தேர்தல் 2016 . இதோ வந்து கொண்டே இருக்கிறது. தினம் நடக்கும் கூத்துகளைப் பார்த்து மக்கள் நொந்து கொண்டு இருக்கிறார்கள். ஊடகங்களை உற்றுக் கவனித்தால் பல அரசியல்வாதிகளின் அதிரடி பேச்சுக்களும் ஆணவ கொக்கரிப்புகளும் எதிரிக்குக் கொடுக்கும் மிரட்டல்களும் நயந்து கேட்கும் பவ்வியங்களும் கூழைக் கும்பிடுகளும் எடுக்கும் ஒட்டு பிச்சைகளும் பணப் பதுக்கல்களும் தொகுதிக்குள் நுழைந்து எடுக்கும் ஓட்டங்களும் பக்கம் பக்கமாய் வாசிக்கும் அறிக்கைகளும் நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அரங்கேறிக் கொண்டே இருப்பதை காண முடிகிறது.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை சட்ட மன்ற தேர்தலை சந்தித்தாலும் இந்த முறை நடக்கும் நிகழ்வுகள் பெரும்பான்மையானவை கண்ணியக் குறைவுகளாகவே தெரிகின்றன. அற்புதமான தலைவர்கள் ஆண்ட நமது மாநிலத்தில் அரசியல் நாகரீகங்கள் அதீதமாய் இருந்த காலம் உண்டு. ஆனால் தற்போது அரசியல் செய்யும் பலர் அந்த நாகரீகங்களை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு அநாகரீகத்தை அணிகலன் போல அணிந்து கொண்டு அலைகிறார்கள்.
மூத்தத் தலைவர்களை அரசியலில் மற்ற மூத்தத் தலைவர்கள் கூட கேவலமாக விமர்சனம் செய்யும் அசிங்கத்தைக் கண்ட போது முகம் சுளிக்க வைத்தது. மரியாதைக்குரிய தலைவர்களாக பார்க்கப்பட்டவர்கள் நாகரீகமற்றவர்களாக நடந்து கொண்ட போது மனதில் வெறுப்பு உருவானது. பதவிக்காகவும் பணத்திற்காகவும் எந்த கீழ்மைக்கும் இறங்கும் இழிநிலை கண்டு மனசு வெம்பிப் போனது.
தற்போது நம்மை ஆளும் அரசு தனக்கு முந்தைய அரசினை குறை சொல்லி ஓட்டு கேட்கிறது . முந்தைய அரசு தற்போதைய அரசு முடியட்டும்..விடியட்டும் என்று மீண்டும் வாய்ப்பு கேட்கிறது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து என்ன பெரிதாக கிழித்து விட்டார்கள் நாங்கள் வந்து கிழித்து விடுகிறோம் என்று அறைகூவல் விடுக்கும் சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி உருவாக்கி ஓட்டு கேட்கிறார்கள். நாலாவதாக ஒரு தனித்த கட்சி தனியாக நின்று ஆட்சியை பிடித்து விடுவோம் என்று சூளுரைத்திருக்கிறது . நான்கு முனைப் போட்டிகள் உருவாகியிருக்கின்றன.
ஒரு தலைவரை , ' குடும்ப அரசியல் ' செய்கிறார் என்று சொல்லும் மற்ற தலைவர்கள் எல்லோருமே குடும்ப அரசியலும் வாரிசு அரசியலும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கட்சியின் வேட்பாளார்களாக தங்கள் வாரிசுகளை நிறுத்தியிருக்கிறார்கள் . ஒரு தலைவர் தன் வாரிசை முதல்வர் வேட்பாளாராகவே அறிவித்திருப்பது வினோதம். குடும்பமே இல்லை என்று சொல்லும் ஒரு கட்சியின் தலைவர் தன் நண்பரின் குடும்பத்தையே வாரிசாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆல மரம் போல கிளை பரப்பியிருக்கும் அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாய் வளைய வருகிறார்கள். எதையும் அசைத்துப் பார்க்கிறார்கள் ; யாரையும் வளைத்துப் போடுகிறார்கள் .
ஒரு தலைவர் கால்கள் தரையில் படாமல் காற்றிலேயே மிதந்து வந்து பிரச்சாரம் செய்து விட்டு காற்றிலேயே பறந்து போய் விடுகிறார். மற்றொரு தலைவர் எழுந்து நிற்கும் சக்தி இழந்தவராய் சக்கர நாற்காலியில் ஊரெல்லாம் உருண்டு கொண்டே மக்களின் சக்தியை தன் வயப்படுத்த முனைகிறார். இன்னொரு தலைவர் மேடையில் பேசுகிறாரா அல்லது நடிக்கிறாரா என்று தெரியாத அளவிற்கு நகைச் சுவை செய்கிறார். திடீரென யாரையாவது அடிக்கிறார். யாருக்காவது விசிறி விடுகிறார். தினம் அவர் செய்யும் சேஷ்டைகள் சிறந்த பொழுது போக்காக மாறிப் போயிருக்கிறது . அவர் என்ன பேசுகிறார் என்று மக்கள் கவனிப்பதாக தெரியவில்லை . எல்லோருக்கும் கூட்டம் கூடுகிறது. சிலருக்கு தானாக சேரும் கூட்டம் ; சிலருக்கு காசு பேசி சேரும் கூட்டம் . ஆனால் எல்லாம் ஓட்டுக்களாக மாறி விடுமா என்பது பெரிய கேள்வி.
ஒவ்வொரு கட்சிக்கும் ஓட்டு வங்கி குறிப்பிட்ட சதவீதம் உள்ளது. எல்லா கட்சிகளுக்கும் கட்சி சார்புள்ளவர்களின் ஓட்டு சதவீதம் போக மீதம் 10 சதவீத ஓட்டுகள் எந்தக் கட்சியையும் சாராதவர்களின் ஓட்டுகள் . அவர்கள் எந்த நிலை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்புகள் உருவாகின்றன என்பது காலம் காலமாய் பார்த்து வருவதே! இந்த 10 சதவீத மக்களின் நிலை கொஞ்சம் பரிதாபத்துக்குரியது . இவர்கள்தான் வெற்றிக்கான கதாநாயகர்கள். இவர்களால்தான் ஜனநாயகத்திற்கு ஒரு நன்மையோ அல்லது தீமையோ உருவாகப் போகிறது . இவர்கள்தான் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தற்போது முடிவெடுத்து விட்டு பின்னர் வருந்துபவர்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்றம் கொண்டு வருவார்கள். அல்லது தொங்கு நிலையில் வைத்து விடுவார்கள்.
யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான சூழ்நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இரண்டு பெரிய கட்சிகளோடு சிறிய கட்சிகள் கூட்டணி வைத்து பலம் சேர்க்கும். வெற்றி வாய்ப்பினை துல்லியமாகக் கணிக்கலாம். ஆனால் இம்முறை சிறிய கட்சிகள் எல்லாம் தனிக் கூட்டணி வைத்து எந்த நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் நிற்கின்றன என்பது புரியாத புதிர். ஓட்டு சதவீதம் குறைவாக வைத்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய கட்சிகள் எல்லாம் ஓரணி சேர்ந்தாலும் மொத்த சதவீதமும் குறைவுதான்! அது தெரியாமலா நிற்பார்கள்!? ஆக இதிலும் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தொங்கு நிலை வந்தால் அந்த அரசியல் புரிந்து விடும். யாரை வளர்க்க யாரை கவிழ்க்க அந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது என்பதும் புரிந்து விடும்.
லஞ்ச லாவண்யம் , ஊழல் இல்லாத கட்சிகள் எது , ஊழலில் திளைக்காத வேட்பாளர்கள் யார் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இணையமும் சமூக வலைதளங்களும் மக்களுக்கு நிறைய போதிக்கின்றன. அதனால் இந்தத் தேர்தல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஒரு பக்கம் நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் அதிகம் படிக்காத பாமர ஜனங்கள் யார் செய்தாலும் செய்யாவிட்டாலும் கட்சிக்கோ அல்லது அந்தக் கட்சியின் தலைவர் நிறுத்தும் வேட்பாளருக்கோ அல்லது கட்சியின் சின்னத்திற்கோ ஓட்டு போட்டு விடும் மன நிலையில் இருக்கிறார்கள். அவர்களை நாம் என்ன சொல்வது? அந்தத் தைரியத்தில்தான் ஒருவர் , ' என் தலைவர் ஒரு நாயை நிறுத்தினாலும் ஓட்டு விழும் ' என்று வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திலேயே கொக்கரிக்கிறார். 'குனியக் குனிய குட்டு விழும்' என்பது நாம் அறிந்த பழமொழி . ஆனால் , ' குனியக் குனிய துட்டு விழும் ' என்பதை காணொளியில் கண்டு புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.
இந்த மக்கள் தாங்கள் எந்தக் கஷ்டத்தில் இருந்தாலும் அதைப் பற்றி கவலை கொள்வதில்லை. காலம் காலமாய் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம் , அதனால் இப்போதும் அதே கட்சிக்கே போட்டுவிடுவோம் என்ற மனநிலையில்தான் இன்னும் இருக்கிறார்கள். அவர்களில் நகரத்தில் உள்ளவர்களை விட கிராமத்தில் உள்ளவர்களே அதிகம். இவர்களால்தான் மாற்றம் என்பது தடுமாற்றம் ஆகிறது.
யார் ஆட்சியில் அமரப் போகிறார்கள் என்று தெரியாத நிலையில் ஊடகங்கள் மிகவும் பரபரப்பான செய்திகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன . ஒவ்வொரு தலைவரும் பேசும் ' பஞ்ச் ' முழக்கங்கள் சினிமாவில் சொல்லப்படும் பஞ்ச் வசனங்களை விட அதிக ஆர்வமூட்டக் கூடியதாக இருக்கின்றன . செய்வீர்களா .. செய்வீர்களா என்று ஒரு தலைவர் முழக்கமிட எதிரணித் தலைவர் ' சொன்னீங்களே ...செஞ்சீங்களா ' என்று பதில் முழக்கம் இடுகிறார். நம்மை விட சிறுவர்கள் இந்த வசனங்களை உற்றுக் கவனிக்கிறார்கள். என் உறவினரின் சிறு வயது பெண்ணொருத்தி அவள் அம்மாவிடம் , ' சப்பாத்தி சுட்டுத் தருகிறேன் என்று சொன்னீர்கள். சொன்னீங்களே செஞ்சீங்களா ... முடியட்டும் ..விடியட்டும் ' என்று வசனம் பேசுகிறாள்.
இந்த நிலையில் இளைஞர் படை ஒன்று சமீபத்தில் தாமாகவே முன் வந்து ஒரு புதிய தலைவரை உருவாக்க முனைந்தார்கள். சிறிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். ஆனால் அந்தத் ' தலைவர்' அதனை ஏற்றுக் கொள்ளவில்லை . எனக்கு சமூக அக்கறை உண்டு . சமூகத்திற்கு தொண்டு செய்யவே விரும்புகிறேன் . எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை . என்னை விட்டு விடுங்கள் என்று தெளிவாக ஒதுங்கிக் கொண்டார். அவர்தான் சகாயம் I A S அதிகாரி. 22 வருடங்களில் 23 முறை பணி மாற்றம் செய்யப்பட்டவர். கிரானைட் ஊழல் வழக்கை விசாரிக்க நீதி மன்றத்தால் பணிக்கப்பட்டவர் . அரசால் பல வித இன்னல்களுக்கு ஆளானவர். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற கொள்கையோடு வாழ்பவர். சுடு காட்டில் படுத்து புரட்சி செய்தவர். ' ஆவிகளுக்கு பயமில்லையா ? ' என்று ஒரு நிருபர் கேட்டபோது , ' படு பாதகச் செயல்கள் செய்யும் பாவிகளுக்குத்தான் பயந்தேன் ' என்று சாட்டையடி போன்ற ஒரு பதிலைச் சொன்னவர் .
அவருக்கு இந்த ஜனங்களை நன்றாகப் புரிந்திருக்கிறது. அரசியல் கட்சி என்பது மிகப் பெரிய மலை. கட்டி இழுத்துச் செல்வது கடினம் என்பதை நன்கு புரிந்ததினால் ஆரம்பத்திலேயே விலகிக் கொண்டார். இளைஞர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் . அதனால் அவரிடம் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று கேட்டிருக்கிறார்கள். ' எவருக்கு வேண்டுமென்றாலும் போடுங்கள் . கவருக்குப் போடாதீர்கள் ' என்று தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார். பொதுவில் பேசும்போது யாரையும் குறிப்பிடாத பேச்சுக்கள் அர்த்தமுள்ளதாக மாறும். இப்படி பேசுவதை நிறைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஊடகங்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போதே நாகரீகமற்ற தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக அள்ளித் தெளிக்கப்படுகின்றன. உலகம் அதை உற்று நோக்குகிறது. எதைப் பற்றியும் கவலை கொள்ளாத அநாகரீக பேச்சு ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. பதவி படுத்தும் பாடு.
பணம் படுத்தும் பாடு அதை விட அதிகம். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பணப் பட்டுவாடா செய்ய ஒரு கூட்டம் அலை மோதுகிறது . கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் சிலரும் போலிஸ் அதிகாரிகள் சிலரும் அதற்கு ஒத்துழைக்கிறார்கள். பணம் கொடுத்து ஓட்டுக்களை விலை வாங்கத் துடிக்கும் கேடுகெட்ட அவல நிலை இந்த முறை அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது. மக்கள் தாங்களாகவே முன் வந்து ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று மறுத்தாலொழிய பணப் பட்டுவாடாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். திருடனாய் பார்த்துதான் திருந்த வேண்டும் . திருட்டுக்குத் தூண்டுபவர்களை குறை சொல்லி என்ன பயன்? பணம் கொடுப்பவர்களுக்கு எதிர் விசுவாசம் காண்பித்தால் தோல்வியை தழுவச் செய்யலாம். செய்வார்களா?
பொறுமை. உதாரணத்திற்கு ஒரு சம்பவம். எழுபதுகளின் ஆரம்பத்தில் மேடைக் கச்சேரிகளில் ஒருவர் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். யதேச்சையாக அதைக் கேட்டார் தயாரிப்பாளர் ஒருவர். அப்போது ' உயிர் ' என்ற படத்துக்கு அவர் பூஜை போட்டிருந்த நேரம். முத்துராமன் , சரோஜா தேவி ஜோடி. அந்தப் படத்துக்கு மேடைக் கச்சேரியில் இசைப்பவரை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் .
தனக்கு விடிவு காலம் கிடைத்து விட்டது என்று நம்பிய அந்த இசை அமைப்பாளர் அதிகாலையில் எழுந்து கருமாரியம்மன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து விட்டு ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வந்தார்.
ஆனால் , ' உங்க டியூன் நல்லா இல்ல. அதனால இன்னைக்கி ரெக்கார்டிங் இல்ல ...' என்று அந்த தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். மட்டுமல்ல. ரமணி ஸ்ரீதர் என்பவரை இசை அமைப்பாளாராக ஒப்பந்தம் செய்து அடுத்த வந்த முகூர்த்த நாளில் ரெக்கார்டிங்கை ஆரம்பித்தும் விட்டார்.
இந்த சம்பவம் மேடைக் கச்சேரிகளை நிகழ்த்திக் கொண்டிருந்தவரை பாதித்தது. ஆனாலும் மனம் தளராது தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அதற்கான பலன் கிடைத்தது. கம்யூனிஸ்ட் தலைவரான என். சங்கரையாவின் சகோதரர் மகனான கதாசிரியர் ஆர். செல்வராஜ் , தனது படத்துக்கு இவரையே ஒப்பந்தம் செய்து திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.
அந்தப் படம் ' அன்னக்கிளி ' . பொறுமையுடன் இருந்த அந்த இசை அமைப்பாளர் இளையராஜா . இவரது டியூன் சரியில்லை என்று சொல்லி நிராகரித்த அந்த தயாரிப்பு நிறுவனம் ' ஜெமினி ' .
மேற்கண்ட இந்தச் செய்தி ஒரு வாரப் பத்திரிகையில் வந்தது. மேடைக்கச்சேரிகளில் தனது இசை முன்னோர்களின் பாடல்களை இசைத்து வந்த இளையராஜா , அவ்வப்போது அமர் எழுதி தானே இசையமைத்து அதைப் பாடியும் வந்திருக்கிறார். அதற்கும் மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்திருக்கிறது. சினிமாப் பாடல்கள் போலவே அந்தப் பாடல்களும் அமைந்து விட மக்கள் அதிகம் ரசித்திருக்கிறார்கள். அந்தக் கணங்கள்தான் சினிமாவில் இசையமைத்து இசையில் சிகரம் தொட்டு விடும் உத்வேகத்தை அவருக்கு அளித்தன . அன்று புறப்பட்ட இசைப் பயணம் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதல்ல , என்ன விதமான அதிர்வை இந்த உலகத்திற்குக் கொடுத்திருக்கிறார் என்பதே முக்கியம். அந்த வகையில் இளையராஜா தன் இசையால் மிகப் பெரிய அதிர்வினை ஏற்படுத்தி இருக்கிறார் . ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள் என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகிறது. இளையராஜாவின் இசை பலருக்கும் அப்படிப்பட்ட பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு பாடலுக்கான ஒத்திகையும் பாடல் பதிவும் எவ்வாறு இளையராஜாவால் நிறைவேற்றப்படுகிறது என்று பார்ப்போம்.
ஒரு பாடல் தேர்வான பின்னர் இசைக் குழுவினர் அனைவரும் ஒலிப்பதிவுக் கூடத்தில் கூடுவார்கள். தேர்வறைக்கு வெளியே காத்திருக்கும் மாணவர்களைப் போல காத்திருப்பார்கள். வயலின் வாசிப்பவர்களில் மூத்தக் கலைஞர் திரு. ஜூடி அவர்கள் இளையராஜாவின் அறைக்குச் சென்று இசைக் குறிப்பு அடங்கிய தாளினைப் பெற்று வருவார். இசைக் குறிப்புகளை பிரதி எடுத்து மற்றவருக்குக் கொடுப்பது இவரின் பொறுப்பு.
ஒத்திகை நடக்கும் நேரத்தில் இளையராஜா கொடுக்கும் திருத்தங்கள் , மாற்றங்கள் ஏதும் இருப்பின் அவற்றையெல்லாம் ஒத்திகை நேரத்திலேயே சரி செய்து மீண்டும் பிரதிகள் எடுத்து எல்லோரிடமும் கொடுப்பதும் இவர் வேலையே! இசைக் குறிப்புத் தாளினை ஜூடி தன் கையில் வைத்திருக்க மற்றவரெல்லாம் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள் .
இசைக் குறிப்புகள் எளிமையாக இருந்தால் இசைக்குழுவினருக்கு நிம்மதியாக இருக்கும் . கடினமாக இருந்தால் அதை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இசைக்குறிப்புகளை முழுமையாக வாசிக்க முடிந்தால் 20 அல்லது 30 பிரதிகள் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கப்படும்.
ராஜா 9 மணிக்குள்ளாக தன் காலை உணவை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வருவார். ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர் உள்ளே நுழைய எல்லோரும் தங்களின் இசைக் கருவிகளை இசைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
முதலில் Rhythm section ஐ வழிநடத்தும் திரு. புருஷோத்தமனிடமிருந்து இளையராஜா ஆரம்பிப்பார். குறிப்பிட்ட பாடலுக்கான தாள நடை எப்படி இருக்க வேண்டும் என்பதை கைகளைத் தட்டிக் காட்டுவார். பாடல் முழுமைக்கும் வரக்கூடிய தாள நடை பொதுவானதாக இருந்தாலும் இடையில் நடையில் மாற்றம் வேண்டியிருப்பின் அதையும் சுட்டிக் காட்டுவார். வேறுபட்ட தாள லயங்களோடு பாடல் ஒலிக்கும். பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் தாள ஒலியில் தேவையான ஏற்ற இறக்கங்களையும் புருஷோத்தமனிடம் விளக்குவார். புருஷோத்தமன் தனது octo pad ல் அதை வாசித்துக் காட்டுவார் . எந்த நடை , எப்படிப்பட்ட தாள லயம் , என்ன சுருதி வேண்டும் என்பதை ராஜா தேர்ந்தெடுப்பார்.
அவர் விரும்புகிற தாள லயத்தை புருஷோத்தமன் புரிந்த கொண்ட பிறகே ராஜா தோல் கருவிகள் ( Tabla , Dolak etc ) பிரிவுக்கு நகருவார். அவர்களுக்கு புரிந்த மொழியில் நடை, தாளக் கட்டை போன்ற வார்த்தைகளை பிரயோகித்து அவர்களையும் தெளிவு படுத்துவார். இப்போதுதான் புருஷோத்தமனுக்கு ஒட்டு மொத்தமான தாள லயம் புரிய வரும்.
அடுத்து Keybord , Electric guitar வாசிக்கக் கூடிய பிரிவுக்கு ராஜா நகர்ந்து அவர்களுக்கு விளக்கம் கொடுப்பார். Keybord பிரிவை திரு. விஜி மேனுவல் மற்றும் திரு. பரணி பார்த்துக் கொள்ள , கிடார் பிரிவை திரு. சதானந்தம் வழி நடத்துவார். ( தமிழ்த்திரையிசையின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சுதர்சனின் மகன்தான் சதானந்தம் )
இசைக்குறிப்பேட்டில் பாடலுக்குத் தேவையான Chords முழுவதும் எழுதப்பட்டிருக்கும். Keyboard மற்றும் Synthesizer இசைப்போர் இசைக்குறிப்பில் குறித்துள்ளபடி தேவையான கருவிகளை தேர்ந்தெடுக்கும் இடங்களைக் குறித்து வைத்துக் கொள்வார்கள். Bagpiper , Santoor , Oboe (ஓபோ என்ற மரத்தாலான குழல் இசைக்கருவி ) போன்ற கருவிகளின் ஒலியை Keyboard ல் தேர்வு செய்வார்கள். ( அந்தக் கருவிகள் எளிதில் கிடைக்காதவை; அவைகளை மீட்டுவோரும் குறைவு )
புல்லாங்குழல் , வயலின், Brass section மீட்டப்படும்போது Keyboard லும் அதே கருவிகள் தேர்ந்தெடுத்து சேர்ந்து வாசிப்பதும் சில நேரங்களில் நடக்கும். அதனால் இசையின் தரம் கூடும். Keyboard ல் இந்த மாதிரி பல கருவிகள் தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளதால் உண்மையான Brass Players குறைந்து விட்டார்கள் . போலவே , ஒலியின் தரம் கூட்டுவதற்காக Synthesizer பயன்படுத்தி கோரஸ் குழுவினரின் குரலோசையோடு சேர்த்தும் இசைக்கப்படும். வேறுபடுத்த முடியாதது போல இருக்கும்.
( விக்ரம் படத்தில் கமலஹாசன் பாடியிருக்கும் அந்த டைட்டில் பாடலில் வரும் ஜானகியின் ஹம்மிங் கேட்டால் புரியும் )
புல்லாங்குழலை இசைக்கும் நெப்போலியன் (அருண்மொழி என்ற பாடகர் ) என்பவரோடு சேர்ந்து விஜி மானுவல் தன் Keyboard ல் அதே பகுதியை வாசிப்பார். எனவே இரட்டைப் புல்லாங்குழல் (double flute passaage ) இசைத்த நாதம் ஒலிக்கும். மீண்டும் நெப்போலியன் இரண்டாவது முறை வாசித்து அதை track ல் சேர்க்கும்போது ஒரே நேரத்தில் மூன்று குழல்கள் ( treble flute passage ) சேர்ந்து ஒலிப்பது போல் இருக்கும்.
உதாரணமாக , கோபுர வாசலிலே எனும் திரைப்படத்தில் எஸ்பி.பி , சித்ரா பாடிய 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம் என்ற பாடல் , சின்ன தம்பி திரைப்படத்தில் ' போவோமா ஊர்கோலம் ' என்ற பாடல் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம் . இரண்டாவது BGM ல் வரும் அந்தப் புல்லாங்குழலின் நாதம் அழகான double flute passage ஐக் கொண்டிருக்கும்
கோபுர வாசலிலே படப் பாடல் அற்புதமான இசைக்கோர்ப்பு செய்யப்பட பாடல். எஸ்.பி.பி அவர்கள் அந்தப் பாடலின் பல்லவி பாட கடைசி வரியில் சித்ரா சேர , தொடர்ந்து சித்ரா பல்லவி பாட ஆரம்பிக்கும்போது எஸ்.பி.பி நிறுத்திக் கொள்ள ...Orchestration பிரமாதமாக இருக்கும். பகல் நிலவு படத்தில் வரும் ' பூ மாலையே தோள் சேரவா ' என்ற பாடல் ஆய்வுக்குரிய ஒரு படைப்பு. இளையராஜாவும் ஜானகியும் வேறுபட்ட சரணங்களை வேறுபட்ட Octave ல் ஒரே நேரத்தில் பாடுவது அசாத்தியமானது.
ஒலிப்பதிவுக் கூடத்தின் மையப் பகுதிக்கு ராஜா வந்து நிற்க அவருக்கு முன்னால் திருத்தப்பட்ட இசைக்குறிப்பேடு பொருத்திய தாங்கி இருக்கும். முதலில் தந்திக் கருவிகளை வாசிக்கச் சொல்லி பார்ப்பார். பிறகு ஒவ்வொரு பிரிவினரின் பங்கினை வாசிக்கச் சொல்லுவார். BGM 1, 2, 3 என்று வெவ்வேறு பின்னனி இசையையும் வாசிக்கச் சொல்லி சரி பார்ப்பார். ஆரம்ப இசை முதல் BGM , முதல் சரணத்திற்கு முன் வரும் இடையிசை இரண்டாம் BGM , இரண்டாம் சரணத்திற்கு முன் வரும் மூன்றாம் BGM என ஒவ்வொன்றையும் இசைக்கச் சொல்லி , தவறு இருந்தால் அதையும் திருத்துவார். முதல் வயலின் குழு அடுத்து இரண்டாம் வயலின் குழு அடுத்து Cello வாசிக்கும் குழு என தனித் தனியாக சரி பார்ப்பார்.
இசையின் போக்கு அவர்களுக்குத் தெளிவாக புரியும்வரை தனியாகவும் மெதுவாகவும் வாசிக்கச் சொல்லி , தொடர்ச்சி மற்றும் நிறுத்தம் வரும் இடங்களை புரிய வைப்பார். திடீர் நிறுத்தங்கள் அவருடைய இசையில் முத்திரை பாதிக்கும் லாவகம் ஆகும். பல்லவி மற்றும் சரணம் பாடும்போது வரிகளுக்கு இடையே, சில நேரம் வார்த்தைகளுக்கு இடையே , இழைந்து வரும் மின்னல் நேர இசையையும் வாசிக்க வைத்து சரி பார்ப்பார்.
இவ்வாறு ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று ஒத்திகை பார்த்து சரி செய்த பின்பு முழுப் பாடலுக்கான இசை தயாராகி விடும். சுந்தரராஜன் பாடலை ஹம்மிங் செய்து பாட , எல்லா கலைஞர்களும் சேர்ந்து பாடல் முழுவதும் இசைக்குறிப்பேட்டில் உள்ளபடி இசைப்பார்கள். ஆனால் Rhythm Section இன்னும் முழுமையடையாததால் புருஷோத்தமன் அதை ராஜாவின் முன்னிலையில் சரி செய்வார்.
இளையராஜா தான் எதிர்பார்த்த கற்பனைகளும் எண்ணங்களும் வண்ணங்களாக இசை வடிவில் வெளிப்படாதவரை மீண்டும் மீண்டும் சரி செய்தும் திருத்தியும் ஒத்திகை பார்த்துக் கொண்டேயிருப்பார். ராஜாவின் பாடல்களில் இசைக்கருவிகள் பாடகரோடு சேர்ந்து பேசுவது போல கூடவே இழையோடி வரும் . உதாரணமாக ஏழை ஜாதி என்ற திரைப்படத்தில் ' அதோ அந்த நதியோரம் ' என்ற பாடலின் சரணத்தை கவனித்தால் String Section பாடலோடு சேர்ந்து பாடுவது போல மிக அற்புதமாக பின்னப்பட்டு இருக்கும் .
ஒத்திகை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசிக்க மிகவும் சிரமம் இருக்கும்பட்சத்தில் இளையராஜா அவர்களை எளிதில் விட்டுவிட மாட்டார். மீண்டும் மீண்டும் சரியாகும் வரை ஒத்திகை பார்க்கச் சொல்வார். பாடல் பதிவு நடக்கும்போது கடினமான பகுதியை வாசிப்பதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டால் மட்டுமே அதில் சிறு மாற்றம் செய்யச் சொல்வார். பெரும்பாலும் ராஜா நினைத்ததை கொண்டு வரவே முயற்சிப்பார்.
ஒத்திகை முடிந்தவுடன் ராஜா தன் தனியறைக்குச் செல்வார். அவர் சற்று ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் மீண்டும் தங்களுக்குரிய பங்கினை ஒத்திகை பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள். இதற்கிடையில் பாடலாசிரியர் உள்ளே வந்து அமர்ந்து எழுதிய முழுப் பாடலையும் வாசித்து காட்ட , ராஜா மெட்டுக்கு பொருத்தமாக எல்லா வார்த்தைகளும் அமைந்திருக்கிறதா என்று பாடிப் பார்த்து சரி பார்ப்பார். இப்போது பாடல் பதிவு தயார் நிலைக்கு வந்து விட்டது. Voice Mixing செய்வது அடுத்த வேலை.
பாடகர்கள் பாடலைப் பாடி பயிற்சி எடுக்கும் வேளையில் இளையராஜா மற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார். அது அவரது தனிப்பட்ட வேலையாக இருக்கலாம். யாரையாவது சந்திப்பார்; அல்லது மறுநாளைக்குரிய பாடல் தயாரிப்பாக இருக்கலாம் ; அல்லது அடுத்த புத்தக வெளியீடு பற்றிய சிந்தனையாக இருக்கலாம் . ' How to Name it ' மற்றும் ' Nothing but Wind ' போன்ற ஆல்பங்கள் ( albums ) அவர் எண்ணத்தில் அந்த நேரங்களில் உதித்தவைதான்!!
சரியாக 12: 30 மணியளவில் எல்லோரும் ஒத்திகை முடித்து ஆயத்த நிலையில் இருக்கும்போது புருஷோத்தமன் ஒலிக் கலவை செய்யும் அறைக்குச் சென்று அமர்ந்து ஒலிக்கலவை செய்யும் பணியில் (Music Producer ) ஈடுபடுவார். பலவித இசைக்கருவிகள் எழுப்பும் நாதங்களை வெவ்வேறு Channel வழியே balance செய்யும் வேலைகளைச் செய்பவர் Music Producer . இப்போது புருஷோத்தமன் ஒவ்வொரு பிரிவிலுள்ள எல்லா கலைஞர்களையும் அவரவர் இசைக் கருவிகளை வாசிக்க வைத்து அதன் ஒலிச்சுருதி தரத்தை ( Volume Level ) கூட்டியோ குறைத்தோ balance செய்வார்.
எலெக்ட்ரானிக் கருவிகள் நேரடியாக mixer உடன் இணைப்பில் உள்ளதால் அதன் ஒலித்தரம் கூடுதலாக இருக்கும் . Manuel instrument மற்றும் electronic instrument இரண்டையும் ஒலிக்கலவையின்போது balance செய்வது எளிமையான வேலையல்ல.
பாடல் பதிவு ஆரம்பிக்கும்போது ஜூடி மற்றும் பிரபாகரன் ( Senior Violinist ) சேர்ந்து முழுப்பாடலையும் வழி நடத்துவார்கள். ஒவ்வொரு இசைப்பிரிவினரும் தனித் தனி அறைகளில் இருப்பார்கள். மைய அறையில் எலெக்ட்ரானிக் கருவிகள் வாசிப்போரும் string section குழுவினரும் இருப்பார்கள்.
சுந்தரராஜன் பாடும் அறைக்குச் ( Voice booth ) சென்று பாடலை ஹம் செய்வார். சில நேரங்களில் பிரபாகரன் அவர்கள் முழுப்பாடலையும் வயலினிலேயே இசைத்துக் காட்டுவார். ராஜா ஏற்றுக் கொள்ளும் வண்ணம் முழுப்பாடலும் அரங்கேற புருஷோத்தமன் ஒலிக்கலவையினை கச்சிதமாக செய்து முடிப்பார். புருஷோத்தமன் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே இளையராஜாவோடு நல்ல புரிதலோடு பழகியவர் என்பதால் ராஜாவின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்தவராய் ஒலிக்கலவை செய்து கொடுப்பார். பாடல் பதிவு இறுதிக் கட்டத்தை எட்டும்.
பதிவு செய்யும் அறையிலிருந்து இளையராஜா முழுப்பாடலையும் கவனிப்பார். அப்போதும் அவர் நினைத்த இசை வரவில்லை என்றால் அங்கும் திருத்தங்கள் உண்டு. கடைசி திருத்தத்தின்போது கூட ஒரு சிறு பயிற்சி எடுத்த பிறகே எல்லோரும் மீண்டும் ஆயத்தமாவார்கள். ராஜா திருப்தி அடைந்த பின் மீண்டும் take நடக்கும்.
ஒரு முழுப்பாடலுக்கான தயாரிப்பு முழுமை பெற்றவுடன் சில நேரங்களில் ராஜா அவர்கள் புருஷோத்தமனிடம் பாடல் பதிவுப் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு மதிய உணவிற்காக தன் அறைக்குத் திரும்புவார். அல்லது நடக்கவிருக்கும் அடுத்தப் பாடல் பதிவிற்கான இசைக்குறிப்புகளை எழுதப் போய் விடுவார்.
கடினமான பாடல் என்றால் பாடகரை தாளத்துடன் பாட வைத்து தனி track எடுத்துவிட்டு , மற்ற வாத்தியக்கருவிகளின் பங்கினையும் தனியாக எடுத்து இரண்டையும் கலவை செய்யக் கூடிய முறையும் நடக்கும் .
ராஜாவிடம் பணிபுரியும் அந்தக் கலைஞர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்பதால் அவர் மனதில் ஓடும் படைப்புத் திறனையையும் கற்பனையையும் செயல் வடிவமாக்குவதில் வல்லவர்கள். செயல் திறனுள்ள எந்திரம் போல அந்தக் கலைஞர்கள் அனைவரும் ராஜா நினைத்ததை இசையில் கொண்டு வந்து விடுவார்கள் .
சுந்தரராஜனுக்குப் பதிலாக இளையராஜாவே voice trackல் பாடுவதுண்டு. எடுத்துக்காட்டாக , ஈரமான ரோஜாவே படத்தில் வரும் 'வா..வா..அன்பே ' என்ற பாடல் முழுவதையும் ராஜா பாடி வைக்க பிறகுதான் ஜேசுதாஸ் , ஜானகி குரலில் பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்த மாதிரி பாடிய பாடல்கள் அவரது குரலில் நன்றாக ஒலித்தால் cassette , CD களில் ராஜா பாடிய version சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் திரைப்படத்தில் பாடல் ஒலிக்காது.
இதயக்கோயில் படத்தில் ' இதயம் ஒரு கோயில் ' என்ற பாடல் அதற்கு உதாரணம் . முதலில் ஜானகி ஹம் செய்ய ராஜா பாடி பதிவு செய்யப்பட்டது. பிறகுதான் பாலுவின் குரலில் மீண்டும் பதிவானது . படத்தில் பாலுவின் குரல் மட்டுமே ஒலிக்கும் . காதலுக்கு மரியாதை படத்தில் 'என்னைத் தாலாட்ட வருவாளோ ' என்ற பாடலும் அதுபோலவே பதிவு செய்யப்பட்டு பின்னர் ஹரிஹரனின் குரலில் ஒலித்தது.
BGM எல்லாம் வாசிக்கப்பட்டு பதிவு செய்த பிறகு குரல் பதிவு இறுதியாக நடக்கும் . சுந்தரராஜன் BGM களை ஓடவிட்டு, பாடகர்களுக்கு சரியான ஸ்வரங்கள் சொல்லி , திருத்தி சரி செய்து , குரல் பதிவு செய்வார். பாடகர்களின் குரல் இறுதியாக கலவை செய்யப்படும். கடினமான பாடல் என்றால் இளையராஜாவே கூட அமர்ந்து கவனித்து ஒலிக்கலவை செய்யச் சொல்வார். மற்றபடி சுந்தரராஜனே முடித்து விடுவார். போலவே , குழுவினரின் குரலோசையும் இறுதியாகத்தான் சேர்க்கப்படும். இப்போது முழுப்பாடலும் பதிவு செய்து முடிக்கப்பட்டுவிட்டது . பாடல் தயார்.
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளி இளையராஜாவின் இசைக்கோர்ப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் . வயலின் என்ற வாத்தியக் கருவியைக் கொண்டு எத்தனையோ விதமான நாதங்களை அவர் பல பாடல்களில் பலவிதமாக பயன்படுத்தியிருக்கிறார். பலவித வேறுபட்ட உணர்வுகளை வயலின் கொண்டே எல்லோருக்கும் விருந்தாகவே படைத்திருக்கிறார்.
மேற்கண்ட காணொளியில் ராஜாவுடன் 40 வருடங்களாய், ராஜாவின் இசைப்பாதியாய் பங்கு கொண்ட , மறைந்த மேதை பியானிஸ்ட் விஜி மானுவல் அவர்களுடன் கலந்து ராஜா இசைக்கோர்ப்பு செய்யும் காட்சி அருமை.
அடுத்து வரும் காணொளி மூலம் தோல் கருவிகளைக் கொண்டு வெவ்வேறு தாள லயங்களை எப்படி உருவாக்குவது , வெவ்வேறு இடங்களில் என்ன நடை பயன்படுத்துகிறார்கள் , அந்தக் கருவிகள் எங்கிருந்து வந்தன என்று பல செய்திகளை ராஜா ஒருவருக்கு விளக்குவதன் மூலம் அவருடைய இசை ஞானமும் வெளிப்படுவதைக் காணலாம்.
முகநூல் நண்பர் ஒருவர் இளையராஜாவின் ஒரு பாடலில் அவர் வடித்திருக்கும் பின்னணி இசையை அவருக்குரிய பாணியில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார் .
இசை Arrangement ராஜா
பல வருட மேற்குலக வாழ்வில் எனக்குக் கிடைத்த அனுகூலங்களில் ஒன்று உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல இனத்தவர்களிலிருந்து தோன்றிய இசை மேதைகளின் இசைகளைக் கேட்கக்கூடிய வாய்ப்பு அமைந்ததுதான். இந்த இசைகளை விரும்பியோ விரும்பாமலோ கேட்டே ஆகவேண்டிய சூழ்நிலை எனக்கிருந்தது காரணம் பல வருடங்கள் நான் மிக ஆடம்பரமான Discotheque ஒன்றில் பணியாற்றியிருந்தேன்.
பல நாட்டு மக்களின் பாரம்பரியங்களின் வெளிப்பாடுகளின் ஊடாக உருவான இசை மேதைகளின் பல்வேறுவிதமான இசையைக் கேட்டவன் என்ற வகையில்... உலகத்தவரின் இசையெல்லாவற்றிலும் பார்க்க இளையராஜாவின் இசை ஒரு படி மேலேயே உள்ளது. அவரின் இசை மிகவும் கட்டுக் கோப்பானது, கண்ணியமானது அதற்குள் விபரிக்கமுடியாத ஆசுவாசம் இருக்கிறது.
உலகின் இசையமைப்பாளர்களும் கொம்போசர்களும் பாடல்களையும், பின்னணியிசைகள், இசைக்கோர்வைகள், மற்றும் தீம் இசைகளை உருவாக்குகிறார்கள், அவற்றில் ஆயிரக்கணக்கானவைகளை எங்கள் செவிகள் கேட்கின்றன அத்துடன் அவைகள் முற்றுப்பெற்றுவிடுகின்றன அல்லது காற்றோடுகாற்றாய் கரைந்து விடுகின்றன அவை மனதுக்குள் நுழைந்து காலகாலத்துக்கும் நிலைத்து நிற்பதில்லை. ஆனால் ராஜாவின் பாடல்கள் அப்படியல்ல. அவை ஒவ்வொன்றைக்கேட்கும் போதும் கடந்து போன பல சம்பவங்களை மனம் நினைத்துக்கொள்ளும், அந்தப்பாடலில் ராஜாவால் செய்யப்பட்டிருக்கும் பல இசைச்சூட்சுமங்களில் ஒன்றில் அது என்னவென்றே தெரிந்து கொள்ளாமல் லயித்துப்போகும் அப்படி ராஜாவால் செய்யப்பட்டிருக்கும் இசைச்சூட்சுமங்களில் ஒன்று அந்தப்பாடலின் இசை அரேஞ்மெண்ட். ( Musical arrangement )
இசையொன்றினை யாரும் உருவாக்கிவிட்டுப் போகலாம் ஆனால் அந்த இசை உயிரை ஊடுருவவேண்டுமானால் அதைத் தாங்கிப்பிடித்திருக்கும் அரேஞ்மெண்ட் மிக முக்கியம். அது என்ன இசை அரேஞ்மெண்ட்
Music arranging is the ability to change a piece of music to a specific vocal and/or instrumental combination.
musical arrangement - a piece of music that has been adapted for performance by a particular set of voices or instruments.
இசைக்கோட்பாடுகளில் ஒன்றான இதில் (Arranging) ஞானியார் அசகாயசூரர். அது அவருக்கு பிறவியிலேயே கிடைத்த கொடை என்றே நான் எண்ணுவதுண்டு. தனது ஒவ்வொரு பாட்டிலும் இதனை அவர் மிகப்பிரமாதமாக செய்துவந்துள்ளார். அதன் காரணமாகவும் அவரின் பாடல்கள் பல வருடங்களாகியும் முதலில் கேட்கும்போது கொடுத்த அதே ஆனந்தத்தை இன்றும் கொடுக்கின்றன. எமது நெஞ்செல்லாம் நின்று நிலைக்கின்றன. அவரின் பாடல்களில் என்னைக் கிறங்க வைக்கும் Arrangement செய்யப்பட்டுள்ள பாடல்களில் அம்மன் கோயில் கிழக்காலே என்ற படத்தில் பாலு பாடியுள்ள "சின்னமணிக் குயிலே" யை மறக்க இயலாது. இந்தப்பாடலில் : ஆர்மோனியம் புல்லாங்குழல் கிட்டார் கீபோர்ட்
ஆகிய வாத்தியங்களை எவ்வாறாக அரேன்ஞ் பண்ணியுள்ளார் என்பதைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்:
முதலில் பாலு சின்ன மணீக்குயிலே என்பார் உடனே ஆர்மோனியம் தக தக தக.. என்றவாறு ஏதோ கூறும்.
பின்பு மீண்டும் "சின்ன மணிக்குயிலே " என்று பாலு ஆரம்பித்ததும் "ட்டீய்ங்" என்று விறைப்பாகப் பதிலளிக்கிறது கிட்டார் தொடர்ந்து "மெல்ல வரும் மயிலே ".. என்பார் பாலு அதற்கு "லலா ல லா" என்று வேறு விதமாகச் சிணுங்கிப் பதிலளிக்கிறது புல்லாங்குழல் இப்படியே கிட்டாரும் புல்லாங்குழலும் மாறி மாறி பாலுவுக்குப் பதிலளித்துக்கொண்டே செல்கின்றன. சற்றே சிந்தித்துப்பாருங்கள் இந்தப்பாடலின் பல்லவியில் பாலுவுக்குச் சரிக்குச் சமனாக புல்லாங்குழலும் கிட்டாரும் ஞானியாரால் அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதல்லவா அவை மட்டும் இங்கே பயன்படுத்தப்படாது அந்த இடம் வெறுமையாக விடப்பட்டிருந்தால் இந்தப்பாடல் இப்படி இனிமையாக இருந்திருக்குமா ? அந்த இடத்தில் அந்தப் புல்லாங்குழலையும் கிட்டாரையும் மாறி மாறிப் பயன்படுத்தினால்தான் பாடலிற்கு ஒரு தனித்தன்மை கிடைக்கும் என உணர்ந்து அவற்றை அப்படிப் பயன்படுத்தியதுதான் Arrangement .
இந்தப் பாடலின் முதலாவது இடையிசையிலும் ஞானியாரின் அபரிமிதமான இசைக்கற்பனை உள்ளது குறிப்பாக இடையிசையின் 1:03 வது நிமிடத்தில் ஷெனாயைக் (?) கொண்டு ஆரம்பிக்கும் ராஜா அதே ஷெனாயை முடிக்கும் போது ஆர்மோனியத்தை அதே Range இல் ஒன்றாக்கி முடிக்கிறார், அதாவது அந்த இடத்தில் அது ஷெனாயா அல்லது ஆர்மோனியமா என்று குழம்பியபடியே ரசிப்பதிலும் ஒரு த்ரில் உள்ளது.
பாடல் முழுவதுமே பாலுவுக்குச் சமனாக புல்லாங்குழலும் கிட்டாரும் பாவிக்கப்பட்டு அசத்தியிருக்கும் அதேவேளை சரணங்களின் இரண்டாவது பகுதியில் அமரர் விஜி மனுவலின் கீபோர்ட் வாசிப்பு பின்னணியில் நின்றபடி அந்த வரிகளுக்குக் கொடுக்கும் புதிய பரிமாணத்தையும் பதிந்தே ஆகவேண்டும்,
இந்தப்பாடலை புல்லாங்குழல் கிட்டார் கீபோர்ட் இல்லாமல் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. அதுதான் ஞானியாரின் Music Arrangement இன் சாணக்கியம்/ தனித்துவம். இப்படியான மிக நுண்ணியமான நுணுக்கங்களையெல்லாம் சாதாரணமாக கிராமத்தில் இடம்பெறும் பாடல் காட்சியொன்றுக்காக அவர் செய்துபார்த்துள்ளதுதான் வியப்பு. இந்தப்பாடலில் செய்துள்ள புதுமையைப்போல இன்னும் பல பாடல்களிலும் வெவ்வேறுவிதமாகச் செய்து பார்த்துள்ள அவர் தனது இந்தச் சின்னச் சின்ன ஆனால் அற்புதமான வேலைப்பாடுகளை அந்தப் பாடல்களின் இயக்குனர்களிடமோ நிருபர்களிடமோ பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை அதற்குக்காரணம் பாடல்களின் பிரபலத்தையும் அதனூடான படங்களின் வெற்றியையும் மட்டுமே எதிர்பார்க்கும் வியாபார உலகில் தனது இந்த முயற்சிகளின் பெறுமதி புரிந்துகொள்ளப்படமாட்டாது என அவர் நினைத்திருக்கக் கூடும். ஆனால் இசையில் அவரின் அற்பணிப்புக்களும், தேடல்களும், சேவைகளும் எதிர்கால நல்ல இசையமைப்பாளர்களுக்கு பிள்ளையார்சுழியாக இருக்கும் என்பது திண்ணம்.
இவ்வாறு இசைக்கற்பனையின் அதீதமாய் , இசைப்படைப்பின் மேலாதிக்கமாய் , இசை அறிவின் உன்னதமாய் , இசைத் திறனில் மேன்மையாய் திகழும் இளையராஜாவின் படைப்புகளை எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் . இளையராஜா ஓர் இசை ஊற்று!
மாற்றம் வேண்டும் ...மாற்றம் வேண்டும் என்று மந்திரம் சொல்வது போல் ஒவ்வொருவரும் மனதுக்குள்தான் நினைக்க முடிகிறது. செயலில் இறங்க முடிவதில்லை. யார் முதல் அடி எடுத்து வைப்பது... யார் பூனைக்கு மணி கட்டுவது ...என்று மக்கள் தமக்குத் தாமே கேட்டுக் கொண்டு போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.
மாற்றம் வேண்டும் . எதில் மாற்றம் வேண்டும் என்பதைக் கூட தேர்ந்தெடுக்கத் தெரியாத நிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம். மனதளவில் மாற்றம் வேண்டும் என்பதும் புரியாதவர்களாய் இருக்கிறோம். எல்லாமே எளிதாய் கிடைக்க நினைக்கும் மனது மாற வேண்டும் . உழைக்காமல் கிடைக்கும் இலவசத்தின் மேல் உள்ள ஈர்ப்பு மாற வேண்டும்.
நம்மிடமிருந்து எடுத்து நமக்கே இலவசம் வழங்கும் தந்திரத்தை புரிந்து கொள்ளாதவர்களாய் மாறிப் போனோமே! இலவசமாய் எதைக் கொடுத்தாலும் கை நீட்டி வாங்கிச் செல்லும் மக்களின் பிச்சைக்கார மனநிலையை படித்திருக்கும் கசாப்புக் கடைக்காரக் கூட்டம் ஒன்று புல்லைக் கொடுத்து ஆட்டை ஓட்டிச் செல்கிறது. அதைப் புரியாத மந்தைகள் பின்னாலேயே போகின்றன . நாளை கறியாகப் போகிறோம் என்று புரியாமலே போகின்றன.
யாரோ நம்மை சுரண்டுகிறார்களே , நமது ஜீவாதாரம் பறிபோகிறதே, நமது வாழ்வாதார வசதிகள் காணாமல் போனதே என்று மக்கள் சிந்திப்பதே இல்லை. இலவசம் கொடுத்துவிட்டு இதர சுகங்கள் எல்லாம் பறித்துக் கொள்ளும் கயவாளித்தனத்தை என்று கண்டுணரப் போகிறார்கள்?
இலவசம் கொடுத்துவிட்டு பஸ் , பால், மின்சாரம், பதிவுக் கட்டணம், அரிசி, பருப்பு, காய்கறி , இத்யாதி என்று கட்டணங்களை ஏற்றி வைத்திருக்கும் அவல நிலையை எண்ணி கூக்குரல் இடுவதில்லை ; கூட்டம் சேர்வதில்லை; போராட்டம் நடத்துவதில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்குத் தடை என்று வந்தவுடன் ' நமது பாரம்பரியத்தில் கைவைத்து விட்டார்களே ' என்று கூக்குரல் எழுப்பினார்கள்; போராட்டம் நடத்தினார்கள்; வீதிக்கு வீதி வெளியே வந்தார்கள்; மறியல் செய்தார்கள்; செல்போன் டவர் ஏறி மிரட்டினார்கள்; தீக்குளித்தார்கள் . சாதி பேதமில்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள். பேரிடரும் பாரம்பரிய இடரும் ஏற்படும்போது மட்டும் சாதி ஓடி மறைந்து விடுகிறது. ஆனால் இடர் கடந்து போன பின் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்கிறது.
எந்த ஊர்களிலெல்லாம் ஜல்லிக்கட்டு நடத்துவார்களோ அந்த ஊர்களில் உள்ள ஜனங்கள் மட்டுமே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மற்றவர் வேடிக்கை பார்த்தார்கள். தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்திற்கே மறைமுகத் தடைகள் நிறைய இருக்கிறதே அதைப்பற்றி எல்லாம் ஜனங்கள் சிந்தித்தார்களா என்பது கண் முன்னே நிற்கும் கேள்வி.
ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது ஒரு வணிகவியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது. பால் உற்பத்தியில் பணம் கொழிக்கும் இந்திய நாட்டுப் பணத்தைக் கொள்ளையிட நினைக்கும் மேலை நாடுகளின் வணிக ஊடுருவலுக்கான யுக்தி என்று நம்பப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தால் காளை மாடுகள் அடி மாடுகளாக மாற்றப்படும். வீரியம் குறையும். சினை மாடுகளின் தரம் குறையும். பசுக்கள் ஈனும் கன்றுகளின் தரம் குறையும் . பால் உற்பத்தியே குறையும்.
இங்குதான் மேலை நாடுகளின் வணிக ரீதியான சுரண்டல் ஆரம்பிக்கிறது. சினை மாடுகளின் தரம் குறைவதால் புதிதாய் பிறக்கும் பசுக்களின் தரமும் குறையும் . ஆதலால் வீரியமான காளைகளை வெளி நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் கொண்டு வரலாம். அல்லது வீரிய கன்றுகள் பிறப்பதற்கான உயர் ரகக் காளைகளின் விந்தணுக்களை விற்பதற்கு விலை பேசலாம். அயல் நாட்டு விந்து ஊசி மூலம் நமது நாட்டு காளைகள் மற்றும் பசுக்களின் இனத்தையே அழிக்கலாம். எதிர் காலத்தில் பாலுக்கும் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அயல் நாட்டுக்காரன் பெற்றுவிட்டால் கோடிக்கணக்கில் அள்ளிக் கொண்டு போகும் சுரண்டல் வியாபாரம் ஆரம்பிக்கும். PETA என்ற அமைப்பின் நோக்கமே இதுவாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜெர்சி இன பசுக்களின் பால் மூலம் இந்தியாவில் சக்கரை நோயை பரப்புவதும் நோக்கமாக இருக்கலாம். சக்கரை நோய்க்கான மருந்தை இறக்குமதி செய்து அதிலும் ஆயிரம் கோடிகளை அள்ளிச் செல்லலாம். இது அமெரிக்க NGO க்களின் தந்திரம் . நமது அரசியல்வாதிகளுக்கோ அமெரிக்கா என்ன சொன்னாலும் அது மந்திரம். அதனால்தான் PETA கேட்டுக் கொண்டதும் உச்ச நீதிமன்றமே ஜல்லிக்கட்டுக்குத் தடையைக் கொண்டு வந்துவிட்டது.
உண்மையிலேயே ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னனியில் இவ்வளவு அரசியல் கலந்திருக்குமா என்பது யூகிக்க முடியாததே! தடை என்று வந்த பின்னரே இந்த மாதிரியான பூதங்கள் கிளம்புகின்றன. போராட்டங்கள் வெடித்தன. எல்லா கட்சிகளும் ஓட்டு வங்கிக்காக குரல் கொடுத்தன. மக்கள் வீதிக்கு வந்தார்கள். பொங்கல் முடிந்த பிறகு மீண்டும் வீட்டுக்குள் முடங்கி விட்டார்கள். சரி. போராட வேண்டிய விஷயங்கள் இன்னும் எத்தனையோ உள்ளதே ! அதற்கெல்லாம் எப்போது போராடப் போகிறார்கள்?
நமது மண்ணிலிருந்து நீரெடுத்து நமக்கே விலை போட்டு விற்கிறானே அதற்காக என்று போராடப் போகிறார்கள்? உள்நாட்டு குளிர் பானங்களை ஒதுங்க வைத்து விட்டு பெப்சி , கோகோ கோலா என்று உடலுக்கு ஒவ்வாத பானங்கள் விற்று ஒரு நாளில் ஆயிரம் கோடிகளை அள்ளிச் செல்லும் அவலத்தை அரசும் அனுமதிக்கிறதே ! ஒரு நாள் முழுவதும் இந்தியாவில் உள்ள அனைவரும் அதைக் குடிப்பதை நிறுத்தினால் ஆயிரம் கோடியை சேமிக்கலாம் என்று கெஜ்ரிவால் கூறுகிறாரே ...நடக்குமா? நம் நாட்டுப் பணத்தை அயல் நாட்டிற்குத் தாரை வார்க்கிறோம் .
மேகி , பாண்டா , கார்னியா , ரெவ்லான் , லோரியல், ஹக்கீஸ் , லெவிஸ், நோக்கியா, மெக்டொனால்ட் , கால்வின்கிலீன், கிட் கேட் , நெஸ்லே, கே எப் சி , போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தியர்கள் அனைவரும் ஒரு நாள் மட்டும் தவிர்த்தால் ஆயிரக்கணக்கான கோடிகள் மிஞ்சும் . கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்துக் கொண்டே வந்தால் டாலர் மதிப்பு குறையும். நம் நாட்டு வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர் அனைவரின் வளர்ச்சி மேலோங்கும். இதைப் பற்றியெல்லாம் மக்கள் என்றாவது சிந்தித்து, ' எங்களுக்கு இந்தியத் தயாரிப்புகளே வேண்டும் ' என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்களா ? வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக என்றாவது போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களா ?
ஒவ்வொரு முறையும் பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம் கச்சா எண்ணெய் உயர்வுதான் காரணம் என்று ஒரே பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்படும்போது நமது எண்ணெய் நிறுவனங்கள் விலையை கணிசமாக குறைப்பதில்லை. குறைத்தாலும் பைசாக் கணக்கில் குறைக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு பேரலுக்கு 105 டாலர் என்று விலை இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தோராயமாக 75
ரூபாய் என விற்கப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னர் ஒரு பேரலின் விலை மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலைமூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்க வேண்டும். 75 க்கு விற்ற பெட்ரோல் 25 க்கு விற்கப்படவேண்டும். ஆனால் ஏறத்தாழ 60 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது . பக்கத்துக்கு நாடுகளில் விலை வெகுவாக குறைக்கப்படும் பட்சத்தில் நமது இந்திய அரசாங்கம் குறைக்காமல் இருக்கும் காரணம் என்ன?
நமது அரசாங்கம் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்குத் துணை போகிறது என்றுதானே அர்த்தம். பெட்ரோல் , டீசல் விலை குறைந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக குறையும் . அரசாங்கம் சொல்லும் விளக்கம் வினோதம். ' விலை குறைத்திருக்கிறோம் . கலால் வரிதான் கூடியிருக்கிறது ' என்று மிக எளிதான விளக்கம் கொடுக்கிறது. பொருட்களின் விலைக்கும் பெட்ரோல் டீசல் விலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை உணர்ந்து இந்தச் சுரண்டலை எதிர்த்து மக்கள் என்றாவது கூக்குரல் கொடுத்திருக்கிறார்களா ? வீதிக்கு வீதி வெளியே வந்து போராட்டம் நடத்தியிருக்கிறார்களா?
ஐந்து மாவட்டங்களின் குடி நீர் தேவையையும் பாசன வசதியையும் பல வருடங்களாக நிறைவேற்றிக் கொண்டு வரும் முல்லைப் பெரியாற்றின் நீர் இப்போது நமக்கு மறுக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படும் நீரின் அளவை நம் அண்டை மாநில அரசு குறைத்துக் கொண்டே வருகிறது . 999 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம் எல்லாம் மீறப்பட்டிருக்கிறது. உச்ச நீதி மன்றம் ஏறி இறங்கி நமது விவசாயிகளும் தமிழக அரசும் தவித்துப் போனார்கள். அதை நம்பியிருந்த விவசாயம் அழிந்து கொண்டே வருகிறது. குடிநீருக்காக யாரையாவது கையேந்தும் நிலை. நீர் மேலாண்மையை தேசிய மயமாக்கி மக்களுக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத் தராத இந்த இந்திய அரசாங்கத்தை கேள்வி கேட்டு மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்களா? வீதிக்கு வீதி வெளியே வந்தார்களா? முற்றுகையிட்டார்களா ?
நீர் மின்சாரம், காற்று மின்சாரம், அனல் மின்சாரம் போன்றவற்றிலிருந்துதான் நமது நாட்டின் மின்சாரத் தேவை அதிகமாக பூர்த்தி செய்யப்படுகிறது. அணு உலைகளிலிருந்து பெறப்படும் மின்சார அளவு குறைவே! எவ்வளவுதான் பாதுகாப்பானது என்று அறிவியல் அறிஞர்கள் கூறினாலும் அதிக அளவு ஆபத்து மறைந்திருக்கும் அணு உலைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது. நம் எதிர் காலச் சந்ததிகளுக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற உண்மை எத்தனை பேருக்கு உறைத்திருக்கிறது என்பது தெரியவில்லை.காலம் முழுவதும் தொடர்ந்து கிடைக்கும் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் மெத்தனமே மேலோங்கிக் கிடக்கிறது. அரசாங்கமே அதை எடுத்துச் செய்யாமல் பொறுப்புகளை தனியாருக்கு தாரை வார்க்கிறது. சரியான திட்டமிடல் இல்லாததால், மின்சார உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டு , அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி , கோடிக்கணக்கில் இழப்பை அடைந்து , அதன் பலனை மின்சாரக் கட்டணமாக உயர்த்தி, மக்களின் தலையில் சுமத்தி ....இப்படி எல்லாம் உருவாக்கப்பட்ட மாய அநீதிகளை தட்டிக் கேட்க மக்கள் என்றாவது வீதிக்கு வந்து போராடினார்களா? நியாயம் கேட்டார்களா?
நான்கு வழிச் சாலைகளில் 50 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடியை நிறுவி வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் போல பணம் பறிக்கிறார்கள். அரசாங்கம் தான் போட வேண்டிய சாலைகளை தனியாருக்குத் தாரை வார்த்ததோடு மட்டுமல்லாமல் அதை வட்டியோடு வசூலித்துக் கொள்ளும் உரிமையையும் அவர்களுக்குக் கொடுத்ததன் விளைவு , சாலை போட்டதற்கு ஆன செலவை விட 10 மடங்கு வசூலித்து முடித்து விட்ட பிறகும் கூட இன்னும் வசூலிக்கிறார்கள். மக்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதை எதிர்த்து என்றாவது மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா ? சுங்கச்சாவடிகளை முற்றுகை இட்டிருக்கிறார்களா? கேள்விகள் எழுப்பியிருக்கிறார்களா?
கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்காக விவசாய நிலங்களை அபகரிக்க முயல்வதும் , உச்ச நீதி மன்றம் வரை சென்று அதற்கு உத்தரவு வாங்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும் , சில தனியார் நிறுவனங்கள் காவிரிப்படுகைகளில் மீத்தேன் எடுக்க முனைவதால் விவசாய நிலங்களை பாழ்படுத்த நினைப்பதும் , எல்லாமே அரசின் துணையோடுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன போராட்டங்களோடு காட்டும் எதிர்ப்புகள் காலப்போக்கில் பிசுபிசுத்துப் போய் விடுகின்றன . தமக்கு நேராதவரை போராட மனம் இல்லாத நிலை மக்கள் எல்லோரிடமும் இருக்கிறது. ஒட்டு மொத்த மக்களும் எழுந்து ஒன்றாக கை கோர்த்து போராடாதவரை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் மறைமுக அநீதி நடந்து கொண்டேதான் இருக்கும் .
தற்போது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசு சார்ந்த பல துறைகளும் சேர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலில்தான் அவர்கள் எல்லோரும் போராட வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் போராட்டம் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பற்றிய சுயநல போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. பொது நலனுக்காக இந்த அளவு போராடினார்கள் என்றால் எல்லோரும் பாராட்டும் நிலையை அடைவார்கள்.
இன்னும் எத்தனையோ மக்களுக்கு எதிரான
சுரண்டல்களையும் அநீதிகளையும் எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். அதையெல்லாம் கண்டும் காணாதது போல எண்ணம் கொண்டு அலையாமல் மனதளவில் மாற்றம் காணும் விழிப்புணர்வு நாம் அடைந்தால் கேள்விகள் பிறக்கும் . நீதி மன்றங்கள் விழிக்கும் ; நீதியும் கிடைக்கும்.
மேற்கத்திய செவ்வியல் இசை உலகத்தில் இரு விதமான இசைப்படைப்பு இருக்கிறது . முதல்வகை இசை கதை அல்லது கருத்து சார்ந்ததாக அமையும் . இரண்டாம் வகை சுதந்திரமான எண்ண ஓட்டங்களுக்கேற்றவாறு மனதில் பட்டதை உருவாக்கும் இசையாக அமையும் . இளையராஜா அமைத்த இசை பெரும்பாலும் முதல் வகையே . திரைப்படத்தில் கொடுக்கப்படும் சூழலுக்கும் காட்சிகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் தகுந்த இசை அமைப்பதை மிகுந்த இசைவுடன் செய்பவர். திரைப்படத்திற்கு இரு விதமாக இசை அமைக்க வேண்டும். ஒன்று பாடலுக்கான இசை . மற்றொன்று திரைக்கதைக்கான பின்னணி இசை ( Re -recording ) . இந்த இரண்டிலும் இளையராஜா தலை சிறந்தவர்.
ஒரு திரைப்படம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இளையராஜா அவர்கள் இயக்குனர் அல்லது தயாரிப்பாளரோடு கதை கேட்க அமருவார். கதைக்களம் விளக்கப்பட்டு தேவைப்படும் இடங்களில் பாடல்கள் அமைக்க ராஜாவிடம் தெரிவிக்கப்படும். சில வேளைகளில் இயக்குனருக்கோ தயாரிப்பாளருக்கோ எந்த இடத்தில் பாடலை புகுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டால் இளையராஜாவே சரியான இடங்களை தேர்வு செய்வதற்கு ஆலோசனை வழங்குவார். இந்த அமர்வு சில நேரங்களில் இரு முறை நடக்கும். கதை கேட்க ஒரு முறையும் பாடல் compose செய்ய இன்னொரு முறையுமாக இரு அமர்வுகள்.
ஒரு திரைப்படத்திற்கு ஐந்து பாடல்கள் தேவை என்று வரும்போது பல மெட்டுகள் (tunes) வாசித்துக்காட்டப்பட்டு அவைகளிலிருந்து சில மெட்டுகள் தேர்ந்தெடுக்கப்படும். இளையராஜா தனது பிரியமான ஆர்மோனியத்தை பயன்படுத்தி வாசித்து பாடியும் ( Humming ) காட்டுவார். அந்த மெட்டுகள் எல்லாம் டேப் ரெக்கார்டரில் பதிவு செய்யப்படும். மெட்டுகளை தேர்ந்தெடுப்பது வெகு நேரம் நீடிப்பதும் உண்டு. சில வேளைகளில் வெறும் 45 நிமிடங்களில் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் தேர்வாகி விடும். உதாரணமாக இயக்குனர் P. வாசு அவர்கள் இயக்கிய ' சின்ன தம்பி ' திரைப்படத்திற்கு மிகக் குறைவான நேரத்தில் பாடல்கள் compose செய்யப்பட்டன.
" ஒவ்வொரு சூழலையும் நான் இளையராஜாவிடம் விளக்கிச் சொல்ல சொல்ல ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான டியூன் அவரிடமிருந்து உடனுக்குடன் வெளி வந்தது. மிகக் குறைவான நேரத்தில் நான் கேட்ட அத்தனைப் பாடல்களுக்கும் டியூன்கள் விரைவாக வாசிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டன " என்று வாசு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஒரு பாடலுக்கான டியூன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அது தனித்த டேப்பில் பதிவு செய்யப்பட்டு பாடலாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும் . பாடலுக்கான டியூன் தேர்ந்தெடுக்கும்போதே பாடலாசிரியர் யார் என்பதையும் முடிவு செய்வார்கள். இந்த அமர்வின்போது இளையராஜாவின் இசைக்குழுவில் குரல் பிரிவை வழிநடத்தும் சுந்தரராஜன் என்பவர் உதவியாளராக உடனிருப்பார். பாடல்களுக்கு கொடுக்கப்பட்ட ஹம்மிங் அனைத்தும் பதிவு செய்து அந்தப் பதிவு நாடாக்களை பராமரிக்கும் பொறுப்பினையும் சுந்தரராஜன் மேற்கொள்வார். பாடல்களுக்கான ஸ்வரங்கள் அனைத்தும் சுந்தரராஜன் எழுதி அவற்றையும் பதிவும் பிரதியுமெடுப்பார். பாடல் பதிவு செய்யப்படும் நேரத்தில் ஸ்வரங்கள் எழுதப்பட்ட பிரதிகள் பாடகர்களுக்கும் இசைக்கருவிகள் இசைப்போருக்கும் கொடுக்கப்படும். இதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் கூட முடிந்திருக்கிறது.
பாடல் பதிவு நடக்கும் நாளில் இளையராஜா பதிவுக் கூடத்திற்கு சரியாக காலை 7 மணிக்கு வந்து விடுவார். அதற்கு முன்னரே அவருடைய உதவியாளர் சுந்தரராஜன் , பாடலுக்கான டியூன் பதிவு செய்த நாடாவினை இளையராஜாவின் அறையில் வைத்திருப்பார். படத்தின் இயக்குனர் மீண்டும் ஒருமுறை பாடலுக்கான சூழலையும் பாடலை இயக்கப் போகும் விதங்களையும் ராஜாவிடம் விளக்கிச் சொல்லுவார்.
ஒரு உதாரணம் பார்ப்போம். ஒரு படத்தில் ஒரு கதாநாயகி பாடலை பாடும் சூழல் விவரித்துக் காட்டப்படுகிறது. அவள் பாடும்போதே அவள் வாழ்க்கையில் ஏற்படப் போகும் இழப்பினையும் சோகத்தையும் இயக்குனர் எடுத்துக் கூறினார் என்றால் இளையராஜா அதற்குத் தகுந்தாற்போல இடையிசையில் ( BGM ) சில மாற்றங்களைச் செய்வார். ' நான் பாடும் பாடல் ' என்ற திரைப்படத்தில் வரும் ' பாடவா உன் பாடலை ' என்ற பாடல் இதற்கு உதாரணம்.
அம்பிகா ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒரு அழகான பாடலை பாடிக் கொண்டிருக்க அவர் கணவர் மோகன் தன் மனைவி பாடுவதை நேரில் பார்த்து ரசிக்க தனது காரில் வேகமாக வருவதை இயக்குனர் பரபரப்பாக பாடலின் இடையில் காட்டுவார். ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதை காட்சிகள் சொல்லுவதற்கு முன்னரே இசை சொல்லி விடும். நமக்கு ஏற்படும் படபடப்பை இசையிலேயே இளையராஜா கொண்டு வருவது அற்புதம். அதே ஜோடி சேர்ந்து நடித்த ' இதயக்கோயில் ' என்ற படத்தில் மோகன் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடிக்கொண்டிருக்க அம்பிகா அவரைத் தேடி வந்து சில கயவர்களிடம் மாட்டிக் கொண்டு தப்பித்து ஓடுவதை பிரமாதமான இடையிசையில் ராஜா பரபரப்பூட்டுவார். ' யார் வீட்டில் ரோஜா ' என்ற அந்த தேனிசைப் பாடலுக்கு இளையராஜா இசையாக கோர்த்திருக்கும் string passages அவ்வளவு அழகு! வெகுவாக ரசிக்கலாம்.
' ஆனஸ்ட் ராஜ் ' என்ற திரைப்படத்தில் இது போன்ற இக்கட்டான சூழலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ' வானில் விடிவெள்ளி ' என்ற பாடல் முழுவதும் நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும் புதுமையான காட்சிகளாக இருக்கும் . இயக்குனர் குழு நடனம் இருப்பது போன்று சூழல் சொன்னதாலோ என்னவோ குழுவினரின் குரலோசையோடு காட்சியும் இசையும் பின்னப்பட்டிருக்கும் .
இவ்வாறாக பல்வேறு திரைப்படங்கள், விதவிதமான கதைப்பின்னனிகள், வெவ்வேறு சூழல்கள் , பலவிதமான உணர்ச்சிகள் அனைத்தையும் உள்வாங்கி, வெவ்வேறு விதமான மெட்டுகளை அமைத்து . ஒன்று போல மற்றொன்று இல்லாதவாறு பலதரப்பட்ட பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்கும் இளையராஜாவின் இசைத் திறமை , உழைப்பு மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாகும் .
பாடல் பதிவு ஆரம்பிக்கும் முன்பு , தந்திக் கருவிகளான violin , viola , cellos , double bass , brass section போன்ற இசைக்கருவிகள் இசைப்போர், சிறப்புக் கருவிகளான sitar , veena , sarangi , chennai போன்ற இசைக்கருவிகளை மீட்டுவோரையும் ஒன்று கூட்டிச் சேர்க்கும் பொறுப்பினை ராஜாவின் உதவியாளர்களான திரு. கல்யாணம் மற்றும் திரு. சுப்பையா ஆகிய இருவரிடமும் இளையராஜா ஒப்படைத்திருப்பார். ராஜாவிற்குத் தேவையான கருவிகளையும் அதை இசைக்கும் கலைஞர்களையும் ஒலிப்பதிவு நேரத்தில் அழைத்து வந்திருக்க வேண்டிய பொறுப்பு அவர்களதே!
இப்போது ஒரு முழுப் பாடலுக்கான இசைக்குறிப்புகள் அடங்கிய தாள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்பட்டு இசை ஒத்திகை ஆரம்பமாகும்.
இளையராஜாவின் இசையறிவை வெறும் திறமை என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிட முடியாது . அவர் அதையும் தாண்டியவர்! அவரின் இசைத் திறமை அளவிடற்கரியது . அவர் மனதில் என்னென்ன யோசனைகளும் நுணுக்கங்களும் வண்ணங்களாக ஓடுகிறதோ அவற்றை எண்ணங்களாக்கி இசைக்குறிப்புகள் உருவாக்கி தாளுக்கு மாற்றுவார். இசைக்குறிப்புகளை வேகமாக எழுதுவதில் ராஜா திறமைசாலி. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து அழகு சேர்க்க நினைத்தாரென்றால் மாற்றங்களையும் உடனுக்குடன் இசைக்கருவி மீட்டுவோரிடம் பகிர்ந்து கொள்வார். முன் தயாரிப்பு ஏதும் இல்லாமலேயே மாற்றங்கள் சரி செய்யப்படும். இசைக்குறிப்புகளில் பெரும்பாலும் திருத்தங்கள் இருக்காது. பாடலிலோ பின்னணி இசையிலோ மாற்றங்கள் இருந்தால் அவை மட்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு சேர்க்கப்படும். கடைசி நேர மாற்றங்களை எந்த இசைக்கருவியையும் இசைத்துப் பார்க்காமலே இசைக்குறிப்புகள் எழுதுவதில் ராஜா கெட்டிக்காரர். அதை வாசிக்கும்போது எந்தத் தவறும் இருக்காது. இசைக்குழுவினர் அதைக் கண்டு ஆச்சரியமடைவர்.
ஒரு பாடலை உருவாக்க அவர் அமர்ந்துவிட்டால் முழுப்பாடலும் திடீர் ஒலிப் பிரளயமாக தோன்றி மூன்று படிநிலைகளில் உருப்பெற்று விடும். முதல் படிநிலை பாடலுக்கான தாள நடை (Rythm Pattern ), இரண்டாம் படிநிலை இசைக்கருவிகள் தேர்ந்தெடுத்து இசைக்கும் முறை (Orchestration ), மூன்றாம் படிநிலை குரல் தேர்வு (Vocal Pattern ).
ராஜாவிற்கு உள்ள சிறிய பிரச்சனை என்னவென்றால் குறிப்புகள் எழுதும் வேகத்தை விட மனது அதிவேகமாக செயல்படுவதுதான்! கை எழுத முயல்வதற்குள் மனது நிறைய எழுதி முடித்து விடுகிறது.
" ஒரு முறை நான் பாடல் எழுத அமர்ந்துவிட்டால், எந்திரத்தனமாக என் மனதில் என்னென்னவோ ஓடுவதை எல்லாம் என்னால் எழுதி முடிக்க முடியாது. பாடல் முழுமை பெறும்போது நான் ஆரம்பத்தில் யோசித்ததெல்லாம் மாறிப் போயிருக்கும். நான் எழுதி முடித்தது சரியா அல்லது ஆரம்பத்தில் எழுத நினைத்தது சரியா என்று என்னாலே பிரித்துப் பார்க்க முடியாது. நான் மனதில் நினைத்ததை எல்லாம் பதிவு செய்யும் கருவி ஏதும் இருக்கிறதா என்ன !? " என்று இளையராஜா தன் இசைக்குறிப்பு எழுதும் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
பாடலுக்கான இசை ஒத்திகை நடைபெறும் முன்பு இசைக்குறிப்பு எழுதப்பட்ட தாள்களின் வலது மூலையில் 7 A.M அல்லது 2 P.M என நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். 1989 வரை இளையராஜா ஒரு நாளைக்கு இரண்டு பாடல்கள் மட்டுமே பதிவு செய்வார். ஒரு பாடல் காலை நேரத்திலும் அடுத்த பாடல் மாலை நேரத்திலும் பதிவு செய்யப்படும். சில நேரங்களில் ஒரே நாளில் நான்கு பாடல்கள் கூட பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு பதிவுக் கூடங்களில் இரு வேறு இசைக் குழுக்கள் மற்றும் பாடகர்கள் சேர்த்து ஒரே நேரத்தில் பாடல் பதிவு நடைபெறும். இசைக்குறிப்புத் தாளில் (Score Sheet) மேல் இடது மூலையில் பாடகர்களின் பெயர், பாடலாசிரியரின் பெயர், படத்தின் தலைப்பு , படக் கம்பெனி பெயர் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
காலை 7.45 முதல் 8 மணிக்குள் இசைக்குறிப்புகள் தயாராகி விடும். தன் இசைமொழியை ராஜா குறிப்புகளாக கொடுத்துவிடுவார். அது முழுமையானது அல்ல. ஒத்திகை நடக்கும்போது இசையில் சில மாற்றங்கள் கொண்டு வர நினைத்தால் குறிப்புகளில் திருத்தம் செய்வார். பல ஆண்டு காலமாக அவரோடு சேர்ந்து இசைக்கும் கலைஞர்களுக்கும் அவருக்கும் நல்ல ' புரிதல் ' இருக்கும் காரணத்தினால் திருத்தங்களை உடனே புரிந்து கொண்டு மிகச் சரியாக வாசிப்பார்கள்.
அந்த இசைக்குறிப்பேட்டில் குழுவினர் குரலோசை, வார்த்தைகள், ஆண் மற்றும் பெண் பாடகர் பாடும் பகுதி , தனியாக அல்லது குழுவாக பாடும் பகுதி என்று எல்லாமே அடங்கியிருக்கும். தனித்த குழலின் ஓசை அல்லது இரண்டு மூன்று குழல்கள் சேர்ந்து ஒலிக்கும் ஓசை , தனித்த வயலின் அல்லது வயலின் குழு வாசிக்கும் பகுதி , multitrack-ல் கலப்பு செய்யப்பட வேண்டிய இசைப்பகுதி என்ற விசயமும் எழுதப்பட்டிருக்கும்.
மேற்கத்திய இசைக்குறிப்புகளும் ஸ்வரங்களாக தமிழில் எழுதிக் கொடுக்கப்படுவதால் இசைஞர்களுக்கு அவை எளிதாக புரியும். அது கூடுதல் உந்து சக்தியாக இருக்கும். western notation எழுதுவதில் அது புதிய பாணி.
Royal Philharmonic Orchestra விற்காக அவர் உருவாக்கிய அனைத்தும் முழுமை பெற்ற இசைக்குறிப்புகள் ( full - score format) அவை பெரிய இசையரங்கில் நடத்தப்படும் இசைக்கான ( concert ) குறிப்புகள் என்று சொல்லலாம். ஒரு முறை அந்த இசை வெளியிடப்பட்டு விட்டால் இந்த உலகத்தில் உள்ள எந்த இசைக்குழுவினரும் இசைக்கலாம். அந்த இசைக் குறிப்பேட்டில் எல்லாமே அடங்கியிருக்கும். அதை வழிநடத்தும் இசை நடத்துனர் இசையின் tempo வில் சிறிய மாற்றம் செய்து கொள்ளலாம். அவ்வளவுதான்!
ஒலிப்பதிவு கூடத்தில் எழுதப்படும் இசைக்குறிப்பு முழுமை பெற்றது அல்ல. சிறு சிறு குறிப்புகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். வயலின்களின் நாதம் ஒலிக்கப்படும்போது இடையில் ஒரு புல்லாங்குழல் இழையோட வேண்டுமென்று இளையராஜா நினைத்தாரென்றால் அந்த வேளையில் அதற்கான குறிப்பு தருவார். குழல் இசைப்போருக்குத் தேவையான சுருதி, மெலடி , டெம்போ எல்லாவற்றையும் வார்த்தைகளாலேயே தந்து விடுவார். இசை பதிவு செய்யப்பட்ட பிறகு இசைக் கலப்பு செய்கையில் எது உரத்து ஒலிக்கவேண்டும், எது சன்னமாக ஒலிக்கவேண்டும் , எது முதலில், எது அடுத்து என்பதை இளையராஜா பின்னர் முடிவு செய்வார். இசைக்கலவையில் செய்யும் மாற்றங்கள் இளையராஜாவின் தனித்திறமை.
ஆனால் முழுமையான இசைக்குறிப்பு கொடுக்கப்பட்ட இசையரங்கு நிகழ்ச்சியில் வெவ்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்படும்போது எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. அந்த இசைக்குக் குறிப்புகள் எழுதுவது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல . எந்தெந்த கருவிகளை எப்படி வாசிக்க வேண்டும் என்ற அதீத இசையறிவு இருந்தால்தான் முழுமையான இசைக்குறிப்புகளை எழுத முடியும் . கை தேர்ந்த இசைக்கலைஞர்களால்தான் அதைப் புரிந்து கொள்ளவும் முடியும். சிம்பொனி இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அக்குழுவில் எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் எதுவும் இடம் பெறாது. தனித் தனியே யாரையும் வாசிக்கும்போதே திருத்தவும் முடியாது. ஒரு கருவிக்கு எழுதப்பட்டதை இன்னொரு கருவி கொண்டு வாசிக்கச் சொல்லவும் முடியாது. உதாரணமாக வயலின் கொண்டு வாசித்த அதே மெலோடியை sax player கொண்டு வாசிக்க முடியாது. ஒரு சிம்பொனி இசையமைக்க தகுதிக்கும் மீறிய கற்பனா சக்தி இருந்தாலொழிய அதை யாராலும் எழுதி விட முடியாது.
Brass section தந்திக் கருவிகளோடு சேர்ந்து வாசிக்கப்படும்போது இடையில் ஒரு குழலின் நாதத்தை இழையோட விடுவதற்கு அதன் சுருதி , ஒலித்தரம் புரிந்திருந்தால்தான் மற்றவரின் காதுகளுக்கு வந்து சேரும்படியான இசைகுறிப்பு எழுத முடியும். செவ்வியல் சிம்பொனி இசை அமைப்பதில் கடினத்தன்மை அதிகம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இளையராஜாவின் இசை ஆளுமையின் மொத்தப் பரிமாணம் அவருடைய சிம்பொனி இசைக்கான இசைக்குறிப்புகள். இதை சிலர் மறுக்கலாம். ஆனால் Royal Philharmonic Orchestra in London அதை மறுக்கவேயில்லை .
இணையத்தில் கொடுக்கப்பட்டிருந்த செய்திகளின் அடிப்படையில் ஒரு திரைப்படத்திற்கான பாடலை இளையராஜா உருவாக்கும் விதத்தை நான் விளக்கிக் கொண்டிருந்தேன். இன்னும் பாடலுக்கான ஒத்திகையும் பதிவும் கலவையும் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை என்னுடைய அடுத்த பதிவில் பார்க்கலாமே!
அவருடைய பாடல்கள் பற்றி சிலாகிக்காமல் எப்படி இந்தப் பதிவை முடிப்பது? மீண்டும் 1979 காலகட்டத்திற்குச் சென்றால் ' கல்யாண ராமன் ' படம் பார்த்த ஞாபகம் எழுகிறது. மறக்க முடியாத படம். அன்றொரு நாள் திடீரென பள்ளிக்கு அரைநாள் விடுமுறை கொடுத்து விட்டார்கள். நானும் எனது அண்ணன்மார்களும் சேர்ந்து புத்தகப் பைகளோடும் சீருடையோடும் தியேட்டருக்குப் போய்விட்டோம் . நல்ல கூட்டம் . வெயிலில் வரிசையில் நின்றோம். 'பள்ளிக்கூடம் போகாமல் இங்க எங்கடா வந்தீங்க? ' என்று சில பெரிசுகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் சிறுவர்கள் தப்பான காரியம் ஏதாகிலும் செய்வதாக தெரிந்தால் பொது ஜனங்களே கேள்வி கேட்பார்கள். கண்டிப்பார்கள். சிறு வயதில் பொது இடங்களில் தவறு செய்ய அஞ்சுவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது. யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை. சிறு பையன்களின் ரௌடித்தனத்தை நிறைய இடங்களில் பார்க்கலாம். no moral fear !
டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும்போதே நாலாவது தடவையாக படம் பார்க்க வந்திருக்கும் ஒரு புண்ணியாத்மா படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தது. எரிச்சலாக இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத வயசு. சிலர் ஆர்வமாக கேட்பதை பார்த்தால் அதை விட கூடுதலாக கோபம் வந்தது . இடத்தை விட்டு நகர்ந்தால் டிக்கெட் கிடைக்காது. நகரவும் முடியாமல் கதை சொல்வதை கேட்காமல் இருக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தபோது ஒரு பெரிசு சத்தம் போட்டார். கதை சொன்னவன் அடங்கிப் போனான். அப்படி வெயில், வியர்வை, இம்சைகளை கடந்து தியேட்டருக்குள் நுழைந்து ' அக்கடா ' என்று அமர்ந்தால் பின்னால் இருப்பவன் கதை சொல்ல ஆரம்பித்தான். எப்படியிருக்கும்!?
படம் ஆரம்பித்த பிறகு படத்தையும் இசையையும் வெகுவாக ரசித்தேன். கமலஹாசன் நடிப்பு , இளையராஜாவின் இசை இரண்டும் படத்தை ஓட வைத்தது என்றால் யாரும் மறுக்க முடியாது. பல்லழகர் கமலஹாசனின் சேட்டைகள் மற்றும் நகைச்சுவையை தியேட்டரே என்னோடு சேர்ந்து ரசித்தது. அப்போதிருந்த வெடிச் சிரிப்பெல்லாம் இப்போது தியேட்டரில் கேட்க முடிவதில்லை.
அந்தப் படத்தில் ' காதல் வந்துருச்சு ...ஆசையில் ஓடி வந்தேன்....' என்ற அட்டகாசமான பாடலை மலேசியா வாசுதேவன் தன் குரல் மாற்றி வித்தியாசமாக பாடியிருப்பார். கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போனது. பாடல் வரிகளுக்கு தியேட்டரில் சிரிப்பலை கிளம்பியதை பார்த்தேன். பஞ்சு அருணாச்சலத்தின் நையாண்டித்தனமான கவிதை வரிகளுக்கு ராஜாவின் இசையும் கமலஹாசனின் சேஷ்டைகளும் ரசிக்கும்படி இருந்தது. ரஞ்சனி ராகத்தில் இரு வேறு சூழலுக்கும் ராஜா இந்த மெலோடியை பயன்படுத்தியிருப்பார். மீண்டும் அதே பாடல் ' காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன் ' என்று காதலோடு வாசுதேவனின் வழக்கமான குரலில் ஒலிக்கும் . கேலிக்கும் காதலுக்கும் ஒரே இசை . வார்த்தைகள் மாறும் . BGM எல்லாம் வேறுபடும். பாங்கோஸ் தாள கதியை அப்போதே ரசித்து கேட்டது ஞாபகம் இருக்கிறது. இடையில் தாள நடை மாறுவது வழக்கமான இளையராஜாவின் பாணி. அதை இதிலும் ரசிக்கலாம்.
பட்டி தொட்டி எல்லாம் பரபரத்த பாடல் . சின்னஞ்சிறுசுகள் எல்லாம் பாடிக்கொண்டு அலைந்தன . வாய்க்குள் நுழையாத அர்த்தமற்ற வார்த்தைகளைப் போட்டு சிறுவர்களைக் கவரும் முயற்சி எல்லாம் ராஜா செய்ததில்லை. எல்லோரும் பாடுவதற்கு ஏற்ற எளிமையான மெட்டு என்பதால் அந்தப் பாடல் சூப்பர் ஹிட்.
' காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன் ' என்ற பாடலை தன வழக்கமான குரலில் வேறுபட்ட இடையிசைகளோடு வாசுதேவன் பாடுவார். ஒரே மெட்டுக்கு ஆறு இடையிசைகளில் இளையராஜா வித்தியாசம் காட்டியிருப்பார். அது நிச்சயம் பெரிய உழைப்பு. இரண்டாவதாக பாடப்படும் அதே பாடலில் நாயகி மனப்பிரள்விலிருந்து மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவது போன்ற காட்சி. அதற்கேற்றார்போல ராஜாவின் இசையும் நமக்குள் வியப்பூட்டும். நையாண்டித்தனம் இல்லாமல் பரபரப்பூட்டும் முற்றிலும் வேறுபட்ட வித்தியாசமான இடையிசை பிரமாதம். பிரமிப்பூட்டும் விதமாய் String Passage அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதுவும் கதை சொல்லும். அன்று பெரும்பாலும் வந்த திரைப்படங்கள் கதையோடு இசையும் இசையோடு கதையும் ஒன்றிணைந்த திரைப்படங்களாகவே பரிணமித்தன.
கதையின் களத்தை நன்கு உணர்ந்து தன் கற்பனைக் குதிரையை ஓட வைத்து கதைக்குத் தகுந்தாற்போல் இசையமைப்பதில் இளையராஜாவிற்கு நிகர் யாருமில்லை. கீழேயுள்ள பாடல் அதை நமக்கு உணர்த்தும்.
' மலர்களில் ஆடும் இளமை புதுமையே ' என்ற பாடல் பஞ்சு அருணாசலம் எழுதி சுத்த சாவேரி ராகத்தில் எஸ். பி. ஷைலஜா தன் இனிய குரலில் பாடிய அழகான பாடல். மார்கழிப் பனியின் இதமான குளிரில் நனைய வைப்பது போன்ற சுகமான பாடல். அன்றலர்ந்த மலர் போல நாயகி உற்சாக வெள்ளத்தில் மிதந்தபடி காலை நேரப் பனியினை சுகித்துக் கொண்டு ஆடிப்பாடும் சுகானுபவத்தை ராஜா இன்னிசையில் கொடுத்திருக்கிறார். மயிலும் குயிலும் குதூகலமாய் ஆடுவதை பாடுவதை முன்னிசையில் கொடுத்ததாலோ என்னவோ இயக்குனரும் அதையே காட்சிகளாக விரித்திருப்பார். அல்லது காட்சிகளை எப்படி எடுப்பீர்கள் என்று இயக்குனரிடம் கேட்ட பிறகு ராஜா இந்தப் பாடலுக்கு இசைத்திருப்பாரோ என்ற சந்தேகம் கூட எழுகிறது. காலை நேரத்து பலவித பறவைகளின் சப்தங்களை இசைக்கருவிகளின் நாதத்தில் இழைய விட்டிருப்பார். இடையிசையில் தபேலாவின் நடைமாற்றம் உற்சாகமூட்டும். மொத்தத்தில் பல பூக்கள் தொடுத்த மாலையாக பலவித இசைக்கருவிகளின் சங்கமத்தை ஒரே இசைமாலையாக தொடுத்து நமக்கு இசைவிருந்து கொடுத்திருக்கிறார்.
அதே ஆண்டில் வெளிவந்த சிவாஜியின் ' கவரிமான் ' என்ற திரைப்படம் மறக்க முடியாதது. சிவாஜிக்கும் நான் ரசிகன் என்பதால் அவர் படங்கள் ஒன்று விடாமல் பார்த்துவிடுவேன். இந்தப் படத்தில் கதையை திசை திருப்பும் ஒரு முக்கியக் கட்டம் உண்டு. தன் மனைவி யாருடனோ சோரம் போவதை நேரில் பார்த்தவுடன் அவர் தன் முகத்திலும் உடல் அசைவிலும் காட்டும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பை இளையராஜா பின்னணி இசையில் கூடுதலாக காட்டியிருப்பார். அந்தக் காட்சியையும் அதற்கான பின்னணி இசையையும் இன்னும் நான் மறக்கவில்லை. படபடப்பூட்டும் காட்சி பரபரப்பூட்டும் இசை.
அந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும் ' 'பூப்போலே...உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா ' என்ற பாடல் என்னை அதிகம் கவர்ந்த பாடல். மாயமாலகௌலை என்ற ராகத்தில் அமைந்த பாடல். பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளுக்கு எஸ்.பி. பி அவர்களின் குரலில் மனதை மயிலிறகால் வருடும் அற்புதமான பாடல். சிவாஜி தன் சிறு வயது மகளுக்காக மகிழ்ச்சியாக பாடும் வாழ்த்துப்பாடல் . தாலாட்டுப் பாடல் இல்லையென்றாலும் நம் எல்லோரின் மனதையும் தாலாட்டிச் செல்லும் பாடல். உயிருக்கு உயிராய் நேசித்த தன் மகளுக்காக பாடிய பாடலை , அதே மகள் வளர்ந்த பிறகு தந்தையை அவள் வெறுக்கும் சூழலில் , மீண்டும் பாடும்போது அந்தப் பாடலின் அருமை இன்னும் கூடுதலாய் உயர்ந்து நிற்கும். ஒரே பாடலை இரு முறை காட்சிகளாய் காட்டியபோது சிவாஜியின் நடிப்பை வெகுவாக ரசித்தேன். இளையராஜாவின் இசையை அதை விட ரசித்தேன்.
மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை மீண்டும் வெளிப்படுத்துதலிலும் தந்தையின் நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தலிலும் இளையராஜா வெளிக் காட்டும் இடையிசையோடு சிவாஜியின் நடிப்பும் ஈடு கொடுக்கும். இந்தப் படத்திலும் ஒரே பாடல் இரு முறை பாடப்படுகிறது. இடையிசைகளும் வேறுபடுகிறது. இரண்டாம் முறை பாடுகையில் இசையில் ஒரு மெல்லிய சோகத்தை ராஜா அற்புதமாக கொடுத்திருப்பார். அதிலும் இரண்டாம் இடையிசையில் ஒற்றை வயலின் நாதம் நமக்குள் இனம் புரியா இம்சையான வலியை ஏற்படுத்தும் . இரு முறை பாடப்படுவது ஒரே காணொளிக் காட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது.
கதையின் போக்கிற்கு ஏற்ற பாடல்களைக் கொடுப்பதில் இளையராஜா எப்போதுமே சளைத்ததில்லை. கதையை முழுமையாக கேட்டறிந்த பின்னரே பாடல்களை அவர் கற்பனை செய்து அவற்றையெல்லாம் மக்களின் எல்லா மன உணர்வுகளுக்கு ஏற்ப பட்டை தீட்டி கொடுத்திருக்கிறார். மக்களும் ஏற்றுக் கொண்டதால்தான் அவரை மகத்தான கலைஞராக இசைஞானியாக பார்க்கிறார்கள். இசையுலகில் யாரும் அழிக்க முடியாத மறக்கவோ மறுக்கவோ முடியாத பேரிடத்தை அடைந்து விட்டார். இசை உள்ளளவும் இசைஞானியும் உண்டு.