பாடல் முழுக்க கிடார் வயலின் கொண்டு இசை ராஜாங்கமே நடத்தப்பட்டிருக்கும். பாஸ் கிடார் பாட்டு முழுவதும் சற்று தூக்கலாகவே தெரியும். முதல் இடையிசையில் கிடாரில் கொடுத்திருக்கும் அந்த இசைக் கோர்வை அட்டகாசமானது. இரண்டாம் இடையிசையில் தனித்த வயலின் கொண்டு அழுதிருப்பது அற்புதமானது. இடையிடையே பெண் குரலின்  ஹம்மிங்  கூடுதல் சோகத்தை சுகமாய் மாற்றிக் கொடுக்கும் .  இது போன்ற பாடல்களை இளையராஜாவே மீண்டும் கொடுக்க இயலுமா என்று  சொல்ல முடியாது.  அந்த இசை வரம் அவருக்கு அவர் வணங்கும் இறைவனால் கொடுப்பட்டது.  அதை ராஜா நமக்குக் கொடுத்திருப்பது நமது பாக்கியம் என்றே கருதுகிறேன்.   


                                         

                                 இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பீதோவன், மொசார்ட், பாக் போன்ற மேனாட்டு இசை அறிஞர்களைப் பற்றி பேச்சு பரவலாயிற்று . அதற்கு முன்னர் ஒரு சிலரே அவர்களை அறிவர்.   அந்த இசை மேதைகளோடு ராஜாவின் இசையை ஒப்பீடு செய்யும் மன நிலையை இசை ரசிகர்கள் பலருக்கும் ஏற்படுத்தியதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். என்னுடைய இசை நண்பர் ஒருவர் இளையராஜாவின் இசை பற்றிய பேச்சு வந்தபோது , ' பல இசை அமைப்பாளர்களின்  இசை  RHYTHM  BASED ,  ராஜாவின் இசை INSTRUMENTAL BASED . மேனாட்டுக்காரன் இசையெல்லாம் அப்படிப்பட்டதே ! அதனால்தான் இளையராஜா அவர்களோடு ஒப்பிடப்படுகிறார்  '  என்றார்.  மேலே கண்ட பாடல்களை கேட்கின்றபோது அது உண்மை என்பதை அறிகிறேன்.


                              பாஸ் கிடாரின் உபயோகம் பெரும்பாலும் எல்லா இசை அமைப்பாளார்களின் பாடல்களிலும் இருக்கும் .  ஆனால்  இளையராஜாவின் பாஸ் கிடார் தனித்துவம் மிக்கது.  கூர்ந்து கேட்கும்போது நம்மை குதூகலத்தில் ஆழ்த்தும் . ஒரு ஆனந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அவர் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாஸ் கிடாரின் பங்களிப்பை அதன் நாதத்தை  எத்தனை பேர் கவனித்திருக்கப் போகிறார்கள்?  உண்மையான இசைக் கலைஞர்கள் அதன் மகத்துவத்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அதில் ஒருவர் விக்கி என்ற இசைக் கலைஞர் . ' சொல்வனம் ' என்ற இணைய இதழில் ' பாஸ் கிடார் தில்லானா ' என்ற தலைப்பில் இளையராஜா பாஸ் கிடாரை  எந்தப் பாடல்களில் எல்லாம் பிரமாதமாகக் கையாண்டிருக்கிறார் என்பதையும் அதற்கு உடனுழைத்த இசைக் கலைஞர்கள்  பற்றிய விபரத்தையும் தன் இனிய இசை அனுபவங்களோடு அழகாக பரிமாறியிருக்கிறார்.  கீழ்க் கண்ட பதிவில் அதை பார்த்தீர்கள் என்றால் பாஸ் கிடார் இசையை சுகித்துச் செல்லும் இனிய  அனுபவம் கிட்டும். 

           
                                http://solvanam.com/?p=23134




..............................தொடர்வேன் .................................



                 




14 comments:

  1. சால்ஸ். தொடரும் இசைராட்சசன் படைப்பிற்கு வாழ்த்துக்கள் .சிறிய பதிவாயினும் சீரானதொரு பதிவு .சின்ன புறாவொன்று பாடல் பார்க்க தான் சகிக்காதேயொழிய கேட்க திகட்டாத அற்புத கானம் .இன்றும் கேட்கும்போதெல்லாம் மனதை கொள்ளையடித்து செல்லும் இனிமையான பாடல்.நினைவலைகளை மீட்டுக்கொணரும் அநேக பாடல்களை உங்கள் அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன் .

    ReplyDelete
  2. சால்ஸ்,

    புதிதாக சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோன்றிருக்கிறது. உங்களின் எழுத்து இராவை புகழ்வதோடு நின்றுவிடுவது போல தோன்றுகிறது. கொஞ்சம் களத்தை விட்டு வெளியே வாருங்கள்.வேறு பார்வை கொண்டு உங்கள் எழுத்தை வசீகரமாக்கிக்கொள்ளுங்கள்.

    ---- இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பீதோவன், மொசார்ட், பாக் போன்ற மேனாட்டு இசை அறிஞர்களைப் பற்றி பேச்சு பரவலாயிற்று . அதற்கு முன்னர் ஒரு சிலரே அவர்களை அறிவர். ----

    மிக மலிவான நகைச்சுவை என்று எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்கு வேண்டுமானால் அப்படியிருக்கலாம். அதை எல்லோருக்குமான உண்மை என்று சொல்லாதீர்கள். மேலும் அவர்களோடு இராவை ஒப்பீடு செய்வதெல்லாம் படு அபத்தம். என்னத்தை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நீங்கள் சகட்டுமேனிக்கு எழுதுவது அபத்தக் களஞ்சியமாக இருக்கிறது. இவர் அவர்களை காப்பி அடித்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த ஒப்பீடு போலும். போலிக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு இல்லையா?

    இந்த பாஸ் --- Bass பேஸ் என்பார்கள்-- கிடார் சங்கதி இரா ரசிகர்களால் கவனமாக முன் வைக்கப்படும் அடுத்த அபத்தம். இசைபற்றி தெரியாதவர்களிடம் இந்த பருப்பு வேகலாம். பேஸ் கிடார் இல்லாமல் பொதுவாக மேற்கத்திய சாயல் கொண்ட பாடல்களை அமைக்கவே முடியாது. இது எதோ இராவின் தனிப்பட்ட சொத்து போல ஆஹா ஓஹோ என்று புகழ்வது கண்டு .. என்னத்தைச் சொல்ல? வளருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆகா... வந்துட்டீங்களா காரிகன் . வழக்கமான உங்கள் பல்லவியை எடுத்து விட்டுருக்கிறீர்கள். இளையராஜாவின் பெருமைகளை எடுத்துரைத்திருப்பது உங்களுக்கு வயிற்றெரிச்சலாகத்தான் இருக்கும் . நான் தொடர்ந்து கண்டு வருவதுதானே!

      இளையராஜாவின் இசை அதிகம் வெளி வந்த பின்னரே மேலை நாட்டு இசை அறிஞர்களின் இசை ஒரு ஒப்பீடாக பேசப்பட்டது. அந்த கால கட்டங்களில் நானும் பல இசை தெரிந்த நண்பர்களோடு அதை பகிர்ந்து கொண்டவன் . காரணம் இசைக் கருவிகளில் அவர் கொடுத்த மேதமைத்தனம், வியப்பூட்டும் வகையில் ராஜா கையாண்ட யுக்திகள் , இசையை நன்கு அறிந்த வல்லுனர்களின் விமர்சனம் என்று சொல்லலாம் . இது எல்லாம் கண்கூடு . பொய் என்று உங்களைப் போன்று வேண்டுமென்றே இட்டுக் கட்டிச் சொல்லக் கூடியவர்கள் சிலர் இருக்கலாம்.

      இசை பற்றி நன்கு தெரிந்த ஒருவர்தான் ராஜாவின் இசையில் பாஸ் கிடார் உபயோகம் பற்றி அழகாக எடுத்துரைத்திருக்கிறார் . உங்களைப் போன்றவர்களின் இசை அனுபவத்தை நான் கொடுத்திருக்கவில்லை.
      பேஸ் கிடார் என்று பலர் சொல்கிறார்கள் . ஆனால் அது தவறு . பாஸ் கிடார் என்றுதான் சொல்ல வேண்டுமென அதை வாசிப்பவரிடமே நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.


      ///பேஸ் கிடார் இல்லாமல் பொதுவாக மேற்கத்திய சாயல் கொண்ட பாடல்களை அமைக்கவே முடியாது. இது எதோ இராவின் தனிப்பட்ட சொத்து போல ஆஹா ஓஹோ என்று புகழ்வது கண்டு .. என்னத்தைச் சொல்ல? ///


      பாஸ் கிடார் இல்லாமல் மேலை நாட்டு சங்கீதம் வாசிக்க முடியாது . சரியே! ராஜாவின் பாஸ் கிடார் வாசிப்பிற்கான நோட்ஸ் எழுதப்பட்டிருக்கும் விதம் யாரும் நினைக்க முடியாத ( கவனிக்கவும் வாசிக்க முடியாத என்று சொல்லவில்லை ) எல்லைகளுக்கு போயிருக்கும் என்பதைத்தான் சுட்டிக் காட்ட முயல்கிறேன். கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்பார்கள். மகிழ்வார்கள் . செவியிருந்தும் செவிடானவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?

      Delete
  3. சால்ஸ்,

    இரா பற்றிய உங்கள் கருத்துக்கு நான் மறுப்பு எதுவும் கூறப்போவதில்லை. அது தனி நபர் சார்ந்தது. ஆனால் பாஸ் என்றுதான் bass கிடாரை உச்சரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது வேடிக்கைகைதான். அதை உங்களுக்குச் சொன்ன இசை தெரிந்த நண்பர்களும் உங்களைப் போன்ற அரைவேக்காடுகள்தான் போல.

    Italilan basso என்பதிலிருந்து வந்தது ஆங்கில bass. எனவே ஒரே ஸ்பெல்லிங் ஒ வைத்தவிர. ஆனால் அதே உச்சரிப்பு. இதை base (beise) என்றுதான் உச்சரிக்க வேண்டும். பாஸ் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாதவர்களின் வசதிக்கான உச்சரிப்பு. கொஞ்சம் தெரிந்துகொண்டு எழுதுங்கள். முப்பது வருடங்களுக்கு மேலாக ஆங்கில இசை கேட்பவன் என்பதால் இதைச் சொல்கிறேன்.

    தவிர இரா பற்றிய தகவல்கள் .... நான் மறுத்தால் அது இன்னும் நீளும். அது எதற்கு இப்போது?

    ReplyDelete
  4. 14- 07- 2015 இன்று இசை மாமேதை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் விண்ணுலகம் அடைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் அவருடைய இசை இன்னும் ஆண்டாண்டு காலம் நம்மிடம் உயிர் வாழும் . அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய இசை ரசிகர்கள் எல்லோரும் ஆண்டவனை பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  5. சார்ல்ஸ்
    நீங்க குறிப்பிட்டிருக்கும் இரண்டு பாடல்களும் மிக அருமையானவை.கீதா சங்கீதா எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்.

    தங்கள் எழுத்து நடையும் மெருகேறியுள்ளது."எல்லாம் தெரிந்த " துரைத்தனத்திற்கு,இசையை காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கும் அரைவேக்காட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது தங்களுக்குப் புரியும் என்றே நம்புகிறேன்.

    அருமையான பதிவு .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. வாங்க விமல்

    உங்கள் பாராட்டுக்கு நன்றி . சரியாக சொன்னீர்கள் . இசையை காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பவர்களைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நான் ரசிப்பதை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன் .

    ReplyDelete
  7. வலைச்சரம் பற்றிய கேள்விக்கு பதில் இங்கே சகோ!http://gmbat1649.blogspot.fr/2015/07/blog-post_22.html

    ReplyDelete
  8. உங்களின் தனிமெயில் வலையில் இருந்தால் இன்னும் சிறப்பு!நட்புடன் தனிமரம்

    ReplyDelete
  9. ராஜாவின் இசையில் வளர்ந்தவன் நானும் என்பதில் எப்போதும் அன்பே சங்கீதா என்னை நினைவில் தாலாட்டுது ! அருமையான பகிர்வு ஐயா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!

      வருகைக்கு நன்றி ! உங்கள் ஆலோசனைப்படி தனி மெயில் ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன். வலைச் சரத்தில் என்னை சாமானியன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். நண்பர்கள் பலர் என் பதிவுகளை வாசிக்கிறார்கள் . தொடருங்கள் .

      Delete
  10. சால்ஸ்,

    இரா பற்றிய உங்கள் கருத்துக்கு நான் மறுப்பு எதுவும் கூறப்போவதில்லை. அது தனி நபர் சார்ந்தது. ஆனால் பாஸ் என்றுதான் bass கிடாரை உச்சரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது வேடிக்கைகைதான். அதை உங்களுக்குச் சொன்ன இசை தெரிந்த நண்பர்களும் உங்களைப் போன்ற அரைவேக்காடுகள்தான் போல. // இவர் எல்லா இடத்திலும் இப்படித்தான் வாந்தி எடுப்பார் ஜாதி வெறியில் இதை தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து எழுங்கோ பாடலில்ன் சுவையில் கலந்து போவோம்!

    ReplyDelete
  11. சரியாக சொன்னீர்கள் தனிமரம்.உங்களைப் போன்ற பலர் என்ன சொன்னாலும் அமுதவனுக்கு காரிகனுக்கும் காதில் ஏறாது!
    ஏனென்றால் அவர்கள் தான் உண்மையை எழுதுகிறார்களாம்.எப்படி எல்லாம் இளையராஜாவை இறக்க முடியுமோ அப்படி எல்லாம் செய்வார்கள்.அவர்களுடன் நியாயமாக வாதிட முடியாது.
    காரிகன் ஒரு புதிய பதிவு ஒன்று [கவிதைக்காற்று } எழுதியிருக்கிறார்.

    எல்லாம் அரை குறையான செய்திகள்.எல்லாவற்றிலும் மூக்கு நுழைக்க ஆசை.அரைவேக்காடான பதிவு என்பதற்கு சிறந்த உதாரணம் அது.அவர் எழுதும் பதிவுகள் பெரும்பாலும் அவ்விதம் தான் இருக்கும்.

    இதில் என்ன வேடிக்கை என்றால் அதை பாராட்ட அமுதவன் ஓடோடி வந்து விடுவார்.காரிகனுக்கு இன்குலாப் , அப்துல் ரகுமான் யார் என்பதே தெரியவில்லை.இந்த லட்சணத்தில் கவிதை காற்று எழுதுகிறார் !

    மற்றவர்களை அரை வேக்காடு என்று எழுதுபவர் இவரே தான் !

    "அப்துல் ரகுமான், இன்குலாப் (இருவரும் ஒருவர்தானோ? அமுதவன் ஸார்தான் சொல்லவேண்டும்.) " என்று "கவிதைக் காற்று காரிகன் "எழுதுகிறார்...
    இவர்கள் அடிப்படையில் ஜாதி வெறியர்களாக இருப்பார்கள் என்ற சந்தேகம் உண்டு!

    ReplyDelete
  12. http://dharumi.blogspot.in/2015/09/mozart-ilayaraja-mozart.html

    deadly combo..

    நன்றி.

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்