Wednesday, 28 August 2013

அறிவியல் செய்யும் மாயம்

                            அறிவியல் ஆக்கத்திற்கே 
                              மறுப்பதற்கில்லை - ஆனால் 
                              அது செய்யும் மாயம்தான் என்ன !

கைபேசி ......
                               கைக்குள் உலகமே அடங்கிடினும் 
                                கைக்கு எட்டாதூரத்தில் உறவுகள் !

தொலைகாட்சி .....
                              
                                தொலைதூரத்து நிகழ்வுகளை 
                                 வீட்டிற்குள் கொணர்ந்து 
                                 விருந்தோம்பலை  
                                 புறக்கணிக்கும் மாயை !

தகவல் வலை.....

                                  எண்ணிலடங்கா தகவல்கள் 
                                  அள்ளித் தந்த போதும் 
                                   அருகிலிருப்போரை 
                                   அந்நியமாக்கும் ஜாலம்!

முக நூல்....

                                   தெரியாத முகங்களுக்காக 
                                    உடனிருக்கும் உறவுகளை  
                                    தள்ளிவைக்கும் கண்ணாடி!

                         இவை இல்லாதபோது 
                          கூடிக் களித்திருந்த மனிதன் 
                          அனைத்தும் அடைந்தபோது 
                           அந்நியப்படுத்தப்படுகிறான்      

                                       தனிமையில் திக்கற்றவனாய் 
                                       தூக்கம் தொலைத்தவனாய்   
                                        எதையோ தேடித் தேடி 
                                         எல்லாம் தொலைக்கின்றான்.

                         இதுதான் அறிவியல் செய்யும் மாயமோ!?



(புதிதாய் கணினி வாங்கி இயக்கக் கற்றுக் கொண்டு இணையத்தை இணைத்து வலையப் பதிவுக்குள் நுழைந்து பற்பல செய்திகளும் தகவல்களும் வாசித்து பல அறிவார்ந்த விஷயங்கள் அறிந்து படைப்பாற்றல் புடைக்க நானும் படைக்கிறேன் பேர் வழி என புகுந்து  படைப்பது எப்படி பகர்வது எப்படிஎன பலரிடம் விசாரித்து  பல மணி நேரங்கள் இதற்காக செலவு செய்து 
பதிவராக ஆவதற்குள் , பல குறிப்புகளை எழுதி வைத்திருக்கும்  எனது டைரியை எடுத்து எனக்கே  தெரியாமல் என் மனைவி எழுதி வைத்த கவிதை நீங்கள் மேலே வாசித்தது!) 





 

Wednesday, 15 May 2013

             பிடித்துப் படித்தது 


* விவாத ரத்து செய்தவர்கள் 
   விவாகரத்து செய்வதில்லை.

* போதிக்கும் போது புரியாத விஷயங்கள் 
   வாழ்க்கையை பாதிக்கும் போது புரிகிறது 

*எல்லா பிணங்களும் புதைக்கப்படுவதில்லை. 
  சில நடமாடிக்கொண்டிருக்கின்றன.

*வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.
  அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.

*அன்பு நேரம் காலத்தை மறக்க வைக்கும்.
  நேரம் காலம் அன்பை மறக்கடிக்கும்.

*அரசியலில் பணி  செய்பவர்களை விட 
  பணியில் அரசியல் செய்பவர்கள் அதிகம்.

*முதல் குழந்தை பெண் பிள்ளை எனில் 
  இரண்டாம் குழந்தைக்கு இரண்டு தாய்.

*கடைசியில் எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள் 
  சரியாகவில்லை என்றால் 
  இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.

*புத்தகங்களை பின்பற்றுங்கள் ஆனால் 
  அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள் 

*தூக்கத்தில் வருவது கனவல்ல 
  தூங்கவிடாமல் செய்வதே கனவு.

Wednesday, 30 January 2013

யாரிவள்

மகத்தானவள் 
மதுரசமானவள் 
தாலி கட்டிய  வேலிக்குத் 
தாயுமானவள் 
வேலிக்கே வேலியுமானவள் 
சகியாய்  சகோதரியாய் 
சதையுமானவள் !
உள்ளமும் தாங்குவாள் 
உடலும் தாங்குவாள் 
உணர்விலும் ஊனிலும் 
கலந்திடுவாள் 
உள்ளத்தின் ஆழத்தில் 
உறைந்திடுவாள் 
கண்மணிபோல் காத்திடுவாள் 
காலமெல்லாம் கனிந்திடுவாள் 
கனிய காதல் புரிந்திடுவாள் 
கண்ணிமைப் பொழுதும் 
நினைந்திடுவாள் 
கண்களின் நீரில் 
நனைந்திடுவாள் 
மந்திரம் தந்திரம் 
புரிந்திடுவாள் 
மன்மத பானம் 
தந்திடுவாள் 
மலர்க் குடையாய் 
மலர்ந்திடுவாள் 
விரும்பிய போதெல்லாம் 
விருந்திடுவாள் 
உண்மையை மட்டும் 
விரும்பிடுவாள் 
ஊமையாய் சிலநேரம் 
இருந்திடுவாள் 
வாழ்விலும் தாழ்விலும் 
வந்திடுவாள் 
நோவிலும் சாவிலும் 
நொந்திடுவாள் 
கல்லறை செல்லும் 
காலம் வரை 
காதலோடு வாழ்ந்திடுவாள் !
 

Saturday, 19 January 2013

நிராகரிப்பு

காலத்தின் நிராகரிப்பு 
கண்டுகொள்ளப்படாமல் போவது!
காயங்களை கூட்டி  விடும்
கண்களை குளமாக்கும் 
தெரிததை விட்டு விட 
சிலருக்கு தெரிவதில்லை 
அந்த வலி 
வெற்றி தருமா 
இருப்பதையும்  
வற்றி விடுமா?