மெல்லிசை மன்னனே
இன்னிசை வேந்தனே
இசையின் இமயமே
இனிய தமிழர்களின் இதயமே !
இன்னுயிரை இசைக்குள்ளே இங்கீந்து
எவ்வுலகம் பறந்தாய்!?
படைப்பாற்றல் கொண்டு
தேனருவியாய் தெள்ளமுத
கானங்கள் தந்த உனக்கு
படைக்கின்றேன் கவி அஞ்சலி !
'மூன்று வயதில் பாடுவேனாம் '
உதித்தது எண்ணத்தில்
உதிர்த்த அம்மாவின் வார்த்தைகள்
பின்னாளில் தெரிந்தேன்
பாடியதெல்லாம் உன் பாட்டன்றோ !
இசை கேட்க விரும்பி
திசை சுற்றி திரும்பிய
கணங்கள் காலங்கள்
கண்ணாமூச்சி ஆடும் கண்ணுக்குள் !
எனக்குள் எழுந்த
இசை என்னும் விருட்சம்
நீ போட்ட முதல் விதையால் !
சிறு வயது சினிமா ரசிகனாய்
பெரிய திரையில் உன் பெயர் கண்டு
கூட்டத்தோடு கைகள் தட்டியதும்
களிப்பூட்டிய கானங்கள் கேட்டு
குதூகலத்தின் உச்சியை எட்டியதும்
கூட்டம் கூடி பாட்டுப் பாடி
உன் இசை உன் புகழ் பேசியதும்
மூடிய விழியில் வந்து போகும்
வர்ண ஜாலங்கள்!
நெஞ்சம் விட்டு நீங்காது
வேறெங்கும் போகாது
காலத்தால் தீராது
நீ கொடுத்த இனிய ராகங்கள்!
ஆயிரமாயிரம் பாடல்களை
அழியாத கோலங்களாய்
அள்ளித் தெளித்துவிட்டு
ஆறடிக்குள் அடங்கிப் போனாயே!
காலன் உடல் கொண்டு போனால் என்ன
உன் உயிர் தந்து போனானே
காவியமாய் நீ படைத்த
கானங்கள் விட்டுப் போனானே!
ஒவ்வொரு முறை உன் ராகம்
காற்றுவெளியில் தவழும்போதும்
காதுகளில் தேனாய் தடவும்போதும்
இனி உயிர்த்தெழுந்து நிற்பாயே!
உடலுக்குதான் வயது எண்பத்தேழு
உயிருக்கு வயது எண்ணில் ஏது !?
உன் பாட்டு உன் கானம்
ஊரெல்லாம் தாலாட்டும்
உன் தூக்கம் உன் உறக்கம்
உன் பாட்டே தாலாட்டும் !
சிறப்பான அஞ்சலி வரிகள்...
ReplyDeleteசார்லஸ்...
ReplyDeleteநண்பர் காரிகனின் தளத்தில் பின்னூட்டமிட்டுவிட்டு இங்கு வந்தேன்...
உங்களின் அஞ்சலி கண்டு நெகிழ்துவிட்டேன் !
மனதில் பட்டதை மறைக்காமல் எழுதிவிடுபவன் நான்...
காரிகனையும் உங்களையும் கருத்துப்போர் நடத்திக்கொள்பவர்களாகவே அறிந்தவன் நான் ! அவரின் அஞ்சலிக்கு உங்கள் பதிலும், உங்கள் அஞ்சலியும் என் மனதை தொட்டுவிட்டது !
" மேன்மக்கள் மேன்மக்களே " என் சொல்லப்பட்டது உங்களை போன்றவர்களுக்குத்தான்.
காரிகனின் தளத்தில் பதிந்த பின்னூட்டத்தின் சிலவரிகளை இங்கே பதிய விருப்பம்...
அவருக்கு முன்னும் பின்னும் ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருந்திருக்கலாம்... இன்னும் வரலாம் !...
ஆனால் தமிழ்திரையிசையின் வரலாறு எம் எஸ் விக்கு முன், பின் என்றே பிரித்து பேசப்படும் !
அந்த மகா இசைக்கலைஞனின் ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் மெல்லிசையாய் பரவும்.
நன்றி
சாமானியன்
தனபாலன் சாருக்கு நன்றி . இரத்தினச்சுருக்கமாய் கருத்திடும் உங்களின் பாணியே எப்போதும் தனிதான்!
ReplyDeleteசாம் சார்
ReplyDeleteஉங்களின் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது . மனதார பாராட்டும் பாங்கும் இனிதாய் உள்ளது. காரிகனின் வார்த்தைகளை நான் மறுக்கவில்லை. மெல்லிசை மன்னரின் வழியில் நின்றுதான் இளையராஜா தனக்கென புதுப் பாதை வகுத்துக் கொண்டார். நானும் ஏற்றுக் கொள்வேன். காரிகனின் கருத்துகள் சிலவற்றில் நான் முரண்படுவேன். அவ்வளவுதான். மற்றபடி அவர் எனக்கு நல்ல இணைய நண்பரே!
மெல்லிசை மன்னரை ரசித்த பின்னரே அவருக்குப் பின் வந்த மற்ற இசையமைப்பாளர்களை ரசித்தேன். எனவே எம்.எஸ்.வி க்கு ஓர் உயர்ந்த இடம் எப்போதும் என் மனதில் உண்டு.
ஓய்ந்த மெல்லிசைக்கு ஒய்யாரமாய் தாங்கள் செலுத்திய அஞ்சலிக்கு வாழ்த்துக்கள் .காட்டுக் கூச்சலை கானமென சொல்லிக்கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கு இவர் ஒரு வரப்பிரசாதம்
ReplyDeleteஅருள் ஜீவா
Deleteசிலபேர்வழிகளுக்கு இது மரமண்டையில் இன்னும் ஏறவில்லை.
வாங்க அருள்ஜீவா
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி. சரியாகச் சொன்னீர்கள் . இன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதுவரை பாடப்படாத மெல்லிசை மன்னரின் ' மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி ' என்ற பாடலை ஒரு பையன் பாடியபோது , காட்டுக் கூச்சல் பாடல்கள் நடுவில் என்ன ஒரு மென்மையான பாடலை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் என நினைத்து புளகாங்கிதம் அடைந்தேன் . நடுவர்களும் மிக ரசித்தார்கள். அப்படிப்பட்ட பாடல்களை இனி யார் கொடுக்க முடியும் ? அவர் பாடல்கள் கேட்டாலே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாக அமையும் .
நண்பர் சால்ஸ்,
ReplyDeleteஇப்போதுதான் படித்தேன். எம் எஸ் வி பற்றிய உங்களது கவிதை அருமை. என்ன இருந்தாலும் இளையராஜாவுக்கு முன்பே பலரை கொள்ளை கொண்டவர் அவரல்லவா? நீங்கள் எம் எஸ் வி ரசிகனாக இருந்து பின்னர் இளையராஜாவுக்கு வந்தவர் என்று சொல்லியிருப்பதை படித்திருக்கிறேன். நானோ எதிர் மறை.
எத்தனையோ அபூர்வப் பாடல்களைப் படைத்தவர் எம் எஸ் வி. அவர் அளவுக்கு இன்னொரு இசை நதி தமிழில் அதன் பிறகு வரவில்லை. இதற்கு மேலே எழுதினால் இரா வை விமர்சிப்பதாக சில காட்டுமிராண்டி கருத்துக்கள் வரும். எம் எஸ் வி பற்றிய பேச்சில் எதற்காக தேவையில்லாமல் அவருடன் இணை வைக்க முடியாதவர்களைப் பற்றிய ஒப்பீடு இங்கே என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
சாம் கூறியவற்றிக்கு உங்களின் பதில் படித்தேன். இணைய நண்பர்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனாலும் சில காட்டுவாசிகள் உங்களைப் பாராட்டுவதாலேயே அவர்களையும் உங்கள் நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்வது குறித்து எனக்கு வருத்தமே.அவர்களுக்கு உண்மையில் உங்கள் ஆளுமை குறித்து எந்த நல்ல எண்ணமும் இல்லை. என்னை விமர்சித்தே உங்களைப் புகழ்கிறார்கள். ஆனால் உங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று தெரிகிறது. என்னைக் குறித்து புதிராக பேசுவதைக் கூட நீங்கள் எத்தனை சாதரணமாக எடுத்துக்கொண்டு அவர்களை வளர்த்து வருகிறீர்கள் என்பதையும் நான் காண்கிறேன்.
நல்லது. ஒரு மகா சகாப்தம் முடிந்து விட்டதால் இப்படி எழுதும் நீங்கள் நாளையே மறுபடி விமல் வகையறாக்களின் பக்கம் சாய்வீர்கள் என்பதும் எனக்குத் தெரிந்ததே.
நான் இந்த மாறக்கூடிய புகழ்களை என்றுமே விரும்பியதில்லை.
ஹலோ காரிகன்
Deleteஅஞ்சலி செய்கையில் பிணக்குகள் எதுவும் வேண்டாமே! என் கருத்துகளுடன் ஒத்துப் போகும் நண்பர்கள் மெல்லிசை மன்னரின் இசையைப் பற்றி எந்த குறையும் இதுவரை சொன்னதில்லை. இளையராஜா இசை பற்றி நீங்கள் நிறைய குறைகள் சொல்லும்போது எதிர்க் கருத்துக்களோடு வருவார்கள் . அவ்வளவுதான் .
இன்றைய செய்தி ஒன்று. எம்.எஸ்.வி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் 27 ம் தேதி காமராஜர் அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. காலத்தால் அழிக்க முடியாத அவர் பாடல்களை இளையராஜா குழுவினரும் எம்.எஸ்.வி குழுவினரும் இணைந்து பாடுகின்றனர்.
இது பற்றி இளையராஜா கூறும்போது , " எம்.எஸ்.வி அவர்களின் இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவிற்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த இசை நுணுக்கங்களை எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வண்ணம் , சிறு இசைக் குழுவினரோடு இந்நிகழ்ச்சியில் நான் வாசித்துக் காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விசயங்களை எப்படி சர்வ சாதாரணமாக அவர் செய்து காட்டியிருக்கிறார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர் . " என்றார்.
நாங்கள் இளையராஜாவின் ரசிகராக இருந்தாலும் இளையராஜாவே எம்.எஸ்.வி யின் ரசிகர் என்பதில் ஐயமில்லை. அதை நிரூபிக்கவும் போகிறார். நீங்களும் நானும்தான் கருத்துச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம் . எம்.எஸ்.வி யும் ராஜாவும் யாரும் யாரையும் குறையாக சொல்லிக் கொண்டதேயில்லை.
சிறப்பான அஞ்சலி சார்ல்ஸ்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பாட்டுக்களை பாடும் படி தந்த இன்னிசை வேந்தனல்லவா மெல்லிசைமன்னர்!அவருக்கு ஏது மரணம்!அவர் பாடல்களில் வாழ்வார்!
இங்கே கருத்து சொன்ன ஒருவர்க்கு காட்டுத்தனமாக கத்தும் ஒருவர் மகாமேதை எனத் தெரிவதும் ,இசையை இசைய வைத்த மாமேதையை சீரழித்தவர் என்று சொல்லும் காழ்ப்புணர்வுவிருப்ப வார்த்தைக்காரீகன் இசையை ரசிப்பதில்லை ஆளைத்தான் ரசிக்கும் வகையறா.!
வாங்க விமல்
Deleteவாழ்த்துக்கு நன்றி . நாம் எம்.எஸ்.வி அவர்களின் இசையை ரசித்த பிறகே இளையராஜாவின் இசையையும் ரசித்தோம் என்பது சிலருக்கு புரியாமல் இருக்கலாம் . இந்தப் பதிவில் அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
வணக்கம்
ReplyDeleteதங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html
நன்றி
சாமானியன்
நன்றி சாம் சார் ...என் தளத்தை பலர் அறிய பொதுவில் கொண்டு வந்ததற்கு நான் நிறைய நன்றிப் பூக்களை உரித்தாக்குகிறேன். இளையராஜாவின் ரசிகனாய் நான் இருந்தாலும் இந்த சமூகம் பற்றிய அக்கறை எனக்கு உண்டு என்பதை போகப் போக வெளிப்படுத்துவேன்.
ReplyDeleteஎம்.எஸ்.வி யின் மறைவு பற்றி ....?
ReplyDeleteமேற்கண்ட வாசகனின் கேள்விக்கு வாரப் பத்திரிக்கை ஒன்றில் சொல்லப்பட்ட பதில் :
எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி பேசுகையில் ஆச்சரியங்கள் முடிவதேயில்லை என்கிறார் பிரபல இசை விமர்சகர் ஷாஜி . "மனையங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் பாடும்போது " என்ற தலைப்பில் எம்.எஸ்.வி பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையில் , விஸ்வநாதனின் இசையாற்றலைப் பற்றி இளையராஜா கூறிய வார்த்தைகள் வருகிறது.
' எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருக வைத்து மெய்மறக்கச் செய்திருக்கிறார் . அவரது ஒவ்வொரு பாடலும் விலை மதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசை வழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம்.எஸ்.வி.யின் பாதங்களில் காணிக்கையாக்குகின்றேன். '
ஹலோ நண்பர்களே
ReplyDeleteஎம். எஸ்.வி க்கு செய்யும் அஞ்சலியாக சமீபத்தில் வந்த ஒரு பதிவை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன் . பிரபாகர் என்ற அருமையான கலா ரசிகர் ஒருவர் இந்தப் பதிவில் எம்.எஸ்.வி யின் இசை மகத்துவத்தைப் பற்றி நடுநிலையோடு அழகாக நம்மிடம் பகிர்ந்துள்ளார் . மற்ற இசையமைப்பாளர்களைப் பற்றி போற்றவோ தூற்றவோ செய்யாமல் அவர்களையெல்லாம் தான் கடந்து வந்த காலங்களில் வைத்து விமர்சனம் செய்திருக்கிறார். உண்மையான நடுநிலையான இசை விமர்சகர் என்று இவரைச் சொல்லலாம் .
http://prabahar1964.blogspot.in/2015/08/blog-post.html#comment-form
எம்.எஸ்.வி அவர்கள் மறைந்த பிறகு அவருக்காக அதிகம் பரிந்து பேசுபவர் அவர் பெருமை பேசுபவர் இளையராஜா . கீழ்க்கண்ட பதிவு ஒரு உதாரணம் .
ReplyDelete"என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் எம்..எஸ்.விஸ்வநாதன்"- இளையராஜா உருக்கம்
ஜீபிடர் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு சிறுவனாக இருந்த எம்.எஸ்.வி. ஓய்வு நேரங்களில் இசை பயிற்சி எடுத்துக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டார்.
பிறகு ஒருநாள் அபிமன்யூ படத்துக்காக எஸ்.எம்.சுப்பையநாயுடு அவர்கள் ஒரு டூயட் பாடலுக்கு மெட்டு போட்டபோது அது திருப்தியாக வராமல் போகவே, சிறிது நேரம் கழித்து வாசிக்கலாம் என்று முடிவு செய்தார்.
அவர் அங்கு இல்லாத அந்த இடைவெளியில் எம்.எஸ்.வி., அந்த பாடலுக்கு தானே ஒரு மெட்டு போட்டு பாட,. அங்கிருந்த கோபாலகிருஷ்ணன் தபேலா வாசித்துக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் அங்கு வந்து விட்ட எஸ்.எம்.சுப்பையாநாயுடு , “டேய் என்னடா பண்ற..இப்ப வாசிச்ச மெட்டை மறுபடியும் வாசி” என்று சொல்ல, பயந்து போய் நின்றிருந்த எம்.எஸ்.வி. மீண்டும் வாசித்து காட்ட, “இதையே டியூனாக வெச்சுக்கலாம் நீ எல்லாருக்கும் நோட்ஸ் எழுதி கொடுத்துடு நீ போட்டதா சொன்னா ஆர்க்கெஸ்ட்ரா மதிக்க மாட்டாங்க நான் போட்டதா சொல்லு” என்று சொல்லி அந்த பாடலை பதியவைத்திருக்கிறார். அபிமன்யூ படம் வெளிவந்தபோது ’புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மனமே பெறுவோமே” என்ற பாடல் பெரிய வெற்றி பெற்றது
பின்னாளில் ஜீபிடர் பிக்சர்ஸ் சென்னைக்கு மாறியபோது பணியாளர்கள் எல்லோரையும் கணக்கு முடித்து அனுப்பி கொண்டிருந்தார்கள். எம்.எஸ்.வி.யையும் வேலையை விட்டு விலக்க முடிவு செய்கிறார்கள். இந்த விஷயத்தை எஸ்.எம்.சுப்பையநாயுடுவிடம் கண்ணீர் மல்க எம்.எஸ்.வி சொல்லி அழ, அவர் கையை பிடித்துக்கொண்டு ஜீபிடர் பிக்சர்ஸ் சோமுவிடம் அழைத்து சென்று, ‘உன்னுடைய ஜீபிடர் பிக்சர்ஸ் இருப்பதற்கு காரணம் அபிமன்யூ படம்தான் அந்த படம் ஓடுவதற்கு இவன் டியூன் போட்ட புது வசந்தமாமே பாட்டுதான்” என்று அந்த சம்பவத்தைச்சொல்லி,. ”யாரை வேண்டுமானாலும் அனுப்பு இவனை மட்டும் விட்டு விடாதே கூடவே அழைத்துப்போ” என்று சொல்கிறார். இப்படி தன்னுடைய குருநாதர் மூலமே வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர் எம்.எஸ்.வி. அவர்கள்
எம்.எஸ்.வி அண்ணா அவர்களின் இசை புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து ஏனென்றால் அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களையெல்லாம் கொண்டுவந்ததை நான் ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதை சத்தியமாக சொல்லுகிறேன்.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய மானசீக குருவாக இருந்த சி.ஆர்.சுப்புராமன் எப்படி என்னுடைய உயிரில் உடலில் கலந்திருந்தாரோ அப்படியே எம்.எஸ்.யும் என் உயிரில், உடலில், ரத்தநாளங்களில் இதயதுடிப்பிலும் மூச்சுக்காற்றிலும் கலந்திருந்தார்
தேவதாஸ் படத்தை சி.ஆர் சுப்புராமனால் முடித்துக்கொடுக்க முடியாமல் போனது. அவரது ஆசி்யினால் அந்த படத்தின் பாடல்களையும் பின்னனி இசைகோர்ப்பு பணியையும், முடித்துக்கொடுத்தார் எம்.எஸ்.வி. படத்தில் பிற பாடல்கள் நன்றாக இருந்தபோதும் எம்.எஸ்.வி. இசையமைத்த ’உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்ற பாடல் அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த பாடலின் வெற்றியால் தேவதாஸ் படம் நீண்டநாள் ஓடியது.
அதேபோல் எம்.எஸ்.வியின் இசையினால் ஓடிய படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த இசை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதவை. அந்த தாக்கத்தின் அடையாளம்தான் இளையராஜா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
பொதுவாக கலைஞர்களை வாழும் காலத்தில் அரசியலில் இருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை எம்.எஸ்.வி. அவரகளும் மத்திய அரசின் விருதுகளை தேடி போகவில்லை. ஆனால் எம்.எஸ்.வி. அவர்களை அவர் வாழும் காலத்திலேயே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனிப்பட்ட முறையில் எம்.எஸ்.வி. அவர்களுக்கு விழா எடுத்து மரியாதை செய்து அவர்களுக்கு கௌரவம் செய்தார். இது பாராட்டுக்குரியது.
பின் குறிப்பு; எம்.எஸ்.வியின் ஆன்மா சாந்தியடைய அவருக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்ற ஏற்பாடுகளை செய்திருக்கிறார் இளையராஜா