ஆயிரம் படங்களுக்கு மேல் இசை , ஐந்து முறை தேசிய விருது என இளையராஜாவை குறித்து பட்டியலிட ஆயிரம் டேட்டாக்கள் இருக்கின்றன. பெரும்பாலான தமிழர்களை சோகத்தில் இருந்து மீட்பதும் நீண்ட தூர பயணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றுவதும் இளையராஜாவின் பாடல்கள்தான். எந்தத் தமிழரைக் கேட்டாலும் இதைதான் சொல்வார் . இளையராஜாவை சிலாகிப்பார்.
ஆனால் இதையே பின்லாந்தில் உள்ள குக்கிராம இளைஞரான ஜூஹாமட் என்ற இளைஞரும் சொல்கிறார் என்பதுதான் ஹைலைட் . அது மட்டுமல்ல . ' இளையராஜா உங்களுக்கு கிடைத்த வரம் ' என்றும் சொல்கிறார்.
ரஷ்யாவிற்கு அருகில் கிழக்கு பின்லாந்தில் உள்ள சிறு நகரில் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த இந்த இளைஞர் கணிதவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இசையார்வம் அவருடைய தந்தையிடமிருந்து தனக்கு வந்ததாக சொல்கிறார். இசையும் பயின்றிருக்கிறார் .
2008 ம் ஆண்டு தன்னுடன் கணிதம் பயின்ற தமிழ் நண்பர்கள் 'பெண்ணின் மனதை தொட்டு ' என்ற படத்தில் ' கல்லூரி வானில்...' என்ற பாடலை ரசித்துக் கேட்டபோதுதான் , தானும் முதன் முறையாக தமிழ் பாடலை கேட்டேன் என்கிறார். அவருக்கு அதுதான் முதல் தமிழ் இசை கேட்டல். கேட்டு உற்சாகமும் அடைந்திருக்கிறார். அதன் பிறகே தமிழ் இசை பற்றிய தேடலைத் தொடங்கியிருக்கிறார்.
பின்பு ரகுமான் பாடல்களையும் ரசித்துக் கேட்டிருக்கிறார். மற்றொரு தமிழ் நண்பர் முத்து என்பவர் , ' தமிழ் இசை என்பது வெவ்வேறு பரிமாணங்களை கொண்டது ' என்பதை விளக்கினார். தமிழ்த் திரையிசையின் தலை மகன் என அவர் அறிமுகப்படுத்தியது இளையராஜாவை. இளையராஜாவின் அற்புத இசையில் தெய்வீகம் ததும்பும் ஜேசுதாசின் பாடல்களை பின்லாந்து இளைஞருக்கு அறிமுகப்படுத்தினார்.
' இளையராஜா ஜேசுதாஸ் இருவரின் கூட்டணியில் வந்த பாடல்களை எல்லாம் முழுமையாக ரசித்து முடிக்க எனக்கு நான்கு மாதங்கள் ஆனது ' என்கிறார் ஜூஹாமட் . அவருடைய நண்பர் அந்தப் பாடல்களின் உள்ளார்ந்த பொருளையும் சொல்லித்தர , பாடல்களை மனதுக்குள் வாங்குவதிலும் அதனால் ஏற்படும் இனம் புரியாத மகிழ்விலும் நாட்களைக் கழித்திருக்கிறார்.
கேளடி கண்மணியின் ' மண்ணில் இந்த காதலன்றி ', கண்ணதாசன் வரிகளில் ' கண்ணே கலைமானே ' , தர்ம யுத்தம் படத்தில் ' ஆகாய கங்கை ' போன்ற பாடல்கள் தினம் தினம் அவர் வாழ்வை இனிமையாக்கியதாய் சொல்கிறார். ' எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் ' ஆறும் அது ஆழம் இல்ல...' என்ற பாடலை 2016 ஆம் ஆண்டு கேட்டு நான் உருகி கரைகிறேன் என்றால் , அந்தப் பாடலின் உலகத் தரமும் இறவாத தன்மையும் ஆச்சரியம் இல்லையா!? ' என மனம் திறந்து பேசுகிறார்.
' இளையராஜாவின் பாடல்களில் நீங்கள் காணும் தனிச் சிறப்புகள் என்ன ? ' என்று அவரை கேட்டபோது , ' இளையராஜா ஆயிரத்தில் ஒருவர். அவருடைய பாடல்களுக்கு எத்தனை ஆஸ்கர் அவார்டு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவர் பாடல்களில் இருக்கும் மெல்லிய உணர்வுகளை இதுவரை உலகின் எந்த இசையமைப்பாளர் பாடல்களிலும் கண்டதில்லை. இதயத்தின் அடி ஆழத்தில் நேரடியாக நுழையும் அவரது இசையை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் தவித்த நாட்கள் உண்டு. அந்த இசையின் நேர்மையும் உண்மையும் நெஞ்சில் ஏற்படுத்தும் உணர்வுகள் இனி பல காலம் கடந்தாலும் புத்தம் புதிதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை ' என கூறுகிறார்.
' மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் கேட்டதில்லையா? ' என கேட்டபோது , ' கேட்டிருக்கிறேன். தேவா, ரகுமான் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். மிகுந்த வெஸ்டர்னைஸ் செய்யப்பட்டு தமிழின் தனித்துவத்தை இழந்துவிட்ட பாடல்கள் . சில ரசிக்கும்படி இருக்கும் . இளையராஜாவின் பாடல்கள் சோதனையான காலகட்டங்களில் தனிமையும் தவிப்புமாக இருக்கும்போது அந்தச் சோதனையிலிருந்து மீண்டு வர பெரிதும் உதவியிருக்கின்றன ' என்றும் கூறுகிறார்.
' வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? ' என்று வினவியபோது , ' வருடத்தின் பெரும்பாலான நாட்கள் குளிரும் இருளும் இருக்கும் எங்கள் நாட்டில் வசந்தம் வருவது சில மாதங்கள்தான். ஆனால் இளையராஜா பாடல்களை கேட்டு ரசித்து தினமும் வசந்தம் வரும் வாய்ப்பு உங்களுக்குத்தான் இருக்கிறது. அவரை இன்னும் கொண்டாட வேண்டும் . அவரது இசையை இன்னும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது தமிழர்களுக்கு என் கோரிக்கை ' என்று முத்தாய்ப்பாக சொல்லி முடிக்கிறார்.
இணையத்தில் அவர் இளையராஜாவின் பாடலைப் பாடி யு டியூபில் வெளியிட்டதில் அது பிரபலமானது. அதன் மூலம் 'இளையராஜா 1000 ' என்ற விழாவிற்கு அவருக்கும் அழைப்பு விடப்பட்டு அதிலும் ஒரு பாடலை கொஞ்சு தமிழில் பாடியதை காணலாம்.
http://www.manithan.com/news/20160212118783
தயவு செய்து இளையராஜாவை கொண்டாடுங்கள் என்று வெளி நாட்டுக்காரர் கோரிக்கை வைக்கிறார். ஆனால் நம் தமிழர்களில் சிலர் ஆகப் பொருத்தமில்லாத வர்ணனைகளில் அவரை இழித்துரைப்பதிலும் அவரது இசையை பழித்துரைப்பதிலும் தங்கள் எழுத்துத் திறமையை காட்டி இணையத்தில் எழுதியும் வருகிறார்கள். அதைப் பாராட்டுவதற்கும் நாலு பேர் அங்கே வருகிறார்கள். மேலை நாட்டவரின் இசைக்கு அடிமையாகி ஆங்கில மோகம் கொண்டு அலைகின்றவர்கள் காலம் கழிந்த பிறகே அவர்கள் என்றாவது ஒரு நாள் இளையராஜாவின் இசைத் திறனை புரிந்து கொள்வார்கள். அவர்களுக்காக காலம் காத்திருக்கட்டும் . ராஜாவின் இசையை ரசிப்பவர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் அவரைக் கொண்டாடுவோம்.
சமீபத்தில் ஒரு ரசிகர் அவரைக் கொண்டாடி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். எண்பதுகளில் தென்னிந்திய மொழிகளில் அனைத்து இதயங்களும் கேட்டு மயங்கும் வண்ணம் நாட்டுப்புற இசை, கர்னாடக இசை , ஜாஸ் இசை , பாப் இசை, ராக் இசை, மேற்கத்திய செவ்வியல் இசை , ஹிந்துஸ்தானி இசை என்று பலவிதமான இசைக் கோர்வைகளை பாடல்கள் மூலம் அள்ளி வழங்கியதை அற்புதமாக பகிர்ந்து அளித்திருக்கிறார்.
http://www.thehindu.com/features/magazine/baradwaj-rangan-on-growing-up-in-the-ilayaraja-era/article8629657.ece#comments
இளையராஜாவின் இசை தோண்டத் தோண்ட வரும் புதையல் . எவ்வளவு தோண்டினாலும் இசைப் பொக்கிஷங்கள் நிறைய கிடைக்கும் .
மீண்டும் 79 க்குச் சென்றால் ' நான் வாழ வைப்பேன் ' என்ற திரைப்படம் பார்த்து ரசித்த ஞாபகம் மறுபடியும் துளிர்க்கிறது. சிவாஜி, ரஜினி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நடித்த திரைப்படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது . கூட்டத்தோடு கூட்டமாக புகுந்து விசில் சப்தங்கள் காதைக் கிழிக்கும் ஆரவாரத்தோடு படம் பார்த்து வந்த நினைவு இப்போதும் பசுமையாய் நெஞ்சில் உண்டு .
இளையராஜாவின் பின்னனி இசை பிரமாதம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். இன்றும் அந்தப் பாடல்களை அப்படிக் கொண்டாடலாம். எதைச் சொல்வது...எதை விடுவது என்றே தெரியவில்லை. அத்தனை பாடல்களும் வெவ்வேறு சுவை கொண்ட கனிகளைப் போல இனிமை தரக்கூடியவை. இப்போது கேட்டாலும் நெஞ்சம் இனிக்கும் நினைவுகளை தரக்கூடியவை.
டி .எம்.எஸ் அவர்களின் வளமான குரலில் வாலியின் வரிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்ட பாடல் ' எந்தன் பொன் வண்ணமே ...அன்பு பூ வண்ணமே ' என்ற பாடல். அப்போது சிவாஜி தன் தங்கைக்காக பாடும் காட்சியில் கண்களில் பொங்கும் பாசத்தின் பரவசம் இசையோடு என்னை ஒன்ற வைத்தது. இப்போது கேட்டாலும் பார்த்தாலும் தாய் தந்தையோடும் சகோதரர்களோடும் வாழ்ந்த காலங்கள் மனதில் வந்து மோதி மின்னலாய் மறையும் . விழியின் ஓரம் துளிர்க்க வைக்கும் மென்மையான பாடல். வீணையும் வயலினும் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடும் பின்னணி இசையோடு ராகதேவன் அற்புதமாக இசைத்திருப்பார்.
' திருத்தேரில் வரும் சிலையோ ....சிலை பூஜை ஒரு நிலையோ ' என்ற அடுத்த பாடல் பாலுவும் சுசீலாவும் அனுபவித்துப் பாடிய அழகான மெலொடி கொண்ட பாடல் . வாலியின் வரிகளுக்கு ராஜாவின் இசை வண்ணம் உற்சாகமானது. கேட்கும்போதே மனசுக்குள் குதூகுலம் கும்மாளமிடும். பாடலின் ஆரம்பத்தில் கிடார் ஒலிக்க வயலின் கூட்டங்கள் சேரும் நேர்த்தி அற்புதமானது . பல்லவி வித்தியாசமான தாள நடையில் தபேலாவும் டிரம்சும் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும். எஸ்.பி. பி பல்லவி முடிக்க இடைச் செருகலாக கிடார் பீஸ் கொடுத்து சுசீலா மீண்டும் பாடுவது சுகமானது . இந்த மாதிரியான இடைச் செருகல்கள் இளையராஜாவின் பாடல்களில் சிறப்பு. பல பாடல்களில் நான் ரசிப்பேன். இடையிசையில் கிடார் மற்றும் வயலின்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் . அத்தனை இசைக்கருவிகளோடு ஆங்காங்கே குழலின் நாதமும் இழையோடுவது பிரமிப்பூட்டும் . பின்னணி இசையையும் முனகிக் கொண்டு இந்தப் பாடலையும் பாடிக்கொண்டு எத்தனையோ நாட்கள் நான் அலைந்ததுண்டு.
' என்னோடு பாடுங்கள் ...நல்வாழ்த்து பாடல்கள் ..' என்று வாலியின் வார்த்தைகளில் எஸ்.பி.பி . பாடும் அடுத்த பாடல் ரசிக்கத் தகுந்த மற்றுமொரு அருமையான பாடல் . பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக குழுவினரின் நடனத்தோடு அமைந்த காட்சிப் பின்னனிக்கு நல்லதொரு உற்சாகமான இசையை ராஜா கொடுத்திருப்பார். கிடார் , டிரம்பெட் அதிகம் ஆக்ரமிக்கும் பின்னணி இசை பாடலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும். இசைக் கருவிகளை இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா என்ற வியப்பு மேலிட வைக்கும். தன் வாழ்க்கையின் சோகத்தை மனதில் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு காதலிக்காக பாடும் வாழ்த்துப் பாடலை மென்மையாக ஆரம்பித்து பிறகு வேகம் கூட்டுவது வித்தியாசமான அணுகுமுறை. கொடுக்கப்பட்ட சூழலுக்கு பொருத்தமாக ஒரு பார்ட்டிக்கு ஏற்றாற்போல இசை அமைக்கப்பட்ட பாடல் . பாடலின் இடையே கொடுக்கப்படும் கை தட்டல் ஒலி தாளத்தோடு மிகச் சரியாக பொருந்தியிருக்கும்.
' ஆகாயம் மேலே...பாதாளம் கீழே ...' என்ற பாடல் ஜேசுதாஸ் பாடியது. " ஜேசுதாசுக்கு சோகம், கர்நாடகம் மட்டுமே நன்றாக வரும். இந்த மாதிரி ஜாலியான பாட்டுக்கெல்லாம் அவர் குரல் பொருந்தாது " என்று சகோதரர்களுடன் தர்க்கம் செய்திருக்கிறேன் . ஆனால் இப்போது கேட்கும்போது தாஸ் அவர்கள் அவருக்குரிய பாணியில் இந்தப் பாடலை அழகாக பாடியிருக்கிறார் என்று புரிகிறது.
ரஜினி அறிமுகமாகும் காட்சி இது. தியேட்டரில் விசிலும் பேப்பரும் பறக்கும். ரஜினி தனக்குரிய மேனரிசத்துடன் இந்தப் பாடலுக்கு துள்ளலான வேகமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவருக்கு ரசிகர்கள் அதிகம் பெருகிக் கொண்டிருந்த காலம் அது. கொஞ்ச நேரம் திரையில் தோன்றினாலும் அசத்தி விட்டுப் போகும் ஸ்டைலுடன் வந்து மக்களின் மனதில் இடம் .பிடித்தார். அதனால் சிவாஜி ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சண்டை மூண்ட கதையையெல்லாம் பார்த்திருக்கிறேன்.
இந்தப் பாட்டிலே வரும் பின்னணி இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாத்தியக்கருவிகளும் ஹிந்திப் பாடல்களின் சாயலைக் கொண்டிருக்கும் . 70 களில் வந்து பிரபலமான ஹிந்திப் பாடல்களை தூண்டலாக எடுத்துக் கொண்டு இளையராஜாவும் அதே போன்ற பாடலை அவருக்குரிய பாணியில் அழகுற அமைத்துக் கொடுத்திருப்பார். அப்போதே அந்த சந்தேகம் இருந்தது. தற்போது 70 களின் பல பாடல்களைக் கேட்கும்போது அது ஊர்ஜிதமாகிறது. கிடார் , டிரம்பெட் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹிந்தி பாடல்களை அப்போது நான் கேட்டதுண்டு .
70 களில் ஏற்கனவே ஹிந்தி பாடல்களின் மாய வலையில் சிக்குண்டதைப் போல மக்கள் மயங்கிக் கிடந்ததை மீட்டுக் கொண்டு வர இளையராஜாவால் மட்டுமே முடிந்தது. மீண்டும் தமிழிசையின் பக்கம் மக்களின் சிந்தை திரும்பியதை பலர் சொல்ல கேட்டதுண்டு; நானே நேரடியாக புரிந்ததுமுண்டு. நான் சொல்வதை சிலர் மறுக்கலாம். ஆனால் இளையராஜாவை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம் சொல்வதும் பொய்யாகி விடுமா என்ன!?
விகடனில் ' திரைத்தொண்டர் ' என்ற தலைப்பில் தொடராக பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரையின் ஒரு சிறு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
70 களில் தமிழ் சினிமாக்கள் தொடர் வெற்றியை சந்திக்கவில்லை. காரணம் ஹிந்திப் படங்களின் ஆதிக்கம். பாபி, ஆராதனா, ஷோலே, யாதோங்கி பாரத் போன்ற ஹிந்தி படங்கள் தமிழ்ப் படங்களை விட அதிக நாட்கள் ஓடின .
தென்னிந்தியாவைத் தாண்டினால் எல்லா மாநிலங்களிலும் இந்தி பேசுபவர்கள் இருப்பதால் இந்தியாவில் பாலிவுட் படங்களுக்கு நல்ல மார்க்கெட் . வேர்ல்ட் மார்க்கெட்டும் பெரிது . ஆனால் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிய தமிழ்ப் படங்களை விட இந்திப் படங்கள் நாலு மடங்கு அதிகமாக வசூலித்தன. சென்னையில் கூட ஓகே. தமிழ்நாடு முழுவதும் எப்படி அந்தப் படங்கள் ஓடின? அதில் மக்களுக்கு அப்படி பிடித்த அம்சங்கள் என்னென்ன? கதை ஓரளவுக்கு புரியும் . வசனம் புரியாதே. அந்த நடிகர் நடிகைகளும் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள் . அப்புறம் எப்படி அவை பட்டிதொட்டி எங்கும் இப்படி ஓடுகின்றன? ஆச்சரியமாக இருக்கும்.
விளையாட்டு மைதானங்கள், கல்யாண வீடுகள், திருவிழாக்கள்... இப்படி கிராமம் , நகரம் வித்தியாசமின்றி எங்கும் இந்திப் பாடல்கள்தான் நீக்கமற நிறைந்திருந்தன. தமிழ்ப் பாடல்களையே கேட்க முடியாது. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. ஆர். டி . பர்மன் , எஸ். டி . பர்மன் , லக்ஷ்மிகாந்த் பியாரிலால்... என இந்தி சினிமாவில் இருந்த இசை அமைப்பாளர்களின் புது மாதிரியான இசைதான் காரணம் என தெரிந்தது. அதற்கு முன்னரும் இந்தியில் மிகப் பெரிய இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அப்போது அவர்களை மீறி இங்கு தமிழ்ப் படங்கள் ஓட , தமிழ்ப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கக் காரணம் விஸ்வநாதன் - ராமமூர்த்தி , கே. வி . மகாதேவன் என்ற இரு பெரும் இசை அரசர்களின் செல்வாக்கு. அப்படி செல்வாக்கோடு இருந்த இவர்களின் திறமை , இவர்களின் மீதான மரியாதை 70 களுக்குப் பிறகு குறைந்து விட்டதா என்றால், இல்லை. ஆனால், அவர்கள் 60 களிலேயே தங்களின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள். அதனால் எத்தனைப் படங்களுக்கு இசையமைத்தாலும் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பது போன்ற உணர்வு.
ஆனால், இந்திப் பாடல்களில் இளைமையான புதுப்புது சவுண்டுகளுடன் கூடிய இசை. அது இளைஞர்களை அலை அலையாக ஈர்த்தது. அதுதான் அவர்களை இந்திப்படங்களையும் பார்க்கத் தூண்டியது. 'நம் ரசிகர்கள் ஏதோ ஒன்னை புதுசா எதிர்பாக்குறாங்க ' என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ' நம்மால் படமே எழுத முடியாது ' என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ' கல்யாணமாம் கல்யாணம் ' ஓடி , ஒரு சின்னத் திருப்பத்தை ஏற்படுத்தியதுபோல ' ஏன் ஒரு நல்ல இசை அமைப்பாளரை கொண்டு வரக் கூடாது? ' என்று என் மனதுக்குத் தோன்றியது. அப்படி ஓர் இசையமைப்பாளர் வந்தால் , தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தை , திருப்பத்தைப் பார்க்க முடியுமே என்ற பேராசை ஏற்பட்டது.
அப்படியான பெரிய இசையமைப்பாளர் கிடைத்தால்தான் இங்கு ஓடும் இந்திப் படங்களைத் தாண்டி நாம் வெற்றி பெற முடியும் , அதன் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும் என உறுதியாக நம்பினேன்.
நல்ல இசையமைப்பாளரைத் தேடத் தொடங்கினேன். ' இது நான் புதுசா போட்ட கேசட் ' என்று இசை வாய்ப்புக்காக யார் வந்தாலும் அவர்களின் இசைக்குக் காது கொடுத்துக் காத்திருந்தேன். ' நல்ல நேரம் வரும்போது எல்லாமும் நல்லதாகவே நடக்கும் ' என்பார்களே... அப்படி என் காத்திருப்புக்குப் பலன் கிடைத்தது. அந்த இளைஞன் வந்தான். ஆனால், அவன் இசையை வேறு எவரும் நம்பவில்லை, என்னைத் தவிர. ஆனால், அவன் இசை வெளி வந்த பிறகோ , அவனைத் தவிர வேறு எவரையும் நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை.
இத்துடன் தொடரும் என நிறுத்திய பஞ்சு அவர்கள் இனி கட்டுரையை தொடர்ந்து அவர்தான் இளையராஜா என்று சொல்லாமலாப் போய்விடப் போகிறார்!? இளையராஜாவைப் பற்றி இனிமேல்தான் நிறைய சொல்வார். நானும் சொல்வதற்கு நிறைய உள்ளது.
.............தொடர்வேன்................
சார்ல்ஸ்
ReplyDeleteதொடர்ந்து வரும் இசைராட்சசனுக்கு வாழ்த்துக்கள்.#பெரும்பாலான தமிழர்களை சோகங்களிலிருந்து மீட்பதும் ,தொலைதூர பயணங்களை இனிமையாக்குவதும் இளையராஜாவின் இசையே #இக்கூற்று முற்றிலும் உண்மையே .
பயணக்களைப்பு அறியாதிருப்பதற்கும் , துன்பங்களில் துவண்டிருக்கும் போதும் ஆறுதலாய் தேற்றுவதும் பெரும்பாலோருக்கு இளையராஜாவின் இசை என்றால் அது மிகையாகாது .
அருகில் இருக்கும் போது அதன் அருமை (இது அநேக செயல்களுக்கும் பொருந்தும் )பலருக்கும் தெரிவதில்லை .இது தமிழனின் சாபக்கேடு போலும் .ஆதலால் தான் இம்மண்ணின் இசை தந்த மாமனிதரை மறுத்தும் ,மறந்தும் பேசுகிறார்கள் . போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் அவரின் இசை சாம்ராஜ்ஜியம் தொடர வாழ்த்துவோம் . அறியாத இளம் தலைமுறையினர் இசைஞானியின் இசைப் பிரளயத்தை அறிய தொடரட்டும் உங்கள் இசை ராட்சஷன் .
அருள்ஜீவா
ReplyDeleteஉங்களுக்கு தெரிகிறது. இளையராஜாவின் இசை மகத்துவம் சிலருக்குப் புரிபடுவதேயில்லை. யார் தூற்றினால் என்ன ...முடிந்தவரை நான் எழுதிக் கொண்டேதான் இருப்பேன்.
பின்லாந்து நாட்டுக்காரன் இளையராஜாவை கேட்டு (என்ன கண்றாவி ரசனையோ?) ஏகத்தும் உணர்சிவசப்பட்டதை ஒரு பதிவாகவே எழுதும் நீங்கள் இதே போல ரஹ்மான் குறித்தும் பல மேற்கத்தியர்கள் புகழ்ந்து பேசுவதை மட்டும் காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள் என்று சொல்வீர்கள் இல்லையா? மேலும் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. அப்படிப் பார்த்தால் மேற்கத்திய இசையை ரசிக்கும் நம் ஆட்கள் குறித்து உங்களது பார்வை என்ன? ஆங்கில மோகி என்று இழிவாக ஒரு பட்டம் கட்டுவீர்கள். விந்தை. ஆங்கில இசை பரிச்சயப் படாத உங்களைப் போன்றவர்களுக்கு இளையராஜா பெரிய ஆளாகத் தெரிவதில் எந்த புதுமையும் இல்லை. மற்றவர்களின் இசையை இழிவாக பேசும் உங்களது இசை ரசனை என்னை வியக்க வைக்கிறது. இளையராஜா மட்டும் போதும் போல என்று இருந்துவிட்டீர்கள். பாவம்தான்.
ReplyDeleteபஞ்சு அருணாச்சலம் இளையராஜா பற்றி சொல்வது என்னால்தான் அவர் வந்தார் என்ற நோக்கமாக இருக்கலாம். அவர் இல்லை என்றாலும் இளையராஜா வந்திருப்பார். தமிழ்ப் படங்கள் சோடை போன சூழலில் இளமை ததும்பும் புது நடிகர்களுடன் புறப்பட்ட ஹிந்திப் படங்களின் மீது நம் ரசிகர்களின் பார்வை விழுந்தது. அந்தப் பாடல்களும் இங்கே பிரபலமாயின. மற்றபடி எம் எஸ் வி யின் இசையின் தரமோ இனிமையோ குன்றிவிட்டதாக யார் சொன்னாலும் அது ஒரு காட்டுமிராண்டிக் கருத்து. மோசடி. எம் எஸ் வி அமைத்த மெட்டுக்களின் இனிமையை இளையராஜாவினால் நெருங்கவே முடியவில்லை. எனவேதான் பாதியிலேயே அவர் டப்பாங்குத்துக்கு தாவி, கண்ணா பின்னாவென்று மெட்டுகள் போட்டார். நீங்கள் குறிப்பிட்டுள்ள நான் வாழவைப்பேன் படப் பாடல்கள் எம் எஸ் வி இசை பாணியில் இளையராஜா அமைத்தவைகள். அதுவும் கொஞ்ச காலத்திற்கே. அதன் பின் ஒரே நாலாந்திர அடிதடிதான்....
பரத்வாஜ் ரங்கன் இன்னும் ஐம்பதை தாண்டியிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இளையராஜா சூழலில் வளர்ந்தவர். அவர் அப்படித்தான் பேசுவார். ராக் இசை என்றால் என்னவென்று அவரிடம் கேட்டால் கலைஞன் படத்தில் வரும் ஒரு பாடலை உதாரணமாகச் சொல்லும் புரிதல் அவருடையது. இளையராஜாவினால் ஒழுங்காக ஒரு மேற்கத்திய இசை வடிவத்தைக் கூட தமிழ்ப் படுத்த முடியவில்லை என்பதே உண்மை. அதில் அவர் மிகப் பரிதாபமாகத் தோற்றுப் போனார். அவரால் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்று சொம்பையாக ஒரு பாமரத்தனமான இசையையே மேற்கத்திய இசை என்று கொடுக்க முடிந்தது. எனேவதான் காதல் ரோஜாவே அப்படி எகிறிக் குதித்தது. சிக்கு புக்கு ரயிலேவும் முக்கப்புலாவும் இளையராஜாவை ஓட ஓட விரட்டின. இதெல்லாம் நடந்தபோது நீங்கள் இங்குதானே இருந்தீர்கள்? மறந்துவிட்டதா?
People talk about rahman movies..please explain any foreigner who explained BGM or Songs of ARR ...? Give me link and examples of the analysis of music of ARR
Deleteவாங்க காரிகன்
ReplyDeleteரகுமான் புகழ் பாடுவதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் . அதற்கு ரகுமான் பாடல்களை புகழ்ந்து எழுதும் சொற்பமான சில பதிவுகளுக்கு நீங்கள் போய் அங்கு தம்பட்டம் அடித்திருக்கலாம். நாலு பேருக்கு அற்ப சந்தோசம் கிடைத்திருக்கும் . வந்தது சரி . ரகுமானின் நாலு பாட்டை எடுத்துப் போட்டுக் காண்பித்து , அதனால் இளையராஜா ஓடி ஒளிந்து கொண்டார் என்று நீங்கள் கூவியிருப்பதை வாசித்தவுடன் என்னோடு சேர்ந்து பலரும் பலமாக சிரித்திருப்பார்கள் . நகைச்சுவை என்று தலைப்பிட்டு நீங்கள் எழுதாவிட்டாலும் சிரிப்பு வந்தது.
ரகுமான் பாடல்கள் பல வெஸ்டர்னைஸ் செய்யப்பட பாடல்கள். ஆங்கிலப் பாடல்கள் போலவே ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதால் இளைஞர்கள் விரும்பினார்கள். உங்களைப் போன்ற ஆங்கிலப் பாடல்களில் மோகம் கொண்டவரும் ரசித்தார்கள் . ஆனால் அந்தப் பாடல்கள் எல்லாம் நமது மண்ணுக்கேற்ற பாடல்கள் அல்ல என்பது இசை ரசிகர்களுக்கும் இசை படித்தவருக்கும் நன்கு புரியும் . ஏனென்றால் நல்ல தமிழிசையை கொடுத்தவர் இளையராஜா என்பதை ரசிகர்களும் தமிழர்களும் உணர்ந்து கொண்டார்கள். நீங்கள் தலைகீழாக நின்று மோர் குடித்தாலும் அந்த உண்மையை மறைக்க முடியாது.
தமிழனுக்கு தமிழனே சத்துரு என்பது உங்களை மாதிரியான மனிதர்களால்தான் நிரூபிக்கப்படுகிறது. வெளிநாட்டுக்காரன் கொண்டாடுகிறான் . நம்ம ஊரில் இருக்கும் உங்களைப் போன்றோர் அதைக் கூட ஏற்றுக் கொள்ள மனமில்லாதவர்களாய் இருக்கிறீர்கள்.
மேற்கத்தியர்கள் ரகுமான் இசையை புகழ்கிறார்கள் என்றால் அவர் அவர்களது இசையை அதிகம் பிரதிபலிக்கிறார் என்ற ஒரே காரணமாகத்தான் இருக்கும் . ஆங்கிலப் பாடல்கள் அதிகம் கேட்டு வளர்ந்திருக்கும் உங்களுக்கும் ரகுமான் பாடல்கள் மீது ஈர்ப்பு வருவதில் ஆச்சரியமில்லை. இசையை விட இரைச்சலை அதிகம் ரசிப்பவர்தானே நீங்கள்!?
சூப்பர் பதிவு ......சார்ள்ஸ் ..வாழ்த்துக்கள்
ReplyDeleteபஞ்சு அருணாசலம் அவர்களின் தகவல்கள் நன்று.
காரிகன் என்பவர் சலிப்பில்லாமல் அடி வாங்குவதில் நிபுணர். எம்.எஸ்.வி. இங்கு கிடட வர ராஜாவால் முடியாது என்கிறார்.வரை நினைத்து அழுவதா சிரிப்பதா ?" முன்பு ஒருமுறை ப்ரியா பாடல்களையும் , நினைத்தாலே இனிக்கும் பாடல்களையும் ஒப்பிட்டு ராஜாவை இகழ்ந்திருந்தார் .நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் ஹிந்திபாடல்களை காப்பி அடித்தது என்பது " இசையறிஞருக்கு " தெரியாது
நிறைய எழுதவும் ....வாழ்த்துக்கள்
வாங்க விமல்
ReplyDeleteநினைத்தாலே இனிக்கும் பாடல்களில் ஒரு சில பாடல்கள் ஹிந்தி பாடல்களின் சாயலில் இருப்பதாக அப்போதே பேசப்பட்டது. ஆனாலும் எம்.எஸ்.வி யின் தனித்துவமும் அதில் தெரியும் . மெல்லிசை மன்னரில்லையா ! அவர் இசையில் சோடை போனதில்லை . அவர் போலவே நிறைய இசையமைப்பாளர்கள் இசையமைத்ததால்தான் அவர்கள் ஒளிர முடியவில்லை. ஆனால் இளையராஜா இசையில் புதுமையும் வினோத நாதமும் கண்டறிந்ததாலேயே ராஜாவை மக்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள் .
எம்.எஸ்.வி யின் இசை போலவே ராஜா ஒரு சில பாடல்கள் இசைத்தாலும் தனக்கென்ற தனித்துவத்தை கடை பிடித்ததால் தனி இடம் பிடித்தார். இதெல்லாம் காரிகனுக்கும் தெரியும் . சும்மா நம்மிடம் பூச்சாண்டி காட்டுகிறார். ராஜாவைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. நீங்கள் தொடருங்கள். நன்றி.
முக நூல் செய்தி ஒன்றை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.
ReplyDeleteஆச்சரியமாக இருக்கிறது !
இளையராஜா இசையமைத்து வெளிவந்த முதல் இசைத்தட்டு “அன்னக்கிளி” என்றுதானே நீங்களும் , நானும் இதுநாள்வரை நினைத்துக் கொண்டிருந்தோம் ?
இல்லவே இல்லை !
இளையராஜா இசையமைத்து வெளிவந்த முதல் பாடல் இசைத்தட்டு ,
இதுதான் !
# “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு!
கொஞ்சம் நில்லு! – எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு
சலாம் சொல்லு..”
இதோ.. அது பற்றி சொல்பவர் ,
நாகூர் ஹனீபாவின் மகன் ஹனீபா நெளஷாத் அலி :
“அப்பா [ நாகூர் ஹனீபா ] மேல்சபை உறுப்பினராக இருந்த நேரம் . சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த அப்பாவைத் தேடி ஒரு நாள் இளைஞர் ஒருவர் வந்தார்.
வந்தவர் , " ஐயா ... நான் நல்லா மெட்டுப் போடுவேன். உங்கள் பாடலுக்கு மெட்டுப்போட விரும்புகிறேன்” என்றார் பவ்யமாக.
அப்பாவோ, "அப்படியென்றால் நீங்கள் என் பாடல்களை வெளியிடும் இசை நிறுவனத்தைத்தான் அணுகவேண்டும்'’ என்றார்.
வந்தவரோ, "முதலில் நான் அங்குதான் சென்றேன். அவர்கள்தான் உங்களைச் சந்தித்துவிட்டு வரச்சொன்னார்கள்” என்றார்.
இரண்டொரு பாடல்களையும் அவர் அப்பா முன் பாடிக் காட்டினார். அப்பாவின் முகத்தில் பிரகாசம்.
’"சரி , ஏற்கனவே ஒரு பாடல் எழுதி , அது பதிவாக வேண்டியதுதான் பாக்கி. அதற்கு நீங்கள் இசை அமையுங்களேன்..பார்க்கலாம்” என்றார்.
அப்படி அந்த இளைஞரால் இசை அமைக்கப்பட்டு பதிவான பாடல்தான் ,
"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு..
எங்கள் திரு நபியிடம் போய்ச் சொல்லு ...
சலாம் சொல்லு '’ என்ற பாடல்.
இதைக்கேட்டு மகிழ்ந்த அப்பா, "தென்றல் காற்றே ஒரு கணம் நிற்பதுபோல் பண்ணிவிட்டீர்களே.... அபாரமான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது.... எங்கேயோ போகப்போகிறீர்கள்' ’ என மனதாரப் பாராட்டினார்.
அதற்குப் பின் அப்பா , சிங்கப்பூர், மலேசியாவெல்லாம் போய் தொடர் இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு , தமிழகம் வந்தபோது , எங்கு பார்த்தாலும், "மச்சானைப் பார்த்தீங்களா... மலைவாழத் தோப்புக்குள்ளே'’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது... ஆம்... அப்பாவின் கணிப்புப்படியே அந்த இளைஞர் எங்கேயோ போய் விட்டிருந்தார்” என்று சொல்லி மகிழ்கிறார் நாகூர் ஹனீபாவின் மகன் ஹனீபா நெளஷாத் அலி....!
அந்த இளைஞர்தான் - இளையராஜா !
# இந்தத் தகவலைப் படித்து விட்டு "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.. " பாடலை யூடியூபில் கேட்டுப் பார்த்தேன்..!
இன்னமும் கொஞ்சம் இனிமை கூடி இருந்தது !
கேட்டுத்தான் பாருங்களேன்...!
https://www.youtube.com/watch?v=KON8Sug7upw
சார்,அதற்கு முன்பு அவர் ஒரு மதுரை பேராசியரோடு சேர்ந்து ஒரு நாட்டுப்புற இசை தட்டு தந்த்தாக நம் இனிய எதிரி காரிகன் சொல்லி இந்த இசைதட்டு முதல்பக்கத்தையும் தந்தார் ...அது பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன்
ReplyDeleteவாங்க சிவகுமார்
ReplyDeleteவருகைக்கு நன்றி. இசை ராட்சசன் 14 ல் பின்னூட்டப் பகுதியில் நீங்கள் கேட்டதற்கான விளக்கம் உள்ளது. அந்த செய்தியில் நம்பகத்தன்மை தெரியவில்லை. வேறு எங்கும் நான் வாசித்ததுமில்லை . இளையராஜா பலருக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கலாம். அதையெல்லாம் வைத்துக் கொண்டு காப்பியடித்தார் என்று கதை விடுவது அபத்தம். இசைத்திறன் இல்லாமல் அந்த மனிதர் இவ்வளவு உயரத்தை அடைந்திருக்க முடியுமா?
நன்றி சார்
Delete