தேர்தல் 2016 . இதோ வந்து கொண்டே இருக்கிறது. தினம் நடக்கும் கூத்துகளைப் பார்த்து மக்கள் நொந்து கொண்டு இருக்கிறார்கள். ஊடகங்களை உற்றுக் கவனித்தால் பல அரசியல்வாதிகளின் அதிரடி பேச்சுக்களும் ஆணவ கொக்கரிப்புகளும் எதிரிக்குக் கொடுக்கும் மிரட்டல்களும் நயந்து கேட்கும் பவ்வியங்களும் கூழைக் கும்பிடுகளும் எடுக்கும் ஒட்டு பிச்சைகளும் பணப் பதுக்கல்களும் தொகுதிக்குள் நுழைந்து எடுக்கும் ஓட்டங்களும் பக்கம் பக்கமாய் வாசிக்கும் அறிக்கைகளும் நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அரங்கேறிக் கொண்டே இருப்பதை காண முடிகிறது.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை சட்ட மன்ற தேர்தலை சந்தித்தாலும் இந்த முறை நடக்கும் நிகழ்வுகள் பெரும்பான்மையானவை கண்ணியக் குறைவுகளாகவே தெரிகின்றன. அற்புதமான தலைவர்கள் ஆண்ட நமது மாநிலத்தில் அரசியல் நாகரீகங்கள் அதீதமாய் இருந்த காலம் உண்டு. ஆனால் தற்போது அரசியல் செய்யும் பலர் அந்த நாகரீகங்களை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு அநாகரீகத்தை அணிகலன் போல அணிந்து கொண்டு அலைகிறார்கள்.
மூத்தத் தலைவர்களை அரசியலில் மற்ற மூத்தத் தலைவர்கள் கூட கேவலமாக விமர்சனம் செய்யும் அசிங்கத்தைக் கண்ட போது முகம் சுளிக்க வைத்தது. மரியாதைக்குரிய தலைவர்களாக பார்க்கப்பட்டவர்கள் நாகரீகமற்றவர்களாக நடந்து கொண்ட போது மனதில் வெறுப்பு உருவானது. பதவிக்காகவும் பணத்திற்காகவும் எந்த கீழ்மைக்கும் இறங்கும் இழிநிலை கண்டு மனசு வெம்பிப் போனது.
ஒரு தலைவரை , ' குடும்ப அரசியல் ' செய்கிறார் என்று சொல்லும் மற்ற தலைவர்கள் எல்லோருமே குடும்ப அரசியலும் வாரிசு அரசியலும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கட்சியின் வேட்பாளார்களாக தங்கள் வாரிசுகளை நிறுத்தியிருக்கிறார்கள் . ஒரு தலைவர் தன் வாரிசை முதல்வர் வேட்பாளாராகவே அறிவித்திருப்பது வினோதம். குடும்பமே இல்லை என்று சொல்லும் ஒரு கட்சியின் தலைவர் தன் நண்பரின் குடும்பத்தையே வாரிசாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆல மரம் போல கிளை பரப்பியிருக்கும் அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாய் வளைய வருகிறார்கள். எதையும் அசைத்துப் பார்க்கிறார்கள் ; யாரையும் வளைத்துப் போடுகிறார்கள் .
ஒரு தலைவர் கால்கள் தரையில் படாமல் காற்றிலேயே மிதந்து வந்து பிரச்சாரம் செய்து விட்டு காற்றிலேயே பறந்து போய் விடுகிறார். மற்றொரு தலைவர் எழுந்து நிற்கும் சக்தி இழந்தவராய் சக்கர நாற்காலியில் ஊரெல்லாம் உருண்டு கொண்டே மக்களின் சக்தியை தன் வயப்படுத்த முனைகிறார். இன்னொரு தலைவர் மேடையில் பேசுகிறாரா அல்லது நடிக்கிறாரா என்று தெரியாத அளவிற்கு நகைச் சுவை செய்கிறார். திடீரென யாரையாவது அடிக்கிறார். யாருக்காவது விசிறி விடுகிறார். தினம் அவர் செய்யும் சேஷ்டைகள் சிறந்த பொழுது போக்காக மாறிப் போயிருக்கிறது . அவர் என்ன பேசுகிறார் என்று மக்கள் கவனிப்பதாக தெரியவில்லை . எல்லோருக்கும் கூட்டம் கூடுகிறது. சிலருக்கு தானாக சேரும் கூட்டம் ; சிலருக்கு காசு பேசி சேரும் கூட்டம் . ஆனால் எல்லாம் ஓட்டுக்களாக மாறி விடுமா என்பது பெரிய கேள்வி.
ஒவ்வொரு கட்சிக்கும் ஓட்டு வங்கி குறிப்பிட்ட சதவீதம் உள்ளது. எல்லா கட்சிகளுக்கும் கட்சி சார்புள்ளவர்களின் ஓட்டு சதவீதம் போக மீதம் 10 சதவீத ஓட்டுகள் எந்தக் கட்சியையும் சாராதவர்களின் ஓட்டுகள் . அவர்கள் எந்த நிலை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்புகள் உருவாகின்றன என்பது காலம் காலமாய் பார்த்து வருவதே! இந்த 10 சதவீத மக்களின் நிலை கொஞ்சம் பரிதாபத்துக்குரியது . இவர்கள்தான் வெற்றிக்கான கதாநாயகர்கள். இவர்களால்தான் ஜனநாயகத்திற்கு ஒரு நன்மையோ அல்லது தீமையோ உருவாகப் போகிறது . இவர்கள்தான் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தற்போது முடிவெடுத்து விட்டு பின்னர் வருந்துபவர்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்றம் கொண்டு வருவார்கள். அல்லது தொங்கு நிலையில் வைத்து விடுவார்கள்.
யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான சூழ்நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இரண்டு பெரிய கட்சிகளோடு சிறிய கட்சிகள் கூட்டணி வைத்து பலம் சேர்க்கும். வெற்றி வாய்ப்பினை துல்லியமாகக் கணிக்கலாம். ஆனால் இம்முறை சிறிய கட்சிகள் எல்லாம் தனிக் கூட்டணி வைத்து எந்த நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் நிற்கின்றன என்பது புரியாத புதிர். ஓட்டு சதவீதம் குறைவாக வைத்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய கட்சிகள் எல்லாம் ஓரணி சேர்ந்தாலும் மொத்த சதவீதமும் குறைவுதான்! அது தெரியாமலா நிற்பார்கள்!? ஆக இதிலும் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தொங்கு நிலை வந்தால் அந்த அரசியல் புரிந்து விடும். யாரை வளர்க்க யாரை கவிழ்க்க அந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது என்பதும் புரிந்து விடும்.
லஞ்ச லாவண்யம் , ஊழல் இல்லாத கட்சிகள் எது , ஊழலில் திளைக்காத வேட்பாளர்கள் யார் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இணையமும் சமூக வலைதளங்களும் மக்களுக்கு நிறைய போதிக்கின்றன. அதனால் இந்தத் தேர்தல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஒரு பக்கம் நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் அதிகம் படிக்காத பாமர ஜனங்கள் யார் செய்தாலும் செய்யாவிட்டாலும் கட்சிக்கோ அல்லது அந்தக் கட்சியின் தலைவர் நிறுத்தும் வேட்பாளருக்கோ அல்லது கட்சியின் சின்னத்திற்கோ ஓட்டு போட்டு விடும் மன நிலையில் இருக்கிறார்கள். அவர்களை நாம் என்ன சொல்வது? அந்தத் தைரியத்தில்தான் ஒருவர் , ' என் தலைவர் ஒரு நாயை நிறுத்தினாலும் ஓட்டு விழும் ' என்று வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திலேயே கொக்கரிக்கிறார். 'குனியக் குனிய குட்டு விழும்' என்பது நாம் அறிந்த பழமொழி . ஆனால் , ' குனியக் குனிய துட்டு விழும் ' என்பதை காணொளியில் கண்டு புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.
இந்த மக்கள் தாங்கள் எந்தக் கஷ்டத்தில் இருந்தாலும் அதைப் பற்றி கவலை கொள்வதில்லை. காலம் காலமாய் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம் , அதனால் இப்போதும் அதே கட்சிக்கே போட்டுவிடுவோம் என்ற மனநிலையில்தான் இன்னும் இருக்கிறார்கள். அவர்களில் நகரத்தில் உள்ளவர்களை விட கிராமத்தில் உள்ளவர்களே அதிகம். இவர்களால்தான் மாற்றம் என்பது தடுமாற்றம் ஆகிறது.
யார் ஆட்சியில் அமரப் போகிறார்கள் என்று தெரியாத நிலையில் ஊடகங்கள் மிகவும் பரபரப்பான செய்திகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன . ஒவ்வொரு தலைவரும் பேசும் ' பஞ்ச் ' முழக்கங்கள் சினிமாவில் சொல்லப்படும் பஞ்ச் வசனங்களை விட அதிக ஆர்வமூட்டக் கூடியதாக இருக்கின்றன . செய்வீர்களா .. செய்வீர்களா என்று ஒரு தலைவர் முழக்கமிட எதிரணித் தலைவர் ' சொன்னீங்களே ...செஞ்சீங்களா ' என்று பதில் முழக்கம் இடுகிறார். நம்மை விட சிறுவர்கள் இந்த வசனங்களை உற்றுக் கவனிக்கிறார்கள். என் உறவினரின் சிறு வயது பெண்ணொருத்தி அவள் அம்மாவிடம் , ' சப்பாத்தி சுட்டுத் தருகிறேன் என்று சொன்னீர்கள். சொன்னீங்களே செஞ்சீங்களா ... முடியட்டும் ..விடியட்டும் ' என்று வசனம் பேசுகிறாள்.
இந்த நிலையில் இளைஞர் படை ஒன்று சமீபத்தில் தாமாகவே முன் வந்து ஒரு புதிய தலைவரை உருவாக்க முனைந்தார்கள். சிறிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். ஆனால் அந்தத் ' தலைவர்' அதனை ஏற்றுக் கொள்ளவில்லை . எனக்கு சமூக அக்கறை உண்டு . சமூகத்திற்கு தொண்டு செய்யவே விரும்புகிறேன் . எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை . என்னை விட்டு விடுங்கள் என்று தெளிவாக ஒதுங்கிக் கொண்டார். அவர்தான் சகாயம் I A S அதிகாரி. 22 வருடங்களில் 23 முறை பணி மாற்றம் செய்யப்பட்டவர். கிரானைட் ஊழல் வழக்கை விசாரிக்க நீதி மன்றத்தால் பணிக்கப்பட்டவர் . அரசால் பல வித இன்னல்களுக்கு ஆளானவர். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற கொள்கையோடு வாழ்பவர். சுடு காட்டில் படுத்து புரட்சி செய்தவர். ' ஆவிகளுக்கு பயமில்லையா ? ' என்று ஒரு நிருபர் கேட்டபோது , ' படு பாதகச் செயல்கள் செய்யும் பாவிகளுக்குத்தான் பயந்தேன் ' என்று சாட்டையடி போன்ற ஒரு பதிலைச் சொன்னவர் .
அவருக்கு இந்த ஜனங்களை நன்றாகப் புரிந்திருக்கிறது. அரசியல் கட்சி என்பது மிகப் பெரிய மலை. கட்டி இழுத்துச் செல்வது கடினம் என்பதை நன்கு புரிந்ததினால் ஆரம்பத்திலேயே விலகிக் கொண்டார். இளைஞர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் . அதனால் அவரிடம் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று கேட்டிருக்கிறார்கள். ' எவருக்கு வேண்டுமென்றாலும் போடுங்கள் . கவருக்குப் போடாதீர்கள் ' என்று தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார். பொதுவில் பேசும்போது யாரையும் குறிப்பிடாத பேச்சுக்கள் அர்த்தமுள்ளதாக மாறும். இப்படி பேசுவதை நிறைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஊடகங்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போதே நாகரீகமற்ற தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக அள்ளித் தெளிக்கப்படுகின்றன. உலகம் அதை உற்று நோக்குகிறது. எதைப் பற்றியும் கவலை கொள்ளாத அநாகரீக பேச்சு ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. பதவி படுத்தும் பாடு.
பணம் படுத்தும் பாடு அதை விட அதிகம். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பணப் பட்டுவாடா செய்ய ஒரு கூட்டம் அலை மோதுகிறது . கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் சிலரும் போலிஸ் அதிகாரிகள் சிலரும் அதற்கு ஒத்துழைக்கிறார்கள். பணம் கொடுத்து ஓட்டுக்களை விலை வாங்கத் துடிக்கும் கேடுகெட்ட அவல நிலை இந்த முறை அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது. மக்கள் தாங்களாகவே முன் வந்து ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று மறுத்தாலொழிய பணப் பட்டுவாடாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். திருடனாய் பார்த்துதான் திருந்த வேண்டும் . திருட்டுக்குத் தூண்டுபவர்களை குறை சொல்லி என்ன பயன்? பணம் கொடுப்பவர்களுக்கு எதிர் விசுவாசம் காண்பித்தால் தோல்வியை தழுவச் செய்யலாம். செய்வார்களா?
சால்ஸ்
ReplyDeleteதேர்தல் நெருங்கும் நேரத்தில் தேவையானதொரு பதிவு .அரசியல் கட்சிகளின் அப்பட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஊடகங்கள் பேருவுவகை புரிந்தன .2ஜி ,அளவற்ற மின்தடை என ஏகப்பட்ட புரளிகளை மக்களிடம் கொண்டுசேர்த்தன .தற்போதுஇவைகளின் மௌனம் கூட பணத்தாலா,பயத்தாலா என்ற ஐயம் தோன்றுகிறது .இதே நிலைமை தான் மக்களிடமும் .பொறத்திருந்து பார்ப்போம் பணம் பாதாளம் வரை பாய்கிறதா ?மனசாட்சி வேலைசெய்கிறதா என்று .
நன்றி ஜீவா
ReplyDelete' பணத்திற்கு ஆசைப்பட்டு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தால் ஒரு திருடனைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள் . உங்களுக்கு பணம் கொடுத்ததால் உங்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்க அனுமதிக்கிறீர்கள். அவர்கள் செய்யும் தவறுகளை கேள்வி கேட்கும் உரிமை இழக்கிறீர்கள் '.
இதை நடிகர் கமலஹாசன் மக்களைப் பார்த்து விட்ட அறிக்கை. இந்த மாதிரியான வேண்டுகோள்கள் பலர் விடுத்திருந்தாலும் மக்களாய் பார்த்துதான் திருந்த வேண்டும். திருடர்களை விலைக்கு வாங்காமல் இருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.
/// யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான சூழ்நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இரண்டு பெரிய கட்சிகளோடு சிறிய கட்சிகள் கூட்டணி வைத்து பலம் சேர்க்கும். வெற்றி வாய்ப்பினை துல்லியமாகக் கணிக்கலாம். ஆனால் இம்முறை சிறிய கட்சிகள் எல்லாம் தனிக் கூட்டணி வைத்து எந்த நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் நிற்கின்றன என்பது புரியாத புதிர். ஓட்டு சதவீதம் குறைவாக வைத்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய கட்சிகள் எல்லாம் ஓரணி சேர்ந்தாலும் மொத்த சதவீதமும் குறைவுதான்! அது தெரியாமலா நிற்பார்கள்!? ஆக இதிலும் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தொங்கு நிலை வந்தால் அந்த அரசியல் புரிந்து விடும். யாரை வளர்க்க யாரை கவிழ்க்க அந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது என்பதும் புரிந்து விடும்.///
ReplyDeleteநானே எழுதியதுதான்! இப்போது தெளிவாக புரிந்துவிட்டது . சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்து யாரை ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும்
என்பதை முன்னரே முடிவெடுத்திருக்கிறார்கள் . வைகோ அவர்கள் மிக சாதுரியமாக வேலை பார்த்திருக்கிறார். ஓட்டுக்களைப் பிரித்து அவருக்கு வேண்டியவர்களை மீண்டும் கொண்டு வர பெரிதும் துணை புரிந்திருக்கிறார்.
/// இந்த மக்கள் தாங்கள் எந்தக் கஷ்டத்தில் இருந்தாலும் அதைப் பற்றி கவலை கொள்வதில்லை. காலம் காலமாய் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம் , அதனால் இப்போதும் அதே கட்சிக்கே போட்டுவிடுவோம் என்ற மனநிலையில்தான் இன்னும் இருக்கிறார்கள். அவர்களில் நகரத்தில் உள்ளவர்களை விட கிராமத்தில் உள்ளவர்களே அதிகம். இவர்களால்தான் மாற்றம் என்பது தடுமாற்றம் ஆகிறது. ///
இதுவும் இதே கட்டுரையில் உள்ள பகுதி. யார் ஊழல் செய்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை. ஒரு குறிப்பிட்ட சின்னத்தைப் பார்த்தவுடன் எதைப் பற்றியும் சிந்தியாது பட்டனை தட்டி விடுகிறார்கள். மாற்றம் தடுமாற்றம் ஆனது.