Wednesday, 29 April 2015

இசை ராட்சஷன் - 9 ( The Musical Legend )


                                             திரையிசையின்  முதல் நவீனம்

                                              பண்ணைப்புரத்து  புல்லாங்குழல்

                                              தென்னகத்து வடக்கு இசை மோகத்தை

                                               புரட்டிப்போட்டு  நமது

                                                கிராமியத்தையும் பாரம்பரியத்தையும்
           
                                                திரட்டிக் கொடுத்த அகத்தியன்

                                                இசை மாணாக்கர்களின் பல்கலைக்கழகம்

                                               ' பாக் 'கையும்  'பீத்தொவனை'யும் தமிழுக்கு

                                                 பரிச்சயம் செய்த பாவலன்

                                                 திரையிசையின்  திருவண்ணாமலை

                                                 அவரின் ஆயிரம் படங்கள்

                                                  இன்னிசையின் காலடித் தடங்கள்

                                                  அவரின் ஒரு வாசகம்

                                                   எங்களின் திருவாசகம்

                                                   குருபரனும் ஒருபரனுமாகிய  இசைஞானி !

ஒரு விழாவில் இளையராஜாவை விளிப்பதற்காக  வாசிக்கப்பட்ட கவிதை .
இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ; மிகையானதல்ல.
                                               

                                 

                          பாரம்பரிய  கர்னாடக  இசையை மட்டும் சினிமாவில் கொடுத்து வந்தபோது அதை அதிகம் கொண்டாடாத மக்கள் கூட்டம் மெல்லிசையாக மாற்றப்பட்டபோது  அதிகம் கொண்டாடவும் வரவேற்கவும் செய்தார்கள் . இளையராஜாவிற்கு முன்னால் இருந்த எத்தனையோ இசை விற்பன்னர்கள் மெல்லிசையை சினிமாவிற்கான அழகான திரையிசையாக உருமாற்றினார்கள் .  மக்களை தங்களின் இசையாலும் பாடல்களாலும்  அழவும் சிரிக்கவும் உருகவும் வைத்தார்கள் . ஏனென்றால் அந்தப் பாடல்கள் எல்லாம் மக்களின் எளிய வாழ்க்கையையும் அனுபவங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவையாய் இருந்தன. ஆனாலும் மக்கள் அந்தப் பாடல்களையெல்லாம் நடிகரின் பாடல்கள் என்றே எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.    இசையமைப்பாளர்கள் மறைக்கப்பட்டிருந்தார்கள்.


                       இளையராஜாவின் வருகைக்கு பின்பு  நடிகரின் பாடல்கள் என்று பேசப்படுவது மறைந்துபோய்  இசையமைப்பாளரின் பாடல்கள் என்று பரவலாய் பேசப்பட்டது . 1978 இல் வந்த பாடல்களே அந்த நிலையை அடைந்தன என்பது கண்கூடு.  78 இல் வந்த திரைப்படங்களில் '   முள்ளும் மலரும்' என்ற படம் இசையிலும் இயக்கத்திலும் ஒரு மறுமலர்ச்சியை  ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

                                                             
                                     

                        ' முள்ளும் மலரும்  ' ரஜினி நடிப்பில் மகேந்திரன் அவர்கள் இயக்கிய வெற்றிப் படம். தமிழ்த் திரைப்படக் காவியங்களுள் ஒன்று . ரஜினி வித்தியாசமான முரட்டு அண்ணன் பாத்திரமேற்று நடித்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்திற்கென்று சொல்லப்படும் குறிப்பிடத்தகுந்த படங்களுள் இதுவும் ஒன்று . இளையராஜா இப்படத்தில் ஒரு இசை யாகம் நடத்தியிருப்பார். படம்  முழுவதும்  ஆங்காங்கே அவருடைய  முத்திரை பதிக்கும் அக்மார்க் இசைத்துணுக்கு இசைக்கப்பட்டு வந்திருக்கும். கதாபாத்திரங்களோடு  நாம் ஒன்றிப்போகுமளவிற்கு கதை மட்டுமல்ல , இசையும் நம்மைத் தூண்டும் .

                                             

                         அப்போதெல்லாம் ஊரில் ஒரு தியேட்டரில் மட்டுமே படம் ரிலீசாகி ஓடும். இன்னொரு தியேட்டருக்குச் செல்ல வேண்டும் என்றால் இன்னொரு ஊருக்குத்தான் போக வேண்டும் காசு கொழுத்தவர்கள் அப்படிச் செய்யலாம் ; சிலர் செய்தார்கள் . நான் வெறும் ஒரு ரூபாய் பத்து பைசாவை கையில் வைத்துக்கொண்டு ஆறு கிலோமீட்டர் நடந்தே வந்து படம் பார்த்துவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்தேன் . குடும்பத்தோடு சேர்ந்து படம் பார்த்த நிகழ்வுகள் அப்போது குறைந்து போனது . பிறகு அடியோடு நின்றும் போனது. முதலில் அண்ணன் படம் பார்த்துவிட்டு வந்து  கதை சொல்லுவார். அப்பா வெளியூர் போனாரென்றால் படம் பார்த்து கதை சொல்லுவார். நான் அம்மாவை நச்சரித்து படத்திற்குக் கூட்டிப் போகச் சொல்லுவேன் . 'நீ தனியாக பார்த்துவிட்டு வா'  என்று ' சுருமாட்டு காசு ' கொடுப்பார்கள். சினிமா டிக்கெட் எடுக்க மட்டுமே கொடுப்பார்கள். பக்கத்தில் போகச் சொல்லி கொடுப்பதை கையில் வைத்துக் கொண்டு நான் நடந்தே அவ்வளவு தூரம் சென்று படம் பார்ப்பேன்.


                         சினிமா பார்க்கும் ஆசைக்கு அப்போது அளவேயில்லை . இளையராஜாவின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் போதும் , அந்தப் படத்தை பார்த்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவேன் . அதில் நிறைய ' மொக்கை ' படங்களும் உண்டு. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது. என்  10 வயதில் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகரில் ' மாங்குடி மைனர் ' என்ற படம் பார்ப்பதற்கு தனியாக டவுன்பஸ் ஏறிப்போய் படம் பார்த்துத் திரும்பியிருக்கிறேன் . திருட்டுபயம். கடத்தல் பயம் எதுவுமே இருந்ததில்லை. அதைச் சொல்லி யாரும் பயமுறுத்தியதுமில்லை. பிரயாணங்கள் , தனி அனுபவங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தன . ஆனால் இன்று நம் பிள்ளைகளை தனியாக அனுப்ப பயப்படுகிறோம், தயங்குகிறோம் . காலமாற்றம் கண் முன்னே தெரிகிறது.


                     அப்படி தேடிப்போய் பார்த்த முள்ளும் மலரும் படத்தில் ' செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் '  என்ற கண்ணதாசனின் கவித்துவ வரிகளில் ஜேசுதாசின் குரலில் கேட்ட காவியப் பாடல் கொடுத்த சுகாபனுபவம் இப்போதும் இனிக்கிறது . பௌலி ராகம் ஆதி தாளத்தில் என்றென்றும் அழியாத அந்தப் பாடல் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் இனிய சங்கீதம் . இயற்கை அழகின் கட்டுக்குள் மயங்கி ரசிக்கும் நாயகனின் கற்பனையாக பாடல் ஒலிக்கும் . படத்தில் மலைப்பாதையில் வண்டி வளைந்து வளைந்து செல்லும்போது எதிர்ப்படும் இயற்கைக் காட்சிகளை நயந்து நயந்து வர்ணிக்கும் அழகான இசையை இளையராஜா கொடுத்திருப்பார். அவர் இசையே ஒரு கவிதைதான் ! மூன்று சரணங்கள், மூன்று வெவ்வேறு இடையிசை , மனது வருடும் சுகமாய் ஜேசுதாசின் தேன் குரல்,  சிக்காத வார்த்தைகளில் திகட்டாத கவிதை என்று எதைச் சொல்வது , எதை விடுவது என்று தெரியவில்லை. மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என்பது தெரியாத அளவிற்கு கனகச்சிதமாக இரண்டும் பொருந்தியிருக்கும் . ஜேசுதாசின் பல பாடல்களில் இதற்கு தனி முத்திரை உண்டு.

                                                                                                   

                ஜேசுதாசின் ஹம்மிங்கோடு  பாடல் ஆரம்பிக்கும்போதே நம் மனதும் ரீங்காரமிட ஆரம்பித்து விடும். குழலையும் வயலினையும் பிரதானமாய்க்  கொண்டே பின்புல இசையில் நமை மயக்குவார் ராஜா.  காட்சியோடு பாடலை கேட்டால் நாமும் பறவைகளாகிப் போகுமளவு மனசும் இளகிப் போகும்.  மலைகளின் மேடு பள்ளங்களைப் போல் சிலர் உள்ளங்களையும் ஏன் படைத்தாய் இறைவா என்று இயற்கை  வர்ணனைகளோடு வாழ்க்கைத்  தத்துவத்தையும் போகிற போக்கில் சாதாரணமாக கவிஞர் சொல்லிவிட்டுப் போவார்.
கிளாசிக் ...!


                       '  ராமன்  ஆண்டாலும்  ராவணன் ஆண்டாலும்  எனக்கொரு கவலையில்லே '  என்ற  கங்கைஅமரன்  பாடலுக்கு எஸ்.,பி. பி அவர்களின் குரல் கச்சிதம். திமிர்த்தனம், அகம்பாவம், ஆணவத்தோடு பாடப்படும் பாடலுக்கு அவரை விட பொருத்தமான உணர்ச்சிகளை யாராலும் கொடுத்துவிட முடியாது. மலை சாதியினரோடு குடித்துவிட்டு நாயகன் ஆடிப்பாடுவது போன்ற காட்சி . எவரையும் துச்சமாக எடுத்தெறிந்து பேசும்  பாத்திரத்தில் ரஜினி பிரமாதமாக நடிக்க , எஸ்.பி.பி அதைவிட பொருத்தமாய் பாட ,  இருவரையும் மிஞ்சும் அளவிற்கு பாடலுக்கான  இசையை இளையராஜா அற்புதமாக கொடுத்திருப்பார்.   அந்தோலிகா  என்ற ராகத்தின் அடிப்படையில்  நாடோடிப் பாடலாக கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்னால்  இளையராஜாவின் இசை முன்னோர்கள் மலை ஜாதியினர் ஆடிப்பாடும்  பல பாடல்களை அழகாக கொடுத்துள்ளார்கள். இளையராஜா அவர்களுக்கு சளைக்காத வகையில் இந்தப் பாடலை இன்னும் அழகாக கொடுத்திருப்பதாகவே நான் உணர்ந்தேன்.
                                             
                                                       

                      அட்டகாசமான தாள நடை, மணி ஒலியுடன் ஷெனாய்  மற்றும்   பெண்களின் குரலிசையோடு பாடல் ஆரம்பிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிந்து விடும் . கோரஸ் இடையில் தாள நடையும் மாறும். வித்தியாசமான இசைக் கருவிகளின் நாதம் ஒலிக்கும் .  'லே...லேலேலேலே ...' என்று கோரசாக பாடிவிட்டு அதையே  "அம்மனை கும்பிட்டா நமக்கெல்லாம் நல்லதே நடக்குதே " என்ற  வார்த்தைகள் கொண்டும் பாடப்படுவது புதுமையாக இருக்கும். பல்லவி முடிந்து தாளநடை மாறி  மீண்டும் பழைய நடைக்குத் திரும்பி சரணம் பாடப்படும் இடங்கள் எல்லாம் இளையராஜாவின் தனி முத்திரை .  பறை ஒலியுடன் இந்தப் பாடல் முழுமையுமே வித்தியாசமான முயற்சி  மற்றும் புதுமை . நான் அதுவரை அப்படியொரு இசையை கேட்டதில்லை.

               
                             இன்னொரு சுவையான செய்தி பகிர வேண்டும் . ராமன் ஆண்டாலும் பாடல் எழுதப்பட்ட விதத்தை ஒரு நண்பர் அழகாக விவரித்துள்ளார்.

                              முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.
அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.
கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை
அதனால் கங்கை அமரனையே எழுதவைக்கலாம் என்று முடிவெடுத்து கங்கை அமரன் எழுதினார்..
"உலகம் அது ஒரு கழுதைய மாதிரி தினசரி சுழலுதடா
பொதிதானே அந்தக் கழுதையும் தூக்குது
சரிதானே பூமி பலரையும் தாங்குது
டேய் கழுத கண்டதத் திங்குது
பூமியே மனுஷனத் திங்குதடா"
இதைப் படித்துவிட்டு இளையராஜாவும், இயக்குனர் மகேந்திரனும், இல்லை இதுபோல வேண்டாம் "நாயகன் உலகத்தையே தூக்கி எறிந்து விட்டு I don’t care" என்று பாடுவது போல இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின் எழுதிய வரிகள் தான்..
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”
  
                         மத்யமாவதி ராகத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் ஜென்சி பாடிய மற்றுமொரு துள்ளலான பாடல் , 'அடி பெண்ணே ...பொன்னூஞ்சல் ஆடும் இளமை ' . ஜென்சிக்கு அவர் பெயர் சொல்லும் அழகான பாடல்.  ஆசிரியையாக பணி  புரிந்து கொண்டிருந்தபோது  இளையராஜா அவருக்கு பல பாடல்கள் பாட வாய்ப்பு கொடுத்தார்.  வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர பாடகியாக வரும்படி இளையராஜா கேட்டுக்கொண்டபோது அதை உதாசீனப்படுத்தினார். ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். நிறைய வாய்ப்புகளை இழந்தார். இப்போது அதைக் குறித்து வருத்தப்படுவதாக ஒரு பேட்டியில் ஜென்சி குறிப்பிட்டிருந்தார்.
நல்ல பாடகியாக வலம் வந்திருக்க வேண்டியவர்.
             
                                                 

                       திரைப்படத்தில்   தன் அண்ணனின் மேலதிகாரி தன்னை மணம் புரிய விருப்பம் தெரிவித்ததைக் கேட்டவுடன் நாயகிக்கு ஏற்படும் இனம் புரியா கனவு கற்பனையோடு  எல்லையில்லா சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக பாடல் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கும் . இயக்குனர் கேட்டதற்கு மேல் இளையராஜா கொடுத்திருப்பார்.  பெண்ணின் மனது கிடந்து தவிக்கும் தவிப்பை இசையில் கொண்டு வந்திருப்பார்.  ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஐந்து நிமிடப் பாடலில் படைத்திருக்கும் இளையராஜாவின் இசைக் கற்பனை  அபாரம் .



                          அதே படத்தில்  ' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ...நெய் மணக்கும் கத்திரிக்கா ...'  என்றொரு மணமணக்கும் பாடல் உண்டு. வாணி ஜெயராமின் அழுத்தந்திருத்தமான குரலில் கங்கை அமரனின் கை வண்ணத்தில் கேட்கும்போதே மனதில் வந்து ஒட்டிக் கொண்ட பாட்டு. படத்தில் பார்த்தவுடன் காட்சியும் பிடித்துப் போனது.  படத்தில் நாயகி ஒரு போஜனப் பிரியை . சுருக்கமாக  ' சாப்பாட்டு ராமி ' . முதலிரவில் ஒரு பாட்டு பாடச் சொல்லி ரஜினி கேட்கப் போக படாபட் ஜெயலக்ஷ்மி பாடுவதாக சூழல் காட்டப்பட்டிருக்கும் . நாவில் சுவையூறும் பதார்த்தங்களைக் கொண்டு பாடல் எழுதப்பட்டிருக்க அந்தச் சூழலுக்கு வெகு பொருத்தமான இசையை இளையராஜா கொடுத்திருப்பார்.


                         நெல்லுச் சோறு பற்றி அதிசயம் போல் பாடல் எழுதப்பட்டிருக்கிறதே, மிகைப்படுத்துகிறார்களோ என்று சந்தேகித்து என் தந்தையிடம் அது பற்றி கேட்டேன் . ஏனென்றால் எங்கள் வீட்டில் தினமும் அதுதானே சாப்பாடு. பாடலில் பெரிய விஷயம் போல காட்டியுள்ளார்களே என்று கேட்டபோது அவர் சொன்னார்: " எங்கள் காலத்தில் நெல்லுச் சோறு அதிசயம்தான்! ஏதாவது பண்டிகை விஷேசங்கள் வரும்போது மட்டுமே சோறு சாப்பிடுவோம் . இட்லி தோசை கூட தீபாவளி , கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் மட்டுமே செய்வார்கள். மற்றபடி தினமும் கம்பு, கேழ்வரகு ,சோளம்  கூழாகவோ கஞ்சியாகவோ சாப்பிடுவோம் . காய்கறி எல்லாம் கிடைக்காது . வெங்காயம், மிளகாய் , ஊறுகாய் , துவையல் இதுதான் தொட்டுக்கிறதுக்கு ! நீ சாப்பிடும் சோறு எங்களுக்கு அபூர்வம் . "

                                                   

                            கிராமத்து மண்ணின் யதார்த்த வாழ்க்கை நடைமுறையின் வெளிப்பாடுகள் பாடலாக அரங்கேற்றப்படும்போதேல்லாம்  அது வெற்றிப்பாடலாக வலம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்தப் பாடலும் அதில் அடக்கம்.  தினசரி சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொண்டு பாடல் எழுதி அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை எளிய கருவிகள் மூலம் நாடோடி பாடலாக அழகான இசையோடும் கிராமத்து வாசனையோடும் இளையராஜா கொடுத்திருப்பார்.
கடம், மோர்சிங் போன்ற கருவிகளின் ஆதிக்கம் அதிகம் தெரியும் . படம் பார்க்கும்போது பக்கத்தில் இருந்த ' பெரிசுகள் ' கொடுத்த கமெண்ட் இன்னும் சுவாரசியாமனது . ' அடடா... பிரமாதம் ...ஸ் ....' என்று ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டவர்களை எல்லாம் சந்தித்தேன்.  சில நேரங்களில் திரைப்படங்களில் வரும் நகைச்சுவைகளை  விட பொது மக்களிடமிருந்து வரும் ஜோக்குகளுக்கு
தியேட்டரே சிரிக்கும். அந்த அனுபவங்கள் இப்போது இல்லை . காலாவாதியாகிப் போனது.


                                  அதே 78 இல்  '  சட்டம் என் கையில்  '  என்ற திரைப்படம் வெளிவந்தது. கமல்ஹாசன் இரட்டை வேடம் . படம் காரம் மணம் கலந்த மசாலா . அந்த வயதுக்கு பிடித்தமானதாக இருந்தது.  இப்போது பார்க்கும்போது  பிடிக்கவில்லை. ஆனால் இளையராஜாவின் இசை. அப்போதும் இப்போதும் அப்படியே புத்தம் புதிதாய் அதன் பரிமாணம் மாறாமல் சுகந்த மணம் மாறாமல் இருக்கிறது.  ஆழ்ந்து அனுபவித்து  சுகித்தவர்களுக்கு  அது புரியும் .

                                                   


                                 ' சொர்க்கம் மதுவிலே ...சொக்கும் அழகிலே  ' என்ற இளமைத் துள்ளலான பாடல் கேட்ட மாத்திரத்தில் அசரடித்தப் பாடல். கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பி பட்டை கிளப்பிய பாடல்.  சிலோன் வானொலியில் இசைச் செல்வம் நிகழ்ச்சியில் அதிக நாட்களாய் முதல் தரம் பிடித்தப் பாடல்.  மேலைநாட்டு இசையை தமிழிசைக்கேற்றாற்போல் மாற்றி அமைக்கப்பட்ட பாடல் . இன்னும் தமிழகத்தின் பல இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் ' அங்கிங்கு ' இசைக் குழுவினர் எங்கு சென்றாலும்  இந்தப் பாடலை பெரும்பாலும் தங்கள் நிகழ்ச்சியில் இப்போதும்  அப்படியே கொடுக்கிறார்கள்.  கேட்கும் கூட்டம் பரவசமடைவதையும்    பார்த்திருக்கிறேன் .  அந்தப் பாடலின் கிரேஸ் இன்னும் தீர்ந்தபாடில்லை .

                                               

                                கிடார் கார்ட் ஆரம்பித்து ட்ரம்பெட் சேர்ந்து பெண்களின் கோரஸ் ஒலியுடன் பல்லவி அட்டகாசமாக ஆரம்பிக்கும்போதே வினோத இசை உலகுக்குள் சென்றுவிடுவோம் . மோனோ ரெக்கார்டிங்கில் பாடல் ஒலிக்கும்போதே இசைக் கருவிகளின் மாயாஜாலம் அற்புதமாக இருந்தது . இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் அதே பாடல் இசைக்கப்பட்டால் இன்றுள்ள இளைஞர் பட்டாளங்களுக்கு மேனாட்டு இசைக்கலப்பின் அதிசயம் புரியும் .  இடையிசையில் பெண்கள் கோரஸின் காட்டுக் கூச்சலும் எஸ்.பி.பி யின் கர்ஜிக்கும் பின்னணியும் அப்போது திரையில் பார்த்தபோது பரபரவென பற்றிக்கொள்ளும் உற்சாக உணர்வு கிளம்பியது. படத்தில் கமல் பெண்களை கொஞ்சுவார்;  பாடலில் எஸ்.பி.பி வார்த்தைகளை கொஞ்சுவார்; இளையராஜா இசையில் எல்லோரையும் மிஞ்சுவார்.  ( 37 வருடங்கள் ஆச்சு ! இப்போதும் லண்டனில் நடந்த சூப்பர் சிங்கர் world tour 2015 என்ற நிகழ்ச்சியில் SPB அவர்கள் வெற்றி பெற்ற குழந்தைகளோடு சேர்ந்து பாடுகையில்  அதில் சொர்க்கம் மதுவிலே என்ற  பாடலை அட்டகாசமாக பாடினார் . லண்டன் வாழ் தமிழ் மக்களே மறக்கவில்லை . அப்படி ரசித்தார்கள் . நாம் எப்படி மறப்பது? )


                             ' ஆழக்கடலில் தேடிய முத்து...ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு    '  என்ற பாட்டு  வித்தியாசமான தாலாட்டுப்  பாட்டு.  இந்தப் பாடல் மட்டுமன்றி  படத்தின் பாடல்கள்  அனைத்தும் கண்ணதாசன் . மலேசியா வாசுதேவன் , ஜானகி அவர்களின் குரலில் சுகமான பாடல் . முதல் சரணம் முடிந்து இடையிசையில் 'ஏ..ஏ....ஏ ...னா ....   ' என்று தூரத்தில் கேட்பதுபோல்  நீட்டி முழங்கும் ஒரு ஆண் குரலின் ஹம்மிங் ஒலி இனம் புரியா  சுகமான இம்சையை ஏற்படுத்தும். இளையராஜாவின்  தனித்துவம் இப்படிப்பட்ட குரலிசையில் தனியே தெரியும். அது ராஜாவின் ட்ரேட் மார்க் !
             
                                                         

                               ' கடைத்தேங்காயோ...வழிப்புள்ளை  யாரோ ..' என்றொரு குத்துப்பாடலில் தாரை தப்பட்டையும் டிரம்ஸும் கொண்டு  கிராமிய நடையும்  மேனாட்டு இசை நடையும்  கலந்து கொடுக்கப்பட்டிருக்கும்.  சேரியில் வளரும் நாயகனுக்கும் பணக்கார நாயகனுக்கும் ஒரே நாளில் நடக்கும் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதாக காட்டப்பட்டிருக்கும் சூழலுக்கு இசைக்கப்பட்ட பாடல் என்பதால் இளையராஜா இரண்டும் கலந்து அழகாக பின்னிக் கொடுத்திருப்பார்.  வாசுவும் கம்பீரமாக பாடியிருப்பார்.

                                                   
         
                                     ' ஒரே  இடம் ...நிரந்தரம் .. இதோ உன் துணை ...இதோ என் இசை..'  என்ற பாடலுக்கு மறைமுகமாக தன்  இசையைத்தான் இளையராஜா குறிப்பிடுகிறாரோ என நினைக்கத் தோன்றும் அளவிற்கு அசத்தலான இசையை வழங்கியிருப்பார்.  சுசீலா அவர்களின் மயக்கும் குரலில் ட்ரம்பெட் ஒலியுடன் பாடல் கேட்டால் மனசும் மயங்கும் . இடையிசையில் மேனாட்டு இசைக் கலப்பில்  ஆண்  குரலில் வரும் ஹம்மிங் வேறுலகம் கூட்டிச் செல்லும் .

                                                   

                                  ராஜா   ஜானகிக்கு அதிக வாய்ப்புகள்  கொடுத்திருந்தாலும் சுசீலாவும் இளையராஜாவின் இசையில் நல்ல பல பாடல்கள் பாடியிருக்கிறார்.  ராஜா இசையமைப்பாளராய்  ஆவதற்கு முன் ஜி .கே. வெங்கடேஷின் உதவியாளராய் வேலை செய்தார் . ஒரு சமயம் வெங்கடேஷின் இசையில் சுசீலா பாடும்போது அபஸ்வரமாய்  ஓரிடத்தில் பாட  கிடார்  இசைத்துக் கொண்டிருந்த இளையராஜா அதைச் சுட்டிக் காட்டினார்.  சுசீலா ராஜாவின் கிடார் வாசிப்பில்தான் தவறு என வாதிட்டார். ராஜா ஏற்றுக் கொள்ளவில்லை . சுசீலாவிற்கு தன்மானப் பிரச்சனை . ராஜா கூடத்தை விட்டு வெளியேறினால்தான் தொடர்ந்து பாடுவேன் என அடம் பிடித்தார்.  ராஜா மெளனமாக வெளியேறினார். பிறகே ஒலிப்பதிவு  நடந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன் .  ஆனாலும் இளையராஜா சுசீலாவிற்கு தன் முதல் படத்திலேயே  பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகும் அவரிசையில் சுசீலா  பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
                                     

                                  '  சொன்னது நீதானா  ' என்ற படத்தில் ஜெயச்சந்திரன் குரலில்   ' வெள்ளி  நிலாவினிலே ..தமிழ் வீணை வந்தது '

                                 ' திருக்கல்யாணம் '  என்ற படத்தில் ஜெயச்சந்திரன், ஜானகி குரலில்   ' அலையே கடல் அலையே '

                                    ' வாழ நினைத்தால் வாழலாம் ' என்ற படத்தில்  ஜானகியின் குரலில்  ' வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா ...'

                                 ' வட்டத்துக்குள் சதுரம் ' என்ற படத்தில்  ஜானகி மற்றும் சசிரேகா குரலில் ' இதோ இதோ என் நெஞ்சிலே ...ஒரே பாடல்.. ' ,  ஜிக்கி அவர்களின் குரலில்  ' காதலென்னும் காவியம் ...கன்னி நெஞ்சின் ஓவியம் ..'


                              மேற்குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் நான் இலங்கை வானொலியில் மட்டுமே கேட்டு இன்புற்றிருக்கிறேன் .  ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைத்  தரும். வெள்ளி நிலாவினிலே என்ற பாடலை ஒரு பாட்டுப் போட்டியில் நான் பாடியது நினைவிருக்கிறது.  இதோ இதோ என் நெஞ்சிலே என்ற பாடல் இப்போதும் டி வி களில் ஒலிபரப்பப்படும்போது  பால்ய கால நினைவுகள் அலைகளாய் வந்து நெஞ்சில் மோதுகின்றன.


                      வெவ்வேறு சூழலுக்கு வெவ்வேறு விதமான மெலடி வெவ்வேறு பின்னணி இசை , வெவ்வேறு ஜானர் . ஆனால் எல்லாமே ஒரே ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படுகிறது எனும்போது இளையராஜாவை  பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியாது . ஒரு பாட்டில் உள்ள எல்லாவற்றையும் அவரே ஆள்கிறார் ; அவரே முடிவு செய்கிறார் ; அவரே படைக்கின்றார் . ஆனால் தனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது என்று தாழ்ச்சியாக சொல்லிக் கொள்கிறார்.

                   
                       சமீபத்தில் ஒரு திரைப்படப் பாடல்  வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசியது : -  "  எனக்கு இசையைத் தவிர எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் எப்படி இசையமைத்தேனோ   அதுபோலதான் இப்போதும் அமைக்கிறேன் .  பாடல்களை கம்போஸ் செய்ய நேரம் எடுப்பேன். ஆர்கெஸ்ட்ராவை  ஒருங்கிணைக்க அரை மணி நேரம் போதும். எனக்கு இசை தெரியவில்லை. அதனால்தான் இசையமைக்க இன்னும் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறேன் . எனக்கும் உங்களுக்கும் தெரியாத இசை நிறைய இருக்கிறது.  ஒவ்வொரு நாளும் அது வந்து கொண்டே இருக்கிறது. ' ருத்ரம்மாதேவி ' என்ற படத்திற்காக லண்டனில் உலகப் புகழ் பெற்ற சிம்பொனி இசைக் குழுவுக்கு நான் அனுப்பிய நோட்ஸ்களைப் பார்த்துவிட்டு எங்களால் வாசிக்க முடியவில்லை என்றார்கள். நான் இப்படிதான் படைக்கிறேன். இது இறைவன் கொடுத்த வரம்.  " . அவர் நிறைய பேசியிருப்பார். பத்திரிக்கையில் பேச்சின் சாராம்சத்தை சுருக்கமாக கொடுத்துள்ளார்கள்.



.........................தொடர்வேன்......................
                                               

                                               
                                                 
                                               

Wednesday, 1 April 2015

வாட்ஸ் ஆப்புகள்



                                                   
             
                      இசைப் பதிவுகளுக்கு இடையில் கொஞ்சம்  ரிலாக்ஸ் செய்துவிட்டு போகலாம் என்றுதான் இந்தப் பதிவுக்கு வந்தேன் .
                                   
                                           
         
                 வாட்ஸப்  இப்போது இளையோர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது . வாட்ஸப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் நம்மை ஒரு மாதிரியாக மற்றவர்கள் பார்க்கிறார்கள் .
           

                   ஊடகங்கள்  இப்போது இதை பயன்படுத்தி உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை பெற முயல்கிறது.  யார் அநியாயம் செய்தாலும் எங்கு அக்கிரமங்கள் நடந்தாலும் அதை  யாராவது  வீடியோ எடுத்து    வாட்ஸப்பில் 
பரப்பி விடுகிறார்கள் .  ஊடகங்களும் ஒலி  பரப்புகின்றன .  அதை ஒரு சாட்சியாகக் கருதி நீதி மன்றமும் வழக்கை  எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன . வாட்ஸப்  சிலருக்கு கிலி ஏற்படுத்தி இருக்கிறது . 
                                               


                  என் மனைவியுடன் சேர்ந்து பணியாற்றுபவர் ஒருவர் அவர் கணவரிடம் சென்று  ' ஏங்க ...தடவுற போன் ஒன்னு வாங்கிக் கொடுங்க ...' என்று கேட்க அவர் சிறிது நேரங்கழித்து புரிந்து கொண்டு ' டச் போனா..? ' என கேட்டிருக்கிறார்.  ' ஆமா..மா ...அதேதான்  எல்லோரும்   வாட்ஸப்  பயன்படுத்துறாங்க எனக்கு ஒண்ணும் தெரியலைன்னு  கிண்டல் செய்றாங்க ..' என்று புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கி கற்றுக் கொண்டுவிட்டார்.  வாட்ஸப்   கற்றுக் கொள்வதும் கையாள்வதும் எல்லோருக்கும் எளிதான விசயமாகிப் போனதால் எல்லா வயதினரும் பயன்படுத்துகிறார்கள் .

                           
                     வாட்ஸப்பில் பாட்டு,  போட்டோ, ஆடியோ , வீடியோ , கமெண்ட்   என்று எதை வேண்டுமென்றாலும் அனுப்பலாம் என்பதால் நக்கல், நையாண்டி , கிண்டல் , கேலி, ஆச்சரியம், அதிசயம் , அசிங்கம் ...etc  வருகிறது; போகிறது.  கட்டுப்பாடுகளே இல்லை .  வீட்டுக்குள் நுழைந்தால் பிள்ளைகள் எடுத்துப் பார்த்து விடுவார்களோ என்று பயப்பட வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு குஷியாக இருந்த  வாட்ஸப் விஷயங்கள் போகப் போக ,  'இன்னிக்கு எவன் என்னத்தை அனுப்பினானோ ...? ' என்று யோசிக்க வைக்க ஆரம்பித்து விட்டன .  இந்திய அரசாங்கம் தடை செய்த கொடூரமான மனிதத் தலையை வெட்டி எறியும் காட்சிகள் கூட பரப்பப்படுகிறது.  என் நண்பர் ஒருவருக்கு அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு மயக்கம் வந்து விட்டதாம் .  எப்படியோ சமாளித்துவிட்டார்.  இப்போது வாட்ஸப் உள்ளே செல்ல தயங்குகிறார்.  மனுசனை அது என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!?

             
                     சின்னப் பசங்கள் கையில் அது அதிகம் விளையாடுகிறது.  எதையாவது பார்த்துக் கொண்டே அலைகிறார்கள் . பத்து பேர் சேர்ந்து கொண்டு அரட்டை அடிக்கிறார்கள் வாயை திறக்காமலேயே! கேட்டால் 'குரூப் சாட் '  என்கிறார்கள்.   அவர்கள் பார்ப்பது மறுக்கப்பட்டால் கோபம் தலைக்கேறுகிறது. என்ன செய்ய?  உள்ளறையில் படுத்திருக்கும் என்னை என் மகள்  ' அப்பா டீ  குடிக்க  ஹாலுக்கு வாங்க ' என்று  வாட்ஸப்பில் செய்தி அனுப்புகிறாள்.  நானும் அந்த வாட்ஸப்பில் மேய்ந்து கொண்டிருப்பதால் உடனே செய்தி என்னை எட்டுகிறது.
                                                       

                       சில பேர் பக்கம் பக்கமாய் எழுதி அனுப்புகிறார்கள் . வாசிக்க பொறுமை இல்லை. ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் என் நண்பனுக்கு ஒரு பெரிய செய்தியை பகிர்வதற்காக அனுப்பினேன்.  எனக்கு போன் செய்து திட்ட ஆரம்பித்துவிட்டான்.  ' வாட்ஸப்  சின்ன சின்ன செய்தி அனுப்பத்தானே ஒழிய இப்படி  ' எஸ்ஸே ' அனுப்புறதுக்கு இல்ல . அமெரிக்காவில் எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா ?....'  என்று வசை பாட ஆரம்பித்துவிட்டான் . வாட்ஸப்பினால் அமெரிக்காவிலிருந்து நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.  அதன் பிறகு,  '  ஹாய் ...நலமா ...பிள்ளைகள் நலமா ...ஹவ் ஆர் யூ ...ஹி ...' என்ற வார்த்தைகள் தவிர வேறு எதையும் அவனுக்கு அனுப்புவதே கிடையாது.


                      வாட்ஸப்பில் சிக்கிக் கொண்டு நிறைய பேர் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் . எனக்கு அந்த அளவுக்கு பைத்தியம் இல்லை. அளவோடு பயன்படுத்துகிறேன்.  அதனால் நிறைய விசயங்களை பார்க்காமலேயே அழிக்க ஆரம்பித்து விட்டேன்.  திறந்தால்  போதும்  நூறு விஷயங்கள் வந்து கொட்டும் .  அத்தனையும் பார்த்து முடிக்க ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாகவே  ஆகும் . என் நேரத்தை  தின்று தீர்த்துவிடும் . நானே சென்சார் செய்து விடுகிறேன் .

                   சமீபத்தில்  ஆசிரிய நண்பர் ஒருவர் ,  ' சார் ...வேண்டியவங்களுக்கு பழைய வினாத் தாளை  வாட்ஸப்பில் அனுப்பக் கூட பயமாயிருக்கு ... எதுக்கு உள்ள தூக்கி வைப்பான் என்றே தெரிய மாட்டேங்குது  ' என்று அங்கலாய்த்தார் இப்படி நமது பின்னணியில்  ஒளிந்திருக்கும்ஏகப்பட்ட பிரச்சனைகளோடுதான்  வாட்ஸப்பிலும் நாம்  மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

               
                    அப்படி நான் ரசித்து மகிழ்ந்த விசயங்களில் சில ஆடியோப் பதிவுகள் நகைச்சுவையாக இருந்தன . பார்ப்போம்.



                                           ஆடியோப் பதிவு ஒன்று



(  ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து  ஒரு பெண் ஊழியர் பேசுகிறார் . எதிர் முனையில் ஓர் ஆண் பதில் சொல்கிறார். )

பெண் :     சார்   ரா.... சாருங்களா ?

ஆண் :      ஆமா ...நீங்க?

பெண் :    சார் ...நாங்க இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுறோம் ...ஏற்கனவே                  உங்களுக்கு சொல்லி இருந்தோம் இல்லியா ...நீங்க வாங்க         வரேன்னு     சொல்லி இருந்தீங்க இல்லியா ...

ஆண்  :   நான் ஆபிசில் இருக்கேன் ... நீங்க சொல்லுங்க .. என்ன இன்சூரன்ஸ்?

பெண் :  அப்புறம் பேசவா ...?

ஆண்  :  இல்ல ... சொல்லுங்க என்ன இன்சூரன்ஸ்ங்க ...?

பெண் :  லைப் இன்சூரன்ஸ்.. ஏற்கனவே சொல்லியாச்சு ..உங்க வீட்டில                                 அவங்களுக்கு ஒரு  லட்சம் மதிப்புள்ள பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு

ஆண்  :  ஒரு லட்சம் cash ஷா மேடம் ?

பெண் :  இல்லை  இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு

ஆண்  :  எங்க விழுந்துச்சுங்க ...?

பெண்  :  இன்சூரன்ஸ் ஆபிஸ்ல .. ஆயிரம் நம்பர் குலுக்கியதில அவங்களுக்கு                     இன்சூரன்ஸ் பாலிசி விழுந்திருக்கு சார் ..நீங்க வந்து
                  வாங்கிக்கறேன்னு சொன்னீங்க ...

ஆண்  :   அவர் உங்க ஆபீஸ்ல தெரியாம விட்டுட்டு வந்திருப்பாரு ...எடுத்து
                   வைங்க ...அவருகிட்ட சொல்றேன்

பெண் :     வருவாங்களா அவங்க ...ஏன்னா கவருமென்டுல இருந்து வந்து
                    கொடுக்கிறாங்க...மேனேஜர் வந்து கொடுப்பாரு

ஆண் :      மேடம் அவரு விட்டுட்டு வந்திருப்பாருன்னு
                சொன்னீங்கல்ல   எடுத்து வைங்க மேடம்...


பெண் :   அவர் விட்டுட்டு வந்தாருன்னு நான் சொல்லலை .

ஆண்  :   நீங்கதானே மேடம் விழுந்திருச்சுன்னு சொன்னீங்க

பெண் :     சார் நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்குங்க ..அவங்களுக்கு ஒரு                               லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி
                    விழுந்திருக்குன்னுதான் சொன்னேன் ..

ஆண்  :     ஒரு   லட்சம் மதிப்புள்ள  பிரிஜ்ஜா ....?

பெண்  :    பிரிஜ் இல்ல ... பாலிசி சார் ..

ஆண்  :      என்னது பால் பாக்கெட்டா ....?

பெண் :      வைங்க சார் போனை... பாலிசின்னு சொல்றேன் ...பிரிஜா ..பால்
                      பாக்கெட்டானு  கேட்டுகிட்டு ...ஆளைப் பாருங்க



                                       ஆடியோப் பதிவு இரண்டு


( எர்வா மாட்டின் என்ற ஒரு product விற்பனை சம்பந்தமான பரிவர்த்தனை )


பெண் :   அதை யூஸ் பண்ணீங்களா ?

ஆண்  :   நான் மூணு நாலு பாட்டில் யூஸ் பண்ணிட்டேன்.

பெண் :  ஒரு பாட்டில்தானே வாங்கியிருக்கீங்க .
                  ஒரு பாட்டில்தான் இருக்கு

ஆண் :   ஒண்ணுதான் இருக்கா ...என்கிட்டே நாலு பாட்டில் இருக்கே

பெண் :   ஒரு பாட்டில்தான் நீங்க வாங்கியிருக்கீங்கன்னு இருக்கு .

ஆண்  :  உங்க கம்ப்யூடரில் ஏதோ பிரச்னை ...நான் நாலு பாட்டில்
                   எர்வா மாட்டின் வாங்கினேன் .

பெண் :   இன்னொன்னு வேணுமா சார்

ஆண்  :   முதல் பாட்டில் வாங்கி யூஸ் பண்ணதுல கொஞ்சம் முடிதான்
                   போயிருந்துச்சும்மா

பெண்  :  எப்படி நீங்கயூஸ் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ...?

ஆண்  :    அவங்க எப்படி சொன்னாங்களோ அப்படிதான்மா யூஸ் பண்ணேன்
                    எனக்கு முதல்ல நல்லா முடி இருந்துச்சும்மா ...கொஞ்சம் முடி
                     போச்சு ...எல்லோரும் சொன்னாங்கன்னு  டிவியில பார்த்துட்டு
                     உங்க ஆயில் வாங்கி தேச்சேன் .. கூடுதலா முடி போச்சு ...

பெண் :    ஓ . கே  சார்

ஆண்   :    அடுத்தடுத்து வாங்கி தேச்சதுல எல்லா முடியும் கொட்டிப் போயி
                     இப்ப மொட்டை மண்டையா நிக்கிறேன் ...ஒரு போட்டோ
                      வேணுமின்னா எடுத்து அனுப்பட்டுமா ...?

பெண்  :    சார் புரோட்டின் ரொம்ப கம்மியா இருந்தா அப்படி கொட்டும் சார் ..
                    ஆனா எங்க பிராடெக்ட் யூஸ் பண்ணா வேரில போயி முடி நல்லா
                     வளரும் சார்..யூஸ் பண்ண பண்ண கண்டிப்பா உங்களுக்கு முடி
                       வரும் சார் ...

ஆண்  :      எப்ப வரும்னு சொல்றீங்க ...?

பெண் :   யூஸ் பண்ணிகிட்டே இருந்தா வரும் சார் ...

ஆண்  :   தேய்க்க தேய்க்க எல்லாம் கொட்டிப்   போச்சு..
                  போனதுக்கப்புறம் இனிமே தேய்ச்சா
                  முடி வருமா...?

பெண் :   கண்டிப்பா வரும் .

ஆண்  :  ஒருவேளை மழை பெய்ஞ்சா வருமோ...?  வெயில் காலம் அதனால
                   வர மாட்டீங்குதோ ..?


பெண் :    அப்படி இல்லை சார் ... கண்டிப்பா வளரும் சார்


ஆண்  :    ஒரு பாட்டில் தேச்சப்ப கொட்டிப் போச்சு ..  ரெண்டாவது மூணாவது
                      தேய்ங்கன்னு  சொன்னாங்க ...மொத்தமா போச்சேம்மா ...

பெண் :    முதல் பாட்டில் தேய்க்கும்போது  பொடுகு போகும் ...அடுத்தடுத்து
                   தேய்ச்சா வளரும்

ஆண்  :   இது எங்கிருந்து வருது ....பிரேசிலா ...:

பெண்  :   அமேசான் காட்டிலிருந்து மூலிகை மூலம் தயார் செய்றாங்க சார்

ஆண்  :   அமேசான் பிரேசிலில்தானே இருக்கு

பெண் :   ஒரு நிமிசம் ...( யாரிடமோ கேட்கிறார் )... சவுத் ஆப்பிரிக்காவில்
                   இருக்கு சார் .

ஆண்  :  அப்படியா ...?  அங்க இருக்கிறவங்களுக்கு இதை விக்கிறீங்களா ...?
                  அங்க இருக்கறவங்க தலை சொட்டையா இருக்குறதா என் பிரண்டு
                    சொல்றாரு .

பெண்  :  எல்லோரும் நல்ல ரிசல்ட் கொடுக்கிறாங்க ..யாரும் ராங் ரிசல்ட்
                   சொல்றதில்லை சார் ...

ஆண்  :   என் பிரன்ட்ஸ் நாலு பேரு இதே மாதிரி எல்லாம் கொட்டிப்
                  போச்சுன்னு சொல்றாங்க ...அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது நாலு                                 பாட்டில் வேஸ்ட் பண்ணிட்டேன் ...நாலாயிரம் போச்சு ..முடியும்
                    போச்சு

பெண் :   கண்டிப்பா நான் கம்பிளைன்ட் பதிவு பண்றேன்  சார் ..

ஆண்  :  என்னை கம்பிளைன்ட்  பண்றீங்களா

பெண் :   இல்ல சார் உங்க கம்பிளைன்ட்ட கம்பெனிக்கு சொல்றேன்

ஆண்  :  அது சரி ...போன முடிக்கு என்ன பதில் சொல்லப்  போறீங்க ...இதில
                  இன்னொரு பாட்டில் வாங்கச் சொல்றீங்க

பெண் :  ஆமா சார் யூஸ் பண்ணா கண்டிப்பா வளரும் சார் .. பொல்லுசன்
                ஏதாவது  இருந்ததுனா பிராபிலம் இருக்கும்

ஆண்  :  அப்ப  தேய்ச்சுட்டு  வீட்டுக்குளேயே கிடக்கச் சொல்றீகளா .. வேலை
                  வெட்டிக்கு போக வேணாமா ...?

பெண் :  இல்ல சார் கண்டிப்பா வளரும் சார் . கர்சீப் கட்டிக்கிட்டு ஹெல்மெட்
                  போடுங்க சார் .

ஆண் :    சொட்டை தலையாப் போச்சு ....அதுக்கு என்ன பதில் சொல்லப்                                     போறீங்க  ...நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு விக் வாங்கி கொடுங்கம்மா
                   வெளியில தலை காட்ட முடியில 


பெண் :  உங்க தரப்புல கம்பிளைன்ட் பண்றேன் சார் .. கால் வரும் சார்

ஆண்    :   கால் வந்து என்ன பண்ண... முடி வரணுமே  ...நாலாயிரம் ரூபா
                   திருப்பி தருவதா சொன்னா கூட எனக்கு முடி வளந்திரும்னு  
                   தோணுது ..அந்த  ஆறுதல்லேயே ...
 

பெண் :   யூஸ் பண்ணுங்க சார் ...உங்களுக்கு கண்டிப்பா வளரும் சார்

ஆண்  :   திரும்பவும் யூஸ் பண்ணவா ....அம்புட்டும் போச்சுன்னு
                 சொல்லிகிட்டு இருக்கேன் ...திரும்ப யூஸ் பண்ண சொல்றீங்களே









Thursday, 19 March 2015

இசை ராட்சஷன் - 8






                                                     இசை ராட்சஷன் -  8
                                                 
                                                   (  The  Musical Legend  )

                     
                                      தமிழ்த் திரையிசைக்குள்  இளையராஜா பிரவேசித்தபோது   நாட்டுப்புற இசை மட்டுமே  கொடுத்து வந்ததாக பலர் நினைத்தனர் .   ஆனால்  தனது முதல் திரைப்படத்திலிருந்தே கர்னாடக இசை , மேலை நாட்டு செவ்வியல் இசை , நாட்டுப்புற  இசை மூன்றையும் கலந்துதான்  கொடுத்து வந்திருக்கிறார் . ' கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக ' என்ற தெய்வப் புலவரின் வாக்கினுக்கேற்ப தான் பயின்ற கர்னாடக இசை , மேலை நாட்டு இசையை அதன் வர்ணம் மாறாதபடி கலந்து கலப்பிசையாக கொடுத்த பாடல்கள் ஏராளம் . மேலோட்டமாக பார்த்தால் இளையராஜாவின் பாடல்கள் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும் .  கூர்ந்து நோக்கும்போது கற்றுத் தேர்ந்த வித்தைகளைக்  கலவையாக்கி  சுவை குழைத்து இனிமை கூட்டி புதுமை சேர்த்துக் கொடுத்திருப்பார்.  மண் வாசமும் மக்கள் நேசமும் கொண்ட பல பாடல்கள் அவர் படைப்பாற்றலின் சிகரங்கள் ; நெஞ்சில் பதிந்த பசுமரத்தாணிகள் ; வார்த்தைகளில் வடிக்க இயலா பிரமிப்புகள்.

                                                     


                                  1968 இல் பிழைப்பிற்காக  பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு சென்னையை அடைந்து , மாஸ்டர் தனராஜிடம் மேலைநாட்டு செவ்வியல் இசை பயின்று , டி .வி . கோபாலகிருஷ்ணனிடம்  கர்னாடக இசை கற்று டிரினிட்டி இசைக் கல்லூரி நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று,  கிடார் கருவி பயின்றதில் தங்கப்பதக்கம் பெற்று ,  ஜி . கே. வெங்கடேஷ்  என்ற இசையமைப்பாளரிடம் துணை  இசையமைப்பாளராய் பணியாற்றி அதன் பிறகே  ' அன்னக்கிளி '  படத்திற்கு இசையமைப்பாளராய் பஞ்சு அருணாசலம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார்.  முதல் படமே மிகப் பெரிய வெற்றி . அந்த வெற்றியை அடைய அவர் பல மேடு பள்ளங்களை தாண்டி வரவேண்டியிருந்தது.  ஒரே படத்திலேயே தனது மொத்த ஆற்றலையும் அவர் வடித்துவிடவில்லை.  அவரது இசை வற்றாத ஊற்று , நிற்காத நதி ,  இறைக்காத கேணி , சறுக்காத ஏணி ,  மாறாத அமுதசுரபி ,  தீராத அட்சய பாத்திரம் . இளையராஜாவின் இசை நம் மக்களின் கலாச்சாரத்தோடு கலந்து நிற்கின்ற பண்பாட்டு அடையாளம் . அதனால்தான் ஆயிரம் படங்களையும் தாண்டி போய்க் கொண்டேயிருக்கிறார்.

                     
                            இத்தனை சிறப்புகளை பெற்ற மனிதராக விஸ்வரூபம் எடுத்து இசை ராஜ்ஜியத்தில்  பல இசை விநோதங்களை  படைக்கப் போகிறார் என்பது தெரியாமலே நான் அவர் இசை கேட்டு ரசித்து வளர்ந்து வந்திருக்கிறேன்.

                       1978 இல் எனக்கு கிடைக்கக் கூடிய ' பாக்கெட் மணி ' சேமிக்கும் பழக்கம் என்னிடம் இருந்தது . எனது அண்ணனிடமிருந்து கற்றுக் கொண்டேன் எனது மூத்த அண்ணன் என்னையும் இளைய அண்ணனையும் அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க கிளம்பினார். சினிமா முடிந்து மாலை வேளையில் ஹோட்டல் , பிறகு நடையோரக் கடைகளில் ஷாப்பிங் என்று அது ஆனந்தமான நேரம்.  ஒரு முறை நானும் எனது சேமிப்பை எடுத்துக் கொண்டு அண்ணன்களை  அது போலவே அழைத்துக்கொண்டு சென்றேன் . அண்ணன் காட்டிய வழியில் சினிமா, ஹோட்டல் , பிளாட்பார ஷாப்பிங் இத்யாதி என்று அதைப்  போலவே செய்தேன் . அண்ணன் என்ன வாங்கினாரோ அதைப் போலவே சின்னச்  சின்ன பொருட்கள் வாங்கினேன் . அவர் என்ன செய்தாரோ அதையே நானும் செய்தேன் . என் பிள்ளைகளும் இப்போது அப்படித்தான் இருக்கிறார்கள். மூத்தவள் என்ன செய்தாலும் இளையவள் பின்பற்றுவாள். அவளுக்குப் பிடித்தால் இவளுக்கும் பிடிக்கும் . இது என்ன பரம்பரை குணமா !?  பிள்ளைகளின் செய்கைகள் எனக்கு பின்னோக்கிப் போக தூண்டுகிறது .

                         
                                    அப்படி நான்  அண்ணன்களை  அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள  குளிரூட்டப்பட்ட ஒரு திரையரங்கிற்குச் சென்றேன் . ஒரு சில ஏ.சி தியேட்டர்களே அப்போது இருந்தன .  அந்தக் காலகட்டத்தில் ஏ .சி  அரங்கத்தில் படம் பார்ப்பதை பெரிய கௌரவமாக நினைப்போம் .  நான் ஏ.சி தியேட்டரில் படம் பார்த்தேன் என்பதை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொள்வேன் . அதை ஆச்சரியமாக கேட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்.   ஏ.சி தியேட்டரில் அந்தப் படம் பார்த்து மிரண்டு போனேன் . படமும் இசையும் என்னை வெகுவாக மிரட்டியது.  அந்தப் படம்,  '  சிகப்பு ரோஜாக்கள் ' .


                         பாரதிராஜாவின் மூன்றாவது படம். ' கிராமத்துப் பின்னணியை விட்டால் பாரதிராஜாவிற்கு ஒன்றும் தெரியாது ' என விமர்சனம் வந்தவுடன் , 'எனக்கு நகரச் சூழல் வைத்தும் படம் எடுக்கத் தெரியும் ' என சவாலாகவே எடுக்கப்பட்ட திரைப்படம் . அதை முதல் படமாக பாரதிராஜா எடுக்க நினைத்தார். ராஜ்கண்ணு அவர்கள் வேறு கதை எதிர்பார்த்ததால் பதினாறு  வயதினிலே நமக்கு கிடைத்தது .  இல்லாவிட்டால் காலத்தின் கோலம்  மாறியிருக்கும் .  சிகப்பு ரோஜாக்கள் ஏறக் குறைய ஆங்கில சினிமாவிற்கு நிகராக எடுக்கப்பட்ட திரைப்படம் . வெற்றிப்படம். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பங்கு 50 சதவீதம் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது . அப்பப்பா ! என்ன ஒரு இசை ஆக்ரமிப்பு !

                     
                            அந்த  நேரத்தில் உள்ளடக்கமான குளிரூட்டப்பட்ட அரங்கில் படம் பார்த்து மிரண்ட அனுபவம் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கிறது. இளையராஜாவின் பின்னணி இசையை நீக்கிவிட்டு படம் பார்த்தால் எந்த மிரட்டுலும் தெரியாது.  படத்திற்கு உயிரே இளையராஜாவின் இசைதான்!  இந்தப் படத்திலிருந்துதான் ராஜாவின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரு குறிப்பிட்ட  இசைத்துணுக்கை  பின்னணியாக படம் முழுவதும் ஆங்காங்கே வருமாறு இசைத்திருப்பார். கமலஹாசன் சாதாரணப் பார்வை கொண்டு பார்க்கையில் மென்மையாகவும் விஷமப் புன்னகையுடன்
பார்க்கையில் வித்தியாசமான மிரட்டல் இசையும் கொடுத்திருப்பார். ஒரு திகில் படம் பார்க்கும் அனுபவம் இசையினால் ஏற்பட்டது.  படத்தின் பிற்பாதியில் மிரட்டும் இசையின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்லும் .
                                                 

                              கிளைமாக்ஸ் காட்சிகளில் படபடப்பும் பரபரப்பும் என்னைத் தொற்றிக் கொண்டது. தோட்டத்தின் மண்ணுக்குள்ளிருந்து கை ஒன்று நீள்வதைப் பார்க்கும் நாயகி அலறிக்கொண்டே ஓடுவதும்  ரத்த வெறி கொண்ட பூனை துரத்துவதும்  நாயகனும் அவளை கொலை செய்ய விரட்டுவதுமான பரபரப்பான காட்சிகளில் பூனையின் அலறல் சப்தம் கலந்து நூறு  வயலின்கள்  வாசிக்கப்படும்  பின்னணி இசை கொடுத்து காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருப்பார் இளையராஜா. மனதை விட்டு நீங்காத அனுபவம் . திகில் படங்கள் பார்த்தால் கால்களைத் தூக்கி மேலே வைத்துக் கொள்வேன் . காலை ஏதோ ஒன்று பிடித்து இழுத்து விடுமென்று நான்தான் அப்படி பயப்படுகிறேன் என்று பார்த்தால் பக்கத்தில் அண்ணன்களும் காலை தூக்கி வைத்தபடி படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

                                அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்  மட்டுமே !  ' இந்த மின்மினிக்கிக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது ...'  என்றொரு அழகான உற்சாகமான டூயட் பாடல். வாசுதேவனும் ஜானகியும் சேர்ந்து பாடி கலக்கியிருப்பார்கள். இனிமையான மெலடி . கேட்பவருக்கு உற்சாகம் உடனே தொற்றிக் கொள்ளும்  .இசையமைப்பு. வயலினால் இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். கண்ணதாசனின் வார்த்தைச் சிக்கல் இல்லா வரிகள் . சங்கராபரணம் என்ற ராகத்தை அடிப்படியாகக் கொண்டு ஏக தாளத்தில்  வடிவமைக்கப்பட்டப் பாடல் . பாட்டின் இசைக்கேற்றவாறு காட்சியமைப்பிலும் பாரதிராஜா பின்னி எடுத்திருப்பார். இளமை கொலுவிருக்கும் கமலஹாசன், ஸ்ரீதேவி இருவரின் காதல் ஆட்டமும் ஓட்டமும் பேசுவதும் சிரிப்பதும் சுற்றுவதும் அழகிய காட்சியாக விரிக்கப்பட்டிருக்கும். பாரதிராஜாவும் இளையராஜாவும் இணைந்தால் மக்களையெல்லாம் இன்பக்கடலில் மூழ்க வைத்து எழ வைப்பதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் . அப்போது இருவரும் இணைந்தால் வெற்றி ஒன்றைத் தவிர வேறில்லை .


                               '  தோட்டத்திலே பல பூக்கள் உண்டு ..நீதானே சிகப்பு ரோஜா ..' என்ற ஆண் குரலுக்கு , ' இன்றும் என்றும் என்னை உன்னுடனே ...நான் தந்தேன் என் ஆசை ராஜா ...' என்று பெண் குரல் பதில் பாட ,  ' மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன் ... ன ...ன...ன ...ன ..ன  இனி தடை என்ன  அருகினில் இருக்கிறேன் ..'  என்று கேள்வி பதிலாக மாற்றி மாற்றி இருவரும் பாட கடைசியில் , ' னா ன ன்ன... னா ன ன்ன... னா ன ன்ன... னா ன ன்ன ..னான ..னான..னா ' என்ற ஹம்மிங்கோடு சரணம் முடியும் . ஹம்மிங் வரும் இடத்தில் வார்த்தைகள் போட்டு நிரப்பி இருக்கலாம் . ஆனால் ஹம்மிங் வைத்து முடிப்பது புதுமையாக இருந்தது. சரணம் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் , விதி எல்லாம் வேறுபடுத்தி இசையமைப்பது  இளையராஜாவின் புது முயற்சி. இரண்டாவது இடையிசையில் ஜானகியின் ஹம்மிங் நம்மை வேறுலகம் கூட்டிச் செல்லும் பாட்டின் முடிவில் ஜானகி கலகலவென சிரித்து முடிப்பது நமக்கும் புன்னகை பூக்க வைக்கும் .

                                           

                                பாடகர்கள் பாடுவதோடு  பாட்டில் நடிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் . இல்லாவிடில் பாடலுக்குத் தேவையான உணர்ச்சிகள்  காணாமல் போய்விடும் . டி.எம்.எஸ் , பாலு ,  ஜானகி ,  சுசீலா ,  எல்.ஆர்.ஈஸ்வரி  போன்ற பாடகர்கள் பாடும் பாட்டினில் அத்துணை உணர்ச்சிகளையும்  வெளிப்படுத்துவதில் முக்கியமானவர்கள்.  ' அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..' என்ற பாடலுக்கு டி.எம்.எஸ் அவர்கள் ஒலிப்பதிவுக் கூடத்திற்குள்ளேயே ஓடி ஓடி மூச்சு வாங்கி தத்ரூபமாக பாடினார்  என்பது ஒரு உதாரணம் .  போலவே ஜானகி அவர்கள் பாடலில் நடிப்பது மட்டுமல்லாது ஐந்து வயது குழந்தை போலவும் என்பது வயது பாட்டி போலவும்   குரல் மாற்றிப் பாடுவதில் வல்லவர்.  பாடிக்கொண்டே நடிப்பது நடித்துக் கொண்டே பாடுவது இரண்டுமே கடினமானது. குரல் மாற்றிப் பாடுவது அதை விட கடினமானது. ஆனால்  பாட்டில் சிரிப்பதும்  அழுவதும் ஜானகி அவர்களுக்கு  சுலபமாக வரும்.


                              ' நினைவோ ஒரு பறவை ' இன்னொரு சுகமான கீதம் .   வாலியின் வைர வரிகளில் கமலஹாசன் மற்றும் ஜானகி சேர்ந்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார்கள். திசுர  நடையில்  மென்மையாய் ஆரம்பித்து சுகமாய் பயணம் செய்யும் பாடல். காட்சியமைப்பையும்  பாரதிராஜா அழகிய கவிதை போலவே வடித்திருப்பார்.  பாடியவர்களா அல்லது இசைக்கருவிகளா எது நமை தாலாட்டுகிறது என்பதைச் சொல்ல முடியாத அளவிற்கு இசையின் வலிமை இருக்கும் .  '  ஹும் ...ஹும் ...' என்று ஜானகி கிடார் கார்டுகளுடன் காதல் வழிந்தோடும்  ஹம்மிங் கொடுத்து , ' நினைவோ ஒரு பறவை  ' என்று  ஆரம்பிக்க , கமலஹாசன்  '  பா ...ப..ப .பாப ...பா.. ' என்று   உச்சஸ்தாயில் ஹம்மிங்  கொடுத்துக் கொண்டே வர , ஜானகி பல்லவி பாடி முடிக்க , ஹம்மிங் முடித்து கமல்  பல்லவியை மீண்டும் பாட ஆரம்பமே அமர்க்களமான இசையோடு அமையும் .


                               இந்தப் பாடலுக்கு இடையிசை அற்புதமானது . ஒரு டிரம்பெட்  கருவி ஒலிக்கப்படும்போது  கோவில் மணியோசை இருமுறை சேருவது  வார்த்தைகளில் வடிக்க இயலா கலவை. அருமையான கற்பனை . இசைக்கருவிகளின் நாதம் ஒன்றின் மேல் ஒன்று மேவி வரும்  லாவகம் இளையராஜாவின் சிறப்பு . இசைக்கருவிகளின்   INTERPRETATION  , SUPERIMPOSITION  என்பது அந்த வயதுக்கு எனக்கு புரிந்திராவிட்டாலும் இளையராஜாவின் இசை மாயத்தை கேட்டுணரும் ஞானம் இருந்தது. அப்போதே இசையில் அவர் காட்டிய வித்தை  இப்போது இன்னும் தெளிவாக தெரிகிறது .


 ஆண்          ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்

பெண்          அதுவல்லவோ பருகாத தேன் அதை  இன்னும் நீ பருகாததேன்

ஆண்         அதற்காகத்தான் அலைபாய்கிறேன்

பெண்         வந்தேன் தரவந்தேன்

                           



பெண்        பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ

ஆண்       அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்

பெண்       மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

ஆண்       நீ தான் இனி நான் தான்


                             ஆண்  குரலும் பெண் குரலும் கேள்வி பதிலாய்  பாடிக்கொண்டே வர இறுதியில் பெண் பாடி ஆண் ஹம்மிங் கொடுப்பதும் ஆண் பாடி பெண் ஹம்மிங் கொடுத்து முடிப்பதும் கேட்பதற்கு அலாதி ஆனந்தமாக இருக்கும் . பல்லவி எப்படி ஆரம்பித்ததோ அப்படியே இறுதியிலும் முடியும்.  கமலஹாசனுக்கு இது அவர் பெயர் சொல்லும் பாடல் . இந்தப் பாடல் ஆரம்பித்து  இறுதிவரை  ஏதோ படகொன்றில் மெதுவாக ஆடி காற்றில் நகரும் அனுபவமாய் வயலின் இழைத்து இசைத்துப் பாடலை நகர்த்தும் விதத்தில் இளையராஜா உயர்ந்து நிற்பார். அபார கற்பனைத் திறன்!


                             அதே வருடத்தில்  ' ப்ரியா ' என்றொரு திரைப்படம் வெளிவந்தது. இளையராஜாவின் இசையும் பாடல்களும் முதன்முறையாக ஸ்டீரியோபோனிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. அதுவரை  'மோனோ ரெக்கார்டிங்' என்ற சாதாரண பதிவு முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல்கள் எல்லாம் மயக்கும் பாடல்களாக கொடுத்து வந்த இளையராஜா  புதிய தொழில்நுட்பத்திலும்  மனதுருக்கும் பாடல்களைக் கொடுத்தார்.

                                           

                                இசைப் பதிவில் புது உலகம் பிறந்தது. பாடல்களில் பதிவு செய்யப்பட்ட   இசைக் கருவிகளின்  ஒலி அழகாக பிரித்துக் கொடுக்கப்பட்டது.
பாடல்களின் ஓசை நயம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டது. சின்னச் சின்ன இசைக் கருவிகளின் சப்தம் கூட அழகாக கேட்கும் வண்ணம் கொடுக்கப்பட்டது.  இப்போது அதை விட பெரிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் அந்தக் காலத்தில்  முதன்முதலாக ஸ்டீரியோ  ரெகார்டிங்  கேட்டபோது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் நினைவிருக்கிறது. பாடங்கள் படித்தது தேர்வு எழுதியது எல்லாம் நினைவில் இல்லை.


                                      ' ப்ரியா ' திரைப்படம் பார்த்தது நன்றாக நினைவில் உள்ளது.
ஒரு மதிய நேரத்தில், சுட்டெரிக்கும் வெயிலில், வியர்வைக் கசகசப்பில் கூட்டத்தில் முட்டி மோதி, டிக்கெட் கொடுக்கப்படும் கவுண்டர் அருகே கஷ்டப்பட்டு சென்று வாங்கி, நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, சட்டையெல்லாம் கசங்கிப் போய் கிழிந்து போய், தியேட்டருக்குள்ளே நுழைந்து ரசிகர்களின் விசில் சத்தத்தோடு படத்தைப் பார்த்தேன்.    அப்படி படம் பார்க்கும் சுகமே அலாதி சுகம் . எதையோ சாதித்த உணர்வு . சுகமான நினைவு.


                                       படத்தில் முதல் பாடல் ' டார்லிங் டார்லிங் டார்லிங்  ' . வெள்ளைக்குயில் என்று எஸ்.பி.பி அவர்கள் அன்புடன் அழைக்கும் சுசீலாவின் இனிய குரலில் ஆரம்பிக்கும். முதல் பாட்டுக்கே  விசில் சத்தம் பறந்தது.  ரஜினி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஸ்ரீதேவிக்கும் கிடைத்தது . கதாநாயகிகளை  திரையில் முதலில் காட்டும்போது கைதட்டல் கேட்பதை மதுரையில்தான் பார்த்திருக்கிறேன் . பாடலின் பல்லவி ஆரம்பிக்கும் முன் ட்ரம்பெட் ஒலியுடன் அட்டகாசமாக வயலின்,  ட்ரிப்பில் பாங்கோஸ் சேர்ந்து முதல் BGM ஆரம்பிக்கும் .  BoneyM  குழுவினரின் ஆல்பத்தில் வந்த பாடலின் முதல் வரியை அகத் தூண்டலாக எடுத்துக் கொண்டு  இந்தப் பாடலை வடிவமைத்தார் இளையராஜா . ஏக தாளத்தில் அமைத்த சுவாரசியமான பாடல் . படத்தில் எல்லா பாடல்களையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருக்கிறார் .  தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் . அவருக்கு தன் நன்றிப் பூக்களை காணிக்கையாக அழகிய இசை மாலையாக பின்னிக் கொடுத்திருப்பார் இளையராஜா.  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.

                                           

.                                    
                                       வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படத்திற்குத் தனித்த சிறப்பான இசையை இதற்கு முன்னர்  எம்.எஸ்.வி அவர்களிடம் கண்டிருக்கிறேன் .  இளையராஜாவும் அவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்திருப்பார்.    வெளிநாடுகளை சினிமாவில் காட்டும்போதே பின்னணி இசைக்கென்று புதிய பரிமாணம் கிடைத்துவிடும் . இதுவரை கேட்டிராத இசைக்கருவிகளின் நாதம் ஒலிக்கும். வெளிநாட்டு இசை இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை இசையமைப்பாளர்கள் உருவாக்கினார்கள்.  ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாரம்பரிய இசை ஒன்று உண்டு. அதைத்தான் வாசித்தளித்தார்களா  இல்லை கற்பனையா என்ற  ஆராய்ச்சி செய்ததில்லை . கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் . பிரியா படத்தின் பின்னணி இசையும் அப்படித்தான் இருந்தது. இப்போதுள்ள படங்களில் வெளிநாடுகளை காட்டும்போது பிரத்தியேக இசையெல்லாம் கொடுப்பதில்லை.


                                          ' ஹேய் ...பாடல் ஒன்று ...ராகம் ஒன்று '  என்ற பாடல் வித்தியாசமான தாள நடையில் ஜேசுதாஸ் ஜானகி அவர்களின் குரல்களில் காப்பி ராகத்தில் திசுர நடையில் ஒலிக்கும் என்றும் அழியா இனிய கானம் . காலத்தால் அழிக்க முடியா காதல் கீதம். கிடார் கார்ட்ஸ் ஆரம்பித்து ஜானகி ஹம்மிங் கொடுக்க ஜேசுதாஸ் ஹம்மிங் தொடர ஆரம்பமே அமர்க்களமாக இரு தேவதைகளின் தேவ கானம் போலவே இருக்கும். பாடலின் இடையிசையில் ஷெனாய்  பயன்படுத்தப்படிருக்கும். ஷெனாய் ஒலிக்கப்படும்போது  தாள நடையும் மாறி வரும் .  பொதுவாக இந்த ஷெனாய் சோக கீதங்களுக்கே இசைக்கப்படும் இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டு  வந்தது. சந்தோசமான கீதங்களுக்கும் அதை இசைக்கச் செய்தவர் இளையராஜா .  இந்தப் பாடல் மட்டுமல்ல . அதன் பிறகு வந்த ஏராளமான சந்தோசப் பாடல்களில் ஷெனாய் பயன்படுத்தியிருப்பார் .

                                                     

                                           சிறு வயதில் பாடல் கேட்டபோது அதைப் பற்றி எதுவும் அறிந்ததில்லை. நாட்டில் முக்கியமான தலைவர்கள் மறைந்து போனால் வானொலியில் அன்றைய நாள்  முழுவதும் இசைக்கப்பட்டுக் கொண்டேயிருந்த ஒரு இசைக்கருவிதான் ஷெனாய் என்பது அப்போது தெரியாது . ஆனால் கேட்கும்போதே  மனசுக்குள் ஆழப் புதைந்த துக்கமெல்லாம் நினைவலைகளில் வந்து மோதும் உணர்வினைத் தரும். இந்தப் பாடலில் அதன் நாதம் கேட்டபோது  எங்கோ கேட்ட நினைவு எழும்பியது. புதுமையாகவும் தெரிந்தது. சோகத்திற்கு இசைப்பதை சுகத்திற்கும் இசைக்கின்ற இளையராஜாவின் கற்பனையை நான் வெகுவாக ரசித்திருக்கிறேன்.  வீணையின் நாதமும் இந்தப் பாடலில் அதிக சுகம் தரும் .


                                               ' அக்கரைச் சீமை அழகினிலே  '  என்ற பாடல் ஜேசுதாஸ் தனித்துப் பாடியது.  ஏக தாளத்தில் அமைந்த உற்சாகமான பாடல்.  இந்தப் பாடலும் வெளிநாட்டு இசையில் வந்த ஒரு பாடலை அகத்தூண்டலாக எடுத்துக் கொண்டு இளையராஜா தனது பாணியில் அழகாக கொடுத்திருப்பார்.
( "Akarai Cheemai" song was loosely inspired by "Kites by Simon Dupree and the Big Sound. )
சிங்கப்பூர் மக்களின் பண்பாடு கலாச்சாரம் போற்றும் பாடல் . வயலினின் ஆக்ரமிப்பை பாடல் முழுவதும் கேட்கலாம் . ஆரம்ப இசையே அமர்க்களமாக அமையும் . கிடாரில் ஆரம்பித்து வயலின் தொடர்ந்து புல்லாகுழல் இழைத்து மீண்டும் வயலின் இசைத்து நிறுத்த ஜேசுதாஸ் பல்லவி ஆரம்பிப்பது கேட்க அலாதி ஆனந்தம்.  மூன்று சரணம் , மூன்று வெவ்வேறு இடையிசை என்று பாடல் அற்புதமாக இருக்கும்.  இரண்டாம் இடையிசையில் வரும் குரலிசை மனதை கொள்ளை கொள்ளும் . பல்லவி, சரணம்   ஒலிக்கப்படும்போது  கூடவே இசைக்கப்படும் வயலின் நம்மை எங்கெங்கோ இட்டுச் செல்லும் .

                                               

                             ' என்னுயிர் நீதானே  ' என்ற பாடல் ஜேசுதாஸ் மற்றும் ஜென்சி குரல்களில் காப்பி ராகத்தில் உருவாக்கப்பட்ட பாடல். இந்தப் படத்திற்கு உருவான முதல் பாடல் இதுதான் என சொல்லப்படுகிறது.  ஆரம்பமே வேற்று மொழியில் இருக்கும்.   ' ஹத்தியக்கு ஷூக்காவா ..ஸ்லாலுவத்கு சின்தாவா ...'
என்று பாடல் ஆரம்பிக்கும். என்னுயிர் நீதானே... உன்னுயிர் நான்தானே  என்பதே அதன் அர்த்தம்  எனப் புரிந்தது. இந்தப் பாடலும் வித்தியாசமான பாடல் . சந்தோசமான காதல் கீதம். ஜென்சி அவர்களின் குரலும் வித்தியாசமானதே.  கேரளத்திலிருந்து வந்த ஒரு மலையாளக் குயில்.
 .இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களில் வலம் வந்தார்.  மூக்கிலிருந்து பாடுவதாக குற்றச்சாட்டு உண்டு . ஆனாலும்  அதுவும் அழகாகவே இருக்கும் .


                                     ' ஸ்ரீ ராமனின்  ஸ்ரீ தேவியே  ' என்ற பாடல் க்ளைமாக்ஸ்   காட்சியில் வரும் கடைசி பாடல் .  ஜேசுதாஸ் குரலில் அமர்க்களமான பாடல் .
முழுக்க முழுக்க வயலின் கொண்டு இழைக்கப்படும் பாடல். இளையராஜா ஒரு இசை விளையாட்டையே நடத்தியிருப்பார். பரபரப்பான காட்சி . கடத்தி அடைக்கப்பட்ட நாயகி எந்த கட்டடத்தில் இருக்கிறாள் என்பதை குறிப்பால் உணர்த்தச் சொல்லி நாயகன் பாடல் பாடுவதாக கொடுக்கப்பட்ட சூழலுக்கு இளையராஜாவின் இசை கற்பனைக்குத் தகுந்தாற்போல காட்சி அமைத்திட இயக்குனர் சிரமப்பட்டிருப்பார்.  பெரும்பான்மையான படங்களில் இளையராஜாவின்  இசையமைப்புக்குப் பொருத்தமான காட்சிகள் சரியாக எடுக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.  இந்தப் பாடலில் கோவில் மணியோசையோடு ஆரம்பித்து வயலினால் வேகம் கூட்டி கிடாரில் மென்மையாக்கி ஜேசுதாஸ் பல்லவி ஆரம்பிப்பதே அற்புதமாக அமைந்திருக்கும். இடையிசையில் மீண்டும் வேகம் கூட்டுவதும் ட்ரம்பட் கொண்டு குறைப்பதும் இறுதியில் ஏதோ நடக்கப் போவதைப் போல வயலின் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உச்சஸ்தாயில் முடிப்பதும் இசையிலேயே கதையை சொல்லிவிடும் இளையராஜாவின் இசை யுக்தி அபாரம்.

                                         

                                     பிரியா  படத்தில் ஐந்து பாடல்களும் ஐந்து விதம் . ஐந்தும் வித்தியாசமானவை . கேட்க கேட்கத் திகட்டாத தேனமுது. இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான சலீல் சௌத்ரி இளையராஜாவை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்தப் படத்திற்கான பாடல் கம்போசிங் நடந்த விதம் பற்றியும் சிகப்பு ரோஜாக்கள் பாடல்கள் அமைத்த விதம் பற்றியும் இளையராஜா சொல்வதை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம் .


             http://cinema.maalaimalar.com/2013/03/30233025/Priya-in-the-film-Music-Music.html


                                ஷெனாய் வாத்தியக்கருவியை இளையராஜா  பிரியா படத்தின் பாடலான ' ஹேய் ...பாடல் ஒன்று ...ராகம் ஒன்று' என்ற பாடலில் பயன்படுத்திய விதத்தை வியந்து சொல்லியிருந்தேன் . பாடலின் விளக்கம் தடைப்படும் என்று   அங்கே நீட்டிக்காமல்  மீண்டும் அதைப் பற்றி  சொல்ல இங்கு ஒரு  'லிங் 'குடன்  வருகிறேன். தமிழ்நாட்டின் சிறந்த தமிழ்ப் பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்களின் குமாரன் திரு . சுகா என்பவர் கீழ்க்கண்ட பதிவு ஒன்றைத் தந்திருக்கிறார்.
                                     

     

                  
         உலகின் மிகப் பிரபல ஷெனாய் வித்வான் மேன்மைமிகு உஸ்தாத்  பிஸ்மில்லா கான் அவர்களின் சீடர் பண்டிட் பாலேஷ்  என்பவர்  இளையராஜாவிடம்  ஷெனாய்  கலைஞராக பல ஆண்டுகள் பணி  புரிந்து வருகிறார்.   இளையராஜாவிற்கு முந்தைய அல்லது பிந்தைய எத்தனையோ இந்திய இசையமைப்பாளர்களிடம் அவர்  வேலை செய்திருந்தாலும் இளையராஜாவிடம் பணியாற்றியபோது  ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களையும் புதுமையான அணுகுமுறைகளையும் இளையராஜாவின் இசைத் திறமையையும் மற்ற இசையமைப்பாளரிடமிருந்து எந்த அளவு இசை அறிவிலும் நுணுக்கக்கங்களிலும் வேறுபட்டிருக்கிறார் என்பதையும்  நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதை சுகா அழகாக பதிவிட்டிருக்கிறார்.  தவறாமல் வாசியுங்கள் . 

                     http://venuvanam.com/?m=201104
                        
                           


...............................தொடர்வேன் ................................................




Monday, 16 February 2015

இசை ராட்சஷன் - 7


                                                   இசை ராட்சஷன் - 7

                                   ( The Musical Legend  ) 

                            
                               
                         கர்னாடக இசையின் ஆதி நாட்டுப்புற இசை என்ற ஆய்வு இசை ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு நிரூபணமும் செய்யப்பட்டிருக்கிறது.  மக்களால் மண் சார்ந்த இசையாக மக்களிசை என்று உருவான இசையே நாட்டுப்புற இசை . நாட்டுப்புற இசையின் வேர்களிலிருந்து பல ராகங்கள் உருவாகி  கர்னாடக இசையாக உருமாறிய வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு சொல்கிறது.  நாட்டுப்புற இசை பாமரரும்  புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிமையானது . கர்னாடக இசை குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டும் புரிந்து கொள்வதும் கற்றுக் கொள்வதும் ஆளுமை செய்வதும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

                   தமிழ்த் திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்களும் மெல்லிசைப் பாடல்களும் கொடுக்கப்பட்ட பின்னரே பாமர ஜனங்களும் அதை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். இளையராஜாவின் வருகைக்கு முன்னர் பல இசை முன்னோர்களால் படைக்கப்பட்ட அற்புத பாடல்கள் போலவே இளையராஜாவும் நாட்டுப்புறப் பாடல்களை அனாயசமாக கையாண்டார் .  தனது இசை முன்னோர்கள் கொடுத்த படைப்புகளையும் தாண்டி செவ்வியல் இசை கலந்த நாட்டுப்புற பாடல்களை   கொடுத்தவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.

                                                 

                      ' ஞானதேசிகன் '  என்ற இயற்பெயர் கொண்டு பிறந்து, கிறித்தவராக ' ' டேனியல் ' என்ற  பெயரும்   கொண்டு , வீட்டில் ' ராசய்யா ' என்று அன்பொழுக அழைக்கப்பட்டு,  திரையுலகத்திற்காக  'இளையராஜா ' என்று உருவெடுத்தவர்  நமது இளையராஜா .  தமிழகத்தின் கடைக்கோடியில் பண்ணைபுரத்தில் பிறந்து வளர்ந்து, மக்களிசை கேட்டு, இசையின்பால் ஈர்க்கப்பட்டு,  பெண் குரலில் பாடிக் கொண்டு, நாடகங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று ஊர் ஊராக தன் சகோதரர்களுடன் சுற்றி இசைக்கச்சேரி நடத்தி, சென்னைக்குக் குடி புகுந்து,  இசை அறிவை வளர்த்துக் கொண்டு , சினிமா உலகத்தில் பிரவேசித்தவருக்கு என்ன கொடுத்தால் இந்த ஜனங்களுக்குப் பிடிக்கும் என்பது தெரிந்து கொடுத்த இசைஞானம் அளப்பற்கரியது.  நாடக இசையிலிருந்துதான் இந்த சினிமா இசை வளர்ந்திருக்க முடியும் என்பதால் இளையராஜாவிற்கு அந்த நாடக  இசை  அனுபவம்  ஏற்கனவே இருந்தது ; அதனால் அவரால் சிறப்பானதொரு இசை வழங்க முடிந்தது .


                                   1978 இல் இளையராஜாவின் இசைப்பயணத்தில் நானும் பயணித்துக்கொண்டிருந்த காலம் . குறுகிய  ஹாஸ்டல்  வாழ்க்கை முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டேன்.  டேப்ரெக்கார்டர் வசதி படைத்தோர் வீட்டில் மட்டும் இருக்கும். எனக்கு வாய்த்தது  ரேடியோ மட்டுமே! சிலோன் வானொலி ஒலிபரப்பாத பாட்டுக்களா! எத்தனையோ இசை அமுதங்களை  அள்ளி வழங்கிய  அட்சயபாத்திரமல்லவா !  பாட்டுக்கள்  கேட்டுக்கொண்டே தூங்கிப் போன காலமும் பாட்டுக்கள்  கேட்பதற்காகவே தூங்காத காலமும் நெஞ்சில் நிழலாடுகின்றது.  அரை மணிக்கொரு முறை வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு காலத்துப் பாடல்களை ஒலிபரப்புவதில்  இலங்கை வானொலியை முந்தவே முடியாது.

                   
                               அந்த சமயத்தில் ' இளமை ஊஞ்சலாடுகிறது '  என்ற ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் வெளிவந்தது.  ரஜினி , கமல் என்று இரு மெகா ஸ்டார்கள் இணைந்து நடித்த  படம் . அவர்களின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக உச்சிக்கு சென்று கொண்டிருந்த காலமது. எம்.ஜி. ஆர் , சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார்களாக பேசப்பட்டு வந்தார்கள். திரைப்படம் பெரிய ஹிட். பாடல்கள் அதைவிட பெரிய ஹிட்.


                                 இலங்கை வானொலியில்  'இசைச்செல்வம்'  என்ற நிகழ்ச்சி  ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு மணி நேரம் நடத்தப்படும். பல புதிய பாடல்கள் ஒலிபரப்பப்படும் . மக்களை எது அதிகமாய் கவருகின்றதோ அந்தப் பாடலுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து  அப்பாடல் எந்தத்  தரத்தில் இடம் பிடிக்கிறது  என்பதை தேன்குரல் அறிவிப்பாளர்  கே.எஸ் . ராஜா  அறிவிப்பார்.  கடைசியாக  இருக்கும்  பாடல் அந்த வாரம் வெளியேற்றப்படும்.  புதிய பாடல் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் .  ' என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு  ' என்ற பாடல் அப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.  ஒரே வாரத்தில் மூன்றாம் இடம் பிடித்தது. அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஏறக்குறைய  என் நினைவில் உள்ளவரை 30 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக முதலிடத்தைப்  பிடித்தது .


                                 என்ன ஒரு இளமைத் துள்ளலான பாடல்! கிடார் , டிரம்பெட் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடல் .  கிடாரை  இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா என என்னை வியக்க வைத்தது . தான் காதலித்தப் பெண்ணொருத்தித் தன் நண்பனுடன் சேர்ந்து வந்து தானாடும் நடன நிகழ்ச்சியை  காண அமர்ந்திருப்பதை பார்க்கும் நாயகன் உற்சாக உணர்வு சட்டென வடிந்துபோய் ஏமாற்றம், பிரிவு, நம்பிக்கைத் துரோகம் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொள்ள முடியாமல் வெடித்து , 'வார்த்தைத்  தவறி விட்டாய் கண்ணம்மா ...மார்பு துடிக்குதடி '  என்று வேதனைக் குரலோடு பாடல் பாடி ஆடுவதாக காட்சி. கமலஹாசனின் ஆவேசமான ஆட்டம், எஸ்.பி.பி யின் இளமை பீறிடும் உணர்ச்சிப் பூர்வமான குரல், 'அதுக்கும் மேல'  இளையராஜாவின் அட்டகாசமான இசையமைப்பு என்று எல்லாம் பொருந்தி நம்மையும் கலங்கடிக்கும்  பாடல் அது. சொல்லப்பட்ட சூழலை மனதில் உள்வாங்கி  அதை அப்படியே இசைமாலையாக கொடுத்திருப்பார் இளையராஜா. நாயகி அங்கிருக்கவும் இயலாமல் நகரவும் முடியாமல் தவிப்பதை மேலை நாட்டு இசைக்கலப்பில் அழகாக  எடுத்துரைப்பார்.


                             'உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில்  மறைந்திருக்கும் துளி விஷம் ' என்ற வரிகள் சரணத்தில் பாடப்பட்டு  ஒரு இடையிசை வந்து மறுபடியும் அதே வரிகள் பாடப்படும். அடுத்த சரணத்திலும் அது போலவேதான்!  அந்த இடையிசைக்கு ரஜினி செய்யும் மேனரிசம் இப்போதும் ரசிக்கலாம் . அதற்காகவே அந்த இடையிசையை கூர்ந்து கேட்டு ரசிப்பேன் .  அவ்வளவு ஆர்ப்பாட்டமாய் ஒலிக்கும் பாடல் எல்லா இசையும் நிறுத்தப்பட்டு மீண்டும் தொகையறா வரிகளோடு  முடிவதெல்லாம் எனக்கு புதுமையாக தெரிந்தது. இன்று அந்தப் படம் , நடிகர், நடனம் , நடனத்திற்கான உடை , இசையமைத்தவர் , பாடியவர் எல்லாம் பழசு . ஆனால் அந்த இசை மட்டும் எனக்கு புதுசு. ஏன் என்று எளிதாக கேட்கும் அளவிற்கு விளக்கம் எளிதாக சொல்ல முடியவில்லை.

                           
                                           

                         
                             அதே படத்தில் ' ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது ' என்ற இனிய கானம் கேட்பவரை காதல் கொள்ளச் செய்யும் ; காதலிப்போரை முணுமுணு க்கச் சொல்லும்; காதலிக்காதவரை ஏங்கச் சொல்லும் . அன்று அந்தப் பாடல் கேட்டு நிறைய இளைஞர்கள் அப்படித்தான் திரிந்தார்கள்.
படம் மட்டுமா  ' இளமை ஊஞ்சலாடுகிறது ' ...இப்போது கேட்டாலும் பாட்டைப் பாடிய பாலுவிற்கும் வாணி அவர்களுக்குமல்லவா குரலில் இளமை ஊஞ்சலாடுகிறது . இருவரும் இணைந்து கனிந்து குரலில் அப்படி ஒரு குழைவைக் கூட்டிச் சேர்க்கும் வித்தையை கொண்டுவந்திருப்பார்கள். அந்தக் கனிவிற்கும் குழைவிற்கும் இளையராஜாவின் அருமையான இன்னிசையே காரணம்.  'கற்பனைகளில் ...சுகம்... சுகம்...' என்று எஸ்.பி.பி கொஞ்சிப் பாடும்போதே கேட்பவருக்கும் சுகம்தான்! சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பில் இந்தப் பாடலையும்  நிச்சயம்  சேர்க்கலாம் .

                     
                         
                         
       
                          மலேசியா வாசுதேவன் குரலில் ' தண்ணி கருத்துருச்சு ...அங்கு தவளை சத்தம் கேட்டுருச்சு  ' என்ற பாடல் ஊரெல்லாம் உற்சாகப்படுத்திய குத்துப் பாடல்.  பாடலின் பின்னணியில் காட்சிகள் கொஞ்சம் அடல்ஸ் ஒன்லி . நாயகனும் நாயகனின் தோழியும் ஒன்று கூடுவதாக வரும் காட்சியமைப்பில் வெளியே நாடோடிக் கூட்டத்து ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடலுக்கு முகவுரையாக ஆடிப் பாடி மகிழ்வதின் பின்னணியில் இப்பாடல் ஒலிக்கும். மலேசியா வாசுதேவனின் குரல் குத்துப் பாட்டுக்கும் நாடோடிப் பாட்டுக்கும் சரியாக பொருந்தும் . யாருக்கு எந்தப் பாடல் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை தேர்வு செய்வதிலும் ஒரு இசையமைப்பாளனின் பங்கு இருக்கிறது . இளையராஜா அதிலும் கெட்டிக்காரர்.


                           ' ஏ .....காதும் காதும் வச்சது போல் வாடி புள்ள ...கண்ணும் கண்ணும் பேசுறப்போ வார்த்தையில்ல ...'  என்ற வரிகள் வரும்போது பாட்டின் போக்கும் இசையின் போக்கும் வித்தியாசமாய் இருக்கும் . பின்னணியில் இருவரின் உணர்ச்சிகளும் இலைமறை காயாக அதற்கேற்றார்போல காட்டப்பட்டிருப்பதை பார்த்தபோது எனக்கும் பற்றிக் கொண்டதெல்லாம் பகிர முடியாது . இளையராஜாவின் இசையும் சேர்ந்து பற்ற வைத்தது.

                 http://play.raaga.com/tamil/album/Illamai-Oonjaladuthu-songs-T0000059


                எல்லா பாட்டுக்களும் வாலி அவர்களின் கை வண்ணமே! வார்த்தைச் சித்தர் என்று ஏன் அழைக்கிறார்கள் என இப்போது புரிகிறது . 'கிண்ணத்தில் தேன் வடித்து ' , ' நீ கேட்டால் '  என்ற மேலும் இரு அருமையான வித்தியாசமான பாடல்களும் அதே படத்தில் உண்டு . அந்நேரத்தில் நான் அதை அதிகம் ரசிக்கவில்லை. இப்போது கேட்டால் ஐந்து பாடல்களும் ஐந்து விதமான வித்தியாசம் கொண்ட பாடல்கள் என்பது புரிகிறது .  இன்னும் இன்னும் கேட்கத் தூண்டும் இளையராஜாவின் இசைக்குத்தான் எத்துனை பலம் !


                    ' இது எப்படி இருக்கு ' என்றொரு படம் . ஜேசுதாஸ்   மற்றும் ஜானகி குரலில் '  எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ ' என்ற பாடலை கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போனது. இயற்கையின் அழகையெல்லாம் அள்ளிக் குடித்து விடத் தோன்றும் அழகியல் உணர்வோடு காதலின் மென்மையையும்  சேர்த்து வெளிக்காட்டும் நாயகனும் நாயகியும் ஆடிப் பாடுவதாக அமைக்கப்பட்ட சூழலுக்கு இளையராஜா இசையை அள்ளித் தெளித்த வண்ணம் அற்புதமானது. பாடல் கேட்கும்போதெல்லாம் இறக்கை முளைத்துப்  பறப்பதைப் போன்ற உணர்வு.  ' குக்கூ ....குகுகுக்கூ ...' என்று இரு குயில்களின் குரலொலி போல் குரலிசை சேர்த்து பின்னணி இசை அமைத்திருப்பார்.  நாமும் பறவைகளாகாமல் என்ன செய்ய?
                                                                            
                                             
               
          'கண்ணன் ஒரு கைக்குழந்தை '  என்ற திரைப்படத்தில்  ' மேகமே ...தூதாக வா ... அழகின் ஆராதனை ' என்று எஸ்.பி பி. மற்றும் சுசீலாவின் ஜோடிக் குரல்களோடு ஒரு உல்லாசப் பாடல். பகடி ராகத்தில் அமைக்கப்பட்ட  இளமையும் இனிமையும் ததும்பும் பாடல்.  காதல் பாடல்கள் பல இசையமைப்பாளர்கள் அமைத்து   இருக்கிறார்கள்.  அதே விதமான உணர்வை  அதை விட மேலான உணர்வை  இவர் பாடல்களும் ஏற்படுத்துவதே இளையராஜாவின் சிறப்பு.

                                                                                 

 



 அதே  படத்தில் ' மோக சங்கீதம் ...நிலவே.. நிலவே... அதைக் கேட்க
 வந்தாயோ ..' என்ற பாடல்  சுசீலாவின் குரலில் மிக மென்மையான பாடல்.  ஆனால் இலங்கை வானொலியில் அதிகம் ஒலி  பரப்பியதில்லை. கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும்  அழகான மெலடி . அத்திப் பூ வரிசையில் இடம் பெற்றது ஏன்  என்பதற்கு என்ன காரணம் சொல்ல!? தெரியவில்லை. 
 

      அடுத்து அதே 78  இல்   வந்து  தமிழகத்தைக்  கலக்கிய பாரதிராஜாவின்  இரண்டாவது படம் ' கிழக்கே போகும் ரயில் ' . இளையராஜாவின் இசை மணிமகுடத்தில் இன்னொமொரு நவரத்தினக்கல் இந்தப் படம் . பாடல் காட்சிகளை புதுமையாக எடுப்பதில் வல்லவர் பாரதிராஜா . அதற்கேற்ற அற்புத இசையை இளையராஜா கொடுக்க மக்களுக்கு அது பெரிய கொண்டாட்டம் . படமும் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டன.

                                                      


       மதுரையில் புறநகர் பகுதியில் நாங்கள் குடியிருந்ததால் வீட்டிற்கு அருகே ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது . எனக்கு ரொம்பவும் வசதி . படமும் பார்க்கலாம். பாட்டுக்களும் கேட்டுக்கொள்ளலாம் . அதனால் வாரம் இரண்டு படங்களாவது பார்த்துவிடுவேன்.  பாட்டுக்கள் கேட்பதற்காகவே சினிமாவிற்கு போனது அதிகம் . சினிமா தியேட்டரில் பாடல்கள் கேட்பது சுகானந்த அனுபவம் . அரங்கமே இசையால் நிரம்பும் .  மனதுக்குள் அப்படியே இறங்கும் . அப்படிதான் கிழக்கே போகும் ரயில் படத்தின் பாடல்களை விரும்பி கேட்டேன். ஒரே வாரத்தில் மூன்று தடவை சினிமா கொட்டகை போய் படம் பார்த்தேன்.  சில நேரங்களில் கையில் காசு இல்லாவிட்டால் முக்கியமான பாட்டு கேட்க அரங்கத்தை ஒட்டி வெளியே நின்று கேட்டு  ரசித்திருக்கிறேன். 




                             அந்தப் படத்தில் ' மாஞ்சோலைக் கிளிதானோ ..மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ ...'  என்ற பாடல் தேனிசைக் குரல் ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய மகத்துவமான பாடல். கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் முத்திரைப் பதிக்கும் தேன்மதுரத் தமிழ் வரிகளில் தென்னையையும் தலையசைக்க வைக்கும் அழகிய செவ்வியல் இசை கலந்த  மெல்லிசை. ஒரு பெண்ணை வர்ணிக்க அதிகமான சொற்கள் பயன்படுத்தப்பட்ட நீண்ட பல்லவி அல்லது சரணம்  உள்ள பாடல் என்று முத்துலிங்கம் சமீபத்தில் சொன்னதாக ஞாபகம்.  மிருதங்கம் , வீணை, புல்லாங்குழல்   பிரதானமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.    பாட்டின்
ஆரம்பத்தில் மிருதங்கம் , தபேலா , சதங்கை  கலந்து அழகிய தாளலயத்தில் நடை வாசிக்கப்பட்டு , சட்டென நிறுத்தி, 'மாஞ்சோலை கிளிதானோ' என மென்மையாக ஆரம்பிக்க, பூக்கள் சொரியும் இசை போல் இடையிசை ஒலித்து 'மான்தானோ ' என தொடர, குயிலின் சப்தத்தை கூட்டிச் சேர்த்து பாடலை மீண்டும் மெல்லிய வேகத்தில் கொண்டு போய் இரண்டாம் சரணத்தில் கூடுதல் வேகம் பிடிக்கும் அந்த லாவகமான இசை இளையராஜாவின் தனி முத்திரை. 



                    
        ' மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ ...அங்கம் ஒரு தங்கக் குடம் ..அழகினில் மங்கை ஒரு கங்கை நதி ...உலகினில் துள்ளும் இதழ் தேன்தான்  அள்ளும் கரம் நான்தான் ...வஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன் ...கண் காவியம் பண் பாடிடும் பெண் ஓவியம் செந்தாமரையே ....'  என்றொலிக்கும் வரிகளில் வேகமான நடையில் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தி மீண்டும் பழைய நடைக்கு பாடலின் இசை மாறுவது  புல்லரிக்க வைக்கும் . ஒரே மூச்சில் அந்த வரிகள் பாடப்பட்டிருக்கும் . கடினமான பாடல் ; ஆனால்  காவியப் பாடல் . மறக்க முடியுமா ? அப்போது ஒன்றும் தெரியவில்லை . இப்போது பார்த்தால்  நாயகியின் நடன அசைவுகள் சகிக்க முடியவில்லை  .  
                         


                 ' பூவரசம்பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதி வந்தாச்சு' என்று ஜானகி அவர்களின் குரலில் குயிலே பாடுவதைப்  போல ஒலிக்கும் உற்சாகமான பாடலை  இப்போது கேட்டாலும் நெஞ்சுக்குள் சந்தோசப் பூ மழை பெய்யும்.  அந்தக் காலத்தில் கேட்டபோது அடிக்கடி பாடிக் கொண்டலைந்தேன் . கங்கை அமரன் எழுதிய பாடல் வரிகள் சாதாரணமானவை . ஒரு கிராமத்துப் பெண்ணொருத்தி பட்டணம் போய் வேலை தேடும்  தன் காதலன் எப்போது திரும்புவான் என ஏங்கி காத்திருக்கும் வேளையில் கிழக்கே போகும் ரயிலின் கடைசிப் பெட்டியின்  பின்புறத்தை கரும்பலகையாக்கி அவன் சேதி அனுப்பியதை கண்டவுடன் உற்சாகமாக பாடும் பின்னணிக்கு ஏற்றாற்போல் பாடல் எழுதப்பட்டிருக்கும் . ஆனால் எல்லாவற்றையும் மிஞ்சியது போல இளையராஜா அதற்குக் கொடுத்திருக்கும் இசையில் மயங்காமல் இருக்கவே முடியாது.  ' கரகர வண்டி காமாட்சி வண்டி ...கிழக்கே போகும் பொள்ளாச்சி வண்டி ...' என்று பாடிக்கொண்டே தட்டாமாலை சுற்றி கீழே விழுந்தவுடன் உலகமே சுற்றுவது போலிருக்கும் அனுபவம் எல்லாம் சிறுவயதில் நானும் செய்து பார்த்திருப்பதால் அந்தக் காட்சியை ரசித்ததோடு , தலை சுற்றும் பின்னணிக்கு ராஜா கொடுக்கும் பின்னணி இசை வயலினில் வாசிக்கப்படுவதையும் ரசித்திருக்கிறேன் .  
                            
                                                                 
                                   
              
                       பாட்டின் ஆரம்பத்தில் ஜானகி மெதுவாய் பாடலை நீட்டி முழக்கி சட்டென சிறிது வேகம் பிடிக்கும் டெம்போவில் பாட உண்மையில் ஒரு ரயில் மெதுவாக கிளம்ப ஆரம்பித்து வேகம் பிடிப்பதைப் போலவே இசைக் கோர்ப்பு செய்திருப்பது வித்தியாசமாகவும்  புதுமையானதாகவும் இருக்கும் . பின்னணி இசையை கூர்ந்து நோக்கினால் உண்மையிலேயே ரயிலில் பயணம் செய்யும் அனுபவத்தை இளையராஜா பாட்டில் கொண்டு வந்திருப்பார். தொடர்ந்து ஜானகி , ரயில் எழுப்பும் சங்கொலி  போலவே  கூ... என கூவுவதும்  ரயில் சப்தப் பின்னணியில் பல்லவி பாடுவதும் பல்லவி முடிந்து இடைசையில் ஒற்றை வயலினோடு சேர்ந்து இசைக்கருவியா குரலா என பிரித்தறிய முடியாமல்   குலவையிடுவது போல் ஒலி எழுப்புவதும் சொல்லவொண்ணா  கற்பனை.  ரயிலை விட்டு உடல் பறந்து வெளியே போய்விட்டு மீண்டும் ரயிலுக்குள் வந்தது போன்று இடையிசை முடிந்து சரணம் ஆரம்பிக்கும் . ரயிலின் ஓசையை  தாளமாகக்         கொண்டு இளையராஜாவின் முன்னோர்கள்  சிலர் பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள் . அதுவும் கேட்க நன்றாக இருந்தாலும் இந்தப் பாடல் புதுமையானதே!
 


                             
                               '  கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ .. ' என்று துர்கா ராகத்தில் கண்ணதாசனின் வரிகளில்  மலேசியா வாசுதேவன் , ஜானகி அவர்களின் இனிய குரல்களில் இளையராஜா ஆனந்த மயமான காதல் கானம் ஒன்றை அதே படத்தில் கொடுத்தார். மக்கள் எல்லோரும் அவர் இசையில் ஏன் மதி மயங்கிப் போயிருந்தார்கள் என்பது எனக்கு அப்போதே புரிந்தது . அதையும் அப்போதுதான் கவனித்தேன் . பாட்டில் மூன்று சரணங்கள் . மூன்றுக்கும் மூன்றுவிதமான இடையிசையை கொடுத்திருக்கிறார் . மற்ற எல்லா படங்களின் பாடல்களை மீண்டும் கேட்டுப் பார்த்த பிறகு அது தெளிவானது. ஆரம்பப் பாட்டிலிருந்தே வெவ்வேறு விதமான பி.ஜி.எம் . ராஜாவின் முன்னோர்கள் பெரும்பாலும் அப்படி கொடுத்ததில்லை. மூன்று சரணம் மூன்றுக்கும் ஒரே பி.ஜி.எம் . இதுபோல அப்போது கவனிக்க மறந்த எத்தனையோ விசயங்களை இப்போது கவனிக்கும்போது இளையராஜாவின் பாடல்களில் உள்ள புதுமைகளை எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். 
                             
                                 


                          பொதுவாக ஒரு பாடலில் சரணம் முடிந்து பல்லவி முழுவதும் மீண்டும் பாடப்படும் வழக்கம் இருந்தது . இளையராஜாவின் பாடல்களில் அதிலும் சில புதுமைகள் இருந்தன. முதல் சரணம் முடிந்து பல்லவியின் முதல் வரியோடு இடையிசை சேர்ப்பது,   முதல் சரணம் முடிந்து பல்லவி இல்லாமலே இடையிசை கொடுத்து அடுத்த சரணம் பாடப்படுவது , முதல் சரணம் முடிந்து பல்லவி அனுபல்லவி, மீண்டும் பல்லவி, பிறகு இடையிசை என்று கொண்டு செல்வது   என பலவிதமான யுக்திகளில்  தனது பாடல்களை கொடுத்தவர் இளையராஜா . 


                                  ' மலர்களே நாதஸ்வரங்கள்  ' என ஆரம்பிக்கும் ஹம்சத்வனி ராகத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அவர்களின் இனிய குரல்களில் காதல் கானம் அப்போதும் இப்போதும் கேட்டவுடன் மனதுக்குள் மகிழ்ச்சியை மழைச் சாரலாய் தூவிடும் .  ' கற்பகப் பூச்செண்டு ..கருநீலக் கண்ணில்...' என்று வாசுதேவன் நீட்டிப் பாட ஜானகி  தொடர்ந்து ஹம்மிங் கொடுப்பது  அவ்வளவு அற்புதமாக இருக்கும். நம்மை எங்கெங்கோ கூட்டிச் செல்லும்.  நாயகன் நாயகியோடு தன்  திருமணக் கோலத்தை கற்பனைக்குக் கொண்டு வருவதை மங்கள வாத்தியங்களோடு நாதஸ்வரம் இசைத்து அருமையாக ராஜா கொடுத்திருப்பார். 


                              பாரதிராஜா படத்திற்கென்றே இளையராஜா  தனித்த இசை ராஜாங்கம் நடத்துவார். ராஜாவின் இசைக்காகவே விரும்பி மீண்டும் மீண்டும் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான காட்சிகள் வரும்போதெல்லாம் புதுமையான பின்னணி இசையால் என் இதயத்தை வருடியிருக்கிறார். கிராமத்துப் பின்னணி கொண்ட படம் என்றால் இளையராஜாவிற்கு கிராமத்துத் தேவதைகள் எல்லாம் கூடி வந்து வாழ்த்துப் பா பாடியது போல இசை ஆசிர்வாதம் கிடைத்துவிடும். இசையில்  பிரமாதப்படுத்தி  பின்னி எடுத்து விடுவார். 

                                  
                                 என்னைப் போன்ற லட்சகணக்கான  ரசிகர்கள் பலர் பலமுறை ஒரே திரைப் படத்திற்குச் சென்று ரசித்ததால்தான்  நூறு நாட்களைத் தாண்டியும் படங்கள் ஓடியிருக்கின்றன. அதற்கு பல இசையமைப்பாளர்கள் போலவே இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் என்றால் அதில் பொய்யில்லை ; மிகையில்லை. மிகவும் சுமாரான படங்கள் இளையராஜாவின் இசைக்காகவே வெற்றிப் படங்களாக மாறி அதிக நாட்கள் ஓடின. ஓடாத படங்களுக்கும் இளையராஜா நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.  அதனால்தான் ஒரே ஆண்டில் 50 திரைப்படங்கள் கூட கொடுக்க முடிந்தது. அவர் உழைப்பு யாராலும் எளிதில் ஈடு  செய்து விட முடியாத அயராத உழைப்பு; அற்புதமான உழைப்பு. இசைக்காக கொஞ்சமும் அசராமல் கடந்த 38 வருடங்களாக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்.  நலிந்த இதயங்களை  இசையால் கொள்ளை கொண்டிருக்கிறார். 


                              ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு வாசகர்  " இளையராஜா ஆயிரம் படங்கள் இசையமைத்து சாதனை புரிந்தது பற்றி...? " என கேள்வி எழுப்பியிருக்கிறார். 

                                    
                                சொல்லப்பட்ட பதில் கீழே.     
                          
                                ஆயிரம் படங்கள்  என்பது மட்டுமல்ல . அவரது இசை ஞானத்தால் அவர் படைத்த அத்தனையுமே முத்துக்கள் என்பதுதான் மகத்தான சாதனை. பெரிய படம், சிறிய படம் என்றெல்லாம் வித்தியாசம் பாராமல் எல்லா படத்திற்கும் ஒரே மாதிரியாக உயிரைக் கொடுத்து கடந்த நாற்பது ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவரது உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை நாம் தந்திருக்கிறோமா என்று தெரியவில்லை . அவரும் இதையெல்லாம் எதிர்பார்த்து உழைப்பதில்லை. எனவேதான் அவர் ஞானி. 


...................................தொடர்வேன்............................