சமீபத்தில் வந்த திரைப்படங்களின் விமர்சனத்திலிருந்தும் படம் பார்த்த அனுபவத்திலிருந்தும் இந்தப் பதிவை எழுதும் எண்ணம் ஏற்பட்டது. அப்பா அம்மாவைப் பற்றி ஒவ்வொருவரும் என்ன கணக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை மீட்டெடுக்கும் நினைவலையாக இது சிலருக்கு அமையலாம்.
'அப்பா ' என்ற திரைப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தம் அப்பாவின் நினைவில் மூழ்கிப் போகாமல் வெளியேறி விட முடியாது. படம் பார்த்து முடித்த பிறகு சிலர் மனம் கனத்துப் போகலாம். சிலர் சிரித்துவிட்டுப் போகலாம். சிலர் தம் தந்தையை நினைத்து எரிச்சலும் கோபமும் அடையலாம். ஏனென்றால் அப்பாக்கள் பலவிதம்.
ஒரு முறை என்னோடு படித்த தோழியுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது அப்பா பற்றிய பேச்சு வந்தது. நான் என் அப்பாவைப் பற்றி பெருமையாக பேசிவிட்டு அவள் அப்பாவின் விபரம் அறிய வினவியபோது சட்டென , ' அவன் இல்லை' என்றாள் . இலேசான அதிர்ச்சியுடன் மீண்டும் வினவியபோது , ' அவன் இல்லை ' என்று மறுபடியும் அதே பதிலை அலட்சியமாக சந்திக்க நேர்ந்தபோது , ' இதில் ஏதோ விவகாரம் உள்ளது' என நானே டாபிக்கை மாற்றி விட்டேன். இவ்வளவு மரியாதையுடன் தன் தந்தையை விளித்த தோழியின் அப்பா தம் குடும்பத்தை ' அம்போ' என விட்டு விட்டு ஓடிப் போனவர் என்பது தாமதமாக தெரிய வந்தது. அதன் பிறகு ஒரு நாளும் அவளிடம் என் அப்பாவைப் பற்றி கூட நான் பேசியது கிடையாது. அவள் வலி புரிந்தது.
நாம் குழந்தையாய் இருந்தபோது அப்பாவை ஒரு ஹீரோவாக வைத்திருந்தோம் . வளர வளர ஜீரோவாக மனசுக்குள் உருவகப்படுத்திக் கொண்டோம் . ' எனக்கு என்ன பெரிதாக செய்து வைத்தார், என்ன பெரிதாக வைத்து விட்டுப் போனார் ' என்று இழந்த வாய்ப்புகளையும் வசதிகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் நம்மில் பலர் அப்பாவை இழந்த பிறகோ அல்லது அப்பாவாக ஆன பிறகோதான் மீண்டும் அவரை ஹீரோவாக்குவோம். வாழ்க்கையை வாழ எவ்வளவு அழகாக நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்பதை தாமதமாக புரிந்து கொள்வோம். பத்து மாதம் சுமந்தது அம்மா என்றால் காலம் முழுவதும் சுமந்தது அப்பா என்பதை காலம் கடந்த பிறகே சிந்திக்கின்றோம்.
' அப்பா ' திரைப்படத்தில் மூன்று விதமான அப்பாக்களை காட்டுகிறார்கள். மூவரும் அவர்களின் குழந்தைகளை தங்கள் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஊட்டி வளர்க்கிறார்கள். சமுத்திரக்கனியின் குழந்தை கட்டுப்பாட்டோடு கூடிய சுதந்திரத்தோடு வளர்வதாக காட்டப்படுகிறது. படத்தில் அவர் ஹீரோ என்பதால் தமிழ் சினிமாவுக்குரிய பாணியில் அவர் குழந்தை மற்ற எல்லா குழந்தைகளை விட புத்திசாலியாகவும் சமயோசித புத்தி உள்ளவனாகவும் திறமைசாலியாகவும் காட்டப்படுவதை ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும் மற்ற குழந்தைகளின் அப்பாக்கள் வளர்ப்பில் பெரிய குறை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த மூன்று அப்பாக்களையும் ஒரே அப்பாவிடம் பார்க்கலாம்.
' இருக்கிற இடம் தெரியாம இருக்கணும் ' என்று சொல்லியே ஒரு தந்தை வளர்ப்பது போலவும் , ' படிப்பில் எப்போதும் முதல் மாணவனாய் இருக்கணும் ' என்று மற்றொரு தந்தை கண்டிப்பாய் வளர்ப்பது போலவும் காட்டப்படுகிறது. படி படி என்று வலியுறுத்தி வளர்ப்பதால் நாம் ஏதாவது ஒரு வகையில் பிள்ளைகளை இழந்து விடுவோம் என்பதை படம் சுட்டிக் காட்டுகிறது. பெற்றோர் தங்களின் விருப்பத்தையும் கனவுகளையும் பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது என்பது மறைமுக பிரச்சாரம் .
நாமக்கல் , திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள விடுதிப் பள்ளிகளில் வரும் வருமானம் கருதி இப்போது எல்லா ஊர்களிலிலும் அதே போன்ற பள்ளிகள் உருவாகி விட்டன. கோழிப்பண்ணைகளில் பிராய்லர் வகை கோழிகள் வளர்க்கப்படுவதைப் போலவே மாணவர்களும் படிக்க வைக்கப்படும் கொடுமைகளை படத்திலும் எடுத்திருக்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்சிப்படுத்தியிருக்கலாம். பெற்றோர்கள் பலருக்கு உறைத்திருக்கும் . ஆனாலும் பெற்றோர்கள் திருந்தவா போகிறார்கள்? இன்னும் அந்தப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள்.
படித்தவன் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்த முடியும் . படிக்காதவன் பள்ளிக்கூடமே நடத்த முடியும். கோழிப்பண்ணை வைத்திருந்த படிப்பறிவில்லா முதலாளிகள்தான் அந்தப் பள்ளிக்கூடங்களை நடத்திக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் பண்ணுகிறார்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்.
அங்கு லட்சக்கணக்கில் பணம் கட்டி சேர்த்து விடப்படும் சில பிள்ளைகள் சிலுவைகளை சுமந்தபடி படிக்கிறார்கள் ; சிலர் பாரம் தாங்காமல் வெடிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து ஒரு பெற்றோர் தங்கள் மகளை டாக்டராக்கும் கனவில் அந்த மாதிரி ஒரு பள்ளியில் சேர்த்து விட்டு வந்த பிறகு சில நாட்களில் மகள் போனில் , ' என்னை டாக்டராக பார்க்க ஆசையா ...இல்லை நோயாளியாக பார்க்க ஆசையா ? ' என்று கேட்ட பிறகு விழித்துக் கொண்டார்கள். மீண்டும் பழைய படித்த பள்ளியிலேயே சேர்த்தார்கள். சில பிள்ளைகள் என்ன சொல்லியும் பெற்றோர் அவர்களுக்கு இசைவாக மாறாத காரணத்தால் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். படத்திலும் அது போன்ற காட்சியை கொண்டு வந்து நம்மை கலங்க வைக்கிறார்கள் .
' நிராசையாகிப் போனால் என்ன அடைய நினைக்கும் இலக்கை உயர்வாக நினைப்போம் ' என்பது பிள்ளைகள் மேல் சுமத்தப்படும் கனவில் இருக்கக் கூடாது என்று நிறைய அப்பாக்களுக்கு தெரிவதேயில்லை. ' எதிலும் first எதிலும் best ' என்ற நிலை பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் அப்பாக்கள் இப்போது அதிகரித்து விட்டார்கள். 40 வருடங்களுக்கு முந்தைய அப்பாக்கள் அப்படி இருந்ததில்லை. ' படிக்க பணம் கட்டுவேன். நீதான் நல்லா படிச்சுக்கணும் ' என்று ஒரு வரியில் முடித்துக் கொள்வார்கள். 'படி படி' என்று படுத்த மாட்டார்கள். கண்டிப்பு இருந்தது. சுதந்திரமும் நிறைய இருந்தது. படித்தோம்; வளர்ந்தோம் ; இப்போது நன்றாகவே இருக்கிறோம்.
அப்பாக்கள் ஆயிரம் விதம். குடித்துவிட்டு வந்து குடும்பத்தை அடித்துப் போடும் அப்பாக்கள்; பொறுப்புடன் இருப்பதாய் நடித்துவிட்டுப் போகும் அப்பாக்கள்; வேலை வெட்டிக்குப் போகாமல் சம்சாரம் சம்பாதிப்பதையும் பிடுங்கி கொள்ளும் அப்பாக்கள்; பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி காசு பார்க்க நினைக்கும் அப்பாக்கள்; காரணமேயில்லாமல் கரடு முரடாய் கடுமை காட்டும் அப்பாக்கள்; கடைசி வரை கஞ்சத்தனத்தில் ஊறிக் கிடந்து காசு பணம் சொத்து சேர்க்கும் அப்பாக்கள்; கர்ணப்பிரபுவைப் போல ஊருக்கெல்லாம் அள்ளிக் கொடுத்து இருக்கும் சொத்துக்களை இழக்கும் அப்பாக்கள்; ஊதாரியாய் சுற்றித் திரியும் அப்பாக்கள்; மனைவி பேச்சை மீற முடியாமல் முடிவெடுக்கும் திராணி இல்லாமல் ஊமையாகவே வாழ்ந்து விட்டுப் போகும் அப்பாக்கள்; மனைவி குழந்தைகளை 'அம்போ ' என கைவிடுத்து ஊரை விட்டே ஓடிப் போன அப்பாக்கள்; பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத அப்பாக்கள்; உள்ளத்தில் ஊனமாக வாழும் அப்பாக்கள்; பிள்ளைகளின் எதிர்காலத்தை தான் மட்டுமே தீர்மானிக்கும் அப்பாக்கள்; பிள்ளைகளை கூடவே கூட்டிக் கொண்டு திரியும் அப்பாக்கள் என சந்தித்தவர்கள் கேள்வியுற்றவர்கள் பலர்.
மோசமான அப்பாக்களால் சீரழிந்த பிள்ளைகளும் உண்டு ; நல்ல நிலைக்குப் போனவர்களும் உண்டு . நன்றாக வளர்த்து படிக்க வைத்து நல்ல நிலையில் உருவாக்கி விட்ட அப்பாக்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட பிள்ளைகளும் உண்டு. எந்த ethics அவர்களை அப்படி மாற்றுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்து அறுதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது. அந்த ரசாயனத்தை புரியவும் முடியாது.
மேற்சொன்ன அப்பாக்களில் என் அப்பாவை தேடுகிறேன். இவர்களில் யாருமே இல்லை . அவரிடம் கண்டிப்பு இருந்தது; கனிவும் இருந்தது. கட்டுப்பாடு இருந்தது; சுதந்திரமும் இருந்தது. அறிவுரையும் செய்வார்; சில சமயங்களில் மௌனமும் காப்பார். அவர் அறிவுரையை விட மௌனம் நிறைய .அறிவுறுத்தியது . படிப்பின் அருமையை அடிக்கடி பகிர்வார். ஆனால் படி படி என்று நச்சரிக்க மாட்டார். கடைசிவரை தன் சம்பாத்தியத்தில் எனக்கும் சேர்த்து செலவுகள் செய்து மரித்தும் போனார். ' இந்த இடத்தில் தற்காலிகமாக சேர்ந்து கொள் . எதிர் காலத்தில் நிரந்திரப் பணியிடத்தில் அமர்வாய் ' என்று கைப் பிடித்துக் கூட்டி வந்து எனக்கு வழிகாட்டி விட்டு தன் இறுதிப் பயணத்தை முடித்துக் கொண்டார். அவர் போதனையை ஏற்றதால் இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன். பதவி உயர்வு அடைந்ததை பார்க்காமலே போய் விட்டார். அவரை நினைக்கையில் அப்பாக்களுக்காக கவிதை எழுதும் ஆர்வம் வந்தது. நான் கவிஞனில்லை . ஆனால் நல்ல ரசிகன் .
வயிற்றில் சுமக்க முடியாததால்
நெஞ்சினில் சுமந்திடும்
சுமைதாங்கி
பொம்மை கேட்டு அழும்போது
காசில்லா நிலையை காட்டாது
பொம்மையாக தானே மாறிடும்
பொறுமைசாலி
ஆடலையும் பாடலையும்
ஆடி வரும் தேரினையும்
தோள் மீது தூக்கி வைத்து
தூரத்துக் காட்சிதனை காட்டும்
பளு தூக்கி
தேங்கி வழிந்து அழிந்து போகும்
குளம் குட்டையல்ல
வாழ்ந்து மறைந்தாலும் நம்
வாழ்க்கையில் அழியாத
கற்படியுருவம்
எடுத்து வைத்த அடிகள் தரும் வலி
பயணம் போகும் பாதை வழி
அடுத்து செய்வது அறியாது
திகைத்து நிற்கையில்
நிமிர்ந்து நிற்கும் வழிகாட்டி
புயல் மழை வெள்ளம் என
புரியாத குழப்பங்களில்
புதிர்க் கடலில் தத்தளித்தால்
கலங்காது நமக்கு கரை காட்டும்
கலங்கரை விளக்கம்
எந்த வழி போவதென்று
வந்த வழியில் குழம்பும்போது
சொந்த வழியை காட்டும்
திசை காட்டி
அக்கறை காட்ட ஆயிரம் பேர்
சொந்த பந்தம் இருந்துமென்ன
அறியாத குளத்தில் நீந்தும்போது
அக்கரையில் சேர்க்கும்
கட்டுமரம்
பள்ளிப்பாடங்கள்
சொல்லிக்கொடுப்பதிலும்
வாழ்க்கைக் கல்விப் பாடங்கள்
அள்ளிக் கொடுப்பதிலும்
அற்புத ஆசிரியன்
தான் படிக்காததை
தான் முடிக்காததை
தன் பிள்ளை அடைய
தவமிருந்து பெற நினைக்கும்
தன்னிகரற்ற தங்கம்
தனி ஒருவன் வாழ்க்கையின்
பேரங்கம்
உயிரோடு இருக்கையில்
ஊட்டிய அறிவுரைகள்
காலி இருக்கையை
காணும்போது உறைக்கும் இருந்தபோது மறைந்த மதிப்பு
இறந்த பிறகே உதிக்கும்
புரியாத பிரியம்
பிரிந்த பின் புரியும்
' அம்மா கணக்கு ' என்ற திரைப்படம் தன் மகள் மேல் தாய் வைத்திருக்கும் கனவினையும் எதிர்பார்ப்பையும் எடுத்துச் சொல்கிறது. 'வேலைக்காரி மகள் வேலைக்காரியாகத்தானே ஆக வேண்டும் ' என்று மகள் போடும் தப்புக்கணக்கை அம்மா மாற்றியமைப்பதாக திரைப்படம் சொல்கிறது. ' வேலைக்காரியின் மகள் கலெக்டர் ஆகக் கூடாதா? ' என்பது அம்மாவின் கணக்கு. ஒரு கலெக்டரை நேரில் சந்தித்து , ' எப்படி கலெக்டர் ஆவது? ' என்று தன் குழந்தைக்காக ஒரு குழந்தையைப் போல் அவரிடம் கேள்வி கேட்கும் அம்மா கேரக்டர் பாராட்டப்படத் தக்கது. அப்பாக்கள் இல்லாத குடும்பங்களில் அம்மாக்களே தந்தை நிலையிலும் இருந்து வழிநடத்திச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.
இருந்தும் இல்லாத அப்பாவின் கடமைகளையும் அம்மா எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலை பல குடும்பங்களில் தொடர்கதை. பிள்ளைகள் ஒத்துப் போகவில்லை என்றால் ஏற்படும் மனக்காயம் மிகப் பெரிய சோர்வினைத் தரும். மகளுக்கு கணக்குப் பாடம் வரவில்லை என்ற காரணத்திற்காக மட்டுமல்ல , படிப்பின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைப்பதற்காகவும் அம்மாவே மகள் படிக்கும் பள்ளியில் மாணவியாக சேர்வது இதுவரை திரையில் சொல்லப்படாத விஷயம் . இது சாத்தியமா என்று ஆராய்வதை விட அப்படி மகளோடு கூடவே சேர்ந்து படித்தால் ஏற்படும் மனப்போராட்டங்கள் எப்பயிருக்கும் என்பதை திரைப்படம் நமக்குச் சொல்கிறது. மகளின் கோபம் அதிகரிக்கிறது. ஒத்துழைக்க மறுக்கிறாள். அம்மாவை அலட்சியப்படுத்துவதோடு சந்தேகிக்கவும் செய்கிறாள். ஒரு கட்டத்தில் தனக்காகத்தான் தன் தாய் இன்னல்களில் உழன்று கொண்டிருக்கிறாள் என்பதை மகள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க ஆரம்பிக்கிறாள் . அம்மாவின் கணக்கையல்ல கனவையே நிறைவேற்றுகிறாள் என படம் முடிகிறது.
அம்மாவைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள் , ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும் இலக்கியச் சுவையைக் கொடுக்கும் புதினங்களாக மட்டுமே இருந்து விடுகின்றன. உண்மையில் அம்மாவைப் பற்றிய பெருமிதங்கள் பிள்ளைகளிடம் எந்த அளவு உள்ளது என்று ஆய்வு செய்தால் அதன் சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொருவரும் தங்கள் அப்பாவை தூக்கி வைத்துப் பேசும் அளவிற்கு அம்மாவை வைப்பதில்லை என்பதே நெஞ்சில் நெருடும் நிஜம்.
அம்மா என்றாலே சமையல்காரியாகவும் வேலைக்காரியாகவும் உருவகப்படுத்தி வைத்திருக்கும் பிள்ளைகள் சமூகம் .அதிகரித்திருக்கிறது. அம்மா என்று மனதில் நினைத்தவுடன் சமையல் செய்யும் பரிமாறும் வீட்டு வேலை செய்யும் உருவமே தெரிகிறது. இந்த சமூகமும் குடும்ப அமைப்பும் அந்தக் கற்பிதங்களைத்தான் கற்றுக் கொடுத்திருக்கின்றன. வேலை பார்த்து சம்பாதிக்கும் அம்மாவாக இருந்தாலும் அப்பாவின் வேலையைத்தான் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் பிள்ளைகள் அதிகம் இருக்கிறார்கள். கதைகளிலும் திரைப்படங்களிலும் அம்மாவை உயர்த்திக் கொண்டாடும் காட்சிகள் அதிகம். ஆனால் 'அம்மா கணக்கு ' படத்தில் அது இல்லை. அம்மாவை துதிக்கும் காட்சி எங்கும் மிகைப்படுத்தவில்லை. இறுதியில் அம்மா படும் கஷ்டம் மகளுக்குப் புரிவதாகக் காட்டப்படுகிறது. அது கூட அழுத்தமாக சொல்லப்படவில்லை. அம்மாவை மகள் புரிந்து கொள்ளும் சூழலை இன்னும் அழகாக பெருமைப்படுத்திக் காட்டியிருக்கலாம். இயக்குனர் இயல்பாக கொண்டு செல்கிறார்.
பலரிடமும் ' உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள் ' என்று வினவினால் அப்பாவைப் பற்றி சிலாகித்து பெருமையாக பேசும் அளவிற்கு அம்மாவைப் பற்றி பேசுவதில்லை. இதில் நானும் விதி விலக்கல்ல . அப்பாவைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் எடுத்து வைக்கிறோம். அம்மாவைப் பற்றி சொல்ல சிறிது யோசிக்கிறோம். அப்பாவின் தியாகங்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அம்மாவின் தியாகமும் என்பது காலம் கடந்த பிறகே உணர்கிறோம். ஒன்று உண்மை. அம்மா இல்லாத அப்பா வளர்க்கும் பிள்ளைகளின் வளர்ச்சியை விட அப்பா இல்லாத அம்மா வளர்க்கும் பிள்ளைகளின் வளர்ச்சி உன்னத நிலையை அடையும் . அதற்கு பல குடும்பங்கள் எடுத்துக் காட்டு. சமீபத்தில் வாசித்த சிறு கதை ஒன்று ஞாபகம் வருகிறது.
அப்பா இல்லாத அம்மாவின் வளர்ப்பில் வளரும் ஒரு இளைஞன் . படித்து முடித்து வேலை தேடுகிறான். பல இடங்களில் தேர்வு, நேர்காணல் சந்தித்தும் வேலை சரிவர அமையவில்லை. ஒரு கம்பெனியில் நேர்காணலுக்காக அழைப்பு வருகிறது. ' வேலை கிடைத்தால் அம்மாவை விட்டு விட்டு தொலை தூரம் போய் விட வேண்டும் ' என்று நினைத்தவனாய் கம்பெனியைத் தேடிப் போகிறான்.
கட்டிடத்தின் நுழைவாயிலில் யாருமில்லை. கதவில் தாழ்ப்பாள் ஒன்று நீட்டிக் கொண்டிருக்கிறது. உள்ளே நுழைபவர் மேல் இடித்து விடும்படி இருக்கிறது. எல்லோரும் இடி வாங்கி கொண்டு நுழைய இவன் அதைச் சரி செய்துவிட்டு நுழைகிறான். நடை ஓரங்களில் பூச்செடிகள் . செடிகளுக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் வீணாக நடை பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது. குழாயை மூடி விட்டு நகர்கிறான் .
உள்ளே தரைத்தளத்தில் யாருமில்லை. முதல் தளத்தில் நேர்காணல் என்று குறிப்பு காட்டுகிறது. மாடிப்படி வழியாக ஏறும்போது பகலிலும் இரு விளக்குகள் எரிவதைப் பார்க்கிறான். அதையும் அணைத்து விட்டு படி ஏறி முதல் தளத்திற்குச் .செல்கிறான். உள்ளே நுழையுமிடத்தில் ' வெல்கம் ' என்று எழுதப்பட்ட கால்மிதி ஒன்று தலைகீழாக உள்ளது. அதையும் சரி செய்து நுழைகிறான். பலரும் அமர்ந்திருக்கும் அந்த அறையில் ஒரு வாஷ்பேசினில் திறந்து விடப்பட்ட குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவன் மட்டும் அதையும் நிறுத்திவிட்டு வந்து அமர்கிறான்.
சிறிது நேரம் கழித்து அவன் மட்டும் உள்ளே அழைக்கப்படுகிறான். ' இந்த வேலை மிகவும் பொறுப்பானது. பொறுப்பானவர்கள் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும். நீங்கள் உள்ளே நுழைந்ததிலிருந்து வந்து அமரும் வரை செய்தவற்றையெல்லாம் கேமரா மூலமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம் . பொறுப்புடன் செயல்பட்டதால் இந்த வேலையை உங்களுக்குத் தரலாம் என்ற முடிவிற்கு வந்தோம் ' என்று நிர்வாகத்தினர் அவனிடம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை நீட்டுகிறார்கள் .
அவனுக்குக் கண்ணில் நீர் தளும்பியது. ' அங்கு போகாதே, அதைச் செய்யாதே, தண்ணீரை வீணாக்காதே , சிக்கனமாக இரு, வீணாக எரியும் விளக்கை அணை , எடுத்தப் பொருளை எடுத்த இடத்தில் வை ' என்று தன் அம்மா இட்ட கட்டளைகள் அப்போது எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் இப்போது புரிகின்றன. அம்மா படுத்தி எடுக்கவில்லை பாடங்கள்தான் நடத்தியிருக்கிறார்கள் . அந்தப் பாடங்களே தனக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கின்றன என்று தன் தாயை பெருமிதமாக நினைக்கிறான். அவர்களை தொலைத்துவிட்டு தூரமாக போக நினைத்ததை எண்ணி வருந்துகிறான்.
மேலே சொல்லப்பட்டது சாதாரண கதை என்றாலும் என் இதயத்தைத் தொட்டது. அம்மாவின் நினைவுகளை மறுபரிசீலனை செய்து பார்க்க வைத்தது. 'அம்மா கணக்கு ' பார்த்தபோதும் அதே உணர்வுகள் . அம்மாவின் அன்பும் பாசமும் கனிவும் துணிவும் கண்டிப்பும் ஒவ்வொன்றும் நெஞ்சக் கடலில் அலைகளாக எழும்பி மறைகின்றன. அம்மாவை அலட்சியப்படுத்திய கணங்கள், குறைவாக பேசிய தருணங்கள், அவமதித்த நேரங்கள் எல்லாம் நெஞ்சில் குத்திய நெருஞ்சி முட்களாய் நெருடிக் கொண்டேயிருக்கின்றன. அப்போது எனக்குள் விதைக்கப்பட்ட ஆணாதிக்க சிந்தனைகளும் என்னை கண்டிக்காமல் விட்ட அப்பாவின் போக்கும் காரணமாக இருக்கலாம் என்ற சமாதானத்தை நானே கற்பித்துக் கொள்கிறேன். என்னை எப்போதும் விட்டுக் கொடுக்காத அம்மாவின் தியாகங்களை இப்போது அமைதியாக நினைத்துப் பார்க்கிறேன். அம்மாவுக்கு கவிதை எழுத நினைக்கிறேன் . அம்மாவே கவிதைதான்!
சால்ஸ்
ReplyDeleteஅப்பா,அம்மா கணக்கு ஆகிய திரைப்படங்கள் குறித்த அலசலாயினும் அவரவர் தம் பெற்றோரை நினைத்து பேருவுவகை கொள்ளச் செய்யும் ,பால்ய பருவத்து நிகழ்வுகளை அசைபோட்டு அனுபவிக்கும் அற்புத பதிவை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.
அப்பா குறித்த கவிதை அருமை .
தாங்கள் படித்ததாக பதிவு செய்துள்ள அன்னை குறித்த கதையும் அற்பதமே . உடனிருக்கும் போது தெரியாத பலரின் அருமை பிரிவாலேயே உணரப்படுகிறது இது காலத்தின் கட்டாயமோ!
சால்ஸ்,
ReplyDeleteநீண்ட நாட்கள் கழித்து உங்கள் தளத்தில் வந்திருக்கும் அபாரமான பதிவு. படித்ததும் உடனே எழுத நினைத்தேன்.
முதலில் பாராட்டுக்கள். சிறப்பான முறையில் அழகாக எழுதியிருக்கிறீர்களே, அதற்காக.
அப்பாக்கள் பலவிதம். உண்மைதான். அம்மாக்களும் அப்படியே. பொதுவாக பையன்களுக்கு அம்மாவையும், பெண்களுக்கு அப்பாவையும் பிடிக்கும் என்று சொல்வார்கள். சில விதிவிலக்குகள் இருந்தாலும் இது என்னமோ நிஜம் போலத்தான் இருக்கிறது.
நீங்கள் சொல்வதுபோலில்லாமல் அம்மாக்கள் பற்றிய மேன்மையான, கடவுள் தனமான பிம்பம்தான் உலக அரங்கில் நிறுவப்பட்டிருக்கிறது. ருஷ்ய புரட்சிக்கு வித்திட்டதாகக் கருதப்படும் இலக்கியமான மாக்ஸீம் கார்க்கி எழுதியது கூட தாய் என்ற புதினம்தான். அப்பாக்கள் பற்றி அதிகம் நம்மிடம் இலக்கியமோ, கவிதைகளோ, பிரமிப்புகளோ இல்லை என்பதே உண்மை. எதோ நூற்றில் ஐந்து பேர் தனது தந்தை குறித்து சிலாகித்து பேசுவது மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது. உண்மையில் அம்மா என்ற ஆளுமை மீது ஏகப்பட்ட புனைவுகள், கற்பிதங்கள் இலக்கியங்களிலும், வாழ்க்கையிலும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. பாவம் அப்பாக்கள்தான்!
இருந்தும் தனிப்பட்ட விதத்தில் நாம் நமது பெற்றோர்களை எந்த கண் கொண்டு பார்க்கிறோம் என்பதைக் கொண்டே நாம் சில நியாயங்களையும், சில பாடங்களையும் உருவாக்கிக் கொள்கிறோம். அது சில சமயங்களில் எதிர்பாரா குற்ற உணர்ச்சிகளுக்குள் நம்மை செலுத்திவிடுகிறது. இது பொதுவாக எல்லோருக்கும் உண்டாகும் உணர்ச்சி என்றே நினைக்கிறேன்.
பெண் பற்றிய நம்முடைய பாரம்பரியமான பார்வை மாறவேண்டும் என்பது எனது தீர்க்கமான எண்ணம். அவர்களை புத்தகங்களில் தேவதையாகவும், புராணங்களில் கடவுள் சக்தியாகவும் வடிவமைத்துவிட்டு , நிஜ வாழ்க்கையில் சிறகொடித்த பறவைகள் போல அவர்களை நடத்தும் அந்த அராஜக ஆணாதிக்க அமிலம் நமது டீ என் ஏக்களிலிருந்து கரைந்து போக வேண்டும்.
பொம்பள உனக்கே என்று ஏளனம் பேசும் ஆண்களின் மனநிலை மாறாத வரை நமது அம்மாக்களும், சகோதரிகளும், பெண் உறவுகளும், பாவம்தான்!
இதை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வினாடியாவது தங்கள் பெற்றோர்கள் குறித்த எண்ணவோட்டங்கள், நிகழ்வுகள், மகிழ்ச்சிகள், வருத்தங்கள், குற்ற உணர்ச்சிகள் வரும் என்று தோன்றுகிறது. அந்த விதத்தில் இது ஒரு முழுமையடைந்த அருமையான கட்டுரை. மீண்டும் எனது பாராட்டுக்கள்.
வாங்க காரிகன்
ReplyDeleteதங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. அம்மா அப்பா பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை இருக்கலாம். ஒரு திரைப்படம் நமக்குள் புதைந்து கிடைக்கும் மிருதுவான உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்தால் அது வெற்றி படைப்பே! பணம் கொழிக்கும் படம் மட்டும் வெற்றி படம் என்பது பொதுவான வணிகப் பார்வை.
அந்த வகையில் இரு படங்களும் உள்ளத்தின் ஆழத்தில் கிடந்த நினைவுகளை மீட்டெடுத்தது. நான் அதில் கொஞ்சமே பகிர்ந்திருக்கிறேன் . பலரிடம் இது போன்ற நினைவுகள் ஆயிரம் கொட்டிக் கிடக்குது. அவரவர் மீட்டெடுத்துக் கொள்ளட்டும். தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி.
ஒரு முகநூல் நண்பரின் பகிர்வு
ReplyDeleteராஜாவின் BGM ஆளுமை
-----------------------------------------
சமீபத்தில் சமுத்திரக்கனி அவர்கள் இயக்கிய "அப்பா" படம் பார்த்தேன்.சமுத்திரக்கனி மிகச்சரியான திறமைசாலி. ஆம் அவர் ஒரு நல்ல Director என்பதைவிட,தன் படத்திற்கு BGM மிகவும் முக்கியம் என்று உணர்ந்து இருக்கிறார் போலும்.அதனாலேயே, ராஜாவை அவர் மிகச் சரியாகத் தெரிந்து எடுத்திருக்கிறார் போலும்.படத்தின் Climax ஆன கடைசி 20 நிமிடங்கள் ராஜா ஒரு ராஜாங்கத்தையே நடத்தி இருப்பார்.ராஜாவின் இசை அதற்கு ஒரு உயிரையும், suspense யும் கொடுத்து இருக்கும். என் அருகில் உட்கார்ந்து இருந்த குழந்தை அழுவதை என்னால் காண முடிந்தது. படம் முடிந்து ரசிகர்கள் Theater-ஐ விட்டு வெளியே வரும் போது ஒரு இறுகிய முகத்துடன் வருவதைப் பார்த்தேன் (Which might be due to the impact of the message what the Director and the Music Director expected and intended to convey it to the society). இதற்கு, படத்தின் climax sceneம், ராஜாவின் ஆத்மீக BGM இசையுமே காரணம். Marvellous. (இந்த videoஐ தயவு செய்து நல்ல HQ headphoneல் கேளுங்கள். ராஜாவின் மகத்துவதைப் புரியுங்கள்.கண்டிப்பாக நீங்களும் கண் கலங்குவீர்கள்.). Hats off to Raja & Kani. அப்பா = ஒரு குறிஞ்சி மலர்.
தான் படிக்காததை
ReplyDeleteதான் முடிக்காததை
தன் பிள்ளை அடைய
தவமிருந்து பெற நினைக்கும்
தன்னிகரற்ற தங்கம்
தனி ஒருவன்
வாழ்க்கையின் பேரங்கம்
மிக அருமை சார்ல்ஸ் ...வாழ்த்துக்கள் !