Monday, 1 August 2016

அப்பா அம்மா கணக்கு




                                                    சமீபத்தில் வந்த திரைப்படங்களின் விமர்சனத்திலிருந்தும் படம் பார்த்த அனுபவத்திலிருந்தும்   இந்தப்  பதிவை எழுதும் எண்ணம்  ஏற்பட்டது.  அப்பா அம்மாவைப்  பற்றி ஒவ்வொருவரும் என்ன கணக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை மீட்டெடுக்கும் நினைவலையாக இது சிலருக்கு அமையலாம்.

                                                   
                
                                   
                                                         'அப்பா ' என்ற  திரைப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும்  தம் அப்பாவின் நினைவில் மூழ்கிப் போகாமல் வெளியேறி விட முடியாது.  படம் பார்த்து முடித்த பிறகு சிலர் மனம்  கனத்துப் போகலாம். சிலர் சிரித்துவிட்டுப் போகலாம்.  சிலர் தம்  தந்தையை நினைத்து எரிச்சலும் கோபமும் அடையலாம்.  ஏனென்றால் அப்பாக்கள்  பலவிதம்.


                                                           ஒரு முறை என்னோடு படித்த தோழியுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது  அப்பா பற்றிய பேச்சு வந்தது.  நான் என் அப்பாவைப் பற்றி பெருமையாக பேசிவிட்டு அவள் அப்பாவின்  விபரம் அறிய   வினவியபோது  சட்டென , ' அவன் இல்லை' என்றாள் .  இலேசான அதிர்ச்சியுடன் மீண்டும் வினவியபோது , ' அவன் இல்லை ' என்று மறுபடியும் அதே பதிலை அலட்சியமாக சந்திக்க நேர்ந்தபோது , ' இதில் ஏதோ விவகாரம் உள்ளது'  என நானே டாபிக்கை மாற்றி  விட்டேன்.   இவ்வளவு மரியாதையுடன்  தன் தந்தையை விளித்த தோழியின் அப்பா தம் குடும்பத்தை ' அம்போ' என விட்டு விட்டு ஓடிப் போனவர்  என்பது தாமதமாக தெரிய வந்தது.   அதன் பிறகு ஒரு நாளும் அவளிடம் என் அப்பாவைப் பற்றி கூட நான் பேசியது கிடையாது.   அவள்  வலி  புரிந்தது.


                                                          நாம் குழந்தையாய் இருந்தபோது அப்பாவை ஒரு ஹீரோவாக  வைத்திருந்தோம் .  வளர வளர ஜீரோவாக மனசுக்குள் உருவகப்படுத்திக்  கொண்டோம் .  ' எனக்கு என்ன  பெரிதாக செய்து வைத்தார், என்ன பெரிதாக வைத்து  விட்டுப் போனார் ' என்று இழந்த   வாய்ப்புகளையும் வசதிகளையும் மட்டுமே  சிந்தித்துக் கொண்டிருக்கும் நம்மில் பலர்  அப்பாவை இழந்த பிறகோ அல்லது  அப்பாவாக ஆன பிறகோதான்  மீண்டும் அவரை ஹீரோவாக்குவோம்.   வாழ்க்கையை வாழ எவ்வளவு அழகாக நமக்குக்  கற்றுக் கொடுத்திருக்கிறார் என்பதை தாமதமாக புரிந்து கொள்வோம்.  பத்து  மாதம் சுமந்தது  அம்மா  என்றால் காலம்  முழுவதும்  சுமந்தது அப்பா  என்பதை காலம் கடந்த பிறகே சிந்திக்கின்றோம்.

                                         
                                                       ' அப்பா '  திரைப்படத்தில் மூன்று விதமான  அப்பாக்களை காட்டுகிறார்கள்.  மூவரும் அவர்களின்  குழந்தைகளை  தங்கள் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஊட்டி வளர்க்கிறார்கள்.  சமுத்திரக்கனியின் குழந்தை கட்டுப்பாட்டோடு கூடிய சுதந்திரத்தோடு வளர்வதாக காட்டப்படுகிறது.   படத்தில் அவர் ஹீரோ என்பதால்  தமிழ் சினிமாவுக்குரிய பாணியில்  அவர் குழந்தை மற்ற எல்லா குழந்தைகளை விட புத்திசாலியாகவும் சமயோசித புத்தி உள்ளவனாகவும் திறமைசாலியாகவும்  காட்டப்படுவதை  ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும்  மற்ற குழந்தைகளின் அப்பாக்கள் வளர்ப்பில் பெரிய குறை இருப்பதாகத் தெரியவில்லை.   ஏனென்றால்  இந்த மூன்று அப்பாக்களையும்  ஒரே  அப்பாவிடம் பார்க்கலாம்.


                                                 ' இருக்கிற இடம் தெரியாம இருக்கணும் ' என்று சொல்லியே ஒரு தந்தை வளர்ப்பது போலவும் , '  படிப்பில் எப்போதும் முதல் மாணவனாய் இருக்கணும் '  என்று மற்றொரு தந்தை கண்டிப்பாய் வளர்ப்பது போலவும் காட்டப்படுகிறது.   படி படி என்று வலியுறுத்தி  வளர்ப்பதால் நாம் ஏதாவது ஒரு வகையில்  பிள்ளைகளை இழந்து விடுவோம்  என்பதை படம் சுட்டிக் காட்டுகிறது.  பெற்றோர் தங்களின் விருப்பத்தையும் கனவுகளையும் பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது  என்பது மறைமுக பிரச்சாரம் .


                                               நாமக்கல் , திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள விடுதிப்  பள்ளிகளில்   வரும்  வருமானம்  கருதி இப்போது  எல்லா ஊர்களிலிலும் அதே  போன்ற பள்ளிகள் உருவாகி விட்டன. கோழிப்பண்ணைகளில்  பிராய்லர் வகை கோழிகள் வளர்க்கப்படுவதைப் போலவே  மாணவர்களும்  படிக்க வைக்கப்படும்  கொடுமைகளை படத்திலும் எடுத்திருக்கிறார்கள்.  அதை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே  காட்சிப்படுத்தியிருக்கலாம்.  பெற்றோர்கள் பலருக்கு உறைத்திருக்கும் .  ஆனாலும் பெற்றோர்கள் திருந்தவா போகிறார்கள்? இன்னும் அந்தப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வரிந்து கட்டிக்கொண்டு  வரிசையில் நிற்கிறார்கள்.


                                            படித்தவன் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்த முடியும் . படிக்காதவன் பள்ளிக்கூடமே நடத்த முடியும்.  கோழிப்பண்ணை வைத்திருந்த படிப்பறிவில்லா முதலாளிகள்தான்  அந்தப் பள்ளிக்கூடங்களை நடத்திக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் பண்ணுகிறார்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்.


                                          அங்கு லட்சக்கணக்கில் பணம் கட்டி சேர்த்து விடப்படும்  சில பிள்ளைகள்  சிலுவைகளை சுமந்தபடி படிக்கிறார்கள் ;  சிலர்  பாரம் தாங்காமல் வெடிக்கிறார்கள்.   எனக்குத் தெரிந்து  ஒரு பெற்றோர் தங்கள் மகளை டாக்டராக்கும்  கனவில் அந்த மாதிரி ஒரு பள்ளியில் சேர்த்து விட்டு வந்த பிறகு  சில நாட்களில் மகள் போனில் , ' என்னை டாக்டராக பார்க்க ஆசையா ...இல்லை நோயாளியாக பார்க்க ஆசையா ? ' என்று கேட்ட பிறகு  விழித்துக் கொண்டார்கள்.  மீண்டும் பழைய படித்த பள்ளியிலேயே சேர்த்தார்கள்.  சில பிள்ளைகள் என்ன சொல்லியும் பெற்றோர் அவர்களுக்கு இசைவாக மாறாத காரணத்தால்   தற்கொலையும் செய்திருக்கிறார்கள்.  படத்திலும் அது போன்ற காட்சியை கொண்டு வந்து  நம்மை கலங்க வைக்கிறார்கள் .

                     
                                      ' நிராசையாகிப் போனால் என்ன அடைய நினைக்கும் இலக்கை உயர்வாக நினைப்போம்  ' என்பது பிள்ளைகள் மேல் சுமத்தப்படும் கனவில்  இருக்கக் கூடாது  என்று நிறைய அப்பாக்களுக்கு தெரிவதேயில்லை. ' எதிலும் first  எதிலும் best '  என்ற நிலை பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் அப்பாக்கள் இப்போது அதிகரித்து விட்டார்கள்.    40 வருடங்களுக்கு முந்தைய அப்பாக்கள் அப்படி இருந்ததில்லை.  ' படிக்க பணம் கட்டுவேன்.  நீதான் நல்லா படிச்சுக்கணும் '  என்று ஒரு வரியில் முடித்துக் கொள்வார்கள்.  'படி படி' என்று படுத்த மாட்டார்கள்.   கண்டிப்பு இருந்தது. சுதந்திரமும் நிறைய இருந்தது.  படித்தோம்; வளர்ந்தோம் ; இப்போது நன்றாகவே இருக்கிறோம்.


                                        அப்பாக்கள் ஆயிரம் விதம்.  குடித்துவிட்டு வந்து குடும்பத்தை அடித்துப் போடும் அப்பாக்கள்;  பொறுப்புடன் இருப்பதாய் நடித்துவிட்டுப் போகும் அப்பாக்கள்;  வேலை வெட்டிக்குப் போகாமல் சம்சாரம் சம்பாதிப்பதையும் பிடுங்கி கொள்ளும் அப்பாக்கள்;  பிள்ளைகளை வேலைக்கு  அனுப்பி  காசு பார்க்க நினைக்கும் அப்பாக்கள்;  காரணமேயில்லாமல் கரடு முரடாய்  கடுமை காட்டும் அப்பாக்கள்; கடைசி வரை கஞ்சத்தனத்தில் ஊறிக் கிடந்து   காசு பணம் சொத்து சேர்க்கும் அப்பாக்கள்; கர்ணப்பிரபுவைப் போல  ஊருக்கெல்லாம் அள்ளிக் கொடுத்து இருக்கும் சொத்துக்களை இழக்கும்  அப்பாக்கள்;   ஊதாரியாய் சுற்றித் திரியும் அப்பாக்கள்; மனைவி பேச்சை மீற  முடியாமல் முடிவெடுக்கும் திராணி இல்லாமல் ஊமையாகவே வாழ்ந்து விட்டுப் போகும் அப்பாக்கள்;   மனைவி  குழந்தைகளை  'அம்போ '  என கைவிடுத்து  ஊரை  விட்டே ஓடிப் போன அப்பாக்கள்;   பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத அப்பாக்கள்;  உள்ளத்தில்  ஊனமாக வாழும்  அப்பாக்கள்;  பிள்ளைகளின் எதிர்காலத்தை தான் மட்டுமே தீர்மானிக்கும் அப்பாக்கள்;  பிள்ளைகளை கூடவே கூட்டிக் கொண்டு திரியும் அப்பாக்கள்  என சந்தித்தவர்கள் கேள்வியுற்றவர்கள் பலர்.


                                               மோசமான அப்பாக்களால் சீரழிந்த பிள்ளைகளும் உண்டு ; நல்ல நிலைக்குப் போனவர்களும் உண்டு .  நன்றாக வளர்த்து படிக்க வைத்து நல்ல நிலையில் உருவாக்கி விட்ட அப்பாக்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட பிள்ளைகளும் உண்டு. எந்த ethics அவர்களை அப்படி மாற்றுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்து அறுதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது.  அந்த ரசாயனத்தை புரியவும் முடியாது.


                                               மேற்சொன்ன அப்பாக்களில் என் அப்பாவை தேடுகிறேன்.  இவர்களில் யாருமே இல்லை . அவரிடம் கண்டிப்பு இருந்தது;   கனிவும் இருந்தது.  கட்டுப்பாடு இருந்தது; சுதந்திரமும் இருந்தது.  அறிவுரையும் செய்வார்; சில சமயங்களில் மௌனமும் காப்பார்.  அவர் அறிவுரையை விட  மௌனம் நிறைய  .அறிவுறுத்தியது . படிப்பின் அருமையை அடிக்கடி பகிர்வார்.  ஆனால் படி படி என்று நச்சரிக்க மாட்டார். கடைசிவரை தன் சம்பாத்தியத்தில் எனக்கும் சேர்த்து செலவுகள்  செய்து மரித்தும் போனார்.  ' இந்த இடத்தில் தற்காலிகமாக  சேர்ந்து கொள் . எதிர் காலத்தில் நிரந்திரப் பணியிடத்தில் அமர்வாய்  '  என்று கைப் பிடித்துக் கூட்டி வந்து எனக்கு வழிகாட்டி விட்டு  தன்  இறுதிப்  பயணத்தை முடித்துக் கொண்டார்.  அவர் போதனையை ஏற்றதால் இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன். பதவி உயர்வு அடைந்ததை பார்க்காமலே போய் விட்டார்.  அவரை நினைக்கையில் அப்பாக்களுக்காக கவிதை எழுதும் ஆர்வம் வந்தது. நான் கவிஞனில்லை   .  ஆனால் நல்ல ரசிகன் .

                 
                                                வயிற்றில் சுமக்க முடியாததால்
                                                 நெஞ்சினில் சுமந்திடும்
                                                  சுமைதாங்கி
                                                 
                                                 பொம்மை கேட்டு அழும்போது
                                                  காசில்லா நிலையை  காட்டாது
                                                  பொம்மையாக தானே மாறிடும்
                                                  பொறுமைசாலி
                                             
                                                  ஆடலையும் பாடலையும்
                                                  ஆடி வரும் தேரினையும்
                                                   தோள்  மீது  தூக்கி வைத்து
                                                   தூரத்துக்  காட்சிதனை காட்டும்
                                                   பளு தூக்கி

                                                   தேங்கி வழிந்து அழிந்து  போகும்
                                                   குளம் குட்டையல்ல
                                                   வாழ்ந்து மறைந்தாலும் நம்
                                                    வாழ்க்கையில் அழியாத
                                                    கற்படியுருவம்
                                                   
                                                    எடுத்து வைத்த  அடிகள் தரும் வலி
                                                   பயணம் போகும் பாதை வழி
                                                   அடுத்து செய்வது அறியாது
                                                   திகைத்து  நிற்கையில்
                                                    நிமிர்ந்து நிற்கும் வழிகாட்டி

                                                    புயல் மழை வெள்ளம் என
                                                    புரியாத குழப்பங்களில்
                                                    புதிர்க் கடலில் தத்தளித்தால்
                                                    கலங்காது நமக்கு  கரை  காட்டும்
                                                    கலங்கரை விளக்கம்

                                                    எந்த வழி  போவதென்று
                                                    வந்த வழியில் குழம்பும்போது
                                                    சொந்த வழியை காட்டும்
                                                     திசை காட்டி

                                                     அக்கறை  காட்ட ஆயிரம் பேர்
                                                     சொந்த பந்தம் இருந்துமென்ன
                                                     அறியாத குளத்தில் நீந்தும்போது
                                                      அக்கரையில்   சேர்க்கும்
                                                      கட்டுமரம்

                                                      பள்ளிப்பாடங்கள்
                                                      சொல்லிக்கொடுப்பதிலும்
                                                       வாழ்க்கைக் கல்விப்  பாடங்கள்
                                                       அள்ளிக் கொடுப்பதிலும்
                                                       அற்புத ஆசிரியன்
                                                       
                                                       தான் படிக்காததை
                                                       தான்  முடிக்காததை
                                                       தன்  பிள்ளை அடைய
                                                       தவமிருந்து  பெற நினைக்கும்
                                                       தன்னிகரற்ற தங்கம்
                                                       தனி ஒருவன் வாழ்க்கையின்
                                                       பேரங்கம்

                                                       உயிரோடு  இருக்கையில்
                                                      ஊட்டிய அறிவுரைகள்
                                                      காலி இருக்கையை
                                                      காணும்போது  உறைக்கும்                                                                                         இருந்தபோது  மறைந்த மதிப்பு
                                                      இறந்த பிறகே  உதிக்கும்             

                                                       புரியாத பிரியம் 
                                                        பிரிந்த பின் புரியும் 

                                                 

                         ' அம்மா கணக்கு '  என்ற திரைப்படம் தன் மகள் மேல் தாய் வைத்திருக்கும் கனவினையும் எதிர்பார்ப்பையும் எடுத்துச் சொல்கிறது.  'வேலைக்காரி மகள் வேலைக்காரியாகத்தானே ஆக  வேண்டும் '  என்று மகள் போடும் தப்புக்கணக்கை   அம்மா  மாற்றியமைப்பதாக திரைப்படம் சொல்கிறது.  ' வேலைக்காரியின் மகள் கலெக்டர் ஆகக் கூடாதா? ' என்பது அம்மாவின் கணக்கு.  ஒரு கலெக்டரை  நேரில் சந்தித்து , ' எப்படி கலெக்டர் ஆவது? '   என்று  தன் குழந்தைக்காக  ஒரு குழந்தையைப்  போல் அவரிடம் கேள்வி கேட்கும் அம்மா கேரக்டர் பாராட்டப்படத் தக்கது.  அப்பாக்கள்  இல்லாத குடும்பங்களில் அம்மாக்களே தந்தை நிலையிலும்  இருந்து வழிநடத்திச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

                                                         

                                                   இருந்தும் இல்லாத அப்பாவின் கடமைகளையும் அம்மா எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலை பல குடும்பங்களில் தொடர்கதை.  பிள்ளைகள் ஒத்துப்  போகவில்லை என்றால் ஏற்படும் மனக்காயம் மிகப் பெரிய  சோர்வினைத் தரும்.  மகளுக்கு கணக்குப்  பாடம் வரவில்லை என்ற  காரணத்திற்காக மட்டுமல்ல , படிப்பின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைப்பதற்காகவும் அம்மாவே மகள் படிக்கும் பள்ளியில் மாணவியாக சேர்வது இதுவரை திரையில் சொல்லப்படாத விஷயம் .  இது சாத்தியமா என்று ஆராய்வதை விட அப்படி மகளோடு கூடவே சேர்ந்து படித்தால் ஏற்படும் மனப்போராட்டங்கள் எப்பயிருக்கும் என்பதை திரைப்படம் நமக்குச் சொல்கிறது.  மகளின் கோபம் அதிகரிக்கிறது.  ஒத்துழைக்க மறுக்கிறாள். அம்மாவை அலட்சியப்படுத்துவதோடு சந்தேகிக்கவும் செய்கிறாள்.  ஒரு கட்டத்தில் தனக்காகத்தான்  தன்  தாய்  இன்னல்களில் உழன்று கொண்டிருக்கிறாள் என்பதை மகள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க ஆரம்பிக்கிறாள் .  அம்மாவின் கணக்கையல்ல கனவையே நிறைவேற்றுகிறாள் என படம் முடிகிறது.


                                                  அம்மாவைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள் , ஆயிரமாயிரம் கவிதைகள்  எழுதப்பட்டிருந்தாலும் இலக்கியச் சுவையைக் கொடுக்கும் புதினங்களாக மட்டுமே இருந்து விடுகின்றன. உண்மையில் அம்மாவைப் பற்றிய பெருமிதங்கள் பிள்ளைகளிடம் எந்த அளவு உள்ளது என்று ஆய்வு செய்தால் அதன் சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொருவரும் தங்கள் அப்பாவை தூக்கி வைத்துப் பேசும் அளவிற்கு அம்மாவை வைப்பதில்லை என்பதே நெஞ்சில் நெருடும் நிஜம்.


                                            அம்மா என்றாலே சமையல்காரியாகவும் வேலைக்காரியாகவும் உருவகப்படுத்தி வைத்திருக்கும் பிள்ளைகள் சமூகம்  .அதிகரித்திருக்கிறது.  அம்மா என்று மனதில் நினைத்தவுடன் சமையல் செய்யும்  பரிமாறும்  வீட்டு வேலை செய்யும் உருவமே  தெரிகிறது.  இந்த சமூகமும்  குடும்ப அமைப்பும் அந்தக் கற்பிதங்களைத்தான் கற்றுக் கொடுத்திருக்கின்றன.  வேலை பார்த்து சம்பாதிக்கும் அம்மாவாக இருந்தாலும் அப்பாவின்  வேலையைத்தான் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் பிள்ளைகள் அதிகம் இருக்கிறார்கள்.  கதைகளிலும் திரைப்படங்களிலும் அம்மாவை உயர்த்திக்  கொண்டாடும் காட்சிகள் அதிகம். ஆனால் 'அம்மா கணக்கு '   படத்தில் அது இல்லை. அம்மாவை துதிக்கும் காட்சி எங்கும் மிகைப்படுத்தவில்லை. இறுதியில் அம்மா படும் கஷ்டம் மகளுக்குப் புரிவதாகக் காட்டப்படுகிறது. அது கூட அழுத்தமாக சொல்லப்படவில்லை. அம்மாவை மகள் புரிந்து கொள்ளும் சூழலை இன்னும் அழகாக பெருமைப்படுத்திக் காட்டியிருக்கலாம். இயக்குனர் இயல்பாக கொண்டு செல்கிறார்.

                                                             

                                            பலரிடமும்   ' உங்கள்  குடும்பம் பற்றி சொல்லுங்கள் ' என்று வினவினால் அப்பாவைப் பற்றி சிலாகித்து பெருமையாக பேசும் அளவிற்கு அம்மாவைப் பற்றி பேசுவதில்லை.  இதில் நானும் விதி விலக்கல்ல .  அப்பாவைப் பற்றிச் சொல்வதற்கு  ஆயிரம் எடுத்து  வைக்கிறோம். அம்மாவைப் பற்றி சொல்ல சிறிது யோசிக்கிறோம்.  அப்பாவின் தியாகங்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அம்மாவின் தியாகமும் என்பது  காலம் கடந்த பிறகே உணர்கிறோம்.  ஒன்று உண்மை. அம்மா இல்லாத அப்பா வளர்க்கும் பிள்ளைகளின் வளர்ச்சியை விட அப்பா இல்லாத அம்மா  வளர்க்கும் பிள்ளைகளின் வளர்ச்சி உன்னத நிலையை அடையும் . அதற்கு பல குடும்பங்கள் எடுத்துக் காட்டு.  சமீபத்தில் வாசித்த சிறு கதை ஒன்று ஞாபகம் வருகிறது.


                                          அப்பா இல்லாத அம்மாவின் வளர்ப்பில் வளரும் ஒரு இளைஞன் .  படித்து முடித்து  வேலை தேடுகிறான்.  பல இடங்களில் தேர்வு, நேர்காணல் சந்தித்தும் வேலை சரிவர அமையவில்லை.  ஒரு கம்பெனியில் நேர்காணலுக்காக அழைப்பு வருகிறது.  ' வேலை கிடைத்தால் அம்மாவை விட்டு விட்டு  தொலை தூரம் போய் விட வேண்டும் ' என்று நினைத்தவனாய் கம்பெனியைத் தேடிப்  போகிறான்.

                                         கட்டிடத்தின் நுழைவாயிலில் யாருமில்லை. கதவில் தாழ்ப்பாள் ஒன்று நீட்டிக் கொண்டிருக்கிறது.  உள்ளே நுழைபவர்    மேல் இடித்து விடும்படி இருக்கிறது.  எல்லோரும் இடி வாங்கி கொண்டு நுழைய இவன் அதைச் சரி செய்துவிட்டு நுழைகிறான்.   நடை ஓரங்களில் பூச்செடிகள் .  செடிகளுக்காக திறந்து விடப்பட்ட  தண்ணீர்  வீணாக நடை பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது.  குழாயை மூடி விட்டு  நகர்கிறான் .

                                       உள்ளே தரைத்தளத்தில் யாருமில்லை.  முதல் தளத்தில் நேர்காணல் என்று  குறிப்பு காட்டுகிறது. மாடிப்படி வழியாக ஏறும்போது பகலிலும் இரு விளக்குகள் எரிவதைப் பார்க்கிறான்.  அதையும் அணைத்து விட்டு படி ஏறி முதல் தளத்திற்குச்  .செல்கிறான். உள்ளே நுழையுமிடத்தில் ' வெல்கம் ' என்று  எழுதப்பட்ட கால்மிதி ஒன்று தலைகீழாக உள்ளது. அதையும் சரி செய்து நுழைகிறான். பலரும் அமர்ந்திருக்கும் அந்த அறையில் ஒரு வாஷ்பேசினில் திறந்து விடப்பட்ட குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவன் மட்டும் அதையும் நிறுத்திவிட்டு வந்து அமர்கிறான்.

                                 
                                         சிறிது நேரம் கழித்து  அவன் மட்டும் உள்ளே அழைக்கப்படுகிறான்.  ' இந்த வேலை மிகவும் பொறுப்பானது. பொறுப்பானவர்கள் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும்.  நீங்கள் உள்ளே நுழைந்ததிலிருந்து  வந்து அமரும் வரை செய்தவற்றையெல்லாம் கேமரா மூலமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம் . பொறுப்புடன் செயல்பட்டதால் இந்த வேலையை உங்களுக்குத் தரலாம் என்ற  முடிவிற்கு வந்தோம் '  என்று நிர்வாகத்தினர் அவனிடம் அப்பாயிண்ட்மெண்ட்  ஆர்டரை நீட்டுகிறார்கள் .


                                       அவனுக்குக் கண்ணில்  நீர் தளும்பியது.  ' அங்கு போகாதே, அதைச் செய்யாதே,  தண்ணீரை வீணாக்காதே , சிக்கனமாக இரு,  வீணாக எரியும் விளக்கை அணை , எடுத்தப் பொருளை எடுத்த இடத்தில் வை '  என்று தன் அம்மா இட்ட கட்டளைகள் அப்போது  எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் இப்போது  புரிகின்றன.   அம்மா படுத்தி  எடுக்கவில்லை  பாடங்கள்தான் நடத்தியிருக்கிறார்கள் .  அந்தப் பாடங்களே  தனக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கின்றன என்று தன் தாயை பெருமிதமாக நினைக்கிறான்.   அவர்களை தொலைத்துவிட்டு தூரமாக போக நினைத்ததை எண்ணி வருந்துகிறான்.


                                    மேலே சொல்லப்பட்டது சாதாரண கதை என்றாலும் என் இதயத்தைத்  தொட்டது.  அம்மாவின் நினைவுகளை மறுபரிசீலனை செய்து பார்க்க வைத்தது.  'அம்மா கணக்கு ' பார்த்தபோதும் அதே உணர்வுகள் . அம்மாவின் அன்பும் பாசமும் கனிவும் துணிவும் கண்டிப்பும் ஒவ்வொன்றும் நெஞ்சக்  கடலில் அலைகளாக எழும்பி மறைகின்றன.  அம்மாவை அலட்சியப்படுத்திய கணங்கள், குறைவாக பேசிய தருணங்கள், அவமதித்த நேரங்கள் எல்லாம் நெஞ்சில் குத்திய நெருஞ்சி முட்களாய் நெருடிக் கொண்டேயிருக்கின்றன. அப்போது எனக்குள் விதைக்கப்பட்ட ஆணாதிக்க சிந்தனைகளும் என்னை கண்டிக்காமல் விட்ட அப்பாவின் போக்கும் காரணமாக இருக்கலாம் என்ற  சமாதானத்தை நானே கற்பித்துக்  கொள்கிறேன். என்னை எப்போதும் விட்டுக் கொடுக்காத அம்மாவின் தியாகங்களை இப்போது அமைதியாக நினைத்துப் பார்க்கிறேன். அம்மாவுக்கு கவிதை எழுத நினைக்கிறேன் .  அம்மாவே கவிதைதான்!


                                             
                                                         

Friday, 10 June 2016

இசை ராட்சஷன் - 16 ( The Musical Legend )



                          ஆயிரம் படங்களுக்கு மேல் இசை , ஐந்து முறை தேசிய விருது என இளையராஜாவை குறித்து பட்டியலிட  ஆயிரம் டேட்டாக்கள் இருக்கின்றன.  பெரும்பாலான தமிழர்களை சோகத்தில் இருந்து மீட்பதும்  நீண்ட  தூர பயணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றுவதும் இளையராஜாவின் பாடல்கள்தான்.  எந்தத் தமிழரைக் கேட்டாலும் இதைதான் சொல்வார் .   இளையராஜாவை சிலாகிப்பார்.

                                                         
         
                          ஆனால் இதையே பின்லாந்தில் உள்ள குக்கிராம இளைஞரான ஜூஹாமட் என்ற இளைஞரும் சொல்கிறார் என்பதுதான் ஹைலைட் .  அது மட்டுமல்ல . ' இளையராஜா உங்களுக்கு கிடைத்த வரம் ' என்றும் சொல்கிறார்.

                            ரஷ்யாவிற்கு அருகில்  கிழக்கு பின்லாந்தில் உள்ள  சிறு நகரில் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த இந்த இளைஞர் கணிதவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  இசையார்வம் அவருடைய தந்தையிடமிருந்து தனக்கு வந்ததாக சொல்கிறார்.   இசையும் பயின்றிருக்கிறார் .

                            2008 ம் ஆண்டு தன்னுடன்  கணிதம் பயின்ற தமிழ் நண்பர்கள்  'பெண்ணின்  மனதை தொட்டு ' என்ற படத்தில் ' கல்லூரி வானில்...' என்ற பாடலை ரசித்துக் கேட்டபோதுதான் ,  தானும் முதன் முறையாக தமிழ் பாடலை கேட்டேன் என்கிறார்.  அவருக்கு அதுதான் முதல் தமிழ் இசை கேட்டல். கேட்டு உற்சாகமும் அடைந்திருக்கிறார்.  அதன் பிறகே தமிழ் இசை பற்றிய தேடலைத் தொடங்கியிருக்கிறார்.


                                பின்பு ரகுமான் பாடல்களையும் ரசித்துக் கேட்டிருக்கிறார்.  மற்றொரு தமிழ் நண்பர் முத்து என்பவர் , ' தமிழ் இசை என்பது வெவ்வேறு  பரிமாணங்களை  கொண்டது ' என்பதை விளக்கினார்.  தமிழ்த் திரையிசையின் தலை மகன் என அவர் அறிமுகப்படுத்தியது  இளையராஜாவை.  இளையராஜாவின் அற்புத இசையில் தெய்வீகம் ததும்பும் ஜேசுதாசின் பாடல்களை  பின்லாந்து இளைஞருக்கு அறிமுகப்படுத்தினார்.


                              ' இளையராஜா ஜேசுதாஸ் இருவரின் கூட்டணியில் வந்த பாடல்களை எல்லாம் முழுமையாக ரசித்து முடிக்க எனக்கு நான்கு மாதங்கள் ஆனது ' என்கிறார்  ஜூஹாமட் . அவருடைய நண்பர் அந்தப் பாடல்களின் உள்ளார்ந்த பொருளையும் சொல்லித்தர , பாடல்களை மனதுக்குள் வாங்குவதிலும் அதனால் ஏற்படும் இனம் புரியாத மகிழ்விலும்  நாட்களைக் கழித்திருக்கிறார்.

                                    கேளடி கண்மணியின்  ' மண்ணில் இந்த காதலன்றி ',  கண்ணதாசன் வரிகளில் ' கண்ணே கலைமானே ' ,  தர்ம யுத்தம் படத்தில் ' ஆகாய கங்கை ' போன்ற பாடல்கள் தினம் தினம் அவர் வாழ்வை இனிமையாக்கியதாய் சொல்கிறார்.  ' எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் ' ஆறும் அது ஆழம் இல்ல...' என்ற பாடலை 2016 ஆம் ஆண்டு கேட்டு நான் உருகி கரைகிறேன் என்றால் , அந்தப் பாடலின் உலகத் தரமும் இறவாத தன்மையும் ஆச்சரியம் இல்லையா!? ' என  மனம் திறந்து பேசுகிறார்.


                                  ' இளையராஜாவின் பாடல்களில் நீங்கள் காணும் தனிச் சிறப்புகள் என்ன ? '  என்று அவரை கேட்டபோது ,  '  இளையராஜா ஆயிரத்தில் ஒருவர்.  அவருடைய பாடல்களுக்கு எத்தனை ஆஸ்கர் அவார்டு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவர் பாடல்களில் இருக்கும் மெல்லிய உணர்வுகளை இதுவரை உலகின் எந்த இசையமைப்பாளர் பாடல்களிலும் கண்டதில்லை.  இதயத்தின் அடி ஆழத்தில்  நேரடியாக நுழையும் அவரது இசையை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் தவித்த நாட்கள் உண்டு.  அந்த இசையின் நேர்மையும் உண்மையும் நெஞ்சில் ஏற்படுத்தும் உணர்வுகள் இனி பல காலம் கடந்தாலும் புத்தம் புதிதாக இருக்கும் என்பதில்  ஐயமில்லை ' என கூறுகிறார்.


                             '  மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் கேட்டதில்லையா? ' என  கேட்டபோது , '  கேட்டிருக்கிறேன். தேவா, ரகுமான் பாடல்களையும் கேட்டிருக்கிறேன்.  மிகுந்த வெஸ்டர்னைஸ் செய்யப்பட்டு தமிழின் தனித்துவத்தை இழந்துவிட்ட பாடல்கள் . சில ரசிக்கும்படி இருக்கும் .  இளையராஜாவின் பாடல்கள் சோதனையான காலகட்டங்களில் தனிமையும் தவிப்புமாக இருக்கும்போது அந்தச் சோதனையிலிருந்து மீண்டு வர பெரிதும் உதவியிருக்கின்றன  '  என்றும் கூறுகிறார்.


                                       ' வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? ' என்று வினவியபோது , '  வருடத்தின் பெரும்பாலான நாட்கள் குளிரும் இருளும் இருக்கும் எங்கள் நாட்டில் வசந்தம் வருவது சில மாதங்கள்தான். ஆனால்  இளையராஜா பாடல்களை  கேட்டு ரசித்து தினமும் வசந்தம் வரும் வாய்ப்பு உங்களுக்குத்தான் இருக்கிறது. அவரை இன்னும் கொண்டாட வேண்டும் . அவரது இசையை இன்னும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது தமிழர்களுக்கு என் கோரிக்கை ' என்று முத்தாய்ப்பாக சொல்லி முடிக்கிறார்.


                             இணையத்தில் அவர்  இளையராஜாவின் பாடலைப் பாடி யு டியூபில் வெளியிட்டதில் அது பிரபலமானது.  அதன் மூலம் 'இளையராஜா 1000 '  என்ற விழாவிற்கு அவருக்கும் அழைப்பு விடப்பட்டு அதிலும் ஒரு பாடலை கொஞ்சு தமிழில் பாடியதை  காணலாம்.


                                     http://www.manithan.com/news/20160212118783


                                 தயவு செய்து இளையராஜாவை கொண்டாடுங்கள் என்று வெளி நாட்டுக்காரர் கோரிக்கை வைக்கிறார்.  ஆனால் நம் தமிழர்களில் சிலர் ஆகப் பொருத்தமில்லாத வர்ணனைகளில்  அவரை இழித்துரைப்பதிலும்  அவரது இசையை பழித்துரைப்பதிலும்  தங்கள் எழுத்துத் திறமையை காட்டி இணையத்தில் எழுதியும் வருகிறார்கள். அதைப் பாராட்டுவதற்கும் நாலு பேர் அங்கே வருகிறார்கள்.  மேலை நாட்டவரின் இசைக்கு அடிமையாகி ஆங்கில மோகம் கொண்டு அலைகின்றவர்கள்  காலம் கழிந்த பிறகே அவர்கள்  என்றாவது ஒரு நாள் இளையராஜாவின் இசைத் திறனை புரிந்து கொள்வார்கள். அவர்களுக்காக காலம் காத்திருக்கட்டும் .  ராஜாவின் இசையை ரசிப்பவர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல்  அவரைக் கொண்டாடுவோம்.


                                      சமீபத்தில் ஒரு ரசிகர் அவரைக் கொண்டாடி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  எண்பதுகளில்  தென்னிந்திய மொழிகளில் அனைத்து  இதயங்களும் கேட்டு மயங்கும் வண்ணம் நாட்டுப்புற இசை, கர்னாடக இசை , ஜாஸ் இசை ,  பாப் இசை, ராக் இசை,  மேற்கத்திய செவ்வியல் இசை , ஹிந்துஸ்தானி இசை என்று பலவிதமான இசைக் கோர்வைகளை பாடல்கள் மூலம் அள்ளி வழங்கியதை அற்புதமாக  பகிர்ந்து அளித்திருக்கிறார்.


    http://www.thehindu.com/features/magazine/baradwaj-rangan-on-growing-up-in-the-ilayaraja-era/article8629657.ece#comments
                                               

                    இளையராஜாவின்   இசை தோண்டத்  தோண்ட  வரும் புதையல் .  எவ்வளவு தோண்டினாலும் இசைப் பொக்கிஷங்கள்  நிறைய கிடைக்கும் .


                           மீண்டும் 79 க்குச் சென்றால் ' நான் வாழ வைப்பேன் ' என்ற திரைப்படம் பார்த்து ரசித்த ஞாபகம் மறுபடியும்  துளிர்க்கிறது.  சிவாஜி, ரஜினி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நடித்த திரைப்படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது .  கூட்டத்தோடு கூட்டமாக புகுந்து விசில் சப்தங்கள் காதைக் கிழிக்கும் ஆரவாரத்தோடு படம் பார்த்து வந்த நினைவு இப்போதும் பசுமையாய் நெஞ்சில் உண்டு .

                   
                  இளையராஜாவின் பின்னனி இசை பிரமாதம்.  பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.  இன்றும் அந்தப் பாடல்களை அப்படிக் கொண்டாடலாம்.  எதைச் சொல்வது...எதை விடுவது என்றே தெரியவில்லை. அத்தனை பாடல்களும் வெவ்வேறு சுவை கொண்ட கனிகளைப் போல இனிமை தரக்கூடியவை. இப்போது கேட்டாலும் நெஞ்சம் இனிக்கும் நினைவுகளை தரக்கூடியவை.


                                   டி .எம்.எஸ்  அவர்களின் வளமான குரலில் வாலியின் வரிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்ட பாடல் ' எந்தன் பொன் வண்ணமே ...அன்பு பூ வண்ணமே  ' என்ற பாடல்.  அப்போது  சிவாஜி தன்  தங்கைக்காக பாடும் காட்சியில் கண்களில் பொங்கும் பாசத்தின் பரவசம் இசையோடு என்னை ஒன்ற வைத்தது.  இப்போது கேட்டாலும் பார்த்தாலும்  தாய் தந்தையோடும் சகோதரர்களோடும் வாழ்ந்த காலங்கள் மனதில் வந்து மோதி மின்னலாய் மறையும் . விழியின் ஓரம் துளிர்க்க வைக்கும்  மென்மையான பாடல்.  வீணையும் வயலினும் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடும் பின்னணி இசையோடு ராகதேவன் அற்புதமாக இசைத்திருப்பார்.
                               

                                             

                                       
                                  ' திருத்தேரில் வரும் சிலையோ ....சிலை பூஜை ஒரு நிலையோ  ' என்ற அடுத்த பாடல் பாலுவும் சுசீலாவும் அனுபவித்துப் பாடிய அழகான மெலொடி கொண்ட பாடல் .  வாலியின் வரிகளுக்கு ராஜாவின்  இசை வண்ணம் உற்சாகமானது.  கேட்கும்போதே மனசுக்குள் குதூகுலம் கும்மாளமிடும்.  பாடலின் ஆரம்பத்தில் கிடார் ஒலிக்க வயலின் கூட்டங்கள் சேரும் நேர்த்தி அற்புதமானது . பல்லவி வித்தியாசமான தாள நடையில் தபேலாவும் டிரம்சும் கலந்து  கொடுக்கப்பட்டிருக்கும்.  எஸ்.பி. பி பல்லவி முடிக்க  இடைச் செருகலாக கிடார் பீஸ் கொடுத்து சுசீலா  மீண்டும்  பாடுவது சுகமானது .   இந்த மாதிரியான இடைச் செருகல்கள் இளையராஜாவின் பாடல்களில்  சிறப்பு.  பல பாடல்களில்  நான் ரசிப்பேன்.   இடையிசையில் கிடார் மற்றும் வயலின்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் . அத்தனை இசைக்கருவிகளோடு ஆங்காங்கே  குழலின் நாதமும் இழையோடுவது பிரமிப்பூட்டும் .  பின்னணி இசையையும் முனகிக் கொண்டு இந்தப் பாடலையும் பாடிக்கொண்டு  எத்தனையோ நாட்கள்  நான் அலைந்ததுண்டு.

                               
 

                            ' என்னோடு பாடுங்கள் ...நல்வாழ்த்து பாடல்கள் ..'  என்று வாலியின் வார்த்தைகளில் எஸ்.பி.பி . பாடும் அடுத்த பாடல்  ரசிக்கத் தகுந்த மற்றுமொரு அருமையான பாடல் .  பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக  குழுவினரின்  நடனத்தோடு அமைந்த காட்சிப் பின்னனிக்கு  நல்லதொரு உற்சாகமான இசையை ராஜா கொடுத்திருப்பார். கிடார் , டிரம்பெட் அதிகம் ஆக்ரமிக்கும் பின்னணி இசை பாடலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும்.  இசைக் கருவிகளை இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா என்ற வியப்பு மேலிட வைக்கும்.  தன் வாழ்க்கையின் சோகத்தை மனதில் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு காதலிக்காக பாடும் வாழ்த்துப் பாடலை மென்மையாக ஆரம்பித்து பிறகு வேகம் கூட்டுவது  வித்தியாசமான அணுகுமுறை.  கொடுக்கப்பட்ட சூழலுக்கு பொருத்தமாக ஒரு  பார்ட்டிக்கு ஏற்றாற்போல இசை அமைக்கப்பட்ட பாடல் . பாடலின் இடையே கொடுக்கப்படும் கை தட்டல் ஒலி தாளத்தோடு மிகச் சரியாக பொருந்தியிருக்கும். 
  
                           
                                           


                         ' ஆகாயம் மேலே...பாதாளம் கீழே ...'  என்ற பாடல் ஜேசுதாஸ் பாடியது.  "  ஜேசுதாசுக்கு சோகம்,  கர்நாடகம் மட்டுமே நன்றாக வரும். இந்த மாதிரி ஜாலியான பாட்டுக்கெல்லாம் அவர் குரல் பொருந்தாது  " என்று சகோதரர்களுடன்  தர்க்கம் செய்திருக்கிறேன் .  ஆனால் இப்போது கேட்கும்போது  தாஸ் அவர்கள் அவருக்குரிய பாணியில் இந்தப் பாடலை அழகாக பாடியிருக்கிறார் என்று புரிகிறது.

       
                 ரஜினி அறிமுகமாகும் காட்சி இது. தியேட்டரில் விசிலும் பேப்பரும் பறக்கும். ரஜினி  தனக்குரிய மேனரிசத்துடன்  இந்தப் பாடலுக்கு துள்ளலான வேகமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  அவருக்கு ரசிகர்கள் அதிகம் பெருகிக் கொண்டிருந்த காலம் அது.  கொஞ்ச நேரம் திரையில் தோன்றினாலும் அசத்தி விட்டுப் போகும் ஸ்டைலுடன் வந்து மக்களின் மனதில் இடம்   .பிடித்தார்.  அதனால் சிவாஜி ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சண்டை மூண்ட கதையையெல்லாம்  பார்த்திருக்கிறேன்.

       
                                             

     
                                 இந்தப் பாட்டிலே வரும் பின்னணி இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாத்தியக்கருவிகளும்  ஹிந்திப் பாடல்களின் சாயலைக் கொண்டிருக்கும் .  70 களில் வந்து பிரபலமான ஹிந்திப் பாடல்களை தூண்டலாக  எடுத்துக் கொண்டு இளையராஜாவும்  அதே போன்ற பாடலை அவருக்குரிய பாணியில் அழகுற அமைத்துக் கொடுத்திருப்பார்.  அப்போதே அந்த சந்தேகம் இருந்தது. தற்போது 70 களின் பல பாடல்களைக் கேட்கும்போது  அது ஊர்ஜிதமாகிறது.  கிடார் , டிரம்பெட் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹிந்தி பாடல்களை அப்போது நான் கேட்டதுண்டு . 


                                  70 களில் ஏற்கனவே  ஹிந்தி பாடல்களின் மாய வலையில் சிக்குண்டதைப் போல  மக்கள் மயங்கிக் கிடந்ததை மீட்டுக் கொண்டு  வர  இளையராஜாவால் மட்டுமே முடிந்தது. மீண்டும் தமிழிசையின் பக்கம்   மக்களின் சிந்தை   திரும்பியதை  பலர் சொல்ல கேட்டதுண்டு;  நானே நேரடியாக புரிந்ததுமுண்டு.   நான் சொல்வதை சிலர் மறுக்கலாம்.  ஆனால் இளையராஜாவை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம் சொல்வதும் பொய்யாகி விடுமா என்ன!? 

               
                                   விகடனில்  ' திரைத்தொண்டர்  ' என்ற தலைப்பில் தொடராக  பஞ்சு  அருணாசலம் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரையின் ஒரு சிறு பகுதி   கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. 
                 

                                                             

                                      70 களில் தமிழ் சினிமாக்கள் தொடர் வெற்றியை சந்திக்கவில்லை.  காரணம் ஹிந்திப் படங்களின் ஆதிக்கம்.  பாபி, ஆராதனா, ஷோலே,  யாதோங்கி பாரத் போன்ற ஹிந்தி படங்கள் தமிழ்ப் படங்களை விட அதிக நாட்கள் ஓடின .

                                        தென்னிந்தியாவைத் தாண்டினால் எல்லா மாநிலங்களிலும்  இந்தி பேசுபவர்கள் இருப்பதால் இந்தியாவில் பாலிவுட் படங்களுக்கு நல்ல மார்க்கெட்  .  வேர்ல்ட் மார்க்கெட்டும் பெரிது .  ஆனால் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிய தமிழ்ப் படங்களை விட இந்திப் படங்கள் நாலு மடங்கு அதிகமாக வசூலித்தன.  சென்னையில் கூட ஓகே.  தமிழ்நாடு முழுவதும் எப்படி அந்தப் படங்கள் ஓடின?  அதில் மக்களுக்கு அப்படி பிடித்த அம்சங்கள் என்னென்ன?  கதை ஓரளவுக்கு புரியும் . வசனம் புரியாதே.  அந்த நடிகர் நடிகைகளும் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள் . அப்புறம் எப்படி அவை பட்டிதொட்டி எங்கும் இப்படி ஓடுகின்றன?  ஆச்சரியமாக இருக்கும்.


                                        விளையாட்டு மைதானங்கள், கல்யாண வீடுகள், திருவிழாக்கள்... இப்படி கிராமம் , நகரம் வித்தியாசமின்றி எங்கும் இந்திப் பாடல்கள்தான் நீக்கமற நிறைந்திருந்தன.  தமிழ்ப் பாடல்களையே கேட்க முடியாது. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. ஆர். டி . பர்மன் ,  எஸ். டி . பர்மன் ,  லக்ஷ்மிகாந்த் பியாரிலால்... என இந்தி சினிமாவில் இருந்த இசை அமைப்பாளர்களின் புது மாதிரியான இசைதான் காரணம் என தெரிந்தது.  அதற்கு முன்னரும் இந்தியில் மிகப் பெரிய இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.  ஆனாலும் அப்போது அவர்களை மீறி இங்கு தமிழ்ப் படங்கள் ஓட  , தமிழ்ப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கக் காரணம்  விஸ்வநாதன் - ராமமூர்த்தி , கே. வி . மகாதேவன்  என்ற இரு பெரும் இசை அரசர்களின் செல்வாக்கு.  அப்படி செல்வாக்கோடு இருந்த இவர்களின் திறமை , இவர்களின் மீதான மரியாதை 70 களுக்குப் பிறகு குறைந்து விட்டதா என்றால்,  இல்லை. ஆனால், அவர்கள் 60 களிலேயே தங்களின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள்.  அதனால் எத்தனைப் படங்களுக்கு இசையமைத்தாலும் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பது போன்ற உணர்வு. 


                                  ஆனால், இந்திப் பாடல்களில் இளைமையான புதுப்புது சவுண்டுகளுடன் கூடிய இசை.  அது இளைஞர்களை அலை அலையாக ஈர்த்தது.  அதுதான் அவர்களை இந்திப்படங்களையும் பார்க்கத் தூண்டியது.  'நம்  ரசிகர்கள் ஏதோ ஒன்னை புதுசா எதிர்பாக்குறாங்க '  என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.   '  நம்மால் படமே எழுத முடியாது  ' என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ' கல்யாணமாம் கல்யாணம் ' ஓடி , ஒரு சின்னத் திருப்பத்தை ஏற்படுத்தியதுபோல '  ஏன் ஒரு நல்ல இசை அமைப்பாளரை கொண்டு வரக் கூடாது? '  என்று என் மனதுக்குத் தோன்றியது.  அப்படி ஓர் இசையமைப்பாளர் வந்தால் , தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தை ,  திருப்பத்தைப் பார்க்க முடியுமே என்ற பேராசை ஏற்பட்டது. 


                              அப்படியான பெரிய இசையமைப்பாளர் கிடைத்தால்தான் இங்கு ஓடும் இந்திப் படங்களைத் தாண்டி நாம் வெற்றி பெற முடியும் , அதன் ஆதிக்கத்தைக்  குறைக்க முடியும் என உறுதியாக நம்பினேன். 


                                நல்ல இசையமைப்பாளரைத்  தேடத் தொடங்கினேன். '  இது நான் புதுசா போட்ட கேசட் '  என்று இசை வாய்ப்புக்காக யார் வந்தாலும் அவர்களின்  இசைக்குக் காது  கொடுத்துக் காத்திருந்தேன்.  ' நல்ல நேரம் வரும்போது  எல்லாமும் நல்லதாகவே நடக்கும் ' என்பார்களே... அப்படி என் காத்திருப்புக்குப் பலன் கிடைத்தது.  அந்த இளைஞன் வந்தான். ஆனால், அவன் இசையை வேறு எவரும் நம்பவில்லை, என்னைத் தவிர.  ஆனால், அவன் இசை வெளி வந்த பிறகோ ,  அவனைத் தவிர வேறு எவரையும் நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை. 


                               இத்துடன் தொடரும் என நிறுத்திய பஞ்சு அவர்கள்  இனி கட்டுரையை தொடர்ந்து அவர்தான் இளையராஜா என்று சொல்லாமலாப்  போய்விடப் போகிறார்!?  இளையராஜாவைப் பற்றி இனிமேல்தான் நிறைய சொல்வார்.  நானும் சொல்வதற்கு நிறைய உள்ளது.


.............தொடர்வேன்................


Monday, 2 May 2016

எவருக்கும் போடு கவருக்குப் போடாதே



                                                   தேர்தல் 2016 . இதோ வந்து கொண்டே இருக்கிறது. தினம் நடக்கும் கூத்துகளைப் பார்த்து மக்கள் நொந்து கொண்டு இருக்கிறார்கள்.  ஊடகங்களை உற்றுக் கவனித்தால் பல அரசியல்வாதிகளின் அதிரடி பேச்சுக்களும் ஆணவ கொக்கரிப்புகளும் எதிரிக்குக் கொடுக்கும் மிரட்டல்களும்  நயந்து கேட்கும் பவ்வியங்களும் கூழைக்  கும்பிடுகளும்  எடுக்கும் ஒட்டு பிச்சைகளும் பணப் பதுக்கல்களும் தொகுதிக்குள் நுழைந்து எடுக்கும் ஓட்டங்களும் பக்கம் பக்கமாய் வாசிக்கும் அறிக்கைகளும் நாலொரு  மேனியும் பொழுதொரு  வண்ணமுமாய் அரங்கேறிக் கொண்டே இருப்பதை காண முடிகிறது.


                                            ஐந்தாண்டுக்கு ஒரு முறை சட்ட மன்ற தேர்தலை  சந்தித்தாலும்   இந்த முறை  நடக்கும் நிகழ்வுகள் பெரும்பான்மையானவை  கண்ணியக் குறைவுகளாகவே தெரிகின்றன.  அற்புதமான தலைவர்கள் ஆண்ட நமது மாநிலத்தில் அரசியல் நாகரீகங்கள் அதீதமாய் இருந்த காலம் உண்டு.  ஆனால் தற்போது அரசியல் செய்யும் பலர் அந்த நாகரீகங்களை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு அநாகரீகத்தை  அணிகலன்  போல அணிந்து  கொண்டு அலைகிறார்கள்.



                                       மூத்தத் தலைவர்களை அரசியலில் மற்ற மூத்தத்  தலைவர்கள் கூட   கேவலமாக  விமர்சனம் செய்யும் அசிங்கத்தைக் கண்ட போது முகம் சுளிக்க  வைத்தது.  மரியாதைக்குரிய  தலைவர்களாக பார்க்கப்பட்டவர்கள் நாகரீகமற்றவர்களாக  நடந்து கொண்ட போது  மனதில் வெறுப்பு  உருவானது.   பதவிக்காகவும் பணத்திற்காகவும் எந்த கீழ்மைக்கும் இறங்கும் இழிநிலை கண்டு மனசு வெம்பிப் போனது.


                                         தற்போது  நம்மை ஆளும் அரசு தனக்கு முந்தைய அரசினை குறை சொல்லி  ஓட்டு கேட்கிறது .  முந்தைய அரசு தற்போதைய அரசு   முடியட்டும்..விடியட்டும் என்று மீண்டும்  வாய்ப்பு  கேட்கிறது.  இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து என்ன பெரிதாக கிழித்து விட்டார்கள் நாங்கள் வந்து  கிழித்து விடுகிறோம் என்று அறைகூவல்  விடுக்கும்  சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து   கூட்டணி உருவாக்கி ஓட்டு  கேட்கிறார்கள். நாலாவதாக ஒரு தனித்த கட்சி   தனியாக நின்று ஆட்சியை பிடித்து விடுவோம் என்று சூளுரைத்திருக்கிறது .  நான்கு முனைப் போட்டிகள் உருவாகியிருக்கின்றன.


                                        ஒரு தலைவரை , ' குடும்ப அரசியல் '  செய்கிறார்  என்று சொல்லும் மற்ற தலைவர்கள் எல்லோருமே குடும்ப அரசியலும் வாரிசு அரசியலும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  தங்கள் கட்சியின் வேட்பாளார்களாக  தங்கள் வாரிசுகளை நிறுத்தியிருக்கிறார்கள் .  ஒரு தலைவர் தன் வாரிசை முதல்வர் வேட்பாளாராகவே  அறிவித்திருப்பது வினோதம்.  குடும்பமே இல்லை என்று சொல்லும் ஒரு கட்சியின் தலைவர் தன் நண்பரின் குடும்பத்தையே  வாரிசாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  ஆல  மரம் போல கிளை பரப்பியிருக்கும் அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாய் வளைய வருகிறார்கள்.  எதையும் அசைத்துப் பார்க்கிறார்கள் ; யாரையும் வளைத்துப் போடுகிறார்கள் .

                     
                                  ஒரு தலைவர்  கால்கள் தரையில் படாமல் காற்றிலேயே மிதந்து வந்து பிரச்சாரம் செய்து விட்டு காற்றிலேயே  பறந்து போய்  விடுகிறார். மற்றொரு தலைவர்  எழுந்து நிற்கும் சக்தி இழந்தவராய் சக்கர நாற்காலியில் ஊரெல்லாம் உருண்டு கொண்டே மக்களின் சக்தியை தன் வயப்படுத்த முனைகிறார்.  இன்னொரு தலைவர் மேடையில் பேசுகிறாரா அல்லது நடிக்கிறாரா என்று தெரியாத அளவிற்கு நகைச் சுவை செய்கிறார்.  திடீரென யாரையாவது அடிக்கிறார்.  யாருக்காவது  விசிறி விடுகிறார்.  தினம் அவர் செய்யும் சேஷ்டைகள்  சிறந்த பொழுது போக்காக மாறிப் போயிருக்கிறது .  அவர் என்ன பேசுகிறார் என்று மக்கள் கவனிப்பதாக தெரியவில்லை .  எல்லோருக்கும் கூட்டம் கூடுகிறது.  சிலருக்கு தானாக சேரும் கூட்டம் ; சிலருக்கு காசு பேசி சேரும் கூட்டம் . ஆனால் எல்லாம் ஓட்டுக்களாக மாறி விடுமா என்பது  பெரிய கேள்வி.


                                      ஒவ்வொரு கட்சிக்கும் ஓட்டு வங்கி  குறிப்பிட்ட சதவீதம்  உள்ளது.  எல்லா  கட்சிகளுக்கும் கட்சி சார்புள்ளவர்களின் ஓட்டு சதவீதம் போக  மீதம் 10 சதவீத ஓட்டுகள்  எந்தக் கட்சியையும் சாராதவர்களின் ஓட்டுகள் . அவர்கள் எந்த நிலை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்புகள்  உருவாகின்றன என்பது காலம்  காலமாய்  பார்த்து வருவதே! இந்த 10 சதவீத மக்களின் நிலை கொஞ்சம் பரிதாபத்துக்குரியது . இவர்கள்தான் வெற்றிக்கான கதாநாயகர்கள்.  இவர்களால்தான்  ஜனநாயகத்திற்கு ஒரு நன்மையோ அல்லது தீமையோ  உருவாகப் போகிறது .  இவர்கள்தான் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள்.  இவர்கள்  தற்போது   முடிவெடுத்து  விட்டு பின்னர்   வருந்துபவர்கள்.  ஐந்து  வருடங்களுக்கு ஒருமுறை  மாற்றம் கொண்டு  வருவார்கள். அல்லது தொங்கு நிலையில் வைத்து விடுவார்கள்.


                                        யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான சூழ்நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  பொதுவாக இரண்டு பெரிய கட்சிகளோடு சிறிய கட்சிகள்   கூட்டணி வைத்து  பலம் சேர்க்கும்.  வெற்றி வாய்ப்பினை துல்லியமாகக்  கணிக்கலாம். ஆனால் இம்முறை  சிறிய கட்சிகள் எல்லாம் தனிக் கூட்டணி வைத்து  எந்த நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் நிற்கின்றன என்பது புரியாத  புதிர்.  ஓட்டு  சதவீதம் குறைவாக வைத்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய கட்சிகள் எல்லாம் ஓரணி சேர்ந்தாலும் மொத்த சதவீதமும் குறைவுதான்! அது  தெரியாமலா நிற்பார்கள்!?  ஆக இதிலும் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.  தொங்கு நிலை வந்தால் அந்த அரசியல் புரிந்து விடும்.  யாரை வளர்க்க யாரை கவிழ்க்க அந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது என்பதும் புரிந்து விடும்.


                                          லஞ்ச லாவண்யம் , ஊழல் இல்லாத கட்சிகள் எது ,  ஊழலில் திளைக்காத வேட்பாளர்கள் யார் என்று மக்களிடம்  விழிப்புணர்வு  ஏற்பட்டிருக்கிறது.  இணையமும் சமூக வலைதளங்களும் மக்களுக்கு நிறைய போதிக்கின்றன.  அதனால் இந்தத் தேர்தல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஒரு பக்கம் நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும்  அதிகம் படிக்காத பாமர ஜனங்கள்  யார்  செய்தாலும் செய்யாவிட்டாலும்  கட்சிக்கோ அல்லது அந்தக் கட்சியின் தலைவர்  நிறுத்தும் வேட்பாளருக்கோ அல்லது கட்சியின் சின்னத்திற்கோ  ஓட்டு போட்டு விடும் மன நிலையில் இருக்கிறார்கள்.  அவர்களை நாம் என்ன சொல்வது? அந்தத் தைரியத்தில்தான் ஒருவர் , ' என் தலைவர் ஒரு நாயை நிறுத்தினாலும் ஓட்டு  விழும் ' என்று வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திலேயே கொக்கரிக்கிறார்.  'குனியக் குனிய குட்டு விழும்' என்பது நாம் அறிந்த பழமொழி . ஆனால் , ' குனியக் குனிய துட்டு விழும் ' என்பதை காணொளியில் கண்டு புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.


                             இந்த மக்கள்  தாங்கள் எந்தக் கஷ்டத்தில் இருந்தாலும் அதைப் பற்றி கவலை கொள்வதில்லை.  காலம் காலமாய் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம் , அதனால் இப்போதும் அதே கட்சிக்கே போட்டுவிடுவோம் என்ற  மனநிலையில்தான் இன்னும் இருக்கிறார்கள். அவர்களில்   நகரத்தில் உள்ளவர்களை விட கிராமத்தில் உள்ளவர்களே அதிகம். இவர்களால்தான் மாற்றம் என்பது தடுமாற்றம் ஆகிறது.


                                            யார் ஆட்சியில் அமரப் போகிறார்கள் என்று  தெரியாத  நிலையில் ஊடகங்கள் மிகவும் பரபரப்பான செய்திகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன .  ஒவ்வொரு தலைவரும் பேசும் ' பஞ்ச் '  முழக்கங்கள் சினிமாவில் சொல்லப்படும் பஞ்ச் வசனங்களை  விட  அதிக ஆர்வமூட்டக் கூடியதாக இருக்கின்றன . செய்வீர்களா .. செய்வீர்களா என்று ஒரு தலைவர் முழக்கமிட எதிரணித் தலைவர் ' சொன்னீங்களே ...செஞ்சீங்களா ' என்று பதில் முழக்கம்  இடுகிறார். நம்மை விட சிறுவர்கள் இந்த வசனங்களை  உற்றுக்  கவனிக்கிறார்கள். என் உறவினரின் சிறு வயது  பெண்ணொருத்தி  அவள் அம்மாவிடம் ,  ' சப்பாத்தி சுட்டுத் தருகிறேன் என்று  சொன்னீர்கள். சொன்னீங்களே செஞ்சீங்களா ...  முடியட்டும் ..விடியட்டும் ' என்று வசனம் பேசுகிறாள்.


                                          இந்த நிலையில் இளைஞர் படை ஒன்று சமீபத்தில் தாமாகவே முன் வந்து ஒரு புதிய தலைவரை உருவாக்க முனைந்தார்கள்.  சிறிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தினார்கள்.  ஆனால் அந்தத் ' தலைவர்'  அதனை ஏற்றுக் கொள்ளவில்லை .  எனக்கு சமூக அக்கறை உண்டு . சமூகத்திற்கு தொண்டு செய்யவே விரும்புகிறேன் . எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை . என்னை விட்டு விடுங்கள் என்று தெளிவாக ஒதுங்கிக் கொண்டார்.  அவர்தான் சகாயம் I A S   அதிகாரி.  22 வருடங்களில் 23  முறை பணி  மாற்றம் செய்யப்பட்டவர்.  கிரானைட் ஊழல் வழக்கை விசாரிக்க நீதி மன்றத்தால் பணிக்கப்பட்டவர் . அரசால் பல வித இன்னல்களுக்கு ஆளானவர்.  லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற கொள்கையோடு வாழ்பவர்.  சுடு காட்டில் படுத்து புரட்சி செய்தவர். ' ஆவிகளுக்கு பயமில்லையா ? ' என்று ஒரு நிருபர் கேட்டபோது , ' படு பாதகச் செயல்கள் செய்யும் பாவிகளுக்குத்தான்  பயந்தேன் ' என்று சாட்டையடி போன்ற ஒரு பதிலைச் சொன்னவர் . 


                                            அவருக்கு இந்த ஜனங்களை நன்றாகப் புரிந்திருக்கிறது.  அரசியல் கட்சி என்பது மிகப் பெரிய மலை.  கட்டி இழுத்துச் செல்வது கடினம் என்பதை நன்கு புரிந்ததினால் ஆரம்பத்திலேயே விலகிக் கொண்டார்.  இளைஞர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் .  அதனால் அவரிடம் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று கேட்டிருக்கிறார்கள்.  ' எவருக்கு வேண்டுமென்றாலும் போடுங்கள் . கவருக்குப் போடாதீர்கள் '  என்று தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார்.  பொதுவில் பேசும்போது  யாரையும் குறிப்பிடாத பேச்சுக்கள் அர்த்தமுள்ளதாக மாறும்.  இப்படி பேசுவதை நிறைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.  ஊடகங்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போதே நாகரீகமற்ற தனி நபர் தாக்குதல்கள்  அதிகமாக அள்ளித் தெளிக்கப்படுகின்றன.   உலகம் அதை உற்று நோக்குகிறது.  எதைப் பற்றியும் கவலை கொள்ளாத அநாகரீக பேச்சு ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. பதவி படுத்தும் பாடு.


                                         பணம் படுத்தும் பாடு அதை விட அதிகம். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பணப் பட்டுவாடா செய்ய ஒரு கூட்டம் அலை  மோதுகிறது .  கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டிருக்கிறது.  அரசு அதிகாரிகள் சிலரும் போலிஸ் அதிகாரிகள் சிலரும் அதற்கு ஒத்துழைக்கிறார்கள்.  பணம் கொடுத்து ஓட்டுக்களை விலை வாங்கத் துடிக்கும் கேடுகெட்ட அவல நிலை இந்த முறை அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது.  மக்கள் தாங்களாகவே முன் வந்து ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று மறுத்தாலொழிய  பணப் பட்டுவாடாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். திருடனாய் பார்த்துதான் திருந்த வேண்டும் . திருட்டுக்குத் தூண்டுபவர்களை குறை சொல்லி என்ன பயன்? பணம் கொடுப்பவர்களுக்கு எதிர் விசுவாசம் காண்பித்தால் தோல்வியை தழுவச் செய்யலாம்.  செய்வார்களா?
  
               
                                 

Sunday, 13 March 2016

இசை ராட்சஷன் - 15 ( The Musical Legend )


                                                     
                           

திரைஉலகில் வெற்றி பெற எது அவசியம் ?


பொறுமை. உதாரணத்திற்கு ஒரு சம்பவம். எழுபதுகளின் ஆரம்பத்தில் மேடைக் கச்சேரிகளில் ஒருவர் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.  யதேச்சையாக அதைக் கேட்டார் தயாரிப்பாளர் ஒருவர். அப்போது ' உயிர் ' என்ற படத்துக்கு அவர் பூஜை போட்டிருந்த நேரம்.  முத்துராமன் ,  சரோஜா தேவி ஜோடி. அந்தப் படத்துக்கு மேடைக் கச்சேரியில் இசைப்பவரை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் .


                              தனக்கு விடிவு காலம் கிடைத்து விட்டது என்று நம்பிய அந்த இசை அமைப்பாளர் அதிகாலையில் எழுந்து கருமாரியம்மன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து விட்டு ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வந்தார்.


                                 ஆனால் , '  உங்க டியூன் நல்லா இல்ல.  அதனால இன்னைக்கி ரெக்கார்டிங் இல்ல ...' என்று அந்த தயாரிப்பாளர் சொல்லிவிட்டார்.  மட்டுமல்ல. ரமணி ஸ்ரீதர் என்பவரை இசை அமைப்பாளாராக ஒப்பந்தம் செய்து  அடுத்த வந்த முகூர்த்த நாளில் ரெக்கார்டிங்கை ஆரம்பித்தும் விட்டார்.


                                   இந்த சம்பவம் மேடைக் கச்சேரிகளை நிகழ்த்திக் கொண்டிருந்தவரை  பாதித்தது. ஆனாலும் மனம் தளராது தன்  போராட்டத்தைத் தொடர்ந்தார். அதற்கான  பலன்  கிடைத்தது.  கம்யூனிஸ்ட் தலைவரான என். சங்கரையாவின் சகோதரர் மகனான கதாசிரியர் ஆர். செல்வராஜ் , தனது படத்துக்கு இவரையே ஒப்பந்தம் செய்து  திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.


                                      அந்தப் படம் ' அன்னக்கிளி ' . பொறுமையுடன் இருந்த அந்த இசை அமைப்பாளர்  இளையராஜா . இவரது டியூன் சரியில்லை என்று சொல்லி நிராகரித்த அந்த தயாரிப்பு நிறுவனம் ' ஜெமினி ' .


                                       மேற்கண்ட இந்தச் செய்தி ஒரு வாரப் பத்திரிகையில் வந்தது.  மேடைக்கச்சேரிகளில் தனது இசை முன்னோர்களின் பாடல்களை இசைத்து வந்த இளையராஜா ,  அவ்வப்போது அமர் எழுதி தானே இசையமைத்து அதைப் பாடியும் வந்திருக்கிறார். அதற்கும் மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்திருக்கிறது.   சினிமாப் பாடல்கள் போலவே அந்தப் பாடல்களும் அமைந்து விட மக்கள் அதிகம் ரசித்திருக்கிறார்கள்.  அந்தக் கணங்கள்தான் சினிமாவில் இசையமைத்து இசையில் சிகரம் தொட்டு விடும் உத்வேகத்தை அவருக்கு அளித்தன . அன்று புறப்பட்ட இசைப் பயணம் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


                                            ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதல்ல ,  என்ன விதமான அதிர்வை இந்த உலகத்திற்குக் கொடுத்திருக்கிறார் என்பதே முக்கியம். அந்த வகையில் இளையராஜா தன்  இசையால்  மிகப் பெரிய அதிர்வினை  ஏற்படுத்தி இருக்கிறார் .  ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள்  அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்  என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகிறது.  இளையராஜாவின் இசை பலருக்கும் அப்படிப்பட்ட பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


                                         ஒரு பாடலுக்கான ஒத்திகையும் பாடல் பதிவும் எவ்வாறு இளையராஜாவால் நிறைவேற்றப்படுகிறது என்று பார்ப்போம்.

                                                       
                                   
                                  

                         ஒரு பாடல் தேர்வான பின்னர் இசைக் குழுவினர்  அனைவரும் ஒலிப்பதிவுக் கூடத்தில் கூடுவார்கள். தேர்வறைக்கு வெளியே  காத்திருக்கும்  மாணவர்களைப் போல காத்திருப்பார்கள்.  வயலின் வாசிப்பவர்களில் மூத்தக் கலைஞர் திரு. ஜூடி அவர்கள் இளையராஜாவின் அறைக்குச் சென்று இசைக் குறிப்பு அடங்கிய தாளினைப் பெற்று வருவார்.  இசைக் குறிப்புகளை பிரதி எடுத்து மற்றவருக்குக் கொடுப்பது இவரின் பொறுப்பு.


                                          ஒத்திகை நடக்கும் நேரத்தில் இளையராஜா கொடுக்கும் திருத்தங்கள் , மாற்றங்கள் ஏதும் இருப்பின் அவற்றையெல்லாம் ஒத்திகை நேரத்திலேயே சரி செய்து மீண்டும் பிரதிகள் எடுத்து எல்லோரிடமும் கொடுப்பதும்  இவர் வேலையே!  இசைக் குறிப்புத் தாளினை ஜூடி தன் கையில் வைத்திருக்க மற்றவரெல்லாம் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள் .


                                     இசைக் குறிப்புகள் எளிமையாக இருந்தால் இசைக்குழுவினருக்கு நிம்மதியாக இருக்கும் . கடினமாக இருந்தால் அதை மீண்டும் மீண்டும் வாசித்துப்  பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இசைக்குறிப்புகளை முழுமையாக வாசிக்க முடிந்தால் 20 அல்லது 30 பிரதிகள் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கப்படும்.


                                     ராஜா 9  மணிக்குள்ளாக தன் காலை உணவை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வருவார். ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர் உள்ளே நுழைய எல்லோரும் தங்களின் இசைக் கருவிகளை இசைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


                                        முதலில்  Rhythm section  ஐ  வழிநடத்தும் திரு. புருஷோத்தமனிடமிருந்து இளையராஜா ஆரம்பிப்பார்.  குறிப்பிட்ட பாடலுக்கான தாள நடை எப்படி இருக்க வேண்டும் என்பதை கைகளைத் தட்டிக் காட்டுவார்.  பாடல் முழுமைக்கும் வரக்கூடிய தாள நடை பொதுவானதாக இருந்தாலும் இடையில் நடையில் மாற்றம் வேண்டியிருப்பின் அதையும் சுட்டிக் காட்டுவார்.  வேறுபட்ட தாள லயங்களோடு  பாடல் ஒலிக்கும். பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் தாள ஒலியில்  தேவையான ஏற்ற இறக்கங்களையும் புருஷோத்தமனிடம் விளக்குவார். புருஷோத்தமன் தனது octo pad ல் அதை வாசித்துக் காட்டுவார் . எந்த நடை , எப்படிப்பட்ட தாள லயம் , என்ன சுருதி வேண்டும் என்பதை ராஜா தேர்ந்தெடுப்பார்.


                                       அவர்  விரும்புகிற தாள லயத்தை  புருஷோத்தமன்  புரிந்த கொண்ட பிறகே ராஜா தோல் கருவிகள்  ( Tabla , Dolak  etc  )  பிரிவுக்கு நகருவார். அவர்களுக்கு  புரிந்த மொழியில் நடை, தாளக் கட்டை போன்ற வார்த்தைகளை  பிரயோகித்து  அவர்களையும் தெளிவு படுத்துவார். இப்போதுதான் புருஷோத்தமனுக்கு ஒட்டு மொத்தமான தாள லயம் புரிய வரும்.


                                     அடுத்து  Keybord , Electric guitar வாசிக்கக் கூடிய பிரிவுக்கு ராஜா  நகர்ந்து  அவர்களுக்கு விளக்கம் கொடுப்பார்.  Keybord பிரிவை  திரு. விஜி மேனுவல் மற்றும் திரு. பரணி பார்த்துக் கொள்ள , கிடார்  பிரிவை திரு. சதானந்தம் வழி  நடத்துவார். ( தமிழ்த்திரையிசையின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சுதர்சனின் மகன்தான் சதானந்தம்  )

                                                           
                               

                                        இசைக்குறிப்பேட்டில் பாடலுக்குத் தேவையான Chords  முழுவதும் எழுதப்பட்டிருக்கும்.  Keyboard  மற்றும் Synthesizer இசைப்போர் இசைக்குறிப்பில் குறித்துள்ளபடி தேவையான கருவிகளை  தேர்ந்தெடுக்கும் இடங்களைக் குறித்து வைத்துக் கொள்வார்கள்.  Bagpiper , Santoor , Oboe  (ஓபோ என்ற மரத்தாலான குழல் இசைக்கருவி )  போன்ற கருவிகளின் ஒலியை  Keyboard ல் தேர்வு செய்வார்கள்.   (  அந்தக் கருவிகள் எளிதில் கிடைக்காதவை;  அவைகளை மீட்டுவோரும் குறைவு  )


                                          புல்லாங்குழல் , வயலின், Brass section மீட்டப்படும்போது  Keyboard லும் அதே கருவிகள் தேர்ந்தெடுத்து  சேர்ந்து வாசிப்பதும் சில நேரங்களில் நடக்கும்.  அதனால் இசையின் தரம் கூடும்.  Keyboard ல் இந்த மாதிரி பல கருவிகள் தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளதால்  உண்மையான Brass  Players குறைந்து விட்டார்கள் .  போலவே ,  ஒலியின் தரம் கூட்டுவதற்காக Synthesizer பயன்படுத்தி கோரஸ் குழுவினரின் குரலோசையோடு சேர்த்தும் இசைக்கப்படும். வேறுபடுத்த முடியாதது போல இருக்கும்.
( விக்ரம் படத்தில் கமலஹாசன் பாடியிருக்கும் அந்த டைட்டில் பாடலில் வரும் ஜானகியின் ஹம்மிங் கேட்டால் புரியும் )

                                              புல்லாங்குழலை இசைக்கும் நெப்போலியன்    (அருண்மொழி என்ற பாடகர் )  என்பவரோடு சேர்ந்து விஜி மானுவல்  தன் Keyboard ல் அதே பகுதியை வாசிப்பார். எனவே இரட்டைப் புல்லாங்குழல் (double flute passaage )  இசைத்த நாதம் ஒலிக்கும். மீண்டும் நெப்போலியன் இரண்டாவது முறை வாசித்து அதை track ல்  சேர்க்கும்போது ஒரே நேரத்தில் மூன்று குழல்கள் ( treble flute passage )  சேர்ந்து ஒலிப்பது போல் இருக்கும்.


                                               உதாரணமாக , கோபுர வாசலிலே எனும் திரைப்படத்தில் எஸ்பி.பி , சித்ரா பாடிய  'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்  என்ற பாடல் , சின்ன தம்பி திரைப்படத்தில் ' போவோமா ஊர்கோலம் ' என்ற பாடல் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம் .  இரண்டாவது  BGM  ல் வரும் அந்தப் புல்லாங்குழலின் நாதம் அழகான double flute passage ஐக் கொண்டிருக்கும்


                                                கோபுர வாசலிலே படப் பாடல் அற்புதமான இசைக்கோர்ப்பு செய்யப்பட பாடல். எஸ்.பி.பி  அவர்கள் அந்தப் பாடலின் பல்லவி பாட கடைசி வரியில் சித்ரா சேர ,  தொடர்ந்து சித்ரா பல்லவி பாட ஆரம்பிக்கும்போது எஸ்.பி.பி  நிறுத்திக் கொள்ள ...Orchestration பிரமாதமாக இருக்கும்.  பகல் நிலவு படத்தில் வரும் ' பூ மாலையே தோள் சேரவா '  என்ற பாடல் ஆய்வுக்குரிய ஒரு படைப்பு. இளையராஜாவும் ஜானகியும் வேறுபட்ட சரணங்களை வேறுபட்ட Octave ல் ஒரே நேரத்தில் பாடுவது அசாத்தியமானது.
   
                                                                                           


                                                ஒலிப்பதிவுக் கூடத்தின் மையப் பகுதிக்கு ராஜா வந்து நிற்க அவருக்கு முன்னால்  திருத்தப்பட்ட இசைக்குறிப்பேடு பொருத்திய தாங்கி இருக்கும்.  முதலில் தந்திக் கருவிகளை வாசிக்கச் சொல்லி பார்ப்பார்.  பிறகு ஒவ்வொரு பிரிவினரின் பங்கினை  வாசிக்கச் சொல்லுவார்.  BGM   1, 2, 3  என்று வெவ்வேறு பின்னனி இசையையும்  வாசிக்கச் சொல்லி சரி பார்ப்பார்.  ஆரம்ப இசை முதல்  BGM ,  முதல் சரணத்திற்கு முன் வரும் இடையிசை  இரண்டாம்  BGM ,  இரண்டாம் சரணத்திற்கு முன் வரும் மூன்றாம்  BGM என ஒவ்வொன்றையும்  இசைக்கச் சொல்லி , தவறு இருந்தால் அதையும் திருத்துவார்.   முதல் வயலின் குழு  அடுத்து இரண்டாம் வயலின் குழு  அடுத்து Cello வாசிக்கும் குழு என தனித் தனியாக சரி பார்ப்பார்.
                                                                 
                                                    


                                                இசையின் போக்கு அவர்களுக்குத் தெளிவாக புரியும்வரை  தனியாகவும் மெதுவாகவும் வாசிக்கச் சொல்லி , தொடர்ச்சி மற்றும் நிறுத்தம் வரும் இடங்களை புரிய வைப்பார்.  திடீர் நிறுத்தங்கள் அவருடைய இசையில் முத்திரை பாதிக்கும் லாவகம் ஆகும்.  பல்லவி மற்றும் சரணம் பாடும்போது வரிகளுக்கு இடையே, சில நேரம் வார்த்தைகளுக்கு இடையே , இழைந்து வரும் மின்னல் நேர இசையையும் வாசிக்க வைத்து சரி பார்ப்பார்.

                                                               
                                                             

                                               இவ்வாறு ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று ஒத்திகை பார்த்து சரி செய்த பின்பு  முழுப் பாடலுக்கான இசை தயாராகி விடும்.  சுந்தரராஜன் பாடலை ஹம்மிங் செய்து   பாட , எல்லா கலைஞர்களும் சேர்ந்து பாடல் முழுவதும் இசைக்குறிப்பேட்டில் உள்ளபடி  இசைப்பார்கள்.  ஆனால் Rhythm Section இன்னும் முழுமையடையாததால்  புருஷோத்தமன் அதை ராஜாவின் முன்னிலையில் சரி செய்வார்.


                                                இளையராஜா தான் எதிர்பார்த்த கற்பனைகளும் எண்ணங்களும் வண்ணங்களாக  இசை வடிவில் வெளிப்படாதவரை  மீண்டும் மீண்டும் சரி செய்தும் திருத்தியும் ஒத்திகை பார்த்துக் கொண்டேயிருப்பார். ராஜாவின் பாடல்களில் இசைக்கருவிகள் பாடகரோடு சேர்ந்து பேசுவது போல கூடவே இழையோடி வரும் . உதாரணமாக ஏழை ஜாதி என்ற திரைப்படத்தில் ' அதோ அந்த நதியோரம் ' என்ற பாடலின் சரணத்தை கவனித்தால் String Section பாடலோடு சேர்ந்து பாடுவது போல மிக அற்புதமாக பின்னப்பட்டு இருக்கும் .


                                               ஒத்திகை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசிக்க மிகவும் சிரமம் இருக்கும்பட்சத்தில் இளையராஜா அவர்களை எளிதில் விட்டுவிட மாட்டார். மீண்டும் மீண்டும் சரியாகும் வரை ஒத்திகை பார்க்கச் சொல்வார்.  பாடல் பதிவு நடக்கும்போது கடினமான பகுதியை வாசிப்பதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டால் மட்டுமே அதில் சிறு மாற்றம் செய்யச் சொல்வார்.  பெரும்பாலும் ராஜா நினைத்ததை கொண்டு வரவே முயற்சிப்பார்.


                                               ஒத்திகை முடிந்தவுடன் ராஜா தன் தனியறைக்குச் செல்வார்.  அவர் சற்று ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் மீண்டும் தங்களுக்குரிய பங்கினை ஒத்திகை பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள்.  இதற்கிடையில் பாடலாசிரியர் உள்ளே வந்து அமர்ந்து எழுதிய முழுப் பாடலையும்  வாசித்து காட்ட , ராஜா மெட்டுக்கு பொருத்தமாக எல்லா வார்த்தைகளும் அமைந்திருக்கிறதா என்று பாடிப் பார்த்து சரி பார்ப்பார்.  இப்போது பாடல் பதிவு தயார் நிலைக்கு வந்து விட்டது.  Voice Mixing செய்வது அடுத்த வேலை.


                                          பாடகர்கள்  பாடலைப் பாடி பயிற்சி  எடுக்கும் வேளையில் இளையராஜா மற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்.  அது அவரது தனிப்பட்ட வேலையாக இருக்கலாம்.  யாரையாவது சந்திப்பார்; அல்லது மறுநாளைக்குரிய  பாடல் தயாரிப்பாக  இருக்கலாம் ; அல்லது அடுத்த புத்தக வெளியீடு பற்றிய சிந்தனையாக இருக்கலாம் .  ' How to Name it  ' மற்றும் ' Nothing but Wind  '  போன்ற ஆல்பங்கள் ( albums ) அவர் எண்ணத்தில் அந்த நேரங்களில் உதித்தவைதான்!!


                                             சரியாக  12: 30 மணியளவில் எல்லோரும் ஒத்திகை முடித்து ஆயத்த நிலையில் இருக்கும்போது புருஷோத்தமன் ஒலிக் கலவை  செய்யும் அறைக்குச் சென்று அமர்ந்து ஒலிக்கலவை செய்யும் பணியில் (Music Producer )  ஈடுபடுவார்.  பலவித இசைக்கருவிகள் எழுப்பும் நாதங்களை  வெவ்வேறு Channel வழியே balance செய்யும் வேலைகளைச் செய்பவர்  Music Producer .  இப்போது புருஷோத்தமன் ஒவ்வொரு பிரிவிலுள்ள எல்லா கலைஞர்களையும் அவரவர் இசைக் கருவிகளை  வாசிக்க வைத்து அதன் ஒலிச்சுருதி தரத்தை  ( Volume Level ) கூட்டியோ குறைத்தோ balance  செய்வார்.


                                            
                                            எலெக்ட்ரானிக் கருவிகள் நேரடியாக mixer உடன் இணைப்பில் உள்ளதால் அதன் ஒலித்தரம் கூடுதலாக இருக்கும் . Manuel instrument மற்றும்  electronic instrument இரண்டையும் ஒலிக்கலவையின்போது balance செய்வது எளிமையான வேலையல்ல. 


                                             பாடல் பதிவு ஆரம்பிக்கும்போது ஜூடி  மற்றும் பிரபாகரன் ( Senior Violinist  )  சேர்ந்து முழுப்பாடலையும் வழி  நடத்துவார்கள்.  ஒவ்வொரு இசைப்பிரிவினரும் தனித் தனி  அறைகளில் இருப்பார்கள்.  மைய அறையில் எலெக்ட்ரானிக் கருவிகள் வாசிப்போரும் string section குழுவினரும் இருப்பார்கள். 

                                                          
                          

                                              சுந்தரராஜன் பாடும் அறைக்குச் ( Voice booth ) சென்று பாடலை  ஹம் செய்வார். சில நேரங்களில் பிரபாகரன் அவர்கள் முழுப்பாடலையும் வயலினிலேயே  இசைத்துக் காட்டுவார்.  ராஜா ஏற்றுக் கொள்ளும் வண்ணம் முழுப்பாடலும் அரங்கேற புருஷோத்தமன் ஒலிக்கலவையினை   கச்சிதமாக  செய்து  முடிப்பார். புருஷோத்தமன் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே இளையராஜாவோடு நல்ல புரிதலோடு பழகியவர் என்பதால் ராஜாவின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்தவராய் ஒலிக்கலவை  செய்து கொடுப்பார்.  பாடல் பதிவு  இறுதிக் கட்டத்தை எட்டும். 


                                              பதிவு செய்யும் அறையிலிருந்து இளையராஜா முழுப்பாடலையும் கவனிப்பார். அப்போதும் அவர் நினைத்த இசை வரவில்லை என்றால் அங்கும் திருத்தங்கள் உண்டு. கடைசி திருத்தத்தின்போது கூட ஒரு சிறு பயிற்சி எடுத்த பிறகே எல்லோரும் மீண்டும் ஆயத்தமாவார்கள்.  ராஜா திருப்தி அடைந்த பின் மீண்டும் take நடக்கும். 


                                             ஒரு முழுப்பாடலுக்கான  தயாரிப்பு முழுமை பெற்றவுடன் சில நேரங்களில் ராஜா அவர்கள் புருஷோத்தமனிடம் பாடல் பதிவுப்  பொறுப்பினை ஒப்படைத்து விட்டு மதிய உணவிற்காக தன் அறைக்குத் திரும்புவார்.  அல்லது நடக்கவிருக்கும் அடுத்தப் பாடல் பதிவிற்கான இசைக்குறிப்புகளை எழுதப் போய் விடுவார். 


                                              கடினமான பாடல் என்றால் பாடகரை தாளத்துடன் பாட வைத்து தனி track எடுத்துவிட்டு , மற்ற வாத்தியக்கருவிகளின் பங்கினையும் தனியாக எடுத்து இரண்டையும் கலவை செய்யக் கூடிய முறையும் நடக்கும் . 


                                             ராஜாவிடம் பணிபுரியும் அந்தக் கலைஞர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்பதால் அவர் மனதில் ஓடும் படைப்புத் திறனையையும் கற்பனையையும் செயல் வடிவமாக்குவதில் வல்லவர்கள்.  செயல் திறனுள்ள எந்திரம் போல அந்தக் கலைஞர்கள் அனைவரும் ராஜா நினைத்ததை இசையில் கொண்டு வந்து விடுவார்கள் . 


                                             சுந்தரராஜனுக்குப் பதிலாக இளையராஜாவே voice trackல் பாடுவதுண்டு. எடுத்துக்காட்டாக , ஈரமான ரோஜாவே படத்தில் வரும் 'வா..வா..அன்பே  ' என்ற பாடல் முழுவதையும் ராஜா பாடி வைக்க பிறகுதான் ஜேசுதாஸ் , ஜானகி குரலில் பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்த மாதிரி பாடிய பாடல்கள் அவரது குரலில் நன்றாக ஒலித்தால் cassette , CD  களில் ராஜா பாடிய version சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் திரைப்படத்தில் பாடல் ஒலிக்காது. 


                                              இதயக்கோயில் படத்தில் ' இதயம் ஒரு கோயில் ' என்ற பாடல் அதற்கு உதாரணம் . முதலில் ஜானகி ஹம் செய்ய ராஜா பாடி பதிவு  செய்யப்பட்டது. பிறகுதான் பாலுவின் குரலில் மீண்டும் பதிவானது .  படத்தில் பாலுவின் குரல் மட்டுமே ஒலிக்கும் . காதலுக்கு மரியாதை படத்தில் 'என்னைத் தாலாட்ட வருவாளோ ' என்ற பாடலும் அதுபோலவே பதிவு செய்யப்பட்டு பின்னர் ஹரிஹரனின் குரலில் ஒலித்தது.     


                                                 BGM  எல்லாம் வாசிக்கப்பட்டு பதிவு செய்த பிறகு குரல் பதிவு இறுதியாக நடக்கும் . சுந்தரராஜன்  BGM களை ஓடவிட்டு, பாடகர்களுக்கு சரியான ஸ்வரங்கள் சொல்லி , திருத்தி சரி செய்து , குரல் பதிவு செய்வார். பாடகர்களின் குரல் இறுதியாக கலவை செய்யப்படும். கடினமான பாடல் என்றால் இளையராஜாவே கூட அமர்ந்து கவனித்து ஒலிக்கலவை செய்யச் சொல்வார்.  மற்றபடி சுந்தரராஜனே முடித்து விடுவார்.  போலவே , குழுவினரின் குரலோசையும் இறுதியாகத்தான் சேர்க்கப்படும்.  இப்போது முழுப்பாடலும் பதிவு செய்து முடிக்கப்பட்டுவிட்டது .  பாடல் தயார்.


                                           
                                                 
                                              
                            மேலே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளி இளையராஜாவின் இசைக்கோர்ப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் . வயலின் என்ற வாத்தியக் கருவியைக் கொண்டு எத்தனையோ விதமான நாதங்களை அவர் பல பாடல்களில் பலவிதமாக பயன்படுத்தியிருக்கிறார். பலவித வேறுபட்ட உணர்வுகளை வயலின் கொண்டே எல்லோருக்கும் விருந்தாகவே படைத்திருக்கிறார்.

                                         
                              மேற்கண்ட காணொளியில்  ராஜாவுடன் 40 வருடங்களாய், ராஜாவின் இசைப்பாதியாய்  பங்கு கொண்ட ,  மறைந்த மேதை பியானிஸ்ட்  விஜி  மானுவல்  அவர்களுடன் கலந்து ராஜா  இசைக்கோர்ப்பு செய்யும் காட்சி அருமை.

                அடுத்து வரும் காணொளி மூலம்  தோல் கருவிகளைக் கொண்டு வெவ்வேறு தாள லயங்களை  எப்படி உருவாக்குவது ,  வெவ்வேறு இடங்களில்  என்ன நடை பயன்படுத்துகிறார்கள் , அந்தக் கருவிகள் எங்கிருந்து வந்தன என்று பல செய்திகளை ராஜா ஒருவருக்கு விளக்குவதன் மூலம் அவருடைய இசை ஞானமும் வெளிப்படுவதைக் காணலாம்.

                                           


                    முகநூல் நண்பர்  ஒருவர்  இளையராஜாவின் ஒரு பாடலில் அவர் வடித்திருக்கும்  பின்னணி  இசையை  அவருக்குரிய  பாணியில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார் .


                           இசை Arrangement ராஜா
பல வருட மேற்குலக வாழ்வில் எனக்குக் கிடைத்த அனுகூலங்களில் ஒன்று உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல இனத்தவர்களிலிருந்து தோன்றிய இசை மேதைகளின் இசைகளைக் கேட்கக்கூடிய வாய்ப்பு அமைந்ததுதான். இந்த இசைகளை விரும்பியோ விரும்பாமலோ கேட்டே ஆகவேண்டிய சூழ்நிலை எனக்கிருந்தது காரணம் பல வருடங்கள் நான் மிக ஆடம்பரமான Discotheque ஒன்றில் பணியாற்றியிருந்தேன்.
பல நாட்டு மக்களின் பாரம்பரியங்களின் வெளிப்பாடுகளின் ஊடாக உருவான இசை மேதைகளின் பல்வேறுவிதமான இசையைக் கேட்டவன் என்ற வகையில்...
உலகத்தவரின் இசையெல்லாவற்றிலும் பார்க்க இளையராஜாவின் இசை ஒரு படி மேலேயே உள்ளது. அவரின் இசை மிகவும் கட்டுக் கோப்பானது, கண்ணியமானது அதற்குள் விபரிக்கமுடியாத ஆசுவாசம் இருக்கிறது.
உலகின் இசையமைப்பாளர்களும் கொம்போசர்களும் பாடல்களையும், பின்னணியிசைகள், இசைக்கோர்வைகள், மற்றும் தீம் இசைகளை உருவாக்குகிறார்கள், அவற்றில் ஆயிரக்கணக்கானவைகளை எங்கள் செவிகள் கேட்கின்றன அத்துடன் அவைகள் முற்றுப்பெற்றுவிடுகின்றன அல்லது காற்றோடுகாற்றாய் கரைந்து விடுகின்றன அவை மனதுக்குள் நுழைந்து காலகாலத்துக்கும் நிலைத்து நிற்பதில்லை. ஆனால் ராஜாவின் பாடல்கள் அப்படியல்ல. அவை ஒவ்வொன்றைக்கேட்கும் போதும் கடந்து போன பல சம்பவங்களை மனம் நினைத்துக்கொள்ளும், அந்தப்பாடலில் ராஜாவால் செய்யப்பட்டிருக்கும் பல இசைச்சூட்சுமங்களில் ஒன்றில் அது என்னவென்றே தெரிந்து கொள்ளாமல் லயித்துப்போகும் அப்படி ராஜாவால் செய்யப்பட்டிருக்கும் இசைச்சூட்சுமங்களில் ஒன்று அந்தப்பாடலின் இசை அரேஞ்மெண்ட். ( Musical arrangement )
இசையொன்றினை யாரும் உருவாக்கிவிட்டுப் போகலாம் ஆனால் அந்த இசை உயிரை ஊடுருவவேண்டுமானால் அதைத் தாங்கிப்பிடித்திருக்கும் அரேஞ்மெண்ட் மிக முக்கியம். அது என்ன இசை அரேஞ்மெண்ட்
Music arranging is the ability to change a piece of music to a specific vocal and/or instrumental combination.
musical arrangement - a piece of music that has been adapted for performance by a particular set of voices or instruments.
இசைக்கோட்பாடுகளில் ஒன்றான இதில் (Arranging) ஞானியார் அசகாயசூரர். அது அவருக்கு பிறவியிலேயே கிடைத்த கொடை என்றே நான் எண்ணுவதுண்டு. தனது ஒவ்வொரு பாட்டிலும் இதனை அவர் மிகப்பிரமாதமாக செய்துவந்துள்ளார். அதன் காரணமாகவும் அவரின் பாடல்கள் பல வருடங்களாகியும் முதலில் கேட்கும்போது கொடுத்த அதே ஆனந்தத்தை இன்றும் கொடுக்கின்றன. எமது நெஞ்செல்லாம் நின்று நிலைக்கின்றன. அவரின் பாடல்களில் என்னைக் கிறங்க வைக்கும் Arrangement செய்யப்பட்டுள்ள பாடல்களில் அம்மன் கோயில் கிழக்காலே என்ற படத்தில் பாலு பாடியுள்ள "சின்னமணிக் குயிலே" யை மறக்க இயலாது. இந்தப்பாடலில் :
ஆர்மோனியம்
புல்லாங்குழல்
கிட்டார்
கீபோர்ட்
ஆகிய வாத்தியங்களை எவ்வாறாக அரேன்ஞ் பண்ணியுள்ளார் என்பதைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்:
முதலில் பாலு சின்ன மணீக்குயிலே என்பார்
உடனே ஆர்மோனியம் தக தக தக.. என்றவாறு ஏதோ கூறும்.
பின்பு மீண்டும் "சின்ன மணிக்குயிலே " என்று பாலு ஆரம்பித்ததும் "ட்டீய்ங்" என்று விறைப்பாகப் பதிலளிக்கிறது கிட்டார்
தொடர்ந்து "மெல்ல வரும் மயிலே ".. என்பார் பாலு அதற்கு "லலா ல லா" என்று வேறு விதமாகச் சிணுங்கிப் பதிலளிக்கிறது புல்லாங்குழல் இப்படியே கிட்டாரும் புல்லாங்குழலும் மாறி மாறி பாலுவுக்குப் பதிலளித்துக்கொண்டே செல்கின்றன. சற்றே சிந்தித்துப்பாருங்கள் இந்தப்பாடலின் பல்லவியில் பாலுவுக்குச் சரிக்குச் சமனாக புல்லாங்குழலும் கிட்டாரும் ஞானியாரால் அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதல்லவா அவை மட்டும் இங்கே பயன்படுத்தப்படாது அந்த இடம் வெறுமையாக விடப்பட்டிருந்தால் இந்தப்பாடல் இப்படி இனிமையாக இருந்திருக்குமா ? அந்த இடத்தில் அந்தப் புல்லாங்குழலையும் கிட்டாரையும் மாறி மாறிப் பயன்படுத்தினால்தான் பாடலிற்கு ஒரு தனித்தன்மை கிடைக்கும் என உணர்ந்து அவற்றை அப்படிப் பயன்படுத்தியதுதான் Arrangement .
இந்தப் பாடலின் முதலாவது இடையிசையிலும் ஞானியாரின் அபரிமிதமான இசைக்கற்பனை உள்ளது குறிப்பாக இடையிசையின் 1:03 வது நிமிடத்தில் ஷெனாயைக் (?) கொண்டு ஆரம்பிக்கும் ராஜா அதே ஷெனாயை முடிக்கும் போது ஆர்மோனியத்தை அதே Range இல் ஒன்றாக்கி முடிக்கிறார், அதாவது அந்த இடத்தில் அது ஷெனாயா அல்லது ஆர்மோனியமா என்று குழம்பியபடியே ரசிப்பதிலும் ஒரு த்ரில் உள்ளது.
பாடல் முழுவதுமே பாலுவுக்குச் சமனாக புல்லாங்குழலும் கிட்டாரும் பாவிக்கப்பட்டு அசத்தியிருக்கும் அதேவேளை சரணங்களின் இரண்டாவது பகுதியில் அமரர் விஜி மனுவலின் கீபோர்ட் வாசிப்பு பின்னணியில் நின்றபடி அந்த வரிகளுக்குக் கொடுக்கும் புதிய பரிமாணத்தையும் பதிந்தே ஆகவேண்டும்,
இந்தப்பாடலை புல்லாங்குழல் கிட்டார் கீபோர்ட் இல்லாமல் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. அதுதான் ஞானியாரின் Music Arrangement இன் சாணக்கியம்/ தனித்துவம்.
இப்படியான மிக நுண்ணியமான நுணுக்கங்களையெல்லாம் சாதாரணமாக கிராமத்தில் இடம்பெறும் பாடல் காட்சியொன்றுக்காக அவர் செய்துபார்த்துள்ளதுதான் வியப்பு. இந்தப்பாடலில் செய்துள்ள புதுமையைப்போல இன்னும் பல பாடல்களிலும் வெவ்வேறுவிதமாகச் செய்து பார்த்துள்ள அவர் தனது இந்தச் சின்னச் சின்ன ஆனால் அற்புதமான வேலைப்பாடுகளை அந்தப் பாடல்களின் இயக்குனர்களிடமோ நிருபர்களிடமோ பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை அதற்குக்காரணம் பாடல்களின் பிரபலத்தையும் அதனூடான படங்களின் வெற்றியையும் மட்டுமே எதிர்பார்க்கும் வியாபார உலகில் தனது இந்த முயற்சிகளின் பெறுமதி புரிந்துகொள்ளப்படமாட்டாது என அவர் நினைத்திருக்கக் கூடும். ஆனால் இசையில் அவரின் அற்பணிப்புக்களும், தேடல்களும், சேவைகளும் எதிர்கால நல்ல இசையமைப்பாளர்களுக்கு பிள்ளையார்சுழியாக இருக்கும் என்பது திண்ணம்.

                              
                               இவ்வாறு இசைக்கற்பனையின் அதீதமாய் , இசைப்படைப்பின் மேலாதிக்கமாய் ,  இசை அறிவின் உன்னதமாய் , இசைத் திறனில் மேன்மையாய் திகழும் இளையராஜாவின் படைப்புகளை எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் . இளையராஜா ஓர்  இசை  ஊற்று!

........................................தொடர்வேன்...................